பாரதிராஜா
மனித அகநிலைக்குத் திரும்பல்
கிரெக் டெம்பர் (Greg Dember) | கிரெக் டெம்பர் எழுத்தாளரும் சிந்தனையாளரும் இசையமைப்பாளரும் ஆவார். மீநவீனவாத ஆராய்ச்சியாளரான இவர், லிண்டா செரியெல்லோவுடன் இணைந்து மீநவீனவாதத் திருப்பத்தை ஆவணப்படுத்தும் முன்னணித் தளமான ‘வாட் இஸ் மெட்டாமாடர்ன்’ (What Is Metamodern)-இன் ஆசிரியராக உள்ளார்.
*
உண்மை முதல் கலை வரை அனைத்தையும் விமர்சிக்கும் பின்நவீனவாதம் நம்மை ஓர் அறிவுப் பாலைவனத்தில் தள்ளியுள்ளது. நவீனவாதத்தின் அறிவியற் குறைப்புவாதத்தை மறுதலிக்கும் அதே வேளையில், பின்நவீனவாதத்தின் முரண்நகையான தொலைவிலிருந்து அகவயமான அனுபவத்தைப் பாதுகாக்கும் புதிய இயக்கமான மீநவீனவாதமே, ஒரு புதிய -வாதத்துக்கான (-ism) நமது தேவைக்கான தீர்வாகும் என்று கிரெக் டெம்பர் வாதிடுகிறார்.
மீநவீனவாதம், ஒரு கருத்தியல் வகையாக, அதன் ஏற்பு வளைவில் மிகவும் புதிதாக உள்ளது – பொதுவான பார்வையாளர்களுக்காக எழுதும்போது – புதிதாக ஒன்றையோ குறிப்பிட்ட எதையுமோ சொல்வதற்கு முன் அடிப்படைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், மீநவீனவாதம் எப்போதும் நவீனவாதத்துடனும் பின்நவீனவாதத்துடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகப் புரிந்துகொள்ளப்படுவதால், அந்தச் சொற்களையும் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, இவை அனைத்தையும் முதலில் தெளிவுபடுத்திவிட்டுத் தொடங்குவோம்.
மீநவீனவாதம் என்பது பொதுவாக ஒரு பண்பாட்டுக் காலகட்டத்திற்கான பெயராகவும், அந்தக் காலகட்டத்தில் எழுந்த உணர்திறனைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தக் காலகட்டம் (சமீபத்திய) புத்தாயிரமாண்டு தொடங்குவதற்குத் தோராயமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நிகழ்காலம் வரை தொடர்கிறது. இது பின்நவீனவாதத்திற்குப் பிறகு வருகிறது; ஒரு வகையில் பின்நவீனவாதத்திற்கு எதிர்வினையாக உள்ளது; இன்னொரு வகையில் பார்த்தால் தனக்கான பொருளைப் பெறுவதற்கே பின்நவீனவாதத்தைச் சார்ந்தும் உள்ளது. பின்நவீனவாதம், அதன் காலகட்டப்படுத்தலில் நவீனவாதத்துடன் இதேபோன்ற உறவைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் முந்தைய அறிவாற்றற் காலகட்டத்திற்கு எதிர்வினையாற்றுகிறது, அதன் மீது கட்டமைக்கிறது மற்றும்/அல்லது மறுக்கிறது. எனவே நவீனவாதத்தை விவரிப்பதில் தொடங்கி, பின்நவீனவாதம் வழியாக மீநவீனவாதத்துக்குத் திரும்பி, பின்னர் 2023-இல் மீநவீனவாதம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து, எதிர்கால வளர்ச்சிகள் குறித்து ஊகிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
நவீனம் (modern), நவீனத்துவம் (modernity), நவீனவாதம் (modernism) ஆகியவற்றை பல்வேறு, சில நேரங்களில் முரண்படும் வழிகளில் வரையறுக்கும் அளவிற்கு, நவீனவாதத்தை நவீனத்துவதிலிருந்து வேறுபடுத்துவோம். (நான் இங்கு உருவாக்கும் வகைப்பாட்டு வேறுபாடுகள் உலகளாவியவை அல்ல, ஆனால் அவை குறைந்தபட்சம் இந்தக் கட்டுரைக்குள் பொருந்துவ, எனவே வாசகர் நான் சொல்வது என்ன என்பதை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.) நவீனத்துவம் என்பது பெரும்பாலும் 17-ஆம் நூற்றாண்டில் அறிவொளி யுகத்துடன் தொடங்கிய நீண்ட வரலாற்றுக் காலத்திற்குப் பயன்படுத்தப்படும் சொல். மிகச் சுருக்கமாகக் கூறினால், நவீனத்துவம் மனிதகுலம் இயற்கையிலிருந்தும் மனிதகுலத்தின் கடந்த காலத்திலிருந்தும் விடுதலை பெறுவது பற்றியது – புதிய, சிறந்த செயல்முறைகளை நாடுவதும், அத்தகைய முயற்சி சாத்தியமானது என்ற நம்பிக்கையும் ஆகும். இதற்கிடையில், நவீனவாதம் (சமீபத்தில், இருபதாம் நூற்றாண்டிற்கு முந்தைய சில பத்தாண்டுகளில் தொடங்கி, நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு புள்ளி வரை தொடர்ந்தது) பெரும்பாலும் கலைகள், இலக்கியம், கட்டடக்கலை, தத்துவம் ஆகியவற்றில் நவீனவாதத்தின் குறிக்கோள்களின் குவிந்த வெளிப்பாட்டுடன் அவற்றின் தீவிரமாக்கலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இலக்கியம், கலைகளில் நவீனவாதத்திற்கான எஸ்ரா பவுண்டின் குரல் “புதிதாக்கு” என்பதே. பொதுவாக, கட்டடக்கலை, கலைகள், அல்லது மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில், நவீனவாதிகள் பொருள்களின் மேற்பரப்புகளில் சேர்ந்த கழிவுகளை உருவகமாகச் சுரண்டி, கீழே காணப்படும் ஆழமான, அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்த முயன்றனர். நவீனவாதம் இலட்சியவாதமாக உலகளாவிய கொள்கைகளைத் தேடியது, ஆனால் பெரும்பாலும் அணுவாக்கங்களின் வழியே இதைச் செய்தது. பொதுவாக, கலைகளிலும் மானுடவியலிலும் உள்ளவர்கள் பின்நவீனவாதம் பற்றியோ மீநவீனவாதம் பற்றியோ பேசும்போது, நவீனத்துவத்தை (முந்தைய, மிக நீண்ட காலம்) விட நவீனவாதத்தைத்தான் (குறுகிய, சமீபத்திய காலம்) அதோடு அதிகம் ஒப்பிடுகிறோம்.
*
பின்நவீனவாதம் என்பது உலகளாவிய கதைகளின் மீதான அவநம்பிக்கையும் சூழமைவு (context), உறவுமுறை (relationality), அமைப்புகள் (systems) ஆகியவை மீதான கவனக்குவிப்பும் ஆகும்.
*
எவ்வாறாயினும், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எப்போதோ, பல்வேறு கலைகளிலும் பண்பாட்டு அரங்குகளிலும் பின்நவீனவாத உணர்திறன் தோன்றத் தொடங்கியது. தற்காலத்தில், பலர் – தவறாக, என்பேன் – குறிப்பாக பின்நவீனவாதத்தை ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பரிந்துரைக்கும் இடதுசாரி சமூக நீதி இயக்கங்களுடன் அடையாளப்படுத்துகின்றனர். குறைவாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படும் குரல்களில் ஆர்வம் காட்டுவது உண்மையில் பின்நவீனவாதத்தின் ஒரு பகுதிதான், ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே. பொதுவாக, பின்நவீனவாதம் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட கதைகள் மீதான அவநம்பிக்கையும், சூழமைவு, உறவுமுறை, அமைப்புகள் ஆகியவற்றின் மீதான கவனக்குவிப்பும் ஆகும். நவீனவாதம் குறிப்பிட்ட பொருள்களை நெருக்கமாக ஆய்வு செய்து “உண்மைகளைத்” தேடும் இடத்தில், பின்நவீனவாத அணுகுமுறை அந்தப் பொருள்களை இணைக்கும் சூழமைவில் கவனம் செலுத்துவது. பின்நவீனவாதக் கலைப்படைப்புகள் என்று பார்த்தால், பார்வையாளர்/வாசகர்/கேட்போருக்கு அவர்கள் அனுபவிப்பது உண்மையில் ஒரு கலைப்படைப்பு என்பதையும், எனவே கலைப்படைப்பு, படைப்பாளி, பார்வையாளர்கள், சமூகம் ஆகியோருக்கு இடையேயான உறவின் பிரதிபலிப்பு பற்றிய ஆய்வைக் கமுக்கமாகத் தொடங்குவதையும் நினைவூட்டுவதில் முக்கிய அழுத்தம் இருந்தது. “ஆதிக்கம் செலுத்துபவர்கள்” பற்றிய அழுத்தத்தைக் குறைப்பதுடன் சூழமைவில் ஆர்வம் காட்டுவது, பெண்கள், வெள்ளையரல்லாத மக்கள், பாலியற் சிறுபான்மையினர், அதாவது இடதுசாரிகளால் பொதுவாக ஆதரிக்கப்படும் குழுக்களின் உரிமைகளைப் பற்றிய கவலைக்கு அடிக்கடி வழிவகுத்தாலும், பின்நவீனவாத வலதுசாரி என்று ஒன்றும், அதனினும் பரவலாக அரசியலற்ற பின்நவீனவாதம் என்று ஒன்றும் உள்ளது.
*
கலைஞர்களும் அவர்களின் பார்வையாளர்களும் பின்நவீனவாதத்துடன் வந்த பெரும்பாலானவற்றைக் கண்டு சலித்துப்போயிருந்தனர்.
*
2000-ஆம் ஆண்டுவாக்கில், மற்றோர் உணர்திறன் தோன்றியதாகப் பல அறிஞர்கள் கூறுகின்றனர் – அதைத்தான் நாம் மீநவீனவாதம் என்கிறோம். கலைஞர்களும் அவர்களின் பார்வையாளர்களும் பின்நவீனவாதத்துடன் வந்த பெரும்பாலானவற்றைக் கண்டு சலித்துப்போயிருந்தனர்: அக்கறை அல்லது எளிதில் காயப்படும் உணர்வுகள் குறித்த வெட்க உணர்வு, தனிப்பட்ட அகநிலையை மறுப்பது போலவும் விழுமியங்களிலும் நம்பிக்கை அமைப்புகளிலும் உறுதிப்பாடு காட்டுவதில் அளவுக்கதிகமான எச்சரிக்கையான அணுகுமுறையும். 2010-இல், முந்தைய பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்த அறிஞர்கள் டிமோதியஸ் வெர்முலன், ராபின் வான் டென் அக்கர் ஆகியோர் கல்வித்துறையில் நிலவும் பின்நவீனவாத மாதிரிகளைப் பொறுத்தமட்டில் விவரிக்க முடியாத பண்பாட்டு வெளிப்பாடுகளைக் கண்டனர். ஓவியம், திரைப்படம், இலக்கியம், இசை, கட்டடக்கலை ஆகியவற்றில், அவர்கள் “நவீனவாத ஆர்வத்துக்கும் பின்நவீனவாத நகைச்சுவைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் சோகத்திற்கும் இடையில், அனுபவமற்ற எளிமைக்கும் அறிவுக்கும் இடையில், பரிவுக்கும் பற்றின்மைக்கும் இடையில், ஒற்றுமைக்கும் பன்மைக்கும் இடையில், முழுமைக்கும் துண்டுபடுத்தலுக்கும் இடையில், தூய்மைக்கும் தெளிவின்மைக்கும் இடையில் அலைபாயும்” உணர்திறனை ஏற்படுத்தும் படைப்புகளைக் கண்டனர். *ஜர்னல் ஆஃப் எஸ்தெடிக்ஸ் & கல்ச்சர்* (Journal of Aesthetics & Culture)-இல் எழுதிய அவர்களது கட்டுரையில் இந்த உணர்திறனுக்கு மீநவீனவாதம் (metamodernism) என்று பெயரிட்டனர். மற்றவர்கள் இந்தச் சொல்லை முன்னதாகப் பயன்படுத்தியிருந்தாலும், இதுதான் முதல் முறையாகக் கவனத்தைப் பெற்று, முதலில் கல்வித்துறையிலும் பின்னர் அதற்கு அப்பாலும் ஓர் உரையாடலைத் தூண்டியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், கலை இதழியலாளர்களும் சமகாலப் பண்பாட்டின் பல அரங்குகளில் மாறிவரும் அழகியலுக்கு விளக்கமளிக்க வெர்முலன், வான் டென் அக்கர் ஆகியோரின் மீநவீனவாதக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
மீநவீனவாதப் பண்பாட்டுக் கலைப்பொருள்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்: தொலைக்காட்சியில், ‘பஃபி தி வாம்பயர் ஸ்லேயர்’ (Buffy the Vampire Slayer), ‘கம்யூனிட்டி’ (Community), ‘ஃப்ளீபேக்’ (Fleabag), ‘அட்லாண்டா’ (Atlanta) ஆகியவை; திரைப்படத்தில், மிராண்டா ஜூலையின் ‘மீ அண்ட் யூ அண்ட் எவ்ரிஒன் வி நோ’ (Me and You and Everyone We Know), வெஸ் ஆண்டர்சனின் படைப்புகள் அனைத்தும், மிகச் சமீபத்தில், கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பி’ (Barbie) ஆகியவை; இலக்கியப் புனைகதைகளில், டேவ் எக்கர்ஸின் ‘எ ஹார்ட் பிரேக்கிங் வொர்க் ஆஃப் ஸ்டேகரிங் ஜீனியஸ்’ (A Heartbreaking Work of Staggering Genius) , ஜேடி ஸ்மித்தின் நிறையப் படைப்புகள், ஜெனிஃபர் ஏகனின் நிறையப் படைப்புகள் ஆகியவை; பொது இசையில், எலியட் ஸ்மித், சைல்டிஷ் காம்பினோ, பில்லி ஈலிஷ் போன்ற கலைஞர்கள்.
எனக்கு, இவை அனைத்திற்கும் பொதுவாக இருப்பதாகப் படுவது என்னவென்றால், இவை அனைத்தும் அகநிலை என்பது முக்கியமானது என்ற கருத்தை வலுப்படுத்துகின்றன. பொதுவாக எந்த வகையான அறிவுசார் வாதத்தின் மூலமாகவும் அல்லாமல், மாறாக இணையான சிக்கலான உணர்வைத் தூண்டுவதன் மூலம் அதைச் செய்கின்றன: விளையாட்டுத்தனமான முரண்பாட்டைப் பின்னல் அல்லது மனிதனாக இருப்பதன் நுணுக்கங்களில் உள்ளவற்றைக் கூச்சமற்ற மகிழ்ச்சியுடன் பரிசோதனை செய்தல் மூலம்.
*
நவீனவாதம், புறநிலை, உலகளாவிய உண்மைகளைப் பின்தொடர்வதற்கான தேடலுடன் மனிதகுலத்தை முன்னோக்கிச் செலுத்துவதில் மூழ்கியிருந்தது, பின்நவீனவாதம், நவீனவாதத்தில் இல்லாதவற்றுக்குக் கவனத்தை ஈர்ப்பதில் மூழ்கியிருந்தது: சூழமைவு (context), உறவு (relationship) ஆகியவை பற்றிய விழிப்புணர்வு.
*
நவீனவாதம், புறநிலை, உலகளாவிய உண்மைகளைப் பின்தொடர்வதற்கான தேடலுடன் மனிதகுலத்தை முன்னோக்கி நகர்த்துவதில் ஆர்வமாக இருந்தது என்றும், பின்நவீனவாதம், நவீனவாதத்தில் இல்லாதவற்றுக்குக் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமாக இருந்தது என்றும் கூறலாம்: சூழமைவு (context), உறவு (relationship) ஆகியவை பற்றிய விழிப்புணர்வு. எனவே, மீநவீனவாதத்தின் கவனம், பின்நவீனவாதத்தின் சார்பியல்வாதம், நவீனவாதத்தின் குறைப்புவாதம் ஆகியவற்றின் பொருள்-தாழ்த்தும் “பக்க விளைவுகளுக்குப்” பிறகு, இந்த அகநிலை அல்லது உணரப்படும் அனுபவத்திற்கான இடத்தை மீட்டெடுப்பதில் உள்ளது. கலைகளிலும் பொதுப் பண்பாட்டிலும் இருந்து பெறப்பட்ட மீநவீனவாத உணர்திறனின் எடுத்துக்காட்டுகளின் பட்டியல் நான் இணைந்து தொகுக்கும் வாட் இஸ் மெட்டாமாடர்ன்? (What is Metamodern?) என்ற இந்த வலைத்தளத்தில் கிடைக்கிறது.
சிலர் கேட்கலாம்: பின்நவீனவாதத்தின் குறைபாடுகளுக்கு ஒரு புதிய -வாதத்தைக் கண்டுபிடித்துப் பதிலளிக்க வேண்டியது ஏன்? வெறுமனே ஏன் நவீனவாதத்திற்குத் திரும்பக்கூடாது? சமூகம் ஒட்டுமொத்தமாகச் செய்வதற்கு தனிப்பட்ட எவரும் “பொறுப்பல்ல” என்பதைச் சுட்டிக்காட்டுவது இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதற்கான ஒரு வழி. நவீனவாதத்திற்கும் பின்நவீனவாதத்திற்கும் இடையில் ஒரு புதிய வழியில் செலுத்தும் ஒன்றிற்குச் செல்வதற்குப் பதிலாக, நேரடியாக நவீனவாதக் கதைகளுக்கும் அழகியலுக்கும் திரும்புவது சமூகத்திற்குச் சிறந்த யோசனையாக இருந்திருக்குமா? இருக்கலாம். ஆனால் சமூகம் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. பின்நவீனவாதம் பற்றிய புலமைத்துவம் போலவே, மீநவீனவாதப் புலமைத்துவமும் பண்பாடு பற்றிய கவனிப்பு, அறிவிப்பு, கோட்பாடுகளை உருவாக்குதல் ஆகியவற்றில்தாம் கவனம் செலுத்துகிறது. பரிந்துரைகள் வழங்குவதில் அன்று.
ஆனால் அந்த விடை ஒருவேளை இந்தக் கேள்வியைக் கேட்கலாம்: கலைஞர்களும் பார்வையாளர்களும் பின்நவீனவாதத்தில் இருந்து நகர்ந்து நேரடியாக நவீனவாதத்திற்குத் திரும்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? சரிதான், மீநவீனவாதம் தோன்றும் வகையில் பின்நவீனவாதத்துக்கு ஒரு பாதைத் திருத்தம் தேவைப்பட்டது போல, பின்நவீனவாதம் தோன்றியதே நவீனவாதத்தின் குறைபாடுகளால்தாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு தவறான கண்ணோட்டம்/உலகக் கண்ணோட்டமாகக் கருதப்படுவதற்குப் பதிலாக, பின்நவீனவாதம் நவீனவாதத்தின் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும் குருட்டுப் புள்ளிகளுக்கும் தேவையான மறுமொழியாகவே தோன்றுகிறது. அதற்கே உரிய குறைபாடுகளுடன் கூடிய ஒரு மறுமொழி; அதனால்தான் மீநவீனவாதம்.
இங்கே நியாயமாகவே இன்னொரு கேள்வியை எவரேனும் கேட்கலாம்: மீநவீனவாதம் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் பின்நவீனவாதத்தின் அதிகப்படியான செயல்களுக்கு எதிர்வினையாகத் தோன்றியது என்றால், 2023-இலும் மீநவீனவாதம் இன்னும் தொடர்புடையதா? பின்நவீனவாதம் ஒரு கடந்த காலத்தின் பொருளாக இருக்கும் போது, அதற்கு இன்னும் ஏன் ஒரு மறுமொழி தேவைப்படுகிறது? இதற்கும், ஓர் இரண்டு பகுதிப் பதில் இருக்கிறது. 1) அதற்கு முந்தைய நவீனவாதத்தைப் போலவே, பின்நவீனவாதமும் முழுமையாக மறைந்துவிடவில்லை. ஓர் அழகியல் – சிந்தனை முறையாக, அது இன்னும் நாம் சுவாசிக்கும் “காற்றில்” உள்ளது, அது இன்னும் நமது கலையிலும் பொதுப் பண்பாட்டிலும் வெளிப்படுகிறது. எனவே நாம் பண்பாடு முழுவதும் அதற்கான மீநவீனவாத மறுமொழியைத் தொடர்ந்து கவனிக்க வாய்ப்பு உள்ளது. 2) எனவே, மேலும் சுவாரசியமான வகையில் எனலாம், கடந்த 25 ஆண்டுகளில், நாம் வாழும் உலகம், முன்னர் பெரும்பாலும் கலையில் மட்டுமே இருந்த உணர்வுகளை – நமது அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வழிகளில் – மேலும் மேலும் உள்ளடக்கியுள்ளது. இணையத்தின் கலிடோஸ்கோப் வில்லைகள் மூலம் மெய்மை உடைக்கப்படும் உலகில்; போட்டி போட்டுக்கொண்டு வரும் எளிதில் திரிக்கப்படும் “உண்மைகள்”; தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி (அவற்றில் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய வெடிப்பும் அடங்கும்), வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒரு மிகை மெய்மை (hyper reality)-யில் வாழும் மனிதர்களாக இருப்பதில் உள்ள உள்ளார்ந்த மர்மங்கள், குழப்பங்கள், விசித்திரங்களை ஏற்றுக்கொள்ள வழி காட்டும் திரைப்படங்கள், பாடல்கள், எண்ணற்ற பண்பாட்டு வடிவங்களுக்கான தேவை இப்போது இன்னும் அதிகமாக இருக்கலாம்.
2022-இல் பல விருதுகளை வென்ற திரைப்படமான ‘எவ்ரிதிங், எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything, Everywhere All at Once) மீநவீனவாதத் திரைப்படம் என்பதற்கான ஒரு நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டு. மனதை வளைக்கும் பல்லண்டம் (multiverse) பற்றிய (இது சமகால வாழ்க்கை மெய்மையின் உடைந்த தன்மைக்கான உருவகம்) ஆய்வுகளைக் கொண்ட இப்படம் இறுதியில் அன்பும் குடும்ப உறவுகளும் முக்கியமானவை என முடிவுக்கு வருகிறது. சமீபத்திய ‘ஸ்பைடர்வெர்ஸ்’ (Spiderverse) படங்களும் இதே போன்ற களத்தை உள்ளடக்கியன. பில்லி ஈலிஷின் இசையில் பலவீனத்தன்மையையும் குழந்தை போன்ற உற்சாகத்தையும் தியாகம் செய்யாத, தொழில்நுட்பத்தின் கடுமையான, பெரும்பாலும் வன்மையான அணுகுமுறையை உள்ளடக்கிய ஒரு புதுப்பிக்கப்பட்ட மீநவீனவாத அதிர்வு உள்ளது. மீநவீனவாத அழகியல் மிகை-உண்மை அதிர்வுகளுடன் பின்னிப்பிணைந்ததற்கான கூடுதல் எடுத்துக்காட்டுகளை நாம் தொடர்ந்து பார்ப்போம் என்று எண்ணுகிறேன், அதே நேரத்தில் வெஸ் ஆண்டர்சன், வில்கோ இசைக்குழு போன்ற செவ்வியல் மீநவீனவாதக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் முந்தைய வெளியீட்டோடு அழகியல் ரீதியாக தொடர்ச்சியான படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்குகிறார்கள்.
மீநவீனவாதம் விரிவடைவதற்கான மற்றொரு திசையை நான் காண்கின்றேன், அது மெய்யியல் நங்கூரப் புள்ளிகளை வளர்ப்பது. இதுவரை, மீநவீனவாதம் முதன்மையாக அழகியல், பண்பாட்டு வடிவங்களிலும், அந்த வடிவங்களைப் பற்றிய கோட்பாடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்ஸ், நீட்சே, ஃபிராய்ட், ஐன்ஸ்டீன் போன்ற சிந்தனையாளர்களாலும், பின்நவீனவாதத்தின் முன்னணி மெய்யியலாளர்களான (எடுத்துக்காட்டாக) ஃபூக்கோ, டெர்ரிடா, லியோடார்ட், பாட்ரிலார்ட், டெலூஸ் ஆகியோராலும் நவீனவாதம் தூண்டப்பட்டது போல, மீநவீனவாதம் மெய்யியல் நோக்கில் வளரத் தொடங்கியுள்ளது. 2000-களில் தோன்றிய பொருள் சார்ந்த இருப்பியல் (Object-Oriented Ontology) (OOO) அத்தகைய ஒரு வேட்பாளர், இதன் முன்னோடிப் பிரதிநிதிகள் கிரஹாம் ஹார்மன், டிமோதி மோர்டன் ஆகியோர். இந்த இருப்பியல் அணுகுமுறை மனிதர்களை மையமாகக் கொண்டில்லாமல், மாறாக பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது, அதாவது, இப்பொருள்களைக் கூறுகளாகச் “சிறுமைப்படுத்தும்” அணுகுமுறையையும் (நவீனவாதம்), அவற்றைச் சூழமைவுகள், தாக்கங்கள் ஆகியவற்றின் விளைபொருளாகப் “பெருமைப்படுத்தும்” விளக்கங்களையும் (பின்நவீனவாதம்) எதிர்ப்பவையாக இந்த அணுகுமுறை வரையறுக்கிறது. மனிதர்களைவிடப் பொருள்களின் மீது கவனம் செலுத்துவது, மீநவீனவாதத்தின் தனிப்பட்ட அகநிலை மீதான முக்கியத்துவத்திற்கு எதிரானது என்று ஒருவர் நினைக்கலாம் என்றாலும், அதை முகமையின் இருப்பிடத்தை மேலும் சாத்தியமான முகவர்களாக நீட்டிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன் .
*
நவீனவாதத்திற்கும் பின்நவீனவாதத்திற்கும் இடையிலான விவாதங்களைத் தாண்டி, “பணிவான அறிவு” என்று அவர் அழைக்கும் ஒன்றை அடைவதற்காக, புலமைத்துவத்துக்கும் அறிவுருவாக்கலுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை முன்மொழிவதே ஸ்டார்மின் திட்டமாகும்.
*
வரும் ஆண்டுகளில், OOO-வையும் தற்போதுள்ள 21-ஆம் நூற்றாண்டின் பிற மெய்யியல் இயக்கங்களையும் கூட மீநவீனவாத முன்மாதிரிகளாக ஆராயும் முயற்சிகளைக் காணலாம் என்று நம்புகிறேன். இது அவற்றைத் தோற்றுவித்த மெய்யியலாளர்களின் பணியாகவே இருக்க வேண்டிய தேவையில்லை, மாறாக இதுபோன்ற மெய்யியல் முன்னேற்றங்களை நிலைநிறுத்துவதற்காக மீநவீனவாதத்தின் வில்லையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் முயற்சியாக இருக்கலாம். இவை அனைத்துக்கும் மேலாக, தன்னைத் தானே மீநவீனவாதம் என்று வெளிப்படையாக அழைக்கும் ஒரு வளர்ச்சி மெய்யியலில் ஏற்பட்டுள்ளது. 2021-இல், ஜேசன் ஆனந்தா ஜோசப்சன் ஸ்டார்ம் தனது ‘மீநவீனவாதம்: கோட்பாட்டின் எதிர்காலம்’ (Metamodernism: The Future of Theory) என்ற நூலை வெளியிட்டார். நவீனவாதத்துக்கும் பின்நவீனவாதத்துக்கும் இடையிலான விவாதங்களைத் தாண்டி, “பணிவான அறிவு” என்று அவர் அழைக்கும் ஒன்றை அடைவதற்காக, புலமைத்துவத்துக்கும் அறிவுருவாக்கலுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை முன்மொழிவதே ஸ்டார்மின் திட்டமாகும்.
அதில் ஒருவர் தோராயமாக – ஆனால் நம்பகத்தன்மையுடன் – வரையப்பட்ட வகைகளின் அடிப்படையில் வலியுறுத்தல்களைச் செய்ய முடியும். தனது முன்மொழிவுகள் மானுடவியலிலும் சமூக அறிவியலிலும் புலமைத்துவத்தைப் பரவலாகப் பாதிக்கும் என்பது ஸ்டார்மின் நம்பிக்கை.
பொதுப் பண்பாட்டில் மீநவீனவாதம் பற்றிய ஒரு வழிகாட்டுப் பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட எனது வரவிருக்கும் நூலில், முன்மாதிரிகளின் நெருக்கமான வாசிப்புகளைக் கொண்டு, இந்நாட்களில் மக்கள் அடிக்கடிச் சொல்லும் கதைகளைப் பற்றிய ஒரு கதையைச் சொல்கிறேன். நவீனவாதத்தின் குறைப்பு, பின்நவீனச் சார்பியல், மிகை-நவீன முறிவு ஆகியவற்றின் முகத்தில் மனித அகநிலைக்கு முன்னுரிமை அளிக்கும் கதைகள். இந்தக் கதைகள் இன்னும் அதிகமாக வெளிவருவதையும், கல்வியாளர்கள், இதழியலாளர்கள் ஆகியோரின் படைப்புகளில் அவற்றைப் பற்றிய கூடுதலான கதைகள் வெளிப்படுவதையும் நாம் காண வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நமக்குத் தேவை என்று தோன்றுகிறது.
Edited and compiled fromt the articles by Greg Dember

***
பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com


