பெரு. விஷ்ணுகுமார்

வேலைதேடும் பேச்சிலரின்
சபதங்களில் ஒன்று….
அது எப்போதாவது செல்லும் மலையுச்சி
அதில் எப்போதாவது தெரியும் நாங்கள் வசிக்கும் அறை
ஒரே தலையணையில் நெருக்கியடித்து உறங்குபவர்களைப்போல்
ஒன்றின் மேலொன்றாய் முளைத்திருக்கும் மலைத்தொடர்கள்.
அதில் செல்லும் பாதையை அளந்துகொண்டிருக்கும் அருவி
தம் துதிக்கையினால் தட்டிக்கொடுக்கிறது
கனவிலும் உருளாமல் தாக்குப்பிடிக்கும் பாறைகளை.
நான் பள்ளங்கள் அழைக்கும் தூரம்வரை எட்டிப்பார்க்கிறேன்
இந்த ஆழம் அப்படி என்னதான் செய்யுமென
அருகிலிருந்தவொரு பந்தினை எட்டி உதைக்கிறேன்
எனக்குப் பதிலாக.
அது மெயின் ரோட்டுக்குச் செல்லும் வீதி
அங்கே பச்சைநிற கதவுகொண்ட வீடு எப்போதும் மூடியே இருக்கும்.
அவ்வழியே கடக்கும்போதெல்லாம் கவனிப்பேன்,
நீளமான மூக்குக்கண்ணாடியுடன்
கால்மேல் காலிட்டு அண்ணாந்திருப்பார் ஒரு முன்னாள் ராட்சசர்.
ஹ்ம்ம்ம்ம்…… அவருக்கென்ன….
ஒளிசூழ் மாடம், ஓய்வூதியப் பெருமூச்சு
உலகையே வென்றுமுடித்த முகக்களை.
அப்போதெல்லாம் உள்ளுக்குள் சூளுரைத்துக்கொள்வேன்
நானும் என் கண்ணெதிரில்
ஒருமுறையேனும் அமர்ந்து காட்டவேண்டும் இப்படி
கிஞ்சித்தும் என்னைக் கண்டுகொள்ளாதபடி.
நாணல்
கவிழ்ந்த நாணலொன்று
எழுந்து நிற்கிறது மறுபடியும்
காற்றைச் சமாதானப்படுத்தி.
உடனுக்குடன் சம்மதம் தெரிவிப்பதும்
பிறகு இல்லையென்று மறுப்பதுமாக
அலைபாயும் உனக்கு
எப்போதும் தென்படுகிறது ஒரு தலையாட்டி பொம்மை
அதன்முன்னே மிடுக்காக
ஒரு கட்டளையைச் சொடுக்கும் விரல்கள்
ஆம்
அது நீயேதான்
நானேதான்
அச்சு அசல் ஒரு பொம்மையேதான்.
மது அருந்துகையில்
மது அருந்துகையில்
என் மறுநாளையும் சேர்த்து அருந்திவிடுகிறேன்.
தொண்டை வளைவில் ஆர்ப்பரிக்கிறது ஒரு மெல்லிய தழல்.
ஜீவிதங்கள் அனைத்திலும் சன்னமான பூகம்பம்
ஏன் எல்லா இடங்களிலும் தெரிகிறது ஒரே விண்மீன்.
பெயரிடப்படாத இந்நீளமான புதினத்தில்
இடது பக்கத்திற்கு அடுத்ததாக,
இடது பக்கமே வாசிக்க வருகிறது.
எல்லோரையும் எளிதில் பின்தொடரும் மதுக்கோப்பை
என்னை மட்டும் எட்ட நின்று கவனித்துக்கொண்டிருக்க,
கண்ணாடித் தொட்டிக்குள் ஒளிய முடியாமல்
அல்லாடுகிறது மீன் ஒன்று.
விவரம் புரியாமல் ஒன்றையொன்று விரட்டிச் செல்கின்றன
குடைராட்டினத்தின் மிருகங்கள்
வேறுவழியின்றி நானும் அவற்றுடன் சேர்ந்துகொள்கிறேன்
முன்னங்கால் உயர்த்திக் கணைக்கும் என் புரவியை
உச்சபட்ச வேகத்தில் செலுத்துகிறேன்.
விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது
அதற்குள் அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும்.
***
பெரு. விஷ்ணுகுமார் – 2015 க்கு பிறகு எழுத வந்தவர். கவிதைகளோடு கட்டுரைகள், கதைகள் மற்றும் அவ்வப்போது மொழிபெயர்ப்பிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். ழ என்ற பாதையில் நடப்பவன், அசகவ தாளம் ஆகிய இரு கவிதைத் தொகுப்பு வந்துள்ளன. மின்னஞ்சல்: peru.vishnukumar@gmail.com
அருமையான கவிதை,,
Good