அரசன்
மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் ஆடு மாடுகள் ஒதுங்குமாறு, பெரிய ஹார்ன் சத்தத்தோடு மாரியம்மன் கோவில் வாசலில் வந்து நின்றது, ஊர் வழியாக வங்காரம் வரை செல்லும் அரசுப்பேருந்து.
செந்துறை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பும் நான்கைந்து பிள்ளைகளோடு சேர்ந்து அவனும் இறங்கினான். தேகம் மெலிந்து, முகம் மறைக்கும் தாடியோடு, ஆள் பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தான். மேல்சட்டை சாயம் மங்கி, கசங்கியிருந்தது. போட்டிருந்த பேண்ட் உப்பு பூத்திருந்தது. பேருந்தை விட்டு இறங்கி சற்று நேரம் அப்படியே நின்றவன், சிறிது நேரம் கழித்து அருகிலிருக்கும் கைப்பம்பை நோக்கி மெல்ல தள்ளாடியபடி நடந்தான்.
“யோவ், அங்க பாருய்யா, அவனப் பாத்தா நம்ம சிங்காரம் மொவன் செல்வம் மாதிரி தெரியல?” என்று கோவில் படியில் அமர்ந்து கதைப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெரியவர் சொல்ல,
“இருக்காதுய்யா, அவன் எப்படியிருப்பான், கொம்பு சீவுன மயிலங்காள மாரி திம்முன்னு அம்சமா இருப்பான், இவன் என்னடான்னா கண்ணுக்குள்ள உசுர தேக்கி வச்சிக்கிட்டு நிக்குறான், இவனப் போயி செல்வமுன்னு சொல்ற” என்று அடுத்தவர் மறுத்துப் பேச,
“எனக்கென்னமோ மொக சாடைய பாத்தா அவன மாதிரித்தான் தெரியுது” என்று கையிலிருந்த சுருட்டைப் படிக்கல்லில் நசுக்கிக்கொண்டே சொன்னார்.
“பெத்த அப்பன், சாவுக்குக் கூட இந்தப்பக்கம் எட்டிப் பாக்காம கெடந்த பய, இப்பவா வந்திருக்க போறான்”
“அந்த நேரத்துலதான் மெட்ராஸ் செயிலுல இருந்ததா சொன்னாங்களேய்யா”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, செயில்ல இருந்து வெளிய வந்து ரெண்டு வருசமாச்சாம், திருப்பூருல ஏதோ கம்பெனில வேல பாத்துக்கிட்டு இருந்தானாம்”
“நம்ம ஊரப் பத்திதான் ஒனக்குத் தெரியுமே, ஒண்ணுன்னா ஒம்போதுன்னு அள்ளிவுடுற ஊரு, அவன் என்ன நெலையில எப்படி இருந்தானோ?”
“இவ்வளவு வயசாயும் இன்னும் வெளுத்தது எல்லாம் பாலுன்னு நம்பிக்கிட்டு நோனாயம் பேசிக்கிட்டு இருக்குற. செத்த அசந்தா ஆளையே அடிச்சி திங்குற ஊருல எப்படித்தான் இத்தன வருசம் பொழப்ப ஓட்டினியோ?, சரி சரி … வூட்டுக்கு கெளம்புய்யா, எனக்கு வவுத்த கலக்குற மாதிரி இருக்கு, ஏரிக்கு போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து கோவணத்தை சரி செய்து, வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு வடக்கு பக்கம் நோக்கி நடந்தார் அந்த பெரியவர்.
அந்த வழியாக கடைக்குப்போன சின்னப்பையன் ஒருவனை அழைத்து பம்பில் தண்ணிர் அடித்துவிடச் சொல்லி, முகத்தைக் கழுவி, தண்ணீர் குடித்துவிட்டு வந்து கோவிலின் முன் வரிசையாக அடுக்கியிருக்கும் செம்பராங்கல்லில் அமர்ந்தான் செல்வம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடித்த பிறந்த மண்ணின் நீர் வயிரை குளிர்வித்தாலும், கூட்டைத் தொலைத்த பறவை போல் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது.
முதுகு உடைந்த ஒட்டகம் போல் சாய்ந்து நிற்கும் பெருமாள் கோவில் மந்தாரை மரம் பூத்துக் குலுங்குகிறது, இரண்டு ஆள் சேர்ந்து அணைத்தாலும், அணைக்க முடியாத மாரியம்மன் கோவில் வேம்பின் இலை கொட்டி மீண்டும் தளிர்விட்டுத் துளிர்த்திருக்கிறது. குழையக் குழையப் பூசிய எண்ணெயினால் வேம்பின் தெற்கு பக்கம் இருக்கும் காத்தவராயன் தன் துணையோடு பிசுபிசுத்து நிற்கிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த எல்லாமும் அப்படியே இருக்க, தான் மட்டும் புரையோடிய கள்ளி மரம் போல் தனித்து நிற்கிறோம் என்கிற அழுத்தம் உயிரைப் பிழியச் செய்தது. எல்லாமே நேற்று நடந்தது போலிருக்கிறது, கொஞ்சங்கூட அதன் தடம் மறையவே இல்லை, ஆனால் திருப்பிப் பிடிக்க முடியாத அளவிற்கு தனித்து விட்டிருக்கிறது காலமும், சூழலும். தூரத்து மின்மினியை நம்பி, வேரில் வட்டமடித்த வண்ணத்துப் பூச்சியைத் தொலைத்து விட்டதை எண்ணி, இனி வருத்தப்படுவதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என்றாலும் அந்த நினைவுச்சுழலில் முங்கிக் கிடக்கையில் தான் போன உயிர் வந்தது போல் இருக்கிறது.
நாற்பது வருடங்களுக்கு முன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிங்காரம் என்று கேட்டால் எல்லா கடை முதலாளிகளுக்கும் தெரியும் அவனை, அப்படியொரு குடிகாரன். காலையில் வரும் காய்கறி மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, மதியத்துக்கு மேல் குடிக்க ஆரம்பித்தால் நள்ளிரவு வரை நீளும் குடி. காட்டுத்தனமான குணம் கொண்டவன், வேலையிலும் அதே உக்கிரமான உழைப்பாளி. ஊரிலிருந்து திருச்சி வந்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தான் ஊருக்குச் சென்று வருவது வழக்கம். செல்வம் ஏழாவது படித்துக் கொண்டிருக்கையில், அவனது அம்மா, காமாலை நோய் முற்றி குணப்படுத்த முடியாமல் இறந்து போக, ஜெயங்கொண்டம் அருகிலிருக்கும் மகிமைபுரம் கிறித்துவ பள்ளியில் செல்வத்தை சேர்த்துவிட்டு வந்தான் சிங்காரம். தாய் அல்லது தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்குகிறது அந்த கிறித்துவ நிர்வாகம். நல்லமுறையில் தேறியவர்களுக்கு தங்களது இணைப்பிலிருக்கும் கல்லூரிகளுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பியும் வைக்கின்றனர். ஆகையால் படிப்புக்காக பணத்தேவை இருப்பதில்லை. அதனால் சிங்காரம் எப்போதாவது தோன்றினால் செல்வத்தின் பெயருக்கு பணம் அனுப்புவதோடு சரி, நேரில் சென்று பார்த்துவிட்டு வருவதெல்லாம் கிடையாது. நாளடைவில் அதுவும் நின்று போனது. கண்டிப்பான பள்ளி என்பதினால் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் கண்டிப்புக்கு பயந்து இரவோடு இரவாக பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டான் செல்வம். சிங்காரமும் அதே ஊரில் கணவனை இழந்த ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு செல்வத்தை கை கழுவிவிட்டான். அப்பன் மகன் என்கிற உறவில் பெரிய பிடிப்பில்லாமல் இருவரும் நேரில் கண்டால்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள்.
ஊரிலேயே தங்கிய செல்வம், கொஞ்ச நாள் கூலி வேலைகளுக்குச் சென்று வந்தான். கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்ததும் யாரையோ பிடித்து அரியலூர் – திட்டக்குடி செல்லும் தனியார் பேருந்தில் உதவியாளனாக சில வருடங்கள் வேலை பார்த்து அதே பேருந்தில் நடத்துனராகவும் உயர்ந்தான். பிசிறு தட்டாத குரலும், ஓடியாடிச் செய்யும் வேலையும் தான் இந்த நிலைக்கு அவனை உயர்த்தியது. இன்னும் கொஞ்சம் படித்திருந்தால் லைசென்ஸ் போட்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று பிற்பாடுதான் அவனுக்குப் புத்தியில் உரைத்தது.
பேருந்தே கதியென்று கிடந்தவன், ஒருநாள் முதலாளியோடு ஏற்பட்ட சிறிய மன வருத்தத்தில் வேலையை உதறிவிட்டு, ஊருக்கே மீண்டும் திரும்பி வந்தான். சில மாதங்களிலே கையிருப்பும் கரைந்துவிட, மீண்டும் தெரிந்தவர்களைப் பிடித்து வேலை தேடினான். அப்போது தான் முன்பு வேலை பார்த்த பேருந்தின் ஓட்டுனர் முத்துசாமி, செந்துறை – பெண்ணாடம் செல்லும் மினி பேருந்தில் வேலை பார்ப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தான். முத்துசாமியும் முதலாளியிடம் சொல்லி இவனைச் சேர்த்துக் கொண்டார்.
உள்ளூர் வழியாக ஓடும் பேருந்து என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் வேலை செய்தான். மற்ற நடத்துனர்களைப் போல் பயணிகளிடம் சிடுசிடுவென விழாமல் பக்குவமாகப் பேசி எல்லோரிடமும் சீக்கிரத்தில் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். குடித்துவிட்டு வண்டியிலேறி சலம்பல் செய்பவர்களிடம் கூட நயந்து பேசி பிரச்சினையில்லாமல் செல்வதினால் ஓட்டுனர் முத்துசாமிக்கும் செல்வத்தின் மீது தனிப் பிரியம்.
செந்துறைக்கு தையல் கற்றுக்கொள்ள செல்வத்தின் பேருந்தில் தினமும் சென்று வந்து கொண்டிருந்தாள் மாலதி. அவளுக்கும் செல்வத்தின் ஊர் தான். பார்ப்பதற்கு சற்று கறுப்பாக இருந்தாலும், பார்த்தவுடனே சட்டென்று நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் அழகி. செல்வத்துக்கு ஒரு வகையில் முறைக்காரப் பெண். பேருந்தில் தினமும் சென்று வருகையில் தான் மாலதிக்கு, செல்வத்தை பிடித்துப்போனது, ஆனால் செல்வம் அவளைக் கண்டுகொள்ளாமல் மழுப்பலாகவே இருந்தான். இவளும், சாடை மாடையாக தனது விருப்பத்தை அவனிடம் உணர்த்திப் பார்த்தாலும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தான். ஒருநாள் வண்டி பஞ்சர் ஆகி நிற்கையில் டிரைவர் முத்துசாமியை தனியாக அழைத்து, துணிச்சலாக தனது மனதிலிருப்பதைக் கூறி, செல்வத்துக்கு புரிய வைக்குமாறு கூறினாள்.
இரண்டு நாட்கள் கழித்து,
“ஏண்டா செல்வம், அந்தப் புள்ள மாலதிதான் இப்படி கெடந்து தவியா தவிக்குதே, ஒத்துக்கிட்டாத்தான் என்னடா?, பாக்குறதுக்கும் மூக்கும், முழியுமா லட்சணமாத்தான்டா இருக்கு, குடும்பங்கூட நல்ல குடும்பம் மாதிரித்தான் தெரியுது” என்று முத்துசாமி செல்வத்திடம் கூற,
இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று முதலில் அதிர்ச்சி அடைந்த செல்வம், பின்பு சுதாரித்துக்கொண்டு,
“இல்லண்ணே, நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே” என்று சொன்னான்.
“ஏன்? எனக்குத் தெரியாம வேற எதுவும் தனியா ரூட்டு போவுதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் முத்துசாமி.
“ஒனக்கு தெரியாம எப்படிண்ணே… அந்தமாதிரில்லாம் எதுவுமில்லண்னே, அப்படியொரு எண்ணங்கூட இதுவரைக்கும் எம்மனசுல வந்தது இல்ல”
“இப்படி சொல்றவந்தாண்டா நாளைக்கே மாலையும் கழுத்துமா வந்து நிப்பான், இப்படி சொன்ன எத்தன பேத்த பாத்துருக்கேன் என் வயசுல”…
“அட நம்புங்கண்ணே… எனக்கு, ஒன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு, அப்படி ஏதாவது இருந்துச்சின்னா மொத ஆளா ஓங்கிட்டதான் வந்து சொல்லுவேன்” என்று சத்தியம் செய்யாத குறையாய் சொன்னான் செல்வம்.
“அதுக்கில்லடா, மாலதிய பாத்தா நல்ல புள்ள மாதிரி தான் தெரியுது, கட்டிக்கிட்டின்னா குடும்பம் குட்டின்னு நிம்மதியா வாழலாம், இல்லன்னா என்ன மாதிரி தனி மரமாத்தான் நிக்கணும். கை, காலுல தெம்பு இருக்குறப்பவே ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, கொஞ்சம் தெம்பு இத்து விழுந்தம்னா வச்சிக்க, செத்த நாய விட கேவலமா பாப்பானுங்க”…
“……………………………..”
“ஒங்கப்பன் பொழைக்கிற பொழப்ப பாத்துதான் ஒங்க ஊரே சிரிக்குதே, ஒங்கம்மா உசுரோட இருந்திருந்தா, ஓங்குடும்பத்த இப்படி அந்திலி சிந்திலி ஆவ வுட்டுருக்குமா?, நீயும் அந்த ஆளு மாதிரி கேவலப்பட்டு போயிடக்கூடதுன்னு தான் சொல்றேன்.”
“இந்த நேரத்துல அந்தாள பத்தி ஏண்ணே பேசுற, அவன்லாம் ஒரு ஆளுன்னு, அவனப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க”…
“அதுக்குத்தான் சொல்றேன், ஒழுங்கா, ஒனக்குன்னு ஒரு குடும்பத்த தேடிக்க, தேடி வரத வேணாமுன்னு எட்டி ஒதைக்காத, அப்புறம் அத நெனச்சி பின்னாடி வருத்தப்படுவ”…
“அப்படில்லாம் போயிற மாட்டேண்ணே, நமக்குன்னு ஒரு நேரம் வராமலா போயிற போவுது, அப்போ பாத்துக்கலாமண்ணே” என்று செல்வம் சொல்ல,
“உதாரணத்துக்கு வேற எங்கயும் போவ வேணாம், என்னைய எடுத்துக்க… எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியவன்… சுட்ட மண்ணு போல ஆயி போச்சி வாழ்க்க… இனிமே புடிச்சி வைக்க நெனச்சாலும் முடியாது”…
“இப்பமட்டும் ஒனக்கு என்னண்ணே கொறச்ச… போனத நெனச்சி கவலப்படாதண்ணே..”
“அதுக்குத்தான் இம்புட்டு தூரம் எடுத்து சொல்றது… சொல்றத சொல்லிபுட்டேன், அப்புறம் ஒன்னோட விருப்பம், கையுல நாலு காசு இருக்குறவரைக்கும் தான், நம்ம பின்னாடி நாயா அலைவானுனோ, பைசா தீர்ந்துடிச்சின்னு தெரிஞ்சிதுன்னா ஒரு பய தல நிமுந்து பாக்க மாட்டான், எல்லாத்தையும் மனசுல நிறுத்தி ஒரு நல்ல முடிவா எடு” என்று சொன்ன முத்துசாமி சிகரெட் ஒன்றை பற்றவைத்து புகையை உள்ளுக்கு இழுத்து வெளியே விட்டபடி கண்ணை மூட பூங்கோதையின் நினைவு நிழலாடியது.
முத்துசாமிக்கு சொந்த ஊர் பெண்ணாடம். சிறு வயதிலே தந்தை இறந்து போக, தாயின் கவனிப்பில் வளர்ந்து வந்தான். திறமையான படிப்பாளி. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அரியலூர் அரசினர் கல்லூரியில் சேர்ந்தான். முதல் இரண்டு வருடங்களும் தினமும் ரயிலில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தவன், தினமும் சென்று வர கடினமாக இருப்பதாகக் கூறி மூன்றாமாண்டில் அரியலூரிலையே, நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கினான், அன்று அவன் வாழ்வில் தொடங்கிய புயல் பதிமூன்று வருடம் கழித்து அவனுடைய தாயின் இறப்பில் வந்து நிலை கொண்டது. வாரம் ஒரு தடவை ஊருக்கு வந்து தாயைப் பார்த்துவிட்டு, அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று கூறி பணத்தினை வாங்கிக் கொண்டு சென்று நண்பர்களோடு இணைந்து குடித்தும், சீட்டாடியும் அழித்தான். பின்பு மாதத்திற்கு ஒரு தடவை தான் வீட்டிற்கு போய் வந்தான். முத்துசாமியின் அம்மாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி அழுதுப் புலம்பி பார்த்தும் கேட்பதாக இல்லை. அவளும் ஒரு நிலையில் ஓய்ந்து போனாள்.
“அந்தாளு போனதுக்கப்புறம், ஒத்தப் புள்ளையின்னு எம்புட்டு பாடுபட்டு வளத்துருப்பேன், எவ்வளவு கனவு கண்டுருப்பேன், எல்லாத்துலையும் மண்ணள்ளி போட்டுட்டு இப்படி காலியா சுத்துறானே, அவன வேலைக்கா போவ சொல்லுறேன், பொங்கி போடுறத தின்னுக்கிட்டு வூட்டுல கெடந்தா போதுமுன்னு தானே சொல்றேன், அதுக்கு வலிக்குதுங்குறான்.. எத சொன்னாலும் எதிரிய பாக்குற மாதிரி பாக்குறான்… இவனுக்கு சின்னவன்லாம் சிமெண்ட் கம்பேனில சேந்து நாலு ரூவா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டுனானுவோ, அவனுவோல பாத்தாவது இவனுக்கு புத்தி வரக்கூடாது… ஊருக்குள்ள நாலு பேத்துக் கூட பேசுனாலாவது நல்ல புத்தி வரும், யாரு கூடவும் அண்டாம கொள்ளாம, எல்லாம் வெளியூரு பயலுவோ தான் பூரா சகவாசம்… ஒருத்தன் கூட நல்லப் பய மாதிரி தெரியல, பூரா கந்த சாக்கு மாதிரித்தான் இருக்கானுவோ… அவனுவோல நம்பிக்கிட்டு இவனும் திரியா திரியுறான், ஓஞ்சி ஆஞ்சி ஒரு நாளைக்கு வரும்போது தான் தெரியும், பெத்தவளோட அரும… அத பாக்க நான் இருக்கேனோ இல்லையோ?…. வேண்டாத சாமியில்ல, போவாத கோயிலுமில்ல…. எந்த சாமியும் கண்ணெடுத்து பாத்து என் கண்ணீர தொடைக்க ஒரு வழிய காட்ட மாட்டேங்குது… நான் வாங்கி வந்த வரம் அப்பிடி போல” என்று வேலைக்குப் போன இடத்தில் கூட்டுக்காரியிடம் பொறுமிவிட்டு வீட்டுக்கு நடந்தாள் முத்துசாமியின் தாய்.
முத்துசாமியின் நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஆடியாடி ஓய்ந்து வீட்டில் பார்த்து வைத்தவர்களை திருமணம் செய்து கொண்டு அடங்கி விட, முத்துசாமியின் கால்கள் ஓய்ந்ததாக இல்லை. அப்போது தான் பூங்கோதையோடு பழக்கம் உண்டானது. அவளுக்கு சொந்த ஊர் ஓட்டக்கோவில். திருமணம் செய்த நான்கு மாதத்தில் பூங்கோதையை அரியலூரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துவிட்டு அவளின் கணவன் மீண்டும் வெளிநாடு சென்று விட, அதே தெருவில் தங்கியிருந்த முத்துசாமிக்கும் இவளுக்கும் பழக்கமானது.
பகலில் எங்கு அலைந்து திரிந்தாலும், இரவில் பூங்கோதையின் மடியில் முத்துசாமியின் உறக்கம் என்றானது அந்தப் பழக்கம். அவ்வப்போது தேவைப்படும் பணத் தேவைக்கும், எப்போதும் தேடும் உடல் தேவைக்கும் பூங்கோதை தயாராக இருந்தாள். மூன்று வருடம் கழித்து விடுமுறையில் வந்த கணவனுக்கு, இவர்களின் பழக்கம் தெரிந்து பூங்கோதையிடம் மென்மையாக எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றவனுக்கு தோல்வியே மிஞ்சியது. முத்துசாமி மீது அடக்க முடியாத கோபம் பொங்கினாலும் அவனோடு சண்டை போட்டு ஜெயிக்க தெம்பில்லாத காரணத்தாலும், நான்கு பேருக்கு தெரிந்து அசிங்கப் பட நேரிடும் என்கிற காரணத்தாலும் முத்துசாமியை சந்தித்து,
“இத்தன வருசம் வெளிநாட்டுல கெடந்து கஷ்டப்பட்டது எல்லாம் நானும் எம் பொண்டாட்டியும் சந்தோசமா இருக்கணும்ன்னு தான், இப்ப அதுக்கு தடையா நீ வந்து நிக்குற… ஓங்கூட மல்லுக்கட்ட எனக்கு விருப்பமில்ல, தெம்புமில்ல… இப்படியே வெலகிப் போயிட்டியன்னா ஒனக்கு புண்ணியமா போவும்… அவள எப்படியாவது நான் சரிக்கட்டி வாழ்ந்துடுறேன்”….
“………………………………”
“பணங்காசு எதுன்னாலும் கேளு… கொடுத்துடுறேன்.. மறுபடியும் என்னோட வாழ்க்கையில குறுக்க வந்துடாத.. வேற எவனா இருந்தாலும் வெட்டுறேன் குத்துறேன்னு துள்ளுவான்… இல்ல ஆளுங்கள செட் பண்ணி போட்டுத்தள்ள பாப்பான், எனக்கு அந்த அளவுக்கு பண்ணல்லாம் மனசுல தெம்பில்ல… நரவைய மிதிச்சுட்டதா நெனச்சி கால கழுவிக்கிறேன்.. என்ன நிம்மதியா குடும்பத்தோட வாழ விடு … மீறி தொடர்ந்தியன்னா நான் என்னைய மாச்சுக்குவேன், அந்தப் பாவம் ஒன்ன எத்தன ஜென்மம் எடுத்தாலும் சும்மா வுடாது” என்று கண்ணீர் ததும்ப சொன்னவன் முத்துசாமியின் முகத்தைக் கூட பார்க்காமல் கிளம்பினான்.
இதுநாள் வரை தினவெடுத்து திரிந்த முத்துசாமி, தாயின் கண்ணீருக்கு கூட கரையாதவன், ஒரு ஆணின் கண்ணீரில் உருகி உறைந்து போனான். குற்ற உணர்வில் உடலெல்லாம் கூசியது. தன்னுடைய உடம்பை தானே வெட்டி கூறு போட்டுக்கொள்ள வேண்டுமென்று மனது துடியாய் துடித்தது. ஆசையாக அள்ளி அணைத்த பூங்கோதையின் உடம்பை நினைத்தால் நெருப்புக் குமிழில் வீழ்ந்துவிட்டது போன்று உடம்பு கொதித்து அடங்குகிறது. மன்னிக்க முடியாத குற்றத்தை அவனுக்கு செய்திருந்தாலும், அவனின் சாந்தமான வேண்டுதலும், என்னை மாய்த்துக் கொள்வேன் என்கிற சொல்லும் சூறாவளியாய் போன்று சுழன்றடித்து முத்துசாமியை பந்தாடியது. புறவெளி எங்கும் அவனின் கண்ணீரால் நிரம்பி அதில் தான் மூழ்கி மூழ்கி மூர்ச்சையாவது போல உணர்ந்தான். ஒரு பெண்ணின் கண்ணீரை விட வயது வந்த ஆணின் கண்ணீர் கனத்தை அவனால் சுமக்கமுடியவில்லை.
கண்கள் சொக்கும் வரை குடித்தும் பொட்டு தூக்கம் வராமல் விழித்தே கிடந்தான் முத்துசாமி. யாருமற்ற மணற்வெளியில் தான் மட்டும் தனித்திருப்பதாக தவியாய் தவித்தான். பசி உணர்வென்பதே இல்லாமல் பூங்கோதையின் கணவனின் கண்ணீர் சொற்களில் தான் கரைந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கிடந்தான். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு திசையிலிருந்து வரும் அந்த சொற்களினால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டான்.
அரியலூரிலிருந்து வெளியேறி ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு கோயிலாக நுழைந்து வெளியேறியும் பூங்கோதையின் நினைவும், அவள் கணவனின் கண்ணீரும் அவனைப் பருந்துபோல் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. எங்கு இருக்கிறோம், என்ன உண்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்கிற சிந்தனையின்றி நாட்களை செலுத்திக் கொண்டிருந்த வேளையில், தலை விரி கோலத்துடன் அழுது அழுது வீங்கிய முகத்துடன் தனது தாயின் உருவம் கனவில் தோன்றி மறைய, ஊருக்கு புறப்பட்டான். ஊரைச் சேர்ந்ததும் தான் தெரிந்தது, அவள் இறந்து இருபது நாள் ஆகிவிட்டது என்று. ஏற்கனவே இருக்கும் பாரத்தோடு தாயின் சாவு பாரமும் ஏறிக்கொள்ள செய்வதறியாமல் பித்துப் பிடித்துக் கிடந்தான். பின்னர் ஒரு வழியாக சித்தம் தெளிந்து லாரியில் கிளினராக ஓடி, பின் டிரைவராகி அதற்கப்புறம் தான் பேருந்துக்கு வந்தது எல்லாம் நிகழ்ந்தது.
===========
இரண்டு நாள் கழித்து மாலதியைப் பார்க்கையில், “பயக்கிட்ட பேசியிருக்கேம்மா, எங்கிட்டையும் புடி கொடுக்காமத்தான் பேசுனான், கொஞ்சம் பதமா எடுத்துச் சொல்லியிருக்கேன், பாப்போம் என்ன சொல்றான்னு, இல்லைன்னா திரும்பவும் ஒருதடவ பேசிப் பாக்குறேன்” என்று தெம்பூட்டினார் முத்துசாமி.
“இப்பவே நாலஞ்சி பேரு பொண்ணு கேட்டு வந்துட்டாங்கண்ணே, எதெதையோ காரணம் சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரிய வைங்கண்ணே” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
இது முடிந்த ஒருவாரம் கழித்து ஒருநாள், சொல்லாமல் கொள்ளாமல் செல்வம் வேலைக்கு வராமல் போக, ‘சொல்லாம இப்படி லீவ் போட மாட்டானே, ஒடம்புக்கு ஏதும் முடியாம போயிருக்கும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு, இன்னொரு பையனை வைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு ரூட்டுக்கு கிளம்பினார் முத்துசாமி.
பேருந்து, நத்தகுழியை நெருங்கியதும், ஒரு கும்பல் முத்துசாமியை கீழ இறக்கி அடித்து வெளுக்க, இன்னொரு கும்பல் பேருந்தின் கண்ணாடிகளை நொறுக்கினர்.
“எங்கடா அனுப்பி வைச்ச, எங்கடா அனுப்பி வைச்ச?”, என்று கேட்டு ஆளுக்கு ஒரு அடியாய் அடிக்க முத்துசாமியின் சட்டையெல்லாம் கிழிந்து வாயிலிருந்து இரத்தம் சொட்டியது.
கொஞ்ச நேரம் கழித்து தான், நத்தகுழி வேலாயுதம் மனைவி பங்கஜத்தை இழுத்துக்கொண்டு செல்வம் ஓடிப்போன செய்தி தெரிய வந்தது முத்துசாமிக்கு.
“இப்படி பண்ணுவான்னு கொஞ்சம் கூட நெனக்கலங்க, சாமி சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது” என்று முத்துசாமி எடுத்து சொல்லியும், ஆத்திரத்தில் இருந்த எவரும் கேட்பதாக இல்லை.
“ஒனக்கு தெரியாம எப்படிடா இதெல்லாம் நடந்துருக்கும், நீ தான் அவங்களை அனுப்பி வைச்சிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருக்க, ஒழுங்கா சொல்ல போறியா இல்ல இங்கயே ஒன்ன வெட்டி பொதைக்கட்டுமா?” என்று பங்கஜத்தின் கணவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.
“நீங்க வெட்டுனாலும் சரி, குத்துனாலும் சரி, எனக்கு எதுவும் தெரியாது” என்று வாயிலிருந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே சொன்னான் முத்துசாமி.
“நீ அனுப்பி வைச்ச அந்த ரெண்டு நாயுங்களும் இங்க வர வரைக்கும், பஸ்ஸ எடுக்க விட மாட்டோம், அதுவரைக்கும் பஸ் இங்க தான் நிக்கும்” என்று கனத்த குரலில் சொன்னான் கூட்டத்தில் இருந்த பெருத்த உடம்புக்காரன்.
செய்தி தெரிந்து பேருந்து முதலாளி ரத்தினம் வந்து, உடைப்பட்டும், அடிப்பட்டும் நிற்கும் பேருந்தையும், டிரைவரையும் பார்த்த ரத்தினம்,
“ஓடிப்போனவன வுட்டுட்டு இவன ஏண்டா அடிச்சிங்க, என் பஸ்ஸ வேற அடிச்சி நொறுக்கியிருக்கீங்க, என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க” என்று சத்தமாய் கேட்க,
“சும்மா சத்தம் போடுற வேல வச்சிக்காதீங்க, ஒங்க பஸ்சுல ஓடுன கண்டக்டர் தான் எங்க வூட்டு பொம்பளைய இழுத்துக்கிட்டு போயிருக்கான், அதான் கேட்டுக்கிட்டு இருக்கோம்” என்று வேலாயுதம் சொல்ல,
“இதுதான் நீங்க கேக்குற லட்சனமாடா, எவன் இழுத்துக்கிட்டு ஓடுனானோ அவன கூட்டியாந்து வெட்டுங்க, கொளுத்துங்க எவன் கேட்டா ஒங்கள…. அதுக்காக எம் பஸ்ஸ இப்படித்தான் அடிச்சி நொறுக்குவிங்களா?”
“இழுத்துக்கிட்டு போனது ஒங்க கண்டக்டர் தானே, சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று கூட்டத்தில் நின்ற ஒருத்தன் சொல்ல,
“எவன்டா அது பேசுறது, ஓடுன நாயையும், இழுத்துக்கிட்டு போனவனையும் ஒன்னும் பண்ண முடியல, ஒங்களுக்கு என்னோட பஸ் தான் கெடச்சுதா புடிச்சிக்கிட்டு ஆட்ட, ஒரே ஒரு தகவல் சொல்லிவிட்டா போதும் என்னோட மொத்த ஊரும் இங்க வந்து நிக்கும், இருக்குற எடம் தெரியாம கொளுத்திபுட்டு போயிருவோம், சொம்ப பயன்னு நெனச்சிகிட்டு கைய வச்சிங்களா,” என்று காட்டுக் கத்தலாக இரத்தினம் சலம்ப,
‘தப்ப நம்ம மேல வச்சிக்கிட்டு அந்தாளு வண்டி மேல கை வச்சது தப்புதான்னு’ மனதில் நினைத்துக்கொண்டு ஒருத்தனும் மறு வார்த்தை பேசாமல் கலைந்து போனார்கள்.
செல்வத்தை விட பங்கஜத்திற்கு ஐந்து வயது கூடுதல். நான்கு வயதில் பெண் பிள்ளையும், ஏழு வயதில் ஆண் பிள்ளை ஒன்றும் இருக்க இவனோடு ஓடிப் போயிருக்கிறாள். இருவருக்கும் எப்படி பழக்கமானது என்று யாருக்கும் தெரியவில்லை.
சிலர் திருப்பூரிலும், சிலர் சென்னையிலும், இருவரும் இருப்பதாக சொன்னாலும் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. எவ்வளவோ தேடிப்பார்த்தும் சிக்கவில்லை. ‘எப்படியும் என்னைக்காவது ஒரு நாள் இந்த ஊருக்கு வந்து தானே ஆகணும், அன்னைக்கி ரெண்டு பேத்தையும் வெட்டிக் கொளுத்தல, என்னோட அப்பனுக்கு நான் பொறக்கல’ என்று அருவாளும் கையுமாக சுத்திக் கொண்டிருந்தான் வேலாயுதம்.
சில மாதங்கள் கழித்து மாலதியைப் பேருந்து நிலையத்தில் வைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேச முடியாமல் விலகிப் போன முத்துசாமியை மறித்து,
“என்னண்ணே இப்படி பண்ணிட்டான், எங்கூட வாழலைன்னாலும் பரவாயில்ல, வேற எங்கையாவது ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி குடும்பமா வாழ்ந்திருந்தா அதப் பாத்தாவது சந்தோசப்பட்டிருப்பேன், போயும் போயி இப்படி கேவலமான ஒரு காரியத்த பண்ணிட்டு போயிட்டானேங்குறதை நெனச்சி தான் மனசு ஆற மாட்டேங்குதுண்ணே” என்று பொறுமியவளை ஆறுதல் படுத்தத் தெரியாமல்,
“விடும்மா அந்த நாயி இப்படி பண்ணும்னு நான் நெனச்சிக்கூட பாக்கலம்மா, அப்பன் புத்தி அப்படியே அவனுக்கும் இருந்திருக்கு, அத மாத்த யாரால முடியும்”…
“அந்த சேதி கேட்டப்ப எப்படி தெரியுமா துடிச்சிப் போனேன், இப்ப நெனச்சாலும் தூக்கம் வரமாட்டேங்குதுண்ணா”
“அந்த நாயிக்கு ஓங்கூட வாழ கொடுத்து வைக்கல, தான் தலையில தானே மண்ணள்ளி கொட்டிக்கிச்சி, ஒம்மனசுக்கு நல்ல எடமா அமையும், நல்ல புடியா குடும்பத்த பாத்துக்கம்மா” என்று சொன்ன முத்துசாமி நிற்காமல் நடையை கட்டினான்.
முத்துசாமி போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாலதி வெறுமையோடு தையல் கடையை நோக்கி நடந்தாள்.
எட்டுமாதம் கழித்து ஒரு நாள், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன் கைது என்று செல்வத்தின் போட்டோவோடு சேர்த்து கழுத்தறுப்பட்ட நிலையில் பங்கஜத்தின் போட்டோவையும் பார்த்துவிட்டு இத்தனை நாளா கோயம்புத்தூர்ல தான் இருந்துருக்காங்க என்று தெரிந்து கொண்டனர் ஊர் மக்கள்.
பன்னிரண்டு வருடம் கழித்து இப்போது தான் ஊருக்கு வந்திருக்கான் செல்வம். கோயில் முன் குந்தியிருந்தவனை பழகியவர்களும், பார்த்தவர்களும் கண்டு கொள்ளாமல் கடந்து போயினர். இதுதான் நடக்கும் என்று தெரிந்தே தான் வந்திருந்தான். வெறிப் பிடித்தவன் போல எழுந்து தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான். தன்னை விட சிதிலமடைந்து கிடக்கும் வீட்டைப் பார்த்தவன் புன்னகைத்துக் கொண்டே திரும்பி நத்தகுழியை நோக்கி நடந்தான். எப்போதோ இவன் நட்டுவைத்திருந்த வாசப்படலின் பூவரச மரத்தில் மஞ்சள் மலர்களாக மலர்ந்திருந்தன.
***
அரசன் – இயற்பெயர் ராஜா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணரின் தனிச்செயலராக பணி புரிந்து வருகிறார். ‘இண்ட முள்ளு’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இணைய இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : rajaunk@gmail.com



ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு அரசனின் சிறுகதயை வாசிக்கும் வாய்ப்பு.
சிறப்பான கதை. வாழ்த்துகள் அரசன்.