ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இரவு படுக்கும்போதே அந்த நெருடல் இன்னும் கொஞ்சம் பெரிதானது போல உறுததிக்கொண்டே இருந்தது. விஷயம் உண்மையாகவே வெளிப்பட்டிருக்குமா? கையில் உயிர்ப்புடன் அலைபேசி இருந்தும் இணையவெளியில் மனம் ஒன்ற முடியாமல் வெறுமனே பார்வையை அலையவிட்டார். யாருக்குமே தெரியாத சங்கதி யார் மூலமாக எப்படி வெளிப்பட்டிருக்கும்? இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் யூடியூப் சத்தம் கசிந்து அலைந்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் தூக்கமே வராமல் புரண்டு கொண்டே கிடந்தார் ரபீக். யூடியூப்பில் ரீல்ஸ் காமெடியை லயித்துப் பார்த்துக்கொண்டு இடதுபுறம் திரும்பிப் படுத்திருந்த ஜீனத் மெல்ல சிரித்துக்கொண்டு கிடந்ததால் கணவன் புரண்டு கொண்டே கிடந்ததை அவளால் உணரமுடியவில்லை.
எவ்வளவு நேரம்தான் தூக்கம் வராமல் இப்படி புரண்டு கொண்டே அல்லாடிக்கொண்டிருப்பது என சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நிஜாமுதீனுக்கு போன் போட்டார் ரபீக். நேரில் சொல்ல முடியாத சங்கதிகளையும் மற்றவர்களைப் பற்றியும் இல்லாததையும் பொல்லாததையும் நிஜாம் போனில் கக்கிவிடுவார். ஜமாஅத்துக்கு ஏற்ற நல்ல மேனேஜர்.
ரிங் போனதுமே அலைபேசியை எடுத்த நிஜாம், “அஸ்ஸலாமு அலைக்கும். சொல்லுங்க தலைவரே” என்றார்.
“நம்ம ஜமாத்தப்பத்தி வெளில கண்டதையும் பேசுறாங்கணு எனக்கு ஒரு தகவல் வந்துச்சு. அதான் என்ன ஏதுணு உங்ககிட்ட கேக்குறன். நம்ம ஜமாத்தப் பத்தி வெளில யாரு பேசுறாங்க? நா ஊர்ல இல்லாதப்ப எதும் பிரச்சனையா?” மெல்ல தூண்டில் போட்டார்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல தலைவரே. பிரச்சனயில்லாத நம்ம ஜமாத்தப்பத்தி என்ன பேசுறாங்கலாமாம்? ஒரு ஜமாத்து நல்லா இருந்தா புடிக்காதே. பொறாமைக்கு உங்ககிட்ட சும்மா சொல்லியிருப்பாங்க . என்ன ஏதுணு யாருனு விசாரிக்கலாம் தலைவரே.”
“அதான் நானும் யோசிச்சன். வேற ஒன்னும் இல்லயே. நம்மாளுங்க வெட்டி நாயமா கண்டதயும் பேசுறாங்களோ?”
“அப்பிடியெல்லாம் இல்லை தலைவரே. இருந்தா நா உங்ககிட்ட சொல்லியிருப்பனே”
“சரி காலைல பாப்போம் நிஜாம். அஸ்ஸலாமு அலைக்கும் “
“வாலைக்கும் சலாம்”
இதென்ன நிஜாம் இப்படிச் சொல்கிறார். அரசல் புரசலாக எதுவும் யாரும் பேசலை என்கிறாரே..! தன்னைப் பற்றி மொஹல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும் ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என சில நாட்களாகவே அவருக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொஹல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்கு தெரியும். பேசவும் மாட்டார்கள். அவரிடம் இருக்கும் பணமும் அந்தஸ்தும் பேச விடாது. தாங்கள் பேசியது அவரது காதுக்கு சென்றால் தங்களுக்கு ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.
இன்று அதிகாலையில் சுபுஹு தொழுகைக்கு எழுந்து இருள் போர்த்திய மெல்லிய பனியில் பள்ளிவாசலை நோக்கி நடந்து செல்லும்போது மீண்டும் அந்த எண்ணம் அவருக்குள் ஓடியது. ‘ச்சே! இதென்ன காலங்காத்தால இறைவனை வணங்கப் போகும் போது இப்பிடியொரு எண்ணம்.’ எரிச்சலுடன் அடம் பிடித்து அலையும் மனதை அடக்க முயன்றார். அப்போது கொஞ்சம் அடங்கியது போல இருந்தது தொழுகையின் போது கெக்கலி போட்டு சிரித்தவாறு குறளி வித்தைக் காட்டியது.
சில வாரங்களுக்கு முன் பள்ளிவாசல் வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சிலர் மும்முரமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் வருவதைக் கண்டவுடன் யாரோ ”தலைவர் வர்றாரு” என்றது ரபீக்பாய் காதில் விழுந்தது. சட்டென்று பேச்சு நின்றது. எல்லோரும் பவ்வியமாக சலாம் சொன்னார்கள். அதில் சுக்கூர் ராவுத்தரும் இருந்ததைக் கவனித்த ரபீக்பாய் அங்கு நிற்காமல் பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டார். அப்போதிருந்தே அவருக்குள் தன்னைப்பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சந்தேகமும் கலக்கமும் கொஞ்சம் கோபமும் ஏற்பட்டுவிட்டது.
அன்று முதல் அவருக்குள் ஒரு குறுகுறுப்பு ஓடிக்கொண்டே இருந்தது. ‘என்னங்க என்னப்பத்தி ஏதோ பேசிட்டிருந்தீங்க போல ?’ என்றோ மற்ற நிர்வாகிகளிடம் ‘என்னங்க என்னப்பத்தி கசமுசானு ஏதோ பேசிக்கிறாங்க போல?’ என்றோ இதைப் பற்றி யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரே வலியப்போய் மாட்டிக்கொண்டதாகிவிடும். இது பெரிய அசிங்கமாவிடும். அதுமட்டுமல்ல, அவரின் அந்தஸ்துக்கு அது ஒரு கௌரவக் குறைச்சலான செயலாகிவிடும்.
எனவே எதுவும் தெரியாதது போலவே இருந்து கொண்டார். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. தப்பு செய்தவனுக்குத்தானே இப்படியான எண்ணங்களும் உறுத்தலும் ஏற்படும் இது மனித இயல்பு. எந்த ஒரு மனிதனும் அவனுடைய மனசாட்சிக்கு பயந்துதானே ஆகணும்.
இன்றும் சிலர் மக்ரிப் தொழுகை முடிந்த கையோடு வெளியே வந்து இளம் இருட்டு படர்ந்திருந்த பள்ளியின் வெளிப்பிரகார திண்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். தலைவரும், செகரட்டரியும் வெளியே வருவதைப் பார்த்ததும் பேச்சும் சிரிப்பும் சட்டென்று நின்றது. ரபீக் பாய் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. அவர்களைக் கண்டுகொள்ளாததைப்போல இருவரும் பள்ளிக்கு வெளியே வந்தார்கள். ரபீக் பாய்க்கு உறுத்தல் அதிகமானது. தன்னைக் குறித்துதான் எதோ பேசுகிறார்கள் என்பது அவருக்கு உறுதியானது.
மொஹல்லாவுக்குள்ளும் சரி ஜமாஅத்துக்குள்ளும் சரி எந்த கிசுகிசு செய்தியாக இருந்தாலும் மற்றவர்களை வேவு பார்க்க எந்நேரமும் கூர்மையுடன் விரிந்து கிடக்கும் நிஜாமின் காதுக்கு வந்துவிடும். ஆனால் நிஜாம் எதுவும் இல்லை என்கிறாரே. தூங்க முடியாமல் நினைவுகள் அலைக்கழித்தன.
கேரளா பெண் விஷயம் வெளிப்பட்டு விட்டதோ என அப்போதே அவருக்குள் கருக்கென்று பட்டது. சகலை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பணம் கொடுத்து உதவி செய்தமைக்கு நம்ம ரபீக் பாய்க்கு கொளுந்தியா மீது பாசம் ரொம்ப அதிகமல்ல என்று சிலர் மொஹல்லாவுக்குள் பேசிச் சிரித்த விஷயம் அவர் காதுக்கும் வந்தது. ஜமாஅத் விஷயம் என்றால் இப்படி ரகசியம் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். பேசினாலும் காதுக்கு வந்துவிடும். தனிப்பட்ட சங்கதிதான் அவ்வளவு சீக்கிரம் வெளியே கசியாது. ரகசியமாகவே காற்றில் அலைந்தபடி சுற்றிக் கொண்டிருக்கும். கசிந்தாலும் என்ன ஏது என்று சம்பந்தப்பட்டவர்கள் காதுக்கு வராது. வந்தாலும் ‘அது ஒன்னுமில்லைங்காணும் அந்தாளப்பத்தி வேற விஷயமாக்குமே’ என்று மடைமாற்றிவிடுவார்கள். பெரிய இடத்து பொல்லாப்பு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
அந்தப் பொண்ணை இஸ்லாத்துக்கு கொண்டு வந்து ஊரறிய நிக்காஹ் செய்து கொள்ளலாமா என அப்போதே யோசித்தார். தன்னுடைய இமேஜுக்கு பாதிப்பு வருமோ எனத் தயக்கம் ஏற்பட்டது. அதைவிட குடும்பத்தில் வரும் பிர்ச்சனைகளும் கண் முன் எழுந்தது.
அவருடைய மனைவி ஜீனத்துக்கு இந்த விஷயம் அரசல் புரசலாகத் தெரிய வந்தது. அப்போது அவர் கண்டு கொள்ளவில்லை. கணவரின் நடத்தையின் மூலமும் சில சந்தேகங்கள் தெரியவந்தும் கண்டு கொள்ளாமலேயே இருந்தார். வசதி படைத்த பெரிய வீட்டுப்பெண்கள் பெரும்பாலும் கணவர் விஷயத்தில் பட்டும் படாமலும்தான் இருக்கிறார்கள். தவறு செய்தது அல்லது செய்வது தெரிய வந்தாலும் கண்டும் காணாதது போலவே இருந்து விடுகிறார்கள். பிரச்சனை பெரியதாகும்போது குய்யோமுய்யோனு கிடந்து அடித்துக்கொள்வார்கள். சிலர் அதுவும் கூட செய்வதில்லை. இவர்கள் மூலம் குடும்ப மானம் வெளியே போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
ரபீக் தன் மனைவிக்கு எதுவும் தெரியாது என்றேதான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் விஷயம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கேரளா ஒத்தப்பாலம் சென்று மரியா வீட்டில் தங்கி வருவார்.
அவளைத் தேடி ரபீக் வரும்போதெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள மன்றாடிக்கொண்டேதான் இருக்கிறாள் மரியா.
‘‘நம்பிக்கையில்லாமலா நான் உனக்கு இவ்வளவு வசதியாக வீடு பார்த்து தங்க வச்சிருக்கேன். கொஞ்சம் பொறுமையாக இரு. இப்ப விஷயம் ஜமாத்துல தெரிஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும் அதான் யோசிக்கிறேன்” என்று சொல்லி சமாளித்துக்கொண்டே இருக்கிறார் ரபீக். இப்போது ஜமாஅத் ஆட்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என்ற அச்சம் அவருக்குள் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இது எப்படியும் மெல்ல வெளிப்பட்டுவிடும்.
மரியாவை கல்யாணம் செய்து கொண்டால் குடும்பத்திலும் ஜமாஅத்திலும் மட்டுமல்ல, மொஹல்லாவுக்குள்ளும் தன் கௌரவத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடும் என்ற அச்சம் அவருக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சின்னவீடு அல்லது இல்லீகள் தொடர்புகள் வைத்துக்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் அந்த தொடர்புக்குப் பின்புதான் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது என ஒரு பயம் வந்து இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமோ எனத் தப்பிக்கும் வழியைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். காமம் கண்ணை மட்டுமல்ல எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடுகிறது. பிற்பாடு பிரச்சினை வரும்போதுதான் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
‘திருமணமாகாத ஒரு ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடி கொடுக்க வேண்டும். திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்’
‘விபச்சாரமும் கற்பு நிலை தவறுதலும் பெரும்பாவம்’
திருமறை வலியுறுத்தும் இந்தக் கூற்றெல்லாம் ரபீக் பாய்க்கு தெரியாமல் இல்லை. யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்யலாம் தப்பில்லை என்பதே மனித மனங்களின் விசித்திரம். இந்த விஷயத்தில் இறை நம்பிக்கை உள்ளவனும் இறை மறுப்பாளனும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். தெரிந்தே தப்பு செய்கிறோமே என அவருக்கு மனம் அவ்வப்போது கொஞ்சம் ஊசலாடும். ஆனாலும் மரியா ஞாபகம் வந்துவிட்டால் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்.
ஜமாஅத் பிரச்சனைகளில் அதுவும் பெண்கள் தொடர்பாக கணவன் மனைவி பிரச்சனைகள், தலாக் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் தீர்ப்பு சொல்லும்போது அவருக்குள் ஒரு நெருடலும் மனப்போராட்டமும் எழும். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கு ஆளாக நேரிடும். வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், ‘’இவன் பெரிய யோக்கியன். தீர்ப்பு சொல்றான் பாரு” என்று பேசுவார்கள். மொஹல்லா சிரிப்பாய் சிரிக்குமே. இந்த எண்ணமே ரபீக்பாயை சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
என்ன பண்ணுவது என்று வழி ஏதும் தெரியாமல் பெரும் அவதிற்குட்பட்டவராக ரபீக்பாய் திணறிக்கொண்டிருக்கும் போதுதான் இருக்கும் பிரச்சனைகள் போதாது என்பது போல மொஹல்லாவில் புதுசாக ஒரு பிரச்சனை வெடித்திருந்தது.
அரசல் புரசலாக சிலர் அங்கும் இங்குமாக பேசிக்கொண்டிருந்தது இப்போது ஊர்ஜிதமாக வெளிப்பட்டிருக்க இதை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எதிர்கொள்வர்களோ என்றும் பிரச்சனை ஜமாஅத்துக்கு வருமா என்றெல்லாம் சிலர் கவலையுடனும் குதர்க்கமாகவும் அலசிக்கொண்டிருக்க பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கவலையுமில்லாமல் தேமே என்றிருந்ததுதான் ஆச்சிரியமாக இருந்தது.
காலனியின் கடைசிப்பகுதியில் குடியிருக்கும் மைதீனின் இரண்டாவது மகன் யூசுப் அவனுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஒரு இந்துப் பெண்ணை விரும்புவதாகவும், அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்து பிரச்சனை பண்ணுவதாகவும் அக்கம் பக்கத்தினர் மூலமாக மெல்லக் கசிந்து இப்போது மொஹல்லா முழுக்கக் காற்றில் அலைந்தவாறு முக்குக்கு முக்கு பேசு பொருளாகியிருந்தது.
‘எம் மருமகனுக்கு இன்னொரு பொண்ணுடன் தொடுப்பு இருக்கு. எம் பொண்ணோட வாழ்க்கைக்கு எதுவும் ஆகாம ஜமாத்துதா பிரச்சனைய தீர்த்து வைக்கணும்’ என்று ஜமாஅத்துக்கு ஒரு முறை புகார் வந்தபோது இதே தவிப்பு அப்போதும் ரபீக் பாய்க்கு ஏற்பட்டது. சமயோசிதமாக பிஸ்னஸ் விஷயமா பெங்களூர் போவதாகச் சொல்லி துணைத்தலைவரிடமும் முத்தவல்லியிடமும் தகுந்த தீர்ப்புச் சொல்லிவிடுமாறு கழன்று கொண்டார். இப்போது வேறு ரூபத்தில்.
மொஹல்லாவுக்கு வெளியே கறிக்கடை வைத்திருக்கும் மைதீனின் மூத்த மகன் ஷாஜகானுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. இரண்டாவது மகன் சுல்தான் ஒப்புக்கு ஒரு டிகிரி முடித்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் இப்போதுதான் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான். காலேஜ் படிக்கும்போது உடன் படித்த ஹேமாவதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு விஷயம் வீட்டுக்குத் தெரிய வந்த போது ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்று அத்தாவிடம் சுல்தான் மறுத்து வந்தான். சில சமயம் வாக்குவாதம் முற்றும்.
இந்தக் காலத்து இளைஞர்கள் பெற்றோர் சொல் பேச்சைக் கேட்காத தலைமுறைகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த நல்லது கெட்டதையும் காதில் வாங்குவதே இல்லை. எந்நேரமும் செல்போனும் கையுமாகவே அலைகிறார்கள். அவர்களுக்கு எது தோன்றுகிறதோ உடனே அதை செய்தாக வேண்டும். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. அவர்கள் கேட்கும்போதெல்லாம் பெற்றோர்கள் பணம் கொடுத்தாக வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். இதற்கு பயந்தே பையன்கள் கேட்கும்போதெல்லாம் எப்படியாவது பணம் புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள்.
