ரூபன் சிவராஜா
இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்
‘அகுஸ்ரூ போல்- Augusto Boal’ எழுதிய ‘The aesthetics of the oppressed -ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல்’ நூலானது தனிமனிதர்கள் தம்மைப் பற்றிய அகப்பொருளை மீட்டெடுப்பதைச் சாத்தியப்படுத்தும் அரங்கச் செயற்பாட்டு அணுகுமுறைகளின் அடிப்படைகளை விபரிக்கின்றது. அதனுடைய மையச் செய்தியென்பது மனிதர்கள் தமது சொந்தப் படைப்பாற்றலைக் கண்டடைவதனூடாக கலையைக் கண்டடைவதையும்- தமது படைப்பாற்றலைக் கண்டடைவதனூடு தம்மைத் தாமே கண்டடைதலையும் பற்றியது.
கடந்த 50 ஆண்டுகளாக உலகளவில் ஒரு காத்திரமான இயக்கமாகப் பரிணமித்திருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு குறித்த தனது பரந்த அனுபவங்களையும் பார்வைகளையும் முன்வைக்கின்றார். அரங்கின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அடித்தளங்களை விரிவாகவும் ஆழமாகவும் இந்நூலில் விவாதிக்கின்றார், விபரிக்கின்றார்.
உலகு தொடர்பான உணர்திறன்
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு அதன் அனைத்து வடிவங்களின் ஊடாகவும், சமூக மாற்றம் கோருதல், அதாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அக-புற விடுதலையை இலக்காகக் கொண்டிருக்கின்றது. அவை குறித்து ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு குறித்து நான் எழுதிவரும் தொடரின் முன்னைய பாகங்களிற் பார்த்திருந்தோம். மாற்றம் சார்ந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்வது மட்டும் போதுமானதல்ல, அதை மாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான செயற்பாடுகள் அவசியம் என்கிறார் Boal. தொடரின் அடுத்த பாகங்களில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல் குறித்த சிந்தனைகளும் பார்வைகளும் முக்கிய இடம்வகிக்கவுள்ளன.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல், அதனை முன்னெடுப்பவர்கள் மத்தியில் நாடகத்தை மட்டுமல்லாது, அனைத்துக் கலைகளின் வழியாகவும் உலகு தொடர்பான உணர்திறனை வளர்க்க முயல்கிறது. அந்தச் செயல்முறை ‘சொல், ஒலி, உருவகம்’ ஆகியவற்றை மையப்படுத்துகிறது. சொல் என்பது அனைத்துப் பங்கேற்பாளர்களும் கவிதைகள், கதைகளை எழுதத் தூண்டுதலைக் குறிக்கின்றது. ஒலி என்பது புதிய கருவிகளைக் கண்டடைதலும் புதிய ஒலிகளை உருவாக்குவதையும் குறிக்கின்றது. உருவகம் என்பது ஓவியம், சிற்பம், ஒளிப்படம்; உள்ளிட்டவற்றைக் குறிக்கின்றது.
அரங்கினை மரமாக உருவகித்தல்
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு என்பதையும் அதன் அழகியற் கூறுகளையும் ஒரு மரமாக உருவகிக்கின்றார் Boal. அந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் அழகியலின் பிரிக்கமுடியாத ஒவ்வொரு பகுதியை உருவாக்குவதோடு, வேர்களை ஊடறுத்து பூமியை அடைகின்றது எனவாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது.
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கத்தினை ஒரு மரமாக உருவகிக்கும் அவர், அறம், கூட்டுணர்வு, தத்துவம், ஒலி, உருவகம், சொல் (மொழி), வரலாறு, அரசியல், பெருக்கம் என்பனவற்றை அதன் வேர்களாகவும் வேர்கள் ஆழ ஊடுருவும் பூமியின் உட்பகுதியாகவும் முன்வைக்கின்றார். நாடகத்திற்கான விளையாட்டுகளை (Theatre Games) மரத்தின் அடித்தண்டாகவும், மக்கள் அரங்கு, கட்புலனாகா அரங்கு, உருவக அரங்கு, வானவில் அரங்கு, சட்டவாக்க அரங்கு செய்தித்தாள் அரங்கு உட்பட்ட வடிவங்களை மரத்தின் கிளைகளாக உருவகிக்கின்றார்.
தரையில் விழும் பழங்கள் மரங்கள் தம்மை இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு உருவாக்குகின்ற கூட்டுவிளைவானது, பரந்த அளவிற்கு அதன் ‘மாற்றும் சக்தியை’ (Transformatory power) அதிகரிப்பதனூடு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயுள்ள பல்வேறு குழுக்களை ஒன்றோடொன்று இணைப்பதிலும் வெற்றி பெறுகிறது. ஒடுக்கப்பட்டோர் தமது ஒடுக்குமுறைகளை மட்டுமல்ல, அவர்களுக்கு அந்நியமான ஒடுக்குமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அதே நிலையிலுள்ள ஏனைய மக்களுடன் தோழமையைக் கொண்டிருத்தல் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் இன்றியமையாத பகுதியாக உள்ளது.
உடலையும் மனதையும் இயந்திரமயமாதலிலிருந்து விடுவித்தல்
அரங்கச் செயற்பாடுகள், அவற்றுக்கான பயிற்சிகளின் முக்கிய அம்சம் விளையாட்டுகளாகும். விளையாட்டுகள் சமூக வாழ்வின் இரண்டு அத்தியாவசியப் பண்புகளை இணைக்கின்றன. விளையாட்டிலும் சமூக வாழ்விலும் விதிகள் முக்கியமானவை. விதிகளின்றி விளையாட்டு சாத்தியமில்லை. ஆனாலும் அவை படைப்புச் சுதந்திரத்தினையும் கோருகின்றன. ஆதலால் விளையாட்டோ வாழ்வோ அடிமைத்தனமான கீழ்ப்படிதலாக மாற இடமில்லை. விதிகள் இல்லாமல் விளையாட்டு இல்லை. அதேபோல் சுதந்திரம் இல்லாமல் வாழ்வு இல்லை.
மேற்சொன்ன இந்த இன்றியமையாத உருவகப் பண்பைத் தவிர, நாளாந்தம் திரும்பத்திரும்பச் செய்யும் பணிகளால், குறிப்பாக வேலை, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைமைகள் ஆகியவற்றால் அந்நியப்படுத்தப்பட்ட உடலையும் மனதையும் இயந்திரமயமாக்கலிலிருந்து விடுவிப்பதற்கு (de-mechanisation) விளையாட்டுகள் உதவுகின்றன.
உடலே முதலீடு
அரங்கின் முதன்மை முதலீடு உடல். அதனாற்தான் கலைவெளிப்பாடுகளில் உடல்மொழி முக்கிய இடத்தை வகிக்கின்றது. உடலானது தூண்டுதல்களை உருவாக்குவதோடு, நாம் உள்வாங்கும் விடயங்களுக்குப் பதிலளிக்கிறது-எதிர்வினையாற்றுகின்றது (Responding/reacting). அத்தோடு சமூக நடத்தையின் முகமூடியைப் போல வலுவான புஜ முகமூடியையும் உருவாக்குகிறது – இவை இரண்டும் நேரடியாக சிந்தனை மற்றும் உணர்ச்சிகளில் அடுக்குகளாகச் செயற்படுகின்றன. விளையாட்டுகள் உடலின் இயந்திரமயமாக்க விடுபடலை எளிதாக்குவதோடு அதனைக் கட்டாயப்படுத்துகின்றன. அவை உணர்திறன் உரையாடல்களாக இருப்பதால், தேவையான ஒழுங்குமுறைக்குள், அவற்றின் சாராம்சமான படைப்பாற்றலைக் கோருகின்றன
இயற்கையின் படைப்புகளின் பன்முகத்தன்மை
இயற்கை ஒருபோதும் ஒரேமாதிரியான படைப்புகளை உருவாக்குவதில்லை. அதாவது நாம் காணும் எந்தப் பொருளுமே அச்சொட்டாக இன்னொன்றைப் போல் இருப்பதில்லை. ஒரே வகைமையைச் சேர்ந்த பொருட்கள்கூட ஒரே மாதிரிகளாக இருப்பதில்லை. இரண்டு மணற்துகள்கள், எம் தலையில் இருக்கக்கூடிய முடிகளோ, உடலின் வேறெந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மயிர்களோ ஒன்றுபோல் இன்னொன்றில்லை. ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தோற்றம் நூறு வீதம் ஒரே மாதிரி இருப்பதில்லை. சாயல் இருக்குமே தவிர ஒரே மாதிரியாக அல்ல. விரல் ரேகைகள், மழைத் துளிகள், காட்டின் பறவைகள், அல்லது மரம், அதன் கிளைகள், இலைகள் என இந்த இயற்கையில் எதுவுமே முற்றிலும் இன்னொன்றை ஒத்ததாக இல்லை. நாம் சாயலையே ஒரே மாதிரியானவை என நடைமுறையிற் பொருளுணர்த்திப் பேசுகின்றோம், கையாளுகின்றோம். அனைத்து உயிரற்ற பொருட்களும் அனைத்து உயிரினங்களும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவை, மீளுருவாக்க முடியாதவை. குறிப்பாக உயிரியல் ரீதியான படியெடுப்புச் (Cloning) செய்யப்பட்டாலும் அச்சொட்டாக மீளுருவாக்கம் செய்ய முடியாதவை.
நாம் கண்ணுறும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் உற்றுணர வேண்டுமெனில், நம் காதில் விழும் அனைத்தையும் நுணுக்கமாக உள்வாங்க வேண்டுமெனில், நாம் தொடுகின்ற, உணர்கின்ற, முகர்கின்ற, சுவைக்கின்ற அனைத்தையும் நுணுக்கமாக உணரவேண்டுமெனில் நாம் முடங்கிவிடுவோம். அவை பெறப்பட்ட தகவல்களின் கொந்தளிப்பான பேரழிவுத் திரட்சியாகிவிடும். இயற்கையானது அதியுச்சப் பன்முகத் தன்மையுடையது. அந்தப் பன்முகத்தன்மையின் உச்சத்தினை மனிதர்களால் நாளாந்த அடிப்படையில் எதிர்கொள்ளவோ தாங்கவோ முடியாது. குறைந்தபட்ச உளநல வாழ்வைக் கொண்டதும் சுயமாக நகரக்கூடியதுமான மனிதன் அல்லது மிருகம் எனவான எந்தவொரு உயிரினமும் உலகத்தைப் பற்றிய புலனுணர்தலை ஒழுங்கமைத்து எளிமைப் படுத்தாவிட்டால், இந்த எல்லையற்ற பன்முகத்தன்மைக்குள் வாழ முடியாது.
ஒத்திசைவும் நிரப்புதன்மையும்
ஒத்திசைவு மற்றும் நிரப்புத்தொகுப்புகளை உருவாக்குவதன் மூலம், சிக்கலான உண்மைகளுக்கான எளிய தோற்றப்பாடுகளை உருவாக்க இயற்கை அனுமதிக்கிறது. எளிமைப்படுத்துதல்கள் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டாலும், வேறு வழியின்றி, மேலும் இவ்வுலகில் வாழவும், அதன் மூலம் ஒரு போக்கை வழிநடத்தவும், தோற்றப்பாடுகளின் தொகுப்பினை உருவாக்கும் உணர்வுசார் செயல்முறையை நிகழ்த்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒரு குழந்தை முதன்முறையாகக் கண்களைத் திறக்கும்போது, அதன் கண்களை ஒளிரச் செய்கின்ற அனைத்தையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பாரப்பதென்பது அடிப்படையில் எதையும் பார்க்கவில்லை என்பதாகும். சாம்பல் நிறம் மட்டுமே சிசுக்களின் கண்களுக்கு முதலில் தெரிவன. சிறிது சிறிதாக குழந்தையின் ‘பார்வைநரம்பு’, ஒளி மற்றும் நிழலால் தூண்டப்படத் தொடங்கும் போதுதான், அதன் ‘காட்சி உணர்வு’ ஒழுங்குபடுத்தப்படுகின்றது, அப்போதுதான் குழந்தை நேர் கோடுகள், வளைவுகள், ஆழம் மற்றும் வண்ணங்களை வேறுபடுத்துகிறது. எல்லாவற்றையும் ஒரே நேரத்திற் பார்ப்பதை நிறுத்தும் தருணமே குழந்தை உண்மையில் பார்க்கத் தொடங்கும் தருணமாக அமைகின்றது.
எதுவும் இன்னொன்றைப் போன்றதல்ல
எந்த மீனும் மற்றொரு மீனைப் போன்றது அல்ல, ஆனால் மீன்கள் ஒரே மாதிரியானவை. அதனால் மீன் கூட்டத்தைக் காண்கிறோம். எந்தவொரு ரோஜாவும் மற்றொரு ரோஜாவைப் போன்றது அல்ல, ஆனால் வெவ்வேறு வண்ணங்களிலான ரோஜாக்கள் அனைத்தும் ஒன்றையொன்று ஒத்திருக்கும் ரோஜாத் தோட்டங்கள் உள்ளன. பூமி நீலமானது என்று ஒரு விண்வெளிப் பயணிகள் கூறுவர். இரவு கருப்பு என்றும், நமது நாளங்களில் ஓடும் குருதி சிவப்பு என்றும், மழை வானம் சாம்பல் என்றும் சொல்கிறோம். ஆனால் அவை அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு சிறு துணிக்கைகளும்; மற்றொன்றைப் போல இல்லை.
எந்த ஒரு மலையும் இன்னொரு மலையைப் போல இல்லை என்பதை நிச்சயமாகத் அறிந்துவைத்திருக்கின்ற போதும், பூமியிலிருந்து நீண்டு வானத்தை முத்தமிடும் அனைத்திற்கும் ‘மலை’ என்று பெயர் சூட்டியிருக்கின்றோம். மற்ற மேகங்களைப் போலவே, என்னுடையது போல் எந்த கனவும் இல்லை. எந்த மேகமும் இன்னொன்றைப் போல் இல்லை, எந்தக் கனவும் எனது போல் இல்லை என்று அறிந்திருந்தும் மேகம், கனவு என்ற பொதுப்பெயரிலேயே அவற்றை அடையாளப்படுத்துகின்றோம்.
ஆனால் ஒத்திசைவு சார்ந்த உணர்வின் மூலம், ஒரே மாதிரியான விஷயங்களைக் கொண்டதும் ஒற்றைத்தன்மை கொண்டதுமான தொகுப்புகளை நாம் உணரவும்; உருவாக்கவும் முடியும்.
நிரப்பு கூறுகளாலான பன்முகத் தொகுப்புகளையும் நாம் உணர முடியும். ஒருபோதும் இரண்டு வெவ்வேறு ஆறுகள் ஒரே பாதையில் ஓடுவதில்லை. ஆனால் எல்லா நதிகளிலும் தண்ணீரே ஓடுகிறது – அது உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆறாக இருக்கலாம் அல்லது மலையின் மிகச்சிறிய நீரோடையாக இருக்கலாம். அவற்றின் கரைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அனைத்து நதிகளும் அவற்றினூடாக ஓடும் நீரை வழிப்படுத்துகின்றன. அதேபோல ஆற்றுப்படுகைகளில் உள்ள கற்களும் எடை மற்றும் வடிவத்தில் ஒரே மாதிரியானவை அல்ல.
காடுகளை ஒரே மாதிரியான மரங்களின் திரளாக நாம் உணர முடியும், ஆனால் அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குக்கூட்டமும் அங்கு இல்லை. இருப்பினும் கூட்டத்தின் ஒவ்வொரு மிருகமும் குறிப்பிட்ட தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன. அதேபோல் மனிதர்களில் எவரும் இன்னொருவர் போல் இல்லாத போதும் மனிதக்கூட்டாகப் (திரளாக) பார்க்க முடியும்.
மனிதனின் பன்முகத்தன்மை
ஒரு மனிதன் என்பது கூட பன்முகத்தன்மை கொண்ட தொகுப்பாகும். நிரப்புகூறுகளாலான திரளே மனித உடலும். மனித உடலுக்கு தலை, கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகள், குருதிநாளங்கள், நரம்புகள், முடி, தோல் எனவாகப் பல நிரப்புகூறுகள் உள்ளன. ஒரு கல் சாம்பல் நிறமாக இருந்தாலும், உள்ளூர அது பல வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மேற்பரப்பில் வட்டமாகத் தோன்றினும்கூட, அதன் மேற்பரப்பில் பல்வேறு வடிவ மாறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
இயற்கையைப் பற்றிய நமது புலனுணர்தலை எளிமையாக்குவதன் மூலம் நாம் அதிர்ச்சியின்றி வாழலாம். ஒன்றில் ஒத்த உயிரினங்கள் மற்றும் பொருட்களின் ஒத்திசைவான தொகுப்புகளாக அல்லது வேறுபட்ட உயிரினங்களின் மற்றும் பொருட்களின் நிரப்புகூறுகளின் தொகுப்புகளாக முறைப்படுத்தப்படலாம். இந்த எளிமைப்படுத்தலில் வேறுபாடுகள் மற்றும் தனித்துவமான அடையாளங்களின் செழுமை தொலைந்து போவதோடு, ஒருபோதும் மீள அணுக முடியாதவையாகவும் ஆகின்றன. இந்த எளிமைப்படுத்தல், நமது கற்பனையின் அங்கமே தவிர இயற்கையின் பன்முகத்தன்மையின் விளைவல்ல. இது ஒரு கவசம் போல் தொழிற்பட்டு உண்மையான புறத்தோற்றங்களை மட்டுமே அணுக அனுமதிப்பதோடு, தோற்றங்களைக் கணிப்பிடவும் வழிகோலுகின்றது. மனிதர் நாம் எமக்குள் தொடர்பு கொள்ள, இந்த தொகுப்புகளுக்கு பெயரிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.
இந்த எளிமைப்படுத்தல், நமது கற்பனையின் அம்சமே அன்றி, இயற்கையின் பன்முகத் தன்மையின் கூறு அல்ல. இது ஒரு கவசம் போல் செயல்படுவதோடு, உண்மைத் தோற்றங்களை மட்டுமே அணுக அனுமதிக்கிறது. மேலும் இந்த தோற்றங்களின் மீது நாம் எமது கணிப்புகளை நிகழ்த்த முடியும். மனிதர்களாகிய நாம் நமக்கிடையிலான தொடர்பாடலுக்கு ஏதுவாக இந்தத் தொகுப்புகளுக்கு பெயரிடப்பட வேண்டியுள்ளது.
இத்தொடரின் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன.
மின்னஞ்சல் – svrooban@gmail.com