Friday, March 29, 2024

மாங்கனிகள்

மணி எம்.கே. மணி

தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான்.

அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர் காட்சியை விவரிப்பதற்குள் கோபப்பட்டு விடுவார். அவரே அந்தத் தொடருக்கு பணம் போடுகிற முதலாளி என்பதால், பல இடங்களிலும் ரவுடித்தனம் பண்ணி, பலரையும் பயத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிற அவருடைய அந்தப் பருப்பு வேகவில்லை. இயக்குனர் பெரிய டிங்கிரி டிங்கா என்பது தெரிந்துதான் அந்த நடிகை அவரை ஆட்டுவித்தார் என்று தோன்றுகிறது. தொடரில் நடிக்கிற நடிகர் நடிகையில் இருந்து பாத்திரம் துலக்க வருகிற பெண்கள் வரை வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிற லைனில், யாரையும் மிரட்டி அவர் கமிஷன் வாங்கி வந்தார் என்கிற உண்மை அந்த நடிகையின் உத்வேகமாக இருக்கலாம். இயக்குனருடைய முகத்தை, கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, நான்கு பேருக்குக் கேட்டு விடாமல் அமுத்தலாகக் அவர் முதலில் துவங்குவதே இப்படி தான்.  “ஒத்தா, என்னடா இது சீனு? சும்மா ஓல் ஒத்துனு சுத்திகிட்டிருக்கியா?”

வழக்கமாக வீட்டில் உட்கார்ந்து எழுதி, வருகிற மேனேஜரிடம் காகிதக் கொத்துகளைக் கொடுத்து அனுப்புகிற தாசனை ஒருநாள் படப்பிடிப்புக்கு அழைத்த இயக்குனர், நீங்களே அவங்களுக்குப் படிச்சுக் காட்டிடுங்களேன் என்று வேண்டிக் கொண்டார். தாசன் படித்துக் காட்ட வேண்டி, நடிகையை நோக்கி செல்ல, என்ன நடக்கிறது என்பதை ஒளிந்திருந்தும் பார்த்தார். தாசன் படிக்கும் போது, உன்னிப்பாக அதை கவனித்ததுடன், மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிற நடிகையை எவ்வளவு நறநறத்தாலும் தான் என்ன? அவன் படித்த இதே பேப்பரை நான் படித்துக் காட்டினால் எனக்கு எதுக்கு ஒத்தா, ங்கொம்மா? என்று கேட்டுவிட முடியுமா? கடைசியாக அந்த எழவு தாசன் தலையில் தான் விடிந்தது. அந்த நடிகைக்கு வேலை இருக்கிற நாளெல்லாம் காலங்காத்தால ரைட்டரையும் கூட்டிட்டு வந்து விடு என்பதாயிற்று.

தாசன் அதிகாலையில் எழுந்து குளித்து, அயர்ன் பண்ணி உடுத்துக் கொண்டு  தன்னை தயார் செய்து ரோடு முனைக்கு வந்து டீக்கடையில் நின்று கொள்வான். கார் வரும். டிரைவரும், அவனும் டீ குடிப்பார்கள். ரைட்டர் சிகரெட் பிடிக்க டிரைவர் காத்திருப்பார். பல கதைகள் பேசுகிற டிரைவர் தான் சினிமாவில் கொட்டை போட்ட கதைகளை சொல்லுவார். ஒருநாள் ஒரு பெரிய படத்தில் வந்த முக்கியமான சீனை எப்படி அதன் டைரக்டருக்கு சொல்லிக் கொடுத்தேன் எனபதை கூட விவரித்தது உண்டு. தாசன் ஏறின வண்டியில் இன்னும் பலரை பிக்-அப் செய்வது வழக்கம். சீரியலில் வந்து தலைகாட்டி, சினிமாவில் பிரபலமாகி நன்றாக வளர்ந்து, திடீர் என்று ஒருநாள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இளம் காமெடி நடிகை எல்லாம் இப்படி தாசனோடு வண்டியில் வந்திருக்கிறார்கள். அப்படி தான் ஒருநாள் வண்டி எக்மோருக்குப் போயிற்று. நல்ல நிழல் சாலையில், பெரிய மதில் சுவருக்குள் பழமை வாசனையுடன் நின்றிருந்த வீட்டிலிருந்து இறங்கி வந்த ஜெயவனிதா வண்டியில் ஏறினார். நடக்கிற தொடரில் வில்லியாக நடிக்கிறவர். அடுத்த பிக்கப் பானு ஸ்ரீ. அவரும் வில்லி தான். உப வில்லி.

தாசன் காரின் முன்சீட்டில் இருந்தான். டிரைவருக்குப் பக்கத்தில் இருந்து இருவரையும் மிக நன்றாக பார்ப்பதற்குள் அவர்கள் அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். அவன் பதிலுக்கு சும்மா எதையோ முனகின மாதிரி இருந்தது.

பெண்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் டிரைவரும் அதில் உற்சாகமாக கலந்து கொண்டார்.

தாசன் அவர்களுடைய தொடர்பு எல்லைக்குள் நுழைய முடியவில்லை. அவனால் பல உரையாடல்களிலும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் பேசுவதை பலமுறையும் கவனிக்கவே செய்தான். வனிதா தொடர்ந்து சில வருடங்களாக மூட்டு வலி சிகிச்சையில் இருக்கிறார். வேண்டாத கோவிலில்லை. கும்பிடாத சாமியில்லை. நேற்று இரவு தான் திருப்பதியில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வாரம் அங்கேயே இருந்ததில் குறைந்தது பத்து முறை சாமி தரிசனம் பார்த்தாராம். கோவிலுக்கும் அவர் வீட்டுக்கும் இருபது கிலோ மீட்டர் தூரம் தான். காரை எடுத்து மிதித்தால் ஒருமணி நேரத்தில் அங்கே சென்று விடலாம். ஒவ்வொரு நாளும் திவ்யமாக பொழுது போயிற்று என்பதற்கு, பானு கோவில் ஊரில் இருப்பதற்கு கொடுத்து வெச்சிருக்கணுமே என்று பெருமூச்சு விட்டாள்.

வனிதா தனது கைப்பைக்குள் இருந்து, ஒரு லட்டை உடைத்து ஒரு துண்டை டிரைவருக்குக் கொடுத்தாள். தாசனுக்குக் கொடுத்தாள். அப்புறம் அவளும் பானுவும் லட்டை சாப்பிட ஆரம்பிக்கும் வரை அவர்களையே தான் தாசன் பார்த்துக் கொண்டிருந்து, அப்புறம் திரும்பி லட்டைக் கொறித்தான். இப்போது லட்டு ருசி பற்றி டிரைவர் பேச துவங்குவார் என்று பட்டது. அலுப்புடன் அவரை கவனிக்க, பெரும் தொண்டை கனைப்புடன் அதைத்தான் பேசினார். அநேகமாக அவர் என்ன பேசுவார் என்பது கூட தெரிந்தது தான். அவர்கள் அதை மும்முரமாகப் பின்தொடர்ந்தார்கள்.

தூக்கம் போடலாமா என்று தாசன் நினைப்பதில் தவறு இல்லை. கலை அலுவலக நேரத்தின் போக்குவரத்து நெரிசல் இருந்தது. படப்பிடிப்பு நடக்கப் போகிற பீச் ஹவுசை சென்று சேர எப்படியும் ஒன்றரை மணிநேரமாவது ஆகும். எனினும் அவன் அவர்கள் இருவரின் குரலை தன்னை அறியாமல் கவனித்துக் கொண்ட வருவதை அறிந்தான். அவர்கள் இருவருமே குமரிப் பெண்கள் போல கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் எந்த மோசடியும் இல்லை. இட்டுக்கட்டல் இல்லை. இரண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கணக்கு போட்டால் கூட, இருபது வயதுக்கு வேண்டிய பொது அறிவு தான் மொத்தமேயிருந்தது.

அதெப்படி இப்படிக் குழந்தைகளாக இருக்க முடியும்?

வனிதா திருப்பதியில்  இருக்கக் கூடிய தன்னுடைய மாந்தோப்பைப் பற்றி சொல்லும்போது மிகவும் கர்வமாக இருப்பது மாதிரியும், பானு அதைப் பற்றி பேச விரும்பவில்லை போலவும் பட்டது. “நானும் பசங்களுமா அங்க தான் வெளையாடிக்கிட்டு இருப்போம்” என்று பேச்சு துவங்கிய போது தாசன் எதையோ எதிர்பார்த்தது உண்மை. அப்படி எல்லாமில்லை, அவ்வப்போது அந்த தோட்டத்தின் முதலாளி கம்பை எடுத்துக் கொண்டு துரத்தி வந்ததையும், நினைத்துக் கொண்ட போதெல்லாம் மாங்காயைச் சாப்பிட முடியாததையும் ஏக்கமாக சொன்னாள். சினிமாவில் புக்காகி, முதல் அட்வான்ஸ் வாங்கியதும் அப்பாவிடம் சொல்லி நான் அந்தத் தோப்பை வாங்க வைத்தேன் என்பதில் குரல் கொஞ்சம் முதிர்ச்சி கொண்டு விட்டது. சில சவால்கள் வந்தவாறு இருந்தன. நல்ல வேளையாக மாங்காய் ருசி பற்றி பேச்சு மாறி, வனிதா மறுபடியும் குழந்தையாக குரல் கொண்டு விட்டாள். எதாவது ஒருநாள், ஒருவேளை மதிய உணவில் கூட நம்ம வீட்டு மாங்கா ஊறுகாய் இல்லாமல் நான் சாப்பிட்டது கிடையாது. தென்னிந்தியா முழுக்க படப்பிடிப்புகளுக்காக சுற்றியிருக்கிறேன், விதவிதமான உணவுகளை எல்லாம் ருசி பார்த்திருக்கிறேன். ஒருமுறை ஹிந்தி சினிமாவின் பிதாமகர் ஒருவர் விருந்தளித்திருக்கிறார். எந்த சந்தர்ப்பத்திலும் நான் என் கைவசம் ஊறுகாய் வைத்துக் கொண்டு அதை மற்றவருக்கும் கொடுத்து சாப்பிட்டேன் என்றார். கொஞ்ச காலம் முன்னால் தலைச்சுற்றல் வந்து மருத்துவரிடம் போனால் பிளட் பிரஷர் என்றார்கள். ஊறுகாய் சாப்பிடக் கூடாது, ஆனால் நான் அவரிடம் முடியாது என்று சொல்லி விட்டேன், நாலு மாத்திரையை வேண்டுமானால் அதிகமாக முழுங்கி வைக்கிறேன். இதை சாப்பிடாதே என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நோ என்றால் நோ, அவ்வளவு தான். இதோ கையோடு வைத்திருக்கிறேன், உனக்குத் தெரியாதா?

தாசன் பாட்டில் காட்டப்படுவதை அறிந்தான்.

மாங்கனிகளின் ருசியும் அப்படியே.

பல பிரபலங்களுக்கு அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் ருசி விதந்தோதப்பட்டிருக்கிறது. இப்போது தாசன் எச்சரிக்கையடைந்தான். வனிதாவின் ஆற்றொழுக்கான பேச்சு தடைபட்டு சட்டென அது கொஞ்சம் அமுக்கி வாசித்தலுக்குப் போயிற்று. இப்போது மொழியும் கூட தமிழ் அல்ல, தெலுங்கு. முடிந்த வரையில் முயன்று தாசன் அதை அடைந்து சந்தோசம் கொண்டான். ஒரே நேரத்தில் நமது கடவுளின் மூன்று படங்களில் தொடர்ந்து நடித்தேன். அவைகள் முடிகிற வாக்கில் ஒரு கூடை நிறைய பழங்களுடன் அவருடைய வீட்டுக்கு போனேன். அவருக்கும் எனக்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. காப்பி எல்லாம் சாப்பிட்டு விட்டு அம்மாவோடு கிளம்பும் போது கடவுள் என்னை தனியாக கூப்பிட்டார். ரகசியமாக இந்தப் பழமெல்லாம் சரி. எனக்கு வேண்டிய மாங்கனிகளை எப்போது தருவாய்?

இருவரும் கிளுகிளுத்து சிரித்துக் கொண்டபோது தாசன் மிகச் சரியாகப் பார்த்தான்.

இரண்டு வயதுப் பெண்கள் வந்து விட்டுப் போனது போல பிரமை வந்தது.

வனிதா அப்போது ரிலீசாகிற எல்லா படங்களிலும் இருப்பாள். ஒரு சிறிய கதாபாத்திரம். அவள் எப்போது நடனமாடுவாள் என்று அனைவருமே அந்த விருந்துக்குக் காத்திருப்பார்கள். பாடலை எழுதியது எந்தக் கவிஞராக இருக்கட்டும். மாங்கனிகள் என்கிற வரி அதில் இல்லாமல் இருக்காது. அப்போது அவள் குனிவாள். திரை முழுக்க அவைகள் நிறையும். அவற்றைக் காட்டிய பிறகு, பார்வையாளர்களிடம் போதுமா என்கிற ஒரு கேள்வி அந்தக் கறுத்து விரிந்த கண்களில் வந்துவிட்டுப் போகும். ஒவ்வொரு முறையும் தாசன் அவைகளை நினைவில் ஏந்தியபடி வீட்டுக்குத் திரும்பி தன்னுடைய அறையின் விளக்கை அணைத்திருக்கிறான். வெறுமை பரவி, செய்ய ஒன்றுமில்லாமல் இருந்து, புரண்டு அரைத்தூக்கத்தில் காமத்தை எழுப்பிக் கொள்ளும்போது எந்தப் பெண்ணின் உடலைத் தேர்வு செய்திருந்தாலும், இறுதியில் அது வனிதாவுடன் தான் விடிந்து முடியும். ஐயோ, அது எப்பேர்ப்பட்ட கனவுகளின் பிரம்மாண்ட ஊர்வலம்? ஒரு மனிதன்  தன்னை மனிதனாக சொல்லிக் கொள்ள முடியாத அளவில் பாதாளம் சென்று திரும்பி வந்த அனுபவங்கள் அல்லவா அவை? பானு ஒரு ஜாங்கோ மாடல் படத்தில் அறிமுகமானவள். மல்லாக்க படுத்த நிலையில் அவளும் கூட மாம்பழங்களைப் பற்றி பாடியிருக்கிறாள். அவைகள் நமது முகத்தை நோக்கி வரும்போது திரைகள் போதாது. தாசன் அதைப்பற்றி நண்பர்களிடம் வர்ணிக்கையில் பானு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதை 70 mm-இல் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அவள் சினிமா விட்டு காணாமல் போன எவ்வளவோ காலத்துக்கு அப்புறமும் கற்பனைகளின் நடுவே வருகிற அவளுடைய புருஷனை மறுத்துவிட்டு தாசன் தன்னுடைய காரியத்தை பார்த்திருக்கிறான்.

எவ்வளவு இரவுகள், பகல்கள்?

படப்பிடிப்பு நடக்கிற இடத்தில் ஒன்றிரண்டு ஏசி போட்ட அறைகள் உண்டு. பிரதான நடிகைக்கு காட்சியை விளக்கிச் சொல்லிவிட்டு வேறு ஒருநாள் படப்பிடிப்புக்காக தாசன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான். தொடர்கள் மீது அவனுக்கு இளக்காரம் மட்டுமே இருந்தது. அது போன நூற்றாண்டில் இருக்கிறது என்பான். காசுக்காக நான் இதில் ஈடுபடும்போது என்னை நான் ஒரு பிக்பாக்கெட் ஆசாமியாகத்தான் நினைத்துக் கொள்கிறேன் என்பான். என்றாலும் அதை எழுதுகிற நேரத்தில் மனதிற்கு உவப்பான கேலி கிண்டல்களை ரகசிய அஸ்திரங்களாக எடுத்துக் கொண்டு எழுதும் பழக்கத்தில் வந்து சேர்ந்து இருந்ததால் விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டு தன்னை மறந்து தனது தொழிலில் நடைபோடுவது வழக்கம். பிற்பகலை நெருங்கும் போது ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் தோளில் விழுந்து அவரைப் பற்றிக்கொண்டு வனிதா நடந்து வந்தார். முகம் வலியால் வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது. பின்னாலே வந்த பானுவில் முகத்திலும் கலவரம். மூட்டுவலி கிளம்பி உயர்ந்து கொண்டேயிருக்கிறது. பையன் வெளியேறும்போது தாசனும் எழுந்தான்.

“நீங்க இருங்க எழுத்தாளரே!”

பானு வனிதாவின் புடவையை தொடை வரைக்கும் வழித்துப் போட்டு கால் முட்டுக்களில் வெகுநேரம் களிம்பைப் பூசியவாறு இருந்தாள். ஒன்றிரண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்ட வனிதா, சிறிதும் உணர்வற்ற நிலையுடன் மல்லாந்து கால்களை உயர்த்திக் கொண்டபோது அவள் உள்ளே அணிந்திருந்த உள்ளாடை தெரிந்தது. பானு அப்புறம் நிதானமாக கவனித்து அதை சரிசெய்து விட்டாள். இருவருமே தாறுமாறாக வாய்விட்டு கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்கள். அல்லது சலித்துக் கொண்டிருந்தார்கள்.

தாசன் பார்ப்பதை வனிதா கவனித்தார் போல.

“எழுத்தாளரே!”

“சொல்லுங்க மாம்!”

“சாமி கும்புடுவீங்ககளா?”

“ம்!”

“எனக்கும் சேத்து வேண்டுங்க. வலி தாங்க முடியல!”

இன்று அதெல்லாம் முடிந்து குறைந்தது பதினைந்து வருடங்களாகிறது. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் வனிதா இறந்து விட்டாள். ஒரு நீர்க்குமிழி உடைந்தது போல தான், பெரிய சலனங்களில்லை. ஒருமுறை மதர் தெரசாக்களுடன் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வனிதாவின் நினைவு நாளில் தாசன் ஒரு முகப்புத்தக பதிவு போட்டான். அப்புறம்  இன்றைய நாளில், அவன் தன்னுடைய வெப்-சீரிஸ் கதையை சொல்லிக் கொண்டு வருகையில், கேட்டுக் கொண்டிருந்த சென்ஸ் உள்ள ஒரு தயாரிப்பளர் நில்லுங்க என்றார். ஒரு டிரென்ட் நடிகையின் அம்மா நடிகை பற்றியது அது. ஒரு காலத்தில் கவர்ச்சிக் கன்னி. வழக்கமாகக் குடித்துக் கொண்டிருந்த சுடுகாட்டு சாராயம் கிடைக்காமல் படப்பிடிப்பில் இருக்கிற மகளைத் தேடிப்போகிறாள். உடம்பு முடியாமலாகி கூச்சலிட்டுக் கொண்டு செட்டில் தன்னையறியாமல் மூத்திரம் பெய்கிறாள், அவளை இழுத்துக் கொண்டு செல்லுகிறார்கள் என்று காட்சி. இதை யாரை மனதில் வைத்துக் கொண்டு எழுதி இருக்கிறீர்கள் என்று பதட்டப்பட்டுக் கேட்கிறார் அவர்.

நிலைக் கண்ணாடியில் அவள் தன்னுடைய தொங்கிப்போன முலைகளைப் பார்க்கிற காட்சியும் படத்தில் உண்டு.

தாசன் வனிதாவையும், பானுவையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதி இருக்கலாம் என்று நாம் நினைப்பது இயற்கை. இல்லை. இன்னும் அப்படி எவ்வளவோ நடிகைகளின் வாழ்க்கை உண்டு. அவரிடம் பொதுவில் இருக்கிற சில நடிகைகளைப் பற்றி சொல்லிவிட்டு, தனக்குள் பெருகி வருகிற சிறுகதையை நோட்டமிட்டான்.

கூடிய விரைவில் அவன் அதை எழுதக் கூடும்.

***                       

மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத்தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் வெளியாகியுள்ளன. – தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular