Saturday, April 27, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்ஏமாற்றாத நாயகர்கள்

ஏமாற்றாத நாயகர்கள்

ஷான் கருப்பசாமி

ண்பதுகளின் முற்பகுதி என்று நினைக்கிறேன். அப்போது எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். இந்தியா உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் வீரர்கள் மெல்ல கோடீஸ்வரர்களாக மாறத் தொடங்கியிருந்தார்கள். தொலைக்காட்சிகள் ஊருக்கு ஒன்று என்று முளைத்துக் கொண்டிருந்தன. வேறு எங்கும் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால் இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை ஒரு மருத்துவர் தன் வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சியை எடுத்து வைத்து அனைவரும் பார்க்கச் செய்தார். பக்கத்து வீடுகளில் தேடிப் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர், பூந்தளிர் பரிச்சயம் இருந்தது. அப்படியான ஒரு பெல்பாட்டம் காலத்தில்தான் ராணி காமிக்ஸ் கையில் கிடைத்தது. அழகியைத் தேடி என்ற பெயரில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் சாகசம். எச்சில் விழுங்கி சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்ள வைக்கும் கிளுகிளுப்பான மேலாடையில்லாத படங்களுடன் அந்தக் காமிக்ஸ் வெளியாகி இருந்தது. அதன் பிறகான இதழ்களில் எல்லாம் அந்த அந்நிய அழகிகளின் மாண்பைக் கூட உள்ளூர் ஓவியர்கள் மேலாடை வரைந்து காப்பாற்றியிருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு வேறு புத்தகங்கள் தந்திராத ஒரு வாசிப்பு அனுபவத்தை அந்தக் கதைகள் தந்தன. நான் காமிக்ஸ் கதைகளின் அடிமையாகத் தொடங்கியது அப்போதுதான்.

முத்து காமிக்ஸ், லயன், மினி லயன், ஜூனியர் லயன்  போன்றவை அதற்குப் பின்பாக எனக்கு அறிமுகம் ஆனவை. அழிவு கொள்ளை தீமை கழகத்தை எதிர்த்துப் போராடிய லாரன்ஸ் டேவிட் கதைகள் படித்தபோது உண்மையில் அப்படி ஒன்று உலகில் இருக்கக் கூடும் என்று நம்பினேன். பிற்காலத்தில் அந்த நம்பிக்கையை நம் அரசியல் கட்சிகள் காப்பாற்றின. ஸ்பைடர் என்ற நெகடிவ் ஹீரோவும் ஆர்ச்சி என்ற தங்கமான குணம் கொண்ட இயந்திர மனிதனும் என் பதின் வயதுக் காலங்களின் நினைவுகளில் பதிந்து போனவர்கள். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் கதைகள் படிக்கும்போது அமெரிக்கா என்ற வல்லரசு எத்தகைய சமாதியின் மீது எழும்பியிருக்கிறது என்று புரிந்தது. பிறகு நான் செய்த அமெரிக்கப் பயணங்களின் அனுபவத்தை காமிக்ஸ் கதைகள்தான் தந்தன. எத்தகைய வில்லனாக இருந்தாலும் தாடையைப் பெயர்க்கும் டெக்ஸ் இன்றைய மாஸ் ஹீரோக்களுக்கு முன்னோடி. டெக்ஸ் வில்லருக்குப் பெரிய இடைஞ்சல் தரும் வில்லன் இதுவரை பிறக்கவில்லை. அவருடைய மகனுக்கே திருமணம் நடந்தாலும் அவர் இளமை குன்றாமல்தான் வலம் வருவார். மகனுக்கு ஒரு ஆபத்தென்றால் இவர்தான் போய் காப்பாற்றுவார். இவை அத்தனையும் நம் ஹீரோக்களுக்கு ஒத்துப் போகிறது பாருங்கள்.

ஏனென்று இப்போது நினைவில்லை. நாடோடி ரெமி கதை குறித்து மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். உலகின் மிகப் பிரபலமான காமிக்ஸ் அது குறித்து வெளியான விளம்பரங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதும் ஏதாவது ஒரு காமிக்ஸ் புத்தகத்தைக் கையில் வைத்தபடி திரிந்து கொண்டிருந்தேன். இன்று வரை என்னோடு பயணிக்கும் நெருங்கிய நண்பனை நான் தேர்ந்தெடுக்க அவனும் காமிக்ஸ் வாசகன் என்ற காரணம் மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போதும் புத்தகக் கண்காட்சிகளில் என் பெரும்பகுதி புத்தகச் செலவின் ஒதுக்கீடு காமிக்ஸ் கதைகளுக்காக இருந்து வருகிறது. என் இளம் வயதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் சினிமாவுக்கு அடுத்தபடியான இடத்தை படக்கதைகளுக்குத் தரலாம்.

படங்களின் வழியாக சொல்லப்படும் கதைகள் தரும் அனுபவம் ஒரு புதினத்துக்கும் திரைப்படத்துக்கும் இடைப்பட்டது. எத்தகைய சிக்கலான கதைக் களத்தையும் காமிக்ஸ் எளிதாக சில படங்களில் விளக்கி விடும். இறந்தகாலம், எதிர்காலம், விண்வெளி, பாதாள உலகம் என்று நொடிகளில் நம்மை கதைக்குள் இழுத்து விடும். படக்கதைகள் அப்படி என்ன அப்பா டக்கர்களா என்று கேட்டால் அப்படித்தான். உலகத்தின் இதுவரை அதிக வசூல் சாதனை செய்த முதல் பத்து படங்களில் நான்கு படங்கள் டிசி அல்லது மார்வல் காமிக்ஸ் பாத்திரங்களை ஒட்டி எடுக்கப்பட்டவை. பொதுவாக காமிக்ஸ் அல்லது கிராபிக் நாவல் என்றால் அது சிறுவர்களுக்கானது என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. படிப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அப்படியே காட்டும் கிராபிக்ஸ் நாவல்கள் இருக்கின்றன. அவற்றில் பல தமிழில் கூட மொழிபெயர்த்துக் கிடைக்கின்றன. பல நாடுகளின் உள்நாட்டுப் போர்களை காமிக்ஸ் கதைகளின் வழியாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கோட்பாடுகளைச் சொல்லும் கதைகளை காமிக்ஸ் வாயிலாக இன்னும் அழுத்தமாகச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட நிலத்தின் இனத்தின் தன்மைகளை காமிக்ஸ் ஒவ்வொரு வரையப்பட்ட கட்டத்திலும் சொல்லிக்கொண்டே வரும். இதை ஒருபோதும் எழுத்தில் கொண்டுவர முடியாது.

இப்போது சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய கதை சொல்லும் ஆர்வம் காமிக்ஸ் வாசிப்பிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாக நாவல்களுக்கான கதைக்களம் பற்றி யோசிக்கும்போது எதுவும் சாத்தியம் என்ற கோணத்தில் சிந்திக்க வைப்பவை காமிக்ஸ்கள்தான். கதை எழுதும்போது இதையெல்லாம் விளக்கி விளக்கி எழுத வேண்டுமா, வாசகர்கள் யோசித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றும். அதுவும் காமிக்ஸ் வாசிப்பிலிருந்து வந்த பழக்கம்தான். காட்சிகளாக விரியும் வகையில் கதை சொல்ல காமிக்ஸ் எனக்கு கற்றுத் தந்தது.  எத்தனை உதவி இயக்குநர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ ஷாட் பிரிப்பதில் காமிக்ஸ் குறிப்பாக கிராஃபிக் நாவல்களுக்கு ஈடு இணை இல்லை. ஒரு காட்சிக்கு எப்படியெல்லாம் கேமரா கோணம் வைக்கலாம் என்பதை ஒருவர் இந்தப் புத்தகங்கள் வழியாகவே படிக்க முடியும்.

