Monday, February 16, 2026

சதைக்கூடு….

ம.கண்ணம்மாள்

(செல்வக்குமார் பேச்சிமுத்து எழுதிய “கெளிமதம்” நாவலை முன்வைத்து…)

பெண் உடல், ஆண் உடலின் பாலின உறுப்புகள் உறுப்பின் பெயராக, இங்குப் பார்க்கப்படுவதில்லை. மாறாக, வசைச்சொல்லாகவும், கேலிக்குரியதாகவும் உள்ளதை இயல்பாகவே கதையிலிருக்கும்படி பொருத்திக் கொண்டு, அதன் போக்கிலேயே மனித உடல்களைக் களம் கண்டகதை. 

*

கடும் வெய்யிலில் அலையும் மனித உடல்கள் கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளும் நிகழ்வு விழாக்கள். இங்கும், முதலில் கோவில் திருவிழாவும், ஊரும், சாதியும் சாமியும் முன்னிறுத்தப்படுகின்றது. அந்தந்த நிலப்பகுதியின் உடற்திரள்களின் கொண்டாட்டமும், இக்கதையினைத் தொடங்குவதற்குமானச் சூழலுமாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

*

ஒரு அசைவினை உற்றுப்பார்த்தால், சில மரபான நடைமுறைகள் தென்படும். சமூகத்தின் வாழ்நிலங்கள் நீர், தீ, உணவு என்ற இம்மூன்றினாலும் அசைக்கப்படுபவை. மரபின் மிச்சங்களில் பண்பாடுகளில் மங்கலமென்பதை உணவிட்டுப்படைத்தலைக் கூறலாம். அதற்கான மூலப்பொருள் நீர், தீ, உணவு. இதில் தீயில் எரிந்த கொள்ளிக்கட்டை தான் கதையின் அடித்தளம்.

*

பொதுவாக, இயற்கையான உணர்வு காமம். காதலுணர்வும், அதனைச் சார்ந்ததனைத்தும் ஆண், பெண் இரு உடல்களுக்கும் தேவை. இதில் எவ்விதமானத் தடைகளும் கட்டுப்பாடுமன்றி இரு உடல்களும் தத்தம் விருப்பதத்திற்கேற்ப சமூகத்தில் இயங்கத்தொடங்கும் போது எச்சிக்கலுமில்லை. மாறாக, தவறு என்று சுட்டிக்காட்டி, தூற்றி மட்டுப்படுத்தி, கீழ்ப்படுத்தியச் சூழல் இக்கதைக்கானக் களமாக வெளியுலகில் அறியப்பட்டது.

*

ஒரு முதற்படைப்பில் செல்வக்குமார் பேச்சிமுத்து கதை உருவங்களின் பின் நின்று கூறவில்லை. கதைப்போக்கை, சிக்கலை, திரைக்கதை போன்று அடுத்தடுத்து என்ன நிகழப்போவதென்பதை நேரடியாக விவரணைக்குள் உட்படுத்துகின்றார். இங்கு கருத்தியலோ, ஆளுமையோ வாசிக்கும் போது தோன்றவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் என்னைப் பிசைந்தெடுத்த ஒரு கதை உருவம், அக்குரல், பிரச்சினையின் தீவிரம், கதை உருவத்தின் வழி சமூகத்தில், தன் நிலத்தில் நடக்கும் சிக்கலை அன்றாடம் காண்பதை மொழியின் துணையோடு வெளிப்படுத்திய நேர்த்தி மனதில் வந்து வந்து போனது. குறிப்பாக, கதை என்பது கலை. அழகியல், வெறும் மொழிச்சேர்ப்பு என்பதெல்லாம் தாண்டி, இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கூட ஒரு பெண் உடலின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான மூச்சுப்பாடுகளை கொடுந்துயரமாக எண்ண வைக்கின்றது. சொல்லப்போனால், பாதுகாப்பாக நான்கு சுவருக்குள் அடைப்பட்டுக் கிடப்பவர்களுக்கு இப்படியும் ஒரு கொடுந்துயரம் நடக்கின்றது என்பது தெரியவேண்டும்.