ஹேமாவதியுடன் சுல்தான் அடிக்கடி வெளியே சுற்றுவது எப்படியும் தெரிந்தவர்கள் யாரோ ஒருவர் கண்ணுக்கு சிக்கிவிடும். உடனே மைதீன் காதுக்கு தகவல் வந்துவிடும். இதனால் அவ்வப்போது வீட்டில் பிரச்சனை எழுந்து கொண்டே இருந்தது. மைதீனும் மகனை எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். அவன் கேட்டால்தானே. “இவன காலேஜ்க்கு அனுப்பினதே தப்பா போச்சே’ என்று மனைவியிடம் புலம்புவதைத் தவிர மைதீனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ‘எப்படா காலேஜ் படிப்பு முடியும்’ என்று ஆகிவிட்டது அவருக்கு. காலேஜ் போறது நின்றுவிட்டால் இந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் மைதீன்.
ஒருவழியாக காலேஜ் படிப்பு முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் மீண்டும் அந்தக் காதல் பிரச்சனை வெடித்தது. சுல்தானுக்கு கல்யாணம் செய்வது குறித்து எந்தவித பேச்சும் எடுக்காத நிலையில் அவன் உம்மாவிடம் “நா கல்யாணம் பண்றதா இருந்தா ஹேமாவதியைத்தா பண்ணுவேன்ம்மா.” என்று திடுமென ஒருநாள் காதில் போட்டு வைக்க, “என்னடா, மொனே சொல்றே ?” என்று உம்மா அதிர்ந்து போனாள்.
காலேஜ் படிப்பு முடிந்து விட்டால், அதன் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள் – சந்தித்துக்கொள்ளவும் முடியாது என எண்ணியதற்கு மாறாக அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று சுல்தான் சொன்னதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
“நம்ம பொண்ணாயிரிந்தாக்கூட சரின்னுட்டு போயி பேசிப் பாத்து நிக்காஹ் பண்ணி வைக்கலாம். இப்பிடி ஒரு அந்நிய பொண்ணப்போயி” பேச முடியாமல் உம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
மகன் இல்லாத நேரத்தில் மனைவியிடம் கிடந்து குதிகுதியென குதித்தார் மைதீன் “ஒங்க பையன ஒதுக்க முடியல. கண்டிச்சி வளக்க முடியல. எங்கிட்ட வந்து ஏங்க சாடுறீங்க.?” கணவனைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டாள் பாத்திமுத்து. வாப்பா பேச்சையே கேட்காதவன் அண்ணன் பேச்சைக் கேட்பானா என்று ஆரம்பத்திலிருந்தே அண்ணன் ஷாஜகான் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தான்.
“எல்லாம் நீ குடுக்கிற எளக்காரம்தா. பையன வளத்தியிரிக்கிற லச்சனத்தப் பாரு.”
“பையன கண்டிச்சி வளக்கத் துப்பில்ல. நா வளத்தனாமா. பேச்சுல மட்டும் குறச்சல் இல்ல”
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது.
“இப்ப நீங்க ஏம்மா சண்ட போடுறீங்க? ஆரம்பத்துலயே அவன் இந்த மாதிரி தப்பான வழில போறான்னு தெரிஞ்சதுமே தடுத்திருக்கணும். தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு . இப்ப கெடந்து நீதா காரணம்னு நீதா காரணம்னு ரெண்டு பேரும் சண்ட போடுறீங்க?” உம்மாவையும் வாப்பாவையும் பார்த்து கோபத்துடன் கத்தினான் ஷாஜகான்.
“நீ ஒரு அண்ணக்காரந்தானே ஒனக்கும் இந்த விசயம் தெரியும்தானே? என்னிக்காச்சும் உந்தம்பிய கண்டிச்சி பேசிரிக்கியாக்கும்? பெருசா பேசுறே?” பாத்திமுத்து தன் கோபத்தை மூத்தவன் மீது பாய்ச்சினாள்.
“ஆமாம்மா, வாப்பா பேச்சையே கேக்காதவன் எம் பேச்சத்தா கேப்பான். நா ஏதாச்சும் பேசியிருந்தா போடா உன் வேலையப் பாத்துட்டுனு எடுத்தெறிஞ்சு பேசியிரிப்பான்.”
அதன் பிறகு எப்படியெல்லாமோ இந்த காதல் விவகாரத்தைத் தடுக்கப்பார்த்தார்கள். சுல்தான் அந்த பெண்ணுடன் ஓடிப்போய்விடும் ஒரு ஆபத்து இருப்பதை அறிந்து குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டி வேறு வழி ஏதும் தெரியாத நிலையில் பேசாமல் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.
ஆனால் விசயம் மொஹல்லாவுக்குள் வெளிப்பட்டு, இப்பிடியொரு காரியத்துக்கு குடும்பமே சம்மதிச்சு கமுக்குனு இருப்பதாக கண்டதையும் பேச ஆரம்பித்துவிட்டது.
“ஏற்கனவே லவ் ஜிகாத் அது இதுனு காரணம் சொல்லிக்கிட்டு மதப்பிரச்சனைக அங்கயும் இங்கயுமா பெரிய பிரச்சனையா வெடிச்சுட்டிருக்குது. இத வச்சுக்கிட்டு கலவரம் பண்ணலாம்னு காத்திட்டிரிக்காணுங்க இப்பப்பாத்து அந்த கெரகத்த நம்ம மொஹல்லாக்குள்ளயும் கொண்டு வந்திருக்கானே ஒருத்தன். இதுக்கு அவனோட வாப்பாவும் உம்மாவும் எப்பிடி சம்மதிச்சாங்களோ. அந்த றப்புக்கே வெளிச்சம்”
“காலம் கெடக்கிற கெடப்புல அந்த பொண்ணோட வூட்டுலருந்து கும்பலா இங்க வந்து எதுனாச்சும் பிரச்சன பண்ணுனா என்ன பண்றது? அது ஜமாத்துலயல்ல வந்து விடியும். ஏன் இவுனுங்களுக்கு இஸ்லாத்துல பொண்ணே கெடைக்காமையா இப்பிடி காபிர் பொண்ணுங்கள தேடிட்டுப் போறாணுங்க? ச்சை ! என்ன காலமோ. துனியா அழியிறதுக்காக்குமே இந்த அக்குரமம் எல்லாம் நடக்குது கிட்டியா.“
கடைசியில் பிரச்சனை ஜமாஅத்துக்கு வருவதற்கு முன்பாக தலைவர் காதுக்கு கொண்டு வந்தார்கள். இருதலைக்கொள்ளியாக தவித்தார் ரபீக். இப்ப இத எதுக்கு எங்கிட்ட கொண்டு வாராங்க. இந்தப் பிரச்சினை ஜமாஅத்துக்கு வந்தால் நமக்கும் பெரிய சிக்கல் ஆகிவிடும். கொஞ்சம் யோசித்த ரபீக் பாய், “இந்தப் பிரச்சனைய ஜமாத்துக்கு கொண்டு வராம பாத்துக்கிருங்க. இதுல நாம ஏன் வீணா தலையிடணும் ? நமக்கு இது தேவையில்லாத பிரச்சனயாயிரும். ஜமாத்துக்கு பெரிய தலைவலி வந்துரும். நாம எந்தப் பக்கமும் தீர்ப்பு சொல்லமுடியாது. அந்தப் பொண்ணோட சைடுலருந்து ஜமாத்துக்குத்தா பிரச்சன வரும். ஏற்கனவே நாட்டுல நம்ம நிலமை சரியில்ல. அதனால இதுல ஜமாத்தார் யாரும் தலையிடண்டாம். அவுங்க குடும்பப் பிரச்சனய அவுங்களே தீர்த்துக்கட்டும். முடியாட்டினா போலீஸ் ஸ்டேஷனுக்கு போட்டும் என்ன நாஞ்சொல்றது சரிதானே ?” என்று ஒரு உபதேசம் நிகழ்த்திவிட்டு கெத்தாக ஒரு பார்வை பார்த்தார்.
ஜமாஅத்தார்கள் யாரும் மறுபேச்சு பேசவில்லை.
***
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் – இயற்பெயர் . H. நஸீர். கோவையை சேர்ந்தவர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். வார , மாத இதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும் 120 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், எட்டு குறுநாவல்களும், மூன்று நாவல்களும், சில கவிதைகளும் , இஸ்லாமிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இஸ்லாமிய இலக்கிய கல்லூரி – திருவிதாங்கூர் விருது, இஸ்லாமிய இலக்கிய கழக விருது, படைப்பிலக்கியத்திற்காக தமுஎக சங்க விருது முதலியன இவர் பெற்றுள்ள விருதுகளுள் சில. மின்னஞ்சல்: firthouserajakumaaren@gmail.com


