நாராயணி கண்ணகி
(ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவரும் ‘தப்பு’ நாவலின் பகுதி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது)
நடுத்தர வயதைக் கொண்ட அந்த ஆணும் பெண்ணும் மகளிர் காவல் நிலையத்திற்குள் தயக்கத்துடன் பயந்து பயந்து நுழைந்தார்கள். கணவன் மனைவி போலிருந்தார்கள். வந்த இடம் சரிதானா? என்கிற சந்தேகமும் அவர்களிடம் இருந்தது. ஒரு முறை ஒருவருக்கொருவர் முகம் பார்த்தார்கள். அழுது கொண்டே பெண்மணி முன்னே நடந்தார், அவர் பின்தொடர்ந்தார். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தாலும் இந்த இடத்தில் பெண் முன்னால் போக வேண்டும், ஆண் பின்னால் போக வேண்டும் என்கிற உளவியல் விவரங்களைப் புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மீது பசுந்தழைகளின் மணமும், ஆட்டுப் புளுக்கைகளின் மணமும், ஏரிக் களிமண்ணின் மணமும் கலந்து வீசியது. காட்டுக்குள்ளிருக்கும் குக்கிராமம் ஒன்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. அவரின் வேட்டியும், சட்டையும், அந்தம்மாவின் புடவையும் ரவிக்கையும் மறைக்க வேண்டும் என்பதற்காக சுற்றிக் கொண்டிருந்தார்கள். உடை அணிந்ததில் கட்டுமான நேர்த்தி இல்லை. உழைப்பின் புழுதிகள் ஆடைகளின் வண்ணமாகியிருந்தது. அவரணிந்திருந்த நிறம் தெரியாத சட்டையின் பொத்தான்களின் துளைகளை மேலும் கீழும் மாற்றிப் பூட்டிக்கொண்டிருந்தார். வேட்டியும் அதுபோலவே ஏற்ற இறக்கமாக கட்டியிருந்தார். அந்தம்மாவும் உள்ளாடை இல்லாமல் ரவிக்கை அணிந்திருந்தாள். உள்ளாடை இல்லாமல் ரவிக்கை அணியலாம், பாவாடை இல்லாமல் புடவைச் சுற்றிக் கொண்டிருந்தாள். காவல் நிலையத்திற்குள்ளிருந்து பெண் காவலர்கள் பார்க்கும் போது தொடைகள் தெரிந்தன.
மகளிர் காவல் நிலையத்தின் காலைப்பொழுது என்பதால் பொதுவான காவல் நிலையத்தில் நிகழும் எவ்விதமான பரபரப்பு காட்சிகளையும் இங்கு பார்க்க முடியவில்லை. பிடிபட்டு நொறுங்கிய வாகனங்கள் இல்லை. நிறையக் காவலர்கள் இல்லை, துப்பாக்கி பிடித்த வாயில் காவலர் இல்லை. சட்டைக் கையில் இரண்டு கோடுகள் போட்ட இரண்டு பெண் காவலர்களும், காக்கிப்புடவைக் கட்டிய சுமார் ஏழு மாத கர்ப்பமான வயிற்றுடன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த துணைக் காவல் ஆய்வாளரும் மட்டுமே இருந்தார்கள். இது தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடம் என்பதால் காவல் நிலையம் போல் தெரியவில்லை. ஆண்கள் மட்டுமே தங்கி இருக்கும் வாடகை வீட்டைப்போல் காணப்பட்டது. படித்தவர்கள் படித்து அறிய ‘மகளிர் காவல் நிலையம்’ என்கிற தகட்டில் எழுதிய மூன்றிற்கு நான்கு அளவிலான அடையாளப் பலகை வாசற்படிக்கு மேலே நிறுத்தப் பட்டிருந்தது.
சீருடையுடன் மகளிர் காவலர்களைப் பார்த்ததும் சரியான இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்கிற புரிதலும், தெளிவும் ஏற்பட்டது. அழுகையைப் பெரிதாக்கிக் கொண்டாள். அழுகை காவலர்களின் கவனத்தை வளைத்தது. அழுகை எப்போதுமே முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்து விடக் கூடிய சக்தியைக் கொண்டது. சில காரியங்களைத் தொடங்குவதற்கு வெறும் காகிதங்கள் போதாது, கண்ணீரும் வேண்டும். அந்தக் கண்ணீர் உண்மையாக இருந்தால், வலிமை அதிகம்.
