கையெட்டும் தூரம்

2

அய்யப்பன் மகாராஜன்

டுத்த பசியால் விழிப்புத் தட்டியபோது மீனாவிற்கு உடல் நடுங்கியது. எழுந்திருக்கும்போது இயக்கம் சற்றுக் குறைந்து பலகீனமாக இருப்பது தெரிந்தது. விளக்கைப் போட்டதும் வெளிச்சத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் கழன்று போவதுபோல தலை உள்ளுக்குள் சுழல, அச்சம் ஒரு தக்கையைப் போன்று இலக்கற்று ஊடுருவியது. சட்டென நினைவு வந்து சுவிட்சிலிருந்து கையை விடுவித்தாள்.

மணி பார்க்க விழைந்த போது பார்வை சற்று ஒளிர்ந்தது. மணி இரண்டு என்பது சிரமமாக தெரிந்தது. இந்த நிசியில் சோற்றுப் பானைக்கு முன் தவம் இருக்கும் ஒரே சீவன் தானாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டாள்.

தாணு மரம் சறுக்கும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் நன்றாக சாப்பிட்டிருக்கிறான் என்பது சோற்றுப் பானையில் தெரிந்தது.

சோற்றைப் பிசையும்போதுதான் தரையைக் கவனித்தாள். விநோதமாக இருந்தது. சிறுசிறு புள்ளிகள் என நிறைய கரும்புள்ளிகள் ஒழுங்கற்று நகர்வது போலத் தெரிந்தன. இப்படித்தான் சமீப காலங்களாக பார்வைக்குள் ஏதாவது அகப்பட்டு வருகின்றன. வெகுநேரம் சுவற்றினைப் பார்க்க நேர்ந்தாலும் இதுமாதிரி ஆகிவிடுகிறது. அவள் புள்ளிகளை கவனித்தாள். அதில் சற்றுப் பெரியதாக இருந்த ஒன்று நீந்துவது போல் செல்வதை கவனித்தாள். அது கவிழ்த்து வைத்திருந்த அரைமூடித் தேங்காயின் இடைவெளிக்குள்ளாக சென்றது. அவள் தேங்காய் மூடியைத் திருப்பினாள். உள்ளே அதுபோல நிறைய இருந்தன. அத்தனையும் கரப்பான்கள். வெளிச்சத்திற்கு அஞ்சி தன்னைச் சுற்றிலும் புள்ளிகளாக அவை ஓடுவதை அவள் கவனித்தாள். பிசைந்த சோற்றுக் கவளம் அப்படியே நின்றது. தலையை வெட்டினால் கூட பலநாள் உயிர்வாழும் பூச்சிகள். வெள்ளை ரத்தம் கொண்ட இருண்ட நிறமுடைய கரப்பான்கள். அவளது வயிறு அடைத்துக் கொண்டது.

“சாப்பிடையில அத நினைக்கக் கூடாது..” முன்பு தாணு பலமுறை அவளைக் கண்டித்திருக்கிறான். காணுவதை நினைக்காதிருப்பது எளிதல்ல என்பதைப் புரிய வைக்க அவளுக்குக் கைவரவில்லை. இவைகளில் தன் வயிற்றிற்குள் சென்றவை எத்தனையிருக்கும்?. இதுபோன்ற யோசனைகளின் மூலம் உணவுமுறை தவறத் துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. சுவிட்சை அணைக்கப் போகையில் தடுமாறி தான் எதன்மீதோ விழுகிறோம் என்கிற உணர்வினை அடையவே அவள் சுயபோதம் இழந்தாள்.

அக்காவிற்காக பலமுறை அவன் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்த போதிலும் தங்குவதும் தவிப்பதுமான நிலை இந்தமுறை தான் நேர்ந்தது. ஒரு மருத்துவர் என்றில்லாமல் ஆளுக்காள் படையுடன் வந்து சூழ்வதும், சோதிப்பதும், கேள்விகள் கேட்பதும், மர்மமான தலையாட்டுதல்களுமாக இருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அவர்கள் நீளநீள சீட்டுகளில் கையெழுத்திட்டார்கள். மருந்துக் கடையிலும் நீளநீள பில்களை அச்சடித்துத் தந்தார்கள். அவனுக்கு அக்காள் உயிர் தப்பினால் போதுமாக இருந்தது. அக்காளின் கண்விழிப்பிற்காக கால்மாடு தலைமாடு என மாறிமாறிக் காத்திருந்தான்.

அந்த வார்டுப் பகுதி மிக நீளமாகவும் நெரிசலின் காரணமாக திறந்திருந்தும் கூட அடைத்தலாகவும் காணப்பட்டது. வெளியே போய்வர ஒரு “பாஸ்” கொடுத்தார்கள். தாணு “பாஸ்” ஆன ஒரே இடம் மருத்துவமனை தான். ஒருசமயம் அவன் உள்நுழையும்போது பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அவனை நிறுத்தி “பாஸ்” என அழைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.

ஒருபுற படுக்கையில் மூதாட்டி ஒருத்தி அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் சதா சிரித்தபடி போவோர் வருவோரை ஏதாவது பெயரைச் சொல்லி அழைத்த வண்ணமிருப்பாள். செல்வச் செழிப்பு மிகுந்தவள் எனக் கேள்விப்பட்டான். ஆனால் வார்டில் எவரேனும் சாப்பிடும் வாயசைப்பைக் கண்டால் போதும். உடனே போய் விடுவாள். வரும்போது கையில் ஏதாவது தின்ன இருக்கும்.

“இவளுக்கு வயிறு எங்கதான் இருக்கோ….?” என தலையிலடித்து சங்கடப்படுவாள் அவள் மகள்.

மறுபுறத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் இருந்தாள். அவளால் தனியாக இயங்க  இயலாது. தானே ஒரு சுமை ஆனது போல் இருந்தாள். கடந்து செல்பவர்களிடம் கருணைக்கு ஏங்கும் அவளது ஆமையோடு விழிகள். தாணுவை உட்காரவைக்கும் பொருட்டு தனது படுக்கை ஓரத்தினை அவள் தட்டிக் கொடுக்கையில் ஒரு நேர்த்தியும் அக்கறையும் அவளிடம் தென்படும்.       

எதிர்ப்புற படுக்கையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு வெகுநாட்களாக சிகிச்சை எடுத்து வரும் ஐந்து வயது சிறுமி இருந்தாள். அந்தச் சிறுமியின் நோய்க் கடுமையால் அவளது தாய் தான் அதிகமும் சிரமப்பட்டாள். நீண்ட நாசியும் நிறைந்த கண்களுமாக திகைந்த அவளது சுழிந்த நெற்றி மீது எப்போதும் ஒரு மயிர்ச்சுழல் கிடக்கும். இசைக்குறிப்பின் எழுத்தினைப் போல. செவிலிகளையும் மருத்துவர்களையும் தேடி அழைத்து வருவதற்கே விதிக்கப்பட்டவளாக இருந்தாள் அந்தப் பெண். மிகுந்த அசதியில் சுவற்றோடு ஒட்டி அவள் தூங்கும் தருணங்களில் அசோகவனத்து மரத்தடியில் உட்கார்ந்து தூங்கும் தன் வீட்டு சீதையின் ஓவியம் நினைவுக்கு வரும் தாணுவிற்கு.      

அம்மா சாகும்போது தாணுவிற்கு மெலிதான நினைவுகளே இருந்தன. “பயல நல்லாப் பாத்துக்கோ…” அக்காளின் மடியில் கிடந்து சொன்னது போன்று சில்லறையாக சில அவனுக்கு நினைவில் இருந்தன. உண்மையில் மீனா அவனை நன்றாக வளர்த்தாள். நன்றாகப் படிக்க வைக்க விரும்பினாள். அவன்தான் படிக்காமல் வந்து நின்றான். அதேசமயம் அவனது நுணுக்கமான வேலைகளைக் கண்டு அப்பாவின் நண்பர் முருகன் மேஸ்திரி அவனை தச்சுப் பணிக்கு அழைத்தார். அப்பாவின் கைராசியாக இருக்கவேண்டும் அல்லது அம்மாவின் உயிரேக்கமாக இருந்திருக்க வேண்டும். “சரியான தச்சுக்காரன்” என்று பெயரெடுத்தான்.

இரட்டைச் சடையுடன் நெசவுக்கு செல்லும் அக்காளின் பின்னே நிக்கரோடு தூக்குவாளியுடன் ஒரு பொடியனாக தானும் சென்றது அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அக்கா மிகவும் சந்தோசமான பெண்ணாக இருந்திருக்கிறாள் என்பதே இப்போது நம்ப முடியாததாகி விட்டது.

சிறுவயதில் அவள் நிறைய ஆசைகளைச் சொல்லுவாள். அவளுக்குள் நிறைய கனவுகள் இருந்தன.

“நீலக் கலரு ஆகாசத்தைப் பாரு. நாம அங்கப் போயி வாழணும்” என்று நிறைந்த வானத்தைக் காட்டுவாள்.

“சரிவராது. ஒனக்கு முத்திப் போச்சி”. முறைப்பான் தாணு.  

“நெறத்தச் சொல்லலடா…. அது மாறிக்கிட்டே இருக்கும். அந்த நீலத்தைப் பாத்ததும் பளிச்சுன்னு நமக்குள்ள ஒரு பிடித்தம் தோணுதுல்ல… அதுமாதிரி….”.

“போட்டீ அந்தப் பக்கம்” என்று சிரித்துத் தலையில் தட்டு வாங்குவான் தாணு.

அவன் ஒரு மர நாடி. அவனை ஒவ்வொரு நாளும் சுதா தனது மன உளியால் செதுக்கினாள். ஒரு வேலையைச் செய்வதற்கும் கையாள்வதற்கும் இடையில் ஒரு பாங்கு ஒரு ரசனை இருக்கிறது. ஒரு தச்சனிடம் அந்த ரசனையை கண்டெடுப்பதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். வெந்தது வேகாதது போலல்ல அது. தாணு இனம் கண்டு கொள்ளப்பட்டான்.

நகரத்தின் மிகப்பெரிய ஓட்டலின் மரவேலைகளை அவன் தான் செய்து கொடுத்தான் மேஸ்திரி முருகன் என்றாலும். ஒருமுறை ஓட்டல் மண்டபத்தில் ஒழுகுகிறது என்று அவனைக் கூப்பிட்டார்கள். முதலாளியோடு அவன் பிணக்கத்தில் இருந்த சமயம். அவனை அழைக்க விரும்பாது முருகனே போனார். வேலைப்பாடு அதிகமுள்ள தூண்கள் கொண்ட மண்டபம். ஒழுகலைக் கண்டுபிடித்து ஒருவழியாகப் பூசி முடித்தபின் மீண்டும் ஒழுகியது. பிறகு அந்த ஒழுகுமிடத்தைக் கண்டுபிடிக்க அவரால் இயலவில்லை. இருட்டிவிட்டது.

“என்னவோய்  ஒழுக்க நெறுத்தலையே… முதலமைச்சர் வாராரு. நாளில்ல பாத்துக்கிடும்…. தாணுப்பயல எங்கே? அவனக் கூப்புடும்!” என்று மேஸ்திரியிடம் சொன்னார் ஓட்டல் உரிமையாளர்.

கிடக்க விடாத நச்சரிப்பினால் அந்த நேரமே வந்தான் தாணு. எந்தத் தயக்கமும் இல்லாமல் சகஜமாக தனது மேஸ்திரியை அழைத்துக் கொண்டு மண்டபத்தினுள் போனவன் ஒரு சுற்றுப் பார்வையால் அளந்தான். பிறகு மண்டபத்தின் மேல போய் பார்த்து விட்டு வந்து ஓட்டல்காரர்களை வெளியேற்றிக் கதவைப் பூட்டினான்.

“தூணுக்கு நடுவுல ஒழுக்கு இருக்குண்ணே… மேலே இடிச்சிக் கட்டிருக்கானுங்க…”

“என்ன செய்யணும்ங்க… விட்டா நீ துணையே இடிக்கச் சொல்லுவே போலருக்கே..?”

“ஆமா”

“என்னடே ஆமாங்க?..”

“நீங்க பேசாமக் கொஞ்சம் தள்ளுங்க” என்றவன் தூணின் மையத்தில் வெளித் தெரியாதபடிக்கு கையால் போடுவது போலவே கைக்குள்ளிருந்த அரைப் பென்சிலால் லாவகமாக கோடிட்டான். பிறகு அதற்கு சில கிளைக்கோடுகளை வரைந்தான். பம்பரம் பற்றுவது போல உளியை வைத்துத் தட்டிச் சென்றுவிட்டு பிறகு அதே வழியில் சுத்தியலால் அடித்து இறக்கினான். மறுகணம் பாளையாக அதனைக் கீறிக்கீறி  வெளியே எடுத்துப் போட்டான்.

மேஸ்திரிக்கு பொறி கலங்கி விட்டது. பயத்தில் தாளிட்டக் கதவை அடிக்கடிப் பார்த்துக் கொண்டார். அலங்காரப் பூக்கள், பொம்மைகள் பெயர்ந்து காலடியில் கிடந்தன.  மொத்தக் கட்டிடத்தையுமே தகர்த்து விடுவானோ என்கிற பீதி வந்தது. இதுபோன்ற பய சந்தர்ப்பங்களில் அடிக்கடி கொல்லைக்குப் போகிறவர்தான் எனினும் அவனை விட்டுப் போக இயலாமல் வியர்த்தார்.

தாணு ஒழுகலுக்கான பாதையைக் கண்டு அதை அடைத்து நிவர்த்தி செய்தான். பிறகு கீறிய அலங்காரத் துண்டுகளை பசையிட்டு வாகான நேரம் வரை  காத்திருந்து கோடிட்ட இடத்தில் சரியாக வைத்துப் பொருத்தி அடித்தான்.

சற்று நேரத்தில் அனைத்தும் முடிய, கதவைப் போய் திறந்து காற்று வாங்கினான். மேஸ்திரி தூணைப் பார்த்தார். அவன் வெட்டிய இடமும் கொத்திய இடமும் காணவில்லை. கோடுகளோ, சிறு பிசிறுகளோ கூட இல்லை. அதன் பிறகுதான் கழிவறைக்கு ஓடினார்.

“கை படாம. நாளைக்குப் பாக்கலாம்…” என்று ஊழியர்களிடம் சொல்லியவாறு நடந்தவனை எட்டித்தான் பிடிக்க முடிந்தது மேஸ்திரியால்.

“என்னடே? ஆப்பரேசன் மாதிரி வெட்டிப் போட்டுட்டே…. கண்டிருந்தாம்னா கதறிருப்பான்..தெரியுமா?”

“மூடு வச்சவனுக்குக் தலப்பு வக்கத் தெரியாதா?” அவன் சொன்னது சரி. அவன் வெட்டிய இடம் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது.

சும்மாவே குரளிக்காரி என்று பெயரெடுத்தவள் குறி கேட்ட பிறகு சும்மா இருப்பாளா என்ற கதையாய் தாணுவைப் பற்றி முருகன் சொன்ன கதைகள்  அவரது மகள் திலகாவின் மனதில் பல வர்ணங்களை விரித்தன. அவன் வரப் போகிற சமங்களில் பார்த்து அவனது ரோசத்தை சீண்டி விட்டாள். ஒருசமயம் அவள் அவனது பையை எடுத்து மறைத்துக் கொண்டாள். கடுப்பில் அவன் மேஸ்திரியின் பையை எடுத்துக் கொண்டு போய்விட்டான். பட்டறைக்கு வந்து சேர்ந்த நிமிடம் மாற்றி எடுத்து வந்து விட்டதாக மேஸ்திரியே பையைக் கொண்டு வந்து கொடுத்தார். அவர் வீட்டை விட்டுப் போன பிறகு அவனைத் தேடிக் கொண்டு பட்டறைக்குக் கிளம்பியவள் போக முடியாமல்  திரும்பினாள். அவளது செருப்பில் “கள்ளி” என்று சிற்றுளியால் கீறி வைக்கப்பட்டிருந்தது.  

உடல் சரியில்லாமல் கிடந்த ஒரு நாளில் அப்பாவுடன் சண்டையிட்டுக் கொண்டானோ என சம்சயத்தை கிளப்பி அவனைத் தேடி வந்தாள். திராணியற்றுக் கிடந்த அவனால் அவளுக்கு ஒப்ப பேச இயலவில்லை. பேச்சுகளை அவள் வளர்த்துக் கொண்டே போகையில் அவளை மடக்க எண்ணி அவன் அவளது கைகளைப் பிடித்து இழுத்தான். அவள் காற்றுப்பொதி போல வந்து விழுந்தாள். ஒரு இளம்பெண்ணின் முழு சுமையை உணர்ந்த நேரம். மனம் ஒருங்கிணைந்து இளமையின் மமதையை இதழ்கள் மூலம் அறியவிருந்த கணம். மீனாவின் சத்தம் கேட்டு குலைந்து காவு போனது.

தெருவிற்கே கூவி சொன்னது போலாகிவிட்டது. முதல் தடவையாக தாணு ஏங்கி முடங்கிப் போய் விட்டிருந்தான். மீனாவின் ஆவேசம் கட்டுப்படுத்த இயலாததாகி விட்டது. தெரிந்த விதத்தில் எல்லாம் தன்னை மன்னிக்கும்படி கோரினான். அவள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, மேஸ்திரியின் வீட்டிற்கே சென்று திலகாவைப் பற்றி குற்றவரிசைகளை அடுக்க, முற்றுப் புள்ளி இறுகியது.

அதன் பிறகு மீனாவின் கண்கொத்திப் பார்வை தாணுவை எந்தப் பெண்ணிடத்தும் நெருங்க விடவில்லை. அந்த துயரப்பாலத்தின் மீது பார மனதுடன் அவன் வயதினைக் கழிய விட்டான்.

கண்விழித்த பிறகு மீனா சகஜமாகப் பேசியது தாணுவிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் மீனாவிற்கு மருத்துவமனை தங்குவதற்கான இடமாகப் படவில்லை. உடலின் அன்றாட வழக்கங்கள் தயவுகளின் பால் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் வீடு திரும்புவதற்குண்டான எண்ணத்தில் இருந்தாள்.  

“யாரு அடைச்சிருப்பா…?”

“எத?”

“கோழிய?”

“சொல்லிட்டு வந்திருக்கேன்… நாகம்ம ஆச்சி பாத்துக்குவா…”

“நீ போனியா?”

“இல்ல. போணும்.”

“தண்ணி வந்திருக்கும். பைப்பு நம்ம வீட்டுல கெடக்குது…”

“புறவாசக் கதவத் தொறந்து விட்டிருக்கேன்… சாந்தி வீட்டுல வந்து பிடிச்சுக்குவாங்க…”.

“என்னைப் போட்டு ஏன் இந்த மாதிரி கஷ்டப்படுத்தணும். வந்து கூட்டிட்டுப் போவக்கூடாதா?”

“யாரு கூப்புடுவா?”

“அம்ம தான்!” திருப்தி வராமல் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை சமாதானப் படுத்த தாணு பிரயாசைப்பட்டான்.

ஒரு வேலைக்காரன் எங்கு ஒரு இடம் போனாலும் வேலைக்கான கண்களை இழக்கமாட்டான் என்பது போல தாணு அந்த மருத்துவமனையின் கட்டிட நேர்த்தி அறிய சமயம் வாய்த்த போதெல்லாம் சுற்றியலைந்தான்.

தரைத்தளம் போனபோது  அங்கு நீண்ட நாசியினைக் கொண்ட அந்தப் பெண் ஸ்கேன் அறை முன்பாக தவித்த நிலையில் நின்று கொண்டிருந்தைக் கண்டான். உள்ளே பரிசோதனையில் துவண்டு போயிருந்த அவளது மகளை பார்க்கையில் பாவமாக இருந்தது. ஒரு பார்வையாளனைப் போல அவன் தயங்கியபடியே நின்றான்.

படிக்கட்டுகளின் மாற்றுப்பாதையின் ஏற்றத்தில் அவளே தள்ளிக் கொண்டு போக வேண்டியிருந்ததால் அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவனே உதவிக்கு வந்தான். சிறுமியை படுக்கையில் நோகாது கிடத்திய பொழுதில் அவளது நீண்ட நாசி முனையிலிருந்து வியர்வையைப்  போல கண்ணீர் விழுந்ததை அவன் கவனிக்கவில்லை.

மதிய உணவிற்குப் பிறகு மருந்துகளின் சடவில் மீனா தூங்கிக் கொண்டிருந்தாள். சிரிப்பாணி மூதாட்டி தனக்கு நேந்திரன் வற்றல் வாங்கித்தரும்படி தாணுவின் பிராணனை வாங்கிக் கொண்டிருந்தாள். “கண்டதையெல்லாம் தின்னா நா பீ எடுக்க மாட்டேன்…” என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள் மகள். மனதின் இலகு வெளிக்காக தாணு தளத்தில் நடக்க எண்ணிச் சென்றபோது அந்தப்பெண் நீண்ட நாசியினைக் கொண்டவள் அவனிடம் வந்தாள்.

“சொந்தக்காரங்க ரெண்டு பேரு வந்திருக்காங்க… ஒங்க பாஸ கொஞ்சம் தரமுடியுமா?” என்று கேட்டாள். அவன் உடனே தனது பாஸினை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் கொண்டு போனவள் இன்னொருவரிடமும் இது போல் உதவி கேட்டு நின்றாள். மேலும் ஒன்று கிடைத்து விட்டால் அவள் உள்ளே நின்றபடியே இருவரையும் அழைத்து வந்து விடலாம். இல்லையெனில் அவர்களை உள்ளே அனுப்பி வைத்து விட்டு அவர்கள் வரும் வரையிலும் வெளியே காத்திருக்கவேண்டும். பார்வையாளர் நேரம் தவிர மற்ற நேரங்களில் பாஸ் இல்லாமல் வெளியேறலாம். உள்ளே அனுமதிக்கவே மாட்டார்கள்.

அந்தப் பெண்ணிற்கு கூடுதலாக ஒன்று கிடைக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் மகளை அருகில் இருந்தவர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டுக் கீழே போனாள். சற்று நேரத்தில் குடைவண்டி வயிறுடன் ஒரு தளர்ந்த பெண்ணும் பருத்த தலையுடன் ஒரு ஆணும் அங்கு வந்தார்கள். வந்த பெண் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடவும் தேம்பவும் செய்ய, சிறுமி அபயத்திற்காக அம்மாவைத் தேடத் துவங்கினாள். அவள் தாணுவை நோக்கிய போது தாணு அவளை அழாதிருக்கும்படி சைகை செய்தான்.

பிரதான வாயிலின் எதிரிலேயே அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். சிறுமி அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் தன்னுடன் வந்தால் அழைத்துச் செல்வதாகவும் தாணு அவளிடம் கூற, தன் சேலைத் தலைப்பினைப் போர்த்தியபடி பின்னால் வந்தாள்.

தாணு புற நோயாளிகளின் பிரிவு வழியாக அவளை அழைத்துப் போனான். அதன் பின்புற படிக்கட்டுகள் வழியே மேலேறி அதன் தடுப்புக் கதவினைத் தாண்டினால் போதும்.

தாணு கதவை நெக்கிய நேரம், அந்த இருளின் புலப்படாத பக்கத்திலிருந்து “பாஸ்” என்றொரு குரல் கேட்க, சீருடை கொண்ட நபர் ஒருவர் வந்து கை நீட்டினார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மனிதர் ஒரே வார்த்தையாக “நோ” சொன்னார்.  அவன் அடைபடாத கோழி போல சி.டி.ஸ்கேன் பகுதிக்கு கூட்டிச் சென்றான். அங்கும் வித்தை செல்லுபடியாகவில்லை.

கடைசி முயற்சியாக பரிசோதனை முடிவுகள் தருமிடத்திற்கு அழைத்துச் சென்றான். சிறிய சிறிய அறைகள் கொண்ட அந்தப் பகுதி மிகவும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் காணப்பட்டது. அதன் படிக்கட்டுகள் மேலே செல்லும்போது வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து முடிவில் இருண்டு காணப்பட்டது.

அவர்கள் ஒரு புதிய தளத்தினை அடைந்த போது நடை சத்தத்தினை தவிர வேறெதுவும் கேட்காத அமைதி கிடந்தது. முடிவில் தளம் இரண்டாகப் பிரிய முன்பு தடுத்தனுப்பியவன் நின்று கொண்டிருந்தான். தாணு சட்டென வலது பக்கம் திரும்ப அவன் எதிர்பார்த்தபடி அவர்களது வார்டின் தளம் வந்தது.

சிறுமி ஏங்கிப் போய் இருந்திருக்கவேண்டும். தாய் கட்டி அணைத்ததும் அழத் துவங்கினாள். பருத்த தலை மனிதன் தாணுவை சிநேகபூர்வமுடன் கவனித்தான்.

“ஸ்டூல எங்கே?” என்று மீனா கேட்டபோது தாணு திலகாவின் நினைவில் இருந்தான். மீனா செய்த காரியத்தால் மனமுடைந்து போயிருந்தாள் திலகா. மேஸ்திரியும் கூட. எனினும் அவர் வேலைக்கு அழைப்பதை நிறுத்தவில்லை. அவருக்கு தாணுவின் தந்தையைப் போல அவனையும் மிகவும் பிடிக்கும்.

“நீ போறதானா போலாம்… ஆனா என் வீட்டுக் கதவு எப்பவும் உனக்கு தொறந்திருக்கும்” என்றார். தனியாக எடுத்து நடத்தச் சொல்லி தாணுவிற்கு நிறைய வேலைகள் வந்தன. ஆனால் தாணு முருகன் வீடு தேடியே வந்தான். வரும் சமயங்களில் தாணு திலகாவைத் தேடினான். அவள் அகப்படவில்லை. ஆனால் அவன் கிளம்பும் சமயங்களில் மட்டும் சன்னல் ஓங்கி சாத்தப்படும் சத்தம் ஒவ்வொரு தடவையும் கேட்டது. ஒரு வன்மத்துடன் வந்த அந்த சத்தத்தினை அவன் தினந்தோறும் கேட்டான். மேற்புற சன்னலில் எட்டிப் பார்க்கவும் முடியாது.

ஒரு நாள் சத்தம் கேட்டும் அவன் போகாமல் நின்று விட்டான். சில நொடிகளில் சன்னலை அழுத்திக் கொண்டு வந்து நிற்கும் திலகாவின் முகம் தெரிந்தது. வலிய மூர்க்கம் கொண்ட ஒற்றைப் பெருமூச்சினை விடுத்து விட்டு அவள் விலகிப் போனாள். துண்டாடப்பட்ட பல்லியின் வாலைப் போல இருந்தது அவன் நிலைமை.

வெள்ளிக்கிழமை கருக்கலுக்குப் பிறகு ஆற்றங்கரைப் பக்கமாக இருந்த கோயிலுக்கு அவள் எண்ணெய் கொடுத்து விட்டு வருவது வரையில் காத்திருந்து அவளை எதிர்கொண்டான்.

“இது ஆறாது தாணப்பா…  ஒங்கக்கா செஞ்சத ஒருக்காலமும் மறக்க முடியாது.

அவ இருக்கற வீட்டுக்குள்ள ரகசியமா குடும்பம் நடத்த என்னைக் கூப்பிடாதே…

அவள விட்டுட்டு வாரதானா வா!.”

அதன்பிறகு அவள் சன்னல் கதவினை அடைக்கவில்லை.

“ஏன் நின்னுக்கிட்டு இருக்கே. நம்ம ஸ்டூல எங்கே?” மீனா மீண்டும் கேட்டாள். அவன் எதிர்ப்புறம் கையைக் காட்டினான். நீண்ட நாசியுடைய பெண்ணின் உறவினர்கள் இரண்டு ஸ்டூல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

“அந்தப் பிள்ளைக்கு எப்படி இருக்காம்?”

“தெரீல”

“பாவம்!” மீனா எதையோ நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தலையாட்டிக் கொண்டாள்.

பிறகு வந்த நாட்களில் தாணு வீட்டிற்குப் போவதும் சில சில்லறை வேலைகளை ஏற்பதுமாகக் கழித்தான். நாளின் பல நேரங்களை திலகா ஆக்கிரமித்துக் கொள்வாள். அந்நேரங்களில் மனம் கப்பிப் போய்விடும். விடுபட முடியாது என்றாலும் விடுபடவே முடியாது என்றாகிவிடக் கூடாது என தீவிரத்தோடு வேலைகளை செய்தான்.

மீண்டும் அவன் மருத்துவமனையில் தங்க நேர்ந்த போது தளத்தின் படிக்கட்டினை ஒட்டி அந்தப் பெண் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். முகத்தினை அவளது சேலைத் தலைப்பு மூடியிருந்தது. அதன் வெண்மையினுள் பவ்யமான விளக்கொளியில் துயரத்தோடு அழுது கொண்டிருந்தது அவளுடைய நீண்ட நாசி. எழுந்து கொள்ள அவன் அசைந்த போது அவள் துணியை விலக்கி அவனைப் பார்த்தாள்.

“ஒங்க குழந்தைக்கு சரியாயிரும்”

அது மேலும் உடைப்பெடுத்து விட்டது போலும். அவள் தலையாட்டினாள். பிறகு அழுதாள்.

“பாருங்க… இங்கேருந்து போகும்போது உங்க குழந்தையோட சந்தோசமா போவீங்க”

“நிம்மதியா போனாப் போதும்” நாசியினை இடதும் வலதுமாக சுழித்துக் கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாகக் கழிய, நினைவு போதாமையினால் அவன் சிரித்து விட்டான். இருந்தும் அதை மறைக்க முற்பட்டான்.

“ஏன் சிரிக்கிறீங்க?”

“வேற. சும்மதான்”

“சும்மலாம் சிரிப்பீங்களா?”

“செல சமயம்” அவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“நீங்க சொல்லித்தான் ஆவணும்…”

“இல்ல… உங்க மூக்குக்கும் உங்களை மாதிரியே ஒசரம்!”

“நீளம்”

“ம்கூம். ஒசரம்…”

அவளும் சிரித்தாள். நாசியிலிருந்து பூத்தது அந்த சிரிப்பு. நெற்றி மலர்ந்தது.

“உங்க பேரு என்ன?”

“பேரு சொல்லிக் கூப்பிடணுமோ?”

“கூப்பிடக் கூடாதா?”

வேண்டாம்”

“ஏன்?”

“வேண்டாம்னா வேண்டாம்.”

“அவங்கப்பா வரதில்லையா?”

“அவரால வர முடியாது. பாவம். கடினமான வேலை”

“அப்பக் கஷ்டந்தானே…!”

“அவரு ஒரு ஞானிப்பா!. அவருக்கு வலி கெடையாது. நிரந்தரமான சந்தோசத்தத் தேடுறவரு.”

“இமயமலையில இருப்பாரோ?”

“சவூதி அரேபியாவுல.”

“ஆங்? புள்ளையப் பாக்க வரல?”

“அடுத்த ஜென்மத்துல பாத்துக்கலாம்னுட்டாரு. இந்த ஜென்மத்துல விதி இல்லையாம். நா காத்திருக்கணுமாம். அஷ்டமா சித்தி!.”

”ஞானின்னீங்க?”

“அப்படித்தான் சொல்லுவாரு. ஆனா போகும்போது எனக்குத் தெரியாம ரெண்டு பொண்ணுங்கள கூடக் கூட்டிக்கிட்டுப் போயிருக்காரு. இப்ப அவங்க அவரோட இக்குல ஏறி உக்காந்திருக்காங்க. இனிமே அவங்க விடமாட்டாங்களாம்”

“குழந்தை கிட்ட ஃபோன்லயாவது பேசுறாரா?”

“ப்ச்”

அதன்பிறகு வெகுநேரம் பேசாமல் இருந்தார்கள். ஒன்று விட்டு விளக்குகள் அணைக்கப்பட, இருளும் ஒளியுமென பப்பாதியாக இரவு கடந்து போனது.  வலித்த தன் கால்களை அவள் நீட்டியபோது இடம் விட்டு  விலகி அமர்ந்தான். மேற்படியில் அவளது தலை சாய்ந்த போது தான் கவனித்தான். அவள் உறங்கிப் போயிருந்தாள். அவன் தனது போர்வையினைக் கொண்டு அவள் கால்களை மூடினான். இருந்தும் உடைந்த பலூன் துண்டில் ஊதிப் பெருகிய குமிழ் போல இருந்த அவளது விரல் முனைகளை மூட இயலவில்லை.

காலையில் மீனா விழித்த போது தாணு எதிர்ப் படுக்கையில் சிறுமியின் அருகில் இருப்பதைக் கண்டாள்.

“ஏதாவது வேணுமாக்கா?” என்று உடனே வந்தான்.

“நீ கேக்கறியா, நா கேக்கட்டுமா?”

“என்னத்தைய?”

“வீட்டுக்குப் போறத!”

“சரியாக வேண்டாமா?”

“போனாத்தான் சரியாகும்”

மீனா அவன் பேச்சினைக் கை விட்டுவிட்டு எதிர்ப் படுக்கையினை கவனித்தாள். சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். தொண்டையில் ஒரு மிடறு கசப்பு இறங்கியது. அருகிலிருந்த சுவற்றில் அழிபடும் கோடுகளாக கறுத்த புள்ளிகள் நீந்தத் துவங்குவதைக் கண்டாள்.  

அன்று ஞாயிற்றுக் கிழமை. மருத்துவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தலைமை மருத்துவரைக் காண அவரது வீட்டிற்குக் கிளம்பினான் தாணு. அதற்கு முன்பாக சிறுமியிடம் சிறிது நேரத்தை செலவிட்டான்.  நம்பிக்கையூட்டும்படி பேசினான். அவளது கையைத் தொட்டுத் தூக்கிய போது அது பஞ்சு போல வந்தது. மருந்துகளிறங்கிய பகுதியினை அவன் நீவிக் கொடுத்த போது அவள் பிடிக்க முயல்வதை உணர்ந்தான்.

தலைமை மருத்துவர் மீனா படுக்கை சிகிச்சையில் மேலும் இருக்க வேண்டும் எனவும், அவளது தலையில் காசநோய் பீடித்திருப்பதாகவும் சொல்லி  அபாயத்தை விளக்கியபோது அவன் நாடி தளர்ந்து வெளியேறினான்.

பரம்பரையின்  பலத்த கதை தகர்ந்து தற்போது தான் மட்டும் விளிம்பில் நிற்பதாக தெரிந்தது. ஒரு குற்றுச்செடியான தானும் பெயர்ந்து விட்டால் ஒரு பரம்பரையின் சுவடே இல்லாது போகுமே என நினைத்த போது வெப்புறாளமாக வந்தது.       

முன்தளத்தில் வெளியிலிருந்து நீண்டு வந்திருந்த மரக்கிளை ஒரு இறந்த மனிதனின் எலும்பினைப் போல துருத்திக் கொண்டிருக்க, அதன் முனையில் யாரோ விட்டுச் சென்றிருந்த பழந்துணி பறந்து கொண்டிருந்தது.

மனப்புலம்பலை தவிர்க்க தரைத்தளத்தின் அமைதி நோக்கிச் செல்லுகையில், யாரோ அழைப்பது கேட்டது. நீண்ட நாசி உடைய பெண் அவனை நோக்கி வேகமாக வந்தாள். ஒரு குழந்தை தன் இரு கைகளையும் உயர்த்தி பறப்பதற்கு செய்வது போல தாவிக் கொண்டு.

“நீ எம்பொண்ணுக் கிட்ட பேசினியாமே…!”

“சரியாயிரும் பயப்படாதேன்னு சொன்னியாமே…!”

“அவக் கொஞ்சம் சாப்பிட்டாடா….”

“எம்பொண்ணு கேட்டு வாங்கி சாப்பிட்டாடா…!”

அதிசயம் போல மகிழ்ச்சியில் அவள் பாதங்கள் தரையில் தாவிக் கொண்டிருந்தன.

ஒரு வேத பாடசாலை அறை போல நீண்டு கிடந்த அந்த அறையின் தனிமையில் ஒரே சமயத்தில் அவள் மகிழ்ச்சியின் பாலும் அவன் துயரத்தின் பக்கமும் நிற்கும் படியாக அமைந்தது.    

“ஸ்வீட் சாப்பிடறியா?”

“வேண்டாம்”

“என்ன வேணும்?”

வேர் அற்றுப் போகும் துயர மிகுதியில் அவனால் எதுவும் கேட்க இயலவில்லை. அவளது நீண்ட நாசியின் மேல் கண்கள் ஒளிர்வதை கண்டான்.

“ஒரு சிகரெட்டு…?”

“செத்தே….”

“முத்தம்?”

அவள் சட்டென விலகினாள். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சந்தோசத்தை விசிறி விட்டு வந்த வேகத்தில் போனாள்.

தாணு பொறி கலங்கிப் போய், தரையில் தாழ்ந்து விடாதபடி சுவற்றோடு மடிந்து கொண்டான். சலசலப்புடன் ஓவிலிருந்து பெய்த நீர் நின்ற அமைதிக்கு மனம் இற்றுப் போன பின் அவன் வார்டுக்குள் வந்தபோது மீனா அவனைத் தேடிக் கொண்டிருந்தாள்.

“டாக்டர் என்னடா சொன்னாரு?”

அவன் அவளது கைகளுக்குள் தன் முகத்தினை அடக்கிக் கொண்டு கவிழ்ந்து கொண்டான். அவள் வானம் பார்த்தும் அவன் பூமி பார்க்கவுமாய் நீண்ட நேரமாகக் கிடந்தார்கள். இரவு நீண்டு போய்க் கொண்டிருந்தது.

தன் சட்டை இழுக்கப்படுவதை உணர்ந்து தாணு எழுந்து பார்த்தான். அந்தப் பெண் அவன் பிறகே நின்று கொண்டிருந்தாள். தன்னுடன் வருமாறு சைகையால் அழைத்தாள். அவன் எழுந்து அவளோடு செல்ல, மருந்துகளின் கட்டுப்பாட்டில் தூக்கத்தில் உழன்று கொண்டிருந்த மீனா தனது அரை ஓர்மை கொண்டு அதனை கவனித்தாள்.

“என்னக் கேட்டே…?”

தாழ்ந்த பிரிவின் மூலையில் அவள் நின்று கொண்டு கேட்க, தனது சிவந்த கண்களால் அவளை ஏறிட்டான். அவனது தலையினை மயிர்க் கொத்தாக பற்றிய அவள், அவன் திளைத்துத் தளும்பித் திணறும் வரையிலும் முத்தமிட்டாள். அவளது நாசி அவன் முகமெங்கிலும் கோலமிட்டது. அவன் உடல் கிடுகிடுத்து கண்கள் பொங்க கண்ணீரால் கரைந்தான்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“என்னை விட ரெண்டு வயசு சின்னப்பய நீ…. “

“வயசுல சின்னப் பொண்ணா நெனச்சிக்கறேன்…”

“நெனச்சா…. ஆயிருமா?”

“நெனச்சாத்தானே ஆவும்..”

“என்ன தைரியம் ஒனக்கு?”

“குழந்தைய நல்லாப் பாத்துக்குவேன்…”

“பொடிப்பயலே…!”

அவள் போன பிறகும் அவனது உடம்பினுள் வெப்பமாய் அவள் இணைந்தாள். வாசனையாய் பரவினாள். அவன் வியர்த்து வியர்த்து அடங்கினான்.

அதிகாலை தேநீர்க் கடை முன்பாக நின்று கொண்டிருக்கும் போது அவள் சொன்னாள்.

“ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா… அதுமட்டும் போதும்னு நெனச்சா போதும்தான். ஆனா எம்மனசு தயாரா இல்லடா. தயாரா ஆகுமான்னு கேட்டியானாத் தெரியாது… என்னப் பேசுனாலும் பேசியும் தீராத விசயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே தான் இருக்கும். ”

“நா ஒன்னும் செத்துப் போயிற மாட்டேன்… கொஞ்ச நாள் போகட்டும்… “

“ரெண்டு தீவாளி?”

“ஆங் பாக்கலாம். ராணித் தோட்டம் தெரியுமா?. பஸ் டிப்போ முன்னாடி ஒரு திருப்பம் வரும்… திரும்பி உள்ள வந்து நாகேஸ்வரி வீடு எதுன்னு கேளு…”

“ஒங்க பேரு நாகேஸ்வரியா?”

“பின்னே?”

“நோஸ்மம்மினு நெனச்சேன்”

“ஆங்?”

“மூக்கம்மா…” என்றான். அவள் தன் நாசியினைத் தட்டிப் பார்த்துக் கொண்டாள்.

“நா ஒண்ணுக் கேக்கட்டுமா? என்னை ஏன் அடிச்சீங்க?”.

அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு சமாதானத்திற்கு இறங்குவது போல பார்த்தாள்.

“ஆத்தரம்”

“எம்மேலயா?”

“என் வீட்டுக்காரரு மேல”.

அவர்கள் உள்ளே வந்த சமயம் மீனா மூச்சிரைக்க பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவன் தடுக்க முயற்சித்த போது,

“ஒன் ஆசைக்காகத் தானே என்னை இங்கப் போட்டுக் கொல்லுதே? நா எதுக்காக உயிர் வாழனும்?” என்று கேட்டாள்.

அவள் வீம்பினை மருத்துவர்களாலும் கூட தடுக்க இயலவில்லை. வீட்டிற்கு வந்த பிறகும் கூட விசாரிக்க வந்தவர்கள் யாருடனும் அவள் ஒத்துப் போக வில்லை. மருந்துகளை எடுத்துக் கொள்ளும்படி வேண்டிய போதும் மறுத்து விட்டாள். நலிவுக்கிடையே கூட அவள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தது அவனைத் தாழ்வுறச் செய்தது. வேலைக்குப் போகும்போதும் வரும்போதும்  அவளுடைய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிலநேரங்களில் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் சமயங்களிலும் கேட்பது போலிருந்தது.

ஆறுதலுக்காக மறுநாள் வேலை முடித்து விட்டு நாகேஸ்வரியினைப் பார்க்கப் போக வேண்டும் என நினைவில் வைத்துக் கொண்டான். காலை செய்தித்தாளைப் புரட்டினான். அதன் ஒருபக்கத்தில் சிறுமியின் புகைப்படம் வந்திருப்பதைக் கண்டான். நடுக்கமுடன் அவன் அதையே பார்த்தான். அது அவளது மரணத்தினை கட்டமிட்டு சொன்னது. அவன் தனக்குள்ளே நேர்கீழாக விழுவதை உணர்ந்தான். விதியின் அகங்காரத்தின் முன்னே பைத்தியமாக பலியாகப் போகிறோமோ என அச்சம் வந்தது.

ராணித்தோட்டம் போய் வீட்டினைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. மருத்துவமனையில் கிடந்தது போலவே சிறுமி வைக்கப்பட்டிருந்தாள். பூத்திருக்கும் மெலிந்த அந்தப் புன்னகை கூட மாறவில்லை. அதன் கைகளைத் தொட்டுப் பேச ஆசைப்பட்டான். நாகேஸ்வரி உடலெல்லாம் கலைந்து உருவிழந்து கதறிக் கொண்டிருந்தாள். சடலத்தின் புகையுடன் கடைசி வாயு பொட்டிக் கொண்டு வரும் வரையில் இருந்து விட்டு தாணு கிளம்பினான்.

தனித்து வரும்பொழுது மனம் கொஞ்சம் பிசகியது. தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டான். அது கைகொடுக்கவில்லை. எதிர்பாராமல் மின்சாரமும் நின்றுவிட்டது. சாலை பூராவும் இருள். பாயும் கனத்த கருமை. எதிரில் யார் வந்தாலும் தெரியாது. நடையில் அச்சுத் தவறியது. முரட்டிருட்டில் ஒரு அடி வைக்கவும் பயம் வந்தது. மரணத்தை நெருங்குவது போல நெஞ்சை அழுத்த மூச்சு அசவுகரியமானது.

மரணம் இப்படித்தான் வருமா? அம்மாவை நினைத்துப் பார்த்தான். அம்மாவும் இப்படித்தான் வலிக்க செத்திருப்பாளா? அக்காள் இப்படித்தான் சாகப் போகிறாளா? சிறுமி சாவுகையில் வலித்து துடித்திருப்பாளா? வலிக்காத சாவே இல்லையா? சிறிய பூச்சியொன்று கண்ணில் அடிக்க அதன் சத்தம் திகிலூட்டியது. ஊசியாக ஊடுருவிய வலி கண்ட வேகத்தில் பரவியது. இருளினுள் இருளாக புள்ளிகள் பறந்தன. திசை எதுவென்று அறிய முடியவில்லை. சத்தம் போடலாமா? அக்காள் எந்நேரமும் சத்தம் போடுவது வலியினால் தானா? அழலாமா? அழுதால் தீருமா? என்ன சொல்லி அழுவது?

காலில் கல் இடறியது. பெருவிரல் நுனியில் அதிர்வு பாய்ந்து தலைக்குப் போனது.

“அக்கா…அக்கா….” என்று அழைத்தழுதான். “ஓ!” என்று யாரோ எங்கிருந்தோ அதற்கு பதில் குரல் கொடுத்தார்கள்.

அம்மா சாகும்போது என்னைப் பார்த்துக் கொள்ளும்படி அவளிடம் சொன்னாளே. அவளை பார்த்துக் கொள்ளும்படி யாரிடமும் சொல்லவில்லையே?.

சட்டென நின்று விட்டான். “நா எதுக்காக உயிர் வாழணும்?” அவள் ஏன் அப்படிக் கேட்டாள்.

இந்த வாழ்க்கையில் அவளுக்கு என்ன கிடைத்திருக்கும்?. அக்காள் இதுவரை எதற்காக வாழ்ந்தாள்?.

பாதுகாப்பாய் நான்கு வார்த்தை சொல்லியிருக்க வேண்டுமோ?. சொல்லாமல் புரியாதா?.

“நான் மாறும்போது, என் குணம், பழக்கங்கள் மாறும்போது என்மீதான நம்பிக்கைகளும் மாறுகிறதா?”

வெளிச்சம் வந்தபோது அவன் சாலை மத்தியில் சரிந்திருந்தான். அக்காளிடம் மனம் விட்டுப் பேசினால் சரி செய்ய முடியுமென நம்பிக் கொண்டான். தெம்பு வந்தது.

அம்மாவின் நினைவு தினம் வந்த அன்று மீனா அவனுக்குப் பிடித்த மாதிரி சமையல் செய்து கொடுத்தாள். அவனுக்கு எதுவும் இறங்கவில்லை. அன்று நாகேஸ்வரியைக் காண வேண்டுமெனத் தோன்ற மீண்டும் அவன் ராணித் தோட்டம் போனான்.

கதவு சாத்தப்பட்டிருந்தது. அவன் தட்டியபோது கதவைத் திறந்து கொண்டு குடைவண்டி வயிறு கொண்ட பெண்மணி வந்து “யாருப்போ?” என்றாள்.

அவன் “நாகேஸ்வரி…” என்றான்.

“அப்படிலாம் யாரும் இல்ல” என்று கதவை அடைத்தாள். சற்றுநேரம் நின்றான். பின்புறம் பேச்சு சத்தம் கேட்டது.

அவன் ஏமாற்றத்தோடு நடக்கத் துவங்கினான். யாரோ வேகமாக வருவது தெரிந்தது. பருத்த தலை கொண்டவன் அவனருகே வந்து தோளில் கை இட்டான்.

“நல்லவிதமா சொல்லுதேன் கேட்டுக்கோ. நாகேஸ்வரி எங்க வீட்டுப் பொண்ணு.  அவள நாங்க பாத்துக்குவோம்…

“சாவன்னைக்கு நீ வந்திருந்தல்ல…. பாத்தேன். அப்ப எதுவும் சொல்ல வேண்டாமேனு விட்டுட்டேன். அதான்!”

“இனிமே இங்க வாறது வேண்டாம். எனக்கது பிடிக்கல”

“அவங்கள ஒரே ஒரு தடவ பாத்துட்டுப் போயிர்றனே…”

“ஆம்பளைங்க இருக்கோம். நாங்க பாத்துக்குவோம்…“

தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுப் போனான்.

வரும்போது மருத்துவமனையைக் கடக்கையில் ஏனோ உள்ளே செல்லத் தோன்றியது.

மீனா இருந்த படுக்கையைச் சுற்றி துணி கட்டியிருந்தார்கள். சிறுமியின் படுக்கையில் வேறொரு சிறுமி இருந்தாள். தாழ்ந்த தளத்தின் அருகே சென்றான். நீண்ட நாசியினைக் கொண்ட பெண் அவனைப் பிடித்து முத்தமிட்ட இடத்தை மனம் சுற்றியது. எலும்புக் கிளையின் துணி இன்னமும் ஆடிக் கொண்டிருந்தது. வானம் அக்காளுக்குப் பிடித்த நீல வண்ணத்தில் தூறியது.

“யாருப்பா நீ?…ஏன் சத்தம் போட்டே?” சீருடை ஆள் அவனிடம் வந்து கேட்டபோது அவனுக்கு எதுவும் புரியவில்லை.    

வீட்டிற்கு வந்தபோது மீனாவைக் காணவில்லை. அவளது மருந்து மாத்திரைகள் அப்படியே இருந்தன, வெகுநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. இரவிலும் வரவில்லை. அறைகளில் பூச்சிகள் பறப்பதாக தோன்ற, அவளை நினைத்து மருந்திட்டு நன்றாகத் துடைத்தான்.    

காலையில் தச்சு சாமான்களைக் கொண்ட தனது பையினைத் தோளில் போட்டான். “சொல்லியும் தீராத விஷயம் என்னவாக இருக்கும்?”. நடக்க சிரமமாக இருந்தது. “நடக்க வேண்டும்” என தனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான். அதன்பிறகே நடக்க முடிந்தது.

அய்யப்பன் மகாராஜன் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள், தொடர், என பல்வேறு படைப்புகள் இதழ்களில் வெளியாகி வந்துள்ளன. – imaharajan@gmail.com

2 COMMENTS

  1. மிக மிக அருமை..மனச இன்னும் என்னமோ செய்யுது..மீள முடியல…உங்கள் சிறப்பான பணி மேலும் தொடற மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

  2. இவ்வளவு நாட்கள் எங்கிருந்தாய்? உன்னைத் தான் எழுத்து தேடிக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here