Tuesday, January 27, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்நெடுநாள் படு பாணம்

நெடுநாள் படு பாணம்

சுதா ஶ்ரீநிவாஸன்

மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன், அவன் கமலக் கண்களால்!

“அன்னையே, ஏன் வாட்டமுற்றிருக்கிறீர்கள்?”

அன்னையா? யார் இவர்கள்? இது என்ன இடம்? இனிய சோலையின் நடுவே குடில்கள்-ஏதோ முனிவரின் தவச்சாலை போல் தோன்றுகிறதே! 

மெதுமெதுவே நிலை மீண்டேன். இந்த நிலையழிவு சில காலமாக நிகழ்ந்தவாறு இருக்கிறது.

“நீங்கள் இன்று வேள்விப் பொருட்கள் கொணர செல்லவில்லையா? முனிவரின் கட்டளை யாது?”

“குருவின் ஆணைப்படி காட்டினுள் செல்லத்தான் கிளம்பினோம். தங்களிடம் சொல்லிச்செல்லவே வந்தோம்.”

“தங்களுக்கு என்னவாயிற்று, அன்னையே? சில நாட்களாகவே தாங்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து காணப்படுகிறீர்கள்!”

“ஒன்றுமில்லை, குழந்தைகளே! நீங்கள் சென்று வாருங்கள். குருவைக் காக்க வைப்பது பெரும்பாவம்.”

லவகுசர்கள் செல்லும் பாதையைப் பார்த்தவாறிருந்தேன்.

இதே பாதையில் தானே அன்றொரு நாள் நான் வந்தேன்! அயோத்தியின் நகர நெரிசலில் இருந்து விலகி வரும்பொழுதும், மரங்களும் சுனைகளும் நிறைந்த வால்மீகி முனிவரின் தவச்சாலையில் நுழையும்பொழுதும் எவ்வளவு மகிழ்ந்திருந்தேன்!

கரு தரித்திருந்ததன் சோர்வு. அத்துடன் அரண்மனையின் பொறுப்புகளும் முறைமைகளும் தரும் நிலையழிவு. ஆகையால் வனத்திற்கு செல்லச் சொன்னபொழுது மிகுந்த உற்சாகம் அடைந்தேன். ராமன் உடன் வராததோ, லக்ஷ்மணன் அழைத்து வந்ததோ எனக்கு பொருளாகவில்லை.

நகரை விட்டு வெளிவந்த உடனேயே பிணையுண்ட சங்கிலியிலிருந்து விடுபட்ட உணர்வை அடைந்தேன். ஆங்காங்கே தேரை நிறுத்தச் சொல்லி செடிகொடிகளை தழுவி மகிழ்ந்தேன். மலர்களை சூடிக்கொண்டேன். சுனைகளில் துள்ளும் மீன்களுடன் சேர்ந்து துள்ளினேன்.

ராமன் உடன் வந்திருக்கலாம்! அரசப் பணிகள் ஓய்வதேயில்லை. அதனால் வரும் சோர்வும் கூட. நான் கிளம்பும்பொழுது வழியனுப்பக்கூட வரமுடியவில்லை. பாவம்!  வனவாசத்தில் எவ்வளவு மலர்ந்திருந்தார்! அவர் பறித்தளித்த மலர்களுக்கும் அவர் முகத்திற்கும் வேறுபாடு கண்டேனில்லை! தாமரை போன்றிருந்தது அவர் முகம்.

ராமனைப் பற்றிய நினைவுகளில் தேர் தவச்சாலையை அடைந்துவிட்டதை நான் உணரவில்லை. “அரசி!” லக்ஷ்மணனின் குரல். 

தேரினை எதிர்நோக்கியிருந்த வால்மீகி முனிவரின் திருவடிகளை வணங்கினேன்.

“இங்கு நீ நிறைவுறுக!” என்று அவர் வாழ்த்த, குழப்பத்துடன் நிமிர்ந்து நோக்கினேன். லக்ஷ்மணனின் சொல்லற்ற பயணமும் நிலம் தாழ்ந்த நோக்கும் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

அவனை நோக்கி “என்னை திரும்ப அழைத்துச்செல்ல அவர் என்று வருவார்?” என்றவளுக்கு மௌனமே பதிலாயிற்று.

ஆயிற்று! பன்னிரண்டு ஆண்டுகள்! இலங்கையில் பத்து மாதங்கள் பத்து யுகங்களென நீண்டன. ஆனால், இங்கு? விதேஹ நாட்டில் இருப்பது போன்றே அல்லவா நான் உணர்கிறேன்? வால்மீகி முனிவரின் பரிவா, என் மைந்தர்களைப் பேணும் பொறுப்பா எது இந்த பன்னிரண்டு வருடங்களை மிகக் குறுகியதாக ஆக்கியது என்று தெரியவில்லை.

ஆனால் சில காலமாக இந்த நிலையழிவு அவ்வப்பொழுது ஏற்படுகிறது. இப்பிறப்பின் மாயத்தையே மறக்கும்படியான பெரு மயக்க நிலை! மண்நீங்கும் காலம் அருகிவிட்டது என்று உணர்கிறேன். ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அதைத் தடுப்பது போன்றும் உள்ளது.

யாரிடமேனும் தரவோ பெறவோ ஏதும் எஞ்சியுள்ளதா? நினைவுகளை திசைகளின் எல்லை வரை நீட்டியும் ஒன்றும் தெளிவுறவில்லை. ஏதோ ஒன்று நிழல்போல் உறுவதும் கலைவதுமாக இருக்கிறது.

எண்ணிச் சலித்து எப்பொழுதும்போல அச்சிந்தனையை விலக்கிவிட்டு நான் குடிலுக்குள் புக முற்படுகையில் அவளைக் கண்டேன். சூர்ப்பணகை!

ஆம்! இதுதான், இவள்தான்!

நிலவற்ற கடல் போல் என் மனம் அலை அடங்கத் தொடங்கியது.

அவளும் என்னைக் கண்டுவிட்டாள். ஒரு கணம் தயங்கியவள் வேகம் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். பற்கள் கடிபட, விழிமணிகள் தெறிக்க, நரம்புகள் புடைக்க என் கழுத்தை நெரிப்பதுபோல் பிடித்தாள். எனக்கே ஆச்சரியம் தந்த என் அச்சமற்ற அசைவின்மையை அவளும் உணர்ந்தாள் போலும். பிடியை விட்டுவிட்டு குரலெடுத்து நகைத்தாள்.

“அஞ்சிக் கூவ மாட்டாயா? ஓ! இங்கே உன் கூக்குரலுக்கு ஓடிவந்து காப்பாற்றும் வீரர்கள் இல்லையல்லவா? ஐயோ பாவம்!”

என் மனம் முற்றடங்கியது.

அவளை உள்ளே வரும்படி கைகாட்டிவிட்டு குடிலுக்குள் சென்றேன்.

வந்தவள் சுற்றிலும் பார்வை சுழல நான் இட்ட ஆசனத்தில் அமர்ந்தாள்.

“எங்கே உன் மைந்தர்கள்? இரட்டையர் அல்லவா?”

தலையசைத்தேன்.

“அவர்கள் தந்தையிடம் செல்ல விழையவில்லையா? ஒருவேளை அவர்களையும் அவன்…”

“என் மைந்தரிடம் அவர்கள் தந்தை சக்ரவர்த்தியென்று கூறவில்லை.”

இவளிடம் நான் ஏன் காரணங்கள் கூறிக்கொண்டிருக்கிறேன்?

இந்த எண்ணம் என்னில் ஏதேனும் அசைவாக வெளிப்பட்டதா? அவள் என் முகத்தையே கூர்ந்து நோக்கியவாறிருந்தாள்.

“நீ எப்படி… எதன் பொருட்டு இங்கு வந்தாய்?”

“உன்னைக் காணவே வந்தேன்.”

“என்னையா? எதன் பொருட்டு? நான் இங்கு இருப்பது முன்னரே தெரியுமா?”

அவள் உதடுகள் அசைய ஏதோ கூற முயன்றாள். சொல் திரளாமல் மௌனித்தாள். தனக்குத்தானே எதையோ மறுப்பவள்போல கையசைத்தாள். எட்டி அவள் கையைப் பற்றினேன். அத்தொடுகையில் அவள் உடல் குதிரைபோல் சிலிர்ப்பு கொண்டது.

“சொல், சூர்ப்பணகா. எதன் பொருட்டு வந்தாய்?”

அவள் முகத்தில் அந்திநேர வானின் வண்ணம்போல உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன.

எண்ணியிராமல் “அவனது பிரிவு உன்னை வருத்தவில்லையா?” என்றாள்.

இதற்கு என்ன பதில் கூற? ஆமென்றோ இல்லையென்றோ உரைக்கக் கூடுமா? வருத்தமும் கசப்பும் தாண்டிய என் நிலை இவளுக்கு புரியுமா? இலங்கையில் தீக்குளித்த அன்றே என்னில் தோன்றிய எண்ணத்தை நானே இங்கு வந்தபின்தானே தெளிவுற உணர்ந்தேன். அதை சொற்களில் வடிக்க முடியுமா? சொல்லி என்ன ஆகப்போகிறது?

“சொல், சீதா. நீ வருந்தவில்லையா?”

தலையுயர்த்தி அவளை நேராக நோக்கினேன்.

“இதை அறியவா என்னைத் தேடி வந்தாய்?”

“அது… நான்…”

அவள் மீண்டும் வார்த்தையின்றி வாயையும் கையையும் அசைக்கலானாள். மூச்செறிந்தாள். செல்பவள்போல் எழலுற்றாள். மீண்டும் அமர்ந்தாள். பின் சிந்தனைக் கலைந்தாள்.

“போர் முடிந்த பின்னர் நான் எதிர்பார்த்தபடி விபீஷணன் என்னைப் பழிக்கவில்லை. ஆகவே சில நாட்களிலேயே நான் எந்த குற்றவுணர்வும் இல்லாமலானேன். என் உள்ளத்தில் தைத்த காம பாணம் வருடங்கள் கடந்தும் என் உயிரைக் கடைந்து கொண்டிருந்தது. நான் அயோத்திக்குச் சென்றேன்.”

என் கண்கள் வியப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

“உன்னால் நம்பமுடியவில்லையல்லவா? என்னாலும் முடியவில்லை. நானறியா விசை ஒன்றால் செலுத்தப்பட்டவள் போல் அங்கு சென்றிருந்தேன். அதன் பின்னரே நீ அங்கு இல்லை என்று அறிந்தேன்.”

நான் கூறாத பதிலைத் தானாக தேடுபவள்போல அவள் என் முகத்தை உற்று நோக்கினாள்.

“நீ நாடுவிட்டு சென்றதன் காரணத்தை அறிந்தபோது பரவசமானேன். உன்னை விழைந்ததனால் உயிரிழந்த என் தமையன் நிறைவுறுவான் என்று மகிழ்ந்தேன். என் விருப்பம் நிறைவேற இனி தடையில்லை என்று என் மனத்தினுள் ஒரு குரல் ஒலித்தது.”

சூரியஒளி பட்டு அவள் முகம் ஒளிர்ந்தது.

“மறைந்திருந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அவன் வேறு மணம்புரிந்திருப்பானோ என்று ஐயுற்றேன். உனக்கு அந்த ஐயம் ஏற்படவில்லையா?”

நான் தலையசைத்தேன்.

“ஏன்? உனக்கு வாக்களித்ததனாலா? அதை நீ நம்புகிறாயா?”

இவள் நோக்கம் என்ன? என்னில் பொறாமையைத் தூண்டுவதா?

“அவன் அஸ்வமேத யாகம் இயற்றவிருக்கிறான், அறிவாயல்லவா?”

“ஓ!”

“மனைவி உடன் இல்லாது யாகம் இயற்றமுடியாதே! அதை உணர்ந்தவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைவிட அதை நீ எப்படி எதிர்கொள்வாய் என காண விரும்பினேன்.”

என் புன்னகை அவளை சீற்றம்கொள்ளச் செய்தது.

“உன் உள்ளத்துடிப்பை புன்னகையால் மறைக்க முயல்கிறாய்.”

“இல்லை…”

“நடிக்காதே! உன் துயரம் கண்டு நான் மகிழக்கூடாது என்று மறைக்கிறாய்! நான் அறிவேன்.”

பாவம்! பேதை!

“சிரிக்காதே! உன்னை…”

என் கழுத்தை நோக்கி நீட்டிய கை அந்தரத்தில் நின்றது.

“இல்லை, நீ அறிந்திருக்கிறாய்! அதனால்தான் பதற்றம் கொள்ளவில்லை.”

“சூர்பணகா! உண்மையில் நான் அங்கு நடப்பது ஏதும் அறியேன். நான் அறிய விழையவுமில்லை.”

சீற்றமும் வியப்பும் துயரும் அவளில் ஒருங்கே தோன்றின. இவள் என்னிடம் என்னதான் எதிர்பார்க்கிறாள்?

அவள் விழிகள் மெதுவே வெறிப்புற்றன. தனக்குத்தானே என “நான் கொண்ட ஏமாற்றத்தை தணிக்க உன்னை எரியச்செய்யலாம் என வந்தேன். ஆனால்…” என்றாள்.

அவள் சொற்கள் பொருள்படாத தூரத்திற்கு என் சிந்தனை அகன்று கொண்டிருந்தது.

“அவன் மீண்டும் மணம்கொள்ளவில்லை. உன்னைப்போல் பொற்பதுமை உருவாக்கியிருக்கிறான். யாகத்தில் அது அவனருகில் வீற்றிருக்கிறது. இரவில் யாருமற்ற சமயத்தில் நான் அச்சிலையை அணுகினேன். எதற்கென்று நானே அறியவில்லை. அருகணைந்த பொழுது அவனைக் கண்டேன். அச்சிலையின் முன் மண்டியிட்டிருந்தான். கொண்டல் பொழி மாரியென கண்களில் நீர்ப்பெருக்கு. சீதா, அக்கணம் நான்…”

அவள் என்னை உலுக்கினாள். “சீதா!”

“யார்? ஓ! சொல்.”

“நான் சொன்னவற்றை நீ செவியுற்றாயா? அல்லது…”

நான் வெறுமனே தலையசைத்தேன்.

“அவன் யாகத்தில் தன்னருகே அமர்த்த உனது பதுமையை வடித்திருக்கிறான், தனிமையில் அதன் முன் கண்ணீர் வடிக்கிறான் என்று சொன்னேன்…”

“ஓ!”

“உனக்கு கொடுத்த வாக்கை அவன் மீறவில்லை என்பதில் உனக்கு மகிழ்வில்லையா?”

“…”

“சரி, விடு. இன்று அவ்வாக்கினால் உனக்கு என்ன பயன்?”

மீண்டும் அவள் முகத்தில் அகத்தின் கொந்தளிப்பு.

“ஆனால்… எரி புகுந்து மீண்ட பின்னும் உன்னை இவ்வாறு அனுப்பியதை நீ ஏன் ஏற்றாய்?”

“நான் என்ன செய்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறாய்?”

“நீதி கேட்டிருக்க வேண்டும். அரசியாக அல்ல, ஒரு பெண்ணாக. நீ மௌனமாக இதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பெண்களை தங்கள் எண்ணம்போல் சிறுமைப்படுத்தும் ஒரு சமூகம் உருவாகும் அல்லவா?”

“நான் இங்கு வந்த சில நாட்களில் அன்னை அகலிகை என்னைக் காண வந்தார். ‘ராமனை கண்டு அவன் கௌதமரிடம் சொன்ன வார்த்தைகளனைத்தும் வெறும் வேஷம்தானா என்று கேட்கப்போகிறேன்’ என்றார். நான் ஒப்பவில்லை.”

“ஏன்? நீதான் எதிர்க்கவில்லை, அவர் கேட்பதில் உனக்கு என்ன தடை?”

“அதனால் என்ன நன்மை விளையும்? மக்கள் பேசுவது நிற்குமா? ராமனுக்கு ஒரு சாராரும் எனக்கு ஒரு சாராரும் பரிந்து பேசுவார்கள். எந்த விழுமியங்களின் வடிவாக ராமனைப் பார்க்கிறார்களோ அவை அனைத்தும் புறந்தள்ளப்படும். நான் ராமனை எதிர்த்தது நிலைகொள்ளும்.”

“நீ மௌனமாக விலகியதனால் மட்டும் மக்கள் பேச்சு மாறிவிடுமா? உன் உயர்வை உணர்ந்து உன் காலடியில் விழுந்து உன்னை திரும்ப அழைத்துச்செல்வார்கள் என்று காத்திருக்கிறாயா? பைத்தியக்காரி!”

“இல்லை, நான் யார் வரவையும் எதிர்நோக்கவில்லை. ஆனால், ஒன்றுண்டு. ராமன் தன் மேல் வந்த முதல் பழிக்கு அஞ்சி என்னை விலக்கினார். ஆம், முதல் பழிக்கு அஞ்சாதவர்கள் பின்னர் எப்பழிக்கும் அஞ்சாதவர்களாய் மாறிவிடுவார்கள்.”

“இது உனக்கு நீயே கூறிக்கொள்ளும் சமாதானம்; வெற்றுச் சொற்கள். காமன் வில்லின் பாணம் என்னைச் சுட்டதினும் கொடிதாய் ராமன் சொல்லின் பாணம் உன்னைச் சுடவில்லையா?”

அது என்றோ வடுவாகிவிட்டது.

“மற்றொன்றும் நீ யோசித்துப்பார்! அறத்தின் மூர்த்தி என்று புகழ்கொண்டவனுக்கு இச்செயல் புகழ் சேர்க்குமா? அதை மறுப்பின்றி ஏற்ற நீ அவனினும் அதிகமாக பெண்ணினத்தை இழிவு செய்திருக்கிறாய்! ஒரு பெண்ணை எவரும் எதுவும் சொல்லலாம் என்ற நிலைக்கு இது கொண்டுசெல்லுமல்லவா?”

“அல்ல. இச்செயல் நிச்சயமாக ஒரு அதிர்வை ஏற்படுத்தும். மக்களை சிந்திக்கத்தூண்டும். ஒரு அரசனாக ராமன் செய்தது சரியென்றாலும், ஒரு கணவனாக இவ்வாறு செய்யலாமா, குற்றமற்றவள் தன் மனைவியென்று கணவன் அறிந்திருந்தாலும் அதில் பிறர் மாற்று சொல்வது முறையா என்பதான கேள்விகள் அவரவர் மனதில் தோன்றும். அக்கேள்விகள் காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும். என்றென்றும் மக்களின் மனசாட்சியிடம் உரையாடும். சொல்லற்ற சொல்லே மேலும் கூர்கொள்ளும்.”

அவள் முற்றிலும் குழப்பமுற்றவளாக தோன்றினாள்.   

“சூர்ப்பணகா, உன் வரவின் காரணம் நானறியேன். ஆனால் உன்னைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன் என்று உணர்கிறேன்.”

“என்னையா?, நீயா?”

“ஆம், உன்னைத்தான்.”

“எதற்காக?”

“என் பொருட்டு நீ அடைந்த துன்பத்திற்கு நான் வருந்துகிறேன் என்று சொல்வதற்காக.”

அவள் குழப்பம் மேலும் அதிகரித்தது.

“தண்டகாரண்யத்தில் நீ என்னை பற்றியபொழுது நான் அவ்வாறு கூச்சலிடாமல் இருந்திருந்தால் உனக்கு உடற்குறை ஏற்பட்டிருக்காதல்லவா? அகழ்வாரையும் தாங்குபவள் என் அன்னை. அவளது பொறை எனக்கு ஏன் இல்லாமலானது என்று வருந்துகிறேன்.”

ஏதோ சொல்ல முனைந்தவள் அதை விடுத்து என்னை வணங்கி வந்ததுபோலவே சுவடின்றி மறைந்துபோனாள்.

***

சுதா ஶ்ரீநிவாஸன் – மதுரையை சேர்ந்தவர். காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று கோவையில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : sudha1066@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here