அரிசங்கர்
திடீரென்று தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. பெங்களூருக்கு சென்றதிலிருந்து தொடர்ந்து ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். அங்கு பழக்கமான ஒரு நண்பர் தான் எனக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தார். அதாவது கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் பருவம் நாவல் ஆண்டிற்கொரு முறை முழு நாள் நாடகமாக மூன்று நாட்கள் போடப்படுகிறது என்றும் அது அடுத்த மாதம் நடைபெறப்போகிறது என்றும் அவர் தெரிவித்த நொடியிலிருந்தே எனக்கு அந்த நாடகத்திற்கு போக வேண்டுமென்ற ஆசை துளிர்விட ஆரம்பித்துவிட்டது. அதைப் பற்றி தேட ஆரம்பித்தேன். எட்டு மணி நேர நாடகம். காலை ஒன்பதரை முதல் மாலை ஏழு வரை நடைபெறும். இடையே உணவு மற்றும் தேநீர் இடைவேளைகள் உண்டு என்றும், உணவுடன் நாடகத்திற்கான நுழைவுக் கட்டணத்தைப் பார்த்ததும் கொஞ்சம் மனம் பின்வாங்கியது. ‘நாம இருக்கிற இருப்புக்கு இதெல்லாம் தேவையா?’ என்ற கேள்வியும் குழப்பமும் எனக்குள் ஏற்பட்டது. என்னுடைய விருப்பத்தையும் தயக்கத்தையும் ஊரிலிருந்த மனைவியிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தேன். “உங்களுக்கு பிடிச்சிருந்தா போயிட்டு வாங்க” என்று தெரிவித்தாள். இருந்தாலும் இரண்டு நாட்கள் அந்த தயக்கம் இருந்துகொண்டேயிருந்தது. டிக்கெட் புக் செய்ய போவேன். பிறகு பின் வாங்கிவிடுவேன். சில நண்பர்களிடம் இதைப் பற்றி தெரிவிப்பேன். அவர்கள் ஆர்வமுடன் விசாரிப்பார்கள். ஆனால், கடைசியில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சட்டென நாடகத்திற்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் வாங்கிவிட்டேன். அதன் பிறகு தயக்கம் மறைந்து நாடகத்தைப் பார்க்கப் போவதற்கான எதிர்பார்ப்பு மட்டுமே என்னிடம் இருந்துகொண்டிருந்தது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் அந்த நாடகத்திற்கு நான் சனிக்கிழமை நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தேன். வெள்ளிக்கிழமை அலுவலகம். ஞாயிறு அன்று நுழைவுச்சீட்டு தீர்ந்துவிட்டிருந்தது. எனவே சனிக்கிழமை. அதுவும் கொஞ்சம் பின்னாலிருந்து பார்க்கும் படிதான் கிடைத்தது. சரி இதுவும் நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொண்டேன். சனிக்கிழமை சுற்றிவிட்டு வந்தால் கூட ஞாயிறு முழுவதும் ஓய்வு எடுக்கலாம். வெள்ளிக்கிழமை அன்று அலுவலக நண்பர்களிடம் நாடகம் நடக்கும் இடத்திற்கு எப்படி செல்லலாம் என்று கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை பரிந்துரைத்தார்கள். பேருந்து, மெட்ரோ, ஊபர் என பல வழிகள். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிட்டதட்ட நாற்பது கிலேமீட்டர்கள். அதை நினைத்தப்போதுதான். வயிற்றில் புளியை கரைத்தது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் உலகறிந்தது. சமீபத்திய செய்தி ஒன்று, ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர் ஒருவரை துபாய் செல்வதற்காக விமான நிலையத்தில் விமானம் ஏற்றிவிட்டு திரும்பும்போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டனர். இவர்கள் வீடு போய் சேர்வதற்குள் உறவினர் துபாய்க்கே சென்றுவிட்டார். இந்த செய்தி இணையத்தில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதெல்லாம் நினைவுக்கு வர நான் என் பயணத்தை கவனமாகத் திட்டமிட்டேன். எல்லாம் சரி தூங்கி எழுந்து புறப்பட வேண்டியதுதான் என்று நான் வெள்ளிக்கிழமை இரவு உணவிற்குப் பின் நினைத்துக்கொண்டிருந்தபோது அறையின் கதவைத் திறந்துகொண்டு அவன் வந்தான்.
அவன் பெயர் ஆதித்தியா. மேல் அறையில் தங்கியிருக்கிறான். என்னுடைய அலுவலகத்தில் தான் வேலை செய்கிறான். எனக்கு இந்த விடுதியில் அறை ஏற்பாடு செய்துகொடுத்ததும் அவன் தான். எப்போதாவது அறைக்கு வருவான். எதாவது பேசியிருந்துவிட்டுப் போவான்.
அறைக்குள் நுழைந்ததும், “நாளைக் காலை எப்படிப் போகப்போகிறாய்” என்று ஆங்கிலத்தில் கேட்டான். எனக்கு கன்னடம் தெரியாது. அவனுக்கு தமிழ் தெரியாது.
“ஊபர்” என்றேன்.
“சரி, நானும் உன்னுடன் வருகிறேன்” என்றான். நான் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தேன். “நானும் டிக்கெட் எடுத்திருக்கிறேன்” என்றான்.
“ஓ… சரி, எனக்கு வசதியாக இருக்கும். மொழி தெரிந்த ஒருவன் துணைக்கு இருந்தால் நல்லதுதான்” என்றேன்.
“சரி, காலை ஏழரை மணிக்கு புறப்படலாம். நீ எழுந்ததும் எனக்கு போன் செய்து எழுப்பிவிடு. பை” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.
தனியாக அலைய வேண்டியதில்லை என்ற நிம்மதியோடு தூங்கச் சென்றேன்.
மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து ஊபருக்கு புக் செய்துவிட்டு வண்டி வரக் காத்திருந்தோம். ஆதித்யா யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. சாலையை எட்டிப் பார்த்து யாரையோ எதிர்பார்த்து தேடிக் கொண்டிருந்தான். வண்டி தான் வருகிறதா என்று பார்க்கிறான் என்று முதலில் நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் வண்டி வந்து நின்ற பிறகும் அவன் எங்களைக் காத்திருக்க சொல்லிவிட்டு யாரோயோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தனது கைபேசியை எடுத்து யாரையோ அழைத்து எங்கே இருக்கிறாய் என்று கேட்டான். பிறகு எங்களிடம் திரும்பி இரண்டு நிமிடம் காத்திருங்கள் என்றான். சரி அவனுடன் இன்னொருவர் யாரோ வருகிறார் என்று நினைத்துக் கொண்டேன். நான் வேறு ஒரு திசையில் பார்த்துக் கொண்டிருக்க அவள் என் பின்னால் வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்று அவன் என்னை தட்டி அழைத்து அவளை அறிமுகப்படுத்தும் போதுதான் நான் தெரிந்து கொண்டேன். நான் லேசாக சிரித்து விட்டு புறப்படலாம் என்று அவனிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, நான் ஓட்டுநரின் அருகில் உட்கார்ந்து கொண்டேன். எங்கே போக வேண்டும் என்று அவன் அவரிடம் கன்னடத்தில் தெரிவித்தான். பிறகு எங்கள் பயணம் தொடங்கியது. சென்று சேரும் வரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். பல நேரம் சண்டையிட்டனர். கிட்டத்தட்ட இரண்டு எதிர்க்கட்சிக்காரர்களைப் போல சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருமே அரசியல் ரீதியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் ஆதரித்த மதவாத கட்சியை அவள் தீவிரமாக எதிர்த்தாள். இருந்தாலும் அவர்களிடம் ஒரு நெருக்கம் இருந்தது. அவர்களின் பேச்சின் ஊடாக அவனை விட அவள் பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன். இடையே அவள் என்னிடம் ஏதாவது கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் முடிந்த அளவுக்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள் எனது பதிலை தெரிவித்து விட்டு அமைதியானேன். சரியாக எட்டு முப்பதுக்கு நாங்கள் போய் சேர வேண்டிய இடத்தை அடைந்தோம். வண்டியை விட்டு இறங்கியதும் ஊபருக்கு நானே பணம் கொடுத்தேன். பிறகு அங்கிருந்து காலை உணவு சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டலுக்கு நடந்துச் சென்றோம். சிறிய நல்ல ஓட்டல். உணவும் தரமாக இருந்தது. காலை உணவுக்கும் நானே பணம் கொடுத்தேன். பிறகு அவன் என்னிடம் வந்து, போகும் போது இரவு உணவிற்கும் வாகனத்திற்கும் அவன் பணம் கொடுப்பதாக தெரிவித்தான். நான் சரி என்ற தலையாட்டினேன். நாங்கள் மூவரும் நாடகம் அரங்கத்திற்குள் நுழைந்தோம். கூட்டம் நிரம்பியிருந்தது. முழு அரங்கும் நிரம்பிவிடும் என்று தோன்றியது. பைரப்பாவின் புத்தகங்களை ஓர் இடத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கும் பெரும் கூட்டம். ஒரு பத்து நிமிடம் காத்திருப்பிற்குப் பின் நாங்கள் அரங்கினுள் நுழைந்தோம். இதுவரை அப்படி ஒரு அரங்க அமைப்பையோ அவ்வளவு பெரிய அரங்கையோ நான் பார்த்ததில்லை. சிறிய நாடகங்களையும் தெருக்கூத்துக்களையும் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஆச்சரியமாகவும் ஒரு வகையில் புதிய அனுபவமாகவும் இருந்தது. வந்திருந்த கூட்டத்தினர் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களே. யாரும் பெரும் பணக்காரர்கள் போல் தெரியவில்லை. நிறைய பேர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். இவ்வளவு பணம் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு குடும்பமாக வருகிறார்கள் என்று எனக்கு ஒரு வகையில் ஆச்சரியமாக தான் இருந்தது. நான் ஒரு இடத்திலும் அவர்கள் இருவரும் என்னிலிருந்து ஒரு இரண்டு வரிசை முன்னாள் சற்று தள்ளியும் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். இடைவேளையின் போது சந்தித்துக் கொள்ளலாம் என்று பேசிக்கொண்டோம். சரியாக 9:40க்கு நாடகம் தொடங்கியது.
நாடகத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். மொழி புரியவில்லை என்றாலும் அந்த முழு நாவலையும் நான் ஏற்கனவே வாசித்துவிட்ட காரணத்தால் என்னால் ஓரளவுக்கு என்ன நடக்கிறது என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. நாடகத்தின் இடையே ஒரு நெருக்கமான காட்சியும் இருந்தது. பீமனும் திரௌபதியும் இருக்க அணைத்துகொண்டு காதல் ரசம் சொட்ட பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. முழு அரங்கிலும் அதிர்ச்சியடைந்தது நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். வேறு யாரும் அந்த அதிர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை அல்லது ஒரு வேலை இந்த இருட்டில் எனக்கு தெரியாமலும் இருக்கலாம். ஒரு சிலர் அந்தக் காட்சிக்கு கைதட்டினார்கள். இடைவெளியின் போது ஒன்றாகவே தேநீர் அருந்தச் சென்றோம். மதிய உணவு ஒன்றாகவே சாப்பிட்டோம். ஒரு வழியாக மாலை ஏழு முப்பதுக்கு நாடகம் முடியும் தருவாயை எட்டியது. அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டினார்கள். நானும் எழுந்து நின்று கை தட்டினேன். நாடகத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களும் மேடையில் வரிசையாக நின்று அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, பிறகு மேடையில் இருந்து மெதுவாக இறங்கி வணக்கம் சொல்லியபடியே முழு அரங்கத்தையும் சுற்றி வந்தார்கள். உண்மையில் அப்போதுதான் ஒவ்வொரு நடிகரின் முகத்தையும் நான் நெருக்கத்தில் பார்த்தேன். நான் இருந்த இடத்திலிருந்து எந்த ஒரு முகமும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை.
ஆதித்தியா நகர்ந்து என்னை நோக்கி வருவதைக் கண்டு, புறப்படலாம் என்று சொல்லத்தான் வருகிறேன் என்று நினைத்தேன். என் அருகில் வந்து, நாங்கள் இருவரும் நாடகம் முடிந்ததும் பக்கத்தில் உள்ள மாலுக்கு ஷாப்பிங் போகிறோம் வருவதற்கு தாமதமாகும் நீ புறப்படு என்று சொன்னதும் நான் ஒரு நொடி கோபத்தின் உச்சிக்குச் சென்றேன். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. சரி இருந்தாலும் இது அவர்கள் விருப்பம். அவர்கள் தேர்வு. நான் எதுவும் சொல்லவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் நின்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதன் பிறகு என்னால் அங்கு நிற்க முடியவில்லை. புறப்பட்டு விடலாம் நேரமாகிவிட்டது இனி போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலைக்கு சட்டென வந்துவிட்டேன். எப்படி போகப்போகிறோம் என்ற தவிப்பும் உள்ளுக்குள் குடி கொண்டது. நான் அவனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்க்க விரும்பவும் இல்லை. இன்று இரட்டை செலவு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் அரங்கை விட்டு வெளியேறினேன். ஒருவேளை தனியாக வந்திருந்தால் தனியாகத்தானே சென்றிருப்போம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். வெளியே பேய் மழை பெய்துகொண்டிருந்தது.
அரங்கத்தை விட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்துக் கொண்டு எப்படியாவது போய்விடலாம் என்று முடிவு எடுத்தேன். எப்படியும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பணம் செலவாகும் என்று தெரியும். இருந்தாலும் அறைக்கு சென்று படுத்துவிட்டால் போதும் என்று தோன்றியது. ஏனோ தெரியவில்லை படபடப்பு அதிகமாகவே இருந்தது. வெளியே வந்து நான் போக வேண்டிய இடத்தை குறிப்பிட்டு ஏதாவது வண்டி கிடைக்கிறதா என்று எனது கைபேசியில் முயற்சி செய்தேன். பதினைந்து நிமிடம் முயற்சி செய்தவாறு காத்திருந்தேன். ஒரு வாகன ஓட்டுநரும் எனது அழைப்பை ஏற்கவில்லை. அவ்வளவு நேரமும் அரங்கில் இருந்து யாரும் வெளியேயும் வரவில்லை. உள்ளே அதன் பிறகு வேறு எதுவும் நடந்து கொண்டு இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு ஒருவன் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். என்னை ஃபோனில் அழைத்து இந்த இடத்தில் நிற்கிறேன் வா என்றான். அவன் சொல்கிற இடம் எது என்று எனக்கு தெரியவில்லை.
அருகே ஒரே ஒரு பெண் மட்டும் நின்றுகொண்டிருந்தாள். அவளிடம் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அவள் வேகமாக கன்னடத்தில் பதில் சொன்னால். அவளை இடைமறித்து எனக்கு கன்னடம் தெரியாது என்றேன். அவள் ஆச்சர்யமாக, பிறகு எப்படி இந்த நாடகத்தைப் பார்த்தாய் என்று ஆங்கிலத்தில் கேட்டாள். நான் அந்த நாவலை தமிழில் படித்திருக்கிறேன் என்றேன். பிறகு வெளியே சென்று இடதுபுறம் திரும்பி நட, சிக்னல் அருகில் என்றாள்.
மழையில் நனைந்து கொண்டே ஓடினேன். அங்கிருந்த நான்கு முனை சாலையில் நின்று கொண்டு மீண்டும் அவனை அழைத்தேன். அவன் எங்கே வரச் சொல்கிறான் என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பிறகு அவனுடைய அழைப்பையும் அந்த கோரிக்கையும் துண்டித்து விட்டு அருகில் இருந்த ஒவ்வொரு ஆட்டோவாக நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வர முடியுமா என்று கேட்டேன். ஒருவருமே வர விரும்பவில்லை, வர முடியாது என்று மறுத்தனர். அவ்வளவு தூரமா என்றனர், முடியாது என்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஒரு இடத்தில் ஒதுங்கி பத்து நிமிடமாக நின்றுகொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று இரவு இன்னும் எவ்வளவு நீளப் போகிறது என்று அச்சம் எனக்குள் மெல்ல ஒரு புகையைப் போல நுழைந்தது. பிறகுதான் திரும்பிப் பார்த்தபோது நான் நின்று கொண்டிருந்தது ஒரு மெட்ரோ ஸ்டேஷனின் வாசல் என்று தெரிந்ததும் உள்ளே நுழைந்து இங்கிருந்து நான் போகும் இடத்திற்கு அருகில் ஏதாவது மெட்ரோ போகிறதா என்று தேடிப்பார்த்தேன். மெஜஸ்டிக் வரை மெட்ரோ போகிறது என்று தெரிந்து கொண்டேன். எனக்கு தெரிந்த ஒன்று இரண்டு இடங்களில் மெஜஸ்டிக்கும் ஒன்று. மெஜஸ்டிக் பெங்களூரின் மத்தியில் உள்ள ஒரு இடம். அங்கு சென்று விட்டால் அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் சென்று விடலாம் என்று முடிவு செய்து மெஜஸ்டிக்கிற்கு ஒரு நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு வேகமாக ஓடினேன். சரியாக நான் போய் சேர்ந்து இரண்டு நிமிடத்தில் ஒரு மெட்ரோ ட்ரெயின் வந்தது. ட்ரெயினில் ஏறிய உடனே தான் எனக்கு பாதி உயிர் திரும்பி வந்தது.
பத்து நிமிடங்களிலேயே மெஜஸ்டிக் ஸ்டேஷனை அடைந்துவிட்டேன். அங்கிருந்து இறங்கி வெளியே வந்தேன். மழை லேசாக ஆனால் விடாமல் பெய்துகொண்டிருந்தது. இங்கிருந்து ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்ற முயற்சி செய்தேன். அங்கிருந்த ஒருவரும் தயாராக இல்லை. மழை. பெரும் கூட்டம். கடும் போக்குவரத்து நெரிசல். நேரம் ஒன்பதரையைக் கடந்திருந்தது. பசி ஏற்கனவே வந்து அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் உடல் நடுக்கம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை. சாப்பிட்டே ஆக வேண்டும். அதையும் மீறி வீட்டுக்கு சென்றால் போதும் என்ற மனநிலையே எனக்குள் இருந்தது. நான் விசாரித்து வர மறுத்த ஒரு ஆட்டோ டிரைவர் நீண்ட நேரமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘ஹலோ” என்று அழைத்தார். நான் அவரிடம் சென்றதும், “தமிழா” என்றார்.
“ஆமாம்” என்றேன்.
பிறகு அவர் ஒரு இடத்தை சொல்லி அந்த இடத்தில் இறக்கி விடுவதாகவும் அங்கிருந்து நீ போகும் இடத்திற்கு சுலபமாக பேருந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு மேல் என்னால் வர முடியாது என்றார். ஆனது ஆகட்டும் என்று நான் ஏன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவை இயக்கியவர், குனிந்து நீ வரியா அம்மா எதிரில் யாரையோப் பார்த்து கன்னடத்தில் கேட்டார். யாரிடம் கேட்கிறார் என்று நான் சற்று குணிந்து பார்த்தபோது தூரத்தில் ஒரு பெண்ணும் அவள் அருகில் ஒரு ஐந்து வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். அவள் சரி என்றாள். ஆட்டோ டிரைவர் திரும்பி என்னை பார்த்து “அவங்களும் தூரமா போகனும். ஆட்டோ கிடைக்கல. உங்க இடத்துல அவங்களையும் இறக்கி விட்டருறேன். அவங்களும் பஸ் பிடிச்சு போயிடுவாங்க. உங்களுக்கு ஓகேவா?” என்றார். நான் “சரி” என்று சொல்லிவிட்டு நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன். அவளும் குழந்தையும் என் அருகில் உட்கார்ந்து கொண்டனர். அவளுக்கும் எனக்கும் நடுவில் குழந்தையை உட்கார வைத்தாள். பிறகு அவன் எழுந்து சென்று அவள் மடியில் உட்கார்ந்து கொண்டான். ஆட்டோ மெல்ல நகரத் தொடங்கியதும் என் மனைவியிடம் இருந்து வீடியோ கால் வந்தது.
வீடியோ காலை கட் செய்து விட்டு சாதாரணமாக கால் செய்து “சென்று கொண்டிருக்கிறேன் போனதும் அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு போனை அணைத்தேன். சரியாக அதே நேரம் அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து அவள் ஏதோ இந்தியில் பேசினால். சற்று நேரத்தில் பேச்சு வாக்குவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் அவள் அழுது கொண்டே போனை அணைத்து பைக்குள் போட்டுக் கொண்டாள். அவள் தன் கணவனிடம் தான் சண்டையிட்டாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவன் “திரும்பி வராதே, வந்தால் கொன்றுவிடுவேன்” என்று சொன்னது லேசாகக் கேட்டது. போனை அணைத்து பைக்குள் போட்ட சில நொடிகளில் அவள் அழ ஆரம்பித்தாள். அவள் மகனும் அம்மா அழுவதைப் பார்த்து அழ ஆரம்பித்தான். ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் போக்குவரத்து நெரிசலில் இரு பக்கமும் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் முறைத்தார்கள். எப்போது வேண்டுமானாலும் யாராவது ஒருவன் இறங்கி வந்து என் சட்டையைப் பிடித்து விடுவான் என்பது போல் ஒருவித பயம் எனக்கு தோன்றியது. நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ நகர மிகவும் சிரமப்பட்டது. அவள் மெல்ல மெல்ல தன் அழுகையை நிறுத்தினாள். எனக்குள் லேசாக பயம் அதிகரித்தது. இவளும் அந்த ஆட்டோ டிரைவரும் ஒரே கூட்டாக இருந்து, ஏதாவது ஒரு இடத்தில் என்னை மடக்கி எதாவது செய்ய முயற்சித்தால் என்ற விபரீதமான யோசனை எனக்குள் எட்டிப்பார்த்தது. ஆனால் அவ்வளவெல்லாம் செய்வதற்கு என்னிடம் என்ன இருக்கிறது. அதிகபட்சம் சில நூறுகள் பாக்கெட்டில் இருக்கிறது. சம்பள பணம் அக்கவுண்டில் இருக்கிறது. கையிலோ கழுத்திலோ எந்த நகையும் இல்லை. கட்டியிருக்கும் கைக்கடிகாரம் வெறும் இருநூறு ரூபாய். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினால் கூட நான் ஜீபே செய்யவோ ஏடிஎம்மில் பணம் எடுத்தோ கொடுக்கமாட்டேன். சரி அப்படி செய்தால் பார்த்துக் கொள்வோம். தெருவில் சண்டை போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கான உடல்நிலையோ மனநிலையோ இல்லையென்றாலும் சந்தர்ப்பமூம் சூழ்நிலையும் தானே சண்டை செய்வதை தீர்மானிக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் பயம் ஒரு ஊசியை போல மெல்ல உள்ளுக்குள் இறங்கியது.
நான் யோசித்துக் கொண்டிருந்தது போல எதுவும் நடக்கவில்லை. ஆட்டோ டிரைவர் எங்கள் இருவரையும் அவர் சொன்ன பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு என்னிடமும் அவளிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். நேரம் சரியாக பத்தரை. அந்த நேரத்தில் பசி என்னைக் கொன்றுவிடும் போல் தோன்றியது. பேருந்து நிறுத்துவதற்கு எதிரே ஒரு சிறிய ரோட்டுக்கடை இருந்தது. நான் நேராக சென்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இட்லி இருக்கிறது என்றும் தொட்டுக்கொள்ள கொஞ்சமாக மட்டுமே சம்பார் இருக்கிறது என்றும் வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். பெங்களூர் சாம்பார். எனக்கும் அப்போது சக்கரை கொஞ்சம் தேவைப்பட்டது. சரி மூன்று இட்லி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது யதார்த்தமாக திரும்பிப் பார்த்தபோது அவள் பேருந்து நிறுத்தத்தில் தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள். அந்த குழந்தை தனக்கும் பசிக்கிறது என்ற அழ ஆரம்பித்தது. அவள் அதன் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். அது மேலும் வீல் என்று கத்த ஆரம்பித்தது. என்னால் அடுத்த துண்டை புட்டு வாயில் போட முடியவில்லை. நான் அந்த தட்டை அருகில் இருந்த ஒரு மேஜையில் வைத்துவிட்டு சாலையைக் கடந்து அவளிடம் வந்து எதுவும் சொல்லாமல் அந்த குழந்தையின் கையை பிடித்து கொண்டு ஹோட்டலுக்கு அழைத்து வந்தேன். அவள் அதிர்ச்சியோடு என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ இந்தியில் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால் என்னவென்று புரியவில்லை. அந்த குழந்தை ஹோட்டலுக்கு அழைத்து வந்து இரண்டு இட்லியை குழந்தைக்கு கொடுக்க சொன்னேன். அவர்கள் எதுவும் சொல்லாமல் குழந்தைக்கு கொடுக்க, இவள் வேகமாக சாலையைக் கடந்து வந்து அந்த இட்லி தட்டை வாங்கி எதுவும் பேசாமல் அந்த குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தாள். பிறகு நான் அந்த மூன்று இட்லியை வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு ஐந்து இட்லிக்கும் பணம் கொடுத்துவிட்டு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டு ஏதாவது பேருந்து வருகிறதா என்று பாத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் தோன்றியது அவள் சாப்பிடுகிறாளா என்று நான் கேட்கவில்லையே என நினைத்து எதிரில் நின்று பார்த்தேன். அந்த குழந்தை அரை இட்லி தான் சாப்பிட்டது. மீதம் இருந்த ஒன்றரை இட்டிலியை வேகமாக விழுங்கி விட்டு கையை கழுவிக் கொண்டு வந்து என் அருகில் பேருந்துக்காக நின்று கொண்டாள். மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. அதுவரை ஒரு பேருந்து கூட அந்த பக்கம் வரவே இல்லை. எதிரிலிருந்த கடைக்காரரும் கிளம்பிவிட்டார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு ஆட்டோ வந்து நேராக அவள் எதிரில் நின்றது. எங்கே போக வேண்டும் என்று டிரைவர் அவளிடம் கன்னடத்தில் கேட்டார். அவள் தயங்கிறயபடி ஏதோ ஒரு இடத்தை சொன்னாள். அவர் சிறிதும் யோசனை இன்றி 800 ரூபாய் என்றார். அவள் அதிர்ச்சி அடைந்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை. அவரை புறக்கணிக்கும் விதமாக இடது புறமும் வலது புறமும் தன் தலையை திருப்பி பேருந்து வருகிறதா என்று பார்த்தாள். அடுத்தது அந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்பார் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். அவர் ஆயிரம் ரூபாயை கேட்டால் கூட கொடுத்து முதலில் அறைக்கு சென்று விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை திரும்பிப் பார்க்கவே இல்லை. அவள் அவரை உதாசீனப்படுத்தி விட்டாள் என்று தெரிந்ததுமே அவர் தன் ஆட்டோவை வேகமாக இயக்கினார். நான் ‘ஹலோ’ என்று கூப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர் ஆட்டோ வேகமாக சாலையில் பயணித்தது. நான் திரும்பி அவளை பார்த்தேன். அவள் தன் மகனை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள். என் பக்கம் திரும்பவே கூடாது என்று உறுதியாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. லேசான தூறல் இருந்து கொண்டே இருந்தது. எப்போதும் வேண்டுமானாலும் இந்த மழை மீண்டும் அதிகரிக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை அந்த ஆட்டோ டிரைவர் எங்களை ஏமாற்றி இங்கே இறக்கிவிட்டு பணம் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாரோ என்று எனக்கு தோன்றியது. அல்லது தன் ஆட்களை கூட்டிக் கொண்டு இனிமேல் தான் வருவாரோ என்று பயந்தேன். சுற்றி பார்த்தேன் அது ஒரு நீண்ட சாலை. தெரு விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாய் சாலையைக் கடந்து சென்றது. எங்கள் மூவரை தவிர யாரும் இல்லை. அந்த சிறுவன் தூங்கி விழுந்தான். அவள் அவனை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டாள். மிகவும் ஒல்லியாக இருந்த அவளால் அந்த குழந்தை எவ்வளவு நேரம் தூக்கிக்கொண்டு இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஏதோ ஒரு வகையில் அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். எனது கைபேசியில் மனைவிடமிருந்து தொடர்ந்து குறுஞ்செயதிகள் வந்து கொண்டே இருந்தன. போய் விட்டீர்களா? போனதும் அழைக்கவும். எங்கே இருக்கிறீர்கள்? என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது. என் நினைவுகளை சிதைக்கும் விதமாக மீண்டும் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சற்று முன் வந்து சென்ற ஆட்டோ சுற்றிக்கொண்டு மீண்டும் அதே வழியில் வந்தது. இப்போதும் நேராக வந்து அவள் எதிரில் தான் நின்றது. ஏழ்நூறு ரூபாயாவது குடுமா என்று அவர் கன்னடத்தில் கேட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் தன்னிடம் பணமே இல்லை என்பதால் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். இப்போது நான் ஒருவன் நின்று கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர் கவனித்தார். நீங்க எங்க போகணும் என்றார். நான் அவருக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தேன். நானூற்றி ஐம்பது ரூபாய் என்றார். நான் உடனே சரி என்று அந்த ஆட்டோவில் ஏறப்போனேன். ஒரு நொடி திரும்பி அந்த இருவரையும் பார்த்தேன். என்னால் அந்த ஆட்டோவில் ஏற முடியவில்லை. அவர்களை விட்டுவிட்டு போவதற்கு என் மனம் ஒப்பவில்லை. இப்போது நான் இந்த ஆட்டோவில் சென்று என் அறையில் நிம்மதியாக உறங்கி நாளை காலை எழுந்து ஏதாவது, சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு தாய்க்கும் மகனுக்கும் ஏதாவது நேர்ந்து விட்டது என்ற செய்தியைப் படிக்கும் போது அந்த குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுக்க என்னால் சுமக்க முடியும் என்று தோன்றவில்லை. நான் ஒரு வீரனும் இல்லை. பெரிய தியாகியோ வள்ளலோவோ இல்லை. ஆனால் அவர்களை இப்படியே விட்டு விட்டு போகவும் மனமில்லை. ஒருவகையில் இதுவும் ஒரு சுயநலம் தான். குற்றவுணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளும் நல்லவனுக்கான வேஷம் தான். அந்த ஆட்டோ டிரைவரிடம் அவர்களை அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு விடும்படி சொன்னேன். அவர் புரியாமல் என்னைப் பார்த்தார். நான் அவரது ஆட்டோவில் ஒட்டி இருந்த ஜிபேவில் ஸ்கேன் செய்து அந்த ஏழுநூறு ரூபாயை கொடுத்துவிட்டு அவர்களை ஆட்டோவில் ஏற சொன்னேன். அவள் குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள். அந்தக் கண்கள் முழுக்க பயம் நிரம்பியிருந்தது. அவள் தயங்கினாள் நான் ஆட்டோ டிரைவரிடம், “இனி இந்த பக்கம் பேருந்து வருமா என்பது சந்தேகம் தான்” என்று அவளிடம் சொல்ல சொன்னேன். நான் சொன்னபடி அவரும் கன்னடத்தில் அவளிடம் சொன்னதும் அவர்கள் இருவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர். அவள் நன்றி தெரிவித்தாள். நான் எதுவும் சொல்லாமல் தலையாட்டி அவர்களை வழி அனுப்பி வைத்தேன். அந்த ஆட்டோ கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நிம்மதி. இப்போது அந்த சாலையில் அந்த இருளில் மழையில் நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். சாலையை அங்குமிங்கும் கடந்து சென்றுகொண்டிருந்த தெருநாயும் ஒரு இடத்தில் ஓரமாக படுத்துவிட்டது. மிக நீண்ட நேரத்திற்கு பிறகு இன்னொரு ஆட்டோ அந்த பக்கம் வர அவர் என்னிடம் முன்னூற்றி ஐம்பது ரூபாய் கேட்க நான் உடனடியாக எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஏறிக்கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்து விட்டேன் என்ற தகவலை மட்டும் என் மனைவிக்கு தெரிவித்து விட்டு படுத்து விட்டேன். தூக்கம் வரவில்லை. அவர்கள் சென்று சேர்ந்து இருப்பார்களா? என்ற எண்ணமே என்னை சூழ்ந்து சுழன்று வந்தது. எப்போது என்று தெரியாத நொடியில் நான் தூக்கத்தில் ஆழ்ந்தேன்.
மறுநாள் காலையில் பொறுமையாக எழுந்து என் மனைவிக்கு போன் செய்து நடந்ததை ஒன்று விடாமல் ஒரு கதையைப் போல சொன்னேன். அவள் என்னைக் கடுமையாகத் திட்டினாள். ஒருவேளை நீ பயந்தது போல் அவர்கள் உன்னை ஏதாவது செய்து இருந்தால் என்ன செய்திருப்பாய் என்றாள். ஆனால் எதுவும் தான் நடக்கவில்லையே என்று சமாளித்தேன். பேச்சு ஒரு கட்டத்தில் இலகுவானது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவள் “அந்த பொண்ணு அழகா இருந்திருப்பா” என்றாள். நான் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டேன். பேசி ஓய்ந்ததும் அவள் போனை வைத்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். மனைவி சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவள் அழகாகவா இருந்திருப்பாள் என்று மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தேன். பர்தாவுக்குள் இருந்த அவளுடைய முகம் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கொள்ள பார்க்க முடியவில்லை. அந்த குழந்தையை நினைத்து பார்த்தேன். குழந்தையின் முகத்தை வைத்து அவளுடைய முகத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. அவள் எப்படி இருந்தால் தான் என்ன?
***
அரிசங்கர் – புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார். பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பக்கார்டி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார். இரண்டு நாவல்களையும் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல்: harisankarux@gmail.com


