விந்தியா எனும் இந்திய தேவி 1927-இல் பிறந்து 1947 முதல் 1960 வரை சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிறுகதைகள் தொகுக்கப்படவில்லை. 2025-இல் தொகுப்பாசிரியர் ரம்யா, விந்தியாவின் 26 சிறுகதைகளைத் தொகுத்து, நீலி பதிப்பக வெளியீடாக, அதாவது விந்தியாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எனில், கிட்டத்தட்ட ஆசிரியரின் நூறாவது வயதில் வெளியாகும் முதல் தொகுப்பு. தவிர, 1999-இல் மறைந்த விந்தியா 1960 முதல் 1999 வரையிலான நாற்பதாண்டு காலம் சிறுகதைகள் எதையும் எழுதவில்லை. இவ்விரண்டும் சேர்ந்த வினோதமான மனநிலை, மற்றும் கதைகள் எழுதப்பட்ட காலத்தை நினைவில் கொள்ளவேண்டும் என்ற கவனம் ஆகியவற்றுடன் மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது, ‘விந்தியா எனும் தீற்றல்.’
குடும்பம், பக்தி, பண்டிகைகள், போலவே தான் வாழும் நிலம், சமகால அரசியல் ஆகியவற்றைப் பற்றியும் விந்தியாவுக்குத் தெளிவான பார்வை இருந்திருக்கிறது. இந்துப் பண்டிகைகள், வழக்கங்கள் ஆகியவற்றைச் சொல்லும் அதே நேர்த்தியுடன் கிறித்தவக் கொண்டாட்டங்கள், நம்பிக்கைகளைப் பற்றியும் அவரால் சொல்ல முடிகிறது.
“காயம்பட்டுக்கொண்டு அழும் குழந்தைக்கு அதனாலேயே வசவும்கூட கிடைத்தாற்போலாச்சு லக்ஷ்மியின் வேதனை” – ‘கிறிஸ்துமஸ் நாள்’ சிறுகதையின் ஒரு வரி இது. விருந்தோம்பலின் சங்கடம், பிறகு அது ஒரு பார்வையிலேயே சரியாகிவிடும் அதிசயம் என்று நகரும் இந்தக் கதை, 1949-இல் சுதேசமித்திரனில் வெளிவந்திருக்கிறது. பள்ளியில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம் சொல்லி, அது பெரியவர்களை வந்தடைகிறது. அதாவது, 1948 ஜனவரியில் மறைந்த காந்தியடிகளின் மறு உருவாகத்தான் 1948 நவம்பரில் இங்கிலாந்தில் ராஜகுமாரன் (சார்லஸ்) பிறந்திருக்கிறார் என்ற சலசலப்பும், அதையொட்டி என்னவெல்லாம் நடக்கலாம் என்ற கூடுதல் கற்பனைகளும். இன்றைய நம் சூழலிலிருந்தபடி இதை வாசிக்கையில், புன்னகைக்காமல் எப்படிக் கடப்பது?! இந்த அரட்டையை ஒட்டி, மறுபிறப்பு என்பதைப் பற்றிய இந்து நம்பிக்கையையும், கிறித்தவ நம்பிக்கையையும் கதையில் சொல்லியிருப்பதும், அதைக் கடைசிப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதும் விந்தியாவின் திறமைக்கும், தெளிவுக்குமான சான்றுகள்.
காந்தியடிகளின் படுகொலை, அதையொட்டி நிலவும் அசாதாரணச் சூழல் ஆகியவை இரண்டு கதைகளில் இடம்பெறுகின்றன. ‘என் நினைவுக்குறிப்புகள்’ என்ற கதையில் ‘சங்கப்பித்து’ என்றே எழுதியிருக்கிறார். நிறங்களில் அரசியல் அல்லது அரசியலில் நிறங்கள் பற்றியும் இதே கதையில் ஒரு குறிப்பு உண்டு:
//அத்தையகத்தில் இருந்தபோது சினிமாவுக்குப் புறப்பட்டபோது, பச்சை நிறப்புடவை உடுத்திக்கொண்டு நான் கிளம்பியபோது, “இந்தக் கலர்தானா அகப்பட்டது,” என்று அத்தான் சொன்னான் என்று உடனே அவனைத் திருப்தி செய்ய, உடை மாற்றிக்கொண்டு அரக்கு நிறப் புடவையில் காட்சியளித்தேன்! “பேஷ்,” என்றான் அத்தான்! //
இவ்வளவு சுருக்கமாக எழுதி, எவ்வளவைக் கடத்திவிட முடிகிறது இவரால்!
இன்றைக்கும் பொருந்தக் கூடிய பல கதைக்களங்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. மார்பில் வலி இருப்பதால் மருத்துவரைச் சந்திக்கவேண்டிய இளம்பெண், ஆண் மருத்துவர் என்பதால் கொள்ளும் தயக்கம் என்பதில் தொடங்கும் கதையில், ஒரு சிறு திருப்பத்துக்குப் பின் கணவன் மனம் கொள்ளும் அலைபாய்தல்; தான் ‘கிராப்பு’ வெட்டிக்கொள்ளும் விதம் மனைவிக்குப் பிடிக்காது என்று தெரிந்து, வேண்டுமென்றே அவளுடன் வெளியில் செல்வதற்கு முதல் நாள், “பச்சையாகத் தலையைக் குலைத்துக்கொண்டு” வரும் கணவன்; அந்தக் கணவனை வெறுப்பேற்றுவதற்காகவே இன்னொருவனுடைய ‘கிராப்பு’ பற்றி “பின்னாடி அழகாய் இருக்கும்” என்று சொல்லும் மனைவி; “நறுவிசு” வேண்டும் என்று அனத்தும் மனைவியை மடைமாற்றிவிட்டு, பிறகு அதை நினைத்து ஏங்கும் கணவன்; பாட்டு நன்றாக இருக்கிறதே என்று ரசிக்கும்போதே செய்திகளுக்கு நேரமாகிவிட்டது என்று கத்தரி போட்டவிடுவார்களே என்று வானொலி நிலையத்தை நொந்துகொள்ளும் தோழிகள்; ஒரு கச்சேரிக்குப் புறப்படும் முன் அதைப் பற்றியே நினைத்துப் புலம்பிவிட்டு, அங்கே போனபிறகு, கணவன் வரவேண்டுமே என்றும் இனிமேல் வரவேண்டாமே என்றும் மாற்றி மாற்றி அலைபாயும் ஒருத்தி என்று நிறைய இடங்கள் உண்டு.
‘புகைப்படம்’ என்ற கதையில் இருவர் இருக்கும் படத்திலிருந்து ஒருவர் படத்தை மட்டும் பெரிதாக்குவது, குழு படத்திலிருந்து இருவரை மட்டும் பிரித்து ஜோடியாக்குவது, ஒரு பெண் மறுத்தும் அவளை விடாமல் பின்தொடர்வது என்று இன்றைய ஃபோட்டோஷாப், ஏ.ஐ., ஸ்டாக்கிங் ஆகியவற்றுக்கு சவால் விடும் காட்சிகள் இருக்கின்றன. ‘கற்பனை உள்ளம்’ ஒரு பெண் எழுத்தாளரின் கதை. முதல் கதை பிரசுரமானதும் வரும் வாழ்த்துக் கடிதங்களுக்கும், அவற்றில் கேட்கப்படும் ஐயங்களுக்கும் பதில் எழுதியே சலித்துப்போகிறாள் ‘எழுத்தாளி’! அடுத்தடுத்த கதைகள் பிரசுரமாவது பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். பிறகு ஒரு கதைக்குப் பரிசு கிடைக்கிறது. தன்னனுபவம் சேர்த்து எழுதிய கதைக்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது என்ற புரிதல் வருகிறது. ஆனால், “இப்போ மன்னி முந்தி மன்னியில்லைதான்,” என்று வம்பும் வருகிறது. வாட்ஸாப் குழுக்கள், ஃபேஸ்புக் பின்னூட்டங்கள் எல்லாம் அங்கே தொடங்கியவைதானே என்று நமக்கும் தோன்றுகிறது.
விந்தியாவின் கதைகளில் யாரும் அறிவுரை சொல்லாமல், தண்டனை அளிக்காமல், படிப்பினை என்று எதையும் திணிக்காமல் மனித மனம் தானாகவே அலசி, தானகவே தெளிந்துகொள்ளும் இடங்கள் வாசிக்கையில் பெரும் நிறைவைக் கொடுக்கின்றன, நிம்மதி என்று கூடச் சொல்லலாம். ‘உள்ளுணர்வு’ கதையில் வரும் கணவனும், ‘உருகாத வெண்ணெய்’ கதையில் வரும் மனைவியும், ‘புகைப்படம்’ கதையில் வரும் நாராயணனும் தனக்குள் தானே பேசி அடையும் மனமாற்றங்கள், கச்சிதமான அளவில், நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.
இந்தக் கதைகளில் குழந்தைகள் மேல் பெரும் பரிவு வெளிப்படுகிறது. மூத்த தாரத்தின் மகனைத் தன்னுடன் அணைத்தபடி நிலவொளியில் உறங்கும் கர்ப்பிணி இளையதாரத்தின் சித்திரத்தை அவரால் தீட்ட முடிகிறது. இரண்டாம் திருமணம் செய்துகொண்டபின், அவளும் கருத்தரித்த பின் குறுகிவிடும் கணவனின் மனம், அதனால் மேலும் பலவீனமடையும் மனைவியின் உடல், இறுதியில் கவிதைத் தன்மை நிரம்பிய ஒரு காட்சி, ஆனாலும் பெரிதாக மாறிவிடாத, அல்லது ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனம் என்று ‘மறுவின் உரை’ விந்தியாவின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று.
பார்வையற்ற கேசவன், பார்வையற்ற குருவிடம் ‘பிடில்’ கற்றுக்கொள்வதில் தொடங்கி, விரியும் ‘விழியின் வெம்மை’ என்னளவில் இந்தத் தொகுப்பின் கிரீடம். விந்தியாவுக்கு ‘பிடில்’ மேல் தனித்ததோர் அன்பு இருந்தது போலும். பல கதைகளில் பிடிலுக்குத் தனி இடம் இருக்கிறது. கேசவனுக்கு அவனுடைய குரு எப்படி வாசிக்கக் கற்றுத் தருவார் என்ற நுணுக்கமான விவரிப்பு, அவனுக்கு சிறுதீனி பிடிக்கும் என்பதால் எந்த ஊருக்குப் போனாலும் ‘மதறாஸ் ஹோட்டல்’ போகவேண்டும் என்று அவன் அடம் பிடிப்பது, அப்படியான தருணங்களில் அவன் அப்பாவுக்கு ஏற்படும் சின்ன சலிப்பு, மைந்தனுக்குக் “கண்ணுங் கோலுமாக” விளங்கி அவன் பார்க்க முடியாத நகைகளை அவனுக்கு அணிவித்துப் பார்க்கும் அதே அப்பா… அபாரமான கதை. விந்தியாவின் படைப்பு மனம் எத்தகையது என்பதைச் சொல்ல, இந்தக் கதையிலிருந்து இரண்டு வரிகள்:
“கேசவனுக்குப் பூணூல் போட்டார்கள். சந்தனக் கட்டையாலான ஊதுவத்தித் தாங்கி ஒன்று நண்பன் ஒருவன் மூலம் வரவழைத்துப் பரிசு அளித்தோம். நாசியினால் உணரக்கூடிய பொருள் அல்லவா?“
கூர்மையான நடை, உணர்வுகளை இயல்பாகக் கடத்தும் தன்மை, துருத்தித் தெரியாத சொற்கள், எடுத்துக்கொண்ட கதைக்கருவைப் பற்றிய தெளிவான பார்வை என்று விந்தியாவின் கதைகள் வாசிக்க இலகுவாக இருக்கின்றன. சில கதைகளை வாசிக்கும்போது, இவர் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது; சில கதைகளை வாசிக்கும்போது இவர் இன்று இதை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், விந்தியாவின் கதைகளை, அவற்றின் முடிவுகளை ஒட்டி இயல்பாக யோசித்தால், அவ்வளவுதான் அமைந்தது, அமைந்தவரைக்கும் அற்புதம் என்ற நிறைவே எழுகிறது. ‘விந்தியா எனும் தீற்றல்’ என்ற இந்தத் தொகுப்புக்காகவும், இந்தத் தலைப்புக்காகவும் எழுத்தாளர் ரம்யாவுக்கு அன்பும், நன்றியும். விந்தியாவின் கதைகள் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை, எங்கிருந்து இங்கு வந்திருக்கிறோம் என்பதற்காக மட்டுமல்ல, எங்கெல்லாம் இன்னமும் அப்படியே இருக்கிறோம் என்பதற்காகவும்தான்.
***
தென்றல் சிவக்குமார் – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்‘ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல்: thendralsivakumar@gmail.com


