எஃபுவா ட்ராஓரே
தமிழில் : லதா அருணாச்சலம்
பாஸ்டர் ஜஸ்டிஸ் எப்போதும் கொஞ்சம் எரிச்சலூட்டுவார், ஆனால் அவர் கடவுள் போன்ற மனிதர் என்பதால் அவரை நான் மன்னித்து விடுவேன். உதாரணமாக, நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று நான் சர்ச்சுக்குச் சென்றேன். ஏனென்றால் கடவுளைச் சரணடைவதுதான் ஒரே வழி என்று மம்மா சொல்லி விட்டார். ’ம்ம், உண்மையாகச் சொல்லப் போனால் அங்கு சென்றதற்கு அது மட்டும் காரணமல்ல, அம்மா தலையில் அடித்த அடியில் மின் கட்டணம் கட்டத் தவறி எட்டு மாதங்களாக வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையிலும் என்னைச் சுற்றிப் பிரகாசமான வெளிச்சப் பொறிகள் பறந்தன. என்னை சர்ச்சில் பார்க்காவிட்டால் என்னுள் இருக்கும் சாத்தான் இறங்கி ஓடும் வரை நீண்ட கோபோகோ * கழியால் என் பின்பக்கத்தை வெளுத்து விடுவதாகவும் கூறியிருந்தார். இந்தப் பதின்மூன்று வருடங்களாக மம்மாவை நான் நன்றாக அறிவேன். அவர் ஏதாவது சொன்னால் அதை நிறைவேற்றி விடுவார். அதனால் மறக்காமல் சர்ச்சுக்குப் போய்விட்டேன்.
நான் சொன்னபடியே பாஸ்டர் ஜஸ்டிஸ் எனக்கு எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்தார். உண்மையான மகிழ்ச்சி என்பது உடலில் இல்லை ஆன்மாவினுள்ளே உள்ளது என்றார். ஏனென்றால் நாம் நல்ல விஷயங்களைச் செய்யும் போதெல்லாம் மகிழ்ச்சி பெறுவோம், அதனால் சொர்க்கத்துக்குப் போவோமென்று நாம் அறிந்து கொள்வோம் என்றெல்லாம் கூறினார்.
என்னால் அவரை நம்ப முடியவில்லை. என்னுடைய சரீரம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் என்னுடைய ஆன்மா எப்படி மகிழ்ந்திருக்கும்?
என் உடல் பட்டினியில் சுருண்டு கிடக்கையில் அது எப்படி சாத்தியம்? என்னுடைய உண்மையான மகிழ்ச்சி எதுவென்று பாஸ்டருக்குச் சொல்லும் பொருட்டு எப்படியோ என் கையை உயர்த்தி விட்டேன். கடந்த வாரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓடும் துர்நாற்றம் வீசியவாறு ஓடிக் கொண்டிருக்கும் பச்சை வண்ணச் சாக்கடை நீரில் ஐநூறு நைராத் தாளொன்று கிடந்தது. அப்படியே! இலவசமாகக் கிடைத்தது. அந்த அருவருப்பான சாக்கடை முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்பது போல அந்த நோட்டு எப்படி மிதந்து கொண்டிருந்தது என்பதைப் பார்த்திருக்க வேண்டும்.
அதனால்தான் என்னுடைய உண்மையான மகிழ்ச்சியை பாஸ்டரிடம் சொல்வதற்காகக் கையை உயர்த்தி விட்டேன். ஆனால் அவர் என்னைப் பார்ப்பதற்கு முன்பாக அம்மா என் பின்னந்தலையில் குட்டியதில் பெத்லஹேமின் நட்சத்திரங்களை நான் சர்ச்சுக்குள்ளேயே கண்டேன்.
அந்த பச்சை வண்ணச் சாக்கடைச் சேற்றுக்குள்ளிருந்து நூறு செத்த எலிகளின் நாற்றத்தோடு நான் வெளிவந்தாலும் என் முகம் மட்டும் உண்மையான மகிழ்ச்சியில் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்ததை பாஸ்டரிடம் விவரிக்க மிக ஆசைப்பட்டேன். அன்று என் உடல் மட்டுமல்ல,என் ஆன்மாவும் கூட உண்மையான மகிழ்ச்சியில் திளைத்தது.
நான் நிச்சயமாக முட்டாள் இல்லை. இந்த வகை மகிழ்ச்சி பாஸ்டர் சொல்லும் மகிழ்ச்சியைப் போல எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது இல்லை. அந்த ஐநூறு நைரா வெகு சீக்கிரம் தீர்ந்து விட்டது. இரண்டு அகிகி ரொட்டிகளும் ஒரு பொறித்த கோழியும் எங்கள் வீட்டில் அதிக நேரத்துக்கு நிலைத்திருக்காது. ஆனால் நாங்கள் எல்லோரும் அன்று மாலை வயிறார உண்டோம். மம்மா, என்னை அதாவது அவரது மூத்த மகனைப் பெரிய மனிதன் போலப் பெருமை பொங்கப் பார்த்தார், பெருமிதத்தில் என் நெஞ்சு நிமிர்ந்திருந்தது.
அதனால், சர்ச்சிலிருந்து வந்த பின் அன்று நாள் முழுவதும் இந்த உண்மையான மகிழ்ச்சியைப் பற்றி மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
அக்காரா பருப்பு வடையைப் பொறித்துக் கொண்டிருந்த மம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.’மம்மா,பாஸ்டர் ஜஸ்டிஸ் சொல்வதெல்லாம் சரியென்று நினைக்கிறீர்களா? ஆத்மா மட்டும்தான் உண்மையான மகிழ்ச்சியை உணருமா? நாம் நல்லது செய்தால் மட்டுமே அந்த மகிழ்ச்சியை அடைய முடியுமா?’
‘இங்கே வா,’ மம்மா அழைத்தார்.தன்னுடைய வெம்மையான, வியர்வை நிறைந்த கைகளை என் தோள்களைச் சுற்றிப் போட்டார். அவர் கைகளிலிருந்து பனை எண்ணெய் வாசமும் கெரோசின் வாசமும் வீசியது. அதை நான் பொருட்படுத்தவில்லை.
‘கடவுளின் குழந்தையாக இருப்பதுதான் எல்லாவற்றையும் விடப் பேரானந்தம்’ என்று கூறிய போது அவரது குரல் பாஸ்டரின் குரலை வெகுவாக ஒத்திருந்தது. ’நம் வயிற்றில் இருக்கும் இந்த உணவும் , சட்டைப் பையில் இருக்கும் பணமும் ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு அருகில் நெருங்கவே முடியாது’ . ‘ஆனாலும்…நான் மம்மாவுடன் வாதாட நினைத்தேன். அவர் இடைமறித்தார்.
‘உன்னையே பார் மகனே, நீ எனக்காக எப்போது கடைசியாகச் சிரித்தாய்? கடைசியாக எப்போது மகிழ்ச்சியாக இருந்தாய்? அவர் என் கன்னத்தைக் கிள்ளிக் கேட்ட போது நான் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வெளியேற்றினேன்.
‘நீ உன்னுடைய உதவாக்கரை நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு செய்யக் கூடாத கெட்ட செயல்களைச் செய்து கொண்டிருக்கிறாய்’ மம்மா சொன்னார்.
ஆங்ங்..மம்மா, என்று என்னால் வாய் குழறத்தான் முடிந்தது
சமையலறையிலிருந்து உடனே ஓடி விட வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஏனென்றால் இப்போது மம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு எரிச்சலூட்ட ஆரம்பித்து விட்டார்.
மம்மாவோ தொடர்ந்தார். ’நீ செய்யும் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைக்காதே, ஆனால் உனக்குள் ஒரு ஒரு நல்ல பையன் இருக்கிறான்’என்னுடைய நெஞ்சைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். ‘அதனால்தான் இந்த நாட்டுடைய அத்தனை துயரங்களையும் உன் தோள்களில் தூக்கிச் சுமப்பவன் போல நடமாடிக் கொண்டு எகுன்குன்* ஆவி போல முகத்தைச் சுருக்கிக் கொண்டு அலைகிறாய். முகத்தைச் சுருக்கிக் கோணிக் கொண்டு என்னைக் கேலி செய்தார்.
நாங்கள் சிரித்துக் கொண்டோம். விரிசல் விட்டிருந்த பிளாஸ்டிக் தட்டுகளை மேசையில் வைப்பதற்கு மம்மாவுக்கு உதவி செய்தேன். அனைவரும் நெருக்கமாகவும் , முகத்தைக் குனிந்து கொண்டும் முன்னால் அமர்ந்தோம். அப்போதுதான் மேசை நடுவில் இருந்த கெரோசின் விளக்கின் வெளிச்சம் எங்கள் தட்டின் முன் விழுவது தெரியும். இரவு உணவில் அவித்த பருப்பு வடைகளை உண்டு கொண்டிருக்கையில் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டவாறு இனிமேல் ஆத்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று உறுதி பூண்டேன். இனிமேல் நான் கடவுளின் குழந்தையாக இருக்க வேண்டுமென்றும் நல்ல விஷயங்களையே செய்யப் போவதென்றும் முடிவு செய்தேன்.
அப்போது திடீரென்று கதவைத் திறந்து அப்பா உள்ளே நுழைந்தார். மூன்று மாதங்களாக வீட்டுப் பக்கம் வராமலிருந்தவர் இப்போது வந்து அமர்ந்ததும் எனது மகிழ்ச்சியெல்லாம் உடனடியாக விடை பெற்றுச் சென்று விட்டது. அவரைப் பார்த்துப் புன்னகை செய்த மம்மா தனது சாயம் போன மேலாடையைச் சரி செய்து கொண்டார்.
எனக்கு மிக வெறுப்பாக இருந்தது. வந்தவருக்கு முகமன் கூடச் சொல்லவில்லை.எனது தட்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டேன்.
பாஸ்டர் ஜஸ்டிஸ் சொல்லும் மற்றொரு விஷயமான, உனது தாய் தந்தையை மதிக்க வேண்டும் என்னும் கருத்தும் என்னை வெறுப்பேற்றும். ‘அம்மாவை மதிக்க வேண்டும்’ அவர் சொல்வது வேண்டுமானால் இது சரி. காலையிலிருந்து இரவு வரை மற்றவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து விட்டு முதுகு வலியுடன் குனிந்து வளைந்து தளர்ந்த நடையில் வீடு வந்து சேர்வார். தன்னந்தனியாக ஐந்து குழந்தைகளைப் பராமரிப்பதும் எங்களுக்கு உணவு தருவதும் அந்த உணவு எப்போதும் பற்றாக்குறையாக இருந்த போதிலும் மம்மா மீது எனக்கு மரியாதை உண்டு.
ஆனால்,’உன் தந்தையை மதிக்க வேண்டும்’ இதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் என்னுடைய அப்பா போன்ற ஆட்களைப் பற்றித் தெரியாமல் பாஸ்டர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் வெறுப்பாகத்தான் இருக்கும். எப்போது வர விரும்புகிறாரோ அப்போதுதான் வருவார் அப்பா. இங்கு அடிக்கடி வர விருப்பமில்லாததால் பெரும்பாலும் வருவதுமில்லை. அவர் வரும் போதெல்லாம் மதுவின் வாடை வீசும். அந்த வாடை என்னைத் தொந்தரவு செய்து வயிற்றைத் தலைகீழாகப் பிரட்டிப் போடும். அழும் குழந்தையின் கண்களைப் போல அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும். எப்போது வந்தாலும் காலியான சட்டைப்பையுடனும், தனது வெறுங்கைகளை வீசிக் கொண்டும் வருவார், ஆனால் சீக்கிரமே வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்கையில் சட்டைப் பையை நிறைத்துக் கொண்டு முட்டியை இறுக்கியபடி நடந்து செல்வார். அவர் வரும்போதெல்லாம் கடவுளின் தொலைந்த ஆட்டுக் குட்டி மனந்திருந்தி வீடு வருவதைப் பார்க்கும் ஆடு போல அம்மா புன்னகையுடன் அவரை எதிர்கொள்வார். அழுதழுது கண்களும் உதடுகளும் வீங்கியிருக்க அப்பா மீண்டும் அம்மாவை விட்டுப் போகும் வரைதான் அந்தப் புன்னகை நிலைக்கும்.
