Sunday, November 3, 2024
Homesliderபுத்தனின் ஆண் குறி

புத்தனின் ஆண் குறி

கரன் கார்க்கி          

          
அவருக்கு மேலாய் மற்றொருவரை வைத்து அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கு மாறாய் அவரை உயர் பேரறிவின் உன்னத அன்பின் உருவகமாய் கருதுவோமாக. (புத்தரும் அவர் தம்மமும்)
– பாபா சாகேப் அம்பேத்கர்.

2010 ல் என் முதல் புதினம் வெளிவந்த மறுஆண்டு சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் பொருளியல் துறைக்கு எழுத்தாளர்கள் பலரும் கட்டுரை சமர்பிக்கும்படி அதன் தலைவர் சின்ன நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு முன் மாணவனாய் பள்ளிக்கு எழுதியதைத் தவிர வேறு எதற்காகவும் கட்டுரை எழுதியவனல்ல… அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் செயல்பட்ட மூன்று தலித் தலைவர்களான இரட்டைமலை சீனிவாசன், தந்தை சிவராஜ், எம்.சி.ராசா இவர்கள் மூவர் பற்றி 40 பக்கங்களுக்கு எழுதி தந்தேன்.

அவர்களுக்குள் இருந்த முரண்பாடு, சச்சரவுகள் நாமறிந்தது என்றாலும் அன்றைய தலைவர்களின் மக்கள் பணிகள் குறித்து எழுதிய கட்டுரையது… அதில் என் நினைவில் உள்ள வரியும் மேடையில் நான் பேசிய வரியும் இப்போது நினைவுக்கு வருகிறது, “அம்பேத்கர் அவர்கள் என்றைக்கும் என் வணக்கத்துக்குரிய தெய்வமல்ல ஆனால்  வாழ்நாள் முழுக்க நானும், என் போன்ற பலரும் அவரைப் பயின்று பின்பற்ற தகுந்த புரட்சியாளரை பயில்வதற்கு முயல்வோம்” என்று நான் சொன்ன தருணத்தில் புத்திஸ்ட் ஒருவரால் அங்கு சின்ன சலசலப்பு நிகழ்ந்தது அது வேறு விடயம்.

இன்றுவரை அவர் வெறும் சலசலப்பு உண்டாக்குகிறவராகவே இருக்கிறார். இசங்களை துணைக்கு வைத்துக்கொண்டு வார்த்தைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அளவுகோளுக்கு ஒரு குறி தேவைப்படுகிறது. அம்பேத்கரை அளக்க அம்பேத்கர் மட்டுமே அளவுகோள்.. எந்த இசங்களைக் கொண்டும் அவரை அளக்க முடியாது என்பதல்ல, உலகெங்கிலும் உள்ள வழக்கமான சுரண்டல் முறைக்கும் இந்தியாவின் மதம் சாதி நம்பிக்கைகள் வழியிலான  சமூகப்பண்பற்று அடிப்படை மனசாட்சியற்று சுரண்டிக் கொழுக்க உரிமை கொண்ட வெட்கமற்ற சமூகத்தில் ஒவ்வொருவரின் மனசாட்சியை தட்டியெழுப்ப முயன்ற அம்பேத்கர் பண்டைய மரபு வழியில் தன் அறிவை ஒருக்கிணைக்க  இம்மண்ணுக்கு மேற்கிலிருந்து நகர நாகரீகச் சமூகத்தில் பிழைப்புத்தேடி ஊடுருவிய அன்னியமான சுரண்டல் சமூகம், உள்ளூர் மக்களின் நிற அடிப்படையிலான மயக்கத்தை சாதகமாக்கிய அதன் பரவலை, ஆதிக்கத்தை, அதன் அன்னியத்தனத்தை மறுக்கும் பன்னெடுங் காலமாயிருக்கும் எதிர்ப்பு மரபை இம்மண்ணுக்கே உரிய பண்டைய பகுத்தறிவு மரபை, மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் ஒரு வடிவம் தான் அவரை பவுத்தராக மாற்றியது என்கிற பார்வையிலிருந்து விலகுகிறோம்.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லை, எவருமில்லை என்பதே நம் கருத்து. அதே நேரம் பூச்சிகளுக்கு புரட்சியாளர்களைத் தெரியாது என்பது போலவே புரட்சியாளர்களும் பூச்சிகளை கவனிப்பதில்லை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுதந்திர, சகோதரத்துவ, சுதந்திரத்திற்கு அம்பேத்கர் மட்டுமே முற்றும் முடிவாக நாம் கொள்ளவில்லையென்றாலும் அவரைத் தவிர்த்துவிட்டு இங்குள்ள சூழலை மார்க்ஸியத்தால் அணுக முடியும் என நான் நம்பவில்லை..

*


ம்பேத்கர் குறித்த முறையற்ற சாடலுக்கு எதிர் வினையாற்றுவதோ, அல்லது வெறுமனே இல்லை அவர் அறிஞர் ஞானியென சப்பைக்கட்டு கட்டுவதோ நம் நோக்கமல்ல ஆனால் நாம் திரும்பத் திரும்ப உண்மைகளை புரிந்து கொள்ளவும், நேர்மையுடன் விவாதிக்கவுமான தேவை எப்போதும் எதிர் முகாமிலிருந்து எழுந்தபடியே இருக்கிறது.

அதைவிடவும் முக்கியமாக அண்ணல் குறித்த புரிதல் இங்கு மிகக் குறைவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல அவரைக் கற்றதன் வழியே உரையாடல் என்பதைவிட அவருக்கு பத்து தலை, பன்னிரண்டு கைகள் என்பதாக இல்லாமல் அதேநேரம் அசுத்தக்காற்றுடன், நுரைகளும் இடத்தை அடைத்துக் கொள்ளாமல் இருக்க அங்கு உண்மைகளை நிறுத்த வேண்டியுள்ளது.

பூமி தோன்றிய காலம் முதல் மானுட குழுவில் எத்தனையோ மாற்றங்கள் சக்கரங்கள் சுடுமண் பொம்மைகள், வரைகலை, சிற்பம், நகர அமைப்பு மொழி, இலக்கணம், இன்னும் எத்தனையோ…. சிறக்க இருந்தாலும், உலகம் தோன்றிய காலம் முதல் பூமியில் இமயத்துக்கு தெற்கே மிக நாகரீக வளர்ச்சியுற்ற மக்களை சூறையாடிய அரை வெள்ளை நாடோடிகள் காட்டுமிராண்டிகளாய் தொல்குடி மக்களை பல விதங்களிலும் சூறையாடி சாதி படிநிலை கொடூர சட்டங்கள் வழியே சுரண்டல் இருளில் துன்புறும் மக்களை மீட்க புதியதொரு பேரொளி தேவைப்பட்டது.

அந்த தேவையின் பொருட்டு வரலாறு இதுவரை கண்டிராத ஒருவேளை இம்மண்ணின் உருவாகி வந்த அறத்தின் தொடர்ச்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக ஒரு மனிதனை வரலாறு உலகிற்கு அடையாளம் காட்டியது. அவர் தான் புத்தர். மனித குல வரலாற்றில் மேம்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனையின் உச்சமென துளிர்த்து பூமியின் முதல் ஒளி புத்தன்… அவருக்கு முன்பும் படைப்புகள், கதைகள், புராணங்கள், வேதங்கள் என எத்தனையோ அத்தனையும் புளுகும், மர்ம நயவஞ்சகமும் நம்ப முடியாத மாயத்தன்மைகளும் நிறைந்தது என்பதுடன், அதுவும் கூட குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே சொந்தமானவை.

அந்த குழு ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இனக்குழுக்களில் ஊடுருவி தன வெளிர்நிற தோலின் நிற கவர்ச்சியால் அந்த மனிதர்களில் வலுவான வளமான அனைவருடனும் தாராளமாக உறவுகொண்டு அவர்களைப் பிரித்தாளுவதன் மூலம் சூறையாடி எந்த தடைகளுமற்று சுரண்டிக் கொழுத்த காலம்,  அந்த வெளிர் நிற குழுவுக்கு மட்டுமேயான மொழி அதன் சட்ட திட்டங்களென எதுவும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதுமே பெருங்குற்றமென சட்டம் செய்யப்பட்டிருந்தது.

அந்த சட்டங்கள் ஒரு மனிதனைச் சுரண்டி இன்னொரு மனிதனை கொழுக்க வைத்தவை அவைகள் எல்லோருக்குமானதன்று.., ஆனால் அவை தத்துவம் போல் மயக்கிய ஆபாச சுரண்டல் வெறியுள்ள கூச்சல்கள்… அவை பெரும்பாலான மக்களுக்கு புரியவும், பயன்படுத்தவும் முடியாதவை.. அவர்களின் மொழிக்கும் உள்ளூர் மொழிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவையத்தனையையும் ஓங்கியறைந்து புதிய ஒன்றை, மாய மயக்கமற்ற அறிவுகுகந்த அன்பின் வழியே ஒளிவு மறைவற்ற அதுவரையிலும் உலகில் இல்லாததொரு புதியமுறையில் உலகை பார்க்க வைத்ததுடன் உள்ளூர் மக்கள் மொழியிலேயே பேசியவன் புத்தன்.

செல்வமிக்க அரசனின் மகனாயிருந்தவன் இரு சமூகங்களுக்கு இடையிலான போருக்கு எதிரான சமாதானத்தை முன்னெடுத்த காரணத்துக்காக காட்டுக்கு விரட்டப்பட்டவன் அங்கே பரிசோதனை முயற்சியாக முதுகெலும்பு முன் வயிற்றில் தெரியுமளவு கடும் தவ வாழ்க்கையை முயன்று அதனாலெல்லாம் ஒரு பயனுமில்லையென உணர்ந்து மக்களோடு மக்களாய் சங்கமித்து அறம் போதித்தவன் அம்மண்ணின் பண்டைய தொல்குடிகளின் அறத்தை மீண்டும் இம்மண்ணில் மீட்டுருவாக்கம் செய்தவன்.

தன் புலனெழுச்சியை மனதில் முடக்கி புலனடக்கம், என்கிற சுய கட்டுப்பாடு பண்பில் ஆசைகளினால் நசுங்கிய மானுட சமூகத்தில் ஆசையே துன்பத்துக்கு காரணமென்கிற புதிய பண்பாட்டு செயல்முறை மரபை முன்னெடுத்தவன்,

அவனது காலத்தில் அனுபவிக்க கிடைப்பதை முற்றாக அனுபவிப்பதே முற்பிறப்பின் பலன் அதை புறக்கணிப்பது மடமையென்ற கருத்துள்ள காலம், கர்மா, விதி என்கிற மாய சுரண்டுலுக்கான மாய சூத்திரங்களே அறிவென நெளிந்த காலம். தேடி போகாமல் நாடி வருமளவு உறுதி செய்யப்பட்ட இன்பங்கள் ஏராளம்.. அத்தனையும் உதறி மானுடப்பிறப்பின் கமுக்கங்களை தேடி உண்மையின் ஒளியை கண்டறியும் பேருள்ளத்தோடு, உண்மையறியக் கிளம்பியவன், உண்மையின் ஒளியைக் கண்டடைந்ததை உலகுக்கு உரக்கச் சொன்னவன்… பேரசையில் விளைந்த மனிதன் புத்தனையும் மந்திரவாதியாக்கி மணியாட்டிக்கொண்டிருப்பது புத்தனின் பிழையல்ல.. புத்தனைப் புரிந்துக்கொள்ள தவறியவர்கள் பிழைதானே.

இடைசெருகல்களால் ஆன இன்றைய புத்தன் மீதான மாயத்தன்மை திணிப்புகளை நாம் ஏற்பதற்கில்லை. பார்ப்பனிய வேள்வி முறைகளுக்கு, அதன் படிநிலை சாதியக் கொடூரங்களுக்கு, அதன் சமூக சுரண்டல் போக்குகளை நியாயப்படுத்தும் கற்பனை கதைகளுக்கு எதிரான இம்மண்ணின் சொந்த அறிவு மரபு மற்றும் அன்பின் வழியே விடுதலை என்பதை முன்னெடுத்த வகையில் புத்தனிடம் முகம் சுளிக்க  ஒன்றுமில்லை பார்ப்பனியத்தின் கேடுகளை மிக காத்திரமாக விமர்சித்தவன். கடவுள், ஆன்மா கட்டுக்கதைகளை தோலுரித்தவன்,

புத்தனில் துவங்கி இன்றுவரை பல புத்தன்கள் தோன்றி விட்டார்கள். வள்ளலாரையும் நான் புத்தனெனச் சொல்லுவேன். காட்டுமிராண்டி பண்பிலிருந்து மீளாத சமூகத்தை பண்படுத்த இன்றைக்கும் புத்தன் அவசியமாக இருக்கிறார். சில அறிவாளிகளுக்கு புத்தரிடம் பெறுவதற்க்கு ஒன்றுமில்லையெனும் போது மாற்றங்களை நிகழ்த்தும் காரணிகளைக் கண்டடையும் அவசியங்களை நீர்த்துப்போக வைக்க புத்தரது ஆண் குறியில் அம்பேத்கர் அறிவை பெற்றது போலொரு கண்டுபிடிப்புகள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

ஆண்குறிகள் யோனிகளாலான வார்த்தைச் சரடுகளை எழுதி கவிதையென விளம்பரம் தேடுகிற ஆள் முன்பொருநாள் மார்க்ஸிய அரங்கிலிருந்து துரத்தப்பட்டிருந்தாலும், புதிய விளம்பர முயற்சியாக மீண்டும் ஒரு பூச்சாண்டிக்கு தயாராவது ஒரு கவன ஈர்ப்பு வியாபார தந்திரமன்றி வேறென்ன? என புறந்தள்ள முடியாது. வெளிப்படையான பதில் தருவது அவசியமாகிறது

*

அம்பேத்கருக்கு மார்க்ஸியம் தெரியாது அதனால் என்ன?:

மார்ஸுக்கும் அம்பேத்கரை தெரியாது

புத்தனுக்கு இவர்கள் இருவரையுமே தெரியாது அதனால் என்ன? ஒவ்வொன்றையும் மார்க்ஸியத்தால் அளந்தவர்களின் அளவுகோள்கள் தேய்ந்து அடையாளமற்றுப் போய் நூறாண்டு கடக்கிறது. உங்கள்  அளவு கோள்களில் மார்க்ஸ் இருக்கிறாரா? என்பதே நம் கேள்வி.

அம்பேத்கர் சனநாயகத்தில் நம்பிக்கையை இழக்காமல் இருந்தற்கு காரணம் அவரது மேல்நாட்டு கல்வி மட்டுமா? அது புத்தனிலிருந்து பெற்ற மரபுவழிப் பண்பு… இரண்டாயிரம் ஆண்டுகளாக நசுக்கி சாறெடுக்கப்பட்டவர்கள்… கைகளில் அரிவாள்கள் ஏறாமல், அறிவாயுதங்கள் ஏறியிருப்பது ஏன்? எப்படி? புத்தனின் பண்பாட்டு மரபுவழித் தொடர்ச்சி…. ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதியில் பவுத்தரே… அய்யோத்திதாச பண்டிதர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றி வன்மத்தை கக்குகிறவர்களுக்கு பதிலளிக்கும் முன்
ஜோதிராவ் புலேவை, பகத்சிங்கை, நேதாஜியை, ஏன் காந்தியை இந்த வார்த்தைகளால் சீண்டிப் பார்த்திருந்தாலும் உங்கள் அற்ப விளம்பரத் தேடலுக்கு கண்டனம் எழுப்புவது தவிர்க்க முடியாது.

அப்போது உங்களால் மலிவாக சாதியத் தலைவருக்கான ஆதரவான கண்டனமாக பார்த்திருக்க மாட்டீர்கள் தானே… ஆனால் இப்போது எளிதாக சொல்வீர்கள்.. அம்பேத்கரை சாதித்தலைவராக வைத்திருக்கவே விரும்புகிறார்கள்… ஒரு ஆய்வறிஞரை, சமூக புரட்சியாளரை இப்படி கொச்சைப்படுத்துவதை மார்க்கசியம் அனுமதிக்கிறதா?  அப்படி கொச்சைப்படுத்துபவரை மார்க்ஸிஸ்டு இல்லையென சொல்கிறோம். அவர் முற்றிலும் முடிவானவர் என்பதை விட அவரில் கற்கவும் அவரிடமிருந்து தொடங்கவும் முடியும் என்பதே ஆக்கமான வழி. அவரைப் புறக்கணிப்பது என்பது மாற்றத்தை நோக்கிய அரசியலில் லாபகரமான செயல் அல்ல என்பதுடன் அவரை கொச்சைப்படுத்துவது அறியாமையின் அடையாளம் மட்டுமே. 

*
பண்பாடு, கலாச்சாரம் என்று புளுகித்திரியும் சமூகத்துடன் கல்வியறிவால்  சனநாயக அன்பின் வழியே உரையாடல் மூலம் மாற்றம் நிகழும் என்கிற நம்பிக்கை முற்றிலுமாக இழந்த நிலையில் இந்து மதத்தின் படிநிலைச் சுரண்டல் தத்துவம்தான் மக்களின் இந்த பண்பற்ற சாதிய இறுக்கத்துக்கு காரணம்.
*

சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பிறப்பினடிப்படையிலான மதச்சமூக அமைப்பில் ஒருவன் எவ்வளவு அறிவாற்றல் பெற்றாலும், பண்பற்ற மூடனாயிருந்தாலும் அந்தந்த படியிலேயே சுரண்டி அல்லது சுரண்டப்பட்டு உழன்று மடிய வேண்டியதுதான், இந்த சுயநலமான காட்டுமிராண்டி அமைப்பை ஒழித்துக் கட்டாமல் அல்லது சீரமைக்காமல் ஒரு மாற்றமும் நிகழ வாய்ப்பேயில்லை என்றுணர்ந்து இந்து மதத்தை சீர்திருத்துவது நம் வேலையில்லையென்று உறுதியாக உணர்ந்து 1936ல் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர், 1956ல் தன் மறைவதற்க்கு முன் இந்து மதத்தை விட்டொழித்து பவுத்தமேற்கிறார். இடையில் எத்தனையாண்டுகள்….

அவரளவு இந்த மண்ணின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் எவராவது இருக்கிறார்களா? உறுதியாக இல்லையென்பேன். இந்திய சாதியக் கட்டுமானம் குறித்து 25 வயதில் ஆய்வை முன் வைத்தவர் அம்பேத்கர் . இந்தியாவில் சாதி இந்தியாவில் சாதி, தோற்றம், வளர்ச்சி என்கிற ஆய்வேடு (1916ல் கொலம்பிய பல்கலை கழகத்தில் வாசித்தளித்தது) அதை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்… அகமண முறையின் வழியே சாதிய இறுக்கத்துக்கு காப்பளித்தவர்களின் தந்திரங்கள்  பற்றி 25 வயது இளைஞனின் ஆய்வு வீச்சை அவரது மேதைமையை பரிசோதிப்பவர்கள் அவரது முதல் நூலுக்கு பதில் சொல்லுங்கள்.

பிறகு அவரது கடைசி நூலான புத்தமும் அவர் தம்மத்தை பிரித்து மேயலாம். சாதி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்கிற கேள்வியற்ற சமூகத்தில் முதன்முறையாக அத்தகைய கேள்வியையும் எழுப்பியவர் 1936ல் சாதி ஒழிப்பு நூலை முன் வைக்கிறார். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி 20 ஆண்டுகள்.… உடனே சாதி ஒழிந்து விட்டதா என்று விதண்டாவாதிகள் கேட்கக்கூடும்.

அவர்களுக்கு சொல்லுவேன்.. உங்களிடம் ஆண்குறி, பெண்குறி, சில வேளைகளில் இரண்டுமாக, சிலவேளைகளில் இரண்டுமற்ற ஒன்று இருப்பது போல கூடுதலான ஒன்றாக கண்ணுக்குத் தெரியாத கற்பனையான சாதிக்குறியும் எப்போதும் உங்களிடம் விறைத்துக் கொண்டிருக்கிறது… ஒரு நோய் போல மிகக்குறிப்பாக இந்தியர்களிடம். அந்த நோய்குறி சிலருக்கு அது ஒரு அறிவைப்போல சிலர் புரட்சிகர முகமூடிகளால் மறைக்க முயலுகிற ஒவ்வாமையில் வெளியே கக்கிவிடும் போது சிக்கிக்கொள்கிறார்கள். 

(பரவாயில்லை வெறும் புனித கோஷங்களோடு இருந்த இளைஞர்களுக்கு வேலை வந்திருக்கிறது… அவர்கள் அண்ணலை மேலும் கற்க துவங்குவார்கள் என்றே நம்புகிறேன். அம்பேத்கரை உலகம் புரிந்து கொண்டாலும், புரியாதது போல நடிப்பார்கள்… அதற்கென்ன அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டியதில்லை நம் புரிதலை முன் வைப்போம்)

அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதானால்

1) புத்தர் மதத்தை கடவுள், ஆத்மா என்கிற அடிப்படையில் அமைக்கவில்லை.
2) தனியுடைமை ஒழிப்பு பாதையில் புத்தரின் கொள்கைகள் இடையூறு செய்வதில்லை… மறுமை குறித்த சறுக்கல் கூட இருக்கலாம் ஆனால்.. ஆனால் அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அம்பேத்கர் மதம் மாறிய காலம் அதற்கு முன்பு நிழ்ந்த செயல்பாடு இவை குறித்து சிந்திக்க குறைந்தளவேனும் இந்திய சமூக வரலாற்று அறிவு வேண்டும். அந்த அறிவுப் புரிதல் வழியே அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதைப் பற்றி யோசிக்கலாம்.

அம்பேத்கர் தெளிவாக சொல்கிறார்… வேதங்கள் பாலைவனம் போல் பயனற்றவை என்று புத்தரும் அவர் தம்மமும் நூலில் எழுதுகிறார்.வேத முனிவர்களை புத்தர் முற்றாக ஒதுக்கித் தள்ளவில்லை நூற்றுக்கணக்கான கற்பனாவாத புளுகு மூட்டைகளிலிருந்து அவர் ஒரு பத்து முனிவர்களின் படைப்புகளை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்கிறார். அவர்களை தொன்மையானவர்கள் உண்மையான படைப்பாளிகள்  என்று புத்தர் கருதியதாக எழுதும் அம்பேத்கர் அதிலும் கூட மனிதனை ஒழுக்கத்தில் உயர்த்தும் எதுவும் இல்லையென்று புத்தர் சொல்வதாக சொல்கிறார்.

அத்துடன் பார்ப்பனியக் கட்டுக்கதைகளான  பிரம்மம் உள் பொருள் என்கிற மாய்மாலங்களை யாராலும், யாதொன்றும் அறியப்படாத ஒன்று எப்படி உள் பொருளாயிருக்க முடியும் அதனால் யாருக்கு? என்ன பயன் என்கிற கேள்வியால் புத்தர் எவ்விதம் பார்ப்பனியத்தை பகிரங்கப்படுத்துகிறார் என்பது போன்ற பலதையும் ஆய்வுக்குட்படுத்தி அதே நேரம் ஒரு மனிதன் உள்ளீடாக பற்றிக்கொள்ள தகுதியான ஒன்றாக கடவுள், ஆன்மா என்பது ஒரு ஏமாற்று கருத்து, ஆசையை துற, பேதமற்று அன்பு செய் என்பதில் தொடங்கி  பேரறிவுடன் முன் காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட ஒவ்வொன்றையும் வெளிப்படையாக விசாரணை செய்து… இதற்கு முன் உலகம் கண்டிராத மனிதப் பண்பு மேன்மையுறும் ஒன்றை, தொடர்ந்து வளர்சியுறும் ஒன்றை அவர் கண்டடைந்து சொன்னார். அது மிக எளிமையானதாகவும் , வெளிப்படையானதாகவும், எல்லோருக்குமானதாகவும் இருந்தது.

புத்தரும் அவர் தம்மமும் மிக மிக நுண்ணிய அற்புதமான விசாரணை புத்தகம் அது புத்தரின் நிலைப்பாட்டை மட்டுமின்றி  அன்றைய உலகம் எவ்வாறு இருந்தது, அந்த நாளில் புத்தன் காலத்திலேயே இருந்த மகாவீர் இவரிடமிருந்து எங்கனம் மாறுபாடு கொண்டுள்ளார் என்கிற வரையிலான ஒரு தீவிர மறுபரிசீலனை ஆய்வேடு என்பதாகவே கொள்ள முடியும்….
(இப்போது தீவிரமாக இளைஞர்களால் வாசிக்கப்படுகிறது)

ஆண், பெண், கடவுள் குறிப்பாக காளியுடனான புணர்வு, பிறப்புறுப்பு வழியிலான கவிதைகள் படைத்து வாசக கவனம்பெற எத்தனிக்கும் ஆள் அம்பேத்கரை விமர்சிக்கட்டும்… அம்பேத்கர் என்ன? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? இல்லையென்றே சொல்வோம். அவரைக் கடவுளாக பூஜிக்க நாங்களொன்றும் புராண புளுகுகளில் சிக்கியவர்களில்லை, புத்தக விற்பனைக்கு அரசியல் செய்கிற சராசரி ஆட்கள் அண்ணலை எளிதாக குற்றம் சாட்டிவிட முடியும் அது சனநாயக உரிமை… ஆனால் ஆபாச வார்த்தைகளால் அவதூறாக திட்டமிட்டு இழிவுபடுத்துவதன் நோக்கம் சில்லறைதனமானது. ஆனால் இது எப்போதும் நடப்பதுதானே!..

  • சிலைகளை உடைப்பவனுக்கும் இதற்குமான வித்தியாசம் என்ன?
  • அம்பேத்கர் இந்த சமூகத்துக்கு எதாவது செய்தாரா?
  • அவர் புரட்சியாளரா? என்பது மாதிரியான கேள்விக்கு பதிலாக இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரடி முன் நகர்ந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு முதல் ஒற்றை காரணம் அம்பேத்கர் மட்டுமே என்பதுடன் அந்த விதத்தில் மட்டுமல்லாது அரசியலாய் இன்றைக்கு குறைந்தளவேனும் சேரி மக்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கும் முதல் காரணமாக அம்பேத்கரே இருக்கிறார்.

இட ஒதுக்கீடு, தனித்தொகுதியென ஒவ்வொன்றுக்கும் அவரே மூலம்.

2000 ஆண்டாக உழைப்பு விலங்காக மட்டுமே கிடந்த நசுக்கபட்டவன் இன்று சகல துறைகளிலும் பங்கெடுப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் முதற்காரணம் அண்ணல் அம்பேத்கர் தவிர வேறு காரணத்தை என்னால் சொல்ல முடியாது. அதன் பொருட்டு அம்பேத்கரை புரட்சியாளர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவருக்கு முன்பான தீண்டப்படாதோர், அம்பேத்கருக்கு பின்பான தீண்டப்படாதோர் என வரைபடத்தை தீட்ட முடியுமளவு தெளிவானது அவரது வேலைதிட்டம். அத்துடன் அவரை மார்க்கிஸின் அளவுகோளால் அளக்காமல்  (எதையும் மார்க்ஸிய அளவுகோளால் அளக்க முடியும்) இம்மண்ணின்  மரபு வழியிலான, புராண புளுகு கசடுகளையும் அதன் வழியே நாசமாக்கப்பட்ட மக்களின் வரலாற்றின் முழுத்தொகுப்பையும் ஒரு அளவுகோலாக வைத்துப்பாருங்கள் அண்ணலின் ஆய்வுபூர்வமான உழைப்புடன் வரலாற்றில் அவர் புரட்டிய பகுதியும் தெரியும்.

மரபு வழிபட்ட உலகின் அனைத்து மதங்கள், தத்துவங்கள் என பயின்று உலகின் ஆகச்சிறந்த பலகலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதற்காக நாம் அவரை பேரறிஞர் என்று சொல்லவில்லை. மகாத்மாக்களின் முமூடிகளைக் கழற்றி மக்களின் மகாத்மா யார் என்பதை ஒடுக்கி நாசமாக்கப்பட்ட மக்களுக்கு அடையாளம் காட்டியதுடன் மக்களால் மகாத்மா பட்டமளிக்கப்பட்ட ஜோதிராவ் புலேவை மக்களுக்கு அடையாளம் காட்டியவர் என்பதற்காக நாம் அவரைக் கொண்டாடவில்லை. பிணி, மூப்பு, சாவு, என்கிற நிலை கண்டு சித்தார்த்தன் மனம் வெதும்பி புத்தனனான் என்கிற அம்புலிமாமா கதையிலிருந்து உண்மை வரலாறை சொன்னதற்காக நாம் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொருவரும் சனநாயகத்தை நோக்கி நகர.. அவசியமான வயது வந்தோருக்கு வாக்கு என்கிற உரிமையை முன்னெடுத்ததற்காக, பட்டியல் சாதியினருக்கு பிரதிநிதித்துவம் என்பதை அரசியல் சாசனம் வழியே முன்னெடுத்ததற்கு, 8 மணி நேரம் வேலை என்கிற அறிவிப்புக்காக, தொழிலாளர் காப்பீடு, மகப்பேறு விடுப்பு, வங்கித்துறை சீர்திருத்தம், ரிசர்வ் வங்கி உருவாக்கம், சமுதாயத்தையே புணர் நிர்மாணம் செய்ய வேண்டுமென்கிற அவரது முன்னெடுப்புகளை நீங்கள் எளிதாக கடந்து விடுவீர்கள். ஆனால் இத்தகைய சனநாயகப் பங்களிப்பின் வழியே வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் உறுதியாக இருக்கிறார் என்பதை எவற்றால் உங்களால் மூடி மறைக்க முடியும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றுக்கு எதிராக பிராமணியம் இருக்கிறது. அத்துடன்  பிராமணியம், முதலாளித்துவம் இரண்டையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்று உறுதியாகச் சொன்னவரைத்தான்  மகாயான புத்தத்தை அம்பேத்கர் தழுவினார் என்கிற புதுக்கதைகளை உருவாக்குகிறார்கள்.  அதனாலென்ன  புத்தரும் அவர் தம்மமும் நூல்கள் தூசிபடிய கிடந்தவை மேசைகளுக்கு வந்து விட்டது.

அண்ணல் புத்தனை அறிவாசானாக ஏற்கிறார் என்பது உண்மையே. ஏன்?

புத்தனுக்கு முன்பு சுரண்டல் போக்கற்ற அறிவினால் கட்டமைந்த ஆன்மீக மரபென்று ஒன்று இம்மண்ணில் இருந்ததில்லை. இருந்த தமிழ் மரபும் பார்பனிய மயமாக்கப்பட்ட சிதைந்த சித்தமரபு மட்டுமே.. இப்போது மடங்களில் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது. தனக்கு இடி விழும்போது மட்டும் அது அலறி துடிக்கும் (சமீப தஞ்சை குட முழுக்கு தமிழ், சமஸ்கிருத எதிர் குரல்கள்)

இந்த நிலையில் அற வழியிலான விடுதலையை புத்தனில் இருந்து தான் முன்னெடுக்க முடியும், காட்டுமிராண்டிகளில் இருந்து புற அக பண்பாட்டு அறவியல் மற்றும் சுயமரியாதையுடன் மாயத்தன்மையற்ற நேரிடையான சமூக புரிதல்களை சொர்க்கம், நரகம் மயக்கங்களில் இருந்து விடுவித்து பொதுமை உலகை நோக்கி நகர… ஆசையே பெருங்கேடு அந்த ஆசையைக் காட்டி மக்களை ஏமாற்றும் இந்த அரை வெள்ளை பார்ப்பனியம் அதைவிடக் கேடு என சமூக விடுதலைக்கு மக்களை அணி திரட்டியவர் அம்பேத்கர் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதை கொச்சைப் படுத்துகிறவர்கள் அறியாமை பற்றியென்ன..? இப்போதும் சொல்ல முடியும் ஒட்டு மொத்த மாற்றத்துக்கு அவரே விடிவெள்ளி என்கிற மயக்கம் எமக்கில்லை. ஆனால் அண்ணல் மாற்றத்தை நிகழ்த்த பெரும் வரலாற்று தொகுப்பாலான கைகாட்டி மரம் என்பதை மறுக்கவே முடியாது.

1) உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் உள்ளது.
2)
உலகிற்கு பாதுகாவலரோ, பேணுபவரோ ஒருவருமில்லை.
3)
நமக்குரியது ஏதுமில்லை நமக்குப்பின் நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம்.
4)
உலகம் குறைபாடுடையதாய், ஆசைமிக்கதாய், அடிமையாய் அவாவுற்றதாய் உள்ளது.

மேற்குறிப்பிட்டது புத்தனின்  வார்த்தைகள். இதில் மார்க்கஸிய தத்துவத்தை குலைத்துவிடும் சாராம்சம் எதுவுமிருப்பதாக நாம் அறியவில்லை. விதைத்தபடி அறு என புத்தர் கூறியதின் பொருள் புரிந்தவர் அண்ணல்.

மார்க்ஸியத்தின் அடிப்படை அம்பேத்கருக்கு தெரியாது என்பது வசுமித்ராவின் கண்டுபிடிப்பு. இந்திய சமூகவியல் கோட்பாடு அதன் பண்பாட்டு அறவியல் பற்றி அம்பேத்கரை விடவும் ஒருவர் இம்மண்ணில் கண்டுணர்ந்திருப்பார் என்று நான் நம்பவில்லை.

“எந்த ஒரு எதிர்கால அரசாங்கமும் அதன் பொருளாதாரம் சோசலிச பொருளாதாரமாக இருந்தாலன்றி அது நீதியை எப்படி செயல்படுத்தும்.” அம்பேத்கரின் இந்தக் கேள்வி மார்க்கஸியத்துக்கு எதிரானதா? பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற இந்திய கம்யூனிஸ்டுகளின் புரிதலை அம்பேத்கர் மறுக்கிறார். மிகச்சமீபத்தில் நீலத்துக்கும் சிவப்புக்கும் கறுப்புக்கும் சில புரிதல்கள் ஏற்படும் நிலையில் அதைத் தகர்க்கவே  இந்த வன்மங்கள் திட்டமிட்டு எழுப்பப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

பொதுவுடைமை தத்துவத்தை அரிக்கும் பூச்சிகள் நிறைந்த இந்திய மண்ணை மிக தெளிவாக அறிந்து… முதலில் இங்கு நிலைகொண்டுள்ள தீண்டாமை, மற்றும் சாதிக் கட்டுமானங்களை பலவீனபடுத்தாமல்.. ரஷ்யா போன்றோ, சீனா போன்றோ இங்கு மார்க்ஸியத்தை அடிப்படையில் ஆட்சியமைக்க முடியாது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் உணர்ந்திருந்தார். (ஜோதிபாசுவை ஒருமுறை பிரதமர் பதவியேற்க அழைத்தபோது மார்க்கஸிய கம்யூனிஸ்ட் கட்சி அதை மறுத்தது ஏன்? அடிப்படை மாற்றங்கள் நிகழாமல் ஒரு கம்யூனிஸ்ட் பிரதமராக வருவதால் பயன் ஏற்படப்போவதில்லை என்பதுதானே நிலைப்பாடு. நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.. வேறு சில கமுக்க காரணங்களும் இருக்க கூடுமென சந்தேகமும் எனக்குண்டு..) அதே நேரம் மார்க்சியத்தின் நியாயங்கள் குறித்து அம்பேத்கருக்கு இயல்பாகவே புரிதல் இருந்தது. அதற்கான தேவையும் உணர்ந்து அவர் செயல்பட்டிருக்கிறார். மேல் சொன்ன பல விடயங்கள் அதற்கு சாட்சி.

இன்று தனித்தொகுதிகள் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. ஆனால் அதன் மூலம் அம்பேத்கர்தான் என்பதை வசுமித்ராக்களுக்கு தெரிந்திருக்குமா தெரியவில்லை…

நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சரானது காலத்தின் குறியீடு மனுவின் சட்டங்கள் இருந்த இடத்தில் அதற்கு மாற்றாக ஒன்றை வடிக்க தகுதியான ஒருவர் அவர் மட்டுமே இல்லை. 7 பேர் கொண்ட குழுவாக இருந்திருக்கலாம், ஆனால் அதன் தலைவராய் மட்டுமில்லாமல் அதன் மொத்த சுமையையும் சுமந்தவர் அவரே என டிடிகே போன்றவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்களே..

இந்திய மண்ணுக்கேற்ற மார்க்கசியம் என்கிற புரிதலுக்கு இன்னமும் கூட நாம் வந்திருக்கிறோமா தெரியவில்லை. ரஷ்யாவில் நடந்ததும், சீன, வியட்நாம்களில் நடந்ததும் மண்ணுக்கேற்ற மாற்றங்களுடன்தானே.? இந்த மண்ணில் எப்போதுமே மாற்றங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்று காலம் தோறும் அரசியல் கள்ள தீர்க்கதரிசிகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மார்க்சிய போர்வை அவசியமாகிறது. கட்சிகள் எப்படி அனுமதிக்கிறது… என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. அதுதான்  விசித்திரமான இந்திய மனோபாவம். அம்பேத்கரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியுமா? அப்படி புறக்கணிக்கிறவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது.

ஆண், பெண் குறிகளை அவர்களுடனான புணர்ச்சிகளை கவிதையாக்கி அறிவு தம்பட்டம் அடிக்கிறவர்கள் அம்பேத்கரை, புத்தனை வார்த்தையாக்கி விளையாட நமக்கு இப்போதைய புரிதல் அவசியம் அண்ணலை வாசிப்பது அதை தீவிரமாக இலக்கியமாக்குவது. அதோடு  மார்க்கஸ், அம்பேத்கர், பெரியார் இவர்களின் லட்சியங்கள் எந்தப் புள்ளியில் இணைகிறதோ அதை அரசியல் வடிவமாக முன்னெடுப்பது… முக்கியமாக மார்க்கசிய போர்வையில் புளியேப்பமிடும் ஆட்களை கண்டடைந்து அவர்களை பொதுவெளியில் அடையாளம் காட்டுவது. சர்வாதிகாரத்தில் மட்டுமல்ல சனநாயகத்திலும் களையெடுப்பு அவசியம்.

 ஆயிரம் மாயக்கைகளால் உருமறைப்பு செய்து கொண்டு ஒடுக்கப்பட்டவனின் வியர்வையை மட்டுமல்ல, உடலையும் சுதந்திரமாக அனுபவித்த கொடூரங்களை தர்மமென நியாயப்படுத்திய மண்ணிது… அந்த கொடூரங்களின் 2000 வருட வரலாற்றை முற்றாக அறிந்த அறிஞர் ஆயதங்களை நாடாமல் கருத்தியலை நாடியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள தவறுகிற ஒருவர் தன்னை மார்ஸிஸ்ட் என்று அழைத்துக்கொள்வார் என்று நான் நம்பவில்லை.. அதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமற்ற பாசாங்கு காரணமாக இருக்க வேண்டும். அண்ணல் வன்முறை பாதையை தேர்வு செய்வதினின்று விலகி புத்தனின் பாதைக்கு செல்கிறார். சாதி இந்துக்கள் இவ்வளவு காலம் நமக்கு செய்ததற்கு பதிலாக அவர்கள் மீது பழிக்கு பழி என்பதாக மாறினால் அதன் துயரம் எத்தகையதாய் இருக்கும் எனபது கற்றறிந்த அந்த மனிதருக்கு தெரிந்திருக்கிறது.

இந்து மதத்தை விட்டு விலக அவர் பலவிதமான ஆய்வுகளின் முடிவிலே பவுத்தத்தை தேர்ந்தெடுக்கிறார்..

1) உலகமென்பது இடையறாது இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் உள்ளது. இது புத்தனின் வார்த்தை. 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தன் சொன்னான் ஆனால் இன்னும் இந்த நிலம் இந்து மதத்தாலும் அதன் கொடூர சாதியமைப்பாலும் மேலும் மேலும்.. நசுக்கி கூழாக்கப்பட்டபடியே இருக்கிறது.. ஒவ்வொரு மனிதனும் தனக்கு கீழே ஒரு அடிமை இருக்கிறான் என்று திருப்திகொள்ளும் மனநிலைக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். சுரண்ட லாபகரமான அதை அவன் எளிதாக கைவிடத் தயாராகுமளவு இங்கு பிழைப்புச் சூழல்கள் உத்திரவாதபடுத்தப்-படவில்லை… இந்தச் சூழலில் மார்க்கஸியம் தற்போதைக்கு சாத்தியமல்ல என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தார் என கருத இடமுண்டு. ஓரளவு கறைபட்ட தாளில் புதிய ஒன்றை எழுதலாம் மிக மோசமாக குப்பையாக்கப்பட்டதில் எப்படி எழுதுவது.

(லெனினுடன் இரண்டாம் அகிலத்தில் கலந்து கொண்ட இந்தியர்களும் உண்டு. இம் மண்ணுக்குள் மார்க்கஸியம் நுழைந்து 100 ஆண்டு கடந்துவிட்டது) அம்பேத்கர் எவ்வளவு தூரம் கம்யூனிசத்தை புரிந்து கொண்டார் என்பதை மேற்சொன்னவைகள் கொஞ்சம் விளக்க கூடும். ஆனால் அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியாது. அவர் நசுக்கப்பட்ட மக்களை பிரித்து பலவீனப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கலாம். அவர் அன்றைய சமூகச்சூழலை பிரதிபலித்தார்.
        
ஆயிரமாயிரம் கொடூரக்கைகள் வழியே ஆண் பெண் உடல்கள், அவர்களது உழைப்பு என பெருமிதத்துடன் உறிஞ்சிக்)கொழுத்த மனசாட்சியற்ற பூமியிது. சுரண்டப்பட்டவன் தன் கண்ணை தன் கைகளாலே குத்திக்கொள்கிற அவலம் தனக்கு மேலானவன் என்று சொல்லிக்கொள்பவனை ஏதாவதொரு சமயத்தில் தீண்டிவிட்டால் வசைச்சொற்களுடன் தாக்குதலுடன் எசமானுக்கு பாவம் சேர்த்து விட்ட துயரத்தை சுமந்தவன் தன்னை கழுவிக்கொள்வது தன் மீது துப்பப்பட்ட எச்சிலை கழுவ அல்ல தனக்கு மேலானவனை தீண்டியதற்கான பாவம் தனக்கு வந்து சேரக்கூடாது என்பதற்காகவே…

அந்தளவு மனரீதியாக நாசமான சமூகத்தில் இன்றைக்குள்ள மாற்றங்கள் என்ன என்பது வசுமித்ர போன்ற ஆட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே….

அந்த கேடுகெட்ட அடிமை மனநிலையிலிருந்து இந்திய தொல்குடிகளை மீண்டெழசெய்தவர் அண்ணல் என்பது காழ்ப்புணர்ச்சி பரிதாபங்களுக்கு தெரியாது என்பதால்தானே ஒவ்வொரு மாதமும் அண்ணலின் சிலைகள் உடைக்கப்படுகிறது, செருப்பு மாலைகள் அணிவிக்கப்படுகிறது.

“எனக்கு தாய்நாடு கிடையாது நாங்கள் நாய்கள், பூனைகளை விட இழிவாக நடத்தப்படுகிறோம் எங்களை இப்படி நடத்தக் காரணமான மதத்தை எங்கள் சொந்த மதம் என்று எப்படி சொல்வது. காலங்காலமாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் என் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் இந்நாட்டிற்கு ஏதேனும் கேடு செய்திருந்தால் அது பாவமாகாது”  என்று அம்பேத்கர் சொன்னது காந்தியிடத்தில்.

அண்ணலை ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியாதபடி ஒருவித ஒவ்வாமை இடதுசாரிகளுக்கு இருந்தது. காரணம் இந்திய மனம் விசித்திரமானது அது பல விதங்களில் நுண்மையாக நாசமாக்கப்பட்டுள்ளது, இப்போதும் அது தொடரவே செய்கிறது. அதை முடிவுக்கு கொண்டு வர சமரசம் தேவை என்பதைவிட உண்மையான புரிதல் பலன் தரும்…. நல்ல மனமும் படிப்பறிவும் உள்ளவரையும் தடுமாற வைக்குமளவு மதமும் அதன் சாதிய படிநிலைகளும் அவர்கள் மண்டையில் எல்லா அடுக்குகளிலும் பரவி படந்திருக்கும்.. மார்க்கஸிய, அம்பேத்கரிய, பெரியாரிய லட்சியங்களில் பல காலமாக சுயவிருப்புடன் இருப்பவர்கள் கூட பிறழ்ச்சியுறுவதைப் பார்க்கிறோம்.

புத்தனின் ஆண்குறி பூனை இப்போது வெளியே குதித்து வந்ததல்ல.. இது பழைய பூனைதான். அவர் அம்பேத்கரை விமர்சிக்கவில்லை.. விமர்சித்தால் அது அவரது உரிமை. அந்த விமர்சனம் சரியாக இருப்பின் ஏற்கவோ, புரிதலற்றிருந்தால் மறுத்து புரியவைக்கவோ முயலலாம். ரங்கநாயகியம்மாளைப் படிக்காமலே கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய வர்க்கம் மற்றும் சாதியப் பிரச்சினைகளுக்கு  மார்க்சுடன் அம்பேத்கரும், பெரியாரும் தேவை என்கிற இடத்துக்கு வந்திருக்கிறோம்  

ரங்கநாயகி அவரது புரிதல் மூலம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப் போகிறார். ஏற்கனவே 100 ஆண்டுகள் கடந்தும் யாராவது ஒரு நடிகனின் தோளில் ஏறிக் கடக்கும் நிலைக்கு காரணம் என்ன? என்று நாம் தான் தோன்றித்தனமாகக் கேட்கவில்லை.

பல்லாயிரக்கணக்கான மாற்றத்தை விரும்பும் மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது… அதற்கு காரணம் இது மாதிரியான புரட்சிப் பூனைகள் அடிக்கடி ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக பைகளில் இருந்து வெளியே வருவதுதான் என குற்றம் சொல்ல முடியும். ஒரு கேள்வி அல்லது ஒரு குற்றச்சாட்டு உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துமென்றால் அது அவசியமானதே என்று நாம் சொல்லுவோம். தங்கள் சொந்த வரலாறுகளையே பாதுகாக்காதவர்கள், மக்களிடம் கொண்டு செல்லாதவர்கள் மார்க்ஸிஸ்டுகள் என்று நம்மால் குற்றம் சாட்ட முடியும். வியாசர்பாடியில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு பெயர் காரணம் கேட்டால் விழிக்கும் இளையவர்கள் ஏராளம்.

ஜீவாவை ஏன் நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை என்கிறது போல ஆயிரம் சறுக்கல்கள்.

அம்பேத்கர் பவுத்தம் மாறியது ஒரு சறுக்கல்

அந்த அவசியத்துக்கு போனார் என்கிற சமூக வரலாறை உங்களால் சிந்திக்க முடியாது. அதற்கான அவசியம் இவர்களுக்கு இல்லையென்பதைத் தவிர வேறு என்ன? சூத்திரனாய் கடைசி படியில் இருப்பவனும் சாதிக்கு வெளியே தான் சுரண்டிக்கொள்ள ஒருவன் இருக்கிறான் என்கிற மமதை ஏறிய சமூகம்தானே இது. சாதியின் முதல் படியில் இருந்தும், கடைசி படியில் இருந்தும் மார்க்ஸியத்தை அனுகுவதற்கும், படிகளுக்கு வெளியே நான்கு பிணத்தையும் சுமந்து குமுறும் ஐந்தாவது பிணமான ஒன்றுக்குமான இடையிலான மூச்சு திணறும் அநீதியில் அவருக்கு புத்தன் தேவைப்பட்டார்.. மார்க்ஸிய பார்வை விடுத்து இந்திய மூச்சுத்திணற வைக்கும் சூழலில் அவர் எடுத்த முடிவு சரியில்லை என்று சொல்வது உங்கள் விமர்சனமாக இருக்கலாம். அதைபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பாலியல் வக்கிர கவிதை முணுமுணுப்பு போல புத்தனின் ஆண்குறியில் அம்பேத்கார் அறிவைத் தேடினார் என்று மலினப்படுத்துவது என்பது கேடுகெட்ட சிந்தனை எனபதை தவிர வேறு என்ன?…

100 ஆண்டுகளுக்கு பிறகு அம்பேத்கரை புரிந்துக்கொள்கிற அல்லது இணக்கமாக பணியாற்ற விரும்புகிற இளைஞர்கள் உருவாகிற காலத்தில் உங்கள் விளம்பரங்களை மலிவான வார்த்தைகளில் தேடி புத்தனுக்கு பின் இம்மண்ணில் சனாதனத்தின் மேல் மிக உறுதியான கேள்விகளை வைத்தது மட்டுமின்றி தன் மக்களில் கணிசமானோரை அதற்கு தயார் செய்தது அம்பேத்கர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

மார்க்கஸியம் நுழைந்த நிலங்களில் அதிகளவாக 25 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைபற்றியிருக்கிறார்கள் .நாம் 100 ஆண்டுகளில் தேய்ந்து தேய்ந்து சின்னப்புள்ளியாக ஏன் ஆனோம் என்கிற விமர்சனத்தை  உங்களால் ஆய்வு செய்ய முடிந்ததா? அதற்கான காரணத்தையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?  இப்போது தானே சிவப்பு, நீலம், கறுப்பு கூட்டு அரசியல்கள் பற்றிய முன்னெடுப்புகள் நடக்கிறது. இப்போது அதிலும் கீழறுப்பு வேலைகளை துவக்குவது யார்? இங்கிருந்து போனவர்கள் கம்யூன்களின் முதல் இரண்டாம் அகிலங்களில் கலந்து கொண்டவர்கள் என பழைய சரித்திரம் கொண்ட கட்சியின் இன்றைய நிலை என்ன? அதை விவாதிக்காமல் ஆய்வு செய்யாமல் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் ஒற்றை விடிவெள்ளியாகத் துலங்கி மனிதன் கல்வியின் துணையால்,  நாடு முழுதும் நசுங்கிக் கிடந்த ஒரு சமூகத்தின் முதுகில் தட்டி சுழன்றெழச் செய்து நாமும் மனிதர் தாம், நாமும் சகலமானோர் போல தான் என்று உணரச் செய்தவர்களில் அம்பேத்கருக்கு பங்கில்லையா?

இன்று நீங்களும் நானும் அனுபவிக்கும் சட்டம் இந்து சட்ட மரபிலானது தான். மறுக்க முடியாது. ஆனால் அதில் குறைந்தளவேனும் மேற்கத்திய சாயலுடன் இந்திய சாதிய வன்முறை அமைப்புக்கு கடிவாளம் போடும்படியான நுணுக்கமான சட்ட வரையறைகள் எழுதப்பட்டதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் என்பதையும் அதற்கு அவரது கற்றறிந்த மேதமையும் தான் என்பதை மறுப்பவர் தானா நீங்கள். புத்தாடையை கூட வணிகன் சேற்றிலே புரட்டியே தீண்டபடாதவனுக்கு தருவான் என்கிற இழிவான கலாச்சாரச் சூழலில் பிறந்த மனிதனின் முயற்சியால் இன்று ஆயிரமாயிரம் மனிதர்கள் சட்டம் பயில போகிறார்களே, படித்து உயர்பதவி வகிக்கிறார்களே இதற்கெல்லாம் இதிலெல்லாம் அம்பேத்கரின் பங்கு அவரது அறிவாற்றல் எதுவுமே இல்லையா?

 2000 வருடமாக வேட்டையாடப்பட்ட மனிதனின் துயரம் அவன் வீறுகொண்டு சாதித்து ஒரு பெருஞ்சமூகத்தையே தன்னம்பிக்கை கொள்ள வைத்த வரலாறு உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையென்றால் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை எனும் என்பது இந்திய சாதிய சமூகத்தின் அவலமானதொரு கூக்குரலின் அங்கம் தானே என்று நாங்கள் புரிந்துக்கொள்ளலாமா?… அண்ணலைப் பின்பற்றுகிற எல்லா தலித்தும் பவுத்தத்துக்கு மாற வரிசையில் நிற்கவில்லை அதன் தலைவர்கள் யாரும் அதற்கு அறைகூவல் விடவுமில்லை.

வரலாற்று அடிப்படையில் தமிழர்கள் பவுத்தரே. பவுத்தம் பார்ப்பனிய கசடை எதிர்க்க வந்த ஒரு பண்பாட்டு முறை. அது மனிதனை நான்காக ஐந்தாக பிரிக்கவில்லை. அதில் உள்ள இடைச்செருகல்களையும், மாயக்கசடுகளையும் அம்பேத்கர் ஏற்கவில்லை… பவுத்தம் ஏற்பவன் விஷ்ணு, சிவன், பிரம்மா என்கிற எதையும் ஏற்க கூடாது என்பது விதி… இந்த மறுதலிப்பைச் செய்ய வேண்டிய வரலாற்று அவசியத்தை நீங்கள் விமர்சிக்கலாம். அதை வக்கிர வார்தைகளால் கொச்சைபடுத்த முடியாது.

அவ்வப்போது குதித்து வரும் பூனைகள் இந்த மண்ணில் மாற்றம் நிகழ்ந்துவிடவேக் கூடாது என கங்கணம் கட்டித் திரிகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அம்பேத்கர் கம்யூனிஸ்ட் இல்லை மார்க்கஸியப் பார்வையில் அவரிடம் பதில் தேடுவதில் சில முரண்களை உருவாக்கும். ஆனால் லெனினிய பார்வையில் அணுக ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அது எப்படி?

வி.இ.லெனின் அவர்கள் டால்ஸ்டாயை எப்படி அணுகினார் என்பதை உண்மையான கம்யூனிஸ்டுகள் அறிவார்கள். டால்ஸ்டாய் இலக்கிய மதப்பிரச்சாரத்தின் மூலம் மக்கள் விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர் என்று குற்றம் சாட்டிய அதே லெனின் தான் “எப்பேர்பட்ட மகத்தான கலைஞர் நம் டால்ஸ்டாய். இந்த பிரபு எழுதுவதற்கு முன் உண்மையான ரஷ்ய குடியானவன் நம் இலக்கியங்களில் இடம் பெறவேயில்லையே… ம் இவருக்கு இணையாக ஐரோப்பாவில் ஒருவரையும் சொல்ல முடியாது” என்று மக்சிம் கார்க்கியிடம் சொன்னாராம்.

“டால்ஸ்டாய் அநீதிக்கு எதிரான கண்டனக்காரர், அநீதிக்கு எதிராக மீது குற்றம் சுமத்துபவர், சுரண்டலைப் பற்றி பேசியவர் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை புரிந்துக்கொள்ள தவறி விட்டார்” என்கிற குற்றச்சாட்டையும் வைத்தவர். இதுதான் மிகச்சரியான மார்க்ஸிய அனுகுமுறை என்பது என் கருத்து. ஒர் உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு தெரியும், தெரிந்திருக்கும் அம்பேத்கரை எப்படி அணுக வேண்டுமென்று.    

எலும்புகள் சதையாகவும், சதைகள் எலும்பாகவும் இருந்திருக்கலாம்.

படைப்பில் தவறு நிகழ்ந்துள்ளது என்கிற போக்கில் பகிரங்கக் காழ்புணர்ச்சிகள் சதைகள் எலும்பாக இருக்குமானால் குறிகள் துவளாதென ஞானத்தைப்பொழியும் அசட்டுத்தனமான வார்த்தைகளால் அம்பேத்கரை பகடி செய்கிறார்கள்… பகடியும், விமர்சனமும், குற்றச்சாட்டும், இகழ்ச்சியும் வேறுவேறானவை. அவையனைத்தையும் திட்டமிட்டு ஒரு வார்த்தையில் இணைக்கத்தெரிந்தவர்கள் பொதுவுடமை சமூகத்தை கட்டுகிறவர்களா? அடிப்படையில் மார்க்ஸியர்கள் ஆகச்சிறந்த ஒரு ஆளுமையை எதன் பொருட்டும் முகம் சுளிக்கவைக்க மாட்டார்கள்… சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என்றால் 50 ஆண்டுகள் மீண்டும் பின்னோக்கி செல்கிறார்கள் என்று பொருள்.

இரண்டாயிரம் வருடமாக  கேட்கத் துணிந்தாலும் அதை நிறுவ முடியாத இடத்தில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய 25 வயது இளம் அம்பேத்கரை,  குழு குழுவாக இருந்த சமூகம் அகமண முறைகளால் மெல்ல வளர்ச்சியடைந்ததென 25 வயது இளைஞரான அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகளின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி என்கிற நூலைப்படிக்கட்டும்.  அம்பேத்கரின் பாய்ச்சல் புரியும். இங்குள்ள எந்த மார்க்கஸியரையும் விட அம்பேத்கர் மார்க்ஸை படித்தவர் என்பதை ஒரு பகட்டான வார்த்தையாக நான் சொல்ல மாட்டேன். அது உண்மையான மார்க்கஸியர்களுக்கே புரியும். ஏன் அவர் அதை ஒவ்வாமையோடு பார்த்தார் என்று ஆய்வு செய்யாமல் அம்பேத்கர் ஒன்றுமற்றவர் என்று ஆக்க நினைப்பவர்கள் ஒன்றுமற்றவர்கள் என்று தன்னையே நிருபித்துக் கொள்கிறவர்கள் என்பது நம் புரிதல்.

சாதிய சமூகத்துக்கும், சாதியற்ற சமூகத்துக்குமான போராட்டம் இங்கு காலகாலமாக நிகழ்ந்து வந்திருக்கிறது என்று அம்பேத்கர் சொன்னதன் பொருள் புரிந்தால் புத்தனின் குறியில் அம்பேத்கர் அறிவை பெற்றார் என்று சொல்லும் வாய்ப்பு வசுமித்ரவுக்கு இருந்திருக்காது…. அது அவருக்கு புரியாது.

மதம் கருணையற்ற உலகின் கருணையென மார்க்ஸ் சொன்னது வசுமித்ரவின் காதில் விழுந்திருந்தாலும் கொஞ்சம் நிதானித்திருப்பாr. அம்பேத்கர் இம்மண்ணில் தன் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  அறத்தின் வழியே ஒரு மாற்றத்தை விரும்பினார். நீங்கள் மகாத்மாவென்று புகழும் காந்தியளவு கூட அம்பேத்கர் வன்முறை செய்தவரல்ல. உண்ணாவிரதம், அகிம்சை என்பது உலக கண்ணோட்டம். உண்மையில் அது அகிம்சையா? உங்களால் அதை மார்க்கஸிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியுமா? உறுதியாக சொல்ல முடியும் காந்தியின் உண்ணாவிரதம் மிகப்பெரிய வன்முறை ஆயுதம்…

எரவாடா சிறையில் உண்ணா நோன்பிருந்த காந்தியின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அம்பேத்கருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் என்ன நேர்ந்திருக்கும்.? அகிம்சா மூர்த்தியின் பக்தர்களால் என்ன நேர்ந்திருக்கும்?
  
அம்பேத்கர் நடத்தியது பசியைப் போக்கும் போராட்டமல்ல. மாறாக  சுயமரியாதைக்கான விடுதலைப் போராட்டம். புத்தனுக்குப் பிறகு சனாதனங்கள் அலறிய வெகு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். அம்பேத்கரோடு சமரசம் செய்து கொள்ள அது செய்த எல்லா ஏற்பாடுகளையும் தனியொருவனாக முறியடித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர் சாதித்துக் காட்டினார். அவர் மட்டுமா 8 பேர் என்று உடனே கொதிப்புறுபவர்கள் அவரது குழுவிலிருந்தவர்களின் வாக்குமூலங்களைப் படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோம் .

“இந்து மதத்தில் இருந்து கொண்டே சமத்துவத்துக்காக போராடுவதில் எந்த பலனும் இல்லை… கடவுளே என் கண்முன் வந்து இந்து மதத்தை விட்டுப் போகாதே என்று சொன்னாலும் பவுத்தத்துக்கு மாறும் என் முடிவிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை” என்று அம்பேத்கரை எது தள்ளியது?… உங்களுக்கு தெரியாது ஏனெனில் உங்களுக்கு அது புரியாது என்பதுதான்.

ரங்கநாயகியம்மாளை புரிந்த உங்களுக்கு அம்பேத்கரை புரியாது. அதனால் புத்தனையும் புரியாது. இனி மற்றவர்களாவது புரிந்துக்கொள்ள நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய புரிதல். அம்பேத்கருக்கு புறக்கணிப்போ, அவதூறுகளோ புதிதல்ல..

சனநாயக அறம், சுதந்திரம், சமத்துவம் இது அனைத்தும் பவுத்த அறத்தில் மையம் கொண்டிருப்பதை உணர்ந்த அம்பேத்கரை உங்கள் புரிதலற்ற கிறுக்கலான அளவுகோல்களால் அளக்க முடியாது. அம்பேத்கரின் அறிவே அவருக்கு அளவுகோல்.

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் இம்மூன்று வண்ணங்களும் இம்மண்ணில் மாற்றங்களை நிகழ்த்துமென செயல்படுகிறவர்களுக்குத் தெரியும் அம்பேத்கர் புனிதரல்ல, புரட்சியாளர். புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் என்பதுடன் விடுதலைக்கு அவரே இறுதியல்ல, ஆனால் மாற்றத்தை நோக்கிய பயணத்தின் மைல்கல்.


ரன் கார்க்கி
சென்னை-12
தொடர்புக்கு – jdkarankarki@gmail.com


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular