1)
உடுத்திய வெண்சீலையோடு
கூவாகம் நிலத்தில்
எனது கிழவுடல் மரித்து
பன்னெடுங்காலமாகிறது.
கூத்தாண்டவரின் தரிசெங்கும் கொதிக்கும்
பலி சேவல்களுக்குக்
கல்லடுப்பாக நான் பிறக்கும் போதெல்லாம்
உழுபூமிக்கடியில்
மக்காமல் நெளிகிறது சீலை.

2)
தனது சுடுமண் பிள்ளைக்குப்
பால் புகட்டியபடி
நவ்வா மரத்தடியில் கிடக்கிறாள்
உள்ளங்கையளவுள்ள டெரகோட்டா தாய்.
உதிரும் பழங்களில் ஒன்று
அவளது முலையொன்றை உடைக்க
மறுகாம்பில் மண்ணற்ற பாலைச் சுரக்கிறாள்.
3)
பம்பையாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட
விளையாட்டுச் சாமான்களில்
பழமையான தாயக்கட்டைகள் சூதுபவள மணிகள்
சிமெண்ட்டாலான சேதக் கல்லறை
மிகவும் பிடித்திருந்தது.
சிலர் பூமாலைகளோடு
திசையெங்கும் கல்லறையைத் தேடித் திரிய
மணிகள் அணிந்து
என்னோடு தாயம் விளையாடுகிறாள்
கல்லறைப் பெண்.
***
முத்துராசா குமார் – மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையில் எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். தமிழின் அச்சு, இணைய இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய எழுத்துகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகளும், சிறுகதையும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல்: writermuthurasa@gmail.com