Saturday, September 13, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்சிவப்பு முத்துகள்

சிவப்பு முத்துகள்

வைரவன் லெ.ரா

வெட்டி ஒதுக்கப்பட்டு ஓரமாய்க் கிடந்த பனை, தென்னை மரத் துண்டுகளுக்கிடையே வயதாகி பட்டுப்போய் நின்ற மருதமர மூட்டிலே, கால்களைக் குவித்தும் கைகளை அதனைச் சுற்றிலும் வளைத்து, குத்தவைத்து அமர்ந்தபடி, எதிரேயிருந்த வேம்பின் மூட்டிலிருந்த கருங்கல் பீடத்தில், பச்சை வண்ண பட்டுப் பாவாடை சுற்றி அணிவித்து, முகம் முழுக்க செக்கச் சிவந்த மஞ்சணை பூசியிருந்த பெண் தெய்வத்தின் முன் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்ற போதமில்லை.

நேரம் வேகமாகக் கடப்பதைப் பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் வெறுமனே அமர்ந்திருப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் தூர பனைவிடலிகளிலிருந்து சதா ஒலித்துக் கொண்டிருந்த கிளிக் கூட்டத்தின் கொஞ்சல்களும், பனையோலைகளின் உரசல்களும், தலைக்கு மேல் சென்ற உயர்அழுத்த மின்கம்பிகளின் வழி பாயும் மின்சாரத்தின் மென்அதிர்வின் ஒலியலையும் என்னுடைய மனம் எண்ணிக் கொண்டிருந்த அவ்வொன்றை அசைக்காமல்  கூடவே பயணித்தன. எப்பொழுதுமே வெறுமையாய் அமர்ந்திருக்கும் போது மனம் எண்ணிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு கொடுமையான கனவிலிருந்தோ! அல்லது நிகழ்ந்தவொன்றிலிருந்தோ! அத்தனிமை என்னைத் தூர வீசிவிடும். மாறாக, அடிவயிற்றில் அடிக்கடி உண்டாகி உயரப்பறக்கும் ஓர் உணர்வு, என்னுடைய மண்டைக்குள் நான் மறக்க நினைக்கும் அக்காட்சிகளை, பார்வையை வீசும் ஒவ்வொரு இடங்களிலும் முளைக்கவிட்டுக் கொண்டிருந்தன.

 என்னவெல்லாமோ இயன்று இறுதியாக சுற்றிலும் கிடந்த பனைமரங்களின், தென்னைமரங்களின் துண்டுகளை ஒப்பிட முயற்சித்து. கையில் கிடைத்த மருத மரத்தின் ஒடிந்த கொப்பின் கூர்முனையைக் கொண்டு  எதிரே கிடந்த துண்டுகளின் மீது ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன். தென்னை மரத் துண்டில் அடிக்கும் தோறும் அதில் துளைகள் விழுந்தன. ஆனால், பனைத் துண்டில் ஓங்கி அடிக்கவும் கொப்பு முறிந்து போனது. சட்டென்று அந்த தலையில்லா முண்டத்தைப் பார்த்த கணம், மண்டைக்குள் கொடும்கூரான ஊசி போல நுழைய, உடல் நெளிய ஆரம்பித்தது. கோடையின் உச்சமான சித்திரை மாத அக்கினி நட்சத்திர வெயிலில் பழையாற்றின் கரையில் தென்னந்தோப்புகளுக்கிடையே பிறந்து வாழ்ந்து வந்தவன், இந்த கரிசலின் உலுத்துப் போயிருந்த தென்னை, பனை மரத் துண்டுகளுக்கிடையே அமர நேரிட்ட விதியை எண்ணி காரி உமிழ்ந்தேன். விழியின் முனைகளில் உண்டான துடிப்பு, உடல் எல்லாம் உதற அழ ஆரம்பித்தேன்.

நெல்லை மாவட்டம் திம்மராஜபுரம் புறவழிச் சாலையிலிருந்து கங்கைகொண்டான் செல்லும் திசையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பயணித்தால்,  இடப்புறமாக இறங்கும் சாலையில் கூனான்குளம் (ஊர்ப் பெயரல்ல, குளம் தான்) கடக்கவும், வெள்ளைச் சுண்ணாம்பும் மண்ணும் கலந்து செய்த நெல்லையின் அடையாளத்திற்கேற்ப பிறை வடிவ மண்டையுடைய சுடலை கோயிலிருந்து ஆரம்பிக்கும் ஊரானது ஐம்பதிலிருந்து அறுபது வீடுகள் வரை கொண்டது. கொம்புவீரன்பட்டினம் எனும் பெயருடைய அக்கிராமம், பொருநை ஆற்றின் கரையோரமிருந்தது.

ஒரே சமூக மக்கள் நிரம்பி இருந்தாலும், அவர்களின் உளமெங்கும் ஊர் நடுவே இருக்கும் முப்பிடாதி அம்மன் கோயில் கொடை கழிகையில் குடியும் கூத்தும் சேர, பல தலைமுறைகளுக்கு முன்னர் நிகழ்ந்த கொலைகளின் பழிக்காக காத்துக் கொண்டிருக்கும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரேடில் சொல்லிய தகவலில் நான் இதனால் அலையப்போகும் மறைப்பொருளும் ஒளிந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. நெல்லை மாநகர டிவிஷனில் கால்களை, கைகளை உடைக்க பெயர் போன என்னை நோக்கி, மெல்லிய புன்னகையோடு அவர் சொல்லிய செய்தியின் இன்னொரு அர்த்தம், அடுத்த மூன்று நாட்களுக்கு நானும் அங்குதான் இருக்கப் போகிறேன்.

கண்காணிப்பாளர் கைகளை என்னை நோக்கி நீட்டவும், அவரருகே செல்ல கால்களை நகர்த்தும் போது, அவரே மரியாதைக்கு என்னுடைய குழுத்தலைவர் காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபனையும் எங்கள் மொழியில் சைகைக் காட்டி வருமாறு அழைத்தேன். நாங்கள் இருவரும் அவரை நெருங்கவும், “திருப்பூருக்கு மணிகண்டனும் வேணுமாடே. நீரு காமா டீம்ல இருந்து யாரையாவது கூட்டிட்டு போனா என்னடே! அக்கூயூஸ்ட் மணிகண்டன் வர அளவுக்கு பெரிய ஆளுப் புண்டைலாம் இல்லைல்லா! களவ பண்ணிட்டு யாருக்க அண்டைல கெடக்கானோ அந்த தேவிடியாவையும் இழுத்துட்டு வரணும் புரிஞ்சா,  நீரு ஒத்த ஆளு போறும்டே, ஒமக்க ஊக்கத்துக்கு…” கண்காணிப்பாளாரின் வாயும் இழுக்க, உதடுகளும் மெல்ல விரிந்தன. இந்தத் தொனி எப்பேற்ப்பட்ட ஆளுடைய சுயத்தையும் உலுக்கும், தன் வயதையொத்த இன்னொருவன் உயரதிகாரியாய் அதுவும் ஒரு முதல் நிலை காவலனின் தேவை உனக்கிருக்கிறதா? என்று கேட்கவும், எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் அண்ணன் தம்பி பிணைப்பிருந்தாலும், அதை உடைக்கும் என்று அறியாதவனா நான். ஸ்டீபன் சரியென்று தலையசைத்தாலும் அதிலிருந்த கசப்பான உறுதியற்ற தன்மையை உணர்ந்தேன். “மணிகண்டா, காமா டீம்ல இருந்து இன்னொருத்தரும் வருவாரு, மூணு நாளைக்கு அங்க இருக்கணும் கேட்டியா. டே அண்ட் நைட். பாளயங்கோட்டை கோட்டர்ஸ்ல தானே வீடு. வந்து போறதுக்கு பிராப்ளம் இல்லைல்லா. எஸ்.ஐ செல்லத்துரைவும் கூட இருப்பாரு. அவெ ஒரு வெளங்காத பய. ஒன்ன தான் நம்பி வுடுகேன் புரிஞ்சா. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். யார வேணும்னாலும் தேவைப்படும் போது வெளுத்துரனும். எந்த கிரைம் சீனும் நடக்க கூடாது. இந்த வாட்டி மட்டும் அப்படியே ஒன்னும் நடக்காம வோட்டிட்டோம், அடுத்தவாட்டி நீ எஸ்.ஐ. புரிஞ்சாடே?” சொல்லிவிட்டு என்னுடைய பதிலை எதிர்ப்பார்க்காமல் தோள்களைத் தட்டிக் கொடுத்தவாரே அங்கிருந்து நகர்ந்தார்.

  ஸ்டீபன், “திருப்பூருக்கு நீ தான் வேணும்ன்னு முன் கூட்டியே சொல்லியிருந்தேன். கொம்புவீரன்பட்டினத்துக்கு வேணும்ன்னே ஒன்னைய அனுப்புராண்டா. நான்னா அவனுக்குப் புடிக்காது. சரி மூணு நாளு நிம்மதியா இரி. ஒன்னும் நடக்காம போயிரட்டும். ஆண்டவரே ஸ்தோத்திரம், எல்லாத்தையும் நல்லாக்கணும்.” வறண்ட குரலில் சொன்னார். வழக்கம் போல பதிலேதும் சொல்லாமல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ரோந்து செல்லும் வாகனத்திற்கே திரும்பினேன்.

நெல்லை மாநகர டிவிஷனில் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் ஸ்டீபனுடைய ஆல்பா குழுவில் தான் அங்கம் வகிக்கிறேன். எங்களுக்கு காவல் நிலைய பணியில்லை. எப்போதும் ரோந்து வண்டியில் சுற்றியவாரே, காவல் கண்பாணிப்பாளரின் நேரடி கட்டளைகளுக்கு ஏற்ப பணி புரிந்தோம். குற்றவாளிகளின் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்ததும் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிப்பது, ரோந்து செல்வது, கை கால்களை உடைப்பது, கொலை கொள்ளை எதுவாயினும் ஏதோ ஒரு தனிப்படையிலிருந்து துப்பறிவது என இவ்வேலை எனக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. சிறுவயதில் துப்பறியும் சாம்பு கதைகளைப் படிக்கும் போது பின்னாளில் நானும் இப்படியாவேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. இதற்கு முன் மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்தேன். அங்கடைந்த வெறுமையும், மனப்புழுக்கமும் இவ்வேலை எப்படியிருந்தாலும் அதற்கேற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்வதில் கொண்ட உறுதியை மென்மேலும் சாத்தியப்படுத்தியது.

மாலை காவலர் குடியிருப்பிற்குச் செல்கையில் வெளியே உள்வட்டச் சாலையிலே ரேவதியை கண்டேன். டிவிஎஸ் ஜூப்பிடரில் சென்றவள் என் பக்கமாக வண்டியைத் திருப்பினாள். “என்னங்க, பாப்பாக்கு இன்னும் ஜலதோஷம் கொறயலாயம். அத்த ஃபோன் பண்ணிச்சி. நீங்க நாளைக்கு நாரோயில் போயி பாத்துட்டு வரலாம்ல. அப்பா அம்மா ரெண்டு பேரும் இங்க கெடக்கோம். நம்மள தேடியே பாப்பா அழுது அழுது இழுத்து வச்சிருப்பா! போன வாரம் நானும் போகல. நீங்களும் பாப்பாவ பாத்து ஒரு மாசம் ஆயிட்டுல்லா. பிள்ள பாவம். நீங்க மட்டும் சரின்னி சொன்னா, நா வேலைய விட்டுட்டு ஊருக்கே போயிடுகேன். வேலையும் மயிறும் தான். ஒன்னுக்கு இருக்க கூட இடம் இல்லாத எடத்துல கொண்டு வுடுகானுக. சவுந்திரபாண்டியன் நகர்லலாம் ஒதுங்க மரம் கூட இல்ல. நேத்து எனக்கு மூணாம் நாளு. முடியலங்க. இங்க உள்ள ஆம்பளைகளு பொம்பளைகள என்னன்னு நெனைக்கானுவ. வீட்டு லோனு முடிய இன்னும் நாலைஞ்சி வருஷம் ஆகும். எங்க அப்பன் வீட்டுல இருந்து கொண்டு வந்த நகைய வித்துரலாம்ன்னி சொன்னா ஒங்களுக்கு புடிக்கல. எம்பாடு யாருக்குத் தான் புரியும். எம்புள்ளய ஒங்க அம்ம எப்புடி பாக்கோ!” வெம்பியவாறு கூறுகையில் அழவில்லை அவ்வளவுதான்.

எப்படியோ என்னுடைய ஆகிருதியில் ஊரில் இடமும் வாங்கி வீடும் கட்டிவிட்டேன். ரேவதி என்னை விட உயர்ந்த சாதியில் பிறந்தவள். கல்லூரி படிக்கும் போது உண்டான காதல். அவளுடைய அப்பா அதிர்ந்து கூட பேசாதவர். நாங்கள் காதலிக்கிறோம் என அவரிடம் சென்று சொல்லியபோது உடைந்து அழுத அவரைக் காண்கையில் ரேவதியிடம் சென்று இந்தத் திருமணம் வேண்டாம் என சொல்லுமளவிற்கு நானும் நொறுங்கிப்போனேன். பலமுறை ரேவதியின் அப்பாவிடமும் அம்மாவிடமும் சென்று பேசினேன். ரேவதியின் அம்மாவிற்கு ஆஸ்துமா பிரச்சனையிருந்தது. அவளுடைய அப்பா எங்களுடைய உறுதியைக் கண்டு இறங்கி வர ஆரம்பித்தார். ஆனால் அவளுடைய அம்மா என்னை முகத்திற்கு நேராக பார்த்ததேயில்லை. ஒருமுறை நான் அங்கிருக்கும் போதே, பீறிட்ட அழுகையால் மூச்சை அடக்கி மீண்டும்  ஏதோ பேச எத்தனிக்கும் போது அவளுடைய மூக்கில் இருந்த வடிந்த இரத்தம் சிவப்பு முத்துகளாகி தரையில் கிடந்தன. சட்டென்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன். கடைசியில் அவளுடைய பெற்றோர்களின் முழுவிருப்பமுமின்றி எங்களுடைய திருமணம் நிகழ்ந்தது. அதன்பிறகு அவரை பலமுறை சந்தித்துள்ளேன். ஓரளவிற்கு எனக்கும் அவருக்கும் ரேவதியின் பாலுள்ள நேசம் நெருக்கத்தை உண்டுபண்ணியது. ஆனாலும் அவளுடைய அம்மா இறக்கும் தறுவாயிலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னொரு நாள் அவளுடைய அப்பா அவளுக்கு என சேர்த்து வைத்த நகையை எங்களிடம் வீட்டிற்கே வந்து கொடுத்தார். ரேவதி அதை தன்னுடையதாய் எடுத்துக்கொண்டாள். நானோ அந்நகைகளை எங்களுடையதாய் ஏற்றுக்கொண்டதில்லை. பின்னர் கலப்பு மணம் புரிந்ததால் அவளுக்கும் எளிதாய் முயற்சித்ததில் காவல் துறையில் இடஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. இன்னும் மூன்று வருடங்களாவது வேலை பார்த்தால் கடனை இன்னும் சீக்கிரம் அடைத்து விடலாம்.  இளம்பிராயத்தில் ஒருமுறை மேலரத வீதியில் நுழைந்ததற்காகவே வசைப்பாடப் பட்டேன். அதே வீதியில் இறந்து வீட்டு காரியங்களை செய்ய அப்பாவுடன் உதவியாகச் செல்கையில் அனுமதித்தார்கள். அங்கேயே இடமும் வாங்கி வீடும் கட்டிவிட்டேன்.எப்போது நான் விழுவேன் என்று இறைவனைப் பிரார்த்திக்கும் ஊர்க்காரர்களுக்காகவே சீக்கிரம் கடனை அடைக்கவேண்டும். எப்படி இவளுக்குப் புரியவைத்து சமாதனப்படுத்த, அமைதியாகவே நின்றேன், பின் மெல்லத் தொண்டையைச் செறுமியவாறே “இல்லட்டி,  டிப்பார்ட்மென்ட்ல தான நானும் இருக்கேன். எல்லாம் புரியு. ஒரு ரெண்டு வருஷம் பல்ல கடிச்சிட்டு கடந்துருவோம். அப்புறம் பாப்போம். கொஞ்சம் டைம் கொடு. ஊரு காரன் எங்க அய்யாவ அடிச்சி போலீஸ் ஸ்டேசன்ல விட்டப்போ போலீசும் என்ன ஊர் குடிமகனுக்க மொவன்னு தான் கூப்புட்டு பேசிச்சு. அந்த தெருவுல எனக்க வீடு இருக்கணும். இது எனக்க வைராக்கியம்.” அமைதியானேன். அவளே, “பேசுற ஏதோ ஒருநாளும் சண்ட பிடிக்காண்டாம். சரி நாரோயில் பக்க வேல விசயமா போற மாரி இருக்கா?” கேட்டாள். “என்னய மூணு நாளு கொம்புவீரன்பட்டினம் முப்பிடாதி கோயில் கொடைக்குன்னி போட்டுட்டானுக, எஸ்.பி சாரே நேர்ல சொல்லிட்டாரு. அங்க பாத்தா நாலு வருசத்துக்கு இடையில நடக்கிர கொடைல கட்டாயம் ஒரு கொல வுழுகு. இந்த வாட்டி நான் மாட்டுனேன். எஸ்.பி இக்கன்னா வச்சி எஸ்.ஐ ஆக்கிடுவேன்னி சொல்லுகாரு. டிப்பார்ட்மெண்ட்ல என்ன நடக்கும்ன்னி அறியாதவனா நானு. எனக்கு ஊருப்பக்கம் போகவே முடியாது. வார்டன் சங்கரலிங்கம் சாரு புரிஞ்சிப்பாரு, ஊருக்கு போக நீ கேட்டுப்பாரேன்.” தயக்கத்தோடு கேட்டேன்.

மூக்கை உறிஞ்சவாறே, “அவருட்ட கேட்டுப்பாத்து முடியாதுன்னு சொன்னதுனாலதான் ஒங்ககிட்ட கேட்டேன். எப்படி சமாளிக்கணுமோ அப்படியே அவர சமாளிச்சுக்கேன்.” அவள் சொல்லவும் முதுகெலும்பே உடைந்து நொறுங்கியது, “எல்லாம் மேக்கர அம்ம பாத்துப்பா. அம்மா தாயே, எம்பிள்ளய பாத்துக்க. மீன் கொழம்பு ஃப்ரிஜ்ல இருக்கும், நேத்தைக்கு குதுப்பு கெடச்சு. சோறு காணாதுன்னா பொங்கிக்கோங்க.” வண்டியை வேகமாக முறுக்கியபடி சென்றாள். வீட்டிற்குச் சென்றதும் முதலில் குளித்து முடித்து, ஏற்கனவே உடுத்திருந்த காக்கி உடுப்போடு மேலும் ஒன்றை இருக்கட்டுமே என்று துணிப்பையில் சொறுகி வைத்தேன். பரோடுக்குச் செல்கையில் மட்டும் தான் காக்கி உடுப்பை அணிவது, மற்ற நேரம் கையில் கிடைக்கும் சட்டையும், காக்கி முழுக்கால் சட்டையும் தான். கட்டிலில் படுத்து கண் அயர்ந்தேன்.

நாலரை மணிக்கு வைத்திருந்த அலாரம் அடிக்கவும் எழுந்தேன். கை கால்களை அலம்பி, கொம்புவீரன்பட்டினத்திற்கு என்னுடைய ஹோண்டா ஷைனில் சென்றேன். புறவழிச் சாலையிலிருந்து இறங்கி ஊர் நோக்கிச் சென்ற சாலையின் இருபக்கமும் ஒடைமுள்ளும், சப்பாத்திக் கள்ளியும் வழி நெடுக வளர்ந்திருந்தன. கூனான்குளம் கடக்கவும் பொருஞையின் கருணையால் ஆறு செல்லும் கரைகளில் மட்டும் வழமையாக வாழையும், நெல்லும் செழித்திருந்தன. ஊர் வரும் முன்னே காதில் விழுந்த எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மனே இக்காலை வேளையில் கண்விழித்து இறங்கி வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று தோன்றியது.

மிகச் சிறிய கோயில்தான், ஆனால் திருவிழாவிற்காக கோயிலைச் சுற்றிலும் பந்தல் கட்டி, தரையெங்கும் கடல் மணல் வீசப்பட்டிருந்தது. பெரிய பெரிய ஒலிப்பெருக்கிகளில், சிலவற்றில் ஊஃபர் கிழிந்து காற்றின் பிதற்றலும் பாடலோடு சேர்ந்து ஒலிக்க, இன்னும் மூன்று நாட்கள் எப்படி சமாளிக்கப் போகிறேன் எனும் கிலி உண்டானது.

உடுத்திருந்த உடுப்பிற்குரிய மரியாதை, வெளுத்துப் போயிருந்த வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்த பெரியவர் தன்னை செந்தூரப்பாண்டியன் என்றும் ஊர்த்தலைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டு. எங்களுக்கு என ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு ஏற்கனவே இருவர் வந்துவிட்ட தகவலையும், அனுமதித்தால் தானே அங்கு கொண்டு விடுவதாகவும் சொல்லி என்னுடைய அனுமதியுமின்றி, பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். கோயிலில் இருந்து இரண்டு தெரு தள்ளி ஆற்றின் கரை தெரியும் வகையில் தெருமுனையில் இருந்த வீட்டிற்கு கூட்டிச் சென்றார்.

அங்கே ஏற்கனவே இரண்டாம் நிலை காவலர் சுயம்பும் துணைநிலை ஆய்வாளர் செல்லத்துரையும் வந்து சேர்ந்திருந்தார்கள்.  நான் வண்டியை நிறுத்தவும், “மணி பிள்ளே, நீ வாரேன்னி எஸ்.பி சொல்லவும் தான் நானும் இங்க எறங்கினேன். மணி வந்துட்டான் எம்பெருமானே! லேய் சொயம்பு காலைல என்ன ஆகாரம் கிடைக்கின்னி பாரு.” சொல்லிக்கொண்டே என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

                தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் சுற்றியிருந்தாலும் காலையிலேயே வெக்கை சூழ ஊரே தகித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. செல்லத்துரையிடம் ஊரைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்று மெல்ல விடைப்பெற்று ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கிடா வெட்டுக்காக நேர்ச்சைச் செய்யப்பட்ட ஆடுகளை பரந்து வளர்ந்திருந்த ஒடைமுள் மரத்தின் கீழ் கட்டியிருந்தார்கள். ஒவ்வொரு விதமாக கனைத்துக் கொண்டிருந்த ஆடுகள் கூறமுயற்சிப்பது ஒரே பொருளுடையதாகப் பட்டது.

ரேவதி படும் அவஸ்தைகள் நான் அறியாத ஒன்றல்ல. ஆண்களின் கைகள் ஓங்கியிருக்கும் துறைகளில் பணிபுரியும் பெண்கள் ஏன் ஆண்களை போல தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதை இவ்வேலையில் இணைந்தவுடன் புரிந்துகொண்டேன். ரேவதி அப்படிப்பட்ட சாமர்த்தியசாலியும் அல்ல, அவளால் எல்லாவற்றையும் சகிக்க முடியும், ஆனால் மறக்க முடியாது. பாப்பாவின் கொஞ்சல் குரலும் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க, மனம் போன போக்கிலே ஆற்றங்கரையை நோக்கி நடந்தேன். நீரின் சலனம் பழையாற்றில் சாடிக் குளிக்கும் சிறுவனை வெளிக்கொணர ஆரம்பித்தது. அம்பை பாவநாசத்தில் அடித்துப் பெய்யும் கோடைமழையால் கலங்கிய நீர் சலசலத்து ஓடியது. ஓடிப்போய் முங்கிக் குளிக்கத் தோன்றியது. உடுத்தியிருந்த உடையின் இறுக்கம் என்னைக் கட்டுப்படுத்தியது. ‘வ்வ்வு வவ் க்க்ர்’  வெள்ளைப்பஞ்சுப் போன்றொரு நாய்க்குட்டி எங்கிருந்து வந்ததோ, கால்களுக்கிடையே நுழைந்து பூட்ஸை நக்க முயற்சித்தது, சுதாகரித்து சட்டென்று தூக்க எத்தனித்தேன்.

                “ஸார், எனக்க குட்டி தான்.” குட்டியை அள்ளித் தூக்க அவள் குனியவும், நெஞ்சை ஒட்டியிருந்த சுடிதார் விலகி, மார்பின் பிளவு தெரிய சட்டென்று பதட்டமானேன்.  உள்ளாடை சுடிதாரிலிருந்து விலகி இருக்கும் பிரக்ஞையின்றி என்னிடம் பேச ஆரம்பித்தாள். மேலுதட்டின் மேலிருந்த மெல்லிய மயிர்கற்றைகளும், புருவமிணையும் இடத்தில் இட்டிருந்த குங்குமமும், சுடிதாரை தாண்டி முன்னே தொங்கிய மஞ்சள் கயிறும், நிதானிமின்றி நோட்டமிடவும் “சார நான் பாத்துருக்கேன். ஒரு பொம்பள பிள்ள உண்டுல்லா. அழகா பொம்மை மாரி இருக்கும். நா பஸ் ஸ்டாண்டல பேன்ஸி ஸ்டோர்ல தான் வேல பாக்கேன். உங்க பொண்டாட்டியும் போலீஸ் தான, எனக்கு ஞாபகம் இருக்கு.”  நிகழுக்குத் திரும்பினேன்.

                “பொமேரியனா? மிக்ஸ்டு டைப்பா? வித்தியாசமா இருக்கே” எதோ ஒன்று பேசவேண்டும் என்பது போல பேசினேன்.
“மிக்ஸ்டு தான் ஸார். இங்க சடை நாய்ன்னி சொல்லுவோம்.”
“எங்கூர்லயும் சடைன்னி தான் சொல்லுவோம். நானும் ஒன்ன சின்னதுல வளத்தேன்.”
“அதான பாத்தேன், யாருக்கிட்டயும் போகாதே, ஒங்க கிட்ட எப்படி வந்துச்சின்னு.” பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளுடைய அந்நேர இருப்பு ஏதோ ஒருவிதத்தில் அங்கிருக்கும் மூன்று நாளும் உதவலாம் என்று எண்ணினேன். கோயிலில் முதல்நாள் கொடை கழிகையில் கண்கள் அவளையே தேடின. பெரும்கூட்டத்தில் எங்கிருந்தாலும் தனியே தெரிந்தாள். செல்லத்துரைவும் நானும் கோயிலிலே இருக்க, சுயம்புவை எங்களுக்குத் தேவையான உணவு, சிகரெட், மது வாங்க பணியாளாய் மாற்றிக்கொண்டோம். அவனும் என்னுடைய குணம் அறிந்ததால் மறுக்காமல் சொன்னதை செய்தான். முதல் நாள் இரவு நாங்கள் மட்டும் கோயிலின் முன்னே அமர்ந்திருக்க, செந்தூரபாண்டியன் அங்கு வந்து என்னை மட்டும் தனியே அழைத்தார். ஏற்கனவே ஒரு பியர் அருந்தியிருந்தேன். அருகே செல்லவும், “நீ தாம்போ ஒரிஜினல் போலீஸாட்டும் தெரிய. எனக்கு ஆம்பிள புள்ள இருந்தா ஒனக்க வயசு தான் இருக்கும். வாயேன் ஒரு ஸ்மால் போடலாம்.” அழைத்தார். செல்லத்துரை தள்ளாட ஆரம்பித்திருந்தார். சுயம்பு பெருமணல்காரன் கல் போல அமர்ந்திருந்தான். அவனிடம் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு பெரியவருடன் ஆற்றங்கரையோரம் நடந்தேன்.

முதல் இரண்டு குவளைகள் பருகும் போது அமைதியாக ஊரின் கதையை, சுயசாதிப் பெருமைகளை பேசியவர், அதற்குப் பிறகு பிதற்ற ஆரம்பித்தார். அங்கிருந்து நகர முயற்சித்தேன். ஆனால் அவர் கொலை செய்யப்போகிறேன் என்று சொல்லவும் போலீஸ் குணம் முந்த அங்கேயே இருந்தேன்.

“ஒரே ஒரு கொலதான்ப்போ. செஞ்சுட்டு அடங்கிருவேன். கையும் காலும் பனத்தண்டாக்கும் கேட்டியா. பனயாக்கும். தெக்க நிக்க தெங்குன்னு நெனச்சானுவளோ. ங்கொம்மாளவோக்க.” சொல்லிவிட்டு நெஞ்சில் ஓங்கி அறைந்தார்.

“யாரன்னு சொன்னா! கேஸு இங்கயே முடிஞ்சிரும். அய்யா போலீஸாக்கும் முன்ன இருக்கது.”  கனிவாக சொல்ல முயற்சித்தேன்.

“அதாம்ல ஒங்கிட்டயே சொல்லுதேன்.” மூர்க்கமாகச் சொன்னார். குடித்திருக்கிறார், இருந்தாலும் இம்மாதிரியான தருணங்கள் அபாயகரமானவை. அவரை அமைதியாக்க முயற்சித்தேன். துடித்தார்.

இவ்வூர் பற்றிய கதையை சுயம்பு அவனுடைய பாட்டி சொல்லியதாய்ச் சொல்லி, நண்பகல் கொடையிலே ஓரளவிற்குச் சொல்லியிருந்தான். இவ்வூரிலிருந்த முப்பிடாதி கோயில் மண்ணெடுத்து இரண்டு கோயிலை கட்டினார்கள், ஒன்று பெருமணல் அருகே செம்மங்காடு எனும் சிற்றூரில் இருக்கிறது. இன்னொரு கோயில் திம்மராஜபுரம் பைபாஸ் திரும்பவும் மருதமரக் காட்டினிடையே பாழடைந்து கிடக்கிறது. அங்கே ஒரு மர அறுவை தொழிற்சாலை இருந்தது, இப்போது மூடப்பட்டிருக்கிறது.

‘நம்ம செவத்த முத்து கதயாக்கும் சொல்லப்போறேன். நெறஞ்ச வீரத்துக்கும் மாறாத கௌரவத்துக்கும் கொறையில்லாத அப்பனுக்கும் அம்மைக்கும் அண்ணன்மார் அஞ்சி இருந்த  குடும்பத்துல ஆறாது பொறந்த மகராசியாக்கும் நம்ம செவத்த முத்து. பொறக்கும் போது சுண்டுன இரத்தமாட்டும் நிறம் அவளுக்கு. சமஞ்சு பொறவு கையும் காலும் ஊரார் பார்த்தது இல்ல. முகமும் முழியும் அண்ணன்மார் பார்த்தது இல்ல. அம்ம அப்படியாக்கும்  வளக்க , அவளும் அப்படித்தான் வாழ்ந்தா. அப்பனும் அம்மையும் கொடுக்காத செல்லமில்ல. அண்ணன்மார்  வாங்கிக் கொடுக்காத செல்வமில்ல. அப்பனும் அம்மையும் ஓராளுக்கு இன்னொருத்தர் உசுராய் வாழ, அப்பா ஒரு நாளு பரலோகம் போக. அம்ம வீட்டோடு ஒடுங்கிப்போனா.  அப்பாக்கு செத்த வீட்டு சடங்கு நடந்த அன்னைக்குத்தான் ஊரே செவத்த முத்த பாத்துச்சு. செத்த வீட்டு சடங்கு கழிக்க வந்த பய அவள பாக்கவும் மயங்கி கிறங்கி போனான். ஏழு நாள் சடங்குல ஏழு விதமா மயக்குனான். எட்டாம் நாளு சடங்குல அவன் கூட அவளே எறங்கிப் போக . அம்மாவும்  அண்ணன்மாறும் ஏங்கிப் போவ. அண்ணன்மாறு காலுல வுழுந்து கெஞ்சினானுவ. அசரல அவ. அண்ணன்மாரு அஞ்சி பேரும் அந்த பய காலுக்கு கீழ கூட வுழுந்து புரண்டாலும், குடும்ப பெரும சீரழிக்க வந்த பய எறங்கி போகலயே. மாறா என்ன பண்ணான் தெரியுமா! அஞ்சு பேருக்கும் நீங்க சொல்லத கேக்கணும்ன்னா இந்த பழத்த தின்னுங்கன்னி மலவாழப் பழத்துல அஞ்சு விதமா வெஷம் வச்சு கொடுத்தான். தங்கச்சி குலப் பெரும காக்க திரும்பி வரணும்ன்னி அஞ்சி பேரும் தின்னு செத்தானுக. வெசயம் அறிஞ்ச தங்கச்சி கோவம் தீராமா வெசம் வச்ச பயல, கையாலாயே அரிஞ்சி தின்னா. அவளே முப்பிடாதியா ஆயி, குலப்பெரும காக்க நம்ம அம்மயாட்டு காத்து நிக்கா!’

பெரியவர் கீழே சுருண்டு கிடக்க அவரை எழுப்ப பெரும்பாடு ஆனது. கோயிலில் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருக்க ஊரார் சிலர் எப்படியோ விசயம் அறிந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு அவரை எழுப்பிச் சென்றனர். இதே மாதிரி ஒரு முப்பிடாதி கதையில், முடிவை மட்டும் என்னுடைய அம்மா இரவில் என்னை மார்போடு அணைத்தபடி வேறுமாதிரி சொல்லியிருந்தாள்.

‘செல்ல மவளாட்டும் வளத்த தங்கச்சி செத்தவீட்டு சடங்கு கழிக்க வந்த ஊர்குடிமொவன் பய கூட எறங்கி போயிட்டான்னு அண்ணன் அஞ்சி பேரும் ஒறங்கல்ல. அம்மயும் ஒரு வாயி திங்கல்ல. ஒரு நாளாச்சி ரெண்டு நாளாச்சி மூணு நாளாச்சி. பொட்டப் புள்ள ஒருத்தின்னி பாசம் வெச்சு வளத்தோமே! எச்சக்கல பயளப் பாத்தா எறங்கிப் போனா! கோவம் அடங்கல்ல. அவ உயிரோட இருக்க வர குலப்பெரும உண்டா! இல்ல எனத்தான்ல மரியாத தான் உண்டா! அப்பனும் அம்மயும் அழுது தீத்தா. அண்ணன் அஞ்சிப் பேரும் அவ ஊர விட்டு தாமிரவருணி ஆத்தங்கரயோரம் அவனுக்க ஊரார் உடன்பிறந்தார் எடத்துல ஒதுங்கியிருந்த எடம் அறிஞ்சி, ஒத்த பொம்பள பிள்ள, ஒம்மேல் வச்சா பாசம் தான் குறையுமா! இன்னைக்கு ராத்திரி உங்கூட இருக்க, நாளக்கே ஊருக்கு போயி கல்யாணம் பண்ணி வைக்கேன்னி கெஞ்ச, எல்லாம் மனசிறங்கி,  ஒரு இராத்திரி நிம்மதியாட்டு. உறங்க. அம்ம அறிய, ஊருக்கே தீ வச்சான் அண்ணன்மாரு அஞ்சி பேரும். காரணம் அறியாம கருஞ்சி போச்சு எல்லாமே. அவ அறியாம போவாளா அத. பாதி கறிஞ்சிப் போன மிச்சப் பொணமா ஊருக்கு வந்தவ, சாதிசனம் எல்லாத்தையும் சாவம் வுட்டு அழிச்சா. மிச்சம் உள்ள கொஞ்சம் பேரு, சாமியாட்டு வணங்க. எறங்கிப் போனா. மருதகாட்டு கரையோரம் ஒத்தையா நின்ன வேப்பமரத்துக்கு முன்ன சாம்பலா கரஞ்சி போனா. அவள கூட்டிபோன அந்தப் பயலுக்க ஊராரெல்லாம் கெழக்க கடக்கரையோரமா போயி ஒதுங்கிட்டாம்.’

என்னுடைய உள்ளுணர்வெல்லாம் இதற்குப் பிறகு கொஞ்சம் விழிப்படைந்தது. செல்லத்துரையிடமும் சுயம்புவிடமும் காலையில் நான் கண்ட இளம்பெண்ணும் இப்பெரியவரும் அப்பா மகளாக இருக்கக்கூடும் என ஊகிக்கிறேன் எனவும் அவளுடைய கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிறுக்கு யார் காரணம் என்றும் ஊரில் விசாரிக்கச் சொன்னேன். பெரியவர் கொல்லப் போவதாகச் சொல்லியதையும் சொன்னேன். செல்லத்துரை நிற்க கூட இயலாமல் கதையைக் முழுதாய்க் கேட்கும் முன்னரே உறங்கிப் போனார். சுயம்பு விசாரித்து வருவதாகச் சொல்லிவிட்டு இறங்கிப் போனான்.

ஏற்கனவே குடித்திருக்கிறேன், எல்லாக் கதைகளும் ஒருசேர சோர்வுற்றுப் போனேன். இதற்கிடையே ரேவதி அழைத்து சங்கரபாண்டியன் ஊருக்குச் செல்ல அனுமதித்துவிட்டார் எனச் சொன்னாள். ஒலித்துக் கொண்டிருந்த வில்லுப்பாட்டில் எப்படி உறங்கினேன் என்ற நினைவில்லை. சுயம்பு என்னை அழைக்கவும் அடுத்த நாள் விடிந்துவிட்டதை உணர்ந்தேன். அப்பெரியவரால் அப்படியொன்றும் அந்த இளம்பெண்ணை கொல்ல முடியாது எனவும் அவருடைய மகள் காதலித்து மணம் புரிந்தவள் அவருடைய சொந்தச் சாதியைச் சேர்ந்தவன் தான் என்று அவன் சொல்லவும் மிகவும் குழம்பிப்போனேன். யாரைத் தான் இவர் கொல்ல உத்தேசித்திருந்தார் என அவரிடம் கேட்டிருந்தால் நேற்றைய நிலைமைக்கு அவர் சொல்லியிருக்கக் கூடும். அவ்வீட்டில் இருந்த சிறிய குளியலறையிலே குளித்து காக்கி உடையை உடுத்தி நேராக திம்மராஜபுரம் காவல்நிலையம் சென்று இவ்வூரின் பழைய குற்றப்பிண்ணனியைக் கேட்டறிந்து, ஏனோ முப்பிடாதி கதையை கேட்டு வேறுதிசையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்ட என்னை நானே கடிந்து கொண்டேன். மீண்டும் கொம்புவீரன்பட்டினம் செல்கையில் நாங்கள் தங்கியிருந்த  வீட்டினருகே செந்தூரபாண்டியன் ஏற்கனவே எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

“குடிச்சு பழய கதைய பேசிட்டேன். சார் மன்னிக்கணும்,” என்றார்.

பொய்யானப் புன்னகையை முகத்தில் வரவழைத்து அவரை அங்கிருந்து கிளம்பச் செய்தேன். நடந்து சென்றவர் மெல்லத் திரும்பி, “எம்பிள்ள போல சொல்லுதேன். இந்த வாட்டி கொல எதுவும் நடக்காம போயிரணும். இந்த கோயிலுக்க விதி, ஒவ்வொரு கொடைக்கும் ஒரு கொல நடக்கு. எல்லாம் யாரார் செஞ்ச பாவமோ.” சொல்லிவிட்டு விருட்டென்று நடந்தார்.

பகல் முழுக்க கோயிலிலேயே இருந்தேன். மாலை வரையிலும் அந்த இளம்பெண்ணும்  அவளுடைய அம்மாவும் கோயிலிலேயே இருக்க . சுயம்புவை அழைத்து பெரியவரைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். காலையில் இருந்து குடிக்க ஆரம்பித்தவர் நிதானமின்றி ஆற்றங்கரையோரம் கிடக்கிறார் எனச் சொல்லவும், சுயம்புவை அவரை மட்டுமே நோட்டமிடச் சொல்லி செல்லத்துரையுடன் கோயிலிலேயே இருந்தேன் அந்தி கறுக்க ஆரம்பிக்கவும் நான் எதிர்பாராமல் இருக்க, அந்த இளம்பெண் எதிரே வந்து பேச ஆரம்பித்தாள். கூடவே மெல்லிய உடல்வாகு உடைய அந்த இளைஞனும் நின்றான். அவள் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் அவனையே உற்றுநோக்கினேன். ஏற்கனவே அறிந்த முகம், நெல்லையப்பர் கோயில் முன்னே ஒருவழிப்பாதையில் நான் முன்னே பணியில் நின்றிருந்த போது கஞ்சா போதையில் இருச்சக்கர வாகனத்தில் வந்து சாலையில் விழுந்து, என்னிடம் அடி வாங்கியவன். என்னிடம் அடி வாங்கியவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் என்னை மறக்க முடியாது. என்னைப் பார்த்தவன் பொய்யாய் சிரிக்க முயற்சித்தான். என்முன்னே பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் மீது பரிவு ஏற்பட ஆரம்பித்தது.

“அப்பா அப்படித்தான் சார் என்னல்லாமோ ஒளரும். நீங்க ஒன்னும் அவர தப்பா நெனச்சுக்கிடாதீங்க. அம்மதான் பாவம், நீங்க எங்க அவர போலீஸ் ஸ்டேஷன் பிடிச்சிட்டுபோயிருவேங்களோன்னி பயப்படுகு.” இப்போதும் அவளுடைய மேலுள்ளாடையில் ஸ்ட்ராப் வெளியே தெரிவதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இளைஞன் என் முன்னே கூனிக்குறுகியபடி நின்றான். என்னையறியாமல் இவன் மேலே ஏதாவது வழக்கு இருக்குமா! என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் மெல்ல விடைபெற, அவன் மட்டும் எதையோ மறைப்பவன் போல ஒளிந்து ஒளிந்து விலகினான். செல்லத்துரையிடம் அந்தப் பயல் மேல் ஒரு கண்ணிருக்கட்டும் என்றேன்.

இரண்டாம் நாள், இரவு பூஜை முடியும் போது செந்தூரபாண்டியனும் அப்பெண்ணும் அவரவர் வீடு சென்றடைந்ததையும், அந்தப் பயல் அன்றைக்கு வீட்டிற்க்குச் செல்லவில்லை என்பதை அறிந்தப் பிறகே மதுவருந்த ஆரம்பித்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏதேனும் நடந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதே என்னை ஆசுவாசபடுத்தியது. பாப்பாவும் ரேவதியும் வீடியோ காலில் வந்தார்கள். அடுத்தநாள், கடைசி நாள் கொடை முடியவும், நானும் நாகர்கோயில் வீட்டிற்கு வருவேன் என்று இருவரிடமும் சொல்ல பாப்பா குதூகலித்தாள்.

விடிகையில் கொஞ்சம் நம்பிக்கையாகவே உணர்ந்தேன். ஆற்றுக்குச் சென்று முங்கிக் குளித்து திரும்பினேன். இந்த ஊரில் நண்பகலில் கிடாவெட்டு நடக்கும், அத்தோடு கொடை முடிந்தது. ஒடைமுள் மரத்தின் கீழ் கட்டியிருந்த கிடாவை எல்லாம் கோயிலுக்கு முன்னே அவரவராய் நேர்த்திக் கடனுக்காக விட்டவர்கள் கோயிலின் அருகே ஓர் ஒழுங்கில் இழுத்து வந்தார்கள். நான், செல்லத்துரை, சுயம்பு மூவரும் கோயிலின் முன்னே நின்றிருந்தோம். சட்டென்று கோயிலின் முன்னே நின்றுகொண்டிருந்த சிலர் பதற ஆரம்பிக்க, நானும் கால்கள் பரபரக்க அந்த இளம்பெண்ணின் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என் எதிரே அந்தப் பயல் இன்னொரு தெரு பக்கமாய் ஓட ஆரம்பிக்க, அவனைத் துரத்திப் பிடித்தேன். அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட் இறுக்கமாகி விடைப்பாக நிற்க, கையிலிருந்த லத்தியால் அதில் ஓங்கி அடித்தேன். ‘டிங்க் டிங்க்’ எனும் சத்தம் கேட்டது. அவனுடைய முகம் வியர்த்துக் கொட்டியது. உதடுகள் நடுங்க ஏதோ உளறினான்.

“என்னல சொருவி வச்சுருக்க.” வலது கையை ஓங்கவும்,

“சார்  இது எனக்க சேப்டிக்கு,” இடுப்பினிடையே கையை விட்டு நீண்ட வாள் ஒன்றை உருவி எடுத்தான்.

“என்னல ஆச்சி” கத்தினேன்.

“என்னயயும் கொல்லுவாங்க,” ஓட எத்தனிக்க. என் பின்னே வந்த சுயம்பு அவனுடைய கையில் இருந்த வாளை தட்டிவிட்டு, “செல்லத்துரை சார், ஒத்தைக்கு நிக்காங்க, நீங்க அங்க போங்க,” என்றான்.

அங்கே ஓடினேன். நான் சுதாகரித்து இருக்கவேண்டும். வெளியே நான் எதிர்பார்த்து இருந்தது போல, பீறிட்ட இரத்தம் சிதறி சிவந்த முத்துகளாகி சுடுமண்ணில் கிடக்க, பெரியவர் செந்தூரபாண்டியன் அம்மண்ணில் புரண்டு அழுதபடி கிடந்தார். என் நெஞ்சில் கனமேறி அடைக்க, மண்டை சூடேற அவரை எழுப்பி நிறுத்தினேன்.

“எம்பொண்ணு சார். வேண்டாம் வேண்டாம்ன்னி சொன்னேன் சவத்துமூதி கேக்கலையே” தலையில் அடித்தபடி வாயில் சழுவை வடிய மீண்டும் தரையில் விழுந்தார்.

தலை துண்டித்திக் கிடக்க. முண்டத்தில் இருந்து பாய்ந்த இரத்தம், சுடுமண்ணில் திடத்திரவமற்று பாகு போல அப்பி இரத்தச் சூட்டில் மெல்ல அசைந்தது. நான் மீண்டும் கோபம் கொப்பளிக்க பெரியவரின் அருகே செல்ல, செல்லத்துரை என்னை உலுக்கி, “செஞ்சது அம்மையாக்கும்” என்றார்.

முகம் முழுக்க மஞ்சணை பூசியிருந்த இசக்கி போல அவளுடைய அம்மை எதிரே நிற்க, வெட்டரிவாள் தூரமாகக் கிடந்தது. “தராதரம் வேண்டாம்.  முண்டைக்கு.” அவளுடைய உதடுகள் முனகின. மனம் முழுக்க ஒருவித பயம் அப்ப, கால்கள் கனக்க ஆரம்பித்தன. இருந்தாலும் வேலைக்குரிய தோரணையில், “என்ன பொம்பளட்டி நீ”, என்று கத்தினேன். அவள் மெதுவாக என்னருகே வந்து, “இந்த கெழவன்ட்ட சொன்னேன் நீறு கொல்லும்ன்னி, என்னய கொல்லவச்சுட்டான். எனக்க தங்கக்குடமே! எனக்க குலப்பெருமையே!,” பீறிட்ட அழுகையால் மூச்சை அடக்கி மீண்டும் பேச ஆரம்பிக்கவும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்.

***

வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது நூல்கள் ’பட்டர் பீ & பிற கதைகள்’ராம மந்திரம்’. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

Vairavan
Vairavan
வைரவன் லெ ரா-வின் சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். சிறுகதைகள் எழுதிவருகிறார், அவை பதாகை, சொல்வனம், கனலி, அரூ இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here