Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கொஞ்சம் பிறப்பு / கொஞ்சம் வாழ்தல் / கொஞ்சம் இறத்தல்

கொஞ்சம் பிறப்பு / கொஞ்சம் வாழ்தல் / கொஞ்சம் இறத்தல்

ம. கண்ணம்மாள்

(கவிஞர் தேவசீமாவின் “போத்தலில் அடைபட்ட விடுதலை” கவிதை நூலை முன் வைத்து…)

கொஞ்சம் பிறப்பு 

கொஞ்சம் வாழ்தல் 

கொஞ்சம் இறத்தல்

இந்த மூன்றையும் கலந்து கலவையான ஒரு வாழ்க்கையில் கொஞ்சம் கவிதையை வாசித்தலுக்குமான ஒரு தேவையுமிருக்கின்றது. என்ற நிலையில் ‘போத்தலில் அடைபட்ட விடுதலையைக்’ கொள்ளலாம்.

“நீண்ட படிகள் மிக ஆழமாக உள்ளே இறங்கின. 70 அடி ஆழம் என்றார்கள். குகைக்குள் செல்வதைப் போன்ற உணர்வு. கால்கள் வலிக்கும் அளவுக்கு செங்குத்தான படிக்கட்டுகள். படிகள் முடிந்ததும் நாங்கள் பார்த்த காட்சியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அளவில் மனித எலும்புகள்”. (சாரு நிவேதிதா – 2018 ப.32)

இதனை, வாசிக்கும் போது, இந்த உடலின் கடைசி விடுதலை அது தானென்று நமக்குத் தோன்றும். ஒரு உயிர் பிறந்து வாழ்ந்து உலகை விட்டு நீங்கும் போது, அதனின் விடுதலை எலும்பாகத் தான் உள்ளது. என் அம்மை அதனாலயே எலும்பை மனமுவந்தாள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம், இங்கு விடுதலையென்பது பிடித்ததை நோக்கி நகர்தல். நிகழ்காலத்தில் வாழ்தல் என்று சொல்லாம். சளைக்காத ஒரு நடனம் போல. இந்த வாழ்வில், இயக்குதலுக்கான மிகப்பெரும் மூலதனம், அழுவதோ, சிரிப்பதோ இல்லை. நிலத்தில் அடையாளப்படுத்துதல் மட்டும் தான். அந்நொடி கிடைக்கக்கூடிய ஒரு காட்சி தான் நூற்றாண்டுகள் தாண்டிய விடுதலை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு உடற்சதையினை மிக நேர்த்தியாக நகர வைக்க வேண்டும்.

இதில், விடுதலை என்பது நிலம் வாழும் உயிரிகள் அனைவரும் விரும்பக்கூடியது. குறிப்பாக,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

(தொல்பொருள் -219)

குறைந்தபட்ச இன்பங்களை நுகர வேண்டும்மென்ற ஒரு கருதுகோள் இங்கு யாவர்க்குமானது.

இங்கு இன்பம் என்பது தானாக நிகழல் வேண்டும். நிகழ்த்தப்படுதல் என்பது ஒவ்வொருவருக்குமானது. வரலாற்றின் போக்கில் இத்தகைய நிறைய நிகழ்த்தப்படுதல் நடந்துக் கொண்டேதானுள்ளது. வெறும் உன்னதம், அழகியல், ஒளி, இதெல்லாம் ஒரு மாயையாகப் போர்த்தி வாசிப்பவர்களை ரசனையாக மட்டும் பார்க்கும் காலம் மாறி பெரும் அர்த்தப்பரப்பை வெளிப்படுத்தும் விதமாக சமகாலச் சூழல் கையிலெடுத்துக் கொண்டுள்ளது. அதில், இரு போக்குகளை கைக்கொள்ள முடிகின்றது.

  1. கற்பனை
  2. எதார்த்தம்

இந்த யதார்த்தத்தை அடியொட்டி நடப்பியல் கவிதையின் எல்லைகள் வானளவு நீண்டுள்ளன. இன்னும் கூட அதிகரிக்கும்.

அவ்வகைளில் கலையென்பதை ஒரு சமூக வயமான அனுபவநிலையெனப் பார்த்து, காலந்தாண்டி நகர்ந்து வருகின்றதாக உணரலாம்.

அதுபோல், கவிஞர் தேவசீமா, தன் கவிதைகளில் பின்-நவீன உத்திகளைப் பயன்படுத்தி கவிதையைக் காட்சிப்படுத்துவதாக ஆயத்தப்படுத்திக் கொள்வது போல்வனவாய் நீள்கின்றது. இத்தொகுப்பில் நிறைய நான், நீ என்ற தன்னிலை முன்னிலைக்கான கூறுகள், நான் என்பதின் தொடர்க்காட்சியாக, கருத்தாக்க படிமங்களாக, வாசிக்கும் போது தோன்றுகின்றது.

“எறும்பொன்று என்னை / சுருக் சுருக்கென்று கடித்துக் கொண்டிருக்கிறது / கடித்தெடுத்து துளித்துளியாய் / எங்கோ கொண்டு சேமித்து வைக்கிறது / அநேகமாக / அதன் புற்றுக்குள் இப்போது / என்னைப் போன்ற  நானிருக்கலாம்”

என்பதாக உள்ள கவிதையில், மூன்று விஷயம் பார்க்கலாம்.

  1. எறும்பென்பது நான்
  2. சுருக் சுருக்கென்று கடிக்கப்படுவது என் உழைப்பு அல்லது என் உடல்
  3. ஆனால், நான் காணாமல் போய்விடவில்லை.

எறும்புப் புற்றுக்குள் இப்போது என்னைப் போன்ற ‘நான்’ தான் உள்ளிருக்கிறேன்.

என்னவாகயிருந்தாலும், எது என்னை, அதிகாரவட்டமிட்டாலும் ‘நான்’ என்பது நான் மட்டுமே. வேறொன்றிற்கு இடமில்லையென்பதும் அதிகாரக் கட்டுப்படுத்துதல் கூட அளவுக்கு மீறி நடக்க முடியாததென்பது சொல்லப்பட்டுள்ளது. அவ்வதிகாரம் அளிக்கும் போதை கூட ஒரளவுக்குதான் உட்செலுத்த முடியுமென்பதும் பொருள் கொள்ளலாம்.

இங்கு வாழ்வென்பது, எல்லாவற்றையுமே மிடறு மிடறாக அருந்திக் கடந்து விடக் கூடியது தான். அதனாலயே,

“உன்னைக் குறித்து
உன்னைக் குறித்தல்லாமல்
உன்னைத் தவிர்த்து”

என்ற மூன்றையும் பேசுப்பொருள்களாக வைத்துள்ளது சிறப்பு. எதுவாக வேண்டுமானலும் இருந்துவிட்டு போகட்டும்.

ஆனால்,

“அர்த்த மற்ற / அர்த்த முள்ள / அந்தக் கடுத்தேநீரையும் / நட்பையும்
பதிலாய் மிடறு மிடறாய் / அருந்திக் கட”

என்பதில், மொழி தன்னைக் குறிக்கின்றது முதல் வினை. பின்பு, மற்றொரு வினைக்கு பிற மனித உடல்களுக்கும் உள்ளுறையாகக் கடத்தி குழூஉக்குறியாகி பின் பொதுச் சமூகத்திற்குமாக மாறுகின்றது. இதனை,

  1. என்னை நான் எப்படி பார்க்கிறேன் என்பதும்,
  2. சமூகத்திற்காக எப்படி மாறுகிறேன் என்பதுமென இரு செய்திகள் பொதிந்துள்ளது.

ஆனால், பொதுவாக, நாம் நிமிர்த்த முடியா ஒன்றின் வால் போலவே சுற்றி சுற்றி வருகின்றோம். ஒரு கல் எடுத்து அடிக்க எத்தனிக்கும் போது அந்த அன்பு ஓடிப்போய் ஒளிந்துக்கொள்கின்றது.

“அன்பிற்காய் ஏங்கும்
அபூர்வ உயிரி
என்னென்ன செய்யும்
பக்கத்தில் பக்கத்தில்
வந்து ஏக்கத்தோடு
கண்நோக்கும்
தன் விசுவாசத்திற்கு
வாலாட்டும்
சுற்றிச் சுற்றி வரும் 
ஒரு கோணல் சிரிப்புடன்
கல் எடுக்கப்படும் போதும்
வாலைக் குழைத்து
ஊ ஊ ஊ சொல்லும்
புறக்கணிப்பில் ஆனது
வலி, கல்லால் அல்ல
என்றுணரும் நொடியில்
தேட முடியா
திசையொன்றில்
காதெட்டும் தூரத்தில்
கச்சிதமாய்
ஒளிந்து கொள்ளும்.”

  1. அன்பிற்காக ஏங்கும் ஒரு உயிரி
  2. கோணல் சிரிப்புடன் மனித உடல்கள்
  3. அன்பு ஓடிப்போய் ஒளிந்துக்கொள்ளல்

இதில், மனித உயிரி ஓடிப்போய் ஒளியவில்லை. கவிதையின் ஆசுவாசமான இடம் கூட அதுதான். மிக இயல்பாக பொருள் கொள்ளத் தொடங்குகின்றது. சமகாலக் கவிதைகளின் வழியாக இஃதொரு நல்ல கட்டமைப்பு. அதன்பின், நாம் தான் மொழியின் அர்த்தமாகவும் மாறுகின்றோம்.

ஆனால், அதே அன்பு எரிச்சலாக மாறும் ஒரு இடமும் உண்டு.

“தூண்டிற் புழுக்களாய் சில சொற்களை எறிகிறாய் / பதிலாய் / உயிர் மூக்சுக்காற்றை / வளை முன்னில் மாட்டுகிறேன் / மசாலாவை கை எரிய எரிய / அம்மியிலிருந்து / வழித்தெடுக்கிறாள் / உன் காதலி”

அலாதியான அன்பினால், வேறெந்த அசௌகரியங்களும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இரக்கமற்றதாக அந்த அன்பு மாறும் போது, மீன் போல வளையில் சிக்கி, கை எரிய எரிய மசாலாவை அரைத்து தன்னையே வறுத்துக் கொள்ளக் கூடிய ஒரு காட்சி தெரிகின்றது.

இது ஒரு மனக்கூறான வெளிப்பாடு

  1. தூண்டிற்புழுக்களாய் சில சொற்களை எரிகின்றாய் – ஆண் உடல்
  2. உயிர் மூச்சுக் காற்றை வளை முள்ளில் மாட்டுகின்றேன் – பெண் உடல்
  3. மசாலாவை கை எரிய எரிய வழித்தெடுத்தல் – எண்ணெய்யில் வறுபடத் தன்னைத் தயார் செய்துக் கொள்ளும் – ஒரு பெண் உடல்

இதில், ஒரு பெண்ணுடலும், இச்சமூகமும் இணைந்துள்ளது. ஒரு பெண் உடலை முற்றிலுமாக, கைக் கொள்ளுதல். காலங்காலமாக நடக்கின்றது. நிலமற்று கிடக்கும் ஒரு பெண் உடல், எதனைத் தன் இருப்பாகக் கைக் கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகின்றது. மிகத் தீவிரமான அகவுணர்வுக் கொண்டது தான் இக்கவிதையெனச் சொல்லலாம். உணர்வாக்கமும் கூட.

பொதுவாக,

“இங்கு அகப்பாடலின் முதல், கரு, உரி, மரபு அதாவது அகப்பாடலின் தன்னியல்பான உணர்வெழுச்சி (Spontancity) செயற்கையாக்கப்படுவதை அவதானிக்கலம்”

(கார்த்திகேசு சிவத்தம்பி – 2012 ப.19) 

இதுபோல அகண்ட ஒரு அகநிலைக்காட்சி, கவிதையில் அகண்ட பார்வை தந்துத் தன்னை நெகிழ்த்திக் கொள்கின்றது.

“ஆமென்றோ இல்லையென்றோ / சள சள வென்ற / தன் மொழியில் / நிற்காமல் ஓடிய படி நதி. 

அருவியின் பாறைகளுக்கு / ஒப்புக் கொடுத்த உடல் / “வலிக்கிறதா தங்க மயிலு” 

என்ற நதியடியின் கேள்விக்கு”

என்ன சொல்ல முடியும்?

இது மிகுந்த அகச்சார்ப்புள்ளது.

இவ்வாறு வாசித்துக் கடந்தோமென்றால், இந்த ‘நான்’ என்பது சுயமாக “தான் தோன்றி பாலையாக உருமாறும் இடம்” மிக அழகானது.

நெரித்த புருவங்களை / நீவி விட்டு / கேள்விகளைக் கழற்றிப் போட்டு / சாயத் தோள் தந்து / நெற்றி முத்தமிட்டு / நான் இருக்கிறேன் / நான் இருக்கிறேன் / எனச் சொல்ல / நீயுமில்லை… யாருமில்லை… / நானே சொல்லிக்கொள்வேன் / தேற்றியும் கொள்வேன் / என்ன, பாலையில் / பகல் நீளமானது / இரவோ, விசித்திரமான / குளிர் காய்ச்சி மரம்”

இங்கு பாலைத்திணை குறிஞ்சியும், முல்லையும் திரிதலினால் அல்ல. தானாக, தான் தோன்றி பாலையாக உருக்கொள்கின்றது.

“என்ன, பாலையில் (வெம்மை) / பகல் நீளமானது / இரவோ, விசித்திரமான (குளிர்) / குளிர் காய்ச்சி மரம்”

மிகச் சிறப்பான அடிகள் இது. தன்னை விட்டுக் கடந்த ஒரு ஆண் உடலைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த வேலைப் பார்ப்பது. வெம்மை கொண்ட பாலையில் பகல் நீளமாகி, இரவுப்பொழுது கம்மியாக்கிக் கொள்கின்றது. அதுவும் குளிருடன் அது தான் ரொம்ப முக்கியமான இடம். தமிழ் நிலம் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் வரலாறு முதலிய சூழல்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் தொல்காப்பியரின் திணைக் கோட்பாடுள்ளது.

இக்கவிதையின் இடம், அதுபோல மாறுகின்றது.

“தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு நிலம், காலம், சமூகம், வாழ்க்கை, மனித உணர்வு, (முதல், கரு, உரி) போன்றவை ஒன்றோடென்று இணைந்து கவிதையாக்கக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது. எந்த ஒரு படைப்பின் அடிப்படைக் கூறுகளும் இவையன்றி இருக்காது. அந்த வகையில் தமிழ்நிலம், தமிழ் வாழ்வியல் சார்ந்த கருத்தியல்களை உள்ளடக்கிய திணை இலக்கியக் கோட்பாட்டை உருவாக்குவதற்கான தேவைகள் உள்ளன.

(க.ஜவகர் – 2010 ப.20)

என்பது நினைக்கத்தக்கதாகவுள்ளது.

ஒரு மொழியைச் செம்மையுறச் செய்தல் என்னவென்றால், மௌனத்தினை மொழிபெயர்த்தல் தான்

“தலையினை இடது புறம் / சாய்த்து நீ ஆற்றிய / உரைகளை நானே கேட்டிருக்கேன் / மேலும் உனக்கு / எழுதவும் படிக்கவும் / தெரியும் / மௌனம் ஒரு செம்மொழி”

மௌனத்தை மொழிபெயர்க்க

மனநிலை சரியில்லாதவர்களாலே ஆகும்”

சில நேரங்களில் கவிதை அமைதியாகிவிடும். தன் ரகசிய மொழியினை மறைத்து விடும்.

“உண்மையில் கவிதைகள் எப்போதும் கவிதைகளாக மட்டுமே இருந்து விடுவதில்லை. கவிதைகள் பெண்களுக்கு இலட்சியம். இந்த இலட்சியங்களே அவர்களின் வாழ்தலுக்கான மிக எளியதொரு தீர்மானம்”

(ஆஃப்கான் பெண்களின் வாய் மொழிப்பாடல்களும், கவிதைகளும் – மொழியாக்கம் ச.விசயலட்சுமி – 2022 ப.6 )

அதே மௌனம் தான். மீச்சிறு, மீப்பெருவாகவும் மாறுகின்றது.

மௌனம் விலகல், வலி, புறக்கணிப்பு, பதில் வெற்றிடம், செவ்வியல், நிரப்பிக்கொள்ள வசதியான பீங்கான் ஜாடியாக மாறி, அதன் பின்பு,

“மௌனம் மொழியுறா மொழி” என வலுப்படுத்தும் இடம் அபரிதமானது.

இதையெல்லாம் கடப்பதற்கான வழியாக,

“எப்படி தன்னையறியாது / நிகழ்ந்ததோ / அப்படியே தன்னையறியாது

நிகழ்ந்ததும் / போகக் கடவது” 

எனும் சமாதானமாகுதலை மிகத் துல்லியமாகக் கொள்ளலாம். இதனை,கால ஒட்டத்தில்  ஒருவர் வளர்ந்து வருகையில் அவரது தனிப்பட்ட மொழியும் மாறமுடியும். மாற வேண்டும் எனப் பார்க்கலாம்.

கவிதை, எப்போதும் நாம் அறிந்த உலகை அறியாத உலகமாக்குகிறது. கூடவே, அறியாத உலகை நெருக்கமான அனுபவமாகவும் மாற்றுகிறது. கண் வழியே பதிவாகும் அனுபவங்ளை, சொற்களைக் கொண்டு சிதறடிக்கிறது.

மொழியைத் தன்வசமாக்குவதும், மொழிவழியாக அனுபவங்களைப் புத்துரவாக்கம் செய்வதும். கற்பனை நிஜம் என்ற பிரிவின் கோட்டை அழிப்பதுமே கவிஞனின் முன்னுள்ள சவால்கள்.

நவீனத் தழிழ்க் கவிதை அந்தச் சவாலைத் திறமையாக முன்னெடுக்கிறது. சென்ற தலைமுறைக் கவிஞர்கள் தொடாத, அறியாத விஷயங்களை இந்தத் தலைமுறை தன்னுடைய கவிதைகளில் பாடுகிறது. குறிப்பாக, தமிழ் மொழியின் புதுப் பாய்ச்சலைக் கவிதைகளில் அதிகம் காண முடிகிறது.

(எஸ்.ராமகிருஷ்ணன் – 2019 ப.19)

இதைக் கருத்தில் கொள்வது போல, ஒரு கவிதையில் ‘நம்புவதைக் காணுதல்’ என சொல்லும் இடம் அழகு.

“கானலின் கனவு”

“எழுதுவதெல்லாம் / உனக்கான ஒன்றல்ல / எழுதாத சொற்களில் / தான் / உன் என் களி கத களி”

இங்கேயும் ஒரு மௌனம் களி கொள்கின்றது. இதற்கான கருதுகோள் உண்மையா? பொய்யா? எனத் தெரியாது. ஆனால், இரு பிம்பங்கள் உள்ளன. 

இவ்வாறான, திரண்ட உள்ளடக்கங்களைக் கொண்டு நகரும் இக்கவிதைகளில் உயிர்ப்பான பொருண்மைகளும் வசமாக்கப்படுகின்றன.

அவ்வகையில் சிற்சில திறவுச்சொற்களையும், நாட்டார் வழக்காற்றியலையும் அறிய முடிகின்றது.

ஞானம் ஒரு டார்ச்லைட் / தான் தோன்றி பாலை / வடக்கி / தில்லையம்பலப் பேய் / செம்மைக் குருவி / முங்கு நீச்சல் / மஞ்சணத்தி / என் மணலேறி நான் / நெகிழியில்லா மஞ்சரி / பந்துகளின் தழல் / உழப்பல் போன்ற திறவுச்சொற்களையும்.

இரங்குமோர் ஊர்ச் சிறு தெய்வம் போல / உச்சிக்கு அநாயசமாய் நீந்துகிறாள் பேச்சி / காக்காய்களுக்கே அறுத்தெறிந்து இருக்கலாம் / இவர்களின் அம்மாத்தாக்களும் அப்பத்தாக்களும் / இலை உதிர்த்த வேம்பு / எரி கொற்றவைக்கு மலை தான் காலம் இப்போது / வேரிலிருந்து அள்ளி உண்கிறாள் நீலி போன்ற நாட்டார் வழக்காற்றியல் கூறுகளையும் உட்கொள்ளலாம்.

இவ்வாறாக இக்கவிதைகள் மொழியில் ஒரு செய்தியை,

அறிவிக்கும் படியும்
பங்கேற்கும் படியும்
இணைக்கும் படியுமாக

அமைவதற்கு, கவிஞர் தேவசீமா எவ்வித சமரசத்துக்கும் இடம் தரவில்லை. 

அதனாலயே,

தவளைக்கல்லாக
நீயே எறியப்பட்டாலும்
நீந்தா திருக்கட்டும்
மனக்குளம்”

என அவரால் சொல்ல முடிந்தது.

சான்றுகள் :

  1. இளம்பூரணர் உரை – தொல்பொருளியல் – நூ -219
  2. எஸ்.ராமகிருஷ்ணன் – 2019 – கவிதையின் கையசைப்பு – தேசாந்திரி பதிப்பகம் – சென்னை
  3. க.ஜவகர் – 2010 – திணைக்கோட்பாடும், கவிதையியலும் – காவ்யா வெளியீடு – சென்னை
  4. கார்த்திகேசு சிவத்தம்பி – 2012 – தொல்காப்பியமும் கவிதையும் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – சென்னை
  5. ச. விசயலட்சுமி – 2022 – லண்டாய் ஆஃப் கான் பெண்களின் பாடல்களும் கவிதைகளும் – எதிர் வெளியீடு – பொள்ளாச்சி
  6. சாரு நிவேதிதா – 2018 – மெதூஸாவின் மதுக்கோப்பை – எழுத்து பதிப்பகம் – சென்னை

***

ம. கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here