ந. ரஞ்சித்குமார்
(ஷகி பெய்ன் – டக்ளஸ் ஸ்டூவர்ட் – தமிழில்: ஜி.குப்புசாமி)
புனைவு வாசிப்புச் செயல்பாட்டில் வாசகர் எதிர்கொள்ளும் சில பொருட்படுத்தத்தக்க சிக்கல்கள் இருக்கின்றன. நம்மால் புரிந்துகொள்ள முடியாத அல்லது புரிந்துகொள்ள முடிந்தும் ஏற்றுக்கொள்ள இயலாத கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் நம்மைத் தொந்தரவு செய்யும் அகச்சிக்கல்கள் அவை. புனைவின் யதார்த்தமும் வாசகரின் நடப்பு பற்றிய புரிதலுக்கும் இடையே நடக்கும் இடையறாத முரணியக்கம் உண்டாக்கும் தொந்தரவு அது. ஒரு தரமான இலக்கியப் படைப்புக்கு மிக அவசியமான கூறாகவும் இதைப் பார்க்கலாம்.
பொதுவாக நாவலின் முன்னுரையைத் தவிர்ப்பவர்களாக இருந்தால் இந்நாவலுக்குள் நுழையும் முன்பு முன்னுரையைப் படித்துவிடுவதே உகந்தது. கதை சித்தரிக்கப்படும் காலகட்டத்தைய வரலாற்றுப் பின்னணி ஓரளவுக்குத் தெரிந்தாலொழிய கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் நேர்வதை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த வரலாற்றுப் பின்னணியின் தாக்கம் நாவலுக்குள் ஆங்காங்கே வெகு சில தருணங்களில் மட்டுமே வெளிப்படையாகத் துலங்குகிறதே அன்றி நாவலின் பிரதானச் சூழலாக பெரிதாக எங்கும் சித்தரிக்கப்பட்டிருப்பதில்லை.
ஒரு துர்க்கற்பனை (Dystopian) நாவலைப் படிக்கும் உணர்வே இந்நாவலை வாசிக்கையில் ஏற்படுகிறது. ஆனால் வழக்கமான துர்க்கற்பனை வகைமையிலான நாவல்களைப் போல கதைக்களத்தின் புறச்சூழல் பற்றிய விவரிப்புகள் இந்நாவலுக்குள் பெரிதாக இருப்பதில்லை. கதையில் நாம் காண்பது பாதிப்பின் விளைவுகளை மட்டுமே; காரணங்களை அல்ல. புறச்சூழல் பின்னணிக் காரணங்களை நாவலில் எங்குமே ஆசிரியர் முன்னிலைப் படுத்தியிருக்கவில்லை. அது இந்நாவலின் தனித்துவமான குரலுக்கு எந்த அளவுக்கு வலுசேர்த்திருக்கிறது என்பதும் நாவலின் பாதியில் தான் விளங்குகிறது.
நாவலின் அகக்குரலை புறக்காரணிகளின் சாயமேற்றாமல் கதைக்களத்தின் இயல்பிலேயே வெளிப்பட அனுமதிக்கிறார் ஆசிரியர். அவசியமான இடமிருந்தும் ஆசிரியரின் குரல் நாவலில் எங்கும் உரத்து ஒலிப்பதில்லை. நிலைகுலைய வைக்கும் தருணங்கள் கூட அடங்கிய தொனியில் சொல்லப்படுகின்றன. எதிர்வினையாற்ற முடியாத மௌனங்களையும் அடுத்து என்ன அசம்பாவிதம் நிகழுமோ என்ற பதட்டத்தையும் நாவல் நெடுகிலும் பிரக்ஞையில் நினைவுறுத்தியவாறே இருக்கிறது கதைசொல்லலின் தொனி.
இதுதான் கதை என்று புறவயமான பார்வையில் இந்நூலை அணுகுவது இங்கு அபத்தமாக இருக்கும். மேலே சொன்னது போல ஒரு டிஸ்டோபியன் நாவலை வாசிக்கும் உணர்வைத் தரக் காரணம் இது கொண்டிருக்கும் புகார்களற்ற மௌனம்!. ஆதரவைப் கேட்டுப் பெறவோ கரிசனத்துக்கு இறைஞ்சவோ முனையாத நிர்க்கதியான மௌனம். சரி தவறுகளைத் தீர்மானிக்கும் அறத்தின் அளவுகோல் இங்கு செல்லுபடியாகாது. இப்படியான சூழலுக்குத் தள்ளப்படும் வாழ்க்கை முறை இவ்வாறாகத்தான் இருக்கும்.
1980களில் ஸ்காட்லாந்தின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அரசாங்கத்தால் மூடப்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதன் தொடர் விளைவாக இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிக்கிறது. வாரம் ஒரு முறை கிடைத்து வரும் சொற்பமான அரசு மானியத்தை குடும்பப் பெண்கள் ஒரேநாளில் குடித்தே தீர்க்கிறார்கள். ஆண்கள் கவலைகளின்றி சுய மோகத்தில் தறிகெட்டுத் திரிகிறார்கள். பரிதாபமான வாழ்க்கைச் சூழல் இன்னும் பலவிதமான சீர்கேடுகளுக்கு உள்ளாகிறது.
நாவலில் பக்கம் பக்கமாக விவரித்துச் செல்லத் தக்க உணர்ச்சிகரமான தருணங்கள் பல இருக்கின்றன. அப்படியான இடங்களும் குறைவான சொற்களில் நீடித்த மௌனத்தில் ஆழ்த்தி விடுகிறது. எந்நேரமும் துர்ச்சம்பவத்தை எதிர்பார்க்க வைத்திருக்கும் தொனியும் ஆர்ப்பாட்டமில்லாத உயிரோட்டமான மொழியும் இதை சாத்தியமாக்குகிறது.
ஜி.குப்புசாமி அவர்களின் மொழியாக்கம் மீது எப்போதும் கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு உண்டு. அது இந்த நாவலில் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. வெளிப்படையாக விவரிக்கப்படாத மௌன ஆழங்கள் நிறைந்த பிரதி இது. சொல்லப்படுவதை மொழிபெயர்ப்பது சவால் என்றால் இங்கே பிரதி பேணும் ஆழமான ‘மௌன’த்தை பிசகாமல் தமிழிலும் கடத்துவது இன்னும் கூடுதலான சவால்.
ஒரு உதாரண நிகழ்வை மட்டும் குறிப்பிடுகிறேன். ஆரம்பம் முதலே கண்ணியமான குடும்பத் தலைவராக ஆக்னெஸின் தந்தை சித்தரிக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்று தாயகம் திரும்பியவர். ஊதாரித்தனமான ஆடவர்களைப் போலல்லாது இளமை இருக்கும் போதே குடும்பத்துக்காக கடினமாக உழைத்து இல்வாழ்க்கையை குறைவின்றி நடத்தியவர். அப்பழுக்கற்ற கௌரவமான சமூக அந்தஸ்தைப் பேணி வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் மரணப்படுக்கையில் இருக்கும் தருணத்தில் குற்றவுணர்ச்சி நெஞ்சை அழுத்த கண்ணீரோடு அருகில் அமர்ந்திருக்கும் ஆக்னெஸிடம் அவளது தந்தையின் இதுவரை சொல்லப்படாத அதிர்ச்சியூட்டும் கடந்த கால ரகசியம் ஒன்றை தாய் லிஸ்ஸி மனம் திறக்கிறார்!, அதன் முடிவாக வருவது “குழந்தையா? எந்தக் குழந்தை?” என்ற மூன்றே வார்த்தைகள் தான். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வு நாவல் முடிந்த பிறகும் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக அங்கிருந்து நிதானமாக வாசிப்பைத் தொடரும் முன்பு ஒரு பேரமைதி தேவைப்பட்டது!.
அதேபோல ஆக்னெஸ் ஒரு மனஸ்தாபத்தைத் தொடர்ந்து அவளது தாயுடன் சமரசமாக முயற்சிக்கும் பகுதி, காணாமல் போன ஆக்னெஸைத் தேடி செய்வதறியாமல் சிறுவன் ஷகி தனியாக மதுவிடுதிகளுக்கு அலையும் பகுதி, நாவலின் இறுதியில் தனிமையின் மொத்த பாரமும் அழுத்த ஷகி பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தவாறு கிளாஸ்கோ நகரின் வெளியே தெரியும் காட்சிகளை அவதானித்தபடியே நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் பகுதி என சித்திரத்தைப் போல மனதில் பதிந்த ஏராளமான தருணங்கள் நூலில் இருக்கின்றன. தீவிர உணர்ச்சிகளை வண்ணங்களாகக் குழைத்து வரையப்பட்ட ஓவியத்தை அவதானிப்பது போன்றே இப்பகுதிகள் மனதில் பதிகின்றன. வாசிப்புக்குப் பிறகு காலங்கள் கடந்தாலும் மனதை விட்டு அகலாத சம்பவங்களில் இப்படியான ஓவியத்தன்மை பொதிந்திருக்கும்.
கதையில் இடம்பெறும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் சாதாரண பாமரக் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். உலக நடப்பு பற்றியோ தங்களுடைய அவலமான நிலைக்குக் காரணமான அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வையோ அவர்களின் சிந்தனையிலும் பேச்சிலும் வெளிப்படுவதில்லை. அன்றாட இயல்பு வாழ்க்கையின் மீது மட்டுமே அவர்கள் பற்று கொண்டவர்கள். எந்நேரமும் உடைந்துவிடக்கூடிய நீர்க்குமிழி போன்றே அவர்களின் சொற்பமான சந்தோஷங்களும் நீடிக்கின்றன. அவர்களின் உளவியல் தன்மை அவர்களுக்கு விதிக்கப்பட்ட சூழலையேப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பெரும்பாலும் அவர்களிடம் எதிர்காலம் குறித்த எந்தவிதக் கனவுகளும் ஆசைகளும் இருப்பதில்லை (ஷகியின் அண்ணன் லீக் போன்ற ஒருசிலர் மட்டும் விதிவிலக்கு). தங்களைச் சூழ்ந்த சகிக்க முடியாத வட்டத்துக்குள் தங்களைப் பொருத்தக் கற்றுக்கொண்டவர்கள். அதிலேயே வெந்து தணிபவர்கள். கட்டுப்பாடில்லாத போதைப் பழக்கமும், தறிகெட்ட உறவுப் பிணைப்புகளும் சர்வ சாதாரணமாக அவர்களுக்குள் மலிந்திருக்கின்றன. தங்களின் அலங்கோலமான வாழ்க்கையை மூர்க்கத்தனமாக சபித்துக்கொண்டே அதை யதார்த்தமாகவும் ஏற்று வாழப் பழகியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களின் வீழ்ச்சியை எங்குமே நியாயப்படுத்தாமல் அதேசமயம் சூழலின் மீதான விமர்சனப் பார்வையையும் மறைபொருளாக உணர்த்துவதைச் சாத்தியமாக்கிய விதத்தில் தான் இந்நாவலுக்குக் கிடைத்துள்ள உயரிய இலக்கிய அந்தஸ்துக்கான வெகுமதி அடங்கியிருக்கிறது.
ஷகியுடன் ஒரு அண்ணன் ஒரு அக்காவைச் சேர்த்து ஆக்னெஸிற்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். ஒட்டுமொத்த உறவுகளும் ஒவ்வொரு கட்டத்தில் ஆக்னெஸை விட்டுப் பிரிகிறார்கள். அவளின் கடைசி மூச்சு வரை ஷகி மட்டுமே அவளுடன் இருக்கிறான். தந்தை தாய் மகன் மகள் காதலர்கள் என பலராலும் ஒவ்வொரு கட்டத்தில் முழுமையாக வெறுத்து ஒதுக்கப்படுகிறாள் ஆக்னெஸ். எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும் அதற்கு எந்த வகையிலும் ஆக்னெஸ் பொறுப்பல்ல என்று அவள் மீது பச்சாதாப உணர்வை நாவல் எங்குமே தோற்றுவிப்பதில்லை.
சூழல் காரணத்தை ஒருவகையில் ஆக்னெஸ் தனது சொந்த சந்தோஷங்களுக்கு இரையாகவேப் பயன்படுத்துகிறாள். திருமணம் செய்து கொண்டவனைக் காரணமின்றி பிரிந்து உல்லாசப் போக்கிரி ஒருவனிடம் காதலில் விழுகிறாள். அதுவும் நரகமாக மாறுகிறது. ஏமாற்றம் தலைக்கேறுவதை விரட்ட எந்நேரமும் தொடரும் மதுப்பழக்கம் அவளது சிந்தனைகளையும் உணர்வுகளையும் மரத்துப்போகச் செய்கிறது. அவ்வப்போது அவளுக்குள் தலைதூக்கும் நல்லுணர்வுகளும் சடுதியில் படுமோசமான விளைவுகளில் முடியும் படியான நிச்சயமின்மையால் திரிபடைகின்றன.. பல உல்லாசக் கொண்டாட்டங்களில் தன்னிலை மறந்து திரிகிறாள். எதிலும் நீடித்த நாட்டமில்லாத அல்லாட்டத்தில் வெகு விரைவிலேயே அலுப்பும் சோர்வும் மட்டுமே மண்டிய வாழ்வின் கடைசிக் கட்டத்தை அடைகிறாள்.
நாவலில் எங்கும் ஆக்னெஸின் அழகு பற்றிய வர்ணனை வருவதில்லை. அவள் ஒரு பேரழகி என்பது அவளுடன் தொடர்புடைய ஏனைய கதாபாத்திரங்களின் பார்வைகளின் வழியாக அவதானிக்கிறோம். ஆக்னெஸ் என்ற ஆளுமைக்கு நாவலுக்குள்ளேயே பல பரிமாணங்கள் இருக்கின்றன. போரில் இருந்து திரும்பிய தந்தைக்கு அப்போது சிறுமியாக இருக்கும் தன் மகள் ஒரு பரிசுத்தமான தேவதை. பின்னாளில் அறிமுகமாகும் இளமையும் துடிப்பும் கொண்ட காதலனுக்கு அவள் ஒரு வசீகரமான அடங்காப்பிடாரி. சுற்றத்தாருக்கு அவள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமைசாலியான ஒரு வேசை. ஆனால் ஷகியின் பார்வையில் அவள் அம்மா ஒரு மகத்தான பெண்.
உலகமே கைவிட்டாலும் ஷகி தன் அம்மாவை விட்டு அகலாமல் கண்பார்வையில் வைத்து பார்த்துக்கொள்கிறான். மகனுக்கு அம்மாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய அரவணைப்பும் வாஞ்சையும் பாதுகாப்பும் தலைமாற்றாக மகனிடம் இருந்து அம்மாவுக்கு கிடைக்கிறது. அவளுக்காக அவமானங்களைப் பொறுத்துக் கொள்கிறான், பசியைப் பொறுத்துக் கொள்கிறான், இரவுகளில் அம்மாவைத் தேடி நகரத்து மதுவிடுதிகளாக அலைகிறான், படிப்பைத் தொடர முடியாமல் போகிறது, சிறுவர்களின் ஏளனங்களுக்கு ஆளாகிறான். இத்தனை இருந்தும் அவனுக்குத் தன் அம்மாவின் மீது சிறு புகாரும் இருப்பதில்லை.
ஒரு அதிர்ச்சியூட்டும் தருணத்தில் நினைவிழந்து போன ஆக்னெஸின் ஆடைகளை நேர்த்தியாக அணிவித்து அவளுக்குப் பிடித்தமான ஒப்பனைகளை செய்வித்து அவளின் தோற்றத்தில் கௌரவத்தை மீட்டுத் தக்கவைக்க ஷகி முயற்சிக்கும் பகுதி ஒன்று நாவலில் இருக்கிறது. உலக இலக்கியங்கள் அனைத்திலும் மீண்டும் மீண்டும் விவாதங்களிலும் உரையாடல்களிலும் நினைவுகூறப்படும் மிக அரிதான ஒப்பற்ற தருணங்கள் என சில இருக்கும். ஒட்டுமொத்த நாவலின் உச்சமாக அப்பகுதி இருக்கும். இந்நாவலில் வரும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதி அப்படியான ஒரு உதாரண நிகழ்வு! ஷகிக்கும் ஆக்னெஸுக்கும் இடையேயான இணக்கத்துக்கு நிகரான தாய் மகன் உறவு வேறொரு படைப்பில் இலக்கியத்தில் பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஷகியைப் பிரதானப்படுத்துவதாக தலைப்பிடப்பட்ட இந்நாவலின் பெரும்பகுதி உண்மையில் அவனது தாய் ஆக்னெஸின் அழைக்கழிப்புகளாகவே நிறைந்திருக்கிறது. பிரதான கதாப்பாத்திரத்துக்கு நாவலில் இடப்பட்ட மௌனம் எதற்காக? ஏனெனில் அது தான் ஷகி பெய்னின் குரல்! ஒருவகையில் இந்நாவல் ஷகியின் வெளிப்படுத்தாத உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட சமர்ப்பணம் என்றும் புரிந்துகொள்ளலாம்.
***
ந. ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com


