Sunday, July 21, 2024
Homesliderஎலிகளின் அவஸ்தை

எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ்

தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய வெள்ளை நிற உடலும், நரம்புகள் அத்தனையும் தெரிய தலையின் இரண்டு பக்கமும் விரித்து வைத்த சின்னக் கைவிசிறிகளைப் போன்ற காதுகளும், இரண்டு ரத்தினத் துகள்களைப்போல் சிவப்புக் கண்களையும் உடைய வெளிச்சம் மிகுந்த வெள்ளெலிகள் அல்ல. தேவராஜின் கனவில் வருபவை கூர்மையான மூக்கும், இரவு நேரங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நகரத்துக் கட்டடங்களுக்கும் குப்பைத் தோம்புகளுக்கும் ஓரமாய்ப் பரவிக் கிடக்கும் இரவைப் போன்ற நீலச்சாம்பல் நிறமும், தடித்துப் பெருத்த இடுப்புகளும், சகதியிலும் சாக்கடையிலும் தோய்ந்து தரையில் எந்நேரமும் நெளிந்து கொண்டே இருக்கும் நீண்ட வால்களையும் கொண்ட தெருப்பெருச்சாளிகள். கனவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து விழும் மஞ்சள் வெளிச்சம் பட்டுத் தெறிக்கும் தீட்சண்யமான கண்களோடு பெருச்சாளிகள் சாக்கடைகளிலிருந்தும் தண்ணீர் மின்சாரம் ரயில்கள் போகப் போடப்பட்டிருக்கும் நிலவறைச் சுரங்கங்களிலிருந்தும் தலைமுறை தலைமுறையாக ஏகோபித்த ஏதோ ஒரு பெருங்கனவைக் கண்டுகொண்டிருக்கும் கட்டிடக் கட்டுமானச் சாரங்களின் கண்ணுக்குத் தெரியாத இடுக்குகளிலிருந்தும் பொங்கிப் பெருகும் கறுப்புப் பெருநதியாய், சாரை சாரையாய்ப் பெருச்சாளிகள் தேவராஜைக் கடந்து போகின்றன. அவற்றின் கண்களில் தெரியும் மனுஷத்தனமான அறிதலும், சிறு கேலியும், எங்கோ ஓரித்திற்கு அவசரமாய்ப் போவதைப்போல் கடந்துபோகும் லட்சோப லட்சம் பெருச்சாளிகளின் சுயத்தை அழித்த கட்டுக்கோப்பும், பேரமைதியும் மெல்ல மெல்ல தேவராஜின் முதுகுத்தண்டுக்குள் பயத்தை ஏற்றுகின்றன. தேவராஜ் தன்னைக் கடந்துபோகும் பெருச்சாளிகளில் தன்னையும், தன்னில் அந்த பெருச்சாளிகளிலும் காண ஆரம்பிக்கிறான். மெல்லிய பூப்போன்ற பெருச்சாளி பாதங்கள் அவன் உடம்பெங்கும் பெருநதியின் தண்ணீராய்ப் பட்டுக் கடக்கின்றன. நகரத்தின் கட்டடங்களை, எரியும் தெருவிளக்குகளை, சாலையோரக் கடைகளின் பிரம்மாண்ட கண்ணாடி முகப்புகளை, குப்பைத் தொட்டிகளை, சாலைகளை எல்லாம் கரைத்துக் கொண்டுபோகும் அந்த மகா கம்பீரமான நதியின் கருஞ்சாம்பல் சோம்பல் முறிப்பில் அவனும் கரைந்து கொண்டு போவதற்கு ஒரு கணத்திற்கு முன்னால் தேவராஜின் கனவு கலைகிறது. அவன் தூக்கத்தைவிட்டு எழுகிறான். உடம்பு வியர்வையில் நனைந்திருக்கிறது. அவனுக்கு அருகில் மெல்லிய நைட்டியில் தடித்த இடுப்போடு அவன் மனைவி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்.

இது இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது

தேவராஜ் மிகத் தாமதமாக, தனது முப்பத்தெட்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டபோது அவன் காதோரமாய் நரைக்க ஆரம்பித்திருந்தது. தலைமயிரின் முன்புறமாய் நெற்றியின் இரண்டு பக்கமும் ஆட்டுக்கொம்பின் வடிவத்தில் சொட்டை விழ ஆரம்பித்திருந்தது. தேவராஜ் ஒவ்வொரு நாளும் பேக்டரிக்குப் புறப்படுவதற்கு முன்னால் மிகக்கவனமாகத் தலையின் முன்புறத்திலிருந்த தலைமயிரை நெற்றிக்குமேல் சீவிவிட்டுக் கொள்வான். ஆனால் வெட்ட வெட்ட வளரும் காதோரத்து நரை மயிரையும், கொஞ்சமாய்த் தளர்ந்து சிறுமுலைகளாய்த் தொங்கத் தொடங்கியிருந்த மார்பையும், எத்தனைதான் விலையுயர்ந்த பேண்ட்டை வாங்கி மாட்டிக் கொண்டாலும் மார்பின் அதே அகலத்துக்கு விரிந்து இடுப்புவாருக்கு இரண்டு பக்கமும் தளும்பி நிற்கும் வயிற்றையும், பெரிய பிருஷ்டத்தையும், எல்லா நேரமும் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து விட்டது போன்ற கறுப்புநிறக் குள்ள உருவத்தையும் என்ன செய்து சமாளிப்பது என்று தேவராஜுக்குத் தெரியவில்லை. பள்ளிக்கூடத்திலும், பல்கலைக் கழகத்திலும் அவனுடன் படித்த பெண்களில் பெரும்பாலானாவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. அவர்களில் பலர் முதல் குழந்தையைச் சமீபத்தில் பெற்றிருந்தார்கள். அல்லது முதல் குழந்தையைப் பெறும் நிலையிலிருந்தார்கள். பழைய பள்ளிக்கூட நண்பனின் தந்திரம் மிகுந்த பேச்சுக்குச் செவி சாய்ப்பதைவிட சமீபத்தில் திருமணமான பெண்களுக்கும் சமீபத்தில் முதல் குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கும் வேறு கேளிக்கைகள் இருந்தன. தேவராஜ் நினைப்பது எல்லாம் குழந்தைகளுக்கு பன்னிரண்டு பதின்மூன்று வயது வந்த பின்னால்தான் சாத்தியமாகும் என்று பேக்டரி தோழர்கள் கண்சிமிட்டிப் பேசினார்கள். முப்பத்தெட்டும் பன்னிரண்டும் ஐம்பது. தேவராஜுக்கு நம்பிக்கை வரவில்லை. கடைகளில் விற்கும் ஆடைகளில் அவனுக்குப் பாந்தமாய் இருக்கக் கூடிய ஆடைகளின் பட்டியலும் குறுகிக்கொண்டே வந்தது. பிறஇனப் பெண்களுக்கும் தான் கவர்ச்சியானவனாகத் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தேவராஜ் தன் மீசையையும், கைகளிலிருந்த ரோமத்தையும் மழித்துக் கொண்டான். தேவராஜுக்குத் தீவின் மேற்குப் பகுதியிலிருந்த பன்னாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருள்களின் வரத்தும், தளவாடங்களின் சங்கிலியும் அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பகுதியின் மேற்பார்வையாளர் வேலை. நல்ல சம்பளம். ஆனால் தொண்ணூற்றேழு சதவிகிதம் அங்கே வேலை பார்த்தவர்கள் யாவரும் ஆண்கள். தேவராஜ் தொழிற்சாலைச் சீருடைச் சட்டையின் கையை இழுத்துவிட்டுக் கொள்ளும்போது மழிக்கப்பட்ட அவனது கையின் மேல்புறத்தின் எப்போதும் ஒருவகையான எரிச்சலும் குறுகுறுப்பும் இருந்து கொண்டே இருந்தது.

ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த தொழிற்சாலை என்றாலும் தேவராஜுக்குப் பெண்களின் சகவாசம் கிடைக்காமல் இல்லை. அலுவலகத் தோழர்களின் அறிமுகத்தால் தேவராஜுக்கு வார இறுதிகளில் ஆர்ச்சர்ட் டவர்ஸில் வேலை பார்த்துவந்த வாடகைப் பெண்களின் பரிச்சயம் கிடைத்தது. மதுபான விடுதிகளும், மசாஜ் நிலையங்களும் நிறைந்த கட்டடம். அங்குள்ள பெண்கள் உயரமும் குட்டையுமாய் மாம்பழத் தோல்கள் எடுக்கக் கூடிய பல்வேறு நிறங்களில் – ஜொலிக்கும் பொன்னிறத்திலிருந்து பழுப்பேறிய மட்ட மஞ்சள் நிறம்வரை – இருந்தார்கள். பிலிப்பைன்ஸ்காரியின் ஸ்பானிய உச்சரிப்புக் கலந்த அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து, ஆங்கிலத்தில் தென்சீனக் கூவல்களோடு தட்டுத் தடுமாறி பேசப்படும் சில வார்த்தைகளும் மசாஜ் நிலையத்தின் அரையிருட்டில் முஷ்டியை முறுக்கித் திருப்பி முன்னும் பின்னும் ஆட்டிக்காட்டும் சைகைவரை அங்கு மொழிகளாய்ப் புழங்கி வந்தன. காமம் என்பது பெரும் வியாபாரம். தரைத்தளத்திலிருந்து அந்தக் கட்டடத்தின் முதல் நான்கு மாடிகள் பல விற்பனைப் பொருட்களும், பல மொழிகளும் புழங்கும் சந்தையாக இருந்தன. தந்திரசாலிகளான வியாபாரிகள் விபச்சாரத்துக்கு எதிரான சட்டங்களில் மாட்டாமலிருக்க மதுபானங்களோடும் உடல் கனத்தைப் போக்கும் சிகிச்சைகளோடும் பொட்டலங்களாகக் கட்டி விலையேற்றி விற்றுவந்தார்கள். வாழ்க்கையின் தொடக்கம் முதற்கொண்டே பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் ஆண்கள் பள்ளியில் மட்டுமே படித்தும், அதன்பின் அரசாங்கத்தின் ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைக்கும் ராணுவ முகாம்களில் இரண்டு வருடம் தேசிய சேவை முடித்தும், பின்பு தளவாட மேலாண்மை என்ற படிப்புத் தந்த சாபத்தால் மிகக்குறைந்த பெண்களே கற்கும் தளவாட மேலாண்மை கற்று ஆண்களிடையே வேலை பார்த்த தேவராஜ் பல வண்ணங்கள் நிறைந்த இந்த வியாபாரச் சமுத்திரத்தில் தலையில் முத்துச்சரங்கள் கோர்த்த விலையுயர்ந்த பட்டுத் தலைப்பாகை கட்டி, உடம்பில் கை வைக்காத உயர்ரக வெல்வெட் சட்டை மாட்டி, வெள்ளை நிற கோடுகள் போட்ட தொளதொளப்பான கால்சட்டையும் கூரான முனையுடைய காலணிகளை மாட்டிச் சிந்துபாத் என்ற பெயருடைய பெரும் வியாபாரியாக முரட்டுப் பாய்மரக் கப்பல் ஒன்றில் பயணம் போனான். அவன் முன்னால் முத்துக்களும், வைரங்களும், கோமேதகங்களும், மாணிக்கங்களும், செம்பவளங்களும் குவித்து வைத்திருக்கும் பெயரிடப்படாத பல்வேறு தீவுகள் திறந்து கிடந்தன. யாருமே கால் வைக்காத வெள்ளை வெளேரென்ற நீண்ட கடற்கரைகளில் பொற்காசுக் குவியல்கள் வசீகரமாய்ச் சிரித்தன.

ஆனால் பெரும் லாபம் தேடிப் பாய்மரக் கப்பலில் பயணம்போன சிந்துபாத் என்ற அந்த பெரும் வியாபாரியின் கண்களில் பேரழகு வாய்ந்த தீவுகளும், விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்களும் மட்டும் தென்படவில்லை. அவன் உடலைக் கூர்மையான நகங்களால் கிழித்து, வளைந்த அலகினால் குதறித் தின்னக்கூடிய ராட்சச பருந்துகளும், அவனையும் அவனது முரட்டுக் கப்பலையும் வாய் பிளந்து விழுங்கிவிடக் கூடிய தீப்போல் எரியும் பிரம்மாண்டமான பச்சை நிற உடலையுடைய கடல்நாகங்களும் இருந்தன. தேவராஜுக்கு அறிமுகமான வாடகைப் பெண்கள் எத்தனை இக்கட்டில் இருந்தாலும் வாடகை நேரம் முடிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னால் கவனமாகக் கடிகாரத்தைப் பார்த்துத் தேவராஜை சீக்கிரம் முடித்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். தங்களோடு வர தேவராஜ் சம்மதிப்பதற்கு முன்னால் அவன் தோள்களையும் மார்பையும் கைகளால் தேய்த்து அவன்மீது சாய்ந்து கொள்ளும் அந்தப் பெண்களின் புன்னகை வாடகை நேரம் குறைய குறைய பிரகாசம் மங்கி இறுக்கமான முகலட்சணமாய் சுருங்கும். ஒருமுறை தூக்கத்தின்போது பாதி மூடி இருந்த கண்களைத் திறந்தபோது அவன் வயிற்றின்மேல் அமர்ந்து குழறிய குரலில் காதல் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்த பெண் மிகுந்த அலுப்பும் சோர்வும் நிறைந்த முகத்தோடு கையிலிருந்த கைத்தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான்.

மயிர் மழித்த கையின்மீது சட்டை உரசும்போது ஏற்படும் எரிச்சலும் குறுகுறுப்பும் அவன் உடம்பு முழுக்க அப்போது ஏற்பட்டது. வாடகைக்காக அல்லாமல் நிரந்தரமாய்த் தனக்கே சொந்தமான பெண்ணுக்காக அப்போது மீண்டும் தேவராஜ் ஏங்க ஆரம்பித்தான்.

இரவின் கேளிக்கைகள் முடிந்து ஆர்ச்சர்ட் டவர்ஸின் ஓரமாய்த் தொத்திக் கொண்டிருந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த நேரத்தில் அவனுடைய தொழிற்சாலை தோழர்கள் நீ ஏன் ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கேட்டார்கள். மதுவும் காமமும் கண்களில் பொங்க அவர்களிடையே அமர்ந்திருந்த தேவராஜ் தான் கொண்டாட்டமானவன் என்றும் எதிலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தியப் பெண்கள் அவனுக்கு ஒத்துவர மாட்டார்கள் என்றும் சொன்னான். தேவராஜின் வார்த்தைகளில் இதுவரைக்கும் எந்த இந்தியப் பெண்ணையும் அவனால் கவர முடியாதது பீரின் மெல்லிய கசப்பாய் ஒட்டியிருந்தது. அதே சமயம் கைக்குக் கிடைக்கும் ஏதேனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவளும் அவனைப் போலவே கறுப்பும் குட்டையுமாக இருந்து தொழிற்சாலை நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தும்போது அவமானப்பட வேண்டுமே என்ற அச்சம் நள்ளிரவுக்குப் பிந்திய இரவில் ஜெகஜோதியாய் எரிந்து கொண்டிருந்த டீக்கடை விளக்குகளின் அடியில் குவிந்திருக்கும் நிழல்களாக அவன் முகத்தில் ஏறிக்கொண்டது.

இதற்கும் அவனுடைய நண்பர்களே உதவியாக வந்தார்கள். உயர்ரக உணவகங்களில் நீட்டப்படும் பளபளப்பான உணவுப்பட்டியல்களைப் போல் இணையத்தில் பளபளப்பான புகைப்படங்களோடு திருமண வயதில் பெண்களின் திருமணப் பட்டியல். இரவில் தன் படுக்கையில் சாய்ந்து கொண்டு தேவராஜன் சுட்டுவிரலால் கைத்தொலைபேசித் திரையை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் நகர்த்தி இந்தப் பெண் வேண்டாம் என்றும் இந்தப் பெண் வேண்டும் என்றும் தெரிவித்தபடி படுத்திருப்பான். பட்டியலில் இருந்தவர்கள் எல்லோரும் தென்சீனக் கடல் பரப்பிலிருந்த நாடுகளிலிருந்து வந்த பெண்கள். பெரும்பாலும் தேவராஜின் வயதை ஒப்பிடும்போது பதினெட்டு முதல் இருபது வயதுவரை இளையவர்களாக இருந்தார்கள். பட்டியலிலிருந்து எட்டுப் பெண்களைத் தேர்ந்தெடுத்ததில் மூன்று பெண்கள் இணையச் சந்திப்புக்குச் சம்மதித்தார்கள். ஒருத்தி படிந்து வருவதைப்போல் தோன்றினாள். தேவராஜுக்கு அந்தப் பெண்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. பெண்கள் அனைவரும் தேவராஜிடம் சம்பளம் எவ்வளவு என்றும், சொந்தமாக வீடு இருக்கிறதா என்றும் உனக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை இருக்கிறதா என்றும் மூன்று கேள்விகளைத்தான் கேட்டார்கள். விருப்பமான பெண்களைத் தேர்ந்தெடுத்த பிறகும் தேவராஜ் ஒவ்வொரு இரவும் கைத்தொலைபேசித் திரையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெண்களின் புகைப்படங்களில் கண்களை ஓட்டியபடி சாய்ந்திருந்தான். விரல் அசைத்து அசைத்து இந்தப் பெண் வேண்டும், இந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல எப்போதோ எங்கோ இழந்து போன அவனுடைய ஆண்மையும் அதிகாரமும் அவனுக்குத் திரும்பக் கிடைத்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.

கடைசியாக வியட்நாம் போய் இறங்கியபோது, அவர் தேர்ந்தெடுத்திருந்த பெண் பொன்னிறத்தில் சுடர்போல் இருந்தாள். அவனைவிட சற்று குள்ளம். செதுக்கி வைத்ததுபோல் அங்க அமைப்பும் முகலட்சணமும் அவளுக்கு இருந்தன. குளிர்காலத்தில் மெல்ல அசையும் மரக்கிளையில் காற்றில் சிறகுகள் எழும்ப அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு குருவி ஒன்றின் நடுக்கம் அவளிடம் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. பழைய சைகோன் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் இருந்த அவளது கான்கிரீட் வீட்டிற்கு ஒரு அதிகாலையில் தேவராஜை அழைத்துக் கொண்டு போனபோது வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்த சாம்பல் நிறக் கண்களையுடைய அவள் அப்பன் தனக்கு முன்னாலிருந்த குவார்ட்டர் பாட்டல் நாட்டுச் சாராயத்தைக் கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் தேவராஜைக் கண்டுகொள்ளவில்லை. சாயம்போன சட்டையையும் இடுப்பில் லுங்கியையும் கட்டியிருந்த சுருட்டைமுடி தடிச்சி ஒரு நிமிடம் வரவேற்பறைக்குள் வந்து சோபாவில் அமர்ந்திருந்த தேவராஜை முறைத்துவிட்டுப் போனாள். வெளியே வெகுநேரமாய் இற்றுவிழக் காத்திருக்கும் மோட்டார் சைக்கிளைப் பழையத் துணியால் துடைத்துக் கொண்டிருந்த அவள் அண்ணன் மேலெல்லாம் எண்ணெய்க் கறை படிந்த டி-சட்டையோடு வீட்டுக்குள் வந்து தடிச்சியிடம் பணம் கேட்டு அதை அவள் தராததால் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டுப் போனான். இத்தனைக்கு நடுவிலும் அவனுக்கு தேத்தண்ணீர் பரிமாறிய அந்தப் பெண்ணின் அமைதியான குணம் தேவராஜுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் இருவருடைய திருமண வரவேற்புக்கு வரும் தொழிற்சாலை நண்பர்கள் அவளுடைய பொன்னிறத்தையும் செதுக்கி வைத்தது போன்ற லட்சணங்களையும் வாய் பிளந்து பார்ப்பதைத் தேவராஜ் கற்பனை செய்து கொண்டான். இதற்கெல்லாம் மேலாக அவன் உருவத்தைத் தாண்டியும் அவன் தனது மணிபர்ஸை எடுத்து நோட்டுக்களை எண்ணும்போதெல்லாம் அவள் கண்ணில் தெரியும் பிரகாசமும் ஆச்சரியம் கலந்த மரியாதையும் தேவராஜுக்கு மிக உவப்பானதாக இருந்தது. மேலும் அதிகம் ஆங்கிலம் பேசாத அந்தப் பெண் தேவராஜ் சொல்லியபடியெல்லாம் எதிர்ப்பேச்சுப் பேசாமல் இருந்தாள். இதுவும் தேவராஜுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அவள் பெயரை அவள் பலவிதமான இசைக் கோர்வைகளோடு உச்சரித்தாள். அதை அப்படியே உச்சரிப்பது தேவராஜுக்குச் சிரமமாக இருந்தது. அவன் அவளை நொங் என்று அழைத்தான்.

