கணேஷ் பாபு
சிங்கப்பூரில் நல்ல சிறுகதைகள் எழுதப்படுகின்றன, கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆனால் நல்ல நாவல்கள் எழுதப்படுகின்றவா என்ற கேள்வி சிங்கப்பூருக்கு வெளியேயுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் சமீபகாலமாகவே எதிரொலித்து வந்தது. அதற்கு பதில் சொல்லும் வகையில் எழுதப்பட்ட மிகச்சில நாவல்களில் ஒன்று, சித்துராஜின் “மரயானை”.
தற்போதைய நவீன இலக்கிய நாவல்கள் சிக்கலான வடிவங்களையும், அதனினும் சிக்கலான மொழியமைப்பையும் விடுத்து நேரடியான வடிவத்தையும், மொழியையும் கைக்கொள்ளத் துவங்கியிருக்கின்றன. அதேசமயம் இலக்கியப் படைப்புக்கு உரிய கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துவதிலும், வாழ்வு சார்ந்த ஆழமான கேள்விகளை எழுப்பிக் கொள்வதிலும் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கின்றன. இவ்வகையான நாவல்களில் சமீபத்தைய வரவு சித்துராஜின் இந்த நாவல்.
நவீன நாவல்கள், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை விரிவாகச் சொல்வதன் மூலமாகவும், அதன் விஸ்தாரமான வடிவம் மூலமாகவும், தொகுப்புத் தன்மை மூலமாகவும் விரிவடைந்து கொண்டே இருப்பது என்ற பொதுவான புரிதலையும் இந்த நாவல் மூலம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் சித்துராஜ். ஒற்றை வாழ்க்கையை மட்டுமே சொல்லிச் செல்லும் நாவல்களின் காலம் இன்னும் முடிவடையவில்லை. ஒரு வாழ்க்கையைச் சொல்கிறோமா அல்லது பல வாழ்க்கைகளைச் சொல்கிறோமா என்பதைக் காட்டிலும், வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆழத்தையும் செவ்விய மொழியின் மூலமாகவும் கற்பனையின் மூலமாகவும் உயிரோட்டமாகப் படைத்தாலே போதும், அது இலக்கியத்தில் என்றும் நிலைகொள்ளும் என்ற புரிதலை இந்த நாவலை வாசிப்பதனூடாக அடைய முடிகிறது.
ஒரே கதைக்குள் எழக்கூடிய பல கோணங்களையும் கேள்விகளையும் நாவல் முன்வைக்கிறது. இந்நாவல், சுகவனம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூரின் “புக்கிட் பஞ்சாங்” என்ற நிலப்பரப்பின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூர் மக்களின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூரின் ஆதி தொன்மங்களை உரசிச் செல்லும் கதையாகவும் இருக்கிறது. முடிவில், மரயானையின் கதையாகவும் இருக்கிறது. இப்படி ஒரே கதைக்குள் பலவிதமான உட்குறிப்புகளையும், கதை மாந்தரின் கிளைக் கதைகளையும் ஊடாட விடுவதன் மூலமாக, வலிமையான ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் சித்துராஜ்.
ஒரு மனிதனின் எளிய ஆசையை ஏன் அவனது ரத்த உறவுகளால் நிறைவேற்ற முடியவில்லை? அவனது ஆசையை அடைய அவனுக்கு எது தடையாக இருக்கிறது, முதுமையா? பிள்ளைகளா? சமூகமா? அல்லது அவனது ஆழ்மனமா? என்னும் கேள்விகளுக்குள் பயணப்பட்டிருக்கிறார் ஆசிரியர்.
இறந்து போன மனைவியின் இறுதிச் சடங்கைச் செய்ய ராமேஸ்வரத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறார் சுகவனம். இந்த எளிய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவருக்கு ஏற்படும் தடைகள், அதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதனூடாக அவர் தனது கடந்த காலத்தை நினைவிலோட்டி ஆராய்வது, முடிவில் அவருக்கு ஏற்படும் மனமாற்றம், இப்படியாக ஒரு அடுக்கை இந்த நாவல் முன்வைத்தாலும் அதனடியில் பல அடுக்குகளையும் முன்வைக்கிறது.
சுகவனத்துக்கு இணையானதொரு பிரதான கதாபாத்திரம் அவரது மனைவியான ஜெயக்கொடி. நிஜத்தின் ஊடாகவும் நினைவினூடாகவும் அவள் நாவலில் வளர்ந்து கொண்டே வருகிறாள். ஜெயக்கொடி, சுகவனத்தின் வாழ்வுக்கு ஒளியேற்றி, குடும்பத்தை உருவாக்கி, நல்ல வீட்டை அமைத்து, பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு மணமுடித்து வைத்து, குடும்பத்துக்கே அடிநாதமாக இருக்கிறாள். ஆனால், அவளது எளிய ஆசைகளை சுகவனம் ஒருபோதும் நிறைவேற்றவே இல்லை. ஆணுக்கே உரிய மேலாதிக்க மனப்பான்மை, அதுமட்டுமில்லாமல், தான் ஒரு தலைமை ஆசிரியர், மனைவியோ தமிழாசிரியர் என்று தொழில் ரீதியாக அவளைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் பார்வை என சம்பிரதாயமான செல்லரித்துப் போன கண்ணோட்டத்தோடு ஜெயக்கொடியுடனான மணவாழ்வை வாழ்ந்து முடித்து விட்டிருக்கிறார் சுகவனம். அப்படிப்பட்ட மனிதரையும் அனுசரித்து, நல்லதொரு குடும்பத்தையும் உருவாக்கியளிக்கிறாள் ஜெயக்கொடி. ