Sunday, April 28, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்தனிமையே என் துணைவன்

தனிமையே என் துணைவன்

ஜா.ராஜகோபாலன்

றுப்பு வெள்ளையாக மட்டுமே வரும் செய்தித்தாள்களைக் கூட அத்தனை காதலாகப் பார்க்கும் “ஆறாப்பு” படிக்கும் கிராமத்துச் சிறுவன். மாவட்டத் தலைநகருக்குப் போக நேர்ந்தால் அங்கு பேருந்து நிலையக் கடைகளில் வண்ண வண்ணமாகத் தொங்கும் பல இதழ்களையும் பார்க்கப் பார்க்க அலுக்காதவன். ஊரில் யாரேனும் குமுதம், விகடன், மாலைமதி, கல்கி வாங்கிய தகவல் தெரிந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் வாசலில் நின்றாவது வாசித்து வருபவன். அதில் வரும் கதைகள் அவனுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் வாசிப்பில் சுவாரசியம் கொண்டிருப்பவன். அப்போது வாசித்த குமுதத்தின் ஒருபக்க கதைகளில் சில இப்போதும் அவன் நினைவில் உண்டு. அப்படியான நாட்களில் மேலத்தெரு நாராயணன் வீட்டில் அவன் அப்பா (தலைமைக் காவலராக தென்காசியில் பணியாற்றியவர்) திருநெல்வேலி ‘டூட்டிக்கு போய் வந்தபோது படம் போட்ட கதைப் புத்தகம் ஒன்றை வாங்கி வந்திருப்பதாக அவனுக்கு பள்ளியில் சொல்லப்பட்டது. பள்ளி விட்டதும் வீட்டிற்குள் கூட நுழையாமல் வாசலில் இருந்தபடியே பைக்கட்டை உள்ளே வைத்து விட்டு நாராயணன் வீட்டுக்கு ஓடினான். பத்து நிமிட கெஞ்சல், நாராயணனின் அக்கா பரிந்துரையின் பேரில் அப்புத்தகம் அவனுக்குத் தரப்பட்டது. சாட்டையடி வீரர் ஃபிலிப் (அவருடன் இருவர் உண்டு) தோன்றி வன்மையாக நீதியை நிலைநாட்டும் வன்மேற்கின் சித்திரக் கதை. அதுவரை அவனறியா உலகம். அரைமணி நேரத்திற்குள் 5 முறை வாசித்து விட்டான். நாராயணன் அப்பா கேலி செய்வார் – “போதும்டே, படிச்சு, படிச்சு எழுத்து தேஞ்சிராம”. அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் என்னுடைய காமிக்ஸ் கிறுக்கு.

முதல்முறை காமிக்ஸ் படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை. அந்தச் சூழல், நில அமைப்பு, உரையாடிக் கொள்ளும் பாணி, எல்லையற்ற வெளியில் உண்டு உறங்கும் நாடோடி வாழ்க்கை என எண்ணி எண்ணி கற்பனை அலுக்காமல் மேலும் மேலும் என விரிந்துகொண்டே போனது. கிட்டத்தட்ட 15 நாட்கள் தினமும் அதே புத்தகத்தை போய் பார்த்து வருவது வழக்கமானது. அதன்பின் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், வீரப்பிரதாபன் கதைகள் (அணில் அண்ணா), பூந்தளிர், வாண்டுமாமா என வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கற்பனையில் திளைக்க வைத்த நாட்களால் நிரம்பிய இளம் பருவம். தென்கோடி முனையில் இருக்கும் சிறு கிராமம். மதுரை தாண்டிப் போனதில்லை. ஆனால் அமெரிக்க நிலம், அவர்கள் உணவு, விழுமியங்கள், வாழ்க்கை முறைகள், வரலாறு, போர், நீதிமுறை, குடும்ப முறை, நட்பு, துரோகம், பழங்குடி மக்களுக்கும் நகர மக்களுக்குமான உரசல்கள், நிலம் என்பதன் மீதான பொருளாதாரப் பிடிமானத்துக்கு தங்களது உணர்வுரீதியிலான பிடிமானத்தைப் போராடி பலியிட்டு மறையும் பழங்குடி வரலாறை டெக்ஸ் வில்லர் கதைகள்தான் உணர்த்தின என்று உறுதியாகச் சொல்வேன். இறுதி நொடி வரை நம்பிக்கை இழக்காத போராடும் தன்மையை டெக்ஸும், இறங்கும் வரை யோசிப்பதையும், இறங்கியதும் களத்தை தீப்பற்ற வைப்பதையும் கிட் கார்சனும் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அமெரிக்க கெளபாய் வீரர்களான இவர்கள் இத்தாலிய கைவண்ணத்தில் பிறந்தவர்கள் என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை இப்போது வரை.

பிறகு வந்த வரிசைகளில் நகைச்சுவை காமிக்ஸுகள். இன்றுவரை எனது அபிமான ஜோடிகள் லக்கி லூக் – ஜாலி ஜம்பர் மற்றும் உட் சிட்டியின் டாக் புல்- கிட் ஆர்டின். அபத்தமான “விட்”, “ஜோக்” ஆகியவற்றிலிருந்து வாழ்வோடு இணைந்த நகைச்சுவை என்பதை மிகச்சிறு வயதிலேயே ருசி பார்க்க வைத்தவை இந்த காமிக்ஸுகள். கொலைகாரக் குடும்பத்தில் ஆவரெல் அம்மா செல்லமாக ஆகி அடிக்கும் லூட்டிகள் ஒரு பக்கம் என்றால் சலூனுக்குள் லக்கி நுழைந்ததுமே ஜன்னலை ஏறிட்டு நிற்கும் ஜாலி ஜம்பர் இன்னொரு புறம். அனைத்து நகைச்சுவைகளுமே காதை ஒட்டி, தொப்பியை ஓட்டை போடும் துப்பாக்கிக் குண்டுகளின் சீறல்களுக்கு நடுவே என்பதுதான் அந்த நகைச்சுவையின் தரத்தைச் சொல்வது. கார்சனை கிழவன் என டெக்ஸ் கிண்டலடித்ததும் கார்சன் மாணிக்கத்திலிருந்து பாட்ஷாவாக மாறுவது அனைத்தும் எதிரிகளின் துப்பாக்கி முனையில். அத்தனை அபத்தங்களுக்கும் ஆபத்துகளுக்கும் நடுவில் புன்னகைப்பதும், புன்னகைக்க வைப்பதுமான ஒரு மனப்பாங்கை அன்று அந்த வயதில் நான் வாசித்த எந்த பிற புத்தகங்களும் சொல்லிக் கொடுத்ததில்லை.

அமெரிக்க காமிக்ஸ் இப்படி என்றால் பிரிட்டன் முதலிய நாடுகளின் ஐரோப்பிய காமிக்ஸ்கள் வேறு வகை. கருப்பு வெள்ளை எனும் இரு நிறங்களை ஒளியும் இருளும் எனப் பார்க்கக் கற்றுத் தந்தவை ஐரோப்பிய காமிக்ஸ்கள்தான். கனவுகள்தான் கருப்பு வெள்ளையில் வரும். ஆனால் கற்பனையில் வரும் வண்ணங்கள் எண்ணில் அடங்காதவை. தாளில் உறைந்த கனவு வண்ணமயமான எவ்வளவு கற்பனைகளை அளிக்கிறது? இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் உள்ளங்கை ஒன்றை விரித்துப் பாருங்கள். மானசீகமாக உள்ளங்கையை நான்கு சம சதுரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சதுரத்தின் அளவில் மட்டுமே அச்சிடப்பட்ட வரைபடம் ஒரு துறைமுகத்தை, கப்பலின் மேற்பகுதியை, பனி சூழ்ந்த இரவின் சாலை விளக்கு வெளிச்சத்தை, பெருங்கடலின் நடுவே அகப்பட்டுக் கொண்ட தனிப் படகை, ஆப்பிரிக்க-அமேசான் காடுகளின் உட்புறத்தை, கழுகு பறக்கும் உச்சியிலிருந்து மலைக் கணவாய்களை , மலைக் குன்றுகளுக்கிடையே புகை சமிக்ஞைகளாக நடைபெறும் செய்திப் பரிமாற்றத்தை, ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் ஒரு கலை அரங்கின் இரவு நிகழ்வை, பாட்டும், நடனமும் உணவும் மதுவும் பரிமாறப்படும் ஒரு உணவுவிடுதியின் இரவுப் பொழுதை … இன்னும் எவை எவையெல்லாமோ அந்த உள்ளங்கையின் ஒற்றை சதுரப்பரப்பில் ஒருவரை வந்தடையும்.


நான் சொல்வது அதீதமாக இருப்பதாக நினைத்தால் மாடஸ்டி ப்ளைஸி-கார்வின், ரிப் கெர்பி வரும் எந்த கருப்பு வெள்ளை காமிக்ஸையும் வாங்கிப் படியுங்கள். இரவில் வெட்டவெளியில் கணப்பு நெருப்பின் வெளிச்சச் சுடர் கன்னங்களிலும், மூக்கு நுனியிலும் ஒளிவிடும் ப்ளைஸியை நீங்கள் பார்த்து விட்டால் வண்ணங்களான கருப்பு வெள்ளை ஒளியும் இருளுமாக மாறும் மாயத்தை உணர்வீர்கள். அதன்பின் இங்கே நான் சொன்னவை முழுமை அல்ல என்றுதான் சொல்வீர்கள்.
தங்கள் விழுமியங்களைத் தவிர வேறெதற்கும் கட்டுப்படாமல் வெட்டவெளியில் ஒரு நாடோடி வாழ்வை வாழத் துணிந்த கதை நாயகர்களை நான் அதற்கு முன் சந்தித்ததில்லை. எந்த பந்தத்துக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால் உணர்வற்றவர்கள் ஆகிவிடுவதில்லை அவர்கள். நட்பு என்பதன் ஆழம், நெருக்கம், விலக்கம், துரோகம் எல்லாவற்றையும் அனுபவித்து அதன் காரணமாக வாழ்வே தலைகீழாகிப் போன நிலையிலும் சற்றும் தன்னம்பிக்கை தளராத கேப்டன் டைகரை நீங்கள் ஏதாவது ஒரு கதையில் சந்தித்தாலும் நான் சொன்னதை விட அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும்.

மனைவி இறந்ததும் வேறெந்த பெண்ணையும் மனதாலும் தொடாத டெக்ஸ் வில்லரை “இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”என்ற கம்ப ராமாயண வரியை முதன்முறை வாசிக்கும்போது நினைத்துக் கொண்டேன். இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். வன்மேற்கு உலகில் அப்படி ஒரு கதாபாத்திரம் என்பது உச்ச நீதி மற்ற உத்தரவுகிணங்க முறையாக தண்ணீர் திறக்கும் கர்நாடகாவை விட அபூர்வமானது. பணி காரணமாக இருவேறு வழிகளில் பிரிந்து செல்ல நேரிடும் நிமிடங்களிலெல்லாம் “உன் முதுகைக் காப்பாற்ற இந்தக் கிழவன் உடனில்லை என்பதால்” என்று சொல்லி டெக்ஸை கவனமாக இருக்கச் சொல்லும் கார்சன், வேலைக்காக நான் சென்னை கிளம்பிய நாளில் இருந்த என் அப்பாவை நினைவுப்படுத்துவார்.


எவ்வளவோ செய்யத் தயாராக இருக்கும் நண்பர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கையில் சொல்லாமலேயே கிளம்பி தன்வழியில் தனியே செல்லும் லக்கி லூக் தான் அந்த வெற்றிக்குக் காரணமானவனாக இருப்பான். இருளோ, அஸ்தமனச் சூரியனோ தெரியும் ஏதுமற்ற வெளியை நோக்கி அவனும் ஜாலி ஜம்பரும் நமக்கு முதுகு காட்டி “தனிமையே என் துணைவன்” எனப் பாடிக்கொண்டே செல்லும் காட்சி இல்லாமல் எந்த லக்கி லூக் கதையும் முடிவடையாது. மறக்க வேண்டாம், லக்கி லூக் ஒரு நகைச்சுவை நாயகன். அதுவரை வந்த அத்தனை நகைச்சுவைகளும் பின்நிற்க ஒரு கசப்புப் புன்னகைதான் கடைசிக் காட்சியின் கட்டத்தில் நமக்குக் கடத்தப்படும். கசப்புப் புன்னகை ஒன்றைக் கூட உணர முடியாதவனுக்கு நகைச்சுவை என்ன எழவில் புரியப் போகிறது? பெரும் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தனி ராணியென விளங்கி அனைத்தையும் கைவிட்டு நாள் ஒவ்வொன்றையும் அனுபவித்து வாழும் மாடஸ்டிக்கும், எந்தப் பெண்ணையும் இமைக்கும் நொடிக்குள் கவர்ந்து விடும் கார்வினுக்கும் இடையே இருக்கும் கண்ணியமான நட்பை இதுவரை எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை என்பேன். சிறு வயதிலேயே காதலை விட நட்பே அபூர்வமானதும் உயர்வானதும் என எனக்குத் தீர்மானமானது இவர்கள் இருவராலும்தான். மாடஸ்டி அடுத்த நொடி என்ன செய்வாள் என்பது மாடஸ்டியை விட கார்வினுக்கும், கார்வின் சிந்தனை இந்த நொடியின் பாதியில் எப்படிப் போகும் என்பதை கார்வினை விட வேகமாக யோசிக்க முடிந்த மாடஸ்டியும் கொண்டிருக்கும் உறவுக்கு இன்றைய சமூக உறவுமுறைகள் எவற்றின் பெயரை வைத்தாலும் போதாமல்தான் இருக்கும். மாடஸ்டியின் பழைய நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதில் வியப்பே இல்லை.

கேப்டன் டைகருக்கும் கிழவன் ஜிம்மிக்கும் இடையே இருக்கும் உறவு இப்படி விளக்க முடியாத மனித மன விசித்திரங்களைக் காட்டுவது. எந்த சாகசமும் காட்டாமல் முயன்றால் நாமும் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கும் இங்கிலாந்தின் ரிப் கெர்பி அமெரிக்காவின் டெக்ஸ் வில்லருக்கு நேர்மாறானவர். ரிப் க்கு அதிகபட்ச வன்முறை என்பதே தடுப்பாட்டம்தான். ஆனால் அங்குலம், அங்குலமாக மைல்கணக்கில் பொறுமையாகத் தொடர்ந்து வந்து குற்றம் செய்தவரை நெருங்கும் அசாத்திய மனவலிமையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரை சொன்னவை நான் காமிக்ஸ் உலகிலிருந்து பெற்றவற்றில் பத்து சதம் கூட இல்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ரசனை சார்ந்த விமரிசன நோக்கை ஒதுக்கி விட்டே இதை எழுத ஆரம்பித்தேன். காமிக்ஸ்களை வாசிக்க ஆரம்பித்தபோது நான் அடைந்த அந்த உற்சாகத் துடிப்பை இப்போது அடைய முடியாதபடி அனுபவங்களால் உலர்ந்து, தடித்துப் போய்விட்டேன். ஆனால் இன்றும் காமிக்ஸ் ஒன்றைக் காணும்போது அந்த உவகையை நினைவில் மீட்டெடுக்க முடிகிறது. கடினமான தேங்காய் ஓட்டின் உள்ளே இனிப்பான சுவை நீர் போல மனதுக்குள் அந்தச் சிறுவனை காமிக்ஸ் இன்னும் உயிர்துடிப்புடன் வைத்திருக்கிறது. தொட்டி மீனை கடலில் விட்டால் அது அடையும் குறையாத பிரும்மாண்டத்தின் வியப்பை எனக்குக் காட்டியவை காமிக்ஸ்கள்தான். கற்பனையின் எல்லையைச் சீண்டியபடியே இருக்கும் ஒரு விஷயம் சிறு வயதில் கிடைப்பது எவ்வளவு பெரிய வரம்? மெக்ஸிகோவின் கிராமமும் அமெரிக்காவின் கிராமமும் எப்படியெல்லாம் வேறுபடுகின்றன என்பதில் தொடங்கி அமெரிக்க உள்நாட்டுப் போர்கள், இரண்டாம் உலகப் போர், தங்க வேட்டை காலம், அமெரிக்க ரயில் கட்டுமானம், பழங்குடியினப் போராட்டங்கள் என வரலாறுகள் எனக்கு பாடப்புத்தகங்களுக்கு முன்பே அறிமுகமாகி விட்டன. மா டால்டன், ஜேன் போன்றோர் உண்மை கதைமாந்தர் என்பதை காமிக்ஸ் மூலம் வாசித்த பிறகு ஒரு சராசரி அமெரிக்கனை விட அமெரிக்காவின் மாற்று வரலாற்றை அறிந்தவனாகி விடுகிறேன்.

குழந்தைகள், சிறுவர்கள்தான் காமிக்ஸ் வாசிப்பார்கள் என்பது பல்லில்லாதவன்தான் இட்லி சாப்பிடுவான் என்று சொல்வது போல. குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவனாக மாறும் வயதில்தான் காமிக்ஸ் தன் மாயத்தைச் சரியாகச் செய்ய ஆரம்பிக்கும். தன்னையும் ஒரு ஆளுமையாக ஆக்கிக்கொள்ளும் கற்பனை முளைவிட ஆரம்பிக்கும் வயதில்தான் இவ்வளவு விதவிதமான ஆளுமைகளை காமிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சிறுவனுக்கு அவன் எவ்விதத்திலும் பார்த்திராத நிலப்பரப்பை, தேசத்தை, வாழ்க்கை முறைகளை, அதன் சவால்களை, பண்பாட்டை, நாகரிகத்தை, விழுமியங்களை அறிமுகப்படுத்தி விடுகிறது. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள அவன் தன் கற்பனையை மட்டுமே நம்பி யூகித்து அதிலேயே வாழ்ந்து வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் அவற்றை ஒப்புநோக்கிச் சரிசெய்து… எவ்வளவு சுவாரசியமாகி விடுகிறது வாழ்க்கைதான்.
ஒரு குழந்தையின் வாழ்வை இன்று கார்ட்டூன்/அனிமேஷன் படங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அதில் இருக்கும் பெரிய சிக்கலே அவற்றின் சலனங்கள், அதாவது அசைவுகள். ஒரு அசைவைக் கவனிக்கும் மனம் அசைவை மட்டுமே பின்தொடரும். பின்தொடர நமக்குத் தேவைப்படுவது கவனக் குவிப்பே தவிர கற்பனை அல்ல. காமிக்ஸ்களும் வரைகலையின் ஒரு வகைப்பாடுதான் என்றாலும் ஒரு அசைவை உறையச் செய்து நமக்கு அளிப்பவை. அந்த உறைவுக்கு முன்பையும், பின்பையும் நாம் நம் கற்பனை கொண்டே நிகழ்த்திக்கொள்ள முடியும். அதாவது புத்தகத்தின் பக்கங்களில் உறைந்துள்ள அசைவுகள் சலனம் பெற்று நிகழ ஆரம்பிப்பது நம் மனங்களில். கற்பனையைப் பயிற்சி செய்ய இதைவிடச் சிறந்த ஒன்றை அளிக்க முடியுமா?

ஒரு சிறுவனுக்கோ, சிறுமிக்கோ அளிக்கப்படும் காமிக்ஸைப் போல அவர்களின் வாழ்நாள் முழுதும் தொடரும் இனிமையான பரிசு வேறொன்றில்லை. வயதால் மட்டுமல்ல, வாசகனாகவும் சிறுவருக்கு உரிய கண்களையும் கற்பனையையும் பெற்றால் மட்டுமே பேரிலக்கியங்கள் வாசிப்பதும் சாத்தியமாகும். நான் இன்றுவரை காமிக்ஸ்களின் ரசிகன். என் கனவுகளில் இன்றும் மாடஸ்டியும், டெக்ஸ் வில்லரும், கேப்டன் டைகரும், லக்கி லூக்கும் நிறைந்திருக்கிறார்கள். அஸ்தமனச் சூரியனை நோக்கி என் தனிப் பயணம் தொடரும் நொடியில் கூட என் நினைவின் உதடுகள் வழியே “தனிமையே என் துணைவன்” எனும் பாட்டு கசிந்து வரும். அது இன்னொரு காமிக்ஸ் வாசகனுக்குத்தான் கேட்கும்.

***

ஜா.ராஜகோபாலன் – தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவர். பி.காம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.ஏ மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் பயின்ற இவர் ஆட்டத்தின் ஐந்து விதிகள்(தமிழினி), எப்போதும் முடிவிலே இன்பங்கள் (புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு) என இரண்டு நூல்களின் ஆசிரியர். மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular