Friday, November 21, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்பேரழிவுகளின் புதிய பரிமாணம்

பேரழிவுகளின் புதிய பரிமாணம்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா-பாகிஸ்தான் மோதல், அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான விபத்து மற்றும் இஸ்ரேல்-ஈரான் ஆயுத மோதல் எனக் கடந்த இரு மாதங்களுக்குள் உலகையே உலுக்கிய மூன்று கவலைக்குரிய நிகழ்வுகள் நடந்தேறின. இவை ஒவ்வொன்றும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய துயரச் சம்பவங்களே!

நடந்த இந்த மூன்று சம்பவங்களை சமூக ஊடகங்கள், முன்னணி செய்தி ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள் அணுகிய விதத்தில் ஒரு புதிய போக்கைக் காண முடிந்தது. இவை பாரம்பரியச் செய்திச் சேகரிப்பு மற்றும் வெளியிடும் முறைகளிலிருந்து விலகி, புது வகையாக தோற்றமளித்தன.

தொழில்நுட்ப மோகமும், டிஜிட்டல் “வீரமும்!”

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது, இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள், அவற்றின் தன்மை, அழிக்கும் திறன் போன்ற தொழில்நுட்ப விவரங்கள் சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, அனைத்து பொது ஊடகங்களிலும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டன.

பொதுமக்களும் இத்தகைய ஆயுதங்கள் குறித்துத் தங்கள் அறிவை மெருகேற்றிக்கொண்டார்கள். குறிப்பாக, ட்ரோன்கள் என்றால் என்ன, பிரம்மோஸ் ஏவுகணைகள், ஏவுகணைகளைத் தடுக்கும் ஆற்றல், ரஃபேல் விமானங்களின் சாகசங்கள் எனப் பல செய்திகள் வெளிவந்தன. அது மட்டுமல்லாமல், எந்த இடங்கள் தாக்கப்பட்டன? ஏன் தாக்கப்பட்டன? எந்த விதங்களில் தாக்கப்பட்டன? என்பதைக் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமாகப் பரப்பப்பட்டன, விவாதிக்கப்பட்டன!

இராணுவத் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்களே முக்கியச் செய்தியாக அளிக்கப்பட்டன, நுகரவும் பட்டன.

சிலர் தங்களுக்குத் தோன்றியவற்றைச் செய்திகளாகப் பரப்பினர். இது ஒருபுறமிருக்க, “ஒரு வார்த்தை சொல்லுங்க, நாங்களும் ராணுவ வீரர்களாகச் சண்டைக்குப் போகிறோம்,” என சில குழுக்கள் அறிக்கைவிட்டன. அதை நகைச்சுவையாக்கியது பொது சமூகம். சமூக ஊடகங்களில் சில நடிகர்கள் ராணுவ வேடமிட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு ஆதரவளித்தார்கள். யுத்த வீடியோக்களை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் வெட்டிச் சேர்த்து, இசைக் கோர்த்து, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ரீல்ஸ்களாக மாற்றி, மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டார்கள். ஆளாளுக்கு கதை விட்டார்கள். திரைக்கதை அமைத்துக்கொண்டார்கள். விதவிதமான கதாபாத்திரங்களை, அறிவுக்குப் புலப்படாத கதையாடல்களை உருவாக்கினார்கள்.

இந்த மோதலில் எத்தனை இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? பாகிஸ்தானின் எத்தனை விமானத் தளங்கள் அழிக்கப்பட்டன? போன்றவை பல நாட்களுக்குச் செய்திகளாகவும், அரசியலாகவும், சமூகப் பிரச்சனைகளாகவும், விவாதங்களாகவும் நடந்தேறிக் கொண்டிருந்தன.

இது, விளையாட்டுப் போட்டியின் ஆட்டப் புள்ளிகளைக்கண்டு ஆர்ப்பரிக்கும் மனநிலையை உருவாக்கியது. மொத்தத்தில் ஊடகங்களால் இந்த போர்ச் செய்திகள் சில வேளைகளில் விளையாட்டுச் செய்திகளாகவும் தொழில்நுட்ப சாகசங்களைக் காட்டும் அறிவியல் செய்திகளாகவும் கையாளப்பட்டன.

இன்னும் மிக முக்கிய வேறுபாடு தொலைக்காட்சி நேரலைகள் மற்றும் அவைகளை நடத்தும் நெறியாளர்களின் அட்டகாசங்கள். இது நாடுகளுக்கிடையில் நடக்கும் போர் என்பது உணர்வுபூர்வமாவதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானதும், வரலாற்று ரீதியாக சிக்கலானதும். இதன் தீர்வும் சிக்கலானதே. ஆனால் சினிமா படம் போல இந்த சிக்கலை எளிமைப்படுத்தி, தங்களின் அறியாமையுடன் வன்முறையைக் கலந்து சுழற்றினார்கள் தொலைக்காட்சி நேரலை நெறியாளர்கள்.

தொழில்நுட்ப அலசல்களில் மூழ்கிய கவனம் அகமதாபாத் விமான விபத்தின்போது, ஒட்டுமொத்தத் தேசமும் விபத்திற்கான காரணம், போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள், ஓடுபாதையின் நிலை போன்ற விஷயங்களைப் பற்றி விவாதித்தது. பலர் உடனடியாக விமானிகளாகவும், விமானப் பொறியாளர்களாகவும் மாறி, நுட்பமான தொழில்நுட்பக் காரணங்களை அலசத் தொடங்கினர். இந்த விபத்துக் குறித்த செய்திகளை வாசிப்பதன் மூலம் பலர் விமானிகளாகவும், விமானப் பொறியாளர்களாகவும் கூட ஆகும் அளவிற்கு அறிவு பெற்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இஸ்ரேல்-ஈரான் மோதல்: தொழில்நுட்ப சாகசங்களின் உச்சம்!

இந்தியா-பாகிஸ்தான் ஆயுத மோதலின்போதும், அகமதாபாத் விமான விபத்தின்போதும் நடந்த அனைத்தும், உலகளாவிய அளவில் மீண்டும் நிகழ்ந்ததை இஸ்ரேல்-ஈரான் ஆயுத மோதலிலும் நம்மால் பார்க்க முடிந்தது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் “அயர்ன் டோம்” எனும் வான் பாதுகாப்பு அமைப்பைக் குறித்து விவாதித்தன. அவற்றால் ஈரானின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க முடியுமா முடியாதா என அலசிப் பார்த்தன. எத்தனை எண்ணிக்கையில் ஏவுகணைகள் ஏவப்பட்டன? இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்பை மீறிச் சென்றது எத்தனை? என மீண்டும் விளையாட்டுப் போட்டிபோலப் புள்ளிகள் போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அவை போட்ட குண்டுகள் குறித்தச் செய்தி வந்தது. திடீரென B-2 விமானம் ஹீரோவாகிவிட்டது! அதன் தொழில்நுட்பங்கள், அதன் வசதிகள், அதன் திறனாற்றல்கள் என ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு, விரிவாகப் பேசின. ஆயுதங்களின் தொழில்நுட்ப அதிசயங்களைக் குறித்துப் பேசிப் பேசி களைத்து விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

தொழில்நுட்ப மாயைக்கு மத்தியில்..

மனித உணர்வுகளை விடத் தொழில்நுட்ப விவரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. செய்திகளை விட புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளே அதிகம் கவனப்படுத்தப்பட்டன, அதிகம் பரப்பப்பட்டன. போரினால் ஏற்படும் மனித உணர்வுகளையும், துயரங்களையும் ஆழமாகப் பதிவு செய்வதை விட, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், குடும்பங்களின் பாதிப்புகள், மக்களின் உளவியல் போராட்டங்கள் போன்றவை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்பட்டன.

இவை அனைத்தும் உண்மைதான். மனிதர்கள் இப்படித்தான் இந்த உலகை அமைத்துக்கொள்ள முடியும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். அந்தக் காலம் போல் இல்லாமல் மனிதத்தன்மை வெகுவாகக் குறைந்துவிட்டதையே இவை நமக்குக் காட்டுகின்றன என எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், இந்த முடிவையும் தாண்டிப் பார்க்க முடியுமா என்பதுதான் சவால்.

முதலில் இந்தத் தொழில்நுட்ப அதிசயங்களை எடுத்துக் கொள்வோம், உண்மையிலேயே அவை அதிசயமாகத்தானே இருக்கின்றன. நடந்த இரு போர்களிலும் துல்லியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைத் தாக்கும் திறனை வெளிப்படுத்தியது முதன்மைப்படுத்தப்பட்டன. எதிரிகளின் தாக்குதல்களைத் தன்னிச்சையாகச் சுட்டு வீழ்த்தும் முறை உண்மையிலேயே வியப்பாகத்தான் இருந்தது. கத்தார் நாட்டை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளும் ட்ரோன்களும் தாக்க அனுப்பப்பட்டன, மக்களின் தலைகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்தன. கடலிலிருந்து தாக்குதல். மக்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி இருக்கிறது அவற்றின் இலக்கு. பறந்து வரும் எதிரிகளின் ஏவுகணைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்படும்போது, “வாவ்!” “சூப்பர்!” என்றே அனைவரும் மகிழ்ந்தனர்.

தொழில்நுட்பம் நடத்தும் சாகசத்தை யாராலும் மறுக்க முடியாது என உணர்ந்த தருணம் அது. அந்த ஏவுகணைகளில் ஒன்று நம் வீட்டில் விழுந்தாலே மரணம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த ஏவுகணைகளின் தாக்குதல்களையும், அதை முறியடித்த எதிர் தாக்குதல்களையும் வானவேடிக்கையைக் காணும் குழந்தைகளாகவே அனைவரும் கண்டனர் என்பதும் உண்மையே.

இப்படி ஜி.பி.எஸ்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், லேசர்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், வெடிப்பொருட்களின்  பெருக்கம் போன்றவை, துல்லியமாகத் தாக்கும் வழியை அளித்துள்ளது.

அழிக்க வேண்டிய இலக்கின் சில மீட்டர்களுக்குள் சென்று தாக்கக்கூடிய அளவிற்குப் புதியத் தொழில்நுட்பம் வியத்தகு முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஆளில்லா விமானங்கள் – ட்ரோன்கள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அறிவியல், வியக்கத்தக்க சாதனைகளாக மெய்சிலிர்க்கத்தான் வைக்கின்றன.

தொழில்நுட்பம் காட்டும் இந்த அதிசய, ஆச்சரிய, வியக்க வைக்கும் சாகசங்களுக்கு இடையில், செய்தி ஊடகங்களும் குழந்தைகளைப் போல இவற்றைப் பார்த்துச் சிலிர்த்து எழுதி மகிழ்வது புரிந்துகொள்ளக்கூடிய நிலையே என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. போலிச் செய்திகள், புள்ளிவிவரக் கணக்குகள் என விளையாட்டுப் போட்டி மனநிலை உருவாவதைத் தவிர்க்க முடியாது எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் இந்த நூற்றாண்டின் மனிதர்கள் சந்திக்கப் போகும் பெரும் சவால். தகவல்களுக்கு இடையிலும், தொழில்நுட்ப சாகசங்களுக்கு மத்தியிலும் மனிதத்தைக் கண்டறிவது எப்படி என்பதே இப்போதைய பெரும் சவால்.

போலி செய்திகள், வெற்று செய்திகள் போன்றவற்றுகளை கடந்துதான் துல்லியமாக இலக்கை அழிக்கும் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அது எந்த அளவு உண்மை என்பதையும் கேள்விகளாக முன்வைக்க வேண்டியுள்ளது.

மக்கள் மரணங்களை மூடி மறைக்க இந்தத் தொழில்நுட்ப சாகசங்களைக் குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவதைப்போல அதிகாரத்தில் உள்ளவர்களால் திட்டமிட்டு நமக்குக் காட்டப்படுகின்றனவா எனும் சந்தேகங்களை நம்மை வியக்க வைக்கும் தொழில் நுட்பங்களை தாண்டி எழுப்ப முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

இப்படியான ஊடகக் கூச்சல்களுக்குள்தான் நடந்தேறிய இரு போர்கள் ஏன் ஆரம்பிக்கப்பட்டன? அதன் நோக்கம் என்ன? அதன் உண்மைத் தன்மை என்ன? போன்ற கேள்விகளைத் தொடுக்க வேண்டியுள்ளது.

இந்தத் தொழில்நுட்ப மாயாஜாலத்திற்குள்தான் மனித உணர்வுகளையும், அரசியலையும் மிகுந்த சிரமங்களோடு மீட்க வேண்டியுள்ளது. இந்தப் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே, திருமணம் ஆகி இரண்டு நாட்களே ஆன என் உறவினரின் மகனுக்கு ராணுவத்தில் வந்து சேர ஆணை வந்தது. கணவன், தன் மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு எல்லைக்குச் சென்றார். இப்படியான ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் போருக்காக ஆபத்தான சூழலுக்குள் பணி நிமித்தம் சென்றிருப்பார்கள்தானே? போர்களாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணங்கள் தந்த வலிகள், தேற்ற முடியாதவைகளாக, வடுக்களாகி இருக்கும்தானே? தொழில்நுட்ப அதிசயங்களுக்கிடையிலும் உட்சென்று பிரித்தறியாத அளவை மிஞ்சிய தகவல்களுக்குள் தேடித் தேடித்தான் மனித உணர்வுகளையும், இந்தச் சூழல் உருவாக்கும் பதட்டங்களையும், சிறிய அளவில் நாமும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்படியானத் தேடுதல்கள் தேவையாகவும் இன்றையச் சவால்களாகவும் உள்ளன.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here