பியர் வாடை அடிக்கும் அப்பாவையும், அவரைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் காண எரிச்சலாக இருந்ததால் அங்கிருந்து அகன்று விட எண்ணி எழுந்தேன்.என்னுடைய கடைசித் துண்டு பருப்பு வடையைக் கூட நான் முடிக்கவில்லை.என் தங்கை அதா தன் ஒரு கண்ணால் கேள்விக்குறியுடன் என்னைப் பார்க்க, அவளுடைய மறுகண் என் தட்டிலிருந்த அக்காரா வடை மீதிருந்தது. நான் தலையாட்டியதும் , மற்றவர்கள் அவளை ஏதும் கேட்டு விடும் முன் பருப்பு வடையை எடுத்து தன் வாயில் போட்டு ஒரே விழுங்கில் உண்டு முடித்து விட்டாள். எப்போதும் போல அப்பா என்னைப் பொருட்படுத்தவில்லை. அம்மாவும் நான் எழுந்து செல்வதைப் பார்க்கவேயில்லை என்பது போலப் பாவனை செய்தார். எனக்குள் நிரம்பியிருந்த எரிச்சல் இப்போது அதிகமாகி என் மகிழ்ச்சியனைத்தும் காவல்காரரைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும் திருடனைப் போல மறைந்து விட்டது.எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சல் மண்டிக் கிடக்கும். உண்மையைச் சொல்லப் போனால் சில வேளைகளில் வயிற்று வலி வருவது பசியாலா அல்லது இந்த எரிச்சலாலா என்பதே எனக்குத் தெரியாது.
நான் வீட்டை விட்டு வெளியேறி என் நண்பன் ஒலுவுடன் கடைவீதியில் சுற்றித் திரிந்தேன். ஒரு உடைந்த கைவிடப் பட்ட மோலுவா* பேருந்தில் அமர்ந்து கொண்டு சிகரெட்டும் பியரும் விற்றுக் கொண்டிருந்த நடைபாதை விற்பனையாளர்களையும், கஞ்சி போட்டு விறைப்பாக இருக்கும் அக்பாடா* அணிந்து , விலையுயர்ந்த கார்களில் வரும் ஆண்களுக்காகத் தங்கள் மெல்லிய இடையை அசைத்தபடி காத்திருந்த அழகழகான விலைமாதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒலுவிடம் நல்ல ஈக்போ போதை சிகரெட் இருந்தது. நன்றாக மயங்கி மேகங்களைத் தொடுமளவு புகை இழுத்தோம்.
‘உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன?’
நான் ஒலுவைக் கேட்டேன். என்னை முட்டாள் போலப் பார்த்தவன்,’ இந்த ஈக்போ உனக்கு ஏக போதையாக இருக்கிறதா ’என்று கேட்டான்.
நான் சிரித்துக் கொண்டே இல்லை, நான் நிஜமாகவே கேட்கிறேன் என்றேன்.
ஐந்து நிமிடங்களுக்கு மூளையைக் கசக்கியவன் பின் கண்ணடித்துக் கொண்டே குறும்பாகச் சொன்னான்.’ உண்மையான மகிழ்ச்சி எப்போதும் ஜோடியாக வரும். இரண்டு பெரிய முலைகள், இரண்டு பெரிய புட்டங்கள்.’ என்னை நோக்கி அவன் முட்டியை நீட்ட அதில் என் முட்டியை மோதினேன். நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே இருந்தோம். என்னைப் போலவே ஒலுவும் இதுவரை எந்தப் பெண்ணின் முலைககளையும் தொட்டுப் பார்த்தவனில்லை. ஆனால் எப்போதெல்லாம் ஊர் சுற்றுவோமோ அல்லது ஈக்போ புகைப்போமோ அப்போதெல்லாம் இதைப் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசுவதை யாராவது கேட்டால் முலைகளைத் தொடுவதே மனிதனின் ஆன்மாவைக் கரையேற்றும் என்று நினைத்துக் கொள்வார்கள்.
அன்றிரவு நான் வீட்டை அடைந்த போது அப்பா அங்கிருந்து ஏற்கெனவே கிளம்பிப் போயிருந்தார். அம்மா அவருடைய அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எனக்கு அது எந்த வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. முன்னறையில் விரித்திருந்த இரண்டு மெத்தைகளின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த என் உடன்பிறப்புகளுடன் இணைந்து கொண்டேன்.
காதுகளைப் பொத்திக் கொண்டு உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அது கிட்டவில்லை.
விடியற்காலை நேரம்..இந்தக் காலை நேரம் எப்போதும் எனக்கு நிரம்ப எரிச்சலைத் தரும். நான் பேருந்து நிலையத்துக்குச் சென்று ஓட்டுனர்களுக்குப் பேருந்துகளைக் கழுவுவதிலும் நடத்துடனர்களுக்குப் பயணிகளைக் கூவி அழைப்பதிலும் உதவி செய்வேன். காலை நேரத்தில் எது அதிக வெறுப்பேற்றுமென்றால், என்னைப் போன்ற சிறுவர்கள் சீருடையும், பள பளக்கும் பாட்டா சப்பாத்துக்களும் தூய வெண்ணிறக் காலுறைகளும் அணிந்து கொண்டு அவர்களைப் பார்த்தாலே தனித்துவமான உணர்வு கொண்டவர்கள் போலப் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுடைய மூக்கை நிமிர்த்திக் கொண்டு வருவார்கள். சில வேளைகளில் பேருந்தில் ஏறும்போது ஏறத்தாழ அதன் கதவின் மீது இடித்துக் கொள்வது போல இருக்கும். இருக்கையில் அமரும் முன்பு தூசி தட்டி விட்டு அமர்வார்கள். ஏதோ அவர்கள் சீனத் தயாரிப்பு ஆடையை அணியாமல் பகட்டான அஸோ-ஓக் * ஆடையை அணிந்திருப்பது போல நடந்து கொள்வார்கள். அதன்பின் புத்தகங்களை வெளியே எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். தங்களுக்குப் படிக்கத் தெரியும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்வதில் உறுதியாக இருப்பார்கள்.
எனக்கும் படிக்க வரும், அவ்வளவு வேகமாக அல்ல, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி மெதுவாக வாசிக்க வரும். ஆட்குறைப்பினால் அப்பா பணி இழந்து, அதன் காரணமாக அவர் பியர் அருந்தத் தொடங்கும் முன்பு வரை நானும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் பேருந்துக்குள் தினமும் புத்தகமும் கையுமாக அமர்ந்து என்னால் படிக்க முடியும் பார் என்று மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ள மாட்டேன். ம்ம், எப்படியோ போகட்டும் ,நான் இப்போது பெரிய பையன். பதின்மூன்று வயதாகி விட்டது.பள்ளிக்குச் செல்வதுமில்லை, எனக்கு அது தேவையுமில்லை. எனக்கு வேலை கிடைக்கிறது.
இன்று ஏனோ தலை கடுமையாக வலித்தது. அந்த “மகிழ்ச்சி” என்ற சொல் இரவு முழுவதும் தலைக்குள் சுழன்று கொண்டேயிருந்ததால் உறங்கவே இல்லை.
அது இப்படி வந்து வந்து விரைவில் மறைந்து விடுவது எனக்குப் பிடிக்கவில்லை. முடிவே இல்லாமல் எப்போதும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சிதான் எனக்குத் தேவையாக இருந்தது. பாஸ்டர் சொல்வது போல் அதற்கு உடலோடும், பணத்தோடும், பசியோடும் தொடர்பில்லையென்றால் நான் அதை அடைய ஏன் முயற்சி செய்யக் கூடாது? அதன் பின் ஒரு வேளை என்னுள் நிரம்பியிருக்கும் எரிச்சல், வயிறு உபாதை, மண்டை பிளக்கும் வலி மற்றும் வேதனை யாவும் ஒரு திருடனைப் போலச் சுவடின்றி இந்த இரவில் மறைந்து விடக் கூடும்.
அதன் காரணமாகப் பேருந்தில் ஏறும் ஒவ்வொருவருக்கும் உதவிசெய்ய ஆரம்பித்தேன். முதியவர்கள், இளையவர்கள், குண்டானவர்கள், ஒல்லியாக இருப்பவர்கள், வியர்வையில் கசங்கியவர்கள், அழகானவர்கள், அவலட்சணமானவர்கள் என நீக்கமற அனைவருக்கும் சேவைகள் தொடர்ந்தன. அவர்கள் சுமையை ஏற்ற உதவி புரிந்தேன். புன்னகைத்துக்கொண்டே வந்தனம் கூறினேன். யாரையும் வசை சொற்களால் ஏசவில்லை, கத்தவுமில்லை. ஆடையிலேயே மலம் கழித்து, நாற்றமடித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை அதன் அம்மா துடைத்துச் சுத்தம் செய்கையில் அந்தக் குழந்தையைக் கையில் ஏந்திப் பிடித்தபடி உதவி செய்து கொண்டிருந்தேன்.
இன்று என்னைப் பார்ப்பவர்கள் அனைவரும் ‘கடவுளின் குழந்தை‘ இங்கு தோன்றி அனைவருக்கும் உதவி செய்கிறது எனக் கூறுவார்கள். அனைவரும் எனக்கு நன்றி சொல்லி ஆசிர்வாதம் செய்தார்கள். ஒரு பெண்மணியோ அவரிடம் நான் காட்டிய இங்கிதத்துக்குப் பரிசாக கொஞ்சம் சில்லறைப் பணம் தந்தார். நானோ ஏற்கெனவே ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அந்த உணர்வு காலை முதல் மதியம் வரை நீண்டு கொண்டே இருந்தது.
ஆனால் மாலை நேரமாகையில் நான் மிகக் களைத்து விட்டேன். என்னுடைய பணி நேரம் ஏறத்தாழ முடிவடையும் தருவாயில் எனக்குள்ளிருந்த சாத்தான் சட்டென்று வெளியே குதித்து வந்து எனது மகிழ்ச்சியையெல்லாம் குலைத்துப் போட்டது. ஒரு முதிய பெண்மணி தனது கைப்பையைச் சரியாகக் கையாளாமல் தூக்கிக் கொண்டு வர, அதனுள்ளிருந்த பணப்பை வெளியே எட்டிப் பார்த்து என்னை வரவேற்றது. என்ன நடக்கிறது என்று நான் அறிந்து கொள்ளும் முன்பே, போர் வீரனின் துப்பாக்கியிலிருந்து சீறிப் பாயும் தோட்டா போல எனது கை நீண்டு சென்று அந்தப் பணப் பையைத் திருடியிருந்தது.
ச்சே! இந்த நீண்ட நாள் பழக்கம் என்னை ஆட்கொண்டு எப்படிக் கட்டுப்பாடிழந்து விட்டேன்! அந்தப் பெண்மணியைக் கூட எனக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால் அவர் தினமும் இந்தப் பேருந்தில் பயணம் செய்பவர். வீட்டுக்கு நடந்து செல்லும் வழியெல்லாம் சட்டைக்குள்ளிருந்த அந்தப் பணப்பை கனத்தது. அதன் கனம் என்னை வீழ்த்தியது. அந்தப் பணப்பைக்குள் என்ன இருக்கிறதென்று திறந்து பார்த்த போது எனது விழி பிதுங்கி வெளியே விழுந்து விட்டது. கார்களைக் கழுவுவது மற்றும் பயணிகளைக் கூவி அழைக்கும் பணிகளின் ஒரு வார கால வருமானத்தைச் சேர்த்தால் கூட அதனுள்ளிருக்கும் பாதித் தொகைக்கு ஈடாகாது. அந்தப் பெண்மணியின் அடையாள அட்டை பைக்குள்ளிருந்ததைப் பார்த்தேன். அவர் பெயர் தையோ ஓகுன்யெமி. பிறந்த வருடம். 1962. அடையாள அட்டைக்குள்ளிருந்து அவர் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குள் அவமானம் பரவியது. எனது ஆன்மா உறுத்தியது. அதன்பின் அடுத்த நாளே அந்தப் பணப்பையை திருமதி தையோ ஓகுன்யெமிக்குத் திருப்பித் தந்து விட முடிவெடுத்தேன். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியை உணர ஆரம்பித்தேன்.
ஆனால் வீட்டை அடைந்த பின் உள்ளே நுழைவதற்கு முன்பே அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தைக் கேட்க முடிந்தது. வீட்டு உரிமையாளரிடம் மம்மா கெஞ்சிக் கொண்டிருந்தது அந்தப் பழைய கட்டிடத்தின் உளுத்துப் போயிருந்த கதவுக்கு வெளியே நிற்கையில் உள்ளிருந்து தெளிவாகக் கேட்டது.
தயவு பண்ணுங்கள்! ஒரு வாரம் மட்டும் தள்ளிப் போடுங்கள் ஐயா! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார் மம்மா. அவரது குரல் நடுங்கி கொண்டிருக்க, அழுது கொண்டிருக்கிறார் என நன்றாகப் புரிந்தது. நேற்று வந்திருந்த அப்பா அத்தனை பணத்தையும் துடைத்து எடுத்துச் சென்றிருந்தார்.
இந்த நிகழ்வுகளுக்கிடையில் ஊசலாடியபடி என்ன செய்ய வேண்டுமென்று என் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன்.
அது அவ்வளவு சுலபமாக இல்லை. பள்ளியில் எழுதும் மிகக் கடினமான தேர்வு போல இருந்தது.
நான் உள்ளே போய் பணப்பையிலிருக்கும் தொகையை எடுத்துக் கொடுத்தால் அம்மாவும் வீட்டு உரிமையாளரும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்றால் நான் திருடனாகி விடுவேன், திருமதி ஓகுன்யெமி துக்கமடைவார். இந்தப் பணத்தை நாளை நான் கொண்டு போய் கொடுத்தால்தான் ஓகுன்யெமி மகிழ்ச்சியடைவார். ஆனால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதைத் திருப்பித் தந்து விட்டால் எனக்கு மகிழ்ச்சி கிட்டாது. இன்றிரவுக்குள் வாடகை கட்டாமல் விட்டால் நான் எப்படி மகிழ்ந்திருக்க முடியும் ?
வழக்கத்தை விட என் வயிறு அதிகமாக வலித்தது.,இந்த மகிழ்ச்சி என்னும் விஷயமெல்லாம் என்னுடைய நிலைமைக்குக் கொஞ்சம் அதிகம்தான். ஒரு நாளிலேயே அந்த மகிழ்ச்சியில் நான் களைப்படைந்து விட்டேன். வீட்டு உரிமையாளர் அம்மாவை மேலும் மேலும் இகழ்ந்து பேசியதுடன் எங்கள் பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறுமாறு கத்திக் கொண்டிருந்தார்.
அப்போது நான் உடனடியாக ஒரு முடிவெடுத்தேன்.
திருமதி.தையோ ஓகுன்யெமியின் பணத்தை எடுத்து அம்மாவின் கைகளில் ஒப்படைக்கையில் நான் இன்னும் உண்மையான மகிழ்ச்சிக்குத் தயாராகவில்லை என்னும் முடிவை எட்டியிருந்தேன்.
*
*எகுன்குன்- யொரோபா மூதாதையர்களின் ஆவி
*மோலுவா – சிறு பேருந்து
*அக்பாடா- நைஜீரியா பருத்தித் துணி
*அஸோ – ஓக்- யொரொபா இன மக்களின் பின்னல் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை
***
எஃபுவா ட்ராஓரே (Efua Traoré) : ஒரு நைஜீரிய -ஜெர்மன் எழுத்தாளர். நைஜீரியாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். மற்றும் அவர் பிரான்ஸ், ஜெர்மனியில் வாழ்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அவரது இந்தச் சிறுகதையான True Happiness ஆப்பிரிக்கப் பிராந்திய காமன்வெல்த் சிறுகதைப் பரிசை வென்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு “Children of Quick Sands” என்னும் அவரது முதல் நாவல் “the Children/Chicken house Children’s Fiction Competition பரிசை வென்றது. இந்த நாவல் 2022 ஆம் ஆண்டில் குறும் பட்டியலில் இடம் பிடித்தது. இவருடைய ஜெர்மன் நாவலான Die Huter des schlafes (The Guardian Sleep) க்கு 2019 ஆம் ஆண்டின் மியூனிக் Literatureferet YA இலக்கிய உதவித் தொகையைப் பெற்றார்.The House of Shells, One Chance Dance ஆகியவை இவரது மற்ற படைப்புகள்.
லதா அருணாச்சலம் – ஆங்கில முதுகலையையும் ஆசிரியப் பட்டப் படிப்பையும் முடித்தவர். பதினான்கு வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வசித்த லதா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நைஜீரிய எழுத்தாளர் அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimsons Blossoms என்னும் நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் ( எழுத்து பிரசுரம்), டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் எழுதிய Problemski Hotel என்னும் நாவல் பிராப்ளம்ஸ்கி விடுதி (காலச்சுவடு பதிப்பகம்) என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ‘ஆக்டோபஸின் பேத்தி ‘(நூல்வனம் பதிப்பகம்), உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘ஆயிரத்தொரு கத்திகள் ‘என்னும் தொகுப்பும் வெளியாகி உள்ளன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா எழுதிய Paradise என்னும் நாவலின் தமிழாக்கம் “சொர்க்கத்தின் பறவைகள்” இவரது மூன்றாவது மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் ஐந்தாவது மொழிபெயர்ப்புப் படைப்பு. மின்னஞ்சல் முகவரி : lathaarun1989@gmail.com.



அருமையான கதை, மொழிநடை அற்புதம்,,