Tuesday, January 27, 2026

புதுக்காசு

மஞ்சுநாத்

எம்.எம்.டி.ஏ காலனி மாரியம்மன் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் மூன்றாவது குறுக்கு சந்து, வண்ணம்பூசி பத்தாண்டுகளான பழைய வீட்டின் வலப்புறத்தில் குறுகலாக மேலேறும் மாடிப்படிகள் முடியுமிடத்தில் படுச்சிக்கனமாக கட்டப்பட்டிருக்கும் இருளடர்ந்த கழிப்பறை + குளியலறையில் சிதம்பரம் கண்ணுக்குத் தெரியாத தன்னுடைய உடல் முழுவதையும் தொட்டுப் பார்த்துக்கொண்டான். 

வெளிச்சத்திற்கான ஜன்னலோ, மின்விளக்கோ இல்லாததும் வசதிதான். தாழ்பாள் இல்லாதக் கதவை யாரேனும் திடீரென்று நெட்டித் திறந்தாலும் பயமில்லை. உள்ளே இருப்பவர்கள் குரல் எழுப்பினாலொழிய ஆள் இருப்பது தெரியாது. சிதம்பரம் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறும்போது அறை நண்பர்களுடன் தலையோடு தலையாக பலமுறை மோதிக்கொண்டதும் உண்டு. ஒவ்வொருமுறையும் அவனே குற்றவாளி. கழிவறைக்குள் புகுந்ததும் புகைக்கும் பழக்கமுள்ள நண்பர்களுக்கு மத்தியில் சிதம்பரம் எப்படி நிரபராதியாவான். சிதம்பரத்திற்கு பழிகள் ஏற்பதெல்லாம் பழக்கமானதுதான். 

அவனது முழங்கால்கள் நடுங்கின. மார்பின் இடது பக்கம் வேகமாக துடித்தது. இனி அதிக நேரம் தாங்க முடியாது. அவ்வளவுதான்… இறுதியில் அவனுடைய கையை அருவருப்பான சபிக்கப்பட்ட அங்கமாக நினைத்து பல தடவை உதறினான். எதிரில் இருந்த கதவின் மீது நடுவிரல் முனைப்பட்டதும் வலியில் முகம் சுளித்தான். மென்றுத்திண்ணும் உடல் உணர்ச்சியைக் கட்டாயப்படுத்தி வெளியே துப்பியதும், நரம்புகள் தளர்ந்து மயக்கமடையச் செய்துவிட்டன. வழக்கமாக இந்த அவஸ்தைக்குப் பிறகு ஜுரம் விட்டதுபோல் வியர்த்து மண்டைக்குள் விர்விர்ரென்று சப்தம் தணிந்து ஒரு இனிமையான களைப்பை உடல் முழுக்கப் பரப்பி நிம்மதியை உருவாக்கும். இன்றைக்கு சிந்தனையின் சுழல்நதி ஒடுங்குவதற்கு பதில் ஆர்பரித்து சிரிக்கிறது. 

பாசியில் கால் வைத்தால் வழுக்கிவிட வேண்டும், மணல் போல் இறுக்கிப் பிடித்து விழாமல் நிற்க வைக்கும் இந்த புத்தியை …? சிதம்பரம் அலுத்துப் போனான். அர்த்தமில்லாதக் கூச்சலைக் கேட்டபடி அசையாமல் நின்றான்.

இன்னும் எத்தனை நாளைக்கு? 

எது?

எல்லாம்தான்?

உடலுக்கு கிடைக்கும் களைப்பை ஓய்வாக மாற்றிக்கொண்டு முடங்கிவிடும் மனம் இன்றைக்கு ஏன் வீம்பு காட்டுகிறது…?

தலையைப் பிய்த்துக்கொண்டு வாய்விட்டுக் கதறி அழத்தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் வேலைமுடிந்து அறை நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கி விடுவார்கள். கேள்விகளுக்கும், கேலிகளுக்கும் முறிந்து விழுந்த மரம் போல் கூனிக் குறுகி அமர்ந்திருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. இது தேவையில்லாத பாசாங்கு. காலம் கடந்து விட்டதால் உணர்வுகள் கெட்டிப்பட்டு அருவருப்பான துர்நாற்றத்தை கசிய விடுகிறதா? இருட்டில் அழுத்தமாகத் தெரியும் உடலைப் பார்க்கும் மனதின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் வரை நடந்து போய் வரலாமா? சிந்தனைகள் மட்டுப்படும். சொந்த ஊரின் பெயர்ப்பலகை மாட்டிய பேருந்துகளைப் பார்த்தாலேனும் மனம் சற்று சமாதனமடையலாம். 

வெளியே முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்ட கார் பின்னால் நகர்ந்தபடி பாடல் ஒன்றின் இசையை அலறவிட்டுக் கொண்டிருந்தது. சிதம்பரம் வாளியைத் தூக்கி தண்ணீர் முழுவதையும் தன் தலையில் கவிழ்த்தான். கதவின் மேலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்து ஜன்னலைத் திறந்தான். கண்ணுக்குத் தெரியாத காரோட்டியை வாய்க்கு வந்தபடி திட்டினான். சிதம்பரத்தின் அர்ச்சனைகள் அவனுக்கு கேட்டிருக்காது, அவன் வாகனத்தை நேர்செய்வதில் மும்முரமாக இருந்தான். தலையை நீட்டி கொத்தாகக் காறி உமிழ்ந்து முட்டுச்சந்தினை சபித்தான். நூறடிச் சாலை பக்கம் திரும்பினான்.

ஈரமான துண்டை ஒரமாக எறிந்துவிட்டு முழுஉருவத்தையும் காட்டாத கையளவு கண்ணாடியை அப்படி இப்படி நகர்த்தி சிதம்பரம் அவனுடைய அம்மணமான உடம்பை முழுமையாகப் பார்க்க முயற்சித்தான். அது முடியாமல் போகவே மீண்டும் கோபமடைந்தான். முகத்தை கண்ணாடிக்கு அருகில் கொண்டுச்சென்று ஒடுங்கிய குழிக்குள் பிரகாசிக்கும் கண்களை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தது “வாழ்வை அச்சுறுத்தும் சிந்தனைகள் அகலட்டும்” மந்திரம் போல் மூன்று தடவைக் கூறி முடித்ததும் சிரிப்பு பொங்கியது. “என்ன செய்யலாம்?” என்று அவனையே கேட்டுக் கொண்டான். தனக்கு அடைக்கலம் தந்திருக்கும் அறையைச்சுற்றி நோட்டமிட்டான். கொடிக்கயிற்றில் தொங்கும் துணிகள், கிழிந்தப் பாய்கள், அழுக்கடைந்தத் தலையணைகள், வாங்கியது முதல் துவைக்காதப் போர்வைகள், தரையில் சிதறிக் கிடக்கும் பத்திரிகைகள், சிகரெட் துண்டுகள், சாம்பல் எச்சங்கள்…

“என்ன சிதம்பரம், நாம பொழங்கற இடமில்லையா இது, குப்பை மாதிரி கெடக்கு… இப்படியா வச்சிக்கறது? அவுனோவதான் சின்னப்பயலுவ… பெரிய மனுசன் உனக்கு தெரியவேணாம்…” என்றேனும் ஒருநாள் சுத்தம் செய்யாமல் விட்டால் அந்தோணி பொறிந்து தள்ளிவிடுவான். மிகவும் மரியாதையாக அதேசமயம் இயலாமைகளையெல்லாம் சுட்டிக்காட்டியபடி. வேண்டாம் அதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. 

பத்திரிகைகள் அடுக்கி படுக்கைகளை ஒழுங்குப்படுத்தி குப்பைகளை பெருக்கி அறையை பூட்டி கழிவறை + குளியலறை கதவுக்கு பின்னால் இருக்கும் ஆணியில் சாவியை மாட்டினான். பழைய நினைவுகள் பலத்துடன் பின்தொடர்ந்தன. 

தீவிரமாக சிந்திப்பவன் போல தலையைக் குனிந்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். இங்கு எல்லோருக்குமே பிரச்சனை இருக்கிறது, இருந்தாலும் சிதம்பரம் கைவீசி நடப்பதை ஒரு நொடி திரும்பிப் பார்க்காமலா இருப்பார்கள்? பார்க்கலாம், பார்க்கலாமென்ன? பார்ப்பார்கள். அதுவும் பலவித எண்ணங்களுடன்… உண்மையோ பொய்யோ இந்த நினைப்புதான் இயல்புக்கு விரோதமாக இயக்குகிறது. 

கண் தெரியாத பிச்சைக்காரன் நகைக்கடை வாசலில் “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக…” பாடிக்கொண்டு வெகுநேரம் நின்றான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பவள் மனைவியாக இருக்கலாம். அவளுக்கும் கண் தெரியவில்லை. நகைக் கடைக்கு அருகில் செருப்பு தைத்துக் கொண்டிருந்தவன் எழுந்து வந்து சில சில்லரைகள் கொடுத்து நகர்ந்து போகச் சொன்னான். பள்ளிச் சீருடையில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழும் சிறுவனைத் திட்டிக்கொண்டு இழுத்துச்செல்லும் பெண்மணி சிதம்பரம் தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கவனித்ததும் கூச்சமடைந்து வேகம்கூட்டி நடந்தாள்.

“எந்நேரமும் அப்படியென்ன யோசனை? உலகத்துப் பிரச்சனையெல்லாம் சிதம்பரங்கிட்ட ஒப்படைச்சிட்டங்களா? ஹா…ஹா… சீரியஸா எடுத்துக்காத, சும்மா தமாசுக்கு சொன்னேன்… உனக்கு கோவமும் வரமாட்டேங்குது சிரிப்பும் வரமாட்டேங்குது. இப்படி பொணம்மாதிரி நடந்து போய்க்கிணு இருந்தா எவ உன்னைத் திரும்பிப் பாப்பா சொல்லு?”

அந்தோணி எதுவும் கேட்கலாம். அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஒரு வருடமாக அறைக்கான வாடகைப் பங்கை கேட்காதவனுக்கு உரிமை இல்லாமலா?

“வச்சிகிணு இல்லைன்னா சொல்லுவானா இருந்தால் தரப்போகிறான். நாற்பத்தாறு வயசாச்சு, கல்யாணம் காட்சி பாக்காத ஜென்மம், பாவம் சாப்பாட்டுக்கே தரிகிட தத்தோம்… என்ன சிதம்பரம் காசில்லையா வயித்த இறுக்கி பிடிச்சிட்டு கெடக்கத? ஏங்கிட்ட கேட்க உனக்கென்ன கூச்சம்? இந்தா ஏதாவது வாங்கி சாப்பிடு.” 

சிதம்பரம் தன்னைக் கடந்துச் செல்லும் கிழவரைப் பார்த்து “நீ கேளு அந்து… எதுவேணாலும் கேட்கலாம். தப்பில்ல, உனக்கு எல்லா உரிமையும் இருக்குது. ஆனா மத்தவங்க…” என்றான். 

கிழவர் ஒன்றும் புரியாமல் “என்ன? ஆள் யாருன்னு தெரியலேயே…?” என்றார். 

அவரைக் கண்டுக்கொள்ளாமல் கோயம்பேடு பேருந்துநிலையம் செல்லும் நூறடிச் சாலை அருகே வந்தான். வாயில் வழிந்த எச்சிலை புறங்கையால் துடைத்தவன் சிலநிமிடம் யோசித்துவிட்டு நூலகத்திற்கு செல்ல முடிவெடுத்து வந்தவழியில் திரும்பினான். நூலகம் பூட்டியிருந்தது. எம்.எம்.டி.ஏ காலனி பேருந்து நிலையத்திற்குள் சென்று மதில் சுவற்றின் மீதேறி அமர்ந்துக்கொண்டான்.

எல்லோரும் பாவம் பார்த்து வாழும் இந்த வாழ்க்கை மானக்கேடானது. அறை நண்பர்கள் அந்தோணியிடம் குறையாக ஏதேனும் பேசினால்; ”பாவம் விடு… அவனே மொட்டப்பையன்!” என்பான்.

“சலுகை அதிகமில்லாத கம்பெனி சிம்கார்டு, கூவி கூவி வித்தாலும் ஒருத்தனும் வாங்கல… வாங்க மாட்டான். சிதம்பரந்தான் என்ன செய்வான்? வருமானம் தேடித்தராம எந்த முதலாளி மாசம் பொறந்ததும் சம்பளம் போடுவான். பிரமாதமா இங்கிலீஷ் பேசுறது ஒன்னுதான் சிதம்பரத்தோடு பலம். மாசம் சம்பளம் கிடையாதுன்னாலும் எப்பவாது ஐநூறு, ஆயிரம்னு கொடுத்து வேலையிலிருந்து தொரத்தாம வைச்சிருக்காரு. நல்ல மனுஷன்… அவன் முதலாளி எனக்கு தெரிஞ்சவருதான். ஓய்ஞ்சு உக்கார்ற வயசுல புதுவேலைத் தேடிப்போக இவனால முடியுமா? வேறா யாருக்காவது முடியலாம்… ஆனா சிதம்பரத்தால முடியாது. “

அந்தோணியே தொடர்ந்து பேசினான். “டேய் அவன் ஒரு மொட்டப்பையன்டா… பச்சையா சொல்லுணும்னா இதுவரைக்கும் ஒரு பொம்பளயைக் கூட அவன் அவுத்து பாத்ததில்ல.”

அறை நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிரித்தார்கள். ஒருவன் அந்தோனியின் காதில் ரகசியம்போல் பேசினான். அந்தோனி அவன் முதுகில் அடித்தான். “ கூமுட்டை… தொறந்து பாத்தா தானே மத்ததெல்லாம்… இப்ப என்னையே எடுத்துக்க… எனக்கும் கல்யாணம் ஆகல முப்பது வயசுதான், ஆனா இதுவரைக்கும் நான்…”

பாலியல் சாகசங்கள் பேசும் ஆர்வத்தில் சிதம்பரம் கூனிகுறுகி எழுந்துச் செல்வதைக்கூட யாரும் கவனிக்கவில்லை. அன்றைக்கு எங்கெங்கோ சுற்றித்திரிந்துவிட்டு இந்த மதில் சுவர்மீது அமர்ந்துக்கொண்டதும் மனம் அமைதியடைந்தது. 

வானம் நீலம் குறைந்து நைந்துப்போன சேலையைப்போல் வெளுத்திருந்தது. நகரத்தின் ரகசியங்கள் வெளிச்சத்துடன் போராடிக் கொண்டிருந்தன. பேருந்துகள் வந்து செல்லும் சத்தம், ஆட்டோக்களின் ஓலம், வியாபாரிகளின் கூப்பாடு, மனிதர்களின் அரட்டைப் பேச்சு, மதிலுக்கு அப்பால் குடியிருப்புகளில் இருந்து தவழ்ந்து வரும் பண்பலை சங்கீதக் கதம்பம் எல்லாம் அங்கு ஒலித்தன. மாலை வேளையில் திறந்தவெளியில் இப்படி உட்கார்ந்திருப்பதில் இதமாக இருந்தது. அசையாமல் கண்சிமிட்டாமல் நடுநிசி வரையில் அமர்ந்திருந்தால் என்ன? யார் என்ன சொல்ல போகிறார்கள்…

பக்கத்தில் உரக்கப் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கையசைத்து ஒருவருக்கொருவர் விடைபெற்றுச் சென்றதும் அவ்விடம் மதிய சூன்யத்திற்கு நகர்ந்து சென்றது போலிருந்தது. பேருந்து ஒன்று இரைச்சலாய் ஒலியெழுப்பிக்கொண்டு நிலையத்திற்குள் நுழைந்ததும் பழையபடி மாலை ஆரவாரத்திற்குள் மூழ்கியது. பேருந்திலிருந்து இறங்கிய ஆட்களின் முகங்கள் களைப்படைந்திருந்தன. இவர்கள் பொழுதும் இருண்டு துயருற்று இருக்கிறதா? இல்லை இது தற்காலிகமானது, வீட்டிற்கு போனதும் பரபரப்பாகி விடுவார்கள். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை. ஆனால் நான் இவர்களோடு கலக்காதவன். நீங்காத கிரகணத்தில் வாழும் அதிர்ஷ்டசாலி. பேருந்திலிருந்து இறுதியாக இறங்கியவன் அந்தோணியா? சிதம்பரம் பதட்டமடைந்தான்.

“சிதம்பரம் என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்க… உலகத்துல எந்தவொரு பிரச்சனையும் இல்லாத ஒரே மனுசன் நீ மட்டுந்தான்யா. ஒரு கவலையும் கிடையாது… கொடுத்து வச்சப்பொறப்பு. என்ன பேச்சே காணோம்? இங்க உட்காந்து இப்படி வர்றவ போறவளையெல்லாம் முறைச்சு பார்த்தா… அய்யோ பாவம்னு வந்துடுவாங்களா? கஷ்டந்தான்… எனக்கு புரியுது. சரி விடு, உனக்கொரு நேரங்காலம் வராமயா போய்டும். எழுந்து வா ஆளுக்கு ரெண்டு பரோட்டா சாப்பிட்டுட்டு ரூமுக்கு போலாம்…”

“போடாங் மயிரு… அப்படியே ஓடிடு. என்னைய என்ன வக்கத்த எச்சக்கல நாயின்னு நினைச்சிட்டியா… கேட்க நாதியில்லாம போயிட்டேனா? என் வயசின்னா? உன் வயசின்னா? அன்னிக்கு தம்துண்டு பொடுசுங்கள வைச்சிகிட்டு எம்முன்னாடியே என்னைய மொட்டப்பையன்னு கேவலப்படுத்துற… நான் என்ன…”, மேற்கொண்டு பேசமுடியாமல் அழுகை முட்டியது. மூளைக் கோளாறு வந்தவன்போல் கை முஷ்டியல் மதிற்சுவர் மேல் குத்தினான். யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டான். சிந்தனைகள் வேகமெடுத்தன.

வேண்டாம்… வேண்டாம்… வேண்டவே வேண்டாம்… கற்பனைகள் நிஜமாக வேண்டாம். அப்படியே அவன் வந்தாலும் கேட்டாலும் எதிர்வினை “சரி வா எனக்கும் பசிக்குது…” என்று அவன் பின்னால் செல்லும் மானக்கேட்டைத் தவிர ஒன்றும் நேர்ந்திருக்காது. நிதர்சனம் தரும் வலியைவிட வாழ்க்கைக்கான போராட்டம் கொடுமை. சமரசம் சாஸ்வதம்… 

சிதம்பரம் தன்னுடைய கால்களை மதிலுக்கு பின்னால் தூக்கிப்போட்டு பேருந்து நிலையத்திற்கு முதுகைக்காட்டி அமர்ந்தான். இதற்கொரு முடிவுக் காண முடியாதா? பல்லைக் கடித்துக்கொண்டு “என்ன செய்யலாம்?” என்று சிந்தனையை உலுக்கி உலுக்கி யோசித்ததில் வழக்கம்போல் பதிலில்லை. அவனுடைய கால்களை பல தடவை மதில் மீது மோதி வலியேற்படுத்திக் கொண்டான். எதற்கும் பதிலில்லாமல் கேள்விகளை தேனீக்களாக சிருஷ்டித்து குடைச்சல் தரும் கேடுக்கெட்ட மனம். 

எதிரில் ஒரேமாதிரி வரிசையாக இருந்த வீடுகளில் விளக்குகள் ஒவ்வொன்றாக எரியத் துவங்கின. முகம் உயர்த்தி பார்த்தான். தலை கனத்தது. சுற்றியும் இருள் அதிகரிக்க அதிகரிக்க வீடுகள் பிரகாசமாயின. கதவும் ஜன்னலும் திறந்திருத்த மாடி வீட்டு முற்றத்தில் பெண்ணொருத்தி உலாத்திக் கொண்டிந்தாள். இரவு உடையில் இருந்த அந்த பெண்ணின் கவர்ச்சி வெகுவாக ஈர்த்தது. இதுநாள் வரை இதையெல்லாம் கவனிக்கவில்லையே? சிதம்பரம் யோசனைக்குள் மூழ்கினான். அவள் வீட்டிற்குள் செல்வது யாராக இருக்கும்? அவன் கையிலிருக்கும் பையை வாங்கி வைக்கிறாள். கணவனாக இருக்குமோ? இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? சிறிது நேரத்தில் வேறு ஆடைகள் அணிந்துக்கொண்டு முன்கூடத்தில் பிரம்பு ஊஞ்சலில் வந்தமர்ந்தவனை வாசலுக்கு நேராக கிடக்கும் ஸோபாவிற்கு இழுத்துச் செல்கிறாள். அவனுடைய மடியில் அமர்ந்துக்கொண்டு அவன் கன்னத்தைப் பிடித்துக்கிள்ளுகிறாள். வேகமாக எழுந்துபோய் எதோவொன்றை எடுத்துவந்து அவன் வாயில் வைக்கிறாள், சடாரென அவன் தன் முகத்தை பின்னுகிழுத்துக் கொள்கிறான். அவள் விடுவதாகயில்லை. அவன் கழுத்தைப் பிடித்திழுத்து உதட்டில் முத்துகிறாள். பின்பு கையில் இருப்பதை மீண்டும் வாயில் கொண்டு போய் வைக்கிறாள். அவன் இம்முறை நகர்ந்துக் கொள்ளாமல் முகத்தை அவள் பக்கம் நகர்த்துகிறான். சிதம்பரம் முகத்தை திருப்பிக் கொண்டான். இது தவறல்லவா? இதில் என்ன தவறு? நான் இருளில் அமர்ந்திருப்பது அவர்களுக்கு தெரியாது. சரி அதனால்… 

இந்த மாதிரி சின்ன விஷயத்திற்கெல்லம் மூளையுருக சிந்திப்பதால்தான் பிரத்தியார் பாவம் பார்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டாய்.. உனக்கு நாற்பத்தியாறு வயதாகிவிட்டது… சரிதான் மீண்டும் பைத்தியகார யோசனையில் சிக்க வேண்டாம். ஒருவழியாக தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு மீண்டும் அந்த வீட்டை பார்க்கிறான். 

மாற்றமில்லாதக் காட்சி. வாயில் ஊட்டிவிட்டு முத்தமிட்டு அதை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள். என்னவாக இருக்கும்… என்ன அது? எதை ஊட்டுகிறாள்? சிதம்பரம் தன்னுடைய கண்களை இடுக்கிக்கொண்டு ஒருவழியாக அதைக் கண்டறிந்து விட்டான். மனம் குளிர்ந்தது. தலையில் மொய்த்துக் கொண்டிருந்த தேனீக்கள் எதிர்பாராமல் எங்கிருந்தோ வீசியக் காற்றில் கலைந்து சென்றன. மெதுவாக கீழே இறங்கினான். பகலில் சூடேறிப்போன மதிற்சுவரின் வெப்பம் ஒட்டிக்கொண்ட பின்புறத்தை துடைத்துக்கொண்டான். அவன் சட்டை பாக்கெட்டில் கடைசியாக மீதமிருந்த பத்து ரூபாய் நாணயத்தை வெளியில் எடுத்து சுண்டினான்.

சைக்கிளில் ஐஸ்பெட்டி வைத்து காற்றொலிப்பானை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தவன் சிதம்பரம் அருகில் நெருங்கி வருவதைக் கண்டதும் நிறுத்தினான்.

“என்ன சார் வேணும்?”

“இந்தா… ஒரு சாக்கோபார் ஐஸ்?”

“சார் சாக்கோபார் இருவதுருவா”

சிதம்பரம் யோசித்தான். அவன் வாழ்கை ராஜாங்கத்தில் சமரசமெல்லாம் பெரிய விஷயமா? “ஓ சரி சரி… விலை ஏறிடுச்சுல்ல? பரவாயில்லை. பத்துரூபா ஐஸ் இருந்தா குடு…”

“இருக்கு சார். ஆரஞ்சு ஐஸ் பத்து ரூவாதான்… ஆனா வேற பத்துரூவா வேணும். தாளா இருந்தாக் கொடுங்க…“

“ஏன் இதுக்கென்ன பத்துரூபா புதுக்காசு…! “

“சர்தான் சார்… யாரு இத்த வாங்கறாங்க? மதிப்பிருந்தாலும் செல்லாதுன்னு திருப்பியில்ல தர்றாங்க. நோட்டா இருந்தா குடுங்க…”

“நீ சிட்டிக்கு புதுசா? இந்தக் கதையெல்லாம் கிராமத்துல நடக்கும்… இங்கயேயுமா ஆரம்பிச்சிட்டீங்க?”

ஐஸ்காரன் வேறொரு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். ஐம்பது ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு இரண்டு சாக்கோபார் ஐஸ்களோடு மீதி சில்லரையைக் கொடுத்துவிட்டு காற்றொலிப்பானை அழுத்தினான். 

கணவன் மனைவி இருவரும் தாங்கள் வாங்கிய ஐஸ் கரைவதற்குள் அதை ருசிப் பார்க்கத் தயாரானார்கள். சிதம்பரம் ஒதுங்கி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*

மஞ்சுநாத் – புதுச்சேரியை சேர்ந்தவர். விமர்சகர், பயணி, வரலாற்று ஆய்வாளர். தற்போது புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணியாற்றுகிறார். குதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘அப்பன் திருவடி’ நாவல் தமிழ் இலக்கியத்தில் இமயமலையின் பேரழிவு குறித்து முதல் முதலாக பேசி புதியதொரு களத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் : manjunath.author@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here