“கெளிமதம்” நாவலின் வழி ஒரு பெண் உடல் ராக்கம்மா என்ற பெயரோடு நாவல் முழுவதும் அக்கதை உருவம் தன் மீது கதையைத் தூக்கிக் கொண்டு நடக்கின்றது.

ராக்கம்மா என்ற பெண் உடல் இயல்பாக ஒரு ஆணை விரும்பித் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றாள். 

இத்திருமணம் நடந்திருந்தால் ராக்கம்மா என்ற ஒரு பெண் உடல் கண்ட பாலியல் இச்சைகள், தவிப்பு, முழுமையாக ஒருவரும் ராக்கம்மாவை அண்டாத மனநிலை, அன்றன்றையக் காட்சிகளுக்காக வரையப்பட்ட ஓவியம் போன்ற தின நிகழ்வுகளைக் காண நேரிடாமல் போயிருக்கும். கதையின் நிறைவாக வரும், கதையின் முடிவுக்காக ராக்கம்மாவிடமிருந்து விலக்கப்படும் ரகுவின் வெள்ளைவேட்டியில் தான் இறந்த போன ராக்கம்மா கட்டப்படுகின்றாள்.

ஒரு பேரிளம் பெண்ணைக் குழந்தையாக பாவித்துக் கட்டுதலாகப் படைப்பாளர் காட்டியிருப்பதும் நடப்பியலில் வாழும் மனித உடல்களைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்டு விட்டு நகர்கின்றார். பாடைக் கட்டவும்,தொட்டுத் தூக்கவும் அஞ்சிய மனித உடல்கள் சடலத்தைப் புணர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்கின்றனர். இல்லாத நோய்க்கு ராக்கம்மா, அலைக்களிக்கப்பட்ட மனநிலையைத் தந்த அத்தனை மனித உடல்களும் தன்னைத் தானே தீயிலிட்டுக் கொள்வது போன்ற உணர்வை அடைய வேண்டும்.

இங்கு, யாரும் யாரையும் சரி, தவறெனச் சொல்லி திருத்துவதற்குப் பிறக்கவில்லை. தேவையான மதிப்பும், சமமாகக் கருதுதலும் தீங்கிழைக்காமிலிருத்தலும் போன்ற செயற்பாடுகளே போதுமானது. இதைத் தாண்டி பெரிதாக எதுவுமேயில்லை.

ராக்கம்மா தன் தாய் தந்தையைளத் தவறாகப் பேசியதாலயே கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கின்றாள். அதனால் வரும் பிரச்சினையில் ஊர் விலக்கம் செய்யப்பட்டக் குடும்பமாக அவர்கள் வாழ்வு மாறுகின்றது. ராக்கம்மாவின் காதல் மறுக்கப்பட்டு, அதனைக் கேட்க முயல்கின்ற போது, விரும்பியவன் சொன்ன தேவுடியா என்ற வார்த்தை பின்னாட்களில் ராக்கம்மா பாலியல் களத்துக்குள் தம்மை உட்படுத்திக் கொண்டபோது, முருகனை நேருக்கு நேர் சந்திக்கின்ற போது தன்னை விட முருகனே துன்பப்பட்டிருக்கக்கூடிய தொன்றாகவே கருதினாள்.

திருமணத்திற்கு வயது ஒரு விஷயமல்ல. விருப்பமிருந்தால் வயது அதிகமுள்ளவரை மணக்கலாம். விருப்பமற்று, கட்டாயப்படுத்தி, பணத்துக்காக, பாலியல் தேவைக்காக நடக்கும் திருமணம் நிலைத்து நிற்க அவசியமில்லை. ராக்கம்மாவின் வாழ்வில் அது தான் நிகழ்ந்தது.

இது, ராக்கம்மாவின் மனதிற்கு அடுத்ததொரு ஆண் உடலைத் தேர்வுச் செய்ய இடமாகின்றது. காதலெனும் உணர்வு ஒரு உடல் இறப்பைத் தொடும் வரை வரும். உணரமுடியும். அதைத் தாண்டி வாழ்வதற்காக விருப்பமுடன் பாலியல் இச்சைகளுக்காக சாராயத்தின் துணையோடுத் தன்னை மாற்றிக் கொள்கின்றாள்.

இதற்குக் காரணம் இங்கு வாழும் எண்ணற்ற மனித உடல்களின் பழங்கருத்துகள், சந்தேகங்கள், பண்பாட்டுக் கூறுகளைத் தனக்கேற்றவாறு உட்படுத்துவது, வாய்மொழி மரபுகள், கடந்து போன வாழ்வு போன்றவற்றைக் கூறலாம். இதனை, மெல்ல மெல்ல பல உடல்களில் நாட்பொழுதுகளில் புகுத்தி அதன்படி நடக்க வைக்கின்றனர். அதில் நாட்டமும் கொள்கின்றனர். இதன் வழியாக அதனைக் குத்தி குத்தி தைப்பதில் குருதிக் கொட்டிக் கிடக்கும் உடல்கள் நிலத்திலுண்டு, அதிலொரு உடல் தான் ராக்கம்மா.

ராகம்மாவின் உடலைக் கைக்கொண்ட பலப்பல ஆண் உடல்களின் சாதிய வெளிப்பாடு, கிண்டல் தொனி, அந்தந்த நேரத்து மையல்கள், ராக்கம்மாவின் மேல் வைக்கப்படும் உரையாடல்கள், ராக்கம்மாவைச் சுற்றும் நெருக்கடிகள் போல்வனவெல்லாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய இடங்கள். இங்கு, புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ ஞாபகத்துக்கு வருகின்றது. விருப்பப்பட்டு பசியாற்றுவதற்கு, விருப்பப்பட்ட நபர்களுக்காக மாறிக்கொள்ளும் ராக்கம்மாவின் பாலியல் முடிவைப்பற்றிச் சொல்ல எதுவுமேயில்லை. குறிப்பாக, ராக்கம்மாவை கீழ்மைப்படுத்தி சதா அந்த உடலை நச்சரித்துப் பேசிய பேச்சுகள் மட்டுமே ‘கெளிமதமாக’ மாறியுள்ளது.

கதையில் வரும் வயதான நீலி உயிர் நீத்தவுடன் தனி ஆளாக ராக்கம்மா துக்க வீட்டின் பொறுப்பை ஏற்று செய்கின்ற போது, தான் இப்படித் தூக்க தொட அஞ்சித் தனியளாகக் கிடப்பேனென்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.

மூப்பு வரும் போது சுருங்கி வதங்கும் ஒரு சதைக் கூட்டிற்கு எத்தனை எத்தனை அச்சுறுத்தல்கள்? ராக்கம்மா எனும் சதைக் கூட்டின் நேருக்கு நேரான தைரியம் கதையில் முக்கியமானது. யாரும் தன் மீது அனுதாபப்பட ராக்கம்மா விழையவில்லை. இங்குள்ள பற்பல மனித உடல்களின் விதவிதமான விருப்பங்கள், பாலியல் பிறழ்வுகள், அத்து மீறல்கள், சாதித் தீண்டல்கள், போன்றவை திணிக்கப்பட்ட ராக்கம்மாவை யாரும் மறுதலிக்க முடியவில்லை. தனக்குத் தானே வெகுண்டெழுந்து மூர்க்கத்தை நியாயமாகக் காட்டிய அப்பெண்ணிடம் உயிருடனிருக்கும் பொழுது அவள் விருப்பமின்றி யாரும் நெருங்க முடிந்ததில்லை.

அழியும் இந்த உடலுக்கு இம்மனிதர்கள் என்ன தான் இன்னும் செய்யப் போகின்றார்களெனத் தெரியவில்லை…

காப்பு கட்டின ஆட்கள் அடிக்கும் மேளத்தில், சுடுகாட்டில் உறங்கும் ராக்கம்மா எழுந்திருக்கப்போவதில்லை.

“ஏ நான் வளர்த்த கட்டி மவளே

ஏ நான் வளர்த்த தங்க மவளே”

உன்னை இப்படி பார்க்கிறதுக்காகவா தங்கமா வளர்த்தேன்” என்ற ராக்கம்மாவின் தந்தை ஒப்பாரியில், கோவிலில் அடிக்கின்ற நையாண்டி மேளம். கெளிமதமாக உருமாறுகின்றது.

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here