அரவிந்தன்
புனைவுகளைப் பரந்த அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். சுய அனுபவத்தின் அடிப்படையில் உருவானவை; புற வழிகளிலிருந்து கிடைக்கும் அனுபவப் பதிவுகள், தகவல்களிலிருந்து உருவானவை. சுயஅனுபவம் சார்ந்த புனைவுகளிலும் புறவழித் தரவுகள் கலந்திருக்கும்; புறவழித் தரவுகள் சார்ந்த புனைவுகளிலும் சுய அனுபவம் கலந்திருக்கும். என்றாலும் இரண்டில் எது தூக்கலாக இருக்கிறது என்பதை வைத்து வகைப்படுத்தலாம். இருவகைப் புனைவுகளிலும் தவிர்க்க முடியாமல் கலந்திருப்பது கற்பனையின் வீச்சு என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மிகுதியும் கவிஞராகவே அறியப்படும் சுகுமாரன் குறிப்பிடத்தக்க புனைவுகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களும் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் படைப்பு வீரியத்தில் மிகவும் வலுவானவை.
வெல்லிங்டன் என்னும் நாவல் மிகுதியும் சுய அனுபவம் சார்ந்தது. பெருவலி பெரிதும் புறவழித் தகவல்கள் சார்ந்தது. புறவழித் தகவல்களின் மீது கற்பனை ஆடிய நர்த்தனத்தின் விளைவே பெருவலி. வரலாற்றுப் பின்புலம் கொண்ட இந்தக் கதையில் உண்மை-கற்பனை ஆகியவற்றின் விகிதாச்சாரத்தைக் கண்டுபிடிக்கும் வேலையை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விட்டுவிட்டு நாம் புனைகதை வாசகராக நாவலுக்குள் நுழையலாம்.
மாற்றாந்தாய் நூர் மஹலின் சூழ்ச்சியைத் தோற்கடித்து ஷாஜஹான் அரியணை ஏறுவதில் தொடங்கும் நாவல் ஷாஜஹானை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு அவர் மகன் அவுரங்கசீப் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்வதோடு முடிகிறது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த எவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய இந்தத் தகவலை வைத்துக்கொண்டு ஒரு நாவலைக் கட்டி எழுப்புகிறார் சுகுமாரன். ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய பாத்திரங்கள் முக்கியப் பங்கு வகித்தாலும் சுகுமாரன் இவர்களை மையமாகக் கொண்டு நாவலைக் கட்டமைக்கவில்லை. இவர்கள் பார்வையிலும் அன்றைய நிகழ்வுகளை அணுகவில்லை. நாவலின் மையமாகவும் நாவலின் கோணத்தைத் தீர்மானிக்கும் கண்ணாகவும் விளங்குபவள் ஷாஜஹானின் செல்ல மகள் ஜஹனாரா. பேரழகியும் சிறந்த அறிவாளியுமான ஜஹனாராவும் அவளுக்கு நெருக்கமான பானிபட் என்னும் நபும்சகறும் மாறி மாறிச் சொல்லும் வகையில் அமைந்துள்ள கதையாடல் பேரரசுகளில் நடக்கும் அதிகாரப் போட்டிகளில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் பலவிதமான செயல்பாடுகளைச் சித்தரிக்கிறது.
கதை என்று பார்த்தால் அரியணையின் வாரிசாகக் கருதப்படும் மூத்த மகன் தாரா ஷுகோவை ஓரங்கட்டிவிட்டு அவுரங்கசீப் முடிசூட்டிக்கொள்வதுதான் கதை. தாரா ஷுகோ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ளவன். பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று நினைப்பவன். நவீன சிந்தனைகள் கொண்டவன். அவுரங்கசீப் அவனுக்கு நேரெதிரான நம்பிக்கைகளைக் கொண்டவன். தீவிரமான மதப் பற்றாளன். தன் மதம் மட்டுமே சரியானது என்று நம்புபவன். சூழ்ச்சித் திறன் மிகுந்தவன். சரியான நேரத்தில் சரியான விதத்தில் காய் நகர்த்தி அரியணையைக் கைப்பற்றும் சூட்சுமம் அறிந்தவன். ஷாஜகானுக்குப் பிறகு அவுரங்கசீப்தான் முகலாயப் பேரரசின் மன்னனானான் என்பதை நன்கு அறிந்திருந்தாலும் தாராவுக்கும் அவுரங்கசீபுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தாரா வென்றுவிடக் கூடாதா என்று வாசகரை ஒரு கணமேனும் ஏங்கவைப்பது நாவலின் வெற்றி.
இந்திய நிலப்பரப்பே பெரும் ரணகளமாக இருந்த அன்றைய காலகட்டத்தைப் பற்றிய இந்த நாவலில் போர்களும் சூழ்ச்சிகளும் அதிகாரப் போட்டிகளும் இடம் பெறுவது இயல்பானது. ஆனால் நாவலின் கதையாடலில் இவை அழுத்தம் பெறவில்லை. வரலாற்று ஏடுகளில் வெறும் அடிக்குறிப்பாகத் தங்கிவிட்ட ஜஹனாராவின் ஆளுமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் முன்னிலைப் பெறுகின்றன. ஒரு கதையை யாருடைய பார்வையின் வழியாகச் சொல்ல வேண்டும் என்பது படைப்பாளியின் அணுகுமுறையைக் காட்டுகிறது. தாராவையும் அவுரங்கசீபையும் வைத்து ‘பாகுபலி’ போன்ற படங்களில் வரும் இரட்டை நாயகர்களின் கதையாகவும் இதை வளர்த்தெடுத்திருக்க முடியும். ஆண்களே ஆதிக்கம் செலுத்திவந்த பேரரசின் அதிகாரச் சூழலில் குரல் எழுப்பும் உரிமையற்ற ஒரு பெண்ணின் பார்வையில் இந்தக் கதையைச் சொல்ல சுகுமாரன் முடிவு செய்தது அவருடைய இலக்கியப் பார்வையைக் காட்டுகிறது. கவனம் பெறாதவர்கள்மீது கவனம் குவிப்பதும் ஓரங்கட்டப்பட்டவர்களின் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதும் இலக்கியப் பிரக்ஞையின் முக்கியமான பண்புக் கூறுகள். அனைவரும் அறிந்த மனிதர்களைப் பற்றியே மீண்டும் எழுதுவதைத் தவிர்த்துவிட்டு அதிகம் அறியவராதவர்களின் வாழ்வைச் சொல்ல முற்படுவது நுட்பமான இலக்கியப் பண்பு. அவர்கள் வாழ்வைச் சொல்வதோடு நில்லாமல் அவர்கள் கோணத்திலிருந்தே அதிகாரப் பீடத்தையும் அதைச் சுற்றி நடக்கும் வெறித்தனமான போட்டிகளையும் சித்தரிப்பது நிலைபெற்ற மையங்களிலிருந்து வாசகரின் பார்வையைத் திருப்பக்கூடிய செயல்முறை. கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சத்திலிருந்து விலகி, நிழல்களின் திரை விலக்கிப் பார்க்கும் சுகுமாரன் அதன் மூலம் இதுவரை நாம் அதிகம் அறிந்திராத ஓர் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அறிந்த உலகின் அறியாத பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கோணமே இந்த நாவலை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.
ஜஹனாராவின் பார்வைக் கோணம் நமக்கு எதைச் சொல்கிறது? அது வரலாற்றை மாற்றி எழுதவில்லை. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் பதிவாகாமல்போகும் உண்மைகளை அது நமக்குச் சொல்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி தாராவுக்கும் அவுரங்கசீபுக்கும் இடையில்தான் நடக்கிறது. அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஜஹனாராவுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவள் பெண். அதிகாரப் போட்டி ஆண்களுக்கு இடையே மட்டுமே நடக்கிறது. எவ்வளவு தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஜஹனாராக்களுக்கு அங்கே இடம் இல்லை. அவர்கள் பின்னணியில் இருந்துகொண்டு செயல்படலாம், நூர் மஹலைப்போல. பெண்கள் எவ்வளவு திறமை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னணிக்கு வர முடியாது. எதிர்மறையான பண்புகள் கொண்ட நூர் மஹல் ஜஹாங்கீரை முன்வைத்தே இயங்க முடியும். நேர்மறையான இயல்பு கொண்ட ஜஹனாரா தாராவை முன்னிறுத்தியே செயல்பட முடியும். அதிகாரப் பீடத்தில் அவர்களுக்கு நேரடியான பங்கேற்புக்கான உரிமை இல்லை. அன்றைய இந்தியாவைப் பல்வேறு சமய நம்பிக்கைகளும் பரஸ்பர இணக்கத்துடன் புழங்கக்கூடிய சமூகமாகக் கண்ட ஜஹனாராவால் தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள நேரடியாக அரசியலில் இறங்க முடியாது. தன்னைப் போலவே முற்போக்கான, தாராளவாதச் சிந்தனை கொண்ட தன் சகோதரன் அவ்வாறு இல்லாத இன்னொரு சகோதரனால் தோற்கடிக்கப்படுவதைச் சாட்சியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். சர்வ வல்லமை படைத்த ஜஹாங்கீரையே பின்னணியிலிருந்து ஆட்டிப் படைத்த நூர் மஹல், ஜஹாங்கிரின் மகன் அரியணையைக் கைப்பற்றியதும் வீட்டுக்காவலில்தான் முடங்கியிருக்க வேண்டும். அரசியல் ஆண்களின் களம். அங்கே பெண்களின் நேரடிச் செயல்பாட்டிற்கு வாய்ப்பில்லை.
ஜஹனாராவும் பானிபட்டும் சொல்லும் கதை மைய நீரோட்டப் பார்வையில் அமைந்த வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாத கதை. ஜஹனாராக்களுக்கு அதிகாரத்தில் மட்டும் உரிமை மறுக்கப்படவில்லை. மிக இயல்பான, அடிப்படையான மானுட உணர்வுகளான காதலும் காமமும்கூட அவளுக்கு மறுக்கப்படுகின்றன. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வாரிசுகள் அரச குடும்பத்து ஆண்களுக்குப் போட்டியாக உருவெடுக்கக் கூடும் என்பதால் அந்தப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்னும் தடையை விதித்தவர் அக்பர் என்று போற்றப்படும் பேரரசர்தான். பேரரசரின் ஆண் வாரிசுகள் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அரியணைக்கும் அதிகாரத்திற்கும் உரிமை கொண்டவர்கள். பெண் வாரிசுகள் யாரைத் திருமணம் செய்துகொண்டாலும் அந்த உரிமை அற்றவர்கள். மனைவியின் மீதான பெருங்காதலால் அவளுக்காக அழியாத நினைவுச் சின்னம் கட்டிய, மகள்மீது பேரன்பைப் பொழிகின்ற ஷாஜஹானுடைய அணுகுமுறையும் இதுவேதான். பெண்கள்மீதான அன்புக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதிகாரத்தில் அவர்களுக்கு இடம் தர வழியில்லை. அதிகாரப் பீடத்தைத் தன் வசம் வைத்திருக்கும் ஆண்களின் சிந்தனை. இதை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் அரசர்கள் தங்கள் மகள்களின், சகோதரிகளின் உடல்சார்ந்த இயல்பான உணர்ச்சிகளைப் பற்றிய பரிவுணர்ச்சி சிறிதும் அற்றவர்களாக இருப்பதற்குக் காரணம் ஆண்களை மையமாகக் கொண்ட அதிகார அமைப்பு.
பெருவலி நாவல் இவை எதையும் நேரடியாகச் சொல்வதில்லை. பானிபட்டும் ஜஹனாராவும் தரும் சித்திரங்களின் வழியே இந்த உண்மைகள் துலங்குகின்றன. வரலாற்றின் இருள் படர்ந்த மூலைகளில் இவர்களுடைய பார்வை வெளிச்சம் பாய்ச்சுகிறது. வரலாற்று ஏடுகளின் அதிகாரப்பூர்வமான பதிவுகளுக்கு இணையான வரலாற்றின் வேறு சில பக்கங்களை இவர்கள் மூலம் நாம் காண்கிறோம். சுகுமாரனின் கவித்துவம் ததும்பும் கம்பீரமான தமிழில் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் உயிர்பெறுகின்றன. தேர்ந்த சிற்பியின் உளி இயங்கும் லாவகத்துடன் செயல்படும் சுகுமாரனின் மொழியில் வரலாற்றின் மறைபொருள்கள் உருப்பெறுகின்றன.
இது வெறும் வரலாற்றுக் கதைதானா என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வரலாற்றை மையமாகக் கொண்ட கற்பனாவாத நாவல்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் மொழியில் வந்திருக்கும் இன்னொரு வரலாற்று நாவல் தானா இது? வரலாற்றைத் தன் விருப்பம் சார்ந்து திரிக்காமல், வேளிக்கைக்காகச் சரடு விடாமல் அணுகும் முறையில் இது நவீன இலக்கிய அணுகுமுறை கொண்ட தீவிரமான சபைப் படைப்பாக உருக்கொண்டிருக்கிறது. நவீனத் தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சுகுமாரனிடமிருந்து வேறு வகையான வரலாற்று நாவலை எதிர்பார்க்க முடியாது என்பதால் இது வரலாற்றைக் கோரிக்கை நோக்குடனோ, பிரமிப்புடனோ அணுகும் வெகுஜன அணுகுமுறையைத் தவிர்த்த தீவிரமான கலைப்படைப்பாக உருப்பெற்றிருப்பதில் வியப்பொன்றுமில்லை. எனினும் வரலாற்றைச் சொல்வது மட்டுமே வரலாற்று நாவலின் பணியாக இருக்க முடியாது. நவீனத்துவக் கலை நோக்கு வரலாற்றை வெறும் வரலாறாக மட்டும் காண்பதில்லை. சம காலத்தின் பின்புலத்தில் வரலாற்றையோ அல்லது வரலாற்றின் பின்புலத்தில் சம காலத்தையோ பார்ப்பதற்கான வாய்ப்பை அது அளிக்கும். சுகுமாரன் தன் பின்னுரையில் இதைத் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். இது வரலாற்று நாவலாகக் கருதப்படுமானால் அது தற்செயல் மட்டுமே என்கிறார். தன்னுடைய நோக்கம் அதுவல்ல என்று தெளிவுபடுத்துகிறார். “சமகால நிகழ்வுகள் சிலவற்றைப் பற்றி அப்பட்டமாகச் சொல்ல இயலாது என்ற தயக்கமே வரலாற்றில் தஞ்சமடையக் காரணம். கடந்த கால நடப்புகள் இன்றைய வரலாறாக ஆகம்போது இன்றைய நிகழ்வுகளையும் வரலாற்றில் பார்க்க முடியும் என்பது என் எண்ணம். இன்று அரசியலில் விவாதிக்கப்படும் குடும்ப அரசியலையும் வாரிசு அதிகாரத்தையும் அன்றைய வரலாற்றில் பார்க்க முடியாதா? இந்தக் கேள்வியின் விளைவே இந்தப் புனைகதை”. இவ்வாறு தன் பின்னுரையில் தன்னுடைய நோக்கத்தைத் தெளிவாகக் கூறிவிடுகிறார் சுகுமாரன். இந்தக் கூற்றை இந்த நாவலின் பின்புலத்தில் இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று கருத்தளவிலானது. இன்னொன்று கலையின் கோணம். கருத்தளவில் பார்க்கையில் வரலாற்றின் நீட்சியாகச் சமகாலம் இருப்பதையும் எவ்வளவோ மாற்றங்களுக்குப் பிறகும் பெண் ஒடுக்குமுறை மாறாதிருப்பதையும் உணர்த்தும் நாவலாக இதைக் கொள்ளலாம். சொத்துரிமை உட்படப் பல்வேறு உரிமைகளும் வாய்ப்புகளும் சட்டப்பூர்வமாகவே பெண்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட இன்றைய ஜனநாயக யுகத்திலும் அதிகாரப் போட்டியில் பெண்களால் பங்குபெற இயலவில்லை. வாரிசுரிமை என்பதே ஜனநாயகக் கோட்பாட்டிற்கு முரனான கருத்து என்றாலும் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் நமது ஜனநாயகக் காவல்கள் அதன் உடன்பிறந்த பெண் ஒடுக்குமுறையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசுரிமை சார்ந்தோ சாராமலோ ஒரு பெண் அதிகார அரங்கில் தனது தகுதிக்குரிய இடத்தைப் பெறுவது அல்லது அடைவது இன்றளவிலும் விதிவிலக்காகவே உள்ளது. ஜஹனாராக்கள் வரலாற்றின் இடியாடுகளிலிருந்து வெளிப்பட்டு வந்து எங்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்வியை நேரடியாக எழுப்பும் வாய்ப்பும் துணிவும் அற்றவர்களாகவே இன்றைய ஜஹனாராக்கள் இருக்கிறார்கள். ஜஹனாராவின் இடத்தில் பல்வேறு சமகாலப் பெண்களை நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். ஜஹனாராவின் சதிதான் அவர்களுக்கும். அவர்கள் அன்பு செலுத்தலாம், அன்பைப் பெறலாம், அறிவைச் சேகரித்துக் கொள்ளலாம், அந்த அறிவால் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டலாம். ஆனால் அதிகாரத்தின் முகமாக அவர்கள் மாற முடியாது. தகுதியிலும் திறமையிலும் தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆண் வாரிசுகளின் நிழலில்தான் அவர்கள் தஞ்சமடைய வேண்டும். இந்த ஒப்பீட்டை நிகழ்த்தவில்லை. அது வரலாற்றின் அரங்கிற்குள் இம்மியளவுப் பிசகாமல் இயங்குகிறது. ஆனால் நாவலின் கதையாடல் வாசக மனங்களில் இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியாமல் நிகழ்த்துகிறது.
சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்த நாவல், கலைப் படைப்புகளுக்கே உரிய விதத்தில் கதாசிரியரின் நோக்கத்தைத் தாண்டி மேலெழுகிறது. நாவலில் உருப்பெறும் பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் சமகால ஆளுமைகள் பலவீனமான கோமாளிகளாகத் தெரிகிறார்கள். குறிப்பாக நாவலில் துலங்கும் ஜஹனாராவின் சித்திரம் ஒப்பிட யாரும் இல்லாத அளவுக்கு மகத்தான உருவம் எடுக்கிறது. நாவலாசிரியரின் மனதில் இருந்திருக்கக்கூடிய சமகால ஆளுமை யாரைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த ஆளுமையாக ஜஹனாரா ஜொலிக்கிறார். சுகுமாரனின் உத்தேசம் அதுவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டத்தை மீறி அவரது கலையின் துணையுடன் ஜஹனாரா அவரது நோக்கத்தைத் தாண்டிச் சென்று இந்த நாவலின் கலைத்தன்மைக்குச் சான்றாக நிற்கிறாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இளமையிலேயே மடிந்துபோன, வரலாற்றில் மறக்கப்பட்ட அந்தப் பெண் சுகுமாரனின் கலை என்னும் மந்திர ஸ்பரிசம் பட்டு அமரத்துவம் கொண்ட நாயகியாக உயிர்பெறுகிறாள். தமிழின் நவீன நாவல் பரப்பில் மறக்க முடியாத பெண்களில் ஒருத்தியாக மிளிர்கிறாள்.
சுகுமாரன் இந்த நாவலை எழுத சமகாலத்திலிருந்து வரலாற்றுக்குச் சென்றாரா அல்லது வரலாற்றிலிருந்து சமகாலத்திற்கு வந்தாரா என்னும் கேள்வியும் எழுகிறது. இன்று நடக்கும் நிகழ்வுகளின் நிழல்களை வரலாற்றில் தேடினாரா அல்லது வரலாற்றில் கண்டெடுத்த ஒரு தவலில் சமகாலத்தைக் கண்டாரா? அனேகமாக இரண்டாவதாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம். தில்லிக்குப் பயணம் சென்றபோது ஜஹனராவின் சமாதியைப் பார்த்தபோது அவளைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவள் தன் மனதுள் புகுந்தாள் என்று எழுதுகிறார் சுகுமாரன். மேற்கொண்டு அவளை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகிறார். அவளைப் பற்றி அறிய அறிய அவள் இன்னும் சாகவில்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கக்கூடும். அவளுடைய இன்றைய பிரதிபிம்பங்கள் அவர் மனதில் தட்டுப்பட்டிருக்கக்கூடும். அவளைப் பற்றி எழுதுவதன் மூலம் இவர்களைப் பற்றிப் பேச அவர் நினைத்திருக்கலாம். அந்த நோக்கம் அவரது திட்டங்களைத் தாண்டிப் பல்வேறு கிளைகளாக விரிந்து அதிகாரப் பீடங்களின் இயங்குமுறைகளையும் ஆண் பெண் சமன்பாடுகளின் சிக்கல்களையும் மதச் சச்சரவுகளையும் அதிகார வேட்கையின் பன்முகங்களையும் தழுவியபடி படர்ந்து செல்கிறது. வரலாற்றின் பின்புலத்தில் சமகாலத்தையும் சமகால வெளிச்சத்தில் வரலாற்றையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு காட்சி, மனதில் அது உருவாக்கும் மின்னல் வெட்டு, சில தகவல்கள், அவை அளிக்கும் சிந்தனைகள் ஆகயிவை படிக்கப் படிக்கச் சலிக்காத கலைப் படைப்பாக உருப்பெறும் ரசவாதத்தை இந்த நாவலில் காணலாம்.
ஒருவகையில் ஜஹனாரா சுகுமாரனின் முன்னோடி அதிகாரம் சார்ந்த ஒற்றுமை எதுவும் அவர்களுக்குள் இல்லை. சுகுமாரனைப் போலவே அவளும் எழுத்தாளர். தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை, தன் எண்ணங்களை அவள் நாட்குறிப்பில் பதிவு செய்து வந்திருக்கிறாள். அந்தப் பதிவுகள் அவளைப் பற்றியும் அவள் வாழ்ந்த காலம் பற்றியும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாத கதைகளை நமக்குச் சொல்கின்றன. அந்தப் பதிவுகளே பெருவலி நாவலாக உருப்பெற்று தமிழ்ப் புனைவுகளின் பெருமையைக் கூட்டியிருக்கின்றன. ஜஹனாராவைப் பற்றி சுகுமாரன் தீட்டியிருக்கும் இந்த அழியாச் சித்திரம் ஒருவகையில் அவர் அவளுக்குச் செலுத்தியிருக்கும் நன்றிக்கடன் என்றும் சொல்லலாம். கல்லறைக்குள் உறங்கும் ஜஹனாரா இந்த நாவலைப் படிக்க நேர்ந்தால் அவள் முகத்தில் காதலன் சத்ரசாலைக் கண்டபோது தோன்றிய புன்னகை மீண்டும் ஒருமுறை தோன்றும் என்பதில் ஐயமில்லை.
***
அரவிந்தன் – எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். புனைவு, இலக்கிய விமர்சனம், சமூக அரசியல் விமர்சனம், திரைப்பட அலசல்கள் என பல்வேறு வகைகளில் எழுதி வருகிறார். புனைவுகள், அல்புனைவுகள், மொழிபெயர்ப்பு என இதுவரை 28 நூல்கள் வெளியாகி உள்ளன. தற்போது காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிவருகிறார். மின்னஞ்சல்:aravindan@kalachuvadu.com.