என் பெயர் லார்கோ – Philippe Francq வின் ஆக்‌ஷன் Panels

லார்கோ வின்ச் வகை கிராபிக் நாவல்கள் பொருளாதாரக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட சாகசங்கள். ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவருடைய கடல் போன்ற திரண்ட சொத்துக்கு வாரிசாக வரும் அவருடைய தத்துப் பிள்ளை ஒரு தறுதலை, கேளிக்கை விரும்பி. கணக்கில்லாத தோழிகளுடன் வலம் வருபவன். அவன் சகவாசம் எல்லாம் நிழல் உலக ஆசாமிகளிடமும் பித்தலாட்டக்காரர்களிடமும்தான். தனது தந்தையின் சொத்தைப் பாதுகாக்க லார்கோ குறுக்கு வழிகளில் சென்றாலும் அவன் நியாயத்தின் பக்கம் நிற்பவன். தன்னுடைய எளிய வாழ்க்கையை அவன் நிறையவே நேசித்து அதற்கு திரும்ப நினைக்கிறான். என்னுடைய வெட்டாட்டம் கதையின் நாயகன் வருண் இதைப் போன்ற ஒரு பாத்திரப்படைப்புதான். தந்தையின் பதவி, பணம், அதிகாரத்தின் மீது எந்த விதத்திலும் ஆசை இல்லாதவன். அவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். நண்பர்கள், குடி, தோழிகள் என்று திரிந்தவனின் மடியில் பதவி வந்து விழுகிறது. அதை அவன் எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. இதை எழுதும்போது லார்கோ வின்ச் என் நினைவில் இல்லை. இப்போது யோசித்தால் இத்தனை ஒற்றுமைகளா என்று தோன்றுகிறது.

அடுத்தபடியாக எனக்குப் பிடித்த கதாபாத்திரம் மாடஸ்டி ப்ளைஸி. எத்தனை வலிமையான ஆண்களையும் அடித்து வீழ்த்தும் பலமும் அசத்தி வீழ்த்தும் அழகும் கொண்டவள். உயிருக்கு ஆபத்தான சூழல்களில் புறங்கையை வாய்க்கு மேல் வைத்து வீல் என்று கத்தும் நாயகிகளைப் பார்த்து வளர்ந்தவனுக்கு மாடஸ்டியின் சாகசங்கள் ஆச்சரியமானவையாக இருந்தன. ஆண் நண்பர்களை விருப்பம் போல மாற்றிக்கொண்டே செல்லும் அந்தப் பாத்திரம் என் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். பதின் பருவத்தில் மாடஸ்டி போன்ற கண்கள் கொண்ட ஒருத்தியிடம் அதற்காகவே மயங்கியது கூட உண்டு. பொன்னி என்ற நாவலை எழுதி முடித்த பிறகுதான் அதன் முக்கியப் பாத்திரத்தில் மாடஸ்டியின் சாயல் இருப்பதை உணர்ந்து கொண்டேன். மாடஸ்டியைப் போலவே பொன்னிக்கும் உயிரைக் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள். எத்தகைய சாகசத்துக்கும் பொன்னி அஞ்சாதவள். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக உயிர் போனாலும் கவலை இல்லை என்று செயல்படுபவள். அத்தனையும் மாடஸ்டியின் குண வார்ப்புகள்.

அமெரிக்காவின் வரலாறு எனக்கு பாடப் புத்தகங்களில் படித்துத் தெரிந்ததை விட காமிக்ஸ்களின் வழியாகத்தான் அதிகம் பரிச்சயம். ரோமப் பேரரசின் வலிமை எத்தகையது என்பதை ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளிலிருந்துதான் படித்துத் தெரிந்து கொண்டேன். இவற்றைப் படிப்பதால் வரலாறு பற்றி முழு அறிவு வந்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தேர்வுகள், ஆசிரியர் என்ற பயம் இல்லாமல் ஏதோ ஒரு அறிவை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள எனக்கு காமிக்ஸ்கள் உதவியிருக்கின்றன. சொல்லப் போனால் கொஞ்சம் பட்ஜெட் ஒதுக்கி ஐந்தாம் வகுப்பு வரையிலான நம் பாட நூல்கள் அத்தனையும் காமிக்ஸ் வடிவத்தில் மாற்றினால் மாணவர்களின் திறன் இப்போது இருப்பதை விடப் பல மடங்கு மேம்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மாணவர்களின் படைப்புத் திறனையும் அது மேம்படுத்தக் கூடும். மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான வாசிப்பை நோக்கி அது அவர்களை இட்டுச் செல்லும். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகள் தோறும் நூலகம் உருவாக்கி வைத்தால் மட்டும் போதாது. அந்த நூலகங்களை மகிழ்ச்சியான இடங்களாக மாற்ற வேண்டும். படக்கதைகள் அந்த மாயத்தைச் செய்யும் சக்தி வாய்ந்தவை.

பிக்பேங் தியரி என்ற நெட்ஃப்ளிக்ஸ் வலைத்தொடரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். உச்ச கட்ட அறிவுடைய நான்கு நண்பர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கில்லாடிகள். ஆனால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளில் அத்தனை விவரம் தெரியாதவர்கள். உடலளவில் பலவீனமானவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை காமிக்ஸ் வாசிப்பு. ஒரு காமிக்ஸ் புத்தகக் கடைதான் அவர்களின் சரணாலயம். ஏன் நோஞ்சான் படிப்பாளிப் பிள்ளைகள் தங்களை ஒளித்துக் கொள்ளும் இடமாக காமிக்ஸ் இருக்கிறது என்று அதில் ஒரு உரையாடல் வரும். அவர்களுக்குத்தான் சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களைவிட வலிமையான சக மாணவர்களிடமிருந்து தப்பித்து அவர்கள் இந்த சாகச உலகில் தங்களை தொலைத்துக் கொள்கிறார்கள். தங்களையே அந்த ஹீரோக்களில் ஒருவனாக நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது அப்படி ஒருவன் தங்களைக் காப்பாற்ற வருவான் என்று நம்புகிறார்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்கள் காக்கப்படும் அந்த உலகத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் இவை இல்லை என்று பொருளில்லை. புராண, இதிகாசங்கள் வடிவத்தில் அவை இருக்கின்றன.

இன்றைய சூழலில் சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் நோஞ்சான் பிள்ளைகளாகத்தான் இருக்கிறோம். நம்மை விடப் பல மடங்கு பெரிய ஏதோ ஒன்று நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. நம்மை நசுக்குவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவை நாம் தொடர்ந்து தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். திரைப்படங்களிலும் அரசியல் தலைவர்களிலும் சுய முன்னேற்ற குருக்களிடமும் சாமியார்களிடமும் நாம் விடாமல் தேடிக்கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் இந்தக் காமிக்ஸ் நாயகர்கள் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் இந்த உலகத்துக்கு ஆபத்து நேரும்போது அவர்கள் பறந்து வந்து காப்பாற்றும் தங்கள் கடமையில் தவறுவதே இல்லை.

***

ஷான் கருப்பசாமி – தனியார் இணையவழிக் கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் இருக்கிறார். “வெட்டாட்டம்”, “பொன்னி” பொன்னி-2 என மூன்று நாவல்களும் சின்ராசு (உரையாடல்கள்), தங்கம் சிறுகதைத் தொகுப்பும் ‘ஆண்ட்ராய்டின் கதை’, ‘எதிரொலிக்கும் அறைகள்’ என்ற இரு கட்டுரைத் தொகுப்புகளும் ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’ என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது. திரைத்துறையில் திரைக்கதை ஆசிரியராகவும் இயங்குகிறார். மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular