ம.கண்ணம்மாள்
உன்னிலிருந்து தப்பித்தலென்பது யாவருக்கும் நடவாதது. ஏன் தப்பிக்க வேண்டும்? அது தேவையில்லை. இப்பரவெளியில் எல்லோரும் ஏதோவொரு சூழலில் உற்சாகமான மனநிலையில் உன்னிலிருந்திருப்பார்கள். இல்லையென்று சொல்வதற்கு எதுவுமில்லை. உன்னத கேள்விகளால் நிறைந்த இவ்வாழ்வினை துயரமாக மாற்ற எவரொருவரும் முனைவதில்லை. ஆனால், விரும்பப்படும் துயரமாக, மனித உடல்களின் வாழ்க்கையில் அமைந்து, அமைந்துக் கொண்டு அமைவதாகவுள்ளது. பெருமளவு நேசித்தலில் ஒரு மனித உடலும், துயரமும் பிரிக்க முடியாததாகின்றது. நேசித்தலென்பது இதமனைத்தும் பூரணமாக நிரம்பிய நறுமணம். மனதார அனுபவிக்குமொரு சுகந்தத்தில் சிற்சில நிகழா கூறுகள், கண்டறியா நேரங்கள், உரையில்லா வாய்மூடித்தனம் போன்றவை நிகழ்ந்திருக்கும். அந்நிகழ்தலும் கூட விருப்பத்தின் நேசித்தலின் பொருட்டுதானென்பதை மனித உடல்கள் கண்டறிய வேண்டும். மிக முக்கியமாக விருப்பமென்பதே மதிப்பது தான். மதிக்கக் கூடிய எதுவுமே விருப்பத்தினால் ஆட்படுத்தப்படுகின்றது. விருப்பத்தில் ஒருவரைப் பற்றிய தெளிவு வேண்டும். மதிப்பதால் மட்டுமே அதனை உணர முடியும்.
இவ்வாறான மதிப்பைப் பகிர்தலில் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பில் விருப்பத்தினை எவ்வாறு அணுகுகின்றார்கள்? ஏன் அதை இவ்வளவு தூக்கிச் சுமக்கின்றார்கள்? அல்லது நிகழாத ஒன்றிற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் ஏன்? என கேட்கத் தூண்டுகின்றது வாசிப்பின் போது.
இரு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் முதற்பகுப்பிற்கு அந்தரங்க நிலா எனப் பெயரிட்டுள்ளதில் சற்று ஏதுவாக எதைக் கொள்ளலாம் எனக் காரணத்தை வலுவாகக் காணும்போது, இங்கு ‘அந்தரங்கம்’ எனப் பூடமாகிச் சொல்ல யாதுமில்லை. அந்தரங்கமென்பது அவரவர்க்குரியது. மற்றபடி அச்சொல்லால் யாதுமில்லை. ஒரு ஆண் உடல், ஒரு பெண் உடல் மட்டுமே பிரதானம். கற்பனை, சுவை, பிரியம், குதூகலம், ஆவல், கிளர்ச்சி எல்லாமே அதனோடு தான். அப்படி என்ன உண்டு இந்த வாழ்க்கையில்? என ஆராய முற்படும் போது அந்தரங்கம் மிகச் சாதாரண விஷயமாகின்றது. அதனாலயே, ஒரு ஆண் பெண்ணை அருவியில் நனைப்பதையும், ஒரு பெண் ஆணை அருவியில் ஒரு போதும் நனையார் என நினைப்பதும், நினைவில் இறுதியில், இரு உடல்களும் நனைந்துக் கொண்டிருந்ததும் காட்சியாக விரிகின்றது. இது, அவரவர்க்கான மனநிலையாக அந்தரங்கம் அனுபவமாகின்றது.
‘ஆனந்திருத்திருந்த அருவி நனைத்துக் கொண்டிருந்தது உடலை / நுண்ணியர் எங் காதலவர் அருவியில் ஒரு போதும் நனையார்’ என்பதில் உணரலாம்.
ஒரு விருப்பத்தில் மாறுபட்ட தன்மையிருப்பின் அங்கு நல்ல சம்பவங்களுக்கு வழியில்லை.
இங்கு ஒரு நல்ல சம்பவம்.
‘வலி கொண்டு வெறி கொள்ளுமென் காதலன் / என்னுள் தான் இருக்கிறாள் / காய்ச்சிய பறையை அதிர அடித்துப்பாடுகிறேன் / செவிடாக நடிக்கும் தேசம் என்று அறிந்தும்’
ஊரார், உற்றார், மற்றோர் தூற்றிய போதும், அதிகாரத்திற்கு மேலாகப் பறந்து நின்ற ஒரு பெண் உடலின் விருப்பம் முன்னிலையாகின்றது. அதிகாரமானது மொழியின் வழியாக ஆளுமையாகி அதிர அடித்துப் பாடுகின்றது. இச்சம்பவத்தில் விருப்பமானது, இருவரின் உள்ளக்கிடக்கில் துரிதப்படுத்தப்படும் நோக்கமாகின்றது. அந்நோக்கமே, விதை கொண்டு பூத்து செடியாகி வளர்ந்த வலியாகின்றது. கெட்டித்துப் போன வலியை நீராகப் பெருகிய காமப்பிணியில் நீச்சலடித்து சோர்வுற்று கடலாகத் தத்தளிக்கும் ஒரு ஆண் உடல் காட்டும் சம்பவத்தில் இயற்கையான வாழ்க்கை முறை தான் தென்படுகின்றது. விருப்பத்தின் மீதாக திணிக்கப்படும் அளவுக்கதிகமான புனைவுகள் இதிலில்லை. மிக எளிதானதொன்று உணர்த்தப்படுகின்றது.
அவ்வடிகள்,
‘நீச்சல் பழக்கும் முயற்சியில் சோர்வு கொண்டான் / இறைக்க ஊறும் நீராகிப் பெருக்கெடுத்தது காமம் / கடலாகத் தத்தளித்த படி துடுப்பற்றுப் போனது தோணி’ எனவுள்ளது.
விருப்பத்தில் பிரிவு என்பது சாதாரணமானது. பெரிய கூச்சல்கள், இடர்ப்பாடுகள், ஓலங்கள் தேவையற்றவை. சில காலம் பிரிவென்பதே நல்ல புரிதலுக்கான மன ஊக்கி. சிதறுண்ட மனத்தை ஒருங்குப்படுத்தும் செயல் பிரிவுக்குண்டு. பிரிவு காலத்தின் மறதி எனக் கொள்ளலாம். ஏகப்பட்ட உண்மைகள், பொய்கள், நடந்தவை, நடக்கயிருப்பவை அனைத்தும் பிரிவில் காணாமல் போகும். ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பில் ‘பிரிவு’ என்பதை,
‘குறும்பிரிவு தான் பெண்ணே / கற்றாரோடு கூடிக்களித்து / நோய்மைத் தோல் அகற்றி / புதுப்பொலிவுடன் வந்திடுவேன்’
தன்னிச்சையான செயலிலுள்ள ஒரு ஆண் உடலின் வெளிப்பாடு மேலுள்ள அடிகள். அதையும் தாண்டிப் பார்த்தோமானால், ‘பிரிவு என்பது இயல்பானது’ அவ்வளவு தான்.
மிதமிஞ்சிய விருப்பத்தின் உச்சக்கட்டம் கொண்டாட்டம் என்பதை விட, பறவையாகி ஆண் உடல் மிதத்தலைவதை அழகாகக் காட்சிப்படுத்துதல் பெருங்குதூகலமெனலாம். அங்குக் கொண்டாட்டமென்பது போதவில்லை. அதை விட வானில் பறந்து பறந்து அலைய வேண்டும். இங்குச் சொற்கள் மிக அழகாகத் தன்னைத் தருவித்துக் கொள்கின்றது. அவ்வடிகளை வாசிக்கும் நம்மிலும் அம்மனோபாவம் விரிகின்றது.
‘மகிழ்வை விரிக்க மழையாகி / தடுப்பில்லாது கொண்டாட / மீனாகி நீந்தித் திரிந்தான் / கொண்டாட்டம் போதாமையோடிருக்க / பறவையாகி மிதந்தலைகிறான்/’
இதில் என்ன விதமான மலர்ச்சியை ஆண் உடல் உணர்ந்திருக்கின்றதென் படிமம் தான் காட்டப்பட்டுள்ளது.
இதேபோல பெண் உடலும் உணர்ந்த ஒரு காட்சியில், தன்னிலிருந்து தான் என்ற பிம்பம் விலகி, முற்றிலும் முற்றாக ஒரு மதிப்பைக் கோருகின்ற, அம்மதிப்பை அனுபவமாகக் காண்கின்ற ஒப்புதல் விளக்கம் கவிதையாக மாறுகின்றது.
‘பசலை பூக்கும் எனதுடல் / வெப்பத்தினால் வதங்கும் / அந்திப் பூவிதழ்களாக அடைந்திடும் மாற்றம் / அதற்குள் கொடியோனென /
‘சுடுசொல் விழுங்கு முன் / ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே / மரம் விலக்கும் இலையல்ல / மறைந்து தாங்கும் வேர்களவன்’ என மதித்தவர்களின் கோணம் காட்டப்படுகின்றது.
இம்மாதிரியான மதித்தலில் விருப்பமானது மலர்ந்து மகிழ்ச்சியுறும்.
எவ்வாறெனில்,
‘என்னுள்ளே இருப்பவளை / எதன் பொருட்டு வெளியில் தேடுகிறேன் / உள்ளிருப்பதை உணர்த்திடேன் நெஞ்சே /உயிர் பற்றி மலர்ந்திடுவேன்’
என விருப்பத்தை உயிராக்குகின்றது. சுய பாதிப்பற்ற எதிர் பாலினத்தோரை மதிக்கும் ஒரு விஷயமே இதில் உயிராக மலர்கின்றது. தானாக, மதித்து மலர்தலில் அனைத்துமே வசப்படும். அனைத்துமே அர்த்தமான பொருளாகும். அனைத்துமே திரண்ட மனநிலையைத் தரும். அவ்வளவு தான்.
அடுத்தப்பகுப்பாக அறிமுமாவது ‘தாபப் பித்து’ என்ற தலைப்பிலான கவிதைகளில் அதீத உணர்ச்சிகள் பொதிந்துள்ளன.
பித்துண்ட இரு உடல்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?
‘அவளின் புதுமுகமாகிய கணத்தில் / உலகம் சிறிதினும் சிறிதான வெல்லக்கட்டிகளாக / எறும்பொன்று பைத்தியமானது நிலவொளியில் /.’
என்று நிகழ்ந்த அனுபவமே இங்கு பரவெளி சிறிதான வெல்லக்கட்டிகளாகக் காணப்பட்டுள்ளது.
இப்படியாக செல்லும் கவிதைத் தொகுப்பில், அதி தீவிர பித்துக் கொண்ட ஆண் உடல், வதங்கிய பயிராக மேனி கறுத்து ஆனதைக் கண்ட பெண் உடல் மனம் பிதற்றி குளமிரங்கி நீரானாள். நீர்த்துளிகள் பறவைகளாகி வானமடைய கரையத் தொடங்கியதில் புதுப்பிறவிக் கொண்டு மழையில் நனைந்த உடல் ஆடத் தொடங்கி மகிழ்ந்து நின்றாள்.
“துளிகள் பறவைகளாகி / மேகத்தை அடைந்து கொண்டிருக்க / நெருக்குதல் தாளாது / கரையத் தொடங்கியது வானம் / நனைந்தான் / புதுப்பிறவி கொண்டு மெல்ல ஆடத் தொடங்கினான் / மகிழ்வு வலுத்தது”
இதில் உடல் / மனம் என்ற இரண்டும் ஒருங்கே உயிரை வலுப்பெறச் செய்கின்றது. உடலுக்கு உயிர் தேவை. அதனை வேட்கைக் கொண்ட மனம் தருவிக்கின்றது. பலவித நெருக்கடிச் சூழலில், தான் உணர்ந்த பித்தினை மனம் உணர்ந்து உயிர் உணரும் அபூர்வம் புலப்படுகின்றது. இப்பாடுபொருள் மிக துலக்கமானது.
இதிலிருந்து இன்னும் ஈர்ப்பாக,
பெண் உடலை நிலமாகக் காணுதல் பெரும் பித்தாக கவிதையில் வெளிப்பட்டுள்ளது.
“பெய்யும் இடம் மறைத்து / இறங்கும் மழையை / இல்லாமலாக்குகிறது / நிலத்தின் காமம் / எனதுடலை நிலமாகத் விரித்து காத்திருக்கிறேன் / வருபவளுக்காக’
விருப்பம் என்ற ஒரு சொல் எளிமையான தொன்றாக பார்க்கப்படும், சலிக்காத பித்தாக மாறுகின்றது. அவ்வுணர்வு சொல்லிச்சொல்லி தீராததாக, சொல்லிச்சொல்லி பூரிப்புக் கொள்வதாக கவிதையடிகள் மாறுமிடங்கள் நற்சுவை தரக்கூடியதொன்று. நிகழ்ந்ததின் உபரியாக, நிகழப்போவதின் மொத்தமுமாக அதீதப்பித்து அடர்வாக்கி மொழியிலமைகின்றது.
இதுபோல நகரும் கவிதைகளில் அடுத்து,
சரணாகதி என்ற பித்து நிலை எங்குக் கொண்டு சேர்க்கும்? எதைக் கண்டடைய வைக்கும்? எனக் கேள்வி கேட்கக் கூடிய அடிகள் வருகின்றது. வாழ்க்கைச் சூழலில் உடலுக்கும், மனதுக்கும் இடைப்பட்டவொன்றாக வாழ்வினைத் தள்ள வேண்டியுள்ளது. ஒரு மதிப்பின் உச்சத்தில் காண்பது தான் சரணாகதி தோன்றும். வேறிரு உடல்கள் ஒத்திசைவது மட்டுமன்றி, மனமொத்து, புரிந்த, புரிதலற்ற தமக்குத் தானே சங்கடங்களைக் கண்டுணர்ந்து சரியாக்கி நிமிரும் சூழலில் தோன்றும் பரிபூரணம் ‘சரணாகதி’ என்ற தீவரம். இது,
‘அற்புதங்கள் / ஆசைக்கேற்ப நிகழாதெனும் / உண்மை சரணாகதியின் தித்திப்பில் /’
என்றவாறு சொல்லமுடிகின்றது.
இங்கு பரவளி என்பது பழமை அல்ல. நாட்தோறும் புதிதாகின்றது. காலம் தன்னைப் புதிதாகவே காட்டிக் கொள்கின்றது. பழமை, புதமை என மனமே எல்லாவற்றையும் அசைத்துப் பார்க்கின்றது. மனம் கண்டுணர்ந்தவை மட்டுமே இரகசியங்கள். அதனைத் தேடி காலத்தில் பயணம் செய்பவர்கள் சென்றுக் கொண்டேயுள்ளார்கள். பார்க்கப் போனால், இரகசியம் என்று ஒன்றுமே இல்லை. மனம் எதனை விரும்புகின்றதோ அதுவே இரகசியம். அதுவே வாழ்வு. அதுவே மதிப்பு.
விருப்பமென்பது ஒரு உடல் மற்றொரு உடலை மதிப்பது மட்டுமே. வேறு எள்ளளவும் யாதொன்றுமில்லை. அதனாலேயே, ‘எதையாவது சொல்லிக் கொண்டிரு’ எனக் கவிதையடிகளில் சொல்ல முடிந்தது.
நம்பத்தருந்ததோ / நம்பிக்கையற்றதோ / இருந்து விட்டுப் போகட்டுமே / எதையாவது சொல்லிக் கொண்டிரு / எனையது இலேசாக்குகிறது / தாங்கிடும் ஊஞ்சலாகிறது / தலைக்கோதும் விரல்களாகிறது / விடியலைக் காட்டும் தூக்கமாகவும் இருக்கிறது அன்பே /’
என்ற அடிகளில் திகைப்பன்றி எதார்த்தத்தைக் கைக்கொள்ளும் மனோநிலையை விருப்பமாக உணரமுடிகின்றது. மர்மமற்ற ஒரு வெளியைக் கண்ணகல பார்க்க வைப்பதில் கவிதையின் பங்கு அளப்பரியது.
அது தான் தேவையானதும் கூட.
***
ம. கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com