ஐப்பசி மாதம் இருபத்திரண்டாம் தேதி

வீரமாகாளியம்மன் கோவில் சந்நிதியில் திருமணம் நடந்தது. தங்கள் ஒரே மகன் வேற்று நாட்டுக்காரிச்சியைத் திருமணம் செய்து கொள்வதில் ஆழமான வருத்தம் இருந்தாலும் எப்படியாவது அவனுக்குக் கல்யாணமாகிறதே என்று தேவராஜின் பெற்றோர்கள் அரைமனதாக அவன் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தவே தேவராஜ் கோவில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஜிப்பா முதற்கொண்டு இந்திய ஆடைகளையும் அலங்காரங்களையும் அணிந்துகொள்ள நல்ல வாய்ப்பு என்று எண்ணிய தேவராஜின் அலுவலக நண்பர்கள் பெருவாரியாகத் திருமணத்தில் கலந்து கொண்டு இத்தனை அழகான பெண்டாட்டியைச் சம்பாதித்துக் கொண்ட அவன் சாமர்த்தியத்தை வாயாரப் பாராட்டினார்கள். சொற்பமான எண்ணிக்கையில் வந்திருந்த தேவராஜின் உறவினர்கள், தேவராஜின் நண்பர்கள் செய்த ஆரவாரத்தை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவராஜுக்குப் பெருமை பிடிபடவில்லை. கோவில் சந்நிதியில் நடந்த திருமணச் சடங்கை அவன் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவே பார்த்தான். இனிமேல் தன் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ தப்பே செய்வதில்லை என்று தனக்கு முன்னாலிருந்த தெய்வத்திடம் சத்தியம் செய்து கொடுத்தான். இதில் அவன் பிரதானமாய்க் குறிப்பிட்டது ஆர்ச்சர்ட் டவர்ஸுக்குப் போவதையும், இணையத்தில் பெண்களின் புகைப்படங்களைப் பார்ப்பதையும்.

அன்று இரவு இருபத்து மூன்று வயதான நொங் அவளுடைய ஆடைகளைக் களைந்து அவனுக்கு முன்னால் நிர்வாணமாக நின்றபோது அந்த உதடுகளும், தங்க நிறச் செவ்வந்தி மலர்கள் இரண்டை கவிழ்த்து வைத்துபோன்ற சிறிய முலைகளும், வழவழப்பான பீங்கான் தட்டைப்போன்ற வயிறும், இடுப்பும், தனது ஒற்றைக் கைப்பிடிக்குள் அடங்குவதாக இருந்த பிருஷ்டமும் இப்போது தனக்கே சொந்தம் என்று இறுமாப்புடன் நின்றான். திருமணத்துக்குச் சில நாட்களுக்குப் பிறகு இதையே தன் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி வியந்தான்.

ஐப்பசி மாதம் இருபத்திரண்டாம் தேதிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை

தேவராஜின் அப்பாவும் அம்மாவும் பதினான்கு வருடமாய்த் தொழிற்சாலையில் வேலை செய்து தேவராஜ் சேர்த்து வைத்திருந்த பணத்துடன் சேர்த்துத் தங்கள் சேமிப்பிலிருந்து காசையும் போட்டு அவர்கள் குடியிருந்த அரசாங்க அடுக்குமாடி வீட்டுக்குப் பக்கத்திலேயே அவனுக்கும் நொங்குக்கும் அதேபோல் ஒரு வீட்டை வாங்கித் தந்திருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு மகனையும் மருமகளையும் பார்க்க வந்தவர்கள் கையோடு பிள்ளையார் படம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள்.

“பொண்ணு நம்மாளா இல்லாம இருக்கலாம். அதுக்காக வீட்டுல சாமிப்படம் இல்லாம இருக்கலாமா? விநாயகர் நமக்கு எல்லாமே அவரைக் கும்பிட்டா எல்லாச் சாமியையும் கும்பிட்ட மாதிரி. உன் வீட்டுக்காரிகிட்ட விளக்கேத்துறப்ப சுத்தபத்தமா இருக்கச் சொல்லு”

நொங்குக்குக் கோழிக்குழம்பு வைக்கச் சொல்லித் தரப்போன அம்மா தோற்றுக் கொண்டிருந்தாள். பிள்ளையார் படத்தை வீட்டின் ஸ்டோர் ரூமில் சாமான் வைப்பதற்காக மாட்டப்பட்டிருந்த அடுக்குகளில் ஒன்றின் நடுநாயகமாகச் சாய்த்து வைத்தார்கள். முதலில் நாள்தோறும் அம்மாவும் அப்பாவும் கொண்டு வந்த காமாட்சி விளக்கை ஏற்றிச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த தேவராஜன் பிறகு விளக்கு ஏற்றுவதற்கு உள்ள சிரமங்களை உத்தேசித்து அலுவலகத்துக்குப் போகும் முன்னால் வெறுமே கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்தான். பிறகு இதுவும் எப்போதாவது ஒருநாள், கும்பிட வேண்டும் என்று நினைவுக்கு வரும்போது என்றானது. அப்படி ஒருநாள் பிள்ளையாரைக் கையெடுத்துக் கும்பிடும்போது தேவராஜன் பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தான். ரோஸ் கலரில் சிரித்த முகத்தோடு கையில் மோதகத்தை வைத்தபடி நல்ல வாட்டசாட்டமான பிள்ளையார். ஆனால் அவரைவிட அவருக்கு முன்னாலிருந்த பெருச்சாளிதான் தேவராஜின் கவனத்தை ஈர்த்தது. கருநீல நிறமாக இருந்த அந்தப் பெருச்சாளிப் பிள்ளையாரின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்சணங்களிலிருந்து ஒன்றை எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டு பிள்ளையாரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் தந்திரத்தாலும் ஒருவகை கேலியிலும் மின்னிக் கொண்டிருந்தன.

தனக்கு முன்னாலிருக்கும் கடவுள் மகா வல்லமை பொருந்தியவராக இருந்தாலும் அவரிடமிருந்துதான் தனக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் வருகின்றன என்றாலும்கூட அவரைத் தந்திரமாய் ஏமாற்றிவிடக்கூடிய ஆற்றல் தன்னிடம் உண்டு என்ற திமிர் பெருச்சாளியின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

மிகவும் கவனமாக இல்லையென்றால் பக்கத்தில் அண்டவிடும் சாமானிய பெருச்சாளியும் பிள்ளையாரைப் போன்ற சக்திவாய்ந்த கடவுளையே கவிழ்த்துவிடும் என்று தேவராஜன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து வெறும் நான்கு மாதங்களே கடந்த நிலையில்.

தேவராஜும் நொங்கும் தினம் தினம் சண்டை போடுகிறார்கள். நொங் இந்த மூன்று மாதங்களில் தொலைக்காட்சி பார்த்தும், தேவராஜன் தொழிற்சாலைக்குப் போயிருக்கும் நேரங்களில் விடாமல் இணையத்தில் கொரியத் திரைப்படங்களையும் நாடகங்களையும் போட்டுப் பார்த்து திரையின் அடியில் வரும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தும், கடைக்கும் சந்தைக்கும் போகும் நேரத்தில் கடைக்காரர்களிடமும் பொருள் வாங்க வந்த மற்ற பெண்களோடு பேசியும் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அதனால் அவள் எடுத்துவைக்கும் வாதங்கள் முன்போல் உணர்ச்சி வேகத்திலும் கண்ணீரிலும் கரைபவையாக இல்லாமல் நல்ல தர்க்கப்பூர்வமானதாக அமைந்துவிடுகின்றன. அழகான இளம்பெண் என்பதால் அவர்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் கடைக்கார அங்கிள்களும், கோப்பிக்கடைப் பையன்களும், வங்கிகளுக்கு வெளியே நின்றபடி வாடிக்கையாளர்களை அழைக்கும் காப்புறுதி முகவர் இளையர்களும் நொங்குக்கு மிக அனுகூலமாக இருக்கிறார்கள். அவளுடன் சிரித்துப் பேசுகிறார்கள். அவள் கடைவீதிக்குப் போகும்போது அவளுக்குத் தேவையான பலவிதமான உதவிகளைச் செய்கிறார்கள். இருபத்து மூன்றே வயதான நொங்குக்கு அந்நிய நாட்டில் கிடைக்கும் இத்தகைய அன்பான உபசாரங்கள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே அவள் இப்போது ஒவ்வொரு நாளும் அவளுக்கு வரும் பல குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கிறாள். தேவராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் சில விசேஷமான நண்பர்களோடு தொலைபேசியில் உரையாடவும் செய்கிறாள். இன்று நடந்த சண்டையில் தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பிய தேவராஜ் நொங்கின் கைத்தொலைபேசியை அவள் கைகளிலிருந்து பிடுங்கிச் சுவரில் விட்டெறிந்து அதைச் சுக்குநூறாக உடைக்கிறான். நொங் இசைநயம் நிறைந்த வார்த்தைகளில் தேவராஜை எதிர்த்துப் பேசத் தேவராஜ் அவள் தொடர்ந்தும் திமிராய் இருந்தால் தேவராஜின் மனைவி என்ற வகையில் சிங்கப்பூரில் தங்குவதற்காக அவளுக்குத் தரப்பட்டிருக்கும் அனுமதியை ரத்துச் செய்து அவளை மீண்டும் வியட்நாமுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லித் தனக்கிருக்கும் ஒரே பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்துகிறான்.

இதற்கிடையில் பெருந்தொற்றுக் காலம் தேவராஜுக்கு மிக உதவியாக வந்து சேர்கிறது. வீடடங்குக் கட்டுப்பாடுகளை மீறி அவள் அநாவசியமாக வெளியே போனால் போலீஸ்காரர்கள் அவளைப் பிடித்து ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தேவராஜ் நொங்கைப் பயமுறுத்தி வைத்திருக்கிறான். அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் இந்த ஏற்பாடும் அவனுக்கு சவுகரியமாகவே இருக்கிறது. நொங்கோடு வெளியே போகும் நேரங்களில் முகத்தின் பெரும்பகுதியை நன்றாக மறைக்கும்படி தேவராஜ் அவளை வற்புறுத்துகிறான். அவள் அப்படி அணிந்து கொள்வது தேவராஜுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது போன்ற பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் முகக்கவசத்தின் மீது தேவராஜை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நொங்கின் கண்களோ தூரத்து வெளிச்சம் பட்டுத் தெறிக்கும் பெருச்சாளியின் தந்திரம் மிகுந்த கண்களாகச் சுடர் விடுகின்றன.

நிகழ்காலம்

தேவராஜின் கனவுகளில் தொடர்ந்து எலிகளே வந்து கொண்டிருக்கின்றன. எலிகள் என்றால் வெள்ளெலிகள் அல்ல, பெருச்சாளிகள். தேவராஜ் நொங்கை மிகக் கவனமாகக் கண்காணித்து வருகிறான். வீட்டிற்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய்களிலும், வீட்டின் கூரைக்கும் சுவர்களுக்கும் பின்னாலிருக்கும் கட்டிடத்தின் சாரங்களிலும், அவன் நின்று கொண்டிருக்கும் தரைக்கு அடியிலும் பல லட்சம் பெருச்சாளிகள் மெத்தென்ற சிறிய பாதங்கள் உரசச் சாரை சாரையாக ஓடிக் கொண்டிருப்பது அவன் காதுகளில் கேட்கிறது. ஆனால் அந்தப் பெருச்சாளிகள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதில்லை. அப்படி ஓடிக் கொண்டிருக்கும் பெருச்சாளிகள் ஒருநாள் அவற்றின் மறைவிடங்களிலிருந்து கறுப்பு மகாநதியாய்ப் பீறிட்டு எழுந்து தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போகப்போகும் நாளுக்காகத் தேவராஜ் காத்திருந்தான்.

அந்த மாபெரிய நதியின் வருகையின் முன்னறிவிப்பாக இதில் யார் எலி என்ற கேள்வி அவனைப் பிய்த்துத் தின்றது.

***

சித்துராஜ் பொன்ராஜ், இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

RELATED ARTICLES

1 COMMENT

  1. சித்துராஜ் பொன் ராஜின் இக்கதையும் நல்ல கதை. எலியாகவே நாயகனைக் கற்பனை செய்து கொண்டேன். அல்லது அது இன்னும் விரிந்து அந்த வியட்நாம் பெண்ணாவும் பரிணாமம் அடைகிறது. கதை நெடுக்க ஒரு மனக் கிளர்ச்சி இல்லாமல் வாசிக்க முடியவில்லை. மனதுக்குள்ளேயே சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. குறிப்பாக நாயகன் சீரியஸ்சாக பெண் தேடும் படலத்தில். தன் மனைவி மீதான சந்தேகம் எங்கே வந்தது என்றால் தன் உடல் இன்பத்துக்காக பலான இடங்களுக்குப் போனதால். வியட்மாலிருந்து ஒரு தொல்லையை இறக்குமதி செய்துகொண்ட நாயகனை நோக்கிய அங்கதம் நன்றாகவே உருவாகிவந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular