பச்சை ஆப்பிளின் ஆதி ருசி
சாலையோர வியாபாரக் குரல்களினூடே
அரேபிய பேரீச்சைக் குரலில்
ஆப்பிள் வாங்க அழைத்தாள் ஓர் அழகி
ஆப்பிள் விதைகளின் நிறம் கொண்ட
அவள் உதடுகளிலிருந்து வெளியேறிய
சொற்களில் வீசியது தேன் நிற ஒளி
ஒரு கிலோவுக்கான விலையும்
அமைதியான பச்சை நிறத்தில்
மிளிர்ந்து கொண்டிருந்த
ஒற்றை ஆப்பிளின் விலையும் ஒன்றே
என்றாள் ரகசியக் குரலில்
இரண்டிற்கும் வித்தியாசம் கேட்டவனிடம்
ஒளிரும் ஆப்பிளின் தோலுக்கடியில்
அவன் தேடும் காதலியின் பெயரும்
மற்ற பழங்களில் கடவுளின் பெயரும் என்றாள்
ஒற்றை இறகாக அலைந்து கொண்டிருந்த அவன்
பச்சை ஒளி கொண்ட ஆப்பிளைக் கேட்டான்
காதலியைத் தொட தோலை அறுபடாமல்
சீவ வேண்டும் என்றவளின்
கட்டளையை அடிமை போல் ஏற்றான்
சீவி எடுக்க முடியாமல் நடுங்கிய அவன் கைகள்
ஆப்பிளை பற்களிடம் ஒப்படைத்தன
ஆதிகாலத்தின் நறுமணம் எழுந்த
அந்த ஆப்பிளில்
பிரபஞ்ச துவக்கமொன்றின்
துயரக்கதை மெலிதாக ஒலித்தது
ஒரு துண்டு ஆப்பிளின் ஆதி ருசியை
அவன் நாக்கு உணர்ந்தபோது
யுகங்கடந்த துயரமொன்றை மீண்டும்
நிகழ்த்திவிட்டதன் நிம்மதியில்
சாலையில் எழுந்த காற்றோடு
காணாமல் போயிருந்தாள்
திகைத்து நின்ற கடவுளின் கண்களில்
உருண்ட திவலையொன்று
பெரும் மழையென
கொட்டத் தொடங்கியது
*
மணல்
வெண்நுரை தவழும் அலையில்
விழுந்து மிதந்து அமிழ்ந்து எழுந்து
கரையேறி வீடு செல்லும்
சிறுவனின் மனதில்
சட்டைப் பையில்
எஞ்சியிருக்கிறது கடல்
*
அகம்போக்கு
காதல் என்பது வடிவழகில் இல்லை
கவிதை என்பதும் வரிகளில் இல்லை
காமம் என்பது குறிகளில் இல்லை
கவிதை என்பதும் சொற்களில் இல்லை
காலம் என்பது முள் நகர்வில் இல்லை
கவிதை என்பதும் எழுத்தில் இல்லை
காதல்
காமம்
காலம் எல்லாம் அகமெனில்
கவிதை மட்டும் புறம்போக்கா?
கவிதை ஓர் அகம்போக்கு
*
உப்பு
ருசியின் சாரம் உப்பில் இருக்கிறது
மிகை கொள்வதும் குறை கொள்வதும்
சக்கையை நினைவூட்டும்
உனக்கான காதலையும்
உப்பிட்டு வைக்கிறேன்
யுகங்கடந்த பின்பும்
சரியான பதத்தில் ருசித்திட
*
கடற்பறவை
வெண்ணிற நுரைகளை
பொதிகளாய் சுமந்து வந்து
ஒதுக்கும் கடற்கரையில்
இளைப்பாறுகின்றன
வெண்சாம்பல் இறகு கொண்ட
பெயரறியா கடற்பறவைகள்
நண்டுகள் ஓடி நகரும் அக்கரையில்
சிற்றலைக்குப் பயந்தபடியே
பறவைகளுடன் பேச ஓடுகிறாள்
கூந்தல் அலைபாய்ந்த சிறுமி
அவளின் சிற்றெழில் கரங்களுக்குள்
வேறுலகம் உள்ளதை
கண்டுகொண்ட பறவைகள்
சிறகு விரித்துப் பறந்தெழ
கூட்டத்திலொரு
கடற்பறவையாகி இருந்தாள் சிறுமி
*
நினைவு
மினுக்கும் நீலவானில்
ஒளிரும் நிலவின் அருகே
சிரிக்கும் ஒரு நட்சத்திரம்
நினைவூட்டுவதோ
உன் நகை பூத்த இதழோரம்
மென் வெண்முகில் கீற்றொன்று
காற்றில் அசைந்து நகர்ந்து
கிளர்த்துவதோ
உன் மெல்லாடை ஸ்பரிசம்
மாலை இள மழையின்
மண் வாசம் எழுப்புகிறது
தீரா உன் நினைவுகளின் நறுமணம்
***
கவிஞர் ரகுநாதன் அவர்களின் கவிதை மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது
அருமை நண்பரே………
தங்கள் வாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றி நண்பரே.