1. இதம் என்றால் என்ன?
புற்கள் ஒளியில் சலசலக்கின்றன
நாரைகளும் கொக்குகளும்
பசும்செறிவினின்று சிதறிப்பறக்கின்றன
நான்
இம்மாலைப்பொழுதின்
பச்சைப் பசேலென்ற
அமைதிக்கு நடுவே
கொஞ்சநேரம் கழித்து என
பத்திரப்படுத்திவைத்திருந்த
இனிப்பு மிட்டாய்களிடையே
திடுமென உன்னை
என் சட்டைப்பையில் தேடிப் பார்க்கின்றேன்.
*
2. வர்க்கலா கடற்கரை, 20/04/2025
என் விரல்களுக்கிடையிலிருந்து
மறைந்துகொண்டிருக்கின்றன
அந்தியின் விரல்கள்
இன்னும் சற்று நேரம்தான்
இன்னும் சற்று…
இன்னும்…
கதகதப்பு மறைந்துவிடும்
ஏக்கச்சொரூபமான என் கையும் மறைந்துவிடும்
நானுமே கூட மறைந்துவிடுவேன்
நிலவொளிக்கு இடைஞ்சலாக இருப்பதற்கு
எனக்கு என்ன உரிமையுள்ளது?
*

3. லைக்கா
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் மொட்டவிழும் சப்தம் கூட செவியை எட்டும் ராத்திரிப்பொழுது அது. தூரத்தே அகலும் கப்பல்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன், சொல் ஆல கண்டனாக. எப்படியென்று அறியேன், புறப்படும் ஒவ்வொரு கப்பல்களிலும் நானும் இருக்கிறேன். கடலின் ஈரவிழிகளை நேருக்குநேர் பார்த்து நிற்பவனின் கதாபாத்திரத்தில். உன்னிடம் சொல்லவேண்டிய யாவற்றையும், இருண்ட தொடுவானத்தின் தட்டச்சுப்பலகையில் என் பார்வையால் தட்டிக்கொண்டிருப்பவனின் கதாபாத்திரமாகவும். தொலைவினின்று எனக்கு நானே கையசைக்கும் விசித்திரம் போலவும்.
சாளரத்துக்கு அப்பால் அது என்ன? ஒன்று, இரண்டு இல்லை நான்கு நேரங்கெட்ட கடற்பறவைகள். புகைப்படம் எடுக்க முயல்கையில் விருட்டெனப் பறக்கின்றன சமுத்திரத்தை நோக்கி. நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ஒருவழியாக பக்கத்து அறையின் தொலைகாட்சி சப்தம் என்னிடம் வருகிறது. ராக்கெட், நிலவு, விஞ்ஞானிகள், பெருமிதக்கூச்சல்கள் இத்யாதி இத்யாதிகள்… அப்புறம் அலைகளின் ஒயாத குரைப்பொலிகள் மாத்திரமே.
நானோ மெதுமெதுவாக உடுக்கூட்டங்களில் ஆழ்ந்தேன். அதோ அங்குதான் எங்கோ இன்னும் லைக்காவின் எலும்புக்கூடுகள் மிதந்துகொண்டிருக்கின்றன, அறியமுடியாமையின் சமுத்திரத்தில் ஒரு எலும்புப்படகு என. அதோ அங்குதான் லைக்கா தூசித்துகள்களாக, நட்சத்திரத்துகள்களின் மீது மோதி எதிரொலித்து, பூமியின் வஸ்துகள் எதுவும் அறியாத வெண்தனிமையில் பிரயாணம் போய்க்கொண்டிருக்கிறாள். இரு, நானும் வருகிறேன்.
***
வே.நி. சூர்யா – நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையை சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். கரப்பானியம் (2019), அந்தியில் திகழ்வது (2021) என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: suryavn3@gmail.com
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் மொட்டவிழும் சப்தம்
Intha vari nalla Kavithai
அருமையான கவிதைகள். மொழி மிருதுவானதாக மாறியிருக்கிறது.
மிகவும் அருமையான கவிதை,,,