“டவுனு பூரா சுத்தனோங்க, பொம்பள போலீபஸ் டேசன் எங்க இக்குதுன்னு கேட்டா இக்கற எடம் யாருக்கும் வெளங்கல…” என்றார். அலைந்ததை முதலில் சொல்லி விடவே முனைந்தார்.
அந்தம்மாவின் அழுகைப் பெரிதானது. செயற்கையாக வரவைக்கபட்ட அழுகையல்ல என்பது புரிந்தது. ஆனால் காவல்துறையினர் எதற்கும் மயங்கி விடக்கூடாது.
“அழாதீங்க… என்ன விசயம் சொல்லுங்க…?” ஒரு பெண் காவலர் கேட்டார்.
அவளின் அழுகை பெரிதானது, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஒரு விதமாக முறுவலித்தாள். கிராமத்தில் சாமியாடுபவர்கள் உடலை இப்படித்தான் முறுக்குவார்கள். பிறகு கைகளால் தலையில் அடித்துக் கொண்டாள். அதனோடு நெஞ்சில் அடித்தாள். இந்த அழுகை புது விதமாக கலவரம் காட்டியது.
“அழாத, அழாதன்ன சொன்னாதான் அழுவாசி ஜாஸ்தி ஆயிருது… வாயைத் தொறந்து என்னாச்சுன்னு சொன்னாதான் தெரியும்… நீ அழுதா எதுக்கு அழறன்னு எங்களுக்குத் தெரியாது… புரிதா?”
அழுகை நிற்கிற மாதிரி தெரியவில்லை. பெண் காவலர் “அய்யா! நீங்களாச்சும் என்ன விசயம்னு சொல்லுங்க… ஆடு,மாடு திருடு போச்சுன்னா இங்க கேசு எடுக்க மாட்டோம்… சந்தைக்குப் பக்கத்துல இருக்குதே பெரிய ஸ்டேசன் அங்க போயிடுங்க… யாராவது சண்டைப் போட்டு அடிதடின்னாலும் இங்க கேஸ் எடுக்க மாட்டோம். அங்கதான் போவணும்… சொத்துப் பிரச்சனன்னா வக்கீல பாருங்க, இல்லன்னா கலெக்டர பாருங்க…” என்றார். இவர்களின் வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்குச் சம்பந்தம் இருக்காது என்று கருதினார். சம்பந்தம் இருக்கக் கூடாது என்றும் கருதினார்.
அவர் வராத கண்ணீரைத் துடைத்தார். ஆனால் அழுது இருப்பாரென்று தெரிந்தது.
“அய்யா! நீங்களாச்சும் சொல்லுங்க…”
(முன்பெல்லாம் அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை ஐயா என்று அழைக்க மாட்டார்கள். காவல் நிலையம் வந்தால் நீ, வா, போ, யோவ், ஏய் மட்டுமின்றி வாடா, போடா, வாடி, போடி என்பதுதான் நடைமுறையாக இருந்தது. தற்போது கொஞ்சம் மாறிவிட்டது. போகட்டும் என்று மரியாதையும் கொடுக்கிறார்கள். யாரும் பெரிய குற்றங்களில் மாட்டிக் கொள்வதில்லை, சின்னஞ் சிறு தவறுகளுக்கும் காவல் நிலையத்தில் புகார்களைக் கொண்டு வருகிறார்கள். அதனால் எல்லோரிடமும் மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பது இன்ஸ்பெக்டர் மனோன்மணி உத்தரவு! மனோன்மணி அநியாயத்திற்கு இளகிய மனம் கொண்டவர். நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம், மஞ்சனம், மஞ்சள், மை என்று கோயிலில் தரும் எல்லா வண்ண பிரசாதங்களையும் அணிபவர். ஏதேனும் ஆஸ்ரமத்தில் இருக்க வேண்டியவர் தவறி இன்ஸ்பெக்டராகி விட்டார். அவர் கட்டாயமாக்கிய மரியாதையை அவர் காவல் நிலையத்தில் இல்லையென்றாலும் கடைப் பிடிக்கிறார்கள்.)
“அய்யா, அய்யா! என்ன விசயம் சொல்லுங்க…?” கொஞ்சம் அதட்டுகிற குரலில் கேட்டார்.
“என்னாத்த சொல்லுவோம் தாயி., நீங்களும் நாங்க பெத்தத் தாயிங்களாட்டும் இக்கறீங்க… தவப்பன் தாயிங்க கிட்ட சொல்ற வெசயமா தாயி?”
“அதுக்குன்னு வந்துட்டீங்க… வந்துட்டு யோசிச்சா நாங்க எதுவும் பண்ண முடியாது.” புடவையில் உட்கார்ந்திருந்த உதவி காவல் ஆய்வாளர் சொன்னார்.
அவர் அவரின் மனைவியைப் பார்த்தார். (மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.) “எஞ் செத்த வாயால நான் சொல்லலமே… நீயே வாயத் தொறந்துடு…” என்றார்.
“நாஞ் சொன்னா எவ்வாயி அவியாதா?” அந்தப் பெண்மணி தன் வாயை ஓங்கி அடித்துக் கொண்டார். அது சும்மா அடித்துக் கொண்ட அடி அல்ல, தன்னைத் தானே ஓங்கி, வலிக்க அடித்துக் கொள்வது என்பது தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளவும் உண்டாகும் துணிவுக்கு ஆதாரம். கொதிக்கும் ஆத்திரத்தின் சூடு! அந்தம்மாவின் முகம் கிராமத்து வேப்பமரத்தடி சூலத்தைப் போல் தெரிந்தது.
உட்கார்ந்திருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு விதமான அதிர்ச்சி தாக்க எழுந்து நின்றார். ஏதோ தவிர்க்க முடியாத பிரச்சினை என்பது புரிந்து கொண்டார்.
“அம்மா! நீங்க ஏதோ பிரச்சினைல இருக்கீங்க… சொல்லுங்க…”
அந்தம்மாள் கண்களை மிகப் பெரிதாக விரித்து பார்த்தார். “தாயி! இந்த வவுத்தல மலய சொமந்த மாரி சொமந்து பெத்த புள்ளய சண்டாளமூட்டு பாவிக வெள்ள மூத்தரம் பேஞ்சி நாசம் பண்ணி பூட்டானுங்க…” வயிற்றை ஓங்கி அறைந்து கொண்டார். அந்தம்மாள் தாங்க முடியாத துக்கத்தை, பேரிடியாய் விழுந்த துயரத்தை காவலர்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும் என்கிற பிரயத்தனம் காட்டினாள்.
“வெள்ள மூத்தரமா?” கேட்ட காவலரின் முகம் மாறியது.
இன்னொரு தலைமைக் காவலர் புரிந்து கொண்டார். “ஐ பி சி த்ரீ செவன்ட்டி சிக்ஸ்!” என்றார்.
ஒரு அதிர்வு உண்டான மாதிரி இருந்தது. செவ்வக இரும்பு மேசையைச் சுற்றி வந்தார் புடவையிலிருந்தக் காவலர் அந்தம்மாவைப் பிடித்துக் கொண்டார். “கொஞ்சம் உக்காருங்க… தண்ணிக் குடிக்கிறீங்களா?” என்றார். தள்ளி நின்றிருந்த மற்ற இரண்டு காவலர்களும் அருகில் வந்தார்கள். அந்தம்மாவுக்குத் துக்கம் அதிகரித்தது. இருவருமே உட்காராமல் நின்றே இருந்தார்கள்.
“நாங் ரொம்ப கோவக்காரங் தாயி, தொரட்டில ஒவ்வொருத்தங் தொண்டகோக்கைங்களயும் இழுத்து இழுத்து போட்ருவங்… பண்டிக அன்னிக்கி மாரியாத்தாக்கு ஆடுங்கள பலி போட்ட மாரி போட்ருவங் ரத்த ஆத்த காட்றுவன்… உள்ள கொதிப்படங்கல தாயி…” அந்தய்யாவின் உதடுகள் துடித்தது. கடுக்கன் போடவில்லை என்றாலும், காதுகளில் பெரியதாக துளைகள் இருந்தன. துளைகளுடன் தொங்கிய காதுகள் ஆடியது. அடர்ந்த, வெளுத்த மீசைகளுக்கு மத்தியில் உதடுகளை அவர் கடித்துக் கொண்ட விதம், பயோட்டின் எலுமிச்சை பழத்தை கடித்துக் கொள்வதைப் போலிருந்தது.
மூன்று காவலர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பார்வையில் பதட்டம் அதிகரித்தது. கண்களாலேயே பேசிக் கொண்டனர்.
“பத்து நிமிசம் உக்காருங்க… இன்ஸ்பெக்டர் மேடம் வந்துடுவாங்க… அவங்க கிட்ட சொல்வீங்க… பதட்டபடாதீங்க, சட்டபடி நடவடிக்க எடுப்பாங்க, தைரியமா இருங்க…”
“ஆளுங்க யார் யாருன்னு தெரியுமா?” என்று கேட்ட காவலரை துணைக் காவல் ஆய்வாளர் தடுத்தார்.
“சைலன்ட்டா இருந்துடு ப்ரியா, மேடம் வந்து விசாரிப்பாங்க… நாம இதுல மூக்க நுழைக்கக் கூடாது” என்றார். புகார் கொடுக்க வந்த இருவரையும் பார்த்து “இன்ஸ்பெக்டரம்மா வந்துடுவாங்க… எல்லாத்தையும் அவங்க கிட்டயே சொல்லுங்க, எங்க கிட்ட ஒரு தபா சொல்லிட்டு மேடம் கேக்கறப்போ இன்னொரு தபா சொல்வீங்களா? கொஞ்ச நேரம் உக்காருங்கம்மா, ஐயா உக்காருங்க.” என்றார்.
“இன்ஸ்பெக்டரம்மா கிட்ட சொல்றப்போ உண்ம என்னாவோ அத மட்டும் சொல்லணும் புரிதா? நீங்க ஆத்திரப் பட்டு வெட்றன், குத்தறன்னு போக வேணாம். தப்பு பண்ணவங்கள போலீஸ் வுடாது, தண்டன வாங்கித் தந்துடுவோம்… சரியா?”
“அதுக்குதாங் தாயி இந்தக் கோயிலுக்கு வந்தோம். உங்கள சாமியா நெனச்சி வந்தோம். சண்டாளமூட்டு பாவிகங்கள தூக்குல மாட்டணும்…”
துணைக் காவல் ஆய்வாளர் அவருடைய போனிலிருந்து ஆய்வாளரிடம் பேசினார். “அம்மா! த்ரீ செவன்ட்டி சிக்ஸ் ஐ பீ சி! அப்பா, அம்மா ரெண்டு பேர் வந்திருக்காங்க… நாங்க ஏதும் என்கொயரி பண்ணல… நீங்க வரணும்னு சொல்லிட்டோம்.”
“ஓ காட்! கடவுள் ஏன் என்ன இப்படி சோதனப் பண்றாரு… இங்க வந்து மூணு வருசத்துக்குக் கிட்ட ஆச்சு… த்ரீ செவன்ட்டி சிக்ஸ் வரவே இல்லை. நல்ல விதமா போயிடணும்னு நெனச்சேன்… அவங்கள உள்ள மறவா உக்கார வெச்சிடுங்க… நெஞ்சு படபடன்னுது… ரெண்டு வாய் இட்லி எடுத்துட்டு, மாத்தர போட்டுனு வந்துடறன்… வர வழில கோயிலுக்குப் போயிட்டு வர்றன்… ஜீப்ப பன்னெண்டு மணிக்கு வரச் சொன்னேன், இம்ரானுக்குப் போனடிச்சி பத்து நிமிசத்துல கெளம்பிட சொல்லு.. படபடங்கது… டிஎஸ்பி சார் கிட்ட சொல்லிடறதா என்னன்னு தெரில… விசாரிக்காம சொன்னா தப்பாயிரும்… யார்னா ரிப்போட்டருங்க வந்தா பேச வுடாதீங்க… இன்னிக்கு செவ்வாதான…? ராவுகாலம் மூனுநால்ர, குளிக பன்னண்டு ஒன்ர, எமகண்டம் ஒம்பதோட முடிஞ்சிருச்சி… சர்ருன்னு வந்துடறன்…” என்றார் இன்ஸ்பெக்டர் அம்மா. அவரின் பயம் படபடப்பான பேச்சில் தெரிந்தது. “வயசு கேட்டியா?”
“இல்லைங்க அம்மா! நீங்கதான் கரெக்ட்டா கேப்பீங்கன்னு.. அவங்கள எதுவும் கேக்கல..”
“சரி, வந்துடறன்”
போனை வைத்து விட்டு அந்தத் தம்பதிகளிடம் “நீங்க உள்ள உக்காருங்கம்மா… பெஞ்சில உக்காருங்க…” என்று அவர்களிடம் சொல்லி விட்டு “சற்குணம்! இவங்களுக்கு டீயானா, காப்பியானா சொல்லேன்… ஏம்மா எதனா சாப்ட்டீங்களா?”
“எங் கொழந்த நாசமாயிட்டா, தொண்டயில பசத்தண்ணி, நீசத்தண்ணி எறங்குமா?”
“சாப்புடாம கெடந்தா ஒடம்புல வலுவு இருக்குமா? உங்ககிட்ட யார்னா பிரச்சனை பண்ணா எதுத்து பேசறதுக்கானா வலுவு வேணும்… சற்குணம்! இட்லி கெடைச்சா வாங்கினு வாயேன்…”
“காலி ஆயிட்டிருக்கும் கெடைக்காது, சாப்பிட நேரம் கிடைக்காது.. மேடம் வந்தா நிக்க மாட்டாங்க… அவசரமா விசாரிக்க போவாங்க…”
“காபி சொல்லிடு!”
காவலர் சற்குணம், அவரின் காலுடைப் பையிலிருந்து கைப்பேசி எடுத்து இரண்டு காபி சொல்லி விட்டு, இன்னும் நிலையத்திற்கு வராத காவலர்களை அழைத்து “மேடம் ஒரு கேஸ் விசயமா வந்துனு இருக்காங்க, அதுக்குள்ள வந்து சேருங்க.. பேசப் போறாங்க..” என்றார்.
அறைக்குள்ளிருந்து அந்தம்மா சத்தமாகவே அழுதார்.
“அழாதீங்க…”
“எங்களுக்கு யாரும் தொண இல்ல சாமிங்களா.. உங்க காலப் புடிச்சசக்கிறோம்… நீங்கதான் எங்களக் காப்பாத்தணும்..”
“கால, கையப் புடிக்கிற சமாச்சாரம் வேணாம், எங்க கடமய நாங்க செய்வோம் அழாம இருங்க… அதுக்குதான் கவர்மென்ட் எங்களுக்குச் சம்பளம் தருது.. நகந்து உக்காருங்க.. அக்யூஸ்ட்ட புடிக்கிற வரைக்கும் நீங்க சேப்பா இருக்கணும்…”
இருவரும் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். சுவற்றில் மாட்டி வைத்திருந்த சாமிப்படத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். மூன்று மதங்களுக்கும் பொதுவான சாமிப்படம் அது. மத்தியில் ஒரு இந்து கோயிலின் கோபுரம், அதன் இடது பக்கத்தில் இஸ்லாமியரின் மசூதியும், பிறையும் நட்சத்திரமும், வலது பக்கத்தில் சர்சும் சிலுவையும் வரையப்பட்டிருந்தது. பொதுவாக மத்தியில் காக்கனா மல்லிகைப்பூவின் சரம் அரைமுழத்தை மடித்து தொங்கவிட்டிருந்தார்கள். அந்தப் பூச்சரம் இலவசமாக கொடுக்கப்பட்டதாக இருக்கும். பொதுவாக கொஞ்ச நேரத்திற்கு முன்பு கொளுத்தி வைத்த ஊதுபத்தி கால் பாகம் கரைந்திருந்தது. புகைப்படத்தைப் பார்த்து அப்பெண்மணி கும்பிட்டுக் கொண்டே இருந்தாள்.
சாலையில் வாகனங்கள் போகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு ஆம்புலன்சின் சைரன் இயல்பாக பயம் காட்டி விட்டு போனது. எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். அவ்வளவு வாகனங்களின் ஒலிகளில் காவல் ஆய்வாளர் ஜீப்பின் ஒலி கேட்கவே இல்லை. கறுப்பு நிற புல்லட்டில ஒரு பெண் காவலர் வந்தார். ஒரு காவலரை ஸ்கூட்டியில் ஒருவர் இறக்கி விட்டார். அவர் லுங்கியில் இருந்தார். ஷேவ் பண்ணாத கன்னங்கள் மட்டும் வெள்ளையாக இருந்தது. “போன் பண்ணு வர்றன்” என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியை வளைத்துக் கொண்டு போனார்.
மஞ்சள் பூசி பூ வைத்துக்கொண்டு ஒல்லியாக இருந்த ஒரு பெண் காபி கொண்டு வந்தாள். இப்போது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிக்காமல் வாங்கிக் குடித்தார்கள்.
அரை மணிநேரம் கழித்து ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கினதும் வானத்தில் தெரிந்த சூரியனைப் பார்த்து கும்பிட்ட பின் உள்ளே நுழைந்தார் காவல் ஆய்வாளர் மனோன்மணியம். காக்கி உடை அவரை கச்சிதமாக காட்டவில்லை. தும்பிக்கை இல்லாத பெண் பிள்ளையாராய்த் தெரிந்தார். நடக்கும் போதே மூட்டுவலிக்கு இரவில் வலி நிவாரணி போட்டுக் கொள்ளும் இனம் என்பது தெரிந்தது.
எல்லோரும் பரபரப்பாக நின்று சல்யூட் அடித்தார்கள். அவருக்குப் பின்னால் ஜீப் ஓட்டி வந்த காவலர் ஒரு தோல் பையைத் தூக்கிக் கொண்டு வந்தார். அது காவல் ஆய்வாளரின் பை.
மனோன்மணியம் அவருடைய அறைக்குள் நுழைந்தார். பீரோவைத் திறந்தார். பீரோவுக்குள் ஒட்டி இருந்த ராகவேந்திரா, ரமணர், ஷீரடி சாய்பாபா, பாபா படங்களை வணங்கினார். சில ஆண்டுகளாகவே இப்படித்தான் வணங்குகிறார். ஒரு ஜோதிடன் சொன்னது. ‘உங்க ராசிக்கு ஜீவ சமாதியான மகான்களை கும்பிடுங்க… முடிஞ்சா ஒருமுறை சீரடி போய் வாங்க..’ என்று. அதைக் கடைப் பிடிக்கிறார். அதுவும் வெளியே சுவர்களில் புகைப்படங்களை மாட்டாமல், பீரோவுக்குள்ளோ, பெட்டிக்குள்ளோ வைத்து வணங்க வேண்டும் என்று ஜோதிடன் சொல்லி இருந்தான். ஜோதிடர்கள் அவர்களின் பசிக்கான சோறு பொங்க அரிசி வாங்குவதற்குப் புதியது புதியதாக நம்பிக்கைகளை யோசிக்கிறார்கள். அதைக் கொஞ்சமும் யோசிக்காமல் நம்பி விடுகிறார்கள் மனோன்மணியம் போன்றவர்கள்.
பீரோவை மூடிவிட்டு மேசைக்குப் பின்புறமிருந்த பிளாஸ்டிக் ஒயர் கோர்த்த தேக்கு நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்சம் மூச்சுகளை இழுத்து விட்டு “அவங்கள கூட்னு வாங்க” என்றார்.
உள்ளறையிலிருந்து இருவரையும் அழைத்து வந்தார்கள். அதற்காகவே காத்திருந்தவர்கள் மீண்டும் அழுகையுடன் நின்றார்கள்.
“அழாம சொல்லுங்க… மேடத்து கிட்ட அழாம சொல்லுங்க…” உதவி காவல் ஆய்வாளர் மெதுவான குரலில், அழுத்தமான உச்சரிப்பில் சொன்னார்.
“மொபைல்ல வீடியோ ஆன் பண்ணிடு பிரீத்தி” என்றார் ஆய்வாளர்.
“என் போன்லயா மேம்”
“பரவால்ல எடு”
உதவி ஆய்வாளர் இடுப்பில் சொருகி வைத்திருந்த போனை எடுத்து வீடியோவை ஓட வைத்தார்.
“அதெல்லாம் வேணாங்க..” என்றார் அந்த ஆசாமி பதட்டமான கைகளைக் குறுக்கே நீட்டினார்.
“ஏன் வேணாங்கறீங்க.. என்ன நடந்ததுன்னு நீங்க சொல்றத வெச்சிதான் நடவடிக்கை எடுக்க முடியும். உண்மையை தைரியமா சொல்லுங்க..”
“இல்லம்மா… அது டிவில வந்துடும்.. எல்லாரும் பாப்பாங்க…”
அவர்கள் விவரமாக இருப்பதை கவனித்தார்.
“வராது. போலீஸ் கிட்ட உசாரா இருப்பீங்க.. அப்புறம் டிவி காரங்க கிட்ட விதவிதமா சொல்வீங்க.. புதுசாவா பாக்கறேன்”
“யாருக்கும் தெரிய வேணாம்மா…”
அந்தம்மா அதைச் சொல்வதற்கும் அழுதாள்.
“அழாத, தப்பு பண்ணவங்கள புடிக்கிற வரைக்கும் எதுவும் வெளியே போகாது”
“இல்லம்மா..”
அவர்களைப் பேச விடாமல் “பாருங்க கேஸ் கொடுக்கதானே வந்தீங்க… அப்புறம் எதுக்கு தடுக்கறீங்க.. பர்ஸ்ட்டு என்னை நம்புங்க… யாருக்கு என்ன ஆச்சு?”
புகார் கொடுக்க வருபவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவதை நிறையப் பேரிடம் கண்டிருக்கிறார். அதனாலேயே சில பிரச்சினையான புகார்களுக்குச் சும்மாவாகிலும் ஒரு வீடியோ எடுத்து வைத்துக் கொள்வார். புருசன் வரதட்சணைக் கேட்டு அடித்ததாக புகார் சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து ‘அவர் அடிக்கலைங்க நான்தான் கதவுக்கு இடிச்சுக் கிட்டேன்’ என்று சொல்பவர்கள் அதிகம்.
“படம் புடிக்க வேணாம் சாமி, நாங் கன்றாவியாக் கெடக்கோம்…” அந்தம்மாள் தலையைக் கவிழ்ந்து கொண்டே சொன்னார்.
இதை அப்பாவித்தனம் என்று சொல்வதா? எல்லோருக்கும் இருக்கும் பொதுவகையான வெளிப்பாடு என்பதா என்பது தெரியாமல், கொஞ்சம் குழப்பமான ஆய்வாளர் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு “பாத் ரூம்ல சோப்பு போட்டு மூஞ்ச கழுவினு பவுடர் பூசிக்கிறியா?” என்று முகத்தைச் சலனமற்று வைத்துக் கொண்டு கேட்டார்.
அந்தம்மாள் தலையைக் கவிழ்ந்துக் கொண்டே வேண்டாம் என்று அசைத்தாள்.
“எங்கிருந்து வர்றீங்க..?”
“ஏரி பொதுரும்மா..”
தலைமைக் காவலரம்மாள் “ஏரி புதூர் வில்லேஜ் மேடம், அதத்தான் ஏரி பொதுருன்னு சொல்றாரு…” விளக்கம் கொடுத்தார்.
“இல்ல சாமி! நாங் பொறந்து வளந்த மண்ணு எனக்குத் தெரியாதா? பொதுரு! பொதுராத்தான் இந்துச்சி… மூங்க பொதரு கரையை ஒட்னாப்புல இந்துச்சி, பனமரத்தக் காட்டிலும் ஒசந்து நின்னுச்சி, மூங்க பொதுர ஒட்னாப்புல சீங்க பொதுரு, சீங்க பொதுர தாண்டனா பனந்தோப்பு, தோப்புல நொழஞ்சி போனா ஏரிபூராவும் கருவேலங்காடு ரொம்பினு இந்துச்சி… எல்லாத்தியும் நாசமா பண்ணிருச்சி வேலிமுள்ளு மரங்க… பொதுரா இந்தததான் இப்பத்தி ஆளுங்க புதூருன்னு மாத்திப்புட்டாங்க…” அவர் சொல்லும் போது கைகள் அசைந்து அசைந்து காட்சிகளாகக் காட்டியது. அந்த புதர்களின் மேல் அவருக்கு இருந்த அக்கறையும் சேர்ந்து தெரிந்தது.
“நீங்க பொறந்து வளந்த ஊரப் பத்தி உங்களுக்குதான் தெரியும். சரி, வந்த விசயத்த சொல்லுங்க…”
மறுபடியும் அழ ஆரம்பித்தார்கள். அந்தம்மாள் சத்தமாக அழுதார். அவர் தோளிலிருந்த துண்டை எடுத்து வாய்க்குப் பொத்திக் கொண்டு விம்மினார்.
“அழாதீங்க.. சொன்னாதான் கேஸ் எழுத முடியும்”
அவர் வாயிலிருந்து துண்டை எடுத்தார். தொண்டையைத் துண்டால் தடவிக் கொண்டார். “தகுப்பன் வாயால எப்படி சொல்லுவங்கம்மா.. சண்டாளமூட்டு பாவிங்க… எம் புள்ள வவுத்துல வெள்ள மூத்தரம் பேஞ்சிருக்காங்கம்மா… எங் வாயால சொன்னா நாக்கு இழுக்குது”
அழுக்குத் துண்டினால் அவர் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்க்க பகீரென்றது.
“ஆளுங்க யாருன்னு தெரியுமா?”
“தெரியுங்கம்மா.. பெருமாளப்பங்கறவரு, அப்புறம் மனோங்கரங் பையங்”
“பெருமாளப்பன் ஒருத்தன் இன்னொருத்தன் மனோகரனோட பையனா அவன் பேரு?”
“அவங் பேருதாம்மா மனோகரங்!”
“ரெண்டு பேரு! பெருமாளப்பன், மனோகரன் ரெண்டு பேரு, ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் பண்ணி இருக்காங்க… அப்படித்தான?”
“என்னம்மா?”
“உங்க பொண்ண ரெண்டு பையனுங்க சேந்து கெடுத்திருக்காங்கன்னு சொல்றீங்களா…?”
“இல்லம்மா… ஒருத்தங்கதான் பையங்.. இன்னொருத்தங் கெழட்டாளு, பெருமாளப்பனுக்குப் பேரங்களும், பேத்திங்களும் இருக்காங்க.. எழுபது வயசு!”
“என்ன சொல்றீங்க… எழுபது வயசு கெழவனா?” ஆய்வாளரின் கண்களுக்குள் எழுபது வயது பெரியவர் எப்படி இருப்பாரென்று ஒரு ஓட்டம் போய் வந்தது. ஆய்வாளரின் அப்பாவிற்கும் எழுபது வயது. “எழுபது வயசு கெழவனா? உண்மையைதான் சொல்றீங்களா?”
“சாமி மேல சத்தியம்மா.. எங் புள்ளய வெசாரிச்சோம், வெலாவரியா சொல்லிப்புடுச்சு, அதுக்கு பொய் வராதும்மா, பொய்ச் சொல்லிக்கவே தெரியாது. பெருமாளப்பங் தாயோலி கெழவங்கம்மா, மனோகரங் பையங், கொழந்த பையங்…”
“என்னது கொழந்த பையனா?”
“ஆமாங்மா..” மனைவி பக்கம் திரும்பினார். “மனோங்கரங் வயசு எவ்ளோ இக்கும் அம்மாகிட்ட சொல்லு”
“எனக்கு என்னாயா தெரியும்? பன்னாடமூஞ்சன நானா பெத்தன்? மொளச்சி மூனு எல வுடல…? இன்னும் மீசக் கூட மொளைக்கல, பாய்ல மூத்தரம் பேய்ற வயசுல, பொண்ணு மேல பேஞ்சி வுட்ருச்சி…”
ஆய்வாளர் உட்பட காவலர்கள் அனைவருக்குமே புதிராக இருந்தது. வழக்குகள் என்பது இப்படியானதுதான், ஆண்டுக்கு ஒரு வழக்காவது விசித்திரமானதாக வந்து விடும், இந்த வழக்கு வெறும் விசித்திரம் அல்ல என்பதை மனோன்மணியத்திற்குள் நெருடல் உண்டானது. இருபத்தைந்து ஆண்டுகள் காவல்துறையில் அனுபவம் இருக்கிறது. எத்தனையோ நெருக்கடிகள் தரும் வழக்குகள் வந்திருகிறது. என்றாலும் அனுபவத்தைத் தாண்டி நடுக்கம் உண்டானது.
***
நாராயணி கண்ணகி – நாராயணி கண்ணகி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நகைப்பட்டறை வைத்திருக்கிறார். நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். வெகுஜன பத்திரிகை, சிறுபத்திரிகை இரண்டிலும் எழுதி வந்தவர், தற்போது இலக்கியப் படைப்பாக்காங்களை மட்டும் எழுதி வருகிறார். வெகுஜன படைப்பாளிகள் தவிர்த்து இலக்கியப் படைப்பாக நாராயணி கண்ணகி முன் வைப்பது இரண்டு குறுநாவல்கள் (பிராந்தியம், மென்முறை), மூன்று நாவல்கள் (வாதி, அலர், கருந்தீ), ஒரு சிறுகதைத் தொகுப்பு (சீதேவி பேசரி) மின்னஞ்சல் : narayanikannagi@gmail.com



சிறப்பான கதையோட்டம். பரபரவென மனம் தவிக்கிறது. முழு நாவலைப் படிக்கத் தூண்டுகிறது.வாழ்த்துகள் அண்ணா.
கதையில் வருகிற பாத்திரங்கள் வாசிப்பாளரின் அருகில் தொடர்ந்து வருகின்றன எனக்கு மிக நெருக்கத்தை தருகிறது
காட்டுக்குள்ளிருக்கும் குக்கிராமம் ஒன்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தது போலிருந்தது.
ஆரம்பமே அதிரடி
சிறப்பான கதையோட்டம். பரபரப்பாய் நகர்கிறது.
நாவலை வாசிக்க ஆவலைத் தூண்டும் பகிர்வு.
ஐயாவுக்கு வாழ்த்துகள்.