மிருகநயனி
இந்த உலகம் எப்படியோ இருக்கிறது
நான் அதைப் பற்றிப் பேசவில்லை
அது பலவற்றைக் கொண்டிருக்கிறது
எனக்கு அதிலெல்லாம் சிக்கல் இல்லை.
ஆனாலும்
மெய்யும் பொய்யும்
எனக்கு மிகவும் சிக்கலானது.
இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது தான்
சலிப்பாக இருக்கிறது.
மெய் மிகச் சிறிய துகள்!
மெய்யை தேடிக்கொண்டிருக்கும்
போதே இருளில்
பொய்யின்
மிகையான வேடிக்கைகள் நிகழ்ந்துவிடுவதை
எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை
என்னாலும் முடிவதில்லை..
ஆனால்
இரவில் ஒளிரும்
மிருகநயனியைப் போல
எப்பொழுதாவது மெய் ஒளிரும்.
சில போது
அத்துகள்கள் ஒளியுற்று நம்மிடம் மிதந்து வருவதையும்
காணலாம்,
ஆனால் அவ்வளவு மெதுவாக
வந்து சேர்வதற்கு வெகுகாலமிருக்கிறது மானுடமே!
உள்ளே.
நூற்றாண்டுகளுக்கும் மேலான
வீடு அது
அதை
பாழ்வீடு என்று சொன்னாலும் மிகையில்லை.
அவ்வீட்டில்
மூன்று வெவ்வேறு விதமான சன்னல்கள் இருக்கின்றன
உள் அறையிலிருந்து வெளிப்புறமாக
பார்க்கக்கூடிய சன்னல்
சதுர வடிவமாகவும்,
மற்றது
நீள் செவ்வகத்திலும் இருக்கின்றன.
வடிவ ஒழுங்கிற்கு இலக்கணம் போல
அவை இன்னும் சாட்சியாய் இருக்கின்றன.
எல்லாம் ஒருவகையான காலக்கணக்கு போலும்
உண்மையில்
நாம் அறியாதது
யாராலும் புரிந்து கொள்ள முடியாதது.
வீட்டின் உள்ளே
ஓர் அழகான ஆலமரம் தழைத்து ஓங்கியிருந்தது!
கூடவே ஒரு வேப்பம்
அதன் வேர் பூமியெங்கும்
பற்றிப் படர்ந்திருக்கிறது!
எப்பொழுதாவது மாலையில் சிற்றகல்
ஒளிரும்
அதைத் தடவித் தடவி ஒளியேற்றுவாள்
பாட்டி.
அது முனுக் முனுக் என்று எரியும்.
ஒரே சௌகரியம்
அதை உள்ளிருந்தும் பார்க்கலாம்
வெளியிலிருந்தும் பார்க்கலாம்.
*
தெரிந்து கொள்ள வேண்டியது
நான் தெரிந்து கொள்ள வேண்டியது
இந்த உலகின் துன்பங்களைக் கையாள்வது
எப்படி என்பதுதான்.?
நீ தான்
உன் ஆசைகளாலும் அச்சங்களாலும்
இந்தத் துன்பமான உலகை உருவாக்கி வைத்திருக்கிறாய்
என்கிறார்கள் மகான்கள்!.
எனக்குக் குழப்பம் தீரவில்லை.
அங்கிருந்து வெளியேறி
வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.
மிகச் சிறிய இட்லிக்கடை அது
இட்லி ஊற்றுவதை முதியவர் ஒருவர்
ஆவெனப்
பார்த்துக் கொண்டே இருக்கிறார்..
அந்தப் பாத்திரத்திலிருந்து
ஆவி மெல்ல வெளியேறிக்கொண்டிருந்தது
அந்தப் பார்வையும்
அந்தப் பசியின் தகிப்பும்
எழுதுவதற்கு இல்லை.
இதை எப்படிப் புரிந்துக்கொள்வது ?
தீர்க்கவே முடியாது குழப்பம் இது.
ஆனாலும் மகான்கள்
பொய் சொல்வதில்லை.
ஆனாலும் அவர்கள்
சொல்வதில் உண்மை இல்லாமலில்லை.
*
மிகச் சிறிய உடல்
சற்றுத் தாமதமாகத் தான்
அந்த வீட்டிற்குச் சென்றேன்
துக்கத்தின் எல்லா ஆடம்பரங்களும்
முடிந்துவிட்டிருந்தன.
உள் ஒளி அணைந்த வீட்டில் தான்
மற்ற விளக்குகள் பிரகாசமாக சுடர்விடும்
என்பது எனது எண்ணம்.
அந்த வீட்டிலும் அப்படியே இருந்தது.
குறுகிய கால வாழ்வில்
இந்த உடலை எவ்வளவு துன்புறச் செய்ய முடியுமோ
அந்த அளவுக்கு அவர்
அவரது உடலுக்குத் துன்பத்தைக் கொடுத்திருந்தார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம்
யாரும் இறக்கவில்லை என்றால்
இந்த உலகத்தில் இடமே இருக்காது இல்லையா?
என்பார்.
அவர் சொல்வதும் சரியே.
மிகச் சிறிய எடைக்கொண்ட
உடல் தான்
நாம் எளிதில் கண்ணுற
முடியாத மனம் தான்
நம்மைச் சடுதியில் தள்ளிவிடுகிறது.
ஆனாலும் இந்த மிகச் சிறிய உடல் அழிந்துப்போவதை
நாம் தான் மிகுந்த துயரமாக எண்ணிக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மரணத்தைப் பார்க்கிறபோது
நாம் அறியாத ஏதோ ஒன்று
புதிதாக நிகழ்ந்துவிடுகிறது தான்,
ஆனாலும்
இந்த மிகச் சிறிய உடலை
அதற்குரிய மரணத்தை
இவ்வளவு தீவிரமாக எங்கிருந்தோ
கண்காணிப்பது தான்
அதனிடம் பிடிக்காதது.
சசி இனியன் – இயற்பெயர் இரா.சசிகலாதேவி. சிதம்பரத்தை சேர்ந்தவர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுகூட நுட்புனர் ஆக பணி புரிகிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். நீலி வனம் அவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: sasiiniyan1978@gmail.com


