Tuesday, April 30, 2024
Homesliderமன்னிக்க வேண்டும் தோழி!

மன்னிக்க வேண்டும் தோழி!

ராம் முரளி

மீப நாட்களாக எனது சிவப்பு நிற மடிக் கணினியைத் திறக்கையில், அந்த ரெட்டைவால்குருவி எனது மென்திரையின் மீது எவ்வித அவசரங்களுமின்றி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தலைகிறது. இணைய சேவையை நான் முடக்கிவிடுகையில்தான் அந்தப் பறவை என் மடிக்கணினியின் மீது உயிர்ப்பிக்கிறது. கூகுள் குரோமில் எந்தவொரு இணைய முகவரியையும் பதிவு செய்வதற்கு முன்னதாக, அந்தப் பறவையை நான் பார்க்க நேரிடுகிறது. காடுகளை இழந்துவிட்டு, பறக்க வெளியற்ற பறவை எனது மென் கணினியின் ஒளித்திரைக்குள் புகுந்துவிட்டிருக்கிறது என்றே அதன் திடீர் வருகைக்கு நானொரு காரணத்தைக் கற்பித்து, அதன் இருப்புக்கு புதிய அர்த்தமொன்றை உருவாக்கியிருந்தேன்.

சிறிய உருவில் மென்திரையில் அது மீனைப்போல மிதந்தபடியே சுற்றியலைந்து கொண்டிருக்கிறது. நான் துவக்கத்தில் அதனை எதுவொன்றும் செய்திருக்கவில்லை. எனது சிறு செய்கை கூட அதனை தொந்தரவு செய்துவிடக்கூடாதென்பதில் கவனத்துடன் இருந்தேன். எனது மடிக்கணினி அதற்கு வனாந்திரமாக தெரிந்திருக்கக்கூடுமென அப்படியே விட்டுவிட்டேன். ஒருமுறை கைதவறி எனது மவுஸ் நகர்த்துகையில், குருவியின் மீது, அதன் குறி தொட்டுவிட்டது. அவ்வளவுதான், படாரென வெடித்து பஞ்சைப்போல புகையுருவில் அந்த குருவியினது உயிர் பிரிந்துவிட்டது. அதன்பிறகு ஒவ்வொருமுறை இணைய முகவரியைத் தொடுக்கும்போது, மிகக் கவனமாக அதனது இயக்கத்தில் என் கண்கள் மேய்ந்து திரும்பும்.

தினசரி காலையில் செய்வதற்கு ஒரு வேலையுமின்றி மனம் வற்றிய நிலையில் பாசாங்கு செய்பவனைப்போல, மடிக் கணினியை திறந்து வைத்துக்கொண்டு பெற்றோரின் பார்வையிலிருந்து தனித்திருக்கும் பிரயத்தனத்தில் நான் ஈடுபட்டிருக்கும்போது அந்தப் பறவையும் என்னுடன் சேர்ந்துகொள்கிறது. என்போன்றே மடிக்கணினியில் மறைந்து பதுங்கும் அதன் பாசாங்குத்தனத்தை வெகு இயல்பாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சாலை சீரமைக்கும் பணியில் என்னை சமீபத்தில்தான் தந்தை சேர்த்துவிட்டிருந்தார். அவருடைய மேல்நிலை அதிகாரிகளிடம், எனது கல்வித்தகுதியை சமர்ப்பித்து எனக்கு அந்த வேலையினைப் பெற்றுக் கொடுத்திருந்தார். மந்தாரக்குப்பம் எனும் ஊரில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்குள் நுழையும் மையச் சாலை அது. இதற்கு முன்பாக பல வருடங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த சாலையை நெய்வேலி நிர்வாகத்தினர் வெகு சொற்ப தினங்களுக்கு முன்பாகத்தான் வெட்டிவிட்டார்கள். நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணியின் காரணமாக அந்த நிலம் முழுவதுமாக வெட்டி எடுக்கப் பட்டிருக்கிறது.அதனால், புதிதான சாலையை போக்குவரத்துக்கு அவர்கள் நிலத்தில் வேய வேண்டியிருந்தது.

அதில்தான் நான் தற்செயலாக சிக்கிக்கொண்டேன். கல்லூரி முடிந்து முழுதாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்னமும் சொல்லிக்கொள்ளும்படியான வேலை எதிலும் சேர்ந்திருக்கவில்லை என்பதால், தந்தை வற்புறுத்தி என்னை அங்கு அழைத்துக்கொண்டு போய் சேர்த்துவிட்டார். காலையிலேயே கையில் நில அளவை செய்வதற்கு தேவையான இன்ச் டேப் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள். நிலத்தில் ஆங்காங்கே மனித கூடுபோல நின்றிருக்கும் கருவிகளை மையங்களாக வரித்துக்கொண்டு, நிலத்தை அளக்க வேண்டும்.மதிய நேரத்தில் பார்வையிட வருகின்ற உயர் பொறியாளர்களுக்கு எனது புத்தகத்தில் நான் எடுத்து வைத்திருக்கின்ற குறிப்புகளை காண்பிக்க வேண்டும். உண்மையில் எனக்கு இந்த வேலை மிகவும் சோர்வளிக்கக்கூடியதாக இருந்தது. காலையில் சீக்கிரத்திலேயே வெயிலேறிக்கொள்கிறது. பத்து மணியைக் கடப்பதற்குள் உடலில் வியர்க்காத அங்கமில்லை எனும் நிலை.உருண்டோடும் வியர்வையின் நசநசப்பை பொருட்படுத்தாமல் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

உள்ளறைகளில் அமர்ந்துக்கொண்டு, சில்லென ஃபேன் காற்றினை வாங்கியபடியே இதுநாள்வரையிலும் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, இந்த வேலையில் துளியும் விருப்பமில்லாமல் போய்விட்டது. அதிலும், மைய பொறியியலாளரான சண்முகசுந்தரத்தின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.தொந்தியும் தொப்பையுமாக புல்லட் பைக்கில் கிளம்பி வந்து களத்தில் நின்றுகொள்வார்.எனது உடலில் உண்டாகின்ற நடுக்கங்கள் அவருக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை அளிப்பதுபோலத் தெரிகிறது.சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, நீண்ட நேரமாக என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்.அவரது கூரிய பார்வை என்னை துளியும் மனிதவுருவாக கருதுவது போலவே இல்லை.ஏதோ மாமிச கழிவைப்போலவும், கோவில் வாயில்களில் சில்லறை எதிர்பார்த்து தட்டுகளை உருட்டுகிறவனைப் போலவும் தெரிந்திருக்கிறது. நான் ஏதோ அவரையே சார்ந்திருப்பதைப்போன்ற எண்ணத்தை என்னில் உண்டாக்குவதில் அவருக்கொரு அலாதியான ஆர்வம்.

அப்பாவிடத்தில் இதெல்லாம் தெரிவித்தால் பதிலுக்கு எனக்கேதான் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். துவக்கத்தில் எரிச்சல் அடையச் செய்யும் போக்குகள் மிகுந்துதானிருக்கும் என்றும், அவைகளை பொருட்பாடு செய்யத் தேவையில்லை என்றும் என்னிடம் மெல்ல நிதானமாக எடுத்துரைத்தார்.அப்பா அரசாங்க உத்யோகத்தில் இப்படியே பிறரிடம் அணுக்கமாக வாழ்ந்தே பழக்கப்பட்டவர். எனது இயல்புக்கு அது பொருந்தவில்லை. அந்தப் புழுதி வெளியில் பிறிதொரு மனிதரின் முன்னால் பாவனை செய்து கொண்டிருப்பதையும், எனது திறமையினை நிரூபித்து அவரை திருப்திபடுத்த வேண்டிய நிலையையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதில் எரிச்சலும், அசூயையான உணர்வும்தான் எனக்குள் எழுந்தருளியது.

மண்ணை வெட்டுகின்ற குழுவினடத்தில் தானே சென்று பேச்சுக் கொடுத்து எனது காலில் மண்வெட்டியைப் போட்டு காயமேற்படுத்திக் கொண்டது ஒரு நாடகத்தைப்போலத்தான் நிகழ்ந்து முடிந்தது. எனது பாதங்களில் பலமாக அடிவிழுந்துவிட்டது. மண்ணில் ஊறிக்கொண்டிருந்த நீரோடு கலந்து எனது இரத்தம் சிகப்பு நிறத்தில் பீய்ச்சியடித்துக்கொண்டு ஒழுகியோடியது. விரைவாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று எனது பாதங்களுக்கு மருந்திட்டு முழுக் கட்டும் போட்டிருக்கிறார்கள்.இரண்டு மாதங்களுக்கு வேலைக்கு செல்லவில்லையெனில் நல்லது என்ற மருத்துவரின் கோரிக்கை எனக்கு ஆறுதலாக இருந்தது.

நான் வீட்டில் எனது உள்ளறையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கிக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில், என் மீதான வீட்டாரின் கரிசனை அதீதமாக இருந்துகொண்டிருந்தது. வேளாவேளைக்கு ஹார்லிக்ஸும், பூஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார்கள். நான் சுளுவாக படுக்கையில் கிடந்தபடியே அவைகளை உறிஞ்சிக் கொண்டிருப்பேன்.எந்தவொரு வேலை சிந்தனையும் அவசியமில்லாமல் இருந்தது.எனக்கெனவே விதிக்கப்பட்டுவிட்ட உலகத்தைப் போல இவ்வறையில் நான் தனித்து வாழ்ந்து உலவிக் கொண்டிருக்கிறேன். அம்மாவிடம் இப்போதெல்லாம் கொஞ்சம்போல பணிவிடைகளில் சோர்வு தென்படுகிறது. அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் எனும் கேள்வியை எழுப்பி அப்பாவும், அம்மாவும் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதை உள்ளறையில் இருந்தபடியே என் காதுகள் துல்லியமாக வாங்கியிருக்கின்றன. எனினும், எனக்குச் சேர வேண்டியதை தவிர்க்காமல் அம்மா கொடுத்துவிடுகிறாள்.

எனதிந்த அறைக்குள் நுழைந்துவிட்டால், வெளியுலக ஓட்டங்கள் எதுவும் என்னை தொந்திரவு செய்வதில்லை.இருண்ட அதன் உள்வெளியில் எப்போதாவது மட்டுமே டியூப்லைட் வெளிச்சத்தை பரவ விடுவேன்.சன்னல்களற்ற நான்குபுறமும் சுவரால் அடைத்த, ஒரேயொரு சிறிய கதவு மட்டுமே கொண்ட எனது அறையில் வற்புறுத்தல்கள் ஏதுமில்லாமல்,எனது சிவப்பு நிற கணினியின் முன் அமர்ந்து, இணைய தளத்தில் இப்போதெல்லாம் நேரம் போக்கிக் கொண்டிருக்கிறேன். முகநூல் நல்லதொரு நேர விழுங்கியாக இருக்கிறது.அதில் அண்மையில் ஒரேயொரு பெண்ணுடன் மட்டும் தகவல் பரிமாற்றத்தை துவங்கியிருக்கிறேன்.அண்மையில் என்ன அண்மையில், இரண்டே முறை மட்டும் சேட்டிங்கில் பேசியிருக்கிறேன்.மனம் அதனை விரித்து அகண்ட அனுபவ வெளியாக பெருக்குகிறது. இடையிடையே, எப்போதாவது கல்லூரி நண்பர்கள் இணைப்பில் வருவார்கள்.ஆனால், அது எப்போதும் சோர்வூட்டக்கூடிய நேரக்கடத்தியாகவே இருக்கிறது. பெரும்பாலும், வேலையில் சேர்ந்தாயிற்றா? என்பதை கடந்து உரையாடல் நீள்வதில்லை.இதிலும் ஒன்றைக் கவனித்து வருகிறேன்.நண்பர்கள் பொதுவாக, பிறிதொருவர் வேலையில் இருப்பதை விரும்புவதில்லை.அக்கறையுடன் விசாரிப்பதைப்போலவே, வேலையின் மீதான பதட்டத்தையும், நடுக்கத்தையும் கூட்டுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்.அதனால், நண்பர்களுக்கு ஒரு சுபம் போட்டுவிடுவது நல்லது என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்.

அவள் பெயர் சக்கரவள்ளி.புனைப்பெயர் என்று இரண்டாம் நாள் (நேற்றைய) சேட்டிங்கில் பகிர்ந்துகொண்டாள். கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி செய்கிறாளாம். அழகென்று சொல்ல முடியாவிட்டாலும், மாநிறத்தில் வட்ட வடிவிலான முக அமைப்பில் சாந்த சொரூபம் என்றே சொல்லத் தோன்றும்.உடைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து அணிகிறாள். ஆசிரியை என்பதால் அவள் பகிர்ந்திருக்கும் பெரும்பாலான புகைப்படங்களில் புடவையில்தான் இருக்கிறாள். தலையை நன்கு வாரி வழித்து சீவி கொண்டையும் போட்டிருப்பாள். மல்லிகை ஒரு சுற்று அவளது கொண்டையில் படர்ந்திருக்கும்.

முதலில் ஆசிரியை எனும் அவளது பணியை பார்த்தபோது அவளுக்கும் எனக்கும் அதிக வயதிருக்கும் என தவறாக கணித்த நொடியில், வலியச் சென்று உரையாடல் நிகழ்த்துவது சரிவராது என்றொரு தவறான எண்ணத்தில் சிக்குண்டிருந்தேன். கிட்டதட்ட என் முகநூல் பக்கத்தில் இருக்கும் பத்து பெண் தோழிகளில் இதுவரை எவரிடமும் நான் பேசியதே இல்லை. சக்கரவள்ளியும் முன்பின் அறிமுகமானவள் அல்ல. எனது நட்பு பட்டியலில் இருக்கும் எவரோ ஒருவரின் நட்பில் அவள் இருந்தாள். எப்போதாவது பொறியியல் துறையில் எனக்கு பணியாற்றக் கிடைத்த அனுபவங்கள் குறித்து பகடியாகப் பதிவு எழுதி வருவதால், தமிழில் அதுபோலவே தொடர்ச்சியாக எழுதுகிறவர்களின் முகங்களை எனக்கு முகநூல் அறிமுகம் செய்துவைத்தது. கிட்டதட்ட ஒரு தரகரைப்போல முகநூல் வேலை செய்கிறதோ என ஒவ்வொரு முறை அதன் உள் நுழைகையிலும் எனக்குத் தோன்றும்.வரிசையாக முகங்களை காண்பித்தபடியே இருக்கும். அதில், எவரையும் வேண்டுமானாலும் நாம் நெருங்கி நட்பு விண்ணப்பம் வழங்கலாம் போலிருக்கிறது.

அப்படித்தான் சக்கரவள்ளிக்கு நட்பு அழைப்பு விடுத்தேன்.இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?வெளியுலகில் பெண்களின் அருகாமை ஒருவித நெளிதலை உடலில் உண்டாக்கிவிடுகிறதைப்போல, அசெளகர்யப்படும் நானேதான் நட்பு அழைப்பு பொத்தனை அழுத்தினேன்.அவள் அதனை ஏற்றுக்கொண்ட நொடியில் உள்ளுக்குள் ஒருவித திளைப்பு உருவானது.பனிக்கட்டிகளை குமைத்து அதற்குள் நுழைந்து உடலை மூடிக்கொண்டபின் உருவாகும் குளிர்ச்சியை எனது உடல் உணர்ந்தது. முகநூலில் அவளது பக்கத்தையே திறந்து வைத்துக்கொண்டு, தலையை மட்டும் பனிவெளிக்கு வெளியில் நீட்டிக்கொண்டு இருப்பதைப்போல, அந்த பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.முதலில் வளர்ந்த மனுஷியாக நினைத்த மனம் பின் அவளும் என்னைப்போலவே சென்ற வருடத்தில்தான் கல்லூரியை நிறைவு செய்திருக்கிறாள் என்பதை அறிந்ததும் கூடுதல் குதூகலத்தில் எக்காளமிடத் துவங்கியது. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசங்கள் கூட பத்து பதினைந்து தினங்கள்தான் இருக்கும்.என்னைவிடப் பத்து தினங்கள் மட்டுமே அவள் வயது குறைந்தவள் என்பதை அறிந்தபோது நாற்காலியில் எழுந்து என் அறையை ஒரு சுற்று சுற்றி நடனமாடினேன். காலில் வலி திருகியெடுத்தது என்றாலும், சக்கரவள்ளியின் புகைப்பட சட்டகத்தில் பதிந்திருந்த கனிவும், பெருந்தன்மையான புன்னகையும் ஒரு கணத்தில் அனைத்து விதமான வலிகளையும் நிவர்த்தி செய்யும் வலி நிவாரணியாக மாறியிருந்தது.

வீட்டில் இனி பிரச்சனை எதுவும் இராது என நினைத்தேன். ஒருவேளை என்னைவிட அவளுக்கு கூடுதல் வயது இருந்திருந்தாலோ, வடகொரிய தென்கொரிய பெண்ணாக அவள் இருந்திருந்தாலோதான் கவலையில் நான் ஆழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில், கணினியில் ஒருமுறை Memories of Murder எனும் கொரிய மொழித் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென அம்மா என் அறைக் கதவை திறந்துக்கொண்டு கையில் ஆப்பிள் ஜூஸுடன் உள் நுழைந்துவிட்டாள். சிவப்பு நிற உடையணிந்துகொண்டு ஒரு பெண் மழை இரவில் நடந்து வரும் காட்சி அப்போது ஓடியது. தற்செயலாக அதனைப் பார்த்துவிட்ட அம்மாவின் முகம் சுழித்துக்கொண்டது. எதையோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டவளைப்போல, தலையை மறுபக்கமாய் திருப்பிக்கொண்டு, ஆப்பிள் ஜூசை என் மேசை அருகில் வைத்துவிட்டு அவசர அவசரமாகச் சென்றுவிட்டாள். உணவு நேரத்தின்போது அதனை கிண்டலாக, “என்னடா இங்கிலீஷ் படமெல்லாம் பாக்குறே?” என்று அருகில் அமர்ந்திருந்த அப்பாவின் காதில் விழும்படி சத்தமாகவே சொன்னாள். அலட்சியம் படிந்த என் அப்பாவின் முகம் என்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்தது. எனக்கு உள்ளுக்குள் உதறலாக இருந்தது.

“அது இங்கிலீஷ் படமில்லம்மா..கொரியப் படம்” என்றேன்.

“கொரியோ படமோ, சொறியோ படமோ, அதுல என்ன பொம்பளப்பிள்ளயை அவ்ளோ தப்புத்தப்பாக காமிச்சிட்டு இருக்கான். அதப் போயி பார்க்குற..”

சொல்லவே வேண்டாம் அப்பா கையில் வைத்திருந்த வார இதழொன்றை அருகில் சத்தமான ஒலியெழுப்பியபடியே வைத்தவர், பெருமூச்சு விட்டபடியே, “அவனவன் வேலை இல்லன்னட்டு தவிச்சிக்கிட்டு இருக்கான். அவங்காலிலயும், இவங்காலிலயும் விழுந்து ஒரு வேலைய புடிச்சுக் கொடுத்தா, மம்முட்டிய தூக்கி காலுல போட்டுட்டு வூட்ல உட்காந்து மயிர மட்டையெல்லாம் பாத்துட்டு இருக்குது… புள்ள தெரவுச பேளவுட்டதான் பாக்கனும்னா சொல்வாங்கல அந்த மாதிரி இருக்குது இவங் கதை” என்று ஏளனமாகப் பேசிக் கேவலப்படுத்தினார். அம்மா எனக்காக அப்போது பரிந்து பேசி அப்பாவை சமாதானம் செய்திருக்கவில்லை என்றால், கண்ணீர் முட்ட என் அறைக் கதவை மூடிக்கொண்டு அன்றைய நாள் முழுவதும் அழுது தீர்த்திருப்பேன். இதுபோல சந்தர்ப்பங்களை அம்மா வலிந்து உருவாக்குகிறாளா அல்லது இயல்பில் வெளிப்பட்டுவிட்டதும் வார்த்தைகளைப் பின் ஊதி ஊதி அணைக்கிறாளா என்கிற கேள்வியும் எனக்குண்டு.

சக்கரவள்ளி நல்லவேளையாக கொரியாக்காரி அல்ல. கோயமுத்தூரில்தான் இருக்கிறாள். அதனால், வீட்டில் உள்ளோரை இதுபோன்ற சம்பவங்களை ஒரு முன்னுதாரணமாகக் காண்பித்து, எங்கள் நட்பின் வழி அது வெவ்வேறு உறவு நிலைகளுக்குள் நகர்ந்தால் சம்மதம் எளிதில் வாங்கிவிடலாம். காற்றின் விசையால் சிமிட்டப்படுகின்ற பெண்ணின் கண்ணசைவைக்கூட காதலெனக் கருதி மயக்கத்தில் ஆழ்ந்து போகும் ஆண்கள் சுற்றும் ஊரில், முகமறியாத ஒருவனின் நட்பை முக்கியத்துவப்படுத்தி ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த பெண்ணினது செய்கையை எனக்குகந்த வகையிலெல்லாம் கற்பனை செய்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லைதானே. அவள் எனது நட்பு அழைப்பை ஏற்பதற்கு முன்பாக, எனது பக்கத்தை முழுமையாக ஒருமுறை பார்வையிட்டிருப்பாள். இரண்டு பதிவுகளுக்கு அவளது இதயக்குறி விடப்பட்டிருந்தது. அதனை அறிந்த நொடியில் அவளது இதயத்தையே எனக்குப் பரிசு அளித்துவிட்டதைப்போல பாதங்கள் இரண்டு நிலத்தின் மீதேறி கோயமுத்தூர் வரையில் சென்று திரும்பின. எனினும், அவளிடம் பேச்சைத் துவங்க சில தினங்கள் ஆகத்தான் செய்தது.

அதிகளவில் சக்கரவள்ளி தன் பக்கத்தில் கவிதைகளைத்தான் தினமும் நிரப்பி வருகிறாள். ’இன்றைய இப்பொழுதைய கவிதை’எனும் தலைப்பில் நான்கு நான்கு வரிகளில் அவளது கவிதைகள் நண்டு போல, முகநூல்வெளியில் தன் சிறு பாதத்தால் ஊர்ந்து உலவும். ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது கவிதைகளை அவள் எழுதிக்கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கு இரு கவிதைகள் என்று கணக்கு போட்டால்கூட இரண்டு கவிதைகள் மீதமாகின்றன.முகநூல் வெளியில் புரட்சிகரமான கவிதை செயல்பாட்டாளர் என அவளுக்குப் புகழாரம் சூட்டும் நபர்கள் பிற தேசத்தில்கூட இருக்கிறார்கள்.

வெள்ளித் தகட்டில் இருந்து வலையென விரியும் ஒளிப்போல

இந்த அதிகாலை என் கண் முன்னால் பரந்திருக்கிறது.

பாதம் சூடேறும் வரையிலும் ஒளியில் மூழ்கியபடி நிற்கிறேன்.

பின் நான் பறந்ததைப் பார்த்ததாக பின்மதியபொழுதில் யாரோ சொன்னார்கள்!

சளுக்!!! புளுக்!!!

”அருமையான கவிதை தோழி. சளுக் புளுக்கில் ஹைக்கூவையே அலறவிட்டிருக்கிறீர்கள்”

“வெள்ளித் தகட்டில் விரியும் ஒளிப்போல… வாவ்..உங்கள் சொற்களில் கிறங்கிப்போய் கிடக்கிறேன். படித்ததிலிருந்து மயக்கம் ஏற்பட்டு தலை சுற்றியது. இப்போது அப்போலோ மெடிக்கலில் வரிசையில் நிற்கிறேன். மாத்திரை போட்ட பின்னர் மீதமுள்ள கவிதைகளை வாசிக்கிறேன்”

“தமிழில் ஒரு விர்ஜினா வுல்ஃப் உங்கள் அவதாரத்தில் பிறந்திருக்கிறாள். இவ்வரிகளை வாசிக்கையில் என்னையே அறியாமல் அழுதழுது கீ போர்ட் முழுக்க ஈரமாகிவிட்டது. டைப் செய்ய முடியவில்லை. சற்றே பொறுங்கள். டவலால் துடைத்துவிட்டு எனது உணர்வு ஓதங்களையும், மனக் கொந்தளிப்புகளையும், அகத் தத்தளிப்புகளையும் பின்னூட்டமிடுகிறேன்”

“கவிதைக்கு இலக்கணம் நீங்கள். உங்கள் விரல்களில் இருந்து கொட்டும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அறிவுக் களஞ்சியம். அழகுசேகரம். அசலான தேனமுதம். போங்கள் தோழி. என்னையே பொறாமைப்பட வைத்துவிட்டீர்கள்”

“நான் ஒரு மூத்த கவிஞர். எனது விலாசத்தை உங்களுக்கு தனிவழி தகவலாக பகிர்ந்துகொள்கிறேன். நேரம் இருக்கும்போது, நேரில் வரவும். நிறைய கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது”

பின்னூட்டங்கள் அவளது பதிவுகளுக்கு வரிசையாகக் குவிந்தபடியே எப்போதும் இருக்கும். ஒரு தயக்கத்துடன் நானுமே கூட ஒரு பின்னூட்டத்தை அவளிடம் பேசத் துவங்குவதற்கு முன்பாக பதிவிட்டிருக்கிறேன்.

“உங்களிடம் பறத்தலின் மீது விருப்பம் இருப்பதை உணர முடிகிறது. இதற்கு முன்பே ஒரு கவிதையில் நீரின் மீது மிதந்தேன். கீழே திமிங்கலம் சுற்றிக் கொண்டிருந்தது என ஒரு வரி எழுதியிருக்கிறீர்கள். எனக்கும்கூட உங்களைப்போலவே பறக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. ஆனால், எனது கால்கள்தான் நடக்கக்கூட முடியாதபடி உடைந்துவிட்டது” எனச் சொல்லி உடைந்த என் காலை ஒரு செல்பி எடுத்து பின்னூட்டத்தோடு இணைத்து அனுப்பினேன். அதற்கு அவள் கண்ணீர் விடும் அனுதாப ஸ்மைலி ஒன்று பதிலாக அனுப்பினாள். அந்த நீர் திரவம் என் உடைந்த காலில் பட்டு இதமாக வருடியது. என் கண்களுமே அப்போது கலங்கிவிட்டன. இவளுக்கு நம்மீது கூடுதல் கரிசனமும், கவனமும் இருக்கிறது என உணர்ந்தேன். என் சுய விருப்பம் ஏதுமின்றி என்னை வற்புறுத்தி வேலையில் இழுத்துவிட்டு, கால்கள் உடையவும் காரணமாய் இருக்கும் அப்பாவையும், இந்த வீட்டு சூழலையும் ஒருகணம் வெறுத்தேன். முழு முற்றாக ஆழ்கடலின் வண்ணத்தில் என் முன்னால் கணினியில் அலையடித்துக்கொண்டிருக்கும் முகநூல் கடலில் என்றென்றைக்குமாக சக்கரவள்ளியுடன் நீந்திக்கொண்டிருந்தால் அதுவே வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என நம்பிக்கை எழுந்தது.

அவளுக்கு தனிவழி செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். என் பெயர் கமலகண்ணன். உங்களது கவிதைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. உண்மையில் இங்கு என்னை சூழ்ந்திருக்கும் துயர இருட்டிலிருந்து, விடுவிக்கும் ஒரு தேவ மலராக, தேவதையாக நீங்கள் இந்த முகநூல் வழியே உங்களது முகத்தால் எட்டி எனக்கு காண்பிக்கிறீர்கள். முழு ஒளியை உங்களது முகத்தில் என்னால் அனுபவம் கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக இதேபோல கவிதைகளாக எழுதி என் உலகை உயிர்ப்புடன் இருக்கச் செய்ய வேண்டும். என் மனதிலும் மண்டையிலும் உங்கள் சொற்களே மிதக்கின்றன தோழி. தயவு செய்து பதில் அனுப்புங்கள். அப்படி நான் பேசிய வார்த்தைகள் எதுவும் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து என்னை வெறுத்துவிடாதீர்கள். நான் அப்படி ஒன்றும் தவறாக பேசவில்லை என்றாலும், என்னை நீங்கள் வெறுத்துவிடாதீர்கள். நீங்கள் வெறுக்காமல் எனக்கு பதில் அளிப்பீர்கள் என உறுதியோடு நம்புகிறேன். உங்களது பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். தயவுசெய்து என்னை வெறுத்துவிட வேண்டாம்”

பெரு நிறுவனமொன்றில் உயர்தர ஊழியத்துக்காக விண்ணப்பித்துவிட்ட மன நிறைவை அடைந்தேன். அனைத்து தளைகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புத்துணர்வு உடலில் ஏறியது. மதியத்திற்கு அம்மா கொடுத்திருந்த பீட் ரூட் சாதத்தை சுவைத்தபடியே, அவளது முகநூல் கவிதைகளை பார்வையிட்டபடியே, பதில் வரும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தேன். இதுதான் எனது சுய நினைவின்படி ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக தனிவழி செய்தி அனுப்புவது. சக்கரவள்ளி எனக்கு விட்ட இரு இதயக்குறிகள் எனது தைரியத்திற்கு காரணமாய் இருக்கலாம்.

கல்லூரி நாட்களில் எனது அறையில் கோபா என்றொருவன் தங்கியிருந்தான். அவனுக்கு மூன்று முகநூல் கணக்குகள் இருந்தன. ஒன்றிற்கு மட்டும் தனது பெயரை வைந்திருந்த அவன், மற்ற இரண்டையும் வெவ்வேறு பெண்களின் பெயரைத் தேர்வு செய்து பிற ஆண்களுடன் சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தான். கிட்டத்தட்ட மாணவர் விடுதியில் இருந்த எங்கள் எல்லோரை விடவும் துணிவுடன் இவ்விதமான செயலில் இறங்கியது கோபா ஒருவன்தான். பலமுறை அவன் வியர்வை சொட்ட சொட்ட சேட்டிங்கில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும்போது, நானும் அருகில் அமர்ந்திருப்பேன். பலவிதமான உணர்வுகள் அவனது முகத்தில் கொப்பளிக்கும். திடீரென வெடித்து சிரிப்பான். தாடையை ஆழமாய் அழுத்தி ஆழ்ந்த சிந்தனை கதியில் தேய்த்துக்கொண்டிருப்பான். சமயத்தில் பெரிய இழப்பை எதிர்கொண்டவனைப்போல, துயரத்தில் இரவு உணவைக்கூட தவிர்த்துவிடுவான். அந்த நாளில் அவனது முழு அசைவும் ஒரு புரட்சிக்கான திட்டமிடலில் தீவிரமாக இயங்குகிறவனின் செய்கைகளோடு ஒத்திருக்கும். அவனது விநோத முகபாவங்கள் எனக்குள் கிளர்ச்சியூட்டியபடியே இருந்தன. பலமுறை அவனது செல்போனுக்கு ரீசார்ஜும், வங்கி கணக்கில் கணிசமான தொகையும் இதன் பயனாக சேர்ந்திருந்தது. அவனருகில் அமர்ந்து அவனையே லயித்தபடியே கவனித்துக்கொண்டிருப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது. அப்போதெல்லாம் நினைப்பது உண்டு. என்றாவது ஒருநாள், ஒரு சுவாரஸ்யத்திற்காகவாது முகநூலில் ஒரு பெண்ணுடன் பேசிப் பார்க்க வேண்டும் என்று. கோபா அவ்விதத்தில் ஒரு துரோணாச்சாரியார் என்றும்கூட சொல்லலாம். அருகில் அமர்ந்தே சேட்டிங் வித்தைகளை அவனிடத்தில் இருந்துதான் வளர்த்துக்கொண்டேன். எனது ஏகலைவ வித்தைகளை பயிற்சித்துப் பார்ப்பதற்கு ஒரு உகந்த தருணம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

”உங்களது உலகத்தில் அவ்வளவு இருட்டு இருப்பது வருத்தமாக இருக்கிறது. எனது கவிதைகளில் உயிரசையும் ஒளி உங்களது இருப்பின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதை உணரும்போது, எனது எழுத்துக்கு ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். கவலை வேண்டாம். எல்லா இருளும் விடியும். விடியாத இரவென்று வானில் இல்லை. மன்னிக்கவும். இது எனது வரி அல்ல. பழைய பம்பாய் திரைப்படத்தில் வரும் பாடலொன்றின் வரி இது. நான் கவிதாயினியாக இருப்பதால், நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது என்பதால் தெளிவுப்படுத்துகிறேன்” என்று சக்கரவள்ளியிடம் இருந்து பதில் வந்திருந்தது.

உள்ளமெல்லாம் பூரிப்பு அரும்பியது. மனதிலேயே தத்தளிப்பு. பெரும் பயன் கிடைத்திருக்கிறது என்கிற தன்னம்பிக்கையில் எனது மானசீக குரு கோபாவுக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு, சக்கரவள்ளிக்கு பதில் அனுப்பினேன்.

“நீங்கள் என்னை வெறுக்காததுக்கு நன்றி. உங்களது பதில் குதூகலமூட்டுகிறது. நீங்கள் ஆசிரியையாக இருப்பதை முகநூலில் பார்த்தேன். மகிழ்ச்சி”

“ஆமாம். இந்த வருடம்தான் சேர்ந்தேன். வேறு வேலைக்கு செல்ல விரும்பவில்லை. ஆசிரியையாக இருந்தால், நிறைய படிப்பதற்கும் எழுதுவதற்கும் சாத்தியங்கள் இருக்கும் என்று சேர்ந்தேன்”

“உங்களது திட்டமிடல் நல்ல பலனை அளித்துவருவதை, தினமும் நீங்கள் போடும் 50 கவிதைகளே சாட்சியாக நின்று உணர்த்துகின்றன. இதுவொரு அசுரத்தனமான உழைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சமகாலத்தின் சாட்சியமாக உங்களது வரிகள் இருக்கிறது. வாழ்த்துக்கள்”

“நெகிழ்கிறேன். எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது மழையை”

“ஆமாம் சக்கரவள்ளி. இது கோடை காலமாக இருப்பதால், மழையைப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் மழையைப் பார்க்க. அவசரம் என்றால் யூ டியூபில் பார்க்கலாமே”

“ஹா ஹா..நீங்கள் நல்ல நகைச்சுவை உணர்வாளர் போலிருக்கிறது. எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது மழையை என்று குறிப்பிட்டது, உங்களது பாராட்டு வார்த்தைகள் மழைபோல மகிழ்வூட்டுகிறது எனும் அர்த்தத்தில் ஒரு கவிதை போல சொன்னேன். பரவாயில்லை. என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்”

அவளது வரிகளை கவிதை என்று உணராத எனது ரசனையற்ற மனதின் மீது எரிச்சல் உண்டானது. இதுவொரு மனக்குறையாக எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது கோபா! என மானசீக குருவிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு முன்னேறிச் சென்றேன்.

“பொறியியல் பயின்றிருக்கிறேன். வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. ஏனெனில், இன்னமும் ஆறு அரியர்கள் இருக்கின்றன என எனது மார்க் ஷீட் சொல்கிறது. அதனால், தந்தை பார்த்துக்கொடுத்த வேலையில் சேர்ந்தேன். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால், வீட்டிலேயே இருக்கிறேன். இன்னும் ஒரு சில வாரங்களில் தந்தை எங்காவது தூர தேசத்திற்கு துரத்தி அடிப்பார் என்பதற்கான நிச்சயம் வீட்டில் தெரிகிறது. அதற்குள் இங்கிருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற யோசனையில் இருக்கிறேன். இதுதான் இப்போதைய வேலை”

“அப்படியானால் முகநூலில் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, உடனடியாக ஏதேனும் ஒரு டியூஷனில் சேருங்கள். அரியர்களை கிளியர் செய்தால், படித்த படிப்புக்கு நியாயம் செய்ததாக இருக்கும். முகநூல் ஒன்றுக்கும் உதவாது. எனது கவிதைகளைப்போல சில நல்ல விஷயங்கள் இருக்கும் என்றாலும், நடைமுறை வாழ்க்கைக்கான வேலைகளில் நீங்கள் இறங்குவது நல்லது எனத் தோன்றுகிறது”

இதற்குபிறகு உரையாடலை எப்படி நீட்டித்துச் செல்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபாவாக இருந்திருந்தால், ஏதேனும் ஒரு துயரக் கதையை கண நேரத்தில் புனைந்து விடிய விடிய வார்த்தைகளை இரைத்துக் கொண்டிருப்பான். முதல்முறையாக பேசும் வேகத்தில் அவள் ஆசிரியையாக இருக்கிறாள் என்கிற நினைப்பே இல்லாமல், அரியர் பற்றியெல்லாம் சொல்லிவிட்டது சங்கடமாகத்தான் இருந்தது. கோபா சொல்வான், “பெண்களுக்கு நிறைய அரியர்ஸ் வைக்கிற, கற்பனைக் கதைகளை உணர்ச்சிப் பெருக்குடன் சொல்கிற, முன்னால் ஒரு தோல்வியுற்ற காதல் இருக்கிறது என்று துயருருகிற, சூரி காமெடியை சிலாகித்துப் பேசுகிற, சூசைட் அட்டென்ட் அவ்வப்போது முயற்சிக்கின்ற ஆண்களைதான் பிடிக்கும்” என்று. இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், சேட்டிங்கின்போது சக்கரவள்ளியின் அனுதாபத்தை எனது ஒடுக்கப்பட்டுள்ள சூழலைச் செல்லி பெற்றுவிட முடியும் என்று என் ஆழ்மனம் செயலாற்றி இருக்கிறது. அதனால், நீண்ட நேரம் என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிந்திருந்துவிட்டு, லேப் டாப்பை அணைத்து மூடிவிட்டேன்.

சக்கரவள்ளி என்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டிருப்பாளோ என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது. ஒரு பெண் என்கிற நிலையில் எனது வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மைகளின் மீது அவளுக்கொரு பிடிப்பு ஏற்பட்டாலும், ஆசிரியையாக இருக்கின்ற அவளது பார்வையில் நானொரு கடைசி இருக்கை மாணவனைப்போல அசடு வழிய நின்றிருப்பேனோ என்பது உறுத்தலாகத்தான் இருந்தது. ச்சை..! என்ன நினைப்பு இது. அவளது சொற்களில் பிதுங்கி எழுந்தது கரிசனமும், அணுக்கமும் தானே அன்றிக் குறைகூறும் பாவனை அல்ல. உடனே எடுத்தேன் ஹெட் செட்டை.”பூ முடித்தால் இந்த பூங்குழலி”பாடலை ஒலிக்கவிட்டு, வெறும் தரையில் உடலைச் சாய்த்தேன். தரையில் இருந்த ஈரம் உடலில் பட்டு குளிர்ச்சியால் என்னை நிறைத்தது. எப்போது உறக்கம் தட்டியது எனத் தெரியவில்லை. காதில் தொங்கும் ஹெட்செட்டில் ஏதேதோ ஒலிகளில், குரல்களில் நீண்டுகொண்டே போகிறது.

ரம்மியமான மனோரஞ்சித நிலையில் நான் ஆழ்ந்திருந்தபோது ஒட்டுமொத்த மயக்க நிலையையும் உரித்து கிழிக்கும் விதமாக எனது அப்பாவின் குரல் அதிர்வாக எனக்கு கேட்டது. ஹெட்செட்டை கழற்றி வீசிவிட்டு, முன்னறைக்கு நொண்டியபடியே ஓடினேன். அப்பா சட்டையில்லாமல் கண்களில் பீதி பொங்கப் பரபரப்பாக கண்ணாடியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது முதுகைப் பார்த்தேன். சதை தடித்து வீங்கியிருந்தது. நிமிடத்துக்கு நிமிடம் அந்த வீக்கம் பெருகி உருவெடுக்கிறது என்று அப்பா பதற்ற குரலில் சொன்னார். அம்மாவுக்கு ஒருகணம் அழுகையே வந்துவிட்டது. வண்டியை எடுத்துக்கொண்டு நானும் அப்பாவும் ஜி.ஹெச்சை நோக்கி விரைந்தோம். மனதெல்லாம் எனக்கு பயமாக இருந்தது. வேலை முடிந்து, சாயங்காலத்தில் ஒரு பிணம் எரிப்பு குழுவோடு சுடுகாடு சென்றிருந்த அப்பாவை பூச்சியோ எதுவோ கடித்திருக்கிறதுபோல. மெல்ல மெல்ல அரிப்பாக கிளம்பி, வீக்கம் எடுத்திருக்கிறது. எனக்கு உள்ளுக்குள் பெரும் கலவரமாக இருந்தது.

ஜி.ஹெச்சில் எங்களது பதற்றத்தை துளியும் பொருட்படுத்தவில்லை. டெம்பரேச்சரை பரிசோதனை செய்தவர்கள், சட்டையைக் கழற்றிவிட்டு அப்படியே அமைதியாக உட்கார வைத்துவிட்டார்கள். அரைகுறை ஆடையுடன், விரிந்த தோள் தசைகளுடன் அப்பா எனக்குப் பக்கத்தில் நம்பிக்கை இழந்தவராக தோன்றினார். என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. மனதிற்குள் நுரைத்த சொற்களை ஒலிகளாக உருமாற்றம் செய்வதில் பலத்த தடுமாற்றங்கள் உருவாயின. பேசினால் அழுகை வந்துவிடுமோ என்று கூட தோன்றியது. அப்பாவே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால், மெளனமாக அவருக்கருகில் அமர்ந்திருந்த எனது மனதில் என்ன ஓடுகிறது என்பதை அந்த கலவரச் சூழலிலும் தெரிந்துகொள்ள முயலுகிறவரைப்போல, அவ்வப்போது என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சங்கடமாக இருந்தது. மனதின் கலக்கம் கண்களில் தெரிந்து, அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என விரும்பினேன்.

“எதுவுமே ஏறுன மாதிரி தெரியல.. ஆனா தடிப்பு பெருசாயிட்டே இருக்கு..” என்று அவர் தன்னையும் சமன்படுத்திக்கொள்ளும் சமாதானக் குரலில் பேசினாலும், அவரது முகத்தில் படர்ந்திருந்த பதற்றம் எனது நம்பிக்கையை குலைத்தபடியே இருந்தது. அம்மாவிடமிருந்து தொடர்ச்சியாக போன் கால் வந்தபடியே இருந்தது. காத்திருக்க வேண்டியிருக்கும் சூழலை விளக்கி, அம்மாவை அமைதியாக இருக்கும்படி வேண்டினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பாவை அழைத்து ஒரு வார்டில் அட்மிட் செய்யச் சொன்னார்கள். தொடர்ச்சியாக மூத்திர பரிசோதனை, ரத்தம் பரிசோதனை எல்லாம் செய்தார்கள். வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான், அப்பாவின் மூத்திரத்தை சுமந்து நடந்தேன். இனம்புரியாத ஆனந்தமும் வேதனையும் ஒரே கணத்தில் எழுந்து பரவசப்படுத்தியது.

சிறிது நேரத்திற்கு பிறகு பெரிய மருத்துவர் வந்தார். அப்பாவிடம் அன்றைய நாள் முழுக்க என்னென்ன சாப்பிட்டார் என பட்டியலிடச் சொன்னார். அப்பா உறுதியான குரலில் அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சென்றதற்கு பிறகு, என்னை வீட்டில் அம்மாவுக்குத் துணையாக இருக்கும்படியும், அப்பாவின் ஆத்ம நண்பரான மற்றொரு அரசு ஊழியரான செல்வத்தை எனக்குப் பதிலாக பக்கத்துணையாக மருத்துவமனைக்கு வரச் சொல்லும்படி அப்பா தெரிவித்தார். செல்வத்துக்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு எதிரில் இருந்த உணவகத்தில் 4 இட்லி வாங்கி எடுத்துச் சென்று அப்பாவிடத்தில் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.

மனதில் அலையலையாக எண்ணங்கள் கிளர்ந்தபடியே இருந்தது. கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அப்பாவுடன் நான் பேசிய வார்த்தைகளைக் கோர்த்து எழுதினால் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள்தான் இருக்கும் எனத் தோன்றியது. வார்த்தை பகிர்வுகளே கிட்டதட்ட இருவருக்குமிடையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவரொரு சுழலிலும் நானொரு சுழலிலுமாக மையங்கொண்டிருக்கிறோம். அவர் தனது கற்பிதங்களையும் அனுபவங்களையும், என் மீது செலுத்திக்கொண்டிருக்க, நான் எனது கற்பிதங்கள் மற்றும் அனுபவங்களால் அவைகளை நிராகரித்தபடியே எனக்கேயான பிரத்யேக உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அப்பா என் முன்னால் நிலைகுலைந்தவராக, தடுமாற்றங்களுடையவராக தெரிந்ததே இல்லை. அவரது ஒரு சொல்லையும் ஏற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமோ மனத் தெளிவோ இல்லை என்றாலும், அவர் எனக்கு பலவீனமானவராகத் தெரிந்ததில்லை. அவரது அத்தனை வசவுகளையும் கடந்தும் அவர் மீதிலான எனது மரியாதை ஒருபோதும் குன்றியதில்லை. இப்போது உடலில் வீக்கம் கொண்டு கலங்கிய நிலையில் மருத்துவ வார்ட்டில் சேர்க்கப்பட்டிருப்பது மனதுக்கு எதுவோ சரியில்லை என்றே பட்டது. எனினும், அனைத்து விதமான துயரச் சம்பவங்களும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் மட்டும்தான் நிகழ வேண்டுமா? நமது வாழ்க்கையிலிருந்து அவையெல்லாம் விதிவிலக்கா என்ன? எவ்விதமான மோசமான அனுபவத்திற்கும், இவ்வாழ்வு திறந்தே இருக்கிறது. உண்மையில், மருத்துவமனையில் இருக்க எனக்கு விருப்பமே இல்லை.

அன்றிலிருந்து, மூன்று தினங்களுக்கு பிறகு, அப்பா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பூச்சியின் ஒற்றாக இருக்கலாம் என்று ஊகத்திற்கு வந்த மருத்துவர்களுக்கும், அவரது வீக்கத்தின் மூலம் புரியாமல்தான் இருந்தது. ஏதேதோ காரணங்களையும் அம்மாவும் தன்போக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள். முன்பொரு காலத்தில் பெரியம்மா விட்ட சாபத்தின் பலனாகவும் இது இருக்கலாம் என்பது அவளது எண்ணமாக இருந்தது. தெருவாசிகள் ஒவ்வொருவராக அபூர்வ உயிரைப்போல வந்து வந்து அப்பாவை சந்தித்துவிட்டு போகிறார்கள். வீட்டில் எந்த நேரமும் இரைச்சல்.

அப்பா மெல்ல தேறிவருகிறார். அவரது உடல் வீக்கம் சிறிது சிறிதாக வற்றி வடிந்துவிடும் என்றும் சில மாத்திரைகளை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அப்பா ஒரு நோய்கூறு கொண்ட மனிதராக முன்னறையிலும், நான் காயம் பட்ட கால் பாதத்துடன் உள்ளறையிலும் வீட்டில் தனித்தனி தீவுகளாய் இருந்தோம். கணினியை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் என்றாலும், மனதில் அப்பாவின் முகத்தில் படர்ந்த வேதனையின் அழுத்தம் பாரமாக வலி திருகியது. நீண்ட நேரம் கணினியை பார்த்தபடியே அமைதியில் இருந்தேன். வெளியில் பல ரூபக் குரல்கள். எனினும், நிகழ்ந்துவிட்ட ஒரு வேதனைமிகு தருணத்தில் இருந்து விடுபட வேண்டியது அவசியமாதலால், மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் முகநூலைத் திறந்தேன். அப்பா எனும் பெரும் மையத்தை குடைந்துகொண்டு, எனது சிந்தனை ஒரு தேனீயைப்போல, சக்கரவள்ளியின் தடம் தேடி ரீங்காரமிட்டது.

”உங்களை காயப்படுத்த வேண்டுமென நான் அப்படி சொல்லவில்லை. இக்காலத்தில், கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமானது. அதனால்தான் சொன்னேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிக்கவும். அதோடு இரண்டு தினங்களாக எனது கவிதைகளுக்கும் நீங்கள் விருப்பக்குறி இடவில்லையே” சக்கரவள்ளி செய்தி அனுப்பியிருந்தாள்.

அனாதரவாய் நின்றிருந்த என் முன்னால் நீண்டிருந்த நேசக்கரமாய் அவளது செய்தி இருந்தது.

“வீட்டில் சில பிரச்சனைகள் சக்கரவள்ளி. அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை. மூன்று தினங்களாக மருத்துவமனைக்கும், வீட்டிற்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் முகநூல் வர முடியவில்லை.”

“அப்படியா அப்பா இப்போது எப்படி இருக்கிறார். அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தருணங்களில்தான் நமது நெருக்கம் அவர்களுக்குத் தேவையாய் இருக்கும்”

“அது சாத்தியமில்லை சக்கரவள்ளி. அப்பாவுக்கு இப்படியொரு சிக்கல் உருவானதன் பெருந்துயரம் எனக்குள் இருக்கிறது. ஆனால், அதனை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்பாவுடன் பேசுவதே இல்லை. மிக அரிதாகத்தான் எங்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது”

”அது சரி. நீங்கள் என்னைப் போலத்தான் போல இருக்கிறது. நானும் பெற்றோருடன் தொடர்பில் இல்லை. ஆசிரியை பணி சேரும் எனது முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்போதிலிருந்து இங்கு தனியாகவே ஹாஸ்டலில் தங்கி இருக்கிறேன். நாம் கிட்டத்தட்ட ஒருவிதமான மன இயல்பைத்தான் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். இப்போது எனது கவிதை பிறக்கும் சூட்சுமத்தை அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன். எனது தனிமைதான் கவிதையாகிறது”

சக்கரவள்ளியின் வார்த்தைகள் பெரும் ஆறுதலாக இருந்தன. எனது துயரத்தை பங்கு போட்டுக்கொள்ள இதோ இணைய வெளியில் ஒருத்தி கிடைத்திருக்கிறாள். ஒருவேளை எனது தனிமையுணர்வுதான் சக்கரவள்ளி எனும் கற்பனை உருவை உருவாக்கி நிலைக்கண்ணாடியைப்போல எனதெதிரில் இருக்கும் கணினியின் மறுபக்கத்தில் உயிரியக்கம் கொள்ளச் செய்திருக்கிறதோ! எங்கேயே கேட்ட குரல் ஒன்று அக்கணத்தில் நினைவுக்கு வந்தது. “சமயத்தில் மனிதர்கள் ஒரு கண்ணாடியைப்போல நம்மை நமக்கே அடையாளம் காட்டுவதற்காக தோன்றுகிறார்கள்”.இதுதான் சந்தர்ப்பம் என அவளை ஆதிமுதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்றொரு எண்ணம் உருவானது.

உற்சாக மிகுதியில் “சக்கரவள்ளி உங்களது இயற்பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றேன். சட்டென எதிர்புறத்தில் ஒரு அமைதி உருவானது. சில நொடிகள் எந்தவித பதிலும் இல்லை. ஆனால், எனது கேள்வியை அவள் பார்த்துவிட்டாள் என்று முகநூல் சேட்டிங் பாக்ஸ் காண்பித்தது. அவசரப்பட்டுவிட்டோமோ! அவளுக்கு இக்கேள்வி சங்கடத்தை உருவாக்கியிருக்கலாம் என்கிற நினைப்பில், வழக்கம்போல தவறாக நினைக்க வேண்டாம் எனும் சொல்லை பகிர்ந்துகொள்ள எத்தனித்தபோது, அவளிடம் இருந்து பதில் வந்தது.

“அர்ச்சனா..ஆனால், நாளைக்கு இதே கேள்வியை கேட்டால் அப்போது எனது இயற்பெயர் அர்ச்சனா என்று இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது” என்றிருந்தாள்.

புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. கடுமையாகவும் தெரிந்தது. சமரச விழைவாகவும் தெரிந்தது. சொற்களை விழுங்கியபடியே, ”பெயரைப் பற்றி இனியும் கேட்க மாட்டேன். சக்கரவள்ளி என்பதே உரையாடலுக்கு ஏற்ற பெயர்தான்” என்று அனுப்பினேன்.

“சமயத்தில் நீங்கள் உண்மையை பேசுகிறீர்களா அல்லது புகழ்தலை போல இகழ்தல் செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை. எனினும், அதுபற்றி எனக்கு கவலையில்லை” என்றாள்.

முதல் முறை அவளது பதிலில் தென்பட்ட அணுக்கமும், என் மீதிலான பரிவும் இப்போதைய பதில்களில் என்னால் உணர முடியவில்லை. விலகலையும் குற்றம் சாட்டுவதையுமே அவை நோக்கமாக கொண்டிருந்ததைப்போல இருந்தது.

“மன்னிக்க வேண்டும் தோழி! எனக்கும் சமயத்தில் உங்களது பதில்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன. நீங்கள் அன்பாகப் பேசுகிறீர்களா அல்லது கடிந்துக் கொள்கிறீர்களா எனப் புரியவில்லை” என்று எனது நிலையை அனுப்பினேன்.

“புரியாதது எனது பிழை அல்ல. உரையாட விருப்பமில்லை என்றால் தொடர்பை துண்டித்து விடவும்”.

மிகக் கடுமையான நேரடி வார்த்தைகள். உடல் முழுக்க முள் தைத்ததைப்போல இருந்தது எனக்கு.

“சக்கரவள்ளி. நான் இதற்கு முன்பு ஒரு பெண்ணிடம் பேசியதில்லை. அதனால், எனது பேச்சு சரியாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை. வீட்டில் ஏற்கனவே பிரச்சனை. அதனால்தான் மனப் பதற்றத்தில் கொஞ்சம் குழப்பம் நிறைந்ததாக எனது பதில்கள் இருக்கின்றன என நினைக்கிறேன்”

“உங்களது குழம்பிய மனநிலையை தேற்றிக்கொள்ள உபயோகப்படும் மருந்துக்குப்பியைப்போல எனதுடனான உரையாடலை கருதுகிறீர்களா?” என்றாள்.

“அய்யோ..இது முற்றிலும் நேரெதிராகப் போகிறது. அப்படியொரு எண்ணமே எனக்கு இல்லை. மன்னிக்கவும்”

“இதுவரையில் நீங்கள் பேசியதில் பத்தில் ஒன்பது வார்த்தைகள் மன்னிப்பு கோருவதாகத்தான் இருக்கிறது என்பதை உணருகிறீர்களா?. உங்களுக்கு மனம் சார்ந்த பிரச்சனை எதுவோ இருக்கிறது என நினைக்கிறேன்”

‘நீயொரு பைத்தியக்காரன்’ என்பதுதான் அந்த பதிலின் தொனியில் வெளிப்பட்டிருந்தது.முகநூல் கண நேரத்தில் எப்படியொரு உறவை தலைகீழாக்குகிறது என்பதை யோசிக்கையில் தலை சுற்றுவதைப்போல இருந்தது. மானசீக குரு கோபாவின் குரல் அசீரிரியைப்போல எனக்குள் ஒலித்தது. ‘முற்றிலும் நேரெதிராக நமது உரையாடல் செல்வது ஒருவகையில் நல்லதுதான். இணக்கமான வார்த்தை பகிர்வுகளில் கூடாத உறவு நிலை, முரணில் இருந்து சட்டென தீப்போல பற்றிக்கொள்ளவும் சாத்தியமிருக்கிறது. உன்னில் இருந்து விலகுவதைப்போல அவளது வார்த்தை இருக்கிறதென்றால், உனது அடுத்த வார்த்தை அவளுக்கு முற்றிலுமாக அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும்’

மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டேன். என்னுள் அலையடித்துக்கொண்டிருந்த வெவ்வேறு திரிபுகளை கோர்த்து ஒற்றை இலக்காக வரித்து, ஒரு சரீரமாக எனக்கெதிரில் இல்லாத ஆபத்தின் தன்மை குறைச்சலில், ஏதோ ஒரு உலகத்தில், ஏதோ ஒரு காலத்தில், அமர்ந்திருக்கும் அந்த பெண்ணிடம், “எனக்கு உங்களது கவிதைகளை மட்டுமல்ல. உங்களையும் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு வரியிலும் ஒரு மணம் இருக்கிறது. அது என்னை இழுத்தபடியே இருக்கிறது. உங்களை நான் விரும்புகிறேன் தோழி” என்றேன். உடல் முழுக்க நடுங்கத் துவங்கியது. பதற்றத்தில் மனதிற்குள் சொற்கள் குழம்பித் திரிந்தன. செய்திருக்கக்கூடாது எதையோ செய்துவிட்ட கொதிப்பு எழுந்தெழுந்து அடங்கியபடியே இருந்தது. ஒரு கணம் பார்வையை கணினியில் இருந்து விடுத்து, எனது அறையில் மேயவிட்டேன். இருளே வடிவமாய் என்னை தனக்குள் அமிழ்த்தியிருந்தது எனது அறை. நாற்புறமும் துளி வெளிச்சமும் இல்லை. பார்வைக்குப் புலனாகாத வெளியில் எனது தனிமையும், நானும், எனது பொய் நிகர் உலகமும்.

அவளிடமிருந்து பதில் வந்தது. “ஹா ஹா..நீங்கள் தமாஷான ஆள்தான். உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன். நாளை காலை எனது பதில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இப்போதைக்கு விடை பெறுகிறேன்” என்றாள்.

எரிந்துகொண்டிருந்த எனது கண்களில் குளிர் பாய்ந்தது. நடுக்கம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்கிற நினைவு எழுந்தது என்றாலும் கோபாவின் ஆசிகள் எனக்கிருக்கிறது எனும் நம்பிக்கையில் என்னை தன்மைப்படுத்தினேன். முழுக்க முழுக்க என்னிலிருந்து அனைத்து நினைவுகளும் உதிர்ந்து போயிருந்தது. சக்கரவள்ளி மட்டுமே எங்குமாய் நின்றிருந்தாள். வெளியில் வேறொரு உடல் உபாதையில் சிக்குண்டிருந்த தந்தையின் நினைவு முழுக்க என்னிலிருந்து உதிர்ந்து போயிருந்தது. மயக்கம் உடலைத் தழுவியது. மெல்ல தரையில் உடல் சாய்ந்தேன்.

சக்கரவள்ளி இப்போது கனவாய் மலருகிறாள். அவளைச் சுற்றிலும் சொற்கள் அங்குமிங்குமென ஊர்ந்தலைகிறது. கையில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிற ரோஸ் மலர்களுடன் என்னை நோக்கி புன்னகைத்தபடியே வருகிறாள். என்னை வெறுத்துவிடாதீர்கள் எனும் எனது குரலை துளியும் பொருட்படுத்தாமல், கையில் இருக்கும் மலர்களை என் மீது வீசியெறிகிறாள். கண்களை மூடிக்கொண்டு ரோஸ் மலர் மழையில் நனைகிறேன். மணம் உருவம் கொள்கிறது. என் உடலைத் தழுவி மேலும் மேலும் என்னை மயக்கத்தில் சாய்க்கின்றன.

மறுநாள் காலையில், வழக்கத்துக்கு முன்பாகவே தூக்கம் கலைந்துவிட்டது. தகுந்த நாளில், தகுந்த நேரத்தில் துளி பிரயத்தனமும் இல்லாமல் உறக்கத்தை நழுவி உருட்டிச் செல்லும் மனம் ஒரு தேர்ந்த கடிகாரம்தான்! வழக்கம்போல வீட்டினுள்ளாகவே நொண்டியபடி நடந்து கொண்டிருந்தேன். வீட்டை முழுதாய் பத்து சுற்றுகள் சுற்றியிருப்பேன். மனம் வலுவாய் இருந்தது. உடலில் முறுக்கு ஏறியது. சிந்தனையில் தெளிவு. விறுவிறுவென நடந்து வீட்டிற்கு வந்து நாற்காலியில் அமர்ந்தேன். வெளியறையில் எனது தந்தை அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார். பத்து சுற்றின்போதும் அவரது கண்கள் எனது உடலின் மீது பதிந்து சுழன்றன. எனது பாதத்தின் மீது அவரது கவனம் இருப்பதை உணர முடிந்தது. அதனால், வேண்டுமென்றே வலியெடுப்பதைப்போல முகத்தில் சுணக்கத்தை காண்பித்தேன். அம்மா இருவருக்கும் தேனீர் போட்டுக் கொடுத்தாள். தந்தையின் முதுகு வீக்கம் இப்போது பகுதியளவில் குறைந்துவிட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் எல்லாம் இயல்பின்போக்கில் வழக்கம்போல பயணிக்கத் துவங்கிவிடும். அதன் பிறகு, எனது பணி பற்றிய விசாரணை துவங்கும்.

எனது அறைக்குள் நுழைந்து கணினியைத் திறந்தேன். கூகுள் குரோமை முடுக்கிவிடுகையில் இன்றைக்கு என் கண்களில் அந்தக் குருவி தென்படவில்லை. இணைய சேவையில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று நினைத்ததாலும், முகநூலில் நுழையும் பேராவல் எழுந்திருந்ததாலும், அவசர அவசரமாக எனது மெயில் ஐடியை பதித்து உள்ளே நுழைந்தேன். எந்தவொரு புதிதான செய்தியும் வந்திருக்கவில்லை. ஒருவேளை சக்கரவள்ளியின் அன்றைய தினங்கள் இன்னும் துவங்காமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தது. அதனால், அவளது பக்கத்தில் கடைசியாக எப்போது கவிதை எழுதினாள் என்பதை அறிய, அவளது பெயர் தேடுதளத்தில் பதித்தேன். சக்கரவள்ளி என்கிற பெயரில் ஏழுட்டு பக்கங்கள் வந்தன என்றாலும், என்னுடன் உரையாடலில் பங்குகொண்ட கோவை சக்கரவள்ளியை அதில் பார்க்க முடியவில்லை. முன்னிலும் தீவிரமாக முகநூலில் மேய்ந்து பார்த்தேன். அவளது பக்கத்தை என்னால் பிடிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் தேடியதில் ஒருவித சோர்வு என் முன்னால் எழுந்தது. திடீரென அந்த காலை வேளையில் அவள் முகநூல் கடலில் இருந்து மறைந்து போயிருந்தாள். ஒருகணத்தில் அனைத்தும் பொய்யோ என மனம் கனத்து துடித்தது. வேலை அழுத்தத்தில் இருந்து தப்பித்து கணினியில் புகுந்திருந்த எனக்கு சக்கரவள்ளி ஒரு ஆத்ம துணை போல சமீப நாட்களில் தோன்றியிருந்தாள். இப்போது அனைத்தும் மாயைதானோ என நினைக்கையில் அழுகையே வந்துவிட்டது. அப்பாவின் வேதனை மிகுந்த தருணத்தில்கூட வராமல் இருந்த அழுகை இப்போது வெளிப்பட்டுவிட்டது.

என்ன செய்து இந்த துயர இருளில் இருந்து விடுபடுவது என மனம் பல்வேறு ஊகங்களை தேடிக்கொண்டிருந்தது. கடந்த சில தினங்கள்தான் எனது தனிமையுணர்வை என்னிடமிருந்து கழன்றிருந்த பொழுதுகளாய் ஆகியிருந்தன. இப்போது மீண்டும் அதே துயர சுழலில் சிக்குண்டிருக்க வேண்டும். பேசாமல், காலில் இடப்பட்டிருக்கும் கட்டினை அவிழ்த்துவிட்டு, சாலைப் பணிக்கே சென்றுவிடலாமா என்று கூட ஒருகணம் தோன்றியது.

நினைவடுக்கில் முன்னும்பின்னுமாக சக்கரவள்ளியின் முகநூல் தினங்களை தேடியபடியே இருந்தேன். உடனடியாக எனக்கு எதுவோ சொல்லிற்று. எனது அக்கவுண்ட்டை லாக் அவுட் செய்தேன். சிறிது நேரம் மெளனம் என்னில் நிலைத்திருந்தது. இப்போது மீண்டும் ஒரு மெயில் ஐடியை அதில் பதித்தேன். பாஸ்வேர்ட்டும் என்னுடையதல்லாத வேறொன்றை பதிவிட்டேன். சில நொடிகள் சுற்றிக்கொண்டிருந்த இணைய சேவை, இப்போது எனக்கு திறந்து காட்டிவிட்டது. ஆமாம் சக்கரவள்ளியின் பக்கமேதான். நேற்றிரவு பதிவிட்டிருந்த கவிதைக்கு 270 பேர் விருப்பக்குறி இட்டிருந்தார்கள். மனம் முழுக்க சந்தோஷத்தால் திளைத்தது. புதிதாக மனதில் உருத்திரண்ட ஒரு கவிதையைப் பதிவிட விரல்களை கோர்த்துக்கொண்டிருக்கையில், வலதுபுற மூலையைத் தொட்டேன். கமலக்கண்ணன் எனும் பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“எனக்கு உங்களது கவிதைகளை மட்டுமல்ல. உங்களையும் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு வரியிலும் ஒரு மணம் இருக்கிறது. அது என்னை இழுத்தபடியே இருக்கிறது. உங்களை நான் விரும்புகிறேன் தோழி” 

அதற்கு கீழே, “ஹா ஹா..நீங்கள் தமாஷான ஆள்தான். உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன். நாளை காலை எனது பதில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இப்போதைக்கு விடைபெறுகிறேன்” என்றிருந்தது. அதற்கு என்ன பதில் எழுதுவென்று தீவிரமான சிந்தனை கதியில் ஆட்பட்டிருந்தேன். வெளியில் இருந்து யாரோ கூப்பிடும் குரல் தொடர்ச்சியாக கேட்டபடியே இருந்தது. எனினும், பதில் எழுதும் அவசரமும் உந்தித் தள்ளியது. வெளியிலிருந்து நீளும் குரலிலிருந்து தப்பிக்க, எனது விரல்களால் ஒவ்வொரு எழுத்தாக லேப்டாப்பில் அழுத்தத் துவங்கினேன். கமலகண்ணனும், சக்கரவள்ளியும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் துரத்தியபடியே இருந்தார்கள். அருகில் ஒரு தொடுவுணர்வு. தலையை உயர்த்திப் பார்த்தேன். எதிரே ஒரு உருவம் அசைகிறது. அதன் நிழலாட்டம் என் மீதும், இந்த இருளின் மீதும் விழுந்து அசைகிறது. அது பல்லாயிரக்கணக்கான புள்ளிகளால் கோர்க்கப்பட்டு பேருருவம் எடுக்கிறது. எனது பதிலை தட்டச்சு செய்யும் நிதானம் இதனால் குலைகிறது. எதிரில் நிற்கும் உருவத்தை தலை நிமிர்த்திப் பார்க்கிறேன். அந்த உருவம் எனக்கு அறிமுகமானதுதான். நன்றாக நினைவிருக்கிறது. முதுகில் வீக்கம் பெற்றிருந்த எனது முகநூல் தோழன் கமலகண்ணின் தந்தைதானவர். அல்லது முகநூல் தரகு வேலை பார்த்து அறிமுகம் செய்திருந்த சக்கரவள்ளியிடம் புலம்பித் தவித்த, எனது பாதத்தில் ரணம் உண்டாகக் காரணமாய் இருந்த, வேலை வேலை என சதா நொடிகளிலும் பல கூர்முனைகளை என்னில் சொருகுகின்ற எனது தந்தையேதானவர்.

புரியாத விழிகளால் எனது அறையில் அவர் என்ன செய்கிறார் என்பதைப்போல பார்க்கிறேன். அவரது உதடுகள் எதையோ உச்சரிப்பு செய்கின்றன. காதில் ஒலி விழாததால், மீண்டும் எனது பதிலை தட்டச்சு செய்வதில் முனைப்பாய் இருக்கிறேன். சக்கரவள்ளிக்கும் கமலக்கண்ணனுக்கும் இடைப்பட்டதொரு நிலையில் எழுந்து அந்த இருளில் பதுங்கி நழுவுகிறேன். அவர் என் மீது ஏறுகிறார். பிரம்பின் அடியில் இருந்து தப்பித்து விலகுகிறேன். காலில் வலி எடுக்கிறது. மீண்டும் உயரும் பிரம்பிடமிருந்து தப்பிக்க, அவசரமாக நொண்டத் துவங்கினேன். காலில் சுற்றப்பட்டிருக்கும் வெள்ளை நிற துணிக்கட்டில் இருந்து ரத்தம் ஊர்கிறது. ஓட முடியாமல் இருளினுள் சுற்றி சுற்றி வருகிறேன். காலில் பெருக்கெடுக்கும் சிவப்பு நிற ரத்தம் விரிந்து பரந்து எனது கணினியாகிறது. அதற்குள் நீந்தும் குருவியாக நானிருக்கிறேன். மவுஸின் அம்பைப்போல எனக்குப் பின்னால் அப்பா துரத்தியலைகிறார். அல்லது மையப் பொறியாளர் சண்முகசுந்தரமா?

அப்போதுதான் கவனித்தேன். எனக்கெதிரில் ஒரு உருவம் கணினி திரைக்கு வெளியில் அமர்ந்திருக்கிறது. ஒரு குருவியின் தோற்றத்தில் இருக்கும் அந்த உருவம் நாற்காலியில் அமர்ந்து எங்கள் துரத்தலை வேடிக்கை பார்க்கிறது. ஒருகணத்தில் அதன் முகம் சக்கரவள்ளியாகவும், கமலகண்ணனாகவும் மாறி மாறி கண்கட்டி வித்தை காட்டுகிறது. பின் மிக நிதானமாக கணினியின் அருகில் இருக்கும் மவுஸில் விரல் வைத்து, ஆழ்ந்து என் முகத்தைப் பார்த்துவிட்டு என் மீது குறி வைத்து ஒரு அழுத்து அழுத்துகிறது. அவ்வளவுதான் நாடகம் முடிந்தது. என் உடல் வெடித்து பஞ்சு துகள்களாக நான் சிதறுகிறேன். கணினி திரை முழுக்க நான் சிறு சிறு புள்ளிகளாக பறக்கிறேன். பஞ்சு பஞ்சாய் பல கூறுகளாகிறேன்!

***

ராம் முரளி – நெய்வேலியைச் சேர்ந்த இவர், திரை துரையில் பணியாற்றி வருகிறார். காலத்தை செதுக்குபவர்கள் (1,2), சிக்ஸர்களின் காலம் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அண்மையில் வனமேவும் ராஜகுமாரி எனும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular