Tuesday, April 30, 2024

அல்ஜீப்ரா

எஸ்.சங்கரநாராயணன்

மாயா அத்தனை வசீகரமான பெண் அல்ல. ஒட்டிய கன்னங்கள். அவள் தலைமுடியும் அத்தனை அடர்த்தி காட்டவில்லை. மெலிந்த ஒடிசலான கீரைத்தண்டு தேகம். குடும்பத்தில் அவளது சம்பளம் தேவையாய் இருந்தது. அவள் சிரிப்பு கவர்ச்சிகரமாக இல்லை. பல்வரிசை சிறிது பிசகி ஈறெல்லாம் மேலோடிப் பல்லும் ஈறுமாய்த் தெரிந்தன. உடம்பு எனும் வியர்வைக் கதுப்பு. அவளிடம் பேச வந்தவர்கள் சற்று தள்ளி நின்றே பேசிவிட்டுப் போனார்கள்.

காசிக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளை அலுவலகத்தில் யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதே அவளை அவனுக்குப் பிடித்த முதல் காரணமாக இருக்க வேண்டும். அவனுக்கும் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள பெரிதாய் எதுவும் இல்லை. தன் வாழ்வில் பெரிய உயரங்கள் இல்லை என அவனே நினைக்கிற அளவில் ஒரு வாழ்க்கை.

யாரோ சொல்லி அந்த அலுவலகத்தில் அவனுக்கு ஒரு தற்காலிக வேலை ஒரு மாத அளவில் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. நம்ம பாடே இங்கே பெரும் பாடு, இதில் பிறத்தியார் பற்றிய கவலைகள் அவனுக்குக் கட்டுப்படி ஆகாது. அதுவும் அவனுக்குத் தெரியும். முதலாளியிடம் சொல்லி அவர் இரக்கத்தின் பேரில் அவன் அந்த அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டான். வெளி வாடகை மிச்சம். தவிரவும் இது தாற்காலிகப் பணி என்ற அளவில் கொஞ்ச காலந்தானே என அவரும் சம்மதித்திருக்கலாம். அத்தோடு அலுவலக நேரம் முடிந்தும் அவனை அவரால் மேலதிக வேலை வாங்கிக்கொள்ள இது சௌகர்யமாய் இருந்தது.

மாயா யாரிடமும் பெரிதாய்ச் சிரித்துப் பேசிப் பார்க்க முடியாது. அங்கே அவள் டைப்பிஸ்டாகச் சேர்ந்தாள். வேலையில் அவள் அத்தனை கெட்டிக்காரி இல்லை. ஒரு பிரபல ஆங்கில நகைச்சுவை உண்டு. ஒரு தட்டச்சுக்காரியிடம் கேட்டார்கள். வாட் இஸ் யுவர் ஸ்பீட்? அதற்கு அவள் பக்கத்தில் இருந்தவர் ஃபார்ட்டி மிஸ்டேக்ஸ் பெர் மினிட், என்றாராம். அவள் ஒருமுறை தட்டச்சு செய்ததை மேனேஜர் பார்த்துவிட்டு சுழித்து சுழித்து திருத்தங்கள் எழுதினார். அவள் போய் பொறுமையாகத் திரும்ப தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. ஒரே வேலையைத் திரும்பச் செய்வது அவளுக்கு இந்நாட்களில் பழகியிருந்தது. மேனேஜரின் திட்டுக்கள் பழகியிருந்தன. திட்டுவது பரவாயில்லை. பாராட்டுகள் அவளை பயமுறுத்தின.

மாயா சுமாரான உடைகளே அணிந்து வந்தாள். ஆனால் அவை அவளது சிறந்த உடைகளாக இருக்கலாம். எப்போதோ தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் அவளுக்குப் புதுத்துணி வாய்க்கிறது என நினைத்துக் கொண்டான் காசி. புதுத்துணி கிடைக்காத விசேஷ நாட்களைப் பிடிக்காமல் போய்விடுகிறது. விழாக்கள் மகிழ்ச்சியின் அடையாளம். அவன் வீட்டில், அவள் வீட்டில் அவை திகைப்பைக் கொண்டு வந்தன.

எல்லாரும் சாப்பிட்டுவிட்டு வந்தபின் மாயா தனியே போய் மதிய உணவு சாப்பிட்டாள். அவளை யாரும் சாப்பிடக் கூப்பிடுவதே இல்லை. ஓரளவு அது அவளுக்குப் பாதுகாப்பாக இருந்தது. யாரோடும் பழகி சங்கடப்படுவதை விட பழகாமல் விலகி ஒதுங்கி விடுதல் பாதுகாப்பானது. அதில் அவமானங்கள் இல்லை. எழுந்து கைகழுவப் போனாலும் அவள் செருப்பைக் கழற்றிவிட்டே போனாள். அப்படி செருப்பை அதிக காலம் பிய்ந்து போகாமல் ஓட்ட அவள் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
எப்போதாவது மாயாவை அவன் தாண்டிப்போக நேர்ந்தால் சிறிது தைரியத்துடன் காசி ஒரு புன்னகையை அவள் மீது விசினான். அவளுக்கு முதலில் பயமாகவும் பிறகு அது வேண்டியும் இருந்தது. புழுக்கமான அறையில் காற்று வந்தாற் போன்ற ஆசுவாசம் அது. பிறகு அவளும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். மானேஜரிடம் திட்டு வாங்கி அவள் வெளியே வந்தால் அவன் அவளை ஒரு கரிசனப் பார்வை பார்த்தான். ஆகா… அந்த அலுவலகத்தில் அவளுக்கு இரக்கப்படவும் ஓர் ஆத்மா என்று அவளுக்குப் படபடப்பாய் இருந்தது.

கொடுத்த எந்த வேலையானாலும் அவன் செய்தான். இன்ன வேலை என்று இல்லை. சிலபேர் அவனைப் போய் சாப்பாடு வாங்கிவர, டீ வாங்கிவர என்று கூட அனுப்பினார்கள். அவளை விட அவன் நிலை பரிதாபகரமானது என அவள் நினைத்துக் கொண்டாள். ஒருவேளை அவள் ஓர் ஆணாக அந்த அலுவலகத்தில் வேலைக்கு வந்திருந்தால் அவளையும் அப்படி வேலை வாங்கியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டாள்.

ஒருமுறை அவளுக்கும் சேர்த்து டீ வாங்கி வந்தான் அவன். அவள் திகைத்துப் போனாள். “சாரி. எனக்கு வேணாம்” என்று எழுந்து நின்றாள் மாயா. அவள் உடம்பு லேசாய் நடுங்கியது. “பரவால்ல மேடம், எடுத்துக்கங்க” என்று புன்னகைத்தான் காசி. “நான் கேட்கவே இல்லையே…” என்றாள் மாயா. அவன் பதில் சொல்லாமல் புன்னகை செய்தான். “நாளைலேந்து எனக்கு வாங்கிட்டு வரவேண்டாம்” என்றபடி மாயா டீயை எடுத்துக் கொண்டாள். என்றாலும் அவன் வாங்கி வந்தது அவளுக்குப் பிடித்திருந்தது. டீ ருசியாய் இருந்தாற் போலத் தோன்றியது.

ஐந்து மணியாகி விட்டால் பத்து முப்பது பேர் அமர்ந்து வேலைசெய்து கொண்டிருந்த அந்த இடம் சட்டென்று அமைதியாகி விடும். மின்விசிறிகள் ஓய்ந்து விடும். குழல் விளக்குகள் பாதிக்கு மேல் அணைக்கப்பட்டு விடும். நீளவாக்கில் போகும் அறை, சற்று இடது ஒதுக்கத்தில் மாயாவின் இருக்கை. அவள் மேசை முன்னால் தட்டச்சு யந்திரம்… தனி அறைபோலவே அது, கதவு தாழ்ப்பாள் உண்டு அதற்கு. அவள் அருகிலேயே கோப்புகள் வைக்க அலமாரிகள் இருந்தன. அலுவலக நேரம் முடிய பூட்டி விடுவார்கள். இடது வாட்டத்தில் கழிவறைப் பக்கம் அதற்கு முன்னால் மதிய உணவு சாப்பிடும் ஓய்வறை இருந்தது. அங்கேதான் காசி தங்கிக் கொண்டான். நீளமான இரண்டு பெஞ்சுகளைச் சேர்த்துப் போட்டுப் படுத்துக் கொண்டான். தலையணை இல்லை. ஒரே ஒரு போர்வை வைத்திருந்தான்.

எல்லாரும் கிளம்பிப் போனதும் அந்த மொத்த அலுவலகமுமே தொண்டை அடைத்தாற்போல சப்தம் விக்கித்துக் கிடந்தது. அவனுக்கு முதலில் அது பயமாய் இருந்தது. பிறகு பழகி விட்டது. இப்படித் தனிமைவாசிகள் பொதுவாக டிரான்சிஸ்டர் ஏதாவது வைத்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவனுக்கு அதெல்லாம் அதிகபட்சச் செலவு. அலுவலகத்தில் வரும் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ்கள், அதில் தமிழ் பேப்பர் மாத்திரம் அவன் புரட்டிப் பார்ப்பான். அரசியலில் பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் உடைகளைத் துவைத்துப் போடுவான். அவனிடம் இரண்டு செட் உடைகளே இருந்தன. மாற்றி மாற்றி துவைத்து உள்ளேயே ஃபேனடியில் காயப்போட்டு எடுத்துக் கொள்வான். இஸ்திரி காணாத உடைகள்.

சம்பளம் தினசரி கணக்கு 200. ஆகவே ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சம்பளம் கிடையாது. முன்பணமாக அடிக்கடி அவன் செலவுக்கு வாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. வேறு வழியில்லை. தலைக்கு எண்ணெய், சோப்பு, பௌடர் என கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது அவன் தன்னை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி மூனுவேளை வயிறு பசித்தது. மதியம் ஒருவேளை எல்லாரும் அலுவலகத்தில் இருக்கிற நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவான். இரவுகளில் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்வான். அதற்கே அட்வான்ஸ் வாங்கிக் கொண்டான் காசி. ஏதாவது ஊருக்கு அம்மாவுக்கு பணம் அனுப்ப முடிந்தால் நல்லது.

அவனைப் பற்றியும் கவலைப்பட உலகத்தில் யாரும் இல்லை. எல்லாருக்கும் ஏற்கனவே அவரவர் கவலைகள் இருந்தன போலும். அவன் வேலைக்காலம் முடிந்து போய்விட்டால் அங்கே எல்லாரும் அவனை மறந்து விடுவார்கள். அவனை யார் ஞாபகம் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்.

ஆனால் மாயா… அவள் அவனை நினைவு வைத்துக்கொள்வாள் என்று தோன்றியது. ஏன் அவனுக்கு அப்படித் தோன்றியது அவனுக்கே தெரியவில்லை. அவளது பார்வையில் அவனுக்கு ஒரு அன்பின் குழைவு தெரிந்தது. அலுவலக வேலை நேரத்தில் அவன் மேனேஜர் அறைக்கு வெளியே ஒரு ஸ்டூலில் அமர்ந்து கட்டளைகளுக்குக் காத்திருந்தான். அவனிடம் எல்லாருமே கட்டளை போலத்தான் பேசினார்கள். அவன் அவர்களின் ஊழியன். இது ஊழ்வினை என்று சொல்லலாமா?
தடதடவென்று அத்தனை அமைதியில் அவளது தட்டச்சு யந்திரம் இயங்கும் சத்தம் கேட்டது. எப்போதாவது தற்செயலாக அவள் நிமிர்ந்து பார்த்தால் தூரத்தில் இருந்து அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுக்கு சிறு படபடப்பு ஏற்பட்டது. சிலசமயம் அவள் கடிதத்தை தட்டச்சு செய்ததும் அந்தக் காகிதத்தை உருவும்போது அவன் கிட்டே வந்து நிற்பான். “என்ன?” என்பாள். “நான் போய் மேனேஜர்கிட்ட குடுக்கறேன்…” என்று புன்னகை செய்வான் காசி. எப்ப பார்த்தாலும் சிறு சிரிப்புடனேதான் அவன் பேசுகிறான். அவனைப் பார்க்கும் வரை அவளுக்குச் சிரிப்பே மறந்து போயிருந்தது.

நல்ல பையன்தான் என்று நினைத்துக் கொண்டாள் மாயா. இன்னும் சரியான வேலை கிடைக்காமல் இப்படி அலுவலகம் அலுவலகமாக தகாலிக வேலை என்றே அவன் அமர நேர்கிறது, இது ஏன் தெரியவில்லை. ஒருவேளை நிலையான உத்தியோகம் என்று அமர்ந்துவிட்டால் நேரே அவளிடம் வந்து அவன் தன் காதலைச் சொல்வானோ என்னமோ என நினைக்கையிலேயே முகத்தில் சிவப்பு தேங்கி வெட்கம் பூத்து விட்டது அவளுக்கு. வேலை நேரத்தில் இப்படி யோசனைகள் நல்லது அல்ல. அவளுக்கு ஏற்கனவே தட்டச்சு செய்வதில் நிறையப் பிழைகள் விழுகின்றன… தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஒருநாள் அவளுக்கு உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்துக் கொண்டாள். அலுவலகத்தில் யார் அதைப்பற்றி சட்டை செய்யப் போகிறார்கள்? ஆனால் அவனுக்குக் கவலை இருத்தது. மறுநாள் அவள் அலுவலகம் வந்தவுடன் அவன் அவள் கிட்டே வந்து நின்றான். “என்னாச்சி?” என்று அவன் கேட்டபோது அவன் கேள்வியே அவளுக்குப் புரியவில்லை. “ஏன்?” என்றாள். “நேத்து லீவு போட்டுட்டீங்களே?” என்று கேட்டான் அவன். அவளுக்கு அவனது அக்கறை பிடித்திருந்தது.

“உடம்பு சரியில்ல…” என்றாள் அவள். “அச்சச்சோ…” என்றான் அவன். “இப்ப தேவலையா?” என்று அவன் கேட்டான். அவள் பதில் சொல்லுமுன் மேனேஜர் கூப்பிடுகிறார் என்று போய்விட்டான் அவன். அவள் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளோடு நிறையப் பேச அவனுக்கு ஆசையாய் இருந்தது. மாலை அலுவலகம் ஓய்ந்து அந்தத் தனிமை சூழ்ந்த நேரங்களில் அவனுக்கு இப்போதெல்லாம் மாயா ஞாபகம் வந்தது. சட்டெனத் தும்மினான் அவன். இப்போது மாயா என்னை நினைத்துக் கொள்வாளா… என யோசித்தான். சிரிப்பு வந்தது.

அவளது இருக்கையை இங்கிருந்தே பார்த்தால் அவள் உட்கார்ந்திருப்பது போலவே தெரிந்தது. பிரமைகள். கனவுகளே வாழ்க்கை என்று தோன்றியது அவனுக்கு. அவளைப் பற்றிய நினைவுகள் அவனை உற்சாகப்படுத்தின. நிறைய அலுவலகங்கள் பார்த்தாகி விட்டது. ஆனால் மாயாவிடம் மனம் இழைந்தது போல வேறு எங்கேயுமே லயித்தது இல்லை. மாயாவின் இருக்கையும் அந்தத் தட்டச்சு யந்திரமுமே அவனுக்கு அவள் கூட இருக்கிற ஆசுவாசத்தைத் தந்தன.

அவள் அவனைக் காதலிக்கிறாளா? இருக்கட்டும். ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு அல்லது பிரியம் அல்லது சிநேகம்… அது காதல் என்று மாத்திரம் ஏன் உடனே வகை பிரித்துத் திகைக்க வேண்டும். எந்தப் பழக்கமுமே காலப்போக்கில் தன்னைப்போல அரும்பு விரிந்து பூ ஆவது மாதிரி இயல்பு வசத்தில் காதலாக வாசனை பரத்த வேண்டும். அதற்கு அவசரப்பட முடியாது. எந்தப் பூவை விரியச்சொல்லி ஆணைபோட முடியும்..? என்று ரொம்பத் தெரிந்தவன் போல காசி நினைத்துக் கொண்டான்.

ஒருநாள் அலுவலகம் முடிந்து மாயா கிளம்பினாள். சிறிது தூரம் தெருவில் நடக்கும் போதுதான் பின்தொடர்ந்து யாரோ வருகிற மாதிரி அவளுக்கு இருந்தது. சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். காசி வந்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அந்தப் புன்னகை.

“என்ன எதையாவது வெச்சிட்டு வந்திட்டேனா?” என்று கேட்டாள் மாயா. “இல்ல” என்றான் அவன். என்னமாய்ப் புன்னகை செய்கிறான். “என் கூட ஒரு டீ சாப்பிடறீங்களா மாயா?” என்று கேட்டான் அவன். அதுவரை அவன் அவளைப் பேர் சொல்லி அழைத்தது இல்லை. அவளுக்குத் திகைப்பாகி விட்டது. “என்ன திடீர்னு?” என்றாள் முகம் மாறி. “இல்ல… இன்னிக்கு என்னோட பிறந்தநாள்” என்றான் காசி. ஓர் ஆண் வெட்கப்பட்டு அவள் அப்போதுதான் பார்க்கிறாள்.

“அடேடே. வாழ்த்துகள்” என்றாள் மாயா. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் கையைப் பிடித்துக் குலுக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவனுடன் தேநீர் கடை வரை நடந்தாள். அவள் கூட வந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. எதுவும் அவர்கள் பேசிக்கொள்ளா விட்டாலும் அவர்கள் இடையே இருந்த இணக்கம் இருவருக்குமே வேண்டியிருந்தது. “உங்க பொறந்த நாள் எப்போ?” என்று அவன் மேலும் அவளது இறுக்கங்களைத் தளர்த்த தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான்.

“பிறந்த நாள்ல என்ன இருக்கு? நாம எதாவது சாதிக்கணும். அதைக் கொண்டாடணும்… பிறந்தது ஒரு சாதனையா?” என்று கேட்டாள் மாயா. அவள் அத்தனை பேசியது அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது. வீட்டில் கூட அவள் மனம்விட்டுப் பேசியது கிடையாது. வீட்டில் அம்மா அப்பா தம்பி ஒருத்தன். எல்லாருமே ஒருவருக்கு ஒருவர் ஒட்டாமல் இருந்தார்கள். ஒருத்தரிடம் மற்றவருக்கு பேசிக்கொள்ளச் செய்திகள் இல்லை. வாழவே அலுத்தவர்கள் எல்லாரும். காய்க்காத மாமரம் போல. அந்த வீடு காய்க்காத மாந்தோப்பாக இருந்தது.

“நல்லா இஞ்சி ஏலக்காய் போட்டு ஸ்பெஷல் டீ ரெண்டு…” என்றான் காசி உற்சாகமாக. இன்று இரவுக் கணக்குக்கு வாழைப்பழம் இல்லை. இந்தச் செலவுக்கு அது கட் என நினைத்துக் கொண்டான். அவனுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. திடுதிப்பென்று அவன் அவள்முன் குனிந்து அல்லது அவள் கையைப் பிடித்துக்கொண்டு “நான் உன்னைக் காதலிக்கிறேன்… மாயா” என்று சொல்லி விடுவானோ என அவள் பயந்தாள். அல்லது விரும்பினாள்.

அவளை பஸ்ஸேற்றி விட்டுவிட்டு காசி அலுவலகம் திரும்பினான். அவனுக்கு உற்சாகமாய் இருந்தது. அவள் மறுக்க மாட்டாள் என்று தெரியும் தான். இருந்தாலும் தயக்கமாய் இருந்தது. அவனும் வேலைக்கு என்று இங்கே சேர்ந்து பத்து இருபது நாட்கள் ஆகின்றன. இன்னும் நாள் கடத்துவது அவனுக்குத் தாளாதிருந்தது. இதையே பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டபின்தான் அவளை அவன் அணுகினான்.
அலுவலகத்தின் அத்தனை விளக்குகளையும் போட்டுக்கொண்டு அவன் ஏதோ பாடியபடி தன் உணவறை பெஞ்சில் தாளம் கூடப் போட்டான். அடிக்கடி போய் அவளது அறைப்பக்க ஜன்னலைத் திறந்து அவளது மேசையையும் தட்டச்சு யந்திரத்தையும் பார்த்தான். “நான் கணக்கு படித்தவன் மாயா. அல்ஜீப்ரா தெரியுமா உனக்கு?” என்று தனக்குள் பேசிக் கொண்டான். “மைனஸ் இன்ட்டு மைனஸ் பிளஸ்!”

அதிகம் பேசிக்கொள்ளா விட்டாலும் அவனோடு அவள் கூட அமைதியாய் நடந்து வந்ததே அவனுக்குப் பிடித்திருந்தது. எல்லாம் கூடிவந்தாற் போலிருந்தது. ஆனால் திடுதிப்பென்று மாயா இறந்து போனாள்.

*

காசிக்கு இரண்டு அதிர்ச்சிகள் காத்திருந்தன.

மாயா அன்றைக்கு அலுவலகம் வரவில்லை. குடும்பத்துடன் ஏதோ கல்யாணம் என்று வெளியூர் போவதாக அறிந்தான். அவளுக்கும் இப்படி இட மாற்றங்கள் சிறு ஆசுவாசம் தரத்தான் செய்யும் என நினைத்துக் கொண்டான். அன்றைக்கு இரவு சுமார் பதினோரு மணி இருக்கும். அவன் படுத்துக் கிடக்கிறான். வெளிச்சம் இல்லை. வெளியே தெருவிளக்கில் இருந்து பரந்து வந்த சிறு வெளிச்சம். தலைக்குமேல் மின்விசிறி சுழல்கிற சத்தமும் அதன் அசைவுகளும் தெரிந்தன.

திடீரென்று அவனுக்கு அந்த அறையில் யாரோ கூட இருப்பதாக உள்ளுணர்வு மூடிய கண்ணில் குத்தியது. அதுவரை அங்கே அவன் தங்கியிருக்கிற அந்த இருபத்துச் சொச்ச நாளில் இதுமாதிரி உணர்வு ஏற்பட்டதே இல்லை. ஒரு தவிப்பான மூச்சு கேட்டது இப்போது. சட்டென எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கு வியர்த்து விட்டது. லேசான பயம் வந்தது. தனியே வேற இருக்கிறேனே என்றுதான் முதல் நினைப்பு.

ஆமாம். யாரோ உள்ளே இருக்கிறார்கள். மூச்சு இரைப்பு கேட்கிறது. சட்டென எழுந்து உட்கார்ந்தான். அந்த அறைக்கு வெளியே வராந்தா என நீண்டு கிடந்த வெளியை வெறித்தான். அதோ தூரத்தில்… அது ஒரு பெண். பெண் போலத்தான் தெரிந்தது. அவனுக்கு உடம்பு படபடவென்று நடுங்கியது. யார் அது? இந்நேரத்தில்? ஏன் அவளுக்கு இத்தனை பயமும் திகைப்பும் மூச்சுத் திணறலும்? அத்தனை இருளும் அந்த தூரமும்… அவனுக்கு அந்த முகம் சரியாகத் தெரியவில்லை. என்ன தோன்றியதோ. சட்டென எழுந்து விளக்கைப் போட்டான். குழல் விளக்கு அவன் பயத்தைக் கேலிசெய்தாற் போல சிறிது கண்சிமிட்டி பின் பளீரென்று வெயிலை வீசியது.

யாரும் இல்லை. இல்லையே, யாரோ நின்றிருந்தார்களே? அப்ப அந்த மூச்சு வாங்கும் சத்தம்? அது கேட்டதே? அந்த உருவ அமைப்பு, அதன் உயரம்… அந்தப் பெண், எங்கே வந்தாள்? எப்படி உள்ளே வந்தாள்? ஏன் அப்படி ஒரு மூச்சுத் தவிப்பாய் நின்றாள்? அவனிடம், குறிப்பாக அவனிடம் அவள் எதுவும் சொல்ல விரும்பினாளா?
எழுந்துபோய் சுற்றும் முற்றும் தேடினான். வேறு எந்த அறைக்காவது போய்விட்டாளா அவள்? இல்லை. எங்கேயும் யாரும் இல்லை. தன்னிச்சையாக அலுவலக கடிகாரத்தில் மணி பார்த்தான். இரவு மணி 11.20. அவளது உயரம் சாயல்… எல்லாம்… சட்டென்று ஜன்னல் வழியே பக்கத்து அறையைப் பார்த்தான். மாயாவின் இருக்கை இருளில் உருவ எல்லைகள் கலைந்து கிடந்தது. உறையிட்டு மூடிக்கிடந்த தட்டச்சு யந்திரம். அந்த ஸ்டூலில்… எதுவும் உருவம்? ஆகா யாரோ அங்கே அமர்ந்திருக்கிறார்களா? தலையை உதறிக்கொண்டு பார்த்தான். பிரமை. யாரும் இல்லை அங்கே.

தூக்கத்தில் அவனை எழுப்பித் தவித்து எதோ சொல்ல விரும்பிய அவள், மாயாவா? என்ன சொல்ல வந்தாள்? அவள் இந்நேரம் பஸ்சில் அல்லவா இருப்பாள். செய்தி கேள்விப்பட்டதும், மாயா ஊருக்குப் போறியா? சொந்தத்துல கல்யாணம்னு கேள்விப்பட்டேன்… என நிறுத்தி அவளைப் பார்க்கக் குனிந்தான் காசி. உனக்கு எப்ப கல்யாணம் மாயா?

பெண்கள் வெட்கப்படுவதைப் பார்க்க அழகு. அதுவும் நாம் பேசுவதை ரசித்து வெட்கப்பட்டால் இன்னும் அழகு. இந்நாட்களில் மானசீகமாக நிறைய அவளுடன் அவன் பேச ஆரம்பித்திருந்தான். அதுதான்… அவள் அவனை எழுப்பியதாகவும் வந்து நின்றதாகவும்… கனவுகள். இவை விழித்தநிலைக் கனவுகள். பக்கவாட்டு அறை ஜன்னலைச் சாத்திவிட்டு சிரித்தபடி திரும்ப படுக்கப் போனான்.

விபத்து என்றார்கள். மாயா சென்ற பஸ் ஏதோ மரத்தில் மோதி… அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. வாழ்க்கையில் காசி பெரிதாய் எதையும் எதிர்பார்ப்பவனோ ஆசைப்பட்வனோ அல்ல. முதன் முறையாக அதுவும் அவனது ஆசை மொட்டு அளவிலேயே பிய்த்து வீசப்பட்டு விட்டதா? அலுவலகத்தில் எல்லாருக்கும் அது கொஞ்ச நேரம் சுவாரஸ்யமாய் இருந்தது. பிறகு எல்லாரும் அவரவர் உலகத்திற்குத் திரும்பி விட்டார்கள். அரசு ஆஸ்பத்திரியில் மாயாவை போஸ்ட்மார்ட்டம் செய்து பின் தருவார்கள். விபத்து எப்போது நடந்தது…

தெர்ல. நேத்து ராத்திரி ஒரு பதினோரு மணி போல இருக்கும்… என்று யாரோ பதில் சொன்னார்கள். ஆகா… தூக்கிவாரிப் போட்டது. விபத்து நடந்த நேரம் அவனுக்குத் தெரியும். 11 20 இரவு. அந்த நேரம்தான் அவன் அவளை, மாயாவை இங்கே சந்தித்தான். ஏதோ அவள் சொல்ல வந்து மூச்சிறைக்க நின்றாளே? அந்த நேரம் அதுதான். விபத்து நேரம் அதுவாகத்தான் இருக்கும். மாயா… என்று கதற வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

அந்தக் கணம் உனக்கு என்னிடம் வந்து பேசத் துடிப்பு வந்ததே. எத்தனை பெரிய விஷயம் இது. அவனுக்கு உடம்பு நடுங்கியது. அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. விட்டுவிட்டு தூறல் போல அலுவலகத்தில் மாயா பற்றிப் பேச்சு வந்தது. மேனேஜர் அவளது இடத்துக்கு அடுத்து ஒரு கம்ப்யூட்டர் தெரிந்த பெண்ணைப் போடுவது என்று பேச ஆரம்பித்திருந்தார். ஒரு கம்ப்யூட்டரும் ஆர்டர் செய்துவிட்டார். அவன்தான் மாயா, மாயா என்று இதயம் துடிக்கத் துடிக்க வளைய வந்து கொண்டிருந்தான். அழுது விடுவான் போலிருந்தது.

அன்றைக்கு மாலை அலுவலக வேலைநேரம் முடிந்து மீண்டும் பாசியாய் மெளனம் வந்து கவிந்தது. நேற்றைய இரவை அவனால் எப்படி மறக்க முடியும்? அட வந்தது நீ என்று தெரியாமல்… உள்னைத் தவிக்க விட்டுவிட்டேன். தவற விட்டுவிட்டேன்… என மனம் உருகியது. அன்று இரவு வெளியே சிறிது தூரம் நடந்து போனான் தெருவில். அவளோடு தனது பிறந்தநாளுக்கு என்று அவளை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்தப் போனது நினைவுக்கு வந்தது. அழுகை வந்தது திரும்பவும்.

அறைக்கு வருகிறான். உள்ளே விளக்கு எரிகிறாற் போலிருந்தது. இல்லையே, அணைத்து விட்டுத்தானே வெளியே போனோம், என்று குழப்பமாய் இருந்தது. போய்க் கதவில் சாவியைப் பொருத்தி, க்ளிக். உள்ளே விளக்கு அணைந்து போனது. என்ன இது என்று இருந்தது. தானாக விளக்கு ஏற்றிக் கொள்ளுமா? பின் தானாக அணையுமா? உள்ளே வந்து சுவரில் இருந்த சுவிட்ச் போர்டைத் தொட்டான். சுவிட்ச் அணைந்த நிலையில்தான் இருந்தது. சுவிட்சைத் தட்டினான். குழல் விளக்கு ஒரு நிமிஷம் அவன் பயத்தைக் கேலி செய்தாற் போல கண்ணடித்து பளீரென வெயிலை இறக்கியது.
யாரும் இல்லை. மனுசாள் இல்லாத அந்த மௌனம் பயமுறுத்தியது. விளக்கு எப்படி எரிந்தது, பிறகு உடனே அவன் வரும்போது அணைந்து விட்டது. அவனுக்குப் புரியவில்லை. உள்ளே வந்து தண்ணீர் பிடித்துக் குடித்தான். நீளக் கிடக்கும் வராந்தா. தண்ணீர் குளிரவைக்கும் யந்திரம் பக்கமாகத்தான் இடது பக்கம் திரும்பிப் போனால் மாயாவின் அறை. பூட்…. பார்த்தான். பூட்டித்தான் இருந்தது. தண்ணீர் குடிக்க என்று தம்ளரை வாய்க்கு மேலே உயர்த்தும் போது திரும்ப அந்த உணர்வு ஏற்பட்டது. நான் தனியே இல்லை. பயப்படாதே என்று முதலில் சொல்லிக் கொண்டான். மாயா உன்னை விரும்புகிறாள். மாயா உன்னைக் காதலிக்கிறாள். உண்மைதானே அது? காற்று வீசியதில் அலுவலக வாசல் கதவு திடீரென்று திறந்து கொண்டது. திரும்பிப் பார்த்தான். தாள் போடவில்லையா அவன்? போய்த் தாள் போட்டுவிட்டு வந்தான்.

பிறகு எதுவும் நடக்கவில்லை. அரைமணி நேரம்வரை விழித்திருந்தான். தினமலர் வாசித்தான். அதிர்ச்சி என்று பெரிய எழுத்தில் பெரிய ஆச்சர்யக் குறியுடன் ஒற்றை வார்த்தையில் செய்திகள் வெளியிடுகிறார்கள். அந்த வார்த்தை மாத்திரம் தனி வண்ணத்தில். வாசிக்க கொட்டாவி வந்தது. வேறு சப்தங்கள்? காத்திருந்தான். நீள வராந்தாவில் மேசைகளுக்கு நடுவே தேர்வு நேரத்தில் பள்ளி ஆசிரியர்போல நடந்தான். கடிகாரத்தின் துல்லிய டிக் டிக் கேட்டது. வாத்தியார் மார்க் போடுகிறாரா என்ன? டிக் டிக். கால் வலிக்கிற அளவில் நடை. பிறகு துணி துவைத்து பேனின் கீழ் காயப் போட்டுவிட்டு உறங்கிப் போனான்.

இரவின் ஒலிகள் மாத்திரம். அவையும் கரைந்து போயின. மின்விசிறியின் தடதடப்பு. சட்டென விழிப்பு வந்தது. ஏன் தெரியவில்லை. மணி என்ன? பதினோரு மணி இருக்குமா, என்று தோன்றியது. அவனுக்கு மாயா ஞாபகம் வந்தது. நேற்று ஏறத்தாழ இதேநேரம்… என நினைத்தான். அதனால்தான் விழிப்பு வந்ததா? மெல்ல எழுந்து கழிவறைக்கு ஒன்னுக்கடிக்கப் போனான். கதவை உள்ளே தாளிட்டுக் கொள்ளவில்லை. பேசினில் ஒன்னுக்கு விழும் சத்தம் நாராசமாய்க் கேட்டது. வெளியே வந்தபோது அந்தக் காற்றே வேறு மாதிரி இருந்தது. என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. அந்த இரவுக்கே வேறு சாயல் வந்திருந்தாற் போலிருந்தது. மணி என்ன என்று விளக்கைப் போட்டுக்கொண்டு போய்ப் பார்த்தான். 11 18. அந்த நேரத்துக்கு விழிப்பு வரவேண்டிய அவசியம் என்ன? கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டான். சிறுகாற்று உள்ளே வந்து நடமாடினாற் போல அறையெங்கும் சலனங்கள் தெரிந்தன.

என்னவோ உருமாற்றம் அடைகிறாற் போல இருந்தது. க்ளுக் என்று யாரோ சிரிப்பது போலக் கேட்டது. தூரத்து இருள் பொதிவில் ஒரு நிழல் போல என்னவோ நடமாட்டம். அது நடமாட்டமா பிரமையா? இது கனவா? நான் விழித்திருகிறேனா?

இந்த இருளில் நான் எதை எதிர்பார்த்து விழித்திருக்கிறேன். திடீரென்று ஒரு வேடிக்கை போல “மாயா?” என்று சத்தமாய்ப் பேசினான். “கூட இருக்கியா மாயா?” பதில் இல்லை. அவனுக்கே தன் செயல் கிறுக்குத்தனமாகவும் வேண்டியும் இருந்தது. அவளைப் பேர் சொல்லி அழைக்க அவனுக்குப் பிரியமாய் இருத்து.

ஆ… இப்போது சத்தம் கேட்டது. என்ன சத்தம். ஏதோ சரசரப்பு. மற்ற நாட்களில் நான் நன்கு உறங்கி விடுகிறேன். இப்படிச் சரசரப்புகள் என் காதுக்கு எட்டுவது இல்லை என நினைத்தான். ஒரு பல்லி உச்சியில் இருந்து பொத்தென விழுந்து ஓடலாம். ஏதாவது மேசைக் காகிதம் சிறகு வந்தாற் போல பறந்து இறங்கலாம். இரவில் மாத்திரம் கேட்கிற தனிச்சத்தங்கள். கிசுகிசுப்பான ரகசியச் சத்தங்கள். இதுகுறித்து பயம் தேவை இல்லை.

இப்போது… இது வேறு சத்தம். என்ன சத்தம்? உற்றுக் கேட்டான். “மாயா?” என்று சத்தமாய்ப் பேசினான். “நிசந்தானா? இருக்கியா மாயா?” சிறிது நேர மௌனத்துக்குப் பின் திரும்ப அந்தச் சத்தம். சத்தம் எந்த மூலையில் இருந்து வருகிறது தெரியவில்லை. குழாயில் இருந்த தண்ணீரின் ஒரு சொட்டு. என்ன தோன்றியதோ மாயாவின் அறைப்பக்கம் போய் ஜன்னலை ஒரு விரலால் திறந்தபோது க்ளுக் என யாரோ சிரித்த சத்தம் அவன் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது. “ம்ம்மா…யா…” என்றான் குழறலுடன். அவளது இருக்கையைப் பார்த்தான். இருளில் எல்லை கலைந்து கிடந்தது அந்த ஸ்டூலும் அவளது தட்டச்சுப் பொறியும்.

ஆகா… தட்டச்சுப் பொறி அவள் கடைசியாக அலுவலகம் முடிந்து கிளம்பிப் போனபோது உறையிட்டு மூடியது அல்லவா? உறையைக் கழற்றியது யார் தெரியவில்லை. அதில் ஒரு காகிதத்தைச் செருகியது யார்? என்னவோ தனக்கு மாத்திரம் தெரிகிற அளவில் நடக்கிறது. மாயாதான் அங்கும் இங்கும் நடக்கிறாளா? உள்ளே இருக்கிறாளா? இங்கே அலுவலகத்தில் அவள் இருக்கிறாளா? எப்படி உள்ளே வந்தாள்?

ஒரு சோதனை போல இங்கிருந்து ஜன்னல் வழியே பார்த்தபடியே “மாயா?” என்று கூப்பிட்டான் சத்தமாய். தட்டச்சுப் பொறியில் எழுத்துகள் தானே இயங்குகிறதா? அந்த இருட்டில் தெரியவில்லை. தானே எப்படி இயங்கும்? “வந்திருக்கிறாயா மாயா?” என்றான் திரும்பவும். க்ளுக், என ஒரு சிரிப்பு. தட்டச்சுப் பொறி திரும்ப இடது வலதாக நகர்கிறது. ஒரு தண்ணீர்ச் சொட்டு.

அவனிடம் அந்த உள்ளறையின் சாவி இருந்தது. விறுவிறுவென்று போனான். அந்தக் கதவைத் திறந்து அறைக்குள் போனான். விளக்கைப் போட்டதும் மொத்த அறையும் துலக்கமாய்த் தெரிந்தது. ஒளி பொருட்களின் வண்ணங்களை மீட்டெடுத்து விடுகிறது… ஆமாம். அவன் நினைத்தது சரி. தட்டச்சுப் பொறி காகிதம் செருகப்பட்டு தானாக இயங்கியிருக்கிறது. அதன் அருகில் போய்ப் பார்த்தான். எஸ், எஸ் என ஒரே எழுத்து அதில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

மாயா? – எஸ். வந்திருக்கிறாயா? – எஸ்… அவள்தான் பதில் தருகிறாளா? அப்படியானால் அவள் உள்ளே வந்திருப்பது உண்மையா? அவனுக்குப் பரவசமாய் இருந்தது. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன் மாயா… என்றான் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. ஐ என்ற ஒற்றை எழுத்து. பிறகு ஏன் எண் இரண்டு அடிக்கப்பட வேண்டும். ஓகோ. ஐ ட்டூ என்கிறாள் மாயா.

நன்றி மாயா என்றான். நடந்ததையெல்லாம் அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் முடியவில்லை. அவன் எதுவும் பேசாமலேயே இப்போது தட்டச்சு இயந்திரம் நகர்கிறது. ஐ லவ் யூ. அவனுக்குக் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. ஒரே நாளில் அவன் உலகம் எவ்வளவு மாறி விட்டது. அவன் கண்ணில் மாயா படவேயில்லை. அவளாக விரும்பினால் தன் இருப்பைத் தெரிவிக்கிறாள் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யந்திரம் தானாக நகர்ந்து ‘குட் நைட்’ என்றது. அதில் எழுத்துப் பிழையைப் பார்த்ததும் இது என்னுடைய மாயாதான்… என்று சிரித்தபடி அந்தக் காகிதத்தை உருவினான். பிறகு யந்திரத்தின் அச்சடிக்கும் சிலிண்டரை நடுவாகத் தள்ளி உறையில் இட்டு மூடினான். விளக்கை அணைத்தான். அறைக்கு வெளியே வந்து அறையைப் பூட்டினான். அந்தக் காகிதத்தை உணவறைக்கு வந்து பெஞ்சில் படுத்தபடியே பார்த்தான். அத்தனையும் உண்மை. எஸ் எஸ்… என்று எத்தனை எஸ். அந்தக் காகிதத்துக்கு ஒரு முத்தம் தந்தபோது க்ளுக் என அவள் சிரிப்பதாகக் கற்பனை செய்து கொண்டான். சிரிப்பு வந்தது. எப்போது உறங்கினான் தெரியாது.

*

காலை விடிந்தபோது எல்லாமே புதுசாய் இருந்தது. அவனோடு மாயா இருக்கிறாள். கூடவே இருக்கிறாள். அந்த நினைவே உற்சாகம் தந்தது. பயமா? முதலில் பயமாய் இருந்தது. இப்போது எல்லாம் பழகியிருந்தது. பயம் இருந்தால் நேற்று இரவே அவன் தூங்கியிருக்க முடியாது. அவனுக்கு மாயாவைத் தெரியும். அவள் அருகாமை புரியும். தான் அருகில் இருப்பதை அவனுக்கு மாத்திரம் அவள் அடையாளம் காட்டுகிறாள் என்று புரிந்தது. இரவு ஆகிவிட்டால் மணி பதினொண்ணே கால் தாண்டி விட்டால் அவன் அவளுக்குக் காத்திருப்பான். அவளோடு என்னவாச்சும் பேசுவான். வாழ்தல் இரவுகளில் அழகாகி விடுகிறது.

இதுபற்றி யாரிடமும் அவன் பேசவில்லை. கேள்விப்பட்டால் சிரிப்பார்கள். நம்ப மாட்டார்கள். கேலி செய்வார்கள். எதுவும் வேணாம் அவனுக்கு. அவனும் மாயாவுமான ஓர் உலகம். அது அவர்களுக்குக் கட்டாயம் புரியப் போவது இல்லை. அவனும் புரிய வைக்க முயலப்போவது இல்லை. இரண்டாவது நாளில் அந்த அலுவலகத்தில் ஒரு ஃபைல் தேடினார்கள். முக்கியமான ஃபைல் போல இருந்தது. கடைசியாக அதை மேனேஜர் மாயாவிடம் தான் தந்ததாகத் தெரிந்தது. ஃபைல் காணவில்லை. என்ன செய்ய என எல்லாரும் திகைத்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். மேனேஜர் அறையில் உள்ள லாக்கரில் இருக்குமா ஃபைல்? இல்லை. அவசரம். அந்த ஃபைல் உடனடித் தேவை. ஃபைல் எங்கே?

வேறு உதவியாள், ஓர் ஆண் வேலைக்கு வந்திருந்தான். கம்ப்யூட்டரில் அவன் கடிதங்களைத் தட்டச்சு செய்கிறான். திறமையான வேலைக்காரன். தப்பு இல்லாமல் அவன் தட்டச்சு செய்கிறான். கம்ப்யூட்டரில் அச்சிடுமுன்னே ஒருமுறை வாசித்து சிறு எழுத்துப் பிழைகளை சரிசெய்தே அவன் மேனேஜரிடம் சமர்ப்பிக்கிறான். அலுவலகத்தில் அவனுக்கு நல்ல பெயர்.

அந்தத் தட்டச்சுப் பொறியை எடுத்து ஓரமாய் ஒரு மேசையில் போர்த்தி வைத்து விட்டார்கள். காசிக்கு அதைப் பார்க்க வருத்தமாய் இருந்தது. அவனே இரண்டொரு நாளில் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிப் போய்விடுவான். இந்நிலையில் அதைப்பற்றிக் கவலைப்பட முடியாது அவனால். இரவில் ஜன்னல் வழியே பார்த்தால் முக்காடிட்டு அந்தத் தட்டச்சுப் பொறி அவனிடம் மௌனமாய் முறையிடுவதாய்த் தோன்றியது.

அன்றைக்கு ராத்திரி மணி 11 20. தானாகவே அவனுக்கு விழிப்பு வந்தது. எழுந்து முகம் கழுவிக் கொண்டான். வாஷ் பேசின் நீர் குளிர்ச்சியாய் முகத்தைத் தழுவியது. வந்து கூடத்தில் அமர்ந்து கொண்டான். மாயா… என மனதில் நினைத்தான். காற்றில் திரைச்சீலைகள் அசைந்தாற் போன்ற சலனம் தெரிந்தது. நாளை… என்றான். பேச முடியவில்லை. அவனுக்குத் துக்கம் விக்கியது. நாளை நான்… என்றான். அழுகை வந்து விட்டது. மூலையில் தட்டச்சு யந்திரம்… சத்தம் கேட்டது. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாளைக்கு நான் இந்த அலுவலகத்தில் இருந்து… என்னை அனுப்பி விடுவார்கள். ஒரு காற்று வந்து அவன் தலையைக் கலைத்துப் போனாற் போல இருந்தது.

எழுந்து கதவைத் திறந்துகொண்டு தட்டச்சு அறைக்குப் போனான். உறை விலகி தட்டச்சு யந்திரத்தில் செருகிய காகிதம். நகர்வு தெரிந்தது. டோன்ட் க்ரை. சரி என்றான் மகிழ்ச்சியாக. திடீரென்று நினைவு வந்தவனாக, அந்த மகாலிங்கம் டிரேடர்ஸ் ஃபைல்… எங்கன்னு எல்லாரும் தேடிட்டிருக்கோம் இவளே… என்றான். யந்திரம் தடதடவென்று நகர்ந்தது. பீரோ எண் 4. நடுத்தட்டு. “சரி” என்றான் மகிழ்ச்சியாய். குட் நைட் என்றாள் மாயா.

காலையில் அவன் அந்த ஃபைலைத் தேடிக் கொடுத்ததற்கு பெரும் பாராட்டு கிடைத்தது. அன்று மதியம் அவனுக்கு சரவண பவனில் இருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாடு. கடைசிநாள் என்பதிலும், முதலாளிக்கு ஃபைல் கிடைத்த கரிசனத்திலும் வந்த உபசாரம் அது. மாலை நெருங்க நெருங்க அவனுக்கு துக்கமாய் இருந்தது. சம்பளம் என்று கையில் வரப் போவது இரண்டாயிரம் தான். இனி அடுத்த வேலை வரை இதை வைத்துக்கொண்டு ஓட்ட வேண்டும்.

மானேஜர் மாலையில் அவனை அழைத்து சம்பள பாக்கியைத் தந்தார். அவன் அப்படியே நின்றான். “என்ன?” என்று கேட்டார் புன்னகையுடன். “சம்பளத்துக்கு பதிலா…” என்றான் அவன். அவருக்குப் புரியவில்லை. “புதுசா கம்ப்யூட்டர் வந்திட்டது உங்க வேலைகளுக்கு ஐயா” என்றான். “இனி அந்தப் பழைய தட்டச்சு யந்திரம்… உங்களுக்குத் தேவைப்படாது இல்லீங்களா ஐயா…” என்றான். “அதுக்கு?” என்றார் அவர் முகக்குறிப்புடன். “மீதிச் சம்பளம் பணமா வேண்டாம் சார்” என்றான் காசி. “அந்த டைப்ரைட்டிங் மிஷினை நான் எடுத்துக்கறேன். உங்களுக்கு அது இங்க இடத்தை அடைக்கிற சாமான் தானே?”

அவருக்கு ஆச்சர்யம். காசிக்கு டைப் அடிக்கத் தெரியாது, என்று அவருக்குத் தெரியும். இந்தப் பணம் இப்போது இவனுக்கு அவசியம் என்பதும் தெரியும். இந்த நிலையில் இந்த மிஷின் அவனுக்கு எதற்கு, அவருக்குப் புரியவில்லை.

என்றாலும் புன்னகையுடன் “எடுத்துக்கோ. அவ்ளதானே?” என்றார் மேனேஜர்.

***

எஸ்.சங்கரநாராயணன்


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular