Sunday, July 21, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்நங்கையின் நாராயணன்

நங்கையின் நாராயணன்

சுஷில் குமார்

த்மநாப சுவாமி கோவில் கோபுரம் அதிகாலை சூரியனின் கதிர் பட்டு நாற்புறமும் பிரதிபலித்து விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுமைக்குமான ஒற்றைக் கலங்கரை விளக்கம் போல நிமிர்ந்து நின்றது. உச்சியிலிருந்து நொடிக்கொரு முறை கிழக்கு நோக்கிப் பறக்கும் புறாக்கூட்டம் சுற்றி வரவர முடிவடையாத பெரும் சங்கிலியாக நீண்டு சென்றது. ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டு வரும் புறாக்கள் தங்கள் முறைமை தவறாது கோபுரத்தின் பின்புறமாக உட்சென்றன. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு பெரும் வீதிகள், அவற்றிலிருந்து கிளைத்துப் பரவிச் செல்லும் உப தெருக்கள், இந்த மைய நகரைச் சுற்றி பக்கத்து கிராமங்களுக்கு விரிந்து செல்லும் வண்டிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள், பாதையற்ற பாதைகள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் திரள். எங்கும் ‘நாராயணா, பத்மநாபா, அனந்தா’ முழக்கம். பெரிய வீதிகள் நான்கிலும் ஓரமாக நெடிய பந்தியில் இலை போட்டு அன்னதானம். முந்தைய மதியம் ஆரம்பித்தது இன்னும் முடிந்த பாடில்லை, இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடருமென செய்தி. ஒரு பந்தியின் எச்சில் இலைகளைக் கொண்டு போய் கொட்டிவிட்டு வருவதற்குள் ஊருக்குள் நான்கு பந்தி மக்கள் பெருகினர்.

மகாராஜா ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மாவின் புகழை அன்னதானம் உண்டு நிறைந்த ஒவ்வொரு நாவும் பாடியது. முந்தைய மாலை பூசை முடிவில் பல்வேறு புதிய நலத்திட்ட அறிவிப்புகளை வாசித்தார் திவான் கிருஷ்ணன் நாயர். மக்கள் திரள் பெருமகிழ்ச்சியில், ‘ஓம், ஓம்’ எனக் கூச்சலிட்டு, மகாராஜா குடும்பத்தையும், திருவிதாங்கூர் நாட்டையும், காக்கும் தெய்வங்களையும் என எல்லோரையும் வாழ்த்தினர். ஒருவருக்கொருவர் மாறி மாறி கட்டிப்பிடித்து ஆடினர்.

“ஏலேய், அதென்ன மக்ளே, திவான் ஏதோ புதுசாச் சொன்னாரே, என்னமோ பெரிய வண்டியாம்லா?”

“அட முட்டாப்பயலே, இது கூட தெரியாதா ஒனக்கு? நான் போன மாசமே அத பாத்துட்டேன், தெரியுமா? செங்கோட்டைன்னு ஒரு பெரிய ஜில்லா உண்டும், தெரியுமா?”

“நமக்கெங்கண்ணே அதெல்லாம் தெரியும். நா திருவந்தரம் தாண்டி எங்க போனேன்?”

“அட கேளுடே, அந்த ஊருலந்து நம்ம கொல்லம் வரக்கி இந்த வண்டி மொதல்லயே வந்தாச்சு பாத்துக்கோ, நா எங்க மாமனார பாக்கப் போனம்லா, அப்பவாக்கும் பாத்தது. தாளி, என்னா பெருசுங்க? அப்பிடியே போய்க்கிட்டே இருக்கு பாத்துக்கோ, என்னா கூட்டம்? என்னா கூப்பாடு? ஆனா, எப்பிடித்தான் பயப்படாம வாரானுகளோ? என்ன ஏறச் சொன்னா, ஊர விட்டே ஓடிருவேன், என்ன சொல்லுக?”

“ஹிஹிஹி. அதான, நம்ம யாரு! வெள்ளக்காரன் கொச்சி கிட்ட வந்தா நீ கன்னியாரில போயி மறுவீட்டுச் சாப்பாட்ட முழுங்கிட்டுக் கெடப்ப.”

“ஆமா, இவரு நம்ம ராசாக்க தளபதில்லா, கேனப் பயலுக்குப் பொறந்த பயல, நாளக்கி வண்டி வரும்போ குறுக்கப் போயி விழுந்துறாத, பொறவு ஓம் பொண்டாட்டிக்கி ஓங் கோவணத்தத் தான் கொண்டோய் குடுக்கணும்.”

சற்று நேரத்தில் குதிரையில் வந்த முண்டாசணிந்த வீரர்கள் கோவில் முன்புற திடலில் இருந்த மக்களை ஓரமாக நிற்கச் செய்து இடையில் பாதையை ஏற்படுத்தினர். மக்கள் ஆரவாரம் வானை எட்டியது. கோவில் கோபுரப் புறாக்கள் கோவிலைச் சுற்றிச் சுற்றி வேகம் கூட்டி பறக்க ஆரம்பித்தன. முரசம் கொட்டியவாறு அங்கிருந்த திடலின் மையத்திலிருந்த பெரிய திண்டின் மேலேறி நின்ற வீரன் ஒருவன் மக்கள் குரலின் ஊடாக தன் குரலை தனித்துப் பெருக்கிக் கத்தினான், “எம்பிரான் திருமேனி, காக்கும் கடவுள், கருணைப் பெருங்கடல், மா சமுத்திர விண்ணவன், பெரும்புகழ் கோன், ஸ்ரீ ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா மகாராஜா வருகிறார், வருகிறார். ஓம், ஓம்.”

மக்கள் கூவி ஆர்ப்பரித்து விண்ணோக்கி மலர் தூவினர்.

சற்று நேரத்தில் பன்னிரு இணை குதிரைகள் மெல்லக் காலடி எடுத்து வர, மூன்று பல்லக்குகள் பின் தொடர, திவான் கிருஷ்ணன் நாயரின் கம்பீரமான குதிரை முன்வர, கருத்த பேருருவுடைய, சர்வ ஐஸ்வர்யங்களும் பொருந்திய, தங்க முகப்படாமணிந்த திருவிதாங்கூர் அரண்மனையின் செல்லப்பிள்ளை நங்கையின் மீதமர்ந்து மக்களைப் பார்த்து ஆசி வழங்கியவாறு புன்னகைத்து நிறைந்து வந்தார் மகாராஜா ஸ்ரீ மூலம் திருநாள். கோவில் முகப்புத் திடலின் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள் நங்கை, துதிக்கையை மேலெழுப்பி தன் தகப்பனைக் கீழ் இறங்கி வருமாறு அழைத்தாள். வயதாகி விட்டிருந்தாலும் மகாராஜாவின் கம்பீரமும் முக லட்சணமும் இன்னும் அப்படியேதான் இருந்தது.

பஞ்ச வாத்தியங்கள் முழங்க, நடன மங்கையர் வரவேற்று ஆடி முன்செல்ல, மகாராஜா கோவிலின் உள்நுழைந்தார். திவான் பின் தொடர, சேடிப்பெண்கள் சுற்றிவர உடன் சென்றாள் அரண்மனையின் மகாலட்சுமி இளவரசி சேது லட்சுமி பாய். அவளது விரல் பிடித்து வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சிறுவன் சித்திரை திருநாள் பாலராம வர்மா.

புதிதாகத் தொடங்கவிருக்கும் புகைவண்டிப் போக்குவரத்து மற்றும் பிற திட்டங்களுக்கான வரைவுகளை அனந்த பத்மன் சந்நிதியில் வைத்து பூசை செய்து பெற்றுக்கொண்டார் மகாராஜா. பின், அவற்றைத் திவானிடம் கைமாற்றி விட முரசம் பலமாக நீண்டு ஒலித்து திட்டங்களை உறுதி செய்தது.

கோவில் பிரகாரம் சுற்றி வரும்போது சித்திரைத் திருநாள் பாலராம வர்மா சேது லட்சுமியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“என்ன வேணும் உனக்கு? மகாராஜா பார்க்கப் போறா, ஓத்திரம் பண்ணாம வாடா.”

அவன் அழுவது போலச் சிணுங்கி அவளை மீண்டும் பிடித்து இழுத்தான்.

“என்ன டா வேணும்? சொல்.” என்று முறைத்தாள் சேது லட்சுமி.

அவன் அவளைத் தன் முகத்தருகே இழுத்து அவள் காதில் கிசுகிசுத்தான்.

“அய்யோடா, என்னால் முடியாது. வேணுமானால் நீயே கேட்டுக்கோ.” என்றாள்.

அவன் மீண்டும் சிணுங்குவதைப் போல நடித்து அடம் பிடித்தான்.

“சரி, சரி. அரண்மனைக்குப் போனதும் மகாராஜா கிட்ட சொல்றேன், இப்ப அழாம வா கண்ணா.”

“எனக்கு பத்மநாப சாமி கோவில் கோபுரமும் வேணுமே!” என்று அவளது ஆடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“அதெப்படி முடியும்? நங்கை இப்பவே அரண்மனைக்குப் போயிருவாளே. மகாராஜா என்ன சொல்லப் போறாரோன்னு நானே பயந்துட்ருக்கேன்.”

“நீ இப்பவே போயி மகாராஜாட்ட கேளு, இல்லைன்னா நான் அரண்மனைக்கே வரல்ல.” என்று பக்கத்திலிருந்த தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றான்.

“அடேய், முரண்டு பிடிக்காம வரியா, இல்லையா?”

அவன் அசைவதாக இல்லை.

“சரி, வா கோவிலை விட்டு வெளியே போவோம் மொதல்ல, நானே போயி மகாராஜாட்ட கேக்குறேன்.”

கோவில் முகப்பில் மக்கள் மலர் தூவி வாழ்த்த, மகாராஜா திண்டின் மீது நின்று எல்லோரையும் பார்த்து வணங்கினார். பின், கோவில் கோபுரத்தை நோக்கி கை தூக்கி வணங்கி பின் மீண்டும் மக்களைப் பார்த்து வணங்கினார். திவான் வந்து அவரது காதில் ஏதோ சொல்ல, மெல்ல திண்டை விட்டுக் கீழிறங்கினார். சேது லட்சுமியைப் பார்த்து கையசைத்துக் கூப்பிட அவள் வந்து குனிந்து வணங்கி அவரிடம் எதோ சொன்னாள்.

மகாராஜா ஒரு கணம் அவளைப் பார்த்து ஆச்சரியமடைந்து சிரித்தார். பின் திரும்பி பின்னால் நின்றிருந்த சித்திரைத் திருநாளைப் பார்த்தார். அவன் வெட்கத்தில் தலைகுனிந்து ஓடிச்சென்று சேது லட்சுமியின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

மகாராஜா திவானை அழைத்துப் பேசினார். திவான் மெல்ல புன்னகைத்துக் கேட்டுக்கொண்டார்.
*
ஒரு வாரத்திற்குப் பிறகு அரண்மனை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த மகாராஜாவைப் பார்க்க வந்திருந்தார் திவான் கிருஷ்ணன் நாயர். மகாராஜாவை வணங்கி அருகே வந்து நின்றார்.

“வாங்கோ திவான். ஏதும் அவசரமோ?” என்று குழப்பமாகப் பார்த்தார் மகாராஜா.

திவான் மீண்டும் வணங்கி புன்னகையுடன், “இல்லை திருவே. எல்லாம் நமது இளவரசின் ஆசை சம்பந்தமாகத்தான். அரசவையில் வைத்து பேச வேண்டாமென நினைத்தேன்.” என்றார்.

“ஓ, அதனாலென்ன, சொல்லுங்கள். முடிந்ததா?”

“மன்னிக்க வேண்டும் திருவே. ஒன்றும் சரியாக வரவில்லை, நம் அரண்மனை ஓவியர்களாலேயே முடியவில்லை.”

“என்ன? ஏன்? ஏன்?”

“திருவே, பாலராமரின் ஆசைப்படி நங்கை வலது முன்னங்காலை கோவில் திண்டின் மீது வைத்து துதிக்கை தூக்கி நிற்க வேண்டுமாம். அப்போதுதான் அவர் அதன் மீது ஏறி நிற்பாராம். இது போதாதென்று பத்மநாபர் கோபுரமும் பின்னணியில் வர வேண்டுமாம்.”

“சரி, அதனாலென்ன?”

“முதலில் நங்கை யார் சொல்லியும் அப்படி நிற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். காலைத் தூக்காமல் முரண்டு அங்குமிங்கும் ஆடுகிறாள். இதில் எங்கே ஓவியர்கள் வந்து அவளை அசையாமல் நிற்கச் செய்து வரைய?”

“என்ன திவான் சொல்றீர், நங்கை நல்லப்பெண் அல்லவா?”

“திருவே, அவள் இதுவரை நிலையாக எங்குமே நின்றதில்லையே! கொட்டிலில் கூட ஒரே ஆட்டம் தானே. என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலராமர் வேறு உணவு உண்ணாது அடம் பிடிக்கிறார். யாரிடமும் பேசவும் மறுக்கிறார்.”

“சேது லட்சுமியிடம் சொல்லிப் பார்த்தீரா?”

“அவர்களும் கையை விரித்து விட்டார்கள்.”

மகாராஜா அங்குமிங்கும் நடந்தவாறு யோசித்தார்.

“சரி, ஒன்று செய்யும், நங்கையை நிலையாக நிற்கச் செய்ய பாகர்கள் வேண்டுமென்று செய்தி அனுப்பும். ஊரெங்கும் முரசம் செல்லட்டும். பார்க்கலாம்.”

திவான் குழப்பமாக தலையசைத்து விட்டு விடைபெற்றுச் சென்றார்.

பதினோரு பாகர்கள் நாட்டின் பல்திசைகளிலுமிருந்து வந்து முயற்சித்துப் பார்த்தார்கள். நங்கையின் ஆட்டத்தை நிறுத்த முடியவேயில்லை. முதல் இருவர் சொல்வதை சற்று பயந்தவளாகக் கேட்டு சில நொடிகள் அசையாமல் நின்றாள், பிறகு ஒரே ஆட்டம்தான். அரண்மனை யானையாதலால் பாகர்கள் குத்தூசியைக் கையால் தொடவே பயந்தனர். அப்படியே குத்தூசியில் எவ்வளவு நேரம்தான் அவளை கட்டுப்படுத்திவிட முடியும்? சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவிற்கு அந்த ஆசை ஒரு நோயாகவே மாறிவிட்டதைப் போலிருந்தது. பகல் இரவு எந்நேரமும் நங்கையின் மீது தான் எப்படி ஏறி நிற்பேன் என்பதையும், பின்னாளில் திருவிதாங்கூர் மகாராஜா ஆனவுடன் அந்த ஓவியத்தை தன் அரசவையில் வைக்கப் போவதைப் பற்றியும் போவோர் வருவோரிடமெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். துணைக்கு ஆட்களில்லா பொழுதுகளிலும் அவ்வாறே தனக்குத்தானே பேசவும் செய்தார். மகாராஜா மூலம் திருநாளிற்கு இது ஒரு தலைவலியாகவே மாறிவிட்டது.

திவானிடம் பலமுறை கலந்துரையாடி செய்தியை நெல்லைச் சீமைக்கும் மதுரைக்கும் அனுப்பினார். வேண்டியதைச் சாதிக்கும் பாகருக்கு மிகப்பெரிய பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது. ஊரெங்கும் அதைப் பற்றிய பேச்சாகிப் போனது.

“நம்ம மகாராசாவுக்கு பித்து புடிச்சிருச்சோ? எவ்ளோ நல்லது பண்ணவரு இப்போ மகனுக்காக இப்பிடி செய்றாரே!”

“ஏல, சத்தமாப் பேசாத, எவனாம் ஒளவாளிப் பயக்க கேட்டுறப் போறான். பொறவு கழுவுல ஏத்திப் போடுவாரு ராசா, தெரியும்லா?”

“அதும் செரிதான், நமக்கென்ன டே, சோமா தின்னமா, மத்தியானம் ஒரு ஒறக்கத்தப் போட்டமான்னு இருக்கலாம், அரச குடும்பத்துல ஆயிரம் நடக்கும். பின்ன, அவ்வோளுக்கு இருக்கு, செய்யா, நம்ம படத்த நம்மளே வரையத்தான் முடியும்.”

“அதச் சொல்லு, இப்ப பாகன்மாரெல்லாம் மாமியா வீட்டுல போயி ஒளிஞ்சி கெடக்கதாட்டும் சேதி உண்டும், கேட்டியா?”

“பின்ன, ஒத்த ஆனைய அசையாம நிக்க வைக்க முடியாம இவனுகோல்லாம் என்ன மயிரு வேல படிச்சானுகோ? ஒருவேள அந்த ஆனக்கி மதம் கிதம் புடிச்சிருக்குமோ?”

“என்ன எழவோப்பா. செரி, பாப்பம், இது எங்க போயிதான் முடியும்னு. எளையவருக்கு எதாம் ஆயிராம இருந்தாச் செரிதான்.”
*
ஒரு வாரம் கடந்தது. சித்திரை பௌர்ணமியின் முன்தினம் மாலை சித்திரைத் திருநாள் மிகவும் முடியாமல் படுக்கையில் கிடக்க, மகாராஜாவும் மொத்த குடும்பமும் வாடிப் போய் சுற்றியிருக்க, அரசாங்க வைத்தியர் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தார்.

“திருவே, எத்தனை நாட்களுக்கு இப்படி காத்திருப்பது? அபின் ஓரளவுக்குத்தான் கொடுக்க முடியும். சித்தத்திற்கு ஆறுதல் இன்றி உடல் எப்படித் தேறும்? இதுபோல் என் வாழ்வில் நான் பார்த்ததேயில்லையே!” என்று வருந்தினார் வைத்தியர்.

மகாராஜா அசைவின்றி சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருக்க, அங்கு வந்த திவான் அவரது அருகே வந்து நின்று வணங்கி ரகசியமாக எதோ கூறினார். மகாராஜாவின் முகம் பிரகாசமடைய சட்டென எழுந்து நின்று, “வாரும், போய் பார்க்கலாம்.” என்றார்.

அரண்மனை யானைக் கொட்டிலில் அரண்மனை பாகர்கள் அனைவரும் பரபரத்து நிற்க, ஓர் ஓரமாக அசையாது உட்கார்ந்து கண் மூடியிருந்தான் ஒரு வாலிபன். கட்டுடல், நீண்ட கேசம், இடுப்பில் வெறும் காவியுடை, மேலுடலில் ருத்திராட்ச மாலை, மார்பிலும் கரங்களிலும் திருநீற்றுப் பட்டை, பார்ப்பதற்கு அந்த பகுதியைச் சார்ந்தவன் போலத் தெரியவில்லை. யாரிடமும் எதுவும் பேசாமல் தனித்து உட்கார்ந்திருந்தான். சிலர் அவனருகே சென்று பேச்சு கொடுத்த போதும் ஒரு பதிலுமில்லை. எல்லோரும் ஒருவித பயத்தோடு அவனை விட்டு விலகி நின்றதைப் போலத் தோன்றியது. கொட்டிலின் உள்ளே நங்கை எப்போதும் போல ஆடிக் கொண்டிருந்தாள்.

மகாராஜா வருவது திவானிற்கும் அங்கிருந்த பாகர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. சற்று நேரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டு அங்கிருந்த அனைவரும் எழுந்து வணங்கி நிற்க, அந்த வாலிபன் இன்னும் அசையாது கண்மூடியே இருந்தான். முதலில் வந்த குதிரையிலிருந்து திவான் கிருஷ்ணன் நாயர் துள்ளியிறங்கினார். அவர் மகாராஜாவின் குதிரையைப் பிடித்து சில அடிகள் உடன் செல்ல, குதிரை நின்றது. மகாராஜா மெல்ல இறங்கும்போதே கொட்டில் வாசலருகே உட்கார்ந்திருந்த அந்த வாலிபனைப் பார்த்தார். திவானிடம் கண்ணைக் காட்ட, திவான் கையசைக்க, அங்கிருந்த அத்தனை பாகர்களும் அங்கிருந்து வணங்கியவாறு வெளியேறினர்.

மகாராஜாவும் திவானும் கொட்டிலின் அருகே நெருங்க, உட்கார்ந்திருந்த அவ்வாலிபன் மெல்ல எழுந்து கைகூப்பி நின்றான். கண்கள் இன்னும் மூடியே இருந்தன.

கைதொடும் தூரத்தில் அவர்கள் நெருங்கியபோது அவன் கண்திறந்து, “திருவிற்கு வணக்கம். சேதியறிந்து பணி செய்ய வந்திருக்கிறேன். அடியேன் மேற்குதிசை ஓவியன். பெயர் நாராயண பிள்ளை.”

மகாராஜா திவானைப் பார்த்து குழம்பியவாறு, “ம்ம், ஆனால் ஓவியம் வரைவது இங்கு குழப்பமில்லையே கொச்சே.” என்றார்.

மெல்லிய புன்னகையோடு, “திருவே, குழப்பம் அடியேனுக்கு விளங்கியது. அதற்கான வழியும் உண்டு. நாளை மாலை முழு நிலவில் எல்லாம் சரியாக்கித் தருவேன்.” என்றான்.

மகாராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவனது முகத்தையும் அவன் பேசிய விதத்தையும் பார்த்து அவருக்குள் ஒரு சிறு நம்பிக்கை உருவாகி விட்டது.

“திவான், இவருக்கு வேண்டியதை செய்து கொடுங்கள். அனந்தன் சித்தப்படி எல்லாம் நடக்கட்டும்” என்றார் மகாராஜா.

*

பௌர்ணமி நிலவு அன்று இன்னும் பிரகாசமாக இருந்தது. மக்கள் கூட்டம் எப்படியோ சேதியறிந்து வந்து கூடிவிட்டது. காவலர் வந்து கூட்டத்தை அமைதிப்படுத்தி அமர வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. திவான் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, பத்மநாப சுவாமி கோவில் திடலின் முன் போடப்பட்டிருந்த ஒரு மர இருக்கையில் அமர்ந்து கண்மூடியிருந்தான் நாராயண பிள்ளை. அவன் முன் பெரிய அரிசி மாவுக் கோலமிட்டு அதன் மத்தியில் ஒரு மண்விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதே காவியுடை, கூடுதலாக தோளில் ஒரு கருப்புத் துண்டு.

மொத்த கூட்டமும் ஏதோ விசித்திரத்தை எதிர்நோக்கி பேச்சற்று இருக்க, மகாராஜா வருவது அறிவிக்கப்பட்டது. நாராயண பிள்ளை மெல்லிய புன்னகையோடு எழுந்து நின்று பத்மநாபர் கோபுரத்தை நோக்கி வணங்கினான். மகாராஜா நெருங்கி வர, மக்கள் கூட்டம் வாழ்த்தி ஆர்ப்பரிக்க, அவன் வான் நோக்கி வணங்கி நின்றான். மகாராஜா கையசைக்க மக்கள் கூட்டம் அமைதியடைந்தது. நாராயண பிள்ளை மகாராஜாவின் அருகே சென்று வணங்கினான். அவர் அவனது கைகளைப் பிடித்து தலையைத் தொட்டு வாழ்த்தினார். இதை எதிர்பார்க்காத மக்கள் கூட்டம் சலசலத்தது. திவானும் கூட என்ன நடக்கிறது என வியந்து பார்த்தார். மகாராஜா அவ்வளவு எளிதில் யாரையும் தொட்டுப் பேசுவதேயில்லை.

நாராயண பிள்ளை மகாராஜாவை மீண்டும் வணங்கி தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான். அவன் தலையசைக்க, திவான் கையசைக்க கோவிலின் பக்கவாட்டிலிருந்து சலங்கையும் சங்கிலியும் குலுங்க முழுதணி கோலத்தில் முகப்படாம் ஜொலிக்க ஆடியாடி நடந்து வந்தாள் நங்கை. மக்கள் கூட்டம் அவளை வாழ்த்தி ஆர்ப்பரித்தது.

பாகர்கள் புடை சூழ கோவில் திடலின் அருகே வந்து மகாராஜாவைப் பார்த்து துதிக்கையை ஆட்டி நின்றாள். மகாராஜா அவளது துதிக்கையைத் தொட்டு முத்தமிட்டு விலகி நின்றார்.

நாராயண பிள்ளை மெல்ல மந்திர உச்சாடனங்களைச் சொல்ல ஆரம்பித்தான். அவனது குரல் தென்றலென எழுந்து காற்றென மாறி பின் அந்தப் பகுதி முழுதும் எதிரொலித்தது. சில நிமிடங்களுக்கு ஒருமுறை நிறுத்தி பூக்களை எடுத்து கண்மூடி தன் முகத்தருகே கொண்டு வந்து பின் அந்த மண்விளக்கை மூன்று முறை சுற்றி கோவிலை நோக்கி வீசி எறிந்தான். நங்கை அவனைப் பார்த்து மெல்ல நளினமாக ஆடிக் கொண்டிருந்தாள். பதினெட்டு முறை அவ்வாறு பூக்களை எறிந்த பின், தன் தோளில் கிடந்த கருப்புத் துண்டையெடுத்து தன் வாயைச் சுற்றி இறுக்கிக் கட்டினான். மக்கள் அவனையும் நங்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலரது முகத்தில் என்னதான் செய்துவிடப் போகிறான் என்கிற கேலியும் தெரிந்தது.

மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் தன் வலக்கையை நீட்டி பாகர்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தான். மக்கள் கூட்டம் பயத்திலும் ஆர்வத்திலும் ஊளையிட்டது. பாகர்களில் ஒருவன் நங்கையின் கால் சங்கிலியை கோவில் திண்டின் அருகேயிருந்த கம்பத்தில் கட்டப் போனான். அவனைப் பார்த்து வேண்டாமென சைகை செய்தவாறே நங்கையை நெருங்கினான் நாராயண பிள்ளை. நங்கையின் துதிக்கை முன்னோக்கி எழ, கால்களை ஆட்டி பிளிறினாள். அச்சத்தம் கோவில் கோபுர புறாக்களை எல்லாம் சிதறிப் பறக்கச் செய்தது. கூட்டத்தில் பலர், “அனந்தா, பத்மநாபா, நாராயணா.” என தங்களையறியாமல் கத்த ஆரம்பித்தனர். நங்கையின் முன் ஐந்தடி தூரத்தில் வந்து நின்றான் நாராயண பிள்ளை. நங்கை மூர்க்கமாக அவனைப் பார்த்து ஓரடி எடுத்து வைத்து துதிக்கை தூக்கிப் பிளிறியது.

மெல்ல புன்னகைத்தவாறே தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த ஒரு குச்சி போன்ற ஏதோவொன்றை எடுத்தான். அவன் கண்களை மூடி ஏதோ உரக்கச் சொன்னவாறு அக்குச்சியை நங்கையை நோக்கி நீட்ட அது ஓர் ஓவியத் தூரிகையாக மாறியது. நங்கையின் துதிக்கை தானாக கீழிறங்க ஒரு கணம் அசையாது நின்றாள். மக்கள் கூட்டம், “ஓம், ஓம்” என்றது. அவன் தன் தூரிகையை ஒருமுறை இடம் வலமாக ஆட்ட, அதற்கேற்றார்போல நங்கையும் இடம் வலமாக ஆடினாள். மீண்டும் ஒரு முறை அவன் அவ்வாறே செய்ய நங்கையும் அவ்வாறே செய்தாள். மகுடிக்கு ஆடும் கருநாகமென நங்கை ஆடியதைக் கண்டு மொத்த மக்கள் கூட்டமும் உறைந்து நின்றது.

மகாராஜாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது. அவரது கைபிடித்து நின்ற சித்திரைத் திருநாள் ஆச்சரியமாகப் பார்த்தபடி சிரித்தான். சேது லட்சுமி நாராயண பிள்ளையை மட்டுமே உற்று நோக்கியிருந்தாள். அடுத்த சில மணித்துளிகள் நாராயண பிள்ளை கண்மூடி சில மந்திர உச்சாடனங்களைச் செய்ய, அதைக் கூர்ந்து கேட்டு அசைவின்றி நின்றாள் நங்கை.

மீண்டும் கண்திறந்த நாராயண பிள்ளை தன் வாயை மூடியிருந்த கருப்புத் துணியை அகற்றி நங்கையை நோக்கித் தூரிகையை நீட்டி, “இவிட வா மோளே.” என்று சொல்லி புன்னகைத்தான். நங்கை தன் காதுகளை ஆட்டியவாறு தாயை நோக்கி ஓடும் கன்றென ஓடி வந்து அவனருகே நின்றது. மக்கள் கூட்டமெங்கும் கேவிக்கேவி அழும் சத்தம். கைதட்டி உற்சாகத்தில் சன்னதம் வந்ததை போல எல்லோரும் ஆட ஆரம்பித்தனர். நாராயண பிள்ளை நங்கையின் துதிக்கையை தடவிக் கொடுத்தான். அதன் முகப்படாமைத் தொட்டு முத்தமிட்டான். நங்கை தன் துதிக்கை நீட்டி அவனை ஆரத்தழுவினாள். அவனை வளைத்திழுத்து தன்னோடு நெருக்கிக் கொண்டுவந்தாள். திடீரென துதிக்கையின் பிடி இறுக நாராயணனை சுருட்டி மேல் தூக்கிப் பிளிறினாள். மக்கள் பயத்தில் அலற, எதுவும் நடக்காததைப் போல புன்னகையோடு அவளோடு இணைந்து உடனிருந்தான் நாராயண பிள்ளை. பின், மெதுவாக அவனைக் கீழேவிட்டு அவன் தலை மீது துதிக்கையால் ஒருமுறை தொட்டுவிட்டு பழையபடி ஆடி நின்றாள்.

சற்று நேரத்திற்கு அங்கு நடந்த எல்லாமே ஒரு கனவு போல எல்லார் மனதிலும் மீண்டும் மீண்டும் வந்து போனது. நாராயணன் நங்கையுடன் சிரித்துப் பேசிக் கொண்டேயிருந்தான். அவளும் அவனுக்கு பதில் கூறி ஆடி நின்றாள்.

நாராயண பிள்ளை திவானைப் பார்த்து கையசைக்க, கோவில் திண்டின் முன் இருபதடி தூரத்தில் ஒரு பெரிய மர மேசை போடப்பட்டது. பின், நான்கு பேர் சேர்ந்து ஒரு பெரிய ஓவியப் பலகை தாங்கியைத் தூக்கி வந்தனர். அதை அந்த மர மேசையின் பக்கத்தில் வைத்து, பல குவளைகளைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்தனர்.

பின் நால்வர் சேர்ந்து ஒரு கருப்புத் துணி சுற்றிய உருளை போன்ற ஒன்றைத் தூக்கி வந்தனர். ஓவியப் பலகையின் அருகே அதை வைத்து தரையோடு உருட்டி விரித்தனர். பெரிய சதுர வடிவிலான ஒரு தட்டி போல இருந்தது. அதை மெல்ல தூக்கி அந்த தாங்கியின் மீது மாட்டினர். அதுவரை யாரும் பார்த்திராத புதியதொரு உத்தியாகத் தெரிந்தது. மெல்லிய பட்டைகளாக சீவப்பட்ட மூங்கில் குச்சிகளைச் சேர்த்து நெய்த மூங்கில் தட்டி!

மகாராஜாவும் திவானும் ஆர்வம் மேலிட வியந்து பார்த்து நிற்க, நாராயண பிள்ளை தன் தூரிகையை எடுத்து கைவீசியவாறு அந்த மர மேசையின் அருகே வந்து நின்றான்.

“வா மோளே, வா, அனந்தனைக் காணாம், வா.” என்றான்.

நங்கை ஆடியாடி கோவிலின் முன் வந்து திண்டின் மீது தன் வலக்காலை தூக்கி வைத்து நின்றாள். கல்லென, சிலையென, கர்ப்பத் திருமேனியென, மகாராஜனென. மக்கள் கூட்டம் ஒருசேர, “அனந்தா, பத்மநாபா, நாராயணா” என்று முழக்கமிட்டது. மீண்டும் மீண்டும் உச்சரிக்க சற்று நேரத்தில் அது, “நாராயணா, நாராயணா, நாராயணா.” என்று மட்டுமேயாகி ஒலித்தது. மகாராஜா மகிழ்ச்சியில் தனை மறந்து இருகை கூப்பி நிற்க, கோவில் புறாக்கள் அத்தனையும் கோபுரத்தோடு ஒட்டியிருந்து, “நாராயணா, நாராயணா.” என்றன.

நங்கை துதிக்கையை மேல்நோக்கித் தூக்கிப் பிளிற, “நாராயணா” எனக் கேட்டது. நோயாளியாக நின்றிருந்த சித்திரைத் திருநாள் பாலராம வர்மா அதுவரை பிடித்திருந்த சேது லட்சுமி பாயின் கைகளை விட்டு, வெட்கம் நீங்கி, நிமிர்ந்து துள்ளியோடிச் சென்று நங்கையின் மீது ஏறி நின்றான்.

***

சுஷில் குமார்

sushilkumarbharathi2020@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular