Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவரா காந்தி?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவரா காந்தி?

ஆசை

மீபத்தில் நடைபெற்ற திருநெல்வேலி ஆணவக் கொலையைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இது? இப்போது காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அப்போது எனக்கு இயல்பாகவே தோன்றிய பதில்: காந்தி திருநெல்வேலிக்கு வந்து கவின் வீட்டாருடன் இருந்திருப்பார்; ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியிருப்பார்; அல்லது ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றும்படி உண்ணாவிரதம் இருந்திருப்பார்.

காந்தி தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர். மதநல்லிணக்கத்துக்காக அவர் போராடியதற்குச் சற்றும் குறைவானதல்ல தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டம். இருப்பினும் தற்காலத்தில் காந்தியை தலித் மக்களுக்கு எதிரானவராகவும் சாதியவாதியாகவும் தலித் மக்கள் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது. எந்தத் தரப்புக்காகப் பலமுறை தன் உயிரையும் காந்தி பணயம் வைத்தாரோ அந்தத் தரப்பு இன்று அவரைத் தங்கள் எதிரியாகப் பார்க்கிறது. 1990-வரை இந்த நிலை இல்லை. 1991-இல் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து இந்த நிலை முற்றிலும் மாறுகிறது. தங்களுக்கென்று ஒரு நாயகரை தலித் மக்கள் வரித்துக்கொண்டபோது இயல்பாகவே அங்கே ஒரு எதிர்நாயகர் அல்லது எதிரி உருவாகிறார். துரதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் காந்தி இருந்துவிட்டார். காந்தியைத் தனது எதிரியாக டாக்டர் அம்பேத்கர் பார்த்தார் என்பது உண்மைதான். ஆனால், அதே பார்வையை தலித் மக்களும் வரித்துக்கொள்ளும் அவசியமில்லை. 

சிறுவயது காந்தியின் கேள்விகள்

தீண்டாமைக்கு எதிரான காந்தியின் உணர்வுகள், எண்ணங்கள், போராட்டங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. தீண்டாமைக்கு எதிராக காந்தி சிறுவயதிலேயே பேச ஆரம்பித்துவிட்டார். காந்தியின் சிறுவயதில் அவர்கள் வீட்டுக்கு வரும் துப்புரவுத் தொழிலாளியின் மகன் உக்கா என்ற சிறுவன் வருவான். அந்தச் சிறுவனுடன் காந்தி விளையாடுவது வழக்கம். அதைப் பார்த்த காந்தியின் அன்னை புத்லிபாய், உக்காவைத் தொடக் கூடாது என்று காந்தியை கண்டித்திருக்கிறார். தீண்டாமையை மதம் அனுமதிக்கவில்லை என்று அந்தச் சிறு வயதிலேயே காந்தி கருதினார். “ஏனென்றால் தற்போது தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்த ஒரு படகோட்டிதானே ராமாயணத்தில் ராமன் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தார்? என்று தன் தாயிடம் சிறுவர் காந்தி கேட்டிருக்கிறார். “கடவுள் எல்லோருக்குள்ளும் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று சொல்லப்படும்போது உக்காவை மட்டும் தொடக்கூடாது என்கிறார்களே” என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்திருக்கிறது. தன் தாயிடம் கேட்ட கேள்விதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நோக்கி காந்தி எடுத்து வைத்த முதல் அடி.  

தென்னாப்பிரிக்க அனுபவங்கள் 

தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் குடியிருப்பு, டால்ஸ்டாய் பண்ணை என்று இரண்டு ஆசிரமங்களைக் கண்டவர் காந்தி. அந்த இரண்டு பண்ணைகளிலும் தீண்டாமைக்கு இடமில்லை. அந்தப் பண்ணைகளில் தலித் மக்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட்டனர். எல்லோரும் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும், கழிப்பறை சுத்தம் செய்வது உட்பட. சாதி பிரித்து இந்த வேலைகள் பார்க்கப்படுவது அங்கே கிடையாது. குறிப்பிட்ட சாதியினர்தான் துப்புரவுத் தொழிலாளர்களாகவும் மலம் அள்ளுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் நிலவும் இக்காலத்திலிருந்து சுமார் நூற்றாண்டுகளுக்கு முன்பே அதனை உடைத்து சமத்துவம் கண்டவர் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் கிறித்தவர் வின்சென்ட் லாரன்ஸ். ஒருநாள் அவரது மூத்திரச் சட்டியை (chamber pot) அவர் சுத்தம் செய்ய மறந்துவிட்டார். அதனை எடுத்துச் சுத்தம் செய்யும்படி காந்தி தன் மனைவி கஸ்தூர்பாவிடம் கூறினார். படிப்பறிவில்லாதவரும் ஆச்சாரமானவருமான கஸ்தூர்பா அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அதனால் கோபம் அடைந்த காந்தி, கஸ்தூர்பாவைத் தரதரவென்று இழுத்துச்சென்று தெருவில் விட்டார். அடித்தும்விட்டார். காந்தி, கஸ்தூர்பாவிடம் மூர்க்கமாக நடந்துகொண்ட வெகுசில தருணங்களில் அதுவும் ஒன்று. இந்நிகழ்வைப் பற்றித் தனது ‘சத்திய சோதனை’ சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

காந்தி நடத்திய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டம்தான் இந்தியர்கள் சாதி, மத, மொழி வேறுபாடின்றி கலந்துகொண்ட முதல் போராட்டம். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 90% பேர் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள். இப்படியாக இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலை நோக்கிக் கொண்டுவந்த பெருமை காந்தியையே சாரும். இதேபோல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போதும் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். 

காந்தியின் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த தலித்தான தரங்கம்பாடி செல்வம் தென்னாப்பிரிக்கப் போராட்டத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இந்தப் போராட்டத்துக்காக 1914-இல் வெளியான நினைவுமலரில் தரங்கம்பாடி செல்வத்தின் புகைப்படமும் பெயரும் இடம்பெற்றிருந்தன. அடுத்த ஆண்டு, காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு தொடங்கிய கோச்ரப் ஆசிரமத்துக்கு தரங்கம்பாடி செல்வத்தின் மகனை அழைத்துவந்து இரண்டு ஆண்டுகள் தன்னுடன் தங்க வைத்திருந்தார்.

தூதாபாய் குடும்பத்தினர்

தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு தென்னாப்பிரிக்க அனுபவத்தில் இந்தியாவிலும் ஒரு ஆசிரமம் நிறுவ முடிவெடுத்தார். அவர் நினைத்த அளவுக்குப் பெரிய இடம் கிடைக்காததால் அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கோச்ரப் என்ற இடத்தில் ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு 1915 ஜூலை 20-இல் ஆசிரமத்தை நிறுவினார். அந்த ஆசிரமம் சபர்மதிக்கு மாறும்வரை சத்தியாகிரக ஆசிரமம் என்ற பெயரில் அறியப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டபோது அந்த ஆசிரமத்தில் 25 பேர் இருந்தார்கள். அதில் 13 பேர் தமிழர்கள்.

உண்மை பேசுவது, அகிம்சையைப் பின்பற்றுவது, பிரம்மச்சரியம், திருடாமை, பொருள்சேர்க்காமை, உணவின் மீது அளவற்ற நாட்டம் கொள்ளாமை, கைத்தறித் துணிகளை அணிவது, தாய்மொழியில் கல்வி கற்பது, மிக முக்கியமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பது என ஆசிரமத்துக்குச் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளில் பலவும், தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பது உட்பட, தென்னாப்பிரிக்கப் பண்ணைகளில் காந்தி பின்பற்றியதுதான். 

கோச்ரப் ஆசிரமத்துக்கு ஒரு ஆண்டுக்கு அப்போதைய மதிப்பில் ரூ. 6,000 செலவு பிடிக்கும் காந்தியின் மீது நன்மதிப்பு கொண்ட மங்கள்தாஸ் கிரிதர்தாஸ் என்ற ஆலை முதலாளிதான் அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். ஆசிரமம் தொடங்கிய புதிதில் அதில் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்று விரும்புவதாக காந்தியின் நண்பரும் சமூக சேவகருமான ஏ.வி.தக்கர் பாபா காந்திக்கு கடிதம் எழுதினார். தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், அவர்களின் குழந்தை லட்சுமி ஆகியோர்தான் அந்தக் குடும்பத்தினர்.

தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களை காந்தி தனது ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வதற்கு ஆசிரமத்தினரிடமிருந்து, குறிப்பாக கஸ்தூர்பாவிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி காந்தி அவர்களைச் சேர்த்துக்கொள்கிறார். ஆனால், அவர்கள் அங்குள்ள பொதுக்கிணற்றில் நீர் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் தனக்கும் தண்ணீர் வேண்டாம் என்கிறார் காந்தி. அவருடைய மருமகன் முறையில் இருந்த மகன்லாலும் மகன்லாலின் மனைவியும் தூதாபாய் குடும்பத்தைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். காந்தி பதில் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆன்மீகக் காரணங்களுக்கு அல்லாமல் ஒரு பொதுக் காரியத்துக்காக காந்தி இருந்த முதல் உண்ணாவிரதம் தீண்டாமைக்கு எதிரானதுதான். இந்தச் சூழலில்தான் ‘நாம் நண்பர்களாகவே பிரிந்துவிடுவோம்’ என்று கஸ்தூர்பாவை மிரட்டி அவரைப் பணிய வைக்கிறார் காந்தி. கோச்ரப் ஆசிரமத்தில் தூதாபாய் குடும்பத்தினர் சேர்ந்த அன்று அவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. அவர்கள் உண்டுமுடிந்தவுடன் அவர்களது தட்டுகளை ஒரு சிறுவன் எடுத்துச்சென்று கழுவிவைக்கிறான். அந்தச் சிறுவன் யாரென்று தூதாபாய் அங்கிருந்தவர்களைக் கேட்கிறார். அது காந்தியின் மகன் ராமதாஸ் காந்தி என்கிறார்கள். தூதாபாய் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார். இப்படியாக, தீண்டாமைக்கு எதிரான மனோபாவத்தைத் தன் பிள்ளைகளிடமும் ஆழமாக விதைத்தவர் காந்தி.

கோச்ரப் ஆசிரமப் பிரச்சினை அத்துடன் முடியவில்லை. தூதாபாய் குடும்பத்தினர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் புரவலர் மங்கள்தாஸ் காசோலை அனுப்புவதை மூன்றாம் மாதத்திலேயே நிறுத்திவிட ஆசிரமம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அப்போது ஒருநாள் சத்தியாகிரக ஆசிரமத்துக்கு வெளியே ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் இருந்த இளைஞர் ஒருவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையொன்றைக் கூப்பிட்டு காந்தியை வெளியே அழைத்துவரச் சொல்கிறார். காந்தியிடம் “இந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இதை நடத்துவதற்கு நீங்கள் மிகவும் சிரமப்படுவதையும் கேள்விப்பட்டேன். இதற்கு ஏதாவது உதவ விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். மறுநாள் அந்த கார் வருகிறது. காரில் இருந்தபடியே காந்தியிடம் 13 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறார். தற்போதைய மதிப்பில் பல லட்சங்களைத் தொடும். அந்த இளம் புரவலரின் பெயர் அம்பாலால் சாராபாய். இத்தனைக்கும் அவர் ஆசிரமத்தின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை.

அகமணத் திருமணத்துக்கு எதிராக காந்தி

ஒரே சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி எடுத்த முடிவு, அம்பேத்கரால் இந்து மதம் அழிந்துவிடாமல் தடுப்பதற்கான தந்திரம்தான் என்று சமீபத்தில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதியிருக்கிறார். இது காந்தி குறித்த வரலாற்றுப் புரிதலின்மை, காந்தி கெட்ட நோக்கம் கொண்டவர்தான் என்ற மனச்சாய்வு போன்றவற்றின் விளைவு. பூனா ஒப்பந்தத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே தன் ஆசிரமத்தினருக்கு காந்தி விதித்த புதிய விதிமுறை என்ன தெரியுமா? “ஒரே சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது” என்பதுதான். போகப் போக இந்த விதிமுறையை மேலும் கூர்தீட்டிக்கொண்டே வந்து, “மணமகள் ஆதிக்க சாதியாகவும் மணமகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அத்தகைய திருமணங்களுக்குத்தான் நான் செல்வேன். அத்தகைய திருமணங்களுக்குத்தான் என் ஆசிர்வாதம் கிடைக்கும்” என்றார். இதெல்லாம் தந்திரமா? அவர் கூறியபடியே நடந்துகொள்ளவும் செய்தார். அவர் ஆசிரமத்தில் வளர்ந்த தூதாபாயின் பெண் லெட்சுமிக்கும் மாருதி ஷர்மா என்ற ஆந்திர காந்திய பிராமணருக்கும் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொண்டு காந்தி ஆசிர்வாதம் செய்தார். இவ்வளவு ஏன், அந்த முடிவு எடுத்தபின் தன் சொந்த மகன் தேவதாஸ் காந்தியின் திருமணத்துக்குக் கூட காந்தி செல்லவில்லை. தேவதாஸ் பனியா இனத்தவராகவும் அவரது மனைவியான ராஜாஜியின் மகள் பிராமண இனத்தவராகவும் அது ஒரு சாதி மீறிய கல்யாணம்தான் என்றாலும் இரண்டு பேருமே ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தி அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. காந்தியின் அழைப்பை ஏற்று இப்படிச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் குறிப்பிட வேண்டுமென்றால் டி.வி.எஸ். ஐயங்காரின் மகள் சௌந்திரம். இவர் கேரளத்தின் ஜி.ராமச்சந்திரன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திருமணம் செய்துகொண்டார். சௌந்திரம் ராமச்சந்திரன்தான் காந்தி கிராமத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

அம்பேத்கருக்கும் முன்பே…

டாக்டர் அம்பேத்கரை எதிர்கொண்ட பிறகுதான் காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார் என்றொரு கருதுகோள் பரவலாக முன்வைக்கப்படுகிறது. பூனா ஒப்பந்தம் செய்துகொண்ட ஆண்டு 1932 என்றால் வைக்கம் போராட்டம் நடந்தது 1924-இல். இந்தப் போராட்டத்தில் காந்தியின் பங்கு சாதாரணமானதல்ல. ஆனால், வைக்கம் போராட்டத்தைப் பெரியாரியர்கள் சொந்தம் கொண்டாடுவதுபோல் இன்று காந்தியர்களோ காங்கிரஸோ சொந்தம் கொண்டாடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. வைக்கம் போராட்டத்தில் காந்தியின் பங்கைப் பற்றித் தெரிந்துகொள்ள வரலாற்று ஆய்வாளர் பழ. அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ (2020, காலச்சுவடு பதிப்பகம்) என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

மகத் சத்தியாகிரகத்துக்கு ஆதரவு

பூனா ஒப்பந்தத்துக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் மகத் சத்தியாகிரகம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் பெயரிலேயே சத்தியாகிரகம் இருப்பதை கவனியுங்கள். காந்தியிடமிருந்து தான் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கூறினாலும் அவர் நடத்திய போராட்டத்தை அவர் சத்தியாகிரகம் என்று அழைத்தார் என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மகத் சத்தியாகிரகப் போராட்டப் பந்தலில் இடம்பெற்ற ஒரே படம் காந்தியுடையது. அந்த சத்தியாகிரகம் நடைபெற்றபோது காந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது அவர் தென்னிந்தியப் பயணத்தில் இருந்ததால் அவரை கர்நாடகத்தின் நந்திதுர்கம் வாசஸ்தலத்தில் ஓய்வெடுக்கும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தினார். அப்போது மகத் சத்தியாகிரகம் பற்றி காந்தியின் நண்பர் அவருக்குக் கடிதம் எழுதுகிறார். மகத் நகராட்சியில் உள்ள பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தண்ணீர் குடிக்க விடாமல் அங்குள்ள ஆதிக்க சாதியினர் தடுத்துக்கொண்டிருந்த சூழலில், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் நீர் அருந்துவதற்காக நடந்த போராட்டம் அது.

மகத் சத்தியாகிரகம் பற்றி காந்தி தனது யங் இந்தியா இதழில் இப்படி எழுதினார்: “டாக்டர் அம்பேத்கர், மகத் நகராட்சியில் உள்ளா குளத்தில் தண்ணீர் குடித்துத் தாகம் தீர்த்துக்கொள்ளும்படி ஒடுக்கப்பட்ட மக்களை அறிவுறுத்தியது முழுக்க முழுக்க நியாயமானதே… தீண்டாமைக்குப் பின்னால், எந்த நியாயமான காரணமும் இருக்கவே முடியாது. மனிதத்தன்மையற்ற அமைப்புதான் அது. தடுமாறிக்கொண்டிருக்கும் அந்த அமைப்பு, தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வைதீகத்தின் மூர்க்கமான சக்தியின் ஆதரவைத் தேடுகிறது” என்றார்.

இந்து மதம் மறைந்துபோக வேண்டும்

காந்தி தனது பயணங்களின்போது அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் பேசத் தவறியதே இல்லை. அவர் மேற்கொண்ட தென்னிந்தியப் பயணத்தில் தீண்டாமைக்கு எதிராக இன்னும் காட்டமாகப் பேசுகிறார். பேசுவது மட்டுமல்லாமல், அவரது கூட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்தால் மற்ற எல்லோரும் அவர்களுடன் கலந்து உட்கார்ந்தால்தான் மேற்கொண்டு நான் பேசுவேன் என்பார் காந்தி.

நாகர்கோவில் கூட்டத்தில் காந்தி இப்படிப் பேசுகிறார்: “சம்ஸ்கிருதத்தில் எழுதியிருக்கும் எல்லாமே நமது சமூக நடத்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை அறத்துக்கு எதிரானது எதுவோ நமது பகுத்தறிவுக்குப் புறம்பானது எதுவோ அது எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சாஸ்திரங்கள் என்ற பெயரில் தம்மை நிறுவிக்கொள்ள முடியாது” என்று விளாசியிருக்கிறார். கொல்லத்தில் இன்னும் காட்டமாக உரையாற்றுகிறார்: “தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் கொந்தளிப்பில் ஒன்று தீண்டாமை ஒழிந்துபோக வேண்டும் இல்லையேல் இந்து மதம் மறைந்துபோக வேண்டும்” என்கிறார். இதேபோல் முப்பதுகளின் இறுதியில் “சாதி ஒழிந்தாக வேண்டும்” என்கிறார் காந்தி. பேரா. டி. தர்மராஜ் சொல்வதுபோல் காந்தி தந்திரமானவராக இருந்திருந்தால் இந்து மதத்தின் அடிப்படையான சாதியை ஒழிந்துபோக வேண்டுமென்று கூறியிருப்பாரா?

காந்தியின் ஐந்து விரல்கள்

தன் பேச்சின் பாணியை இடத்துக்குத் தகுந்த மாதிரியோ சூழலுக்குத் தகுந்த மாதிரியோ பேசுவது காந்தியின் வழக்கம். சில இடங்களில் தன் கையை உயர்த்தி, ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டுவார். முதல் விரலை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு “இதுதான் தாழ்த்தப்பட்டோருக்கான சமஉரிமை” என்பார். இரண்டாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இதுதான் கைராட்டையால் நூல்நூற்பது” என்பார். மூன்றாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது மது உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொள்ளாமை” என்பார். நான்காவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது இந்து-முஸ்லீம் நல்லுறவு” என்பார். ஐந்தாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது பெண்களுக்கான சம உரிமை” என்பார். மேலும், “கையானது மணிக்கட்டால் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மணிக்கட்டுதான் அகிம்சை” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திவிடுவார். மக்கள் கூட்டமும் நீண்ட பேச்சொன்றைக் கேட்டது போன்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும்.

ஆலயங்களும் காந்தியும் 

பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தி முழுமூச்சாகத் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக இந்தியர்களின் மனதில் தீண்டாமை ஒரு பாவம் என்ற உணர்வை அவர் ஆழமாக விதைக்கிறார். தீண்டாமை ஒழிப்பு நடைப்பயணங்கள், ஆலயப் பிரவேசம் என்று காந்தி இந்து மதத்தின் சனாதனத்தின் மீது பெரும் தாக்குதல் நிகழ்த்துகிறார். எந்தக் கடவுளர்களின் பெயரால் சமூகத்தின் குறிப்பிட்ட சாரார் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றனரோ அந்தக் கடவுளரின் ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் காந்தியர்கள் நுழைந்தனர். இது புரட்சி அல்லாமல் வேறு என்ன? சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று அறிவித்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் இன்றைக்கு இருப்பதைவிட பிற்போக்காகவும் கண்மூடித்தனமாகவும் மக்கள் இருந்த அந்நாட்களில் ஆலயப் பிரவேசம் என்பது பெரும் சாதனை அல்லாமல் வேறு என்ன?

ஒருமுறை காந்தி, ஒடிஷாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிந்துவுடன் அவரும் உள்ளே செல்லவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படாத எந்தக் கோயிலுக்குள்ளும் நான் செல்ல மாட்டேன் என்று அவர் முடிவெடுத்தார். இந்த முடிவு எல்லாருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும் கஸ்தூர்பா 1938-இல் மகாதேவ் தேசாயுடன் காந்திக்குத் தெரியாமல் பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கே சென்றதும் மகாதேவ் தேசாயின் மகனும் சிறுவனுமான நாராயண் தேசாய் கோயிலுக்குச் செல்லக் கூடாது, இது பாபுவுக்கு (காந்திக்கு) பிடிக்காது என்று தடுத்திருக்கிறார். அப்படியும் கேளாமல் அவர்கள் கோயிலுக்குள் சென்றுவிட்டார்கள். ஆசிரமத்துக்குத் திரும்பியவுடன் இதனை நாராயண தேசாய் காந்தியிடம் சொல்லிவிட்டான். இதனைக் கேள்விப்பட்ட காந்தி மிகுந்த வேதனையும் கோபமும் கொண்டார். கஸ்தூர்பாவின் செயலைக் கடுமையாக விமர்சித்து ‘ஹரிஜன்’ இதழில் எழுதினார். அதேபோல் குற்றாலத்துக்கு காந்தி 1934-இல் வந்தபோது அங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று அருவியில் குளிக்காமல் வந்துவிட்டார்.

காந்தி ஆலயப் பிரவேசத்தை முடுக்கிவிட்டதும் இந்தியா முழுவதும் உள்ள சனாதனிகள் கடும் கோபம் கொண்டனர். காந்திக்கெதிராகப் போராட்டங்கள் நடத்துவது, காந்தி வரும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டுவது என்று கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். தமிழ்நாட்டிலும் சனாதனிகள் காந்தி மேல் வெறுப்பையும் எதிர்ப்பையும் கொட்டினார்கள். காந்திக்கெதிராக ‘வருணாசிரம சபை’ என்றொரு சபை நிறுவப்பட்டது. இந்தச் சபையினரின் புரவலர் காஞ்சி சங்கர மடம். ஆலயப் பிரவேசம், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை இந்து மதத்துக்கு எதிரான பாவச் செயல் சென்று சங்கராச்சாரியார் கருதினார். காந்தியிடமே அவர் தீண்டாமைக்கு ஆதரவாக வாதிட்டார். தமிழ்நாட்டில் காந்தி வரும்போது அவரது ஆலயப் பிரவேச நடவடிக்கைகளுக்கு எதிராக சனாதனிகள் நடத்திய போராட்டத்துக்கு உறுதுணையாகவும் சங்கர மடம் இருந்திருக்கிறது. 

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்விதான் விடுதலை கொடுக்கும் என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால், அக்காலகட்டம் என்பது சமூகத்தின் எல்லா நுழைவாயில்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய விடாமல் அடைபட்டிருந்ததைப் போல கல்விக்கான நுழைவாயில்களும் அடைபட்டிருந்தன. காந்தி தொடங்கிய பள்ளிகளிலும் காந்தியைப் பின்பற்றி காந்தியர்கள் தொடங்கிய பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்களில் பெருந்திரளானவர்கள் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்வது அப்போது நிகழ்ந்தது. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு காந்திதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எல்லாவற்றிலும் முட்டுக்கட்டை போட்டார் என்பது அபாண்டம்.

காந்தியின் அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கான பிராமணர்கள் தீண்டாமை ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். இவர்களின் முக்கியமானவர் சுவாமி ஆனந்த தீர்த்தர். இவர் கக்கனின் ஊரான தும்பைப்பட்டியில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசியும் நடவடிக்கைகள் எடுத்தும் வந்தபோது அந்த ஊரின் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டார். தன்னுடைய தொண்டர்களாக இருக்கும் பிராமணர்கள் ஒவ்வொரு ஒரு தாழ்த்தப்பட்டவரின் குடும்பத்துக்குச் சென்று அங்கு இருந்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் வேண்டுகோளை ஏற்று ஆனந்த தீர்த்தர் மதுரைக்கு அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் தங்கியிருக்கிறார். (ஆனந்த தீர்த்தரைப் பற்றி பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையின் லிங்க்: https://tinyurl.com/48zzrnf8) இதுபோல் தங்கள் குடும்பத்திலும் ஒரு பிராமணம் வந்து தங்கியதாக கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி மீது கொலை முயற்சி

காந்தி மீது மொத்தம் ஏழு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழாவது கொலை முயற்சி வெற்றிகரமாக காந்தி படுகொலையாய் நிறைவடைந்தது. அவர்மீது முதல் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா?

ஆண்டு 1934. அதாவது, காந்தி கொல்லப்படுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முந்தி. அவரது ‘ஹரிஜன் யாத்திரை’ உச்சக்கட்டத்தை எட்டியிருந்த தருணம். அப்போது ஜூன் வாக்கில் பூனாவுக்கு காந்தி வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே இந்து சனாதனிகளிடமிருந்து தீவிர எதிர்ப்பு புறப்பட்டது. நூற்றுக்கணக்கான இந்து சனாதனிகள் திரண்டு, முன்னே ஒருவர் கறுப்பு ஆடையணிந்து கறுப்புக் குதிரையில் காந்திக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள் என்று ராமச்சந்திர குஹா தனது சமீபத்திய நூலில் தெரிவிக்கிறார். ‘ஆலய பிரவேச சட்டத்தை எதிர்ப்போம்’, ‘இந்து மத அழிப்பாளரான காந்திக்கு வரவேற்பு கொடுக்காதீர்’ என்றெல்லாம் பதாகைகள் ஏந்திச் சென்றார்கள் என்று குஹா குறிப்பிடுகிறார். 

ஜூன் 25, 1934 அன்று மாலை பூனாவில் உள்ள முனிசிபாலிட்டி அரங்கில் காந்தி பேசுவதாக இருந்தது. அங்கு பெருங்கூட்டம் திரண்டு காந்தியை வரவேற்று அவரது உரையைக் கேட்கக் காத்திருந்தது. 7.30 மணியளவில் கார் ஒன்று அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்தது. அது காந்தி வரும் கார் என்று நினைத்து சாரண மாணவர்கள் வரவேற்பு இசையை முழங்கத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் மேலிருந்து ஒரு வெடிகுண்டு காரை நோக்கி எறியப்பட்டது. அந்தக் குண்டு குறிதவறிக் கீழே விழுந்து வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

பிராமணப் பையனும் மலம் அள்ளுதலும்

காந்தியின் பண்ணைகளிலும் ஆசிரமங்களிலும் எல்லோரும் எல்லா வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதில் கழிப்பறையைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல் எல்லாமே அடங்கும். கழிப்பறையைச் சுத்தம் செய்வது முறைவைத்து நடக்கும். ஒரு தடவை கழிப்பறையை அந்த வாரம் யார் சுத்தம் செய்ய வேண்டுமோ அவர் வரவில்லை. அதனால் அந்தப் பணியை பிராமணரான வினோபா பாவேவும் அவரது தம்பியும் செய்தனர். அதைப் பார்த்துப் பதறிப்போன கஸ்தூர்பா காந்தியிடம் போய் முறையிட்டார். அதைக் கேட்ட காந்தி, “பிராமணர்கள் செய்வதற்கு மலம் அள்ளுவதைவிட சிறந்த பணி வேறு என்ன?” என்றிருக்கிறார். 

1934-இல் காந்தி எரவாடா சிறையில் இருக்கிறார். அப்போது ரத்னகிரி சிறையில் அப்பாசாஹேப் பட்வர்தன் என்ற பிராமணர், காந்தியர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்குகிறார். எதற்காகத் தெரியுமா? அந்தச் சிறையில் கழிப்பறைச் சுத்தம் செய்யும், மலம் அள்ளும் பணியை தாழ்த்தப்பட்ட கைதிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் (இன்றுவரை நிலவும் அவலம்தான் இது). அந்தப் பணியைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் அந்த உண்ணாவிரதம். இதற்காக காந்தியின் ஆசிர்வாதம் வேண்டி ரத்னகிரி சிறையில் இருந்து அப்பாசாஹேப் காந்திக்குக் கடிதம் எழுதுகிறார். காந்தி அதற்குத் தன் பூரண ஆசிர்வாதம் உண்டு என்று பதில் அனுப்புவதுடன், அப்பாசாஹேப் கழிப்பறை சுத்தம்செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றால் தானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று தனது சிறை வார்டனை மிரட்டுகிறார்.

காந்தி மலம் அள்ளுதலை, கழிப்பறை சுத்தப்படுத்துவதை ஏன் எல்லோருக்கும் பொதுவாக்கினார் என்பதை நினைத்துப் பார்க்க வியப்பு ஏற்படுகிறது. இந்தத் தொழிலை இவர்தான் செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து சாதி இழிவு பிறப்பதைக் கழித்துக் கட்டத்தான் அவர் அப்படிச் செய்தார். மேலும், 1938-இல் மதராஸ் மாகாண முதல்வராக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட சிறைக் கைதிகளை மட்டும் சிறையில் கழிப்பறை சுத்தம் செய்யும் நடைமுறையைத் தடுக்கும் சட்டம் கொண்டுவந்தார் என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும். 

டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே பெரும் பிளவு பூனா ஒப்பந்தத்தில்தான் ஏற்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியை டாக்டர் அம்பேத்கர் புகழவே செய்திருக்கிறார். முழுமையான விலகல் முப்பதுகளின் இறுதியில்தான் ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் கருதியதுபோல் காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி அல்ல; உற்ற துணைவர். இருவரும் தீண்டாமையை ஒழிப்பதில் வேறுவேறு கோணங்கள் வைத்திருந்தனர்; ஆனால், இறுதி இலக்கு ஒன்றுதான். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இருவரும் எதிரிகளாக வைக்கப்பட்டிருக்கலாம். இன்றும் அப்படிப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. சமத்துவப் போராட்டத்தில் இருவரையும் தோழர்களாகவே இனிவரும் தலைமுறையினர் பார்க்க வேண்டும்; முக்கியமாக, தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பினர்.

***

ஆசை – இயற்பெயர் தே. ஆசைத்தம்பி. மன்னார்குடியை சேர்ந்தவர். ஆங்கில இலக்கியம் பயின்றவர். கவிஞர், புனைகதை எழுத்தாளர், அகராதியியலர், பிரதிசெம்மையாக்குநர் (எடிட்டர்), பத்திரிகையாளர், சிறார் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். கவிதை, காவியம், சிறுகதைத் தொகுப்பு, பொதுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று இவருடைய ஆக்கங்கள் வெளியாகியிருக்கின்றன. பபாசி வழங்கிய ‘கலைஞர் பொற்கிழி விருது’-2022 (கவிதைக்காக), சென்னை லிட்டரெரி ஃபெஸ்டிவல் 2014ன் ‘எமெர்ஜிங் லிட்டரெரி ஐகான்-2014, சமயபுரம் எஸ்.ஆர்.வி. வழங்கிய ‘படைப்பூக்க விருது’-2023 ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: asaidp@gmail.com   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here