Saturday, November 22, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்மனத்திணையும்  நவீன உரையாடலும்

மனத்திணையும்  நவீன உரையாடலும்

கவிஞர் பூர்ணா

ப்பிரபஞ்சத்தில் வாழ்தலின் நிமித்தம் நம்மை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம்’ என்பதிலிருந்து தான் வாழ்வியலின் பிரக்ஞை பொருந்திப் போகிறது. வாழ்தல் இங்கு வெவ்வேறு ஆதிகளால் உருக்கொண்டு பிரம்மாண்டமாய் நம்மை அணுகுகையில் எந்த வித சலனமும் இன்றி அவைகளின் மீது தன்னுடைய கேள்விகளை தீர்க்கமாக வைப்பதும் அதிலிருந்து தொடர அல்லது துண்டித்து நெடும்பயணத்தை மேற்கொள்ள நினைக்கும் நுட்பமான களங்களை எழுதிப் பார்க்க முயற்சித்துள்ளார் லட்சுமிஹர்.

அப்படியிருக்கையில் இதுவரை அவரது எழுத்து வடிவமாக வெளிப்பட்டிருக்கும் சிறுகதைகளில் இருந்து தொடங்கினால் அவைகள் வெளிப்படுத்த முயற்சிக்கும் பாடுகளுக்காகவே கவனிக்கப்பட வேண்டியவையாக மாறுகிறது. சிறுகதைகளில் எட்டப்படும் கருப்பொருள் அதன் விஸ்தார போக்கு அல்லது ஒரு துண்டு கணம், முடிவிலிருந்து தொடங்கும் யுக்தி போன்ற காரணி வினைகளை சார்ந்ததாகவே பின்னப்படும். அதை கதாபாத்திரங்கள் பின்தொடர்வதே வழக்கம். ஆனால் லட்சுமிஹரின் பெரும்பாலான கதைகளில், கதை மாந்தர்களின் ஊடே நிகழும் உளவியலை அடர்த்தியான சொற்கள் கொணர்ந்து முடிச்சிடப்படுகிறது. ஒவ்வொரு கதையும் பரிசோதனை முயற்சியாகவே நகர்கிறது, அல்லது நம்மை நகர்த்துகிறது. தயவு தாட்சனையின்றி அத்தனை எளிதில் உள்ளே வாசகனை அனுமதிப்பதில்லை, இருப்பினும் ஒரு தேர்ந்த வாசகனுக்காக வாஞ்சையோடு இரு கைகளை விரித்து வைத்திருக்கிறது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத அன்பை சில கணம் கண்ணீர்த் துளிகளால் எழுதி விடுவது போன்ற காட்சி வடிவமைப்புகள் திரைப்படத்திற்கானவை. வசனங்களால் பேசிவிட முடியாத உணர்ச்சிகளை சொற்களற்ற காட்சியொன்றால் நிகழ்த்தி காட்டுவார்கள். அதைப்போன்று தன் கதைகளில்  நிகழ்த்திக்காட்டி  வெற்றியும் பெற்றுள்ளார் லட்சுமிஹர். கவிதையில் ஒரு பத்திக்கும், இன்னொரு பத்திக்கும் சிறு இடைவெளியுண்டு,அவ்விடைவெளிப்  படைப்பாளன் சொல்லாத ஒன்றை நாம் எழுதிக் கொள்வதற்கும் ,நிகழ்த்திக் கொள்வதற்கும் ஆகும். இப்படியும் சொல்லலாம், இருபத்திக்குமிடையே நம் உணர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தல்.. இப்பரிணாமம் கதைகளில் சாத்தியப்படுத்த பெரும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாசகனின் மீதான கருணையற்ற செயலாக இருப்பினும், அவன் பெயரில் வைத்துள்ள எத்தனை பெரிய நம்பிக்கை இது. எல்லா கதைகளும், காலம் காலமாக வகுத்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து தனக்கே உரிய மொழியில் காட்சிகளாக நகர்கிறது. அவைகள் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், இயங்கியல் கோட்பாடு இவைகளின் இயக்கவியல் நவீன இலக்கியங்களில் எங்ஙனம் பிரதிபலிக்கிறது எனும் கேள்விகளுக்கு ஆங்காங்கே இருட்டில் கொளுத்தப்பட்டதும் தீக்குச்சியின் ஒளியாய் மிளிர்கிறது.

புறச்சூழல் வாழ்வின் வகைமைகள், அதன்  கூறுகளின் அடுக்குகள். எங்ஙனம் உலகமயமாக்கல் நம்மை சீண்டுகிறது என்பதையும், அகம், புறம் என அந்த அந்த நேரத்தில் காலம்  எப்படி பிரதியெடுத்து தன் பேழையில் எழுதிக் கொள்கிறது என்பதையும் அலங்கரித்த சொற்கள் கொண்டு நகர்த்தாமல்,நிர்வாண சொற்கள் கொண்டே எடுத்தியம்பப்பட்டுள்ளது.

“டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்” கதையில் வரும் வரிகள் ..

நேற்றைய கலவியில் அவளின் இன்னொரு கேள்வி இரவின் உறக்கத்தை திருடிக் கொண்டது .

“உனக்கு தெரியுமா ரான் …மச்சங்கள் நகரக் கூடியது …

“விளையாடாதே மானசி.”.

“விளையாட்டல்ல… என்று அவளின் பின் முதுகை என்னிடம் காட்டினாள் ஞாபகம் இருக்கிறதா என்கிற முகபாவனையில் ..

நவீன கவிதை ஒன்றின் வரிகள் போல் சிறுகதையில் மின்னல் கீற்றாய் இப்படி எழுதி விடுகிறார்.

முதல் தொகுப்பான ஸெல்மா  சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் பனுவலில் ஆப்பிள் பாக்ஸ், கடிந்து, ஆம், வெற்றோசை, முதலிய கதைகளில் சில பத்திகள் கவிதை வரிகளாகவே இருக்கும். பத்தி ஒவ்வொன்றிலும் கருத்தின் அடர்த்தியும் பொதிந்து கவனிக்கப்படவேண்டிய கதைகளின் பட்டியலில் இருக்க வேண்டியவை.

உப்புக்குள் உறைந்த கடலாய் அந்தச்சொற்களுக்குள், பிறவிப் பெருங்கடல் மறைந்துள்ளது. ஒரு இரவின் மின்னல் வெளிச்சத்தில் ஒருவனால் எதையெல்லாம் காணமுடியும், எவைகளையெல்லாம் உணரமுடியும் என்பதையும், எவ்வுயிர்க்கும் பொதுவாய் பெய்யும் மழையாய்….காலத்திற்கு முன் நீட்டப்படுகிறது இவர் பிரதி.

அடர்த்தியாக இருக்கும் இருட்டை உரித்து பகலைக் காணுவது போல உணர்வுகள் தோலுரித்து  பார்க்கப்படுகிறது. இவற்றை எல்லாம் ஒரு வாசகன் எங்ஙனம் எதிர் கொள்ளுவான் என்ற பதற்றத்துடனேயே ..அடுத்த அடுத்த வரிகளுக்கு நகர்ந்தேன்.

புனைவுகளுக்கும், நிதர்சனங்களுக்குமிடையே பாத்திரப்படைப்பு  வழியாக, சொற்கள் பரிமாறப்பட்டிருப்பின், இங்கே புனைவு நிஜத்திலும், நிஜம் புனைவாகவும் உருப்பெற்று உள்ளது. ரூபங்களும், அரூபங்களும் எதார்த்த மொழிநடையில் சொல்லப்பட்டு இருந்தாலும், அனுபவங்களின் நுட்பம் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. நிகழ்த்துக்கலை போன்று  சொற்கள் உணர்ச்சிக்குவியலின் கண்ணீர் மொட்டுக்களைப் பொத்து விடும் லாவகத்தை  வாய்க்கப்பட்டுள்ளார் ஆசிரியர். உணர்வுகளை கையாளும் விதத்தில் இன்றைய தலைமுறையினரின் மனநிலையை பிரதிபலிக்கும் கதைகள் நம்முடைய இளைய சமூகத்தின் பார்வையைக் கேள்வி கேட்கவே செய்கிறது. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஒருவகையில் புனைவென்றாலும், நிச்சயமாக இந்நிலப்பரப்பில் ஏதோ ஒரு மூலையில் அவ்வாழ்வு  தொடரத்தான் செய்யும். பயணங்களும், வாசிப்பின் வகைமைகளும் எழுத்துக்கு கை வரப்பட்ட போதும். எதார்த்த வாழ்வின் நுட்பத்தை கதைகளில் கொணர ஆசிரியர் மறுப்பதை விட கடந்து செல்கிறார் என்பதை உணர முடிகிறது. அவரின் கதை கூறல் அப்படியாக அதை பிரதியாக்குகிறது. அது தன்னிலையில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. யதார்த்தமும் இலக்கியம் தான் சரியாக கையாளும் பட்சத்தில்.

நடந்து கொண்டிருந்த மனிதர்கள் பறவையின் குணத்தை பொருத்திக்கொண்டு அலையும் இந்த அவசர சூழலில், மேலும் வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், பொருளீட்டலின் பொருட்டு உடலை அடகு வைத்து நாட்களை நகர்த்தும், அல்லது நகரும் நிலையில் இது போன்ற உளவியல், படிமம், குறியீடு மொழிச் செறிவு வாய்ந்த கதைகள் தேவைதானா என்றால் நிச்சம் தேவைதான். எத்தனையோ கதைகள் எளிமையாக வெளிவந்துள்ளது, வெளிவந்து கொண்டுமிருக்கிறது. இது போன்ற கதைப் பின்னல்களும் தமிழின் செழுமைக்கு  ஓர் அடையாளம்.

சங்க இலக்கியப் பாடல்கள் வாசிப்பு, ஒவ்வொன்றிலும் பன்முகத்தை வெளிப்படுத்தி தன்னை நிலை நிறுத்தி தமிழின் சிறப்பை நிரூபித்துள்ளது. அதற்கு சதுக்க பூதம், நிப்பாணகாதை போன்ற கதைகள் உதாரணம்.  பலூக் கதையிலும், சதுக்கம் பூதம் கதையிலும் சரி  குழந்தையின் உளவியல் மிக நுட்பமாக பேசப்பட்டு தன் வழியாக, நிலத்தின் அரசியலும்  தொன்மத்தின் வழியாக ஊடுருவி விழுமியங்களை கையகப்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது. நவீனமாக்கப்பட்ட புறநகர் பகுதியின் மைய விளிம்பை, உலகமயமாக்கத்தின் நிலையை குழந்தை மொழியில் எழுதப்படுகையில் பலூனுக்குள் சிக்குண்ட அன்பும், அந்தரத்திணையில் மேல் நோக்கித் தொங்கும் பலூனாய் வாழ்வும் காட்சியளிக்கிறது. வாசகர்கள் பல வகையுண்டு தேர்ந்த வாசகர் கையில் இது போன்ற நூல்கிடைத்தால், அல்லது இந்நூல் ஒரு வாசகரை தேர்வுச் செய்தால், பொழுது  பழுதாகாமல் நகரும் என்பது திண்ணம்.

இறப்பின் நிமித்தம் மிக நுட்பமாக சடங்கு முறை தொடங்கி வீடு திரும்பும் வரை நிகழும் சம்பிரதாயங்கள், பூக்களின் வாசனை, சாராய நெடி, கொட்டுச்சத்தம், தார்ச்சாலையில் மிதிபட்டு, மிதிபட்டே மறுமுறையும் மரித்துப் போகும் ரோஜாக்கள்,ஒப்பாரியின் நுனியின் தொப்புள் கொடியின் விசும்பல். திறந்தே கிடக்கும் ஊருக்கு இனி யாரு இருக்கா என தொடர்ச்சியாக ஒரு பக்கம் புலிசாரை( வாடிவாசலுக்கு பின் தமிழில் காளைகள் பற்றிய முழுமையான வாழ்க்கைமுறை சார்ந்த கதை ) கதையில் யதார்த்தம் அறிந்த கைகள் மறுபக்கம் வெற்றோசை, ஆண்ட்ரைட் வெர்ஷன், ஆம் , கித்தானுடைய வண்ணப்பேழை முதலிய கதைகள் அப்படியே அதனின் எதிர்திசை. அதனின் வெற்றியையோ அல்லது தோல்வியையோ நினைத்து ஒரு எழுத்தையும் லட்சுமிஹர் முன் வைப்பதாக தெரியவில்லை. தன் சிந்தனைகளைக் கடத்திட எந்த வித அரிதாரமும் இல்லாத பாங்காகவே அவைகள் வெளிப்பட்டிருக்கிறது. எதையும் முயன்று பார்க்க அவருடைய  இளமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இது தொடரும் பட்சத்தில் மேலும் நல்ல கதைகளை நமக்கு அளித்திட முடியும். 

அப்படியாக பல களங்களில் எழுதி பார்த்திட விரும்பும் லட்சுமிஹர் தான் இயங்கக்கூடிய சினிமா துறை சார்ந்த கதைகளையும் எழுதியுள்ளார். அவைகளில் இருந்து இனி கிடைக்கப போகும் எந்த வித பயன்களையும் எதிர் பார்க்காது பாரபட்சமின்றி பாராட்டை போன்று விமர்சனத்தையும் அதன் மேல் குவித்துள்ளார்.

ஸ்டார் கதையில் திரையில் நிகழும் சண்டைக்காட்சிகள்,  நிஜமல்ல அதுவும் ஒரு வகை நடிப்புத் தான். அத்தனையையும் நடிப்பாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.’என்னப்பா உடம்பில் காயம்,’ என்று சூட்டீங் முடித்து வீடு திரும்பிய தந்தையை மகன் கேட்பான். ‘ ‘ஒன்னுமில்லப்பா’ இன்று நடிப்பின் போது உண்டான காயம்’ என்று ஒரு வரி எழுதப்பட்டிருக்கும். ஒரு கதையின் மையம் உதிரமும், சதையுமாக அப்படியே வைக்கப்பட்டு விட்டது. இந்த வாழ்வை எந்த விழிகளில், எந்தப் பார்வைப் பொருத்தி பார்க்கப்போகிறீர்கள் எனும் கேள்விக்கு மறு மொழியாக மௌனத்தைத் தவிர கைவசம் ஏதுமில்லை. மக்களின் வாழ்க்கை முறை பல்வேறு விதங்களில் பிரதிபலித்தலை உற்று நோக்கும் ஒரு முயற்சி.

ஆறாம்திணைக்கு பக்கத்திலிருக்கும், ஏழாம் திணையில் உலவும் இச்சொற்களை, வாசிக்கப் பழகிக் கொள்ளுதல் என்பது நவீன சிறுகதை வளர்ச்சியில் மறு வாசிப்பு முறையில் இது ஒரு தொடர் வாசிப்பு ஆகும். முன்னும் பின்னுமாக அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கூத்தொன்று கூடிற்று வழியாக லட்சுமிஹர் எழுத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எத்தனையோ இரவுகளை காவுக்கொடுத்ததன் வழியாக இது சாத்தியப்பட்டுள்ளது. சொற்குவியலுக்குள் தன்னைத் தொலைத்து, புதிய வடிவத்தை, புதிய உணர்வுகளை கை மாற்றுகிறார். நாம் நிதானித்து ஒரு இளைஞனின் உலகை கவனிக்காமல் எப்படி கடந்து செல்ல முடியும். இக்கதைகள் இன்றைய தலைமுறையின் சிந்தனை. அவர்களிடம் குறைகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் வெளிப்படுத்தும் உண்மையை ஒரு போதும் மறுக்கமுடியாது. பெரும் ஜாம்பவான்கள் புழங்கிய தமிழ் சிறுகதை வெளியில் தன் வருகையை ஆழமாக பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

***

கவிஞர் பூர்ணா: இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். திண்டுக்கல் மாவட்டம் பொன்னி மான்துறையைச் சேர்ந்தவர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட் இல் கிளை மேலாளராக பணிபுரிகிறார். ஈரோட்டில் வசித்து வருகிறார். பத்து கவிதை நூல்கள், நான்கு கட்டுரை நூல்கள், ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார்.கம்பம் பாரதி இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: poornayesudass@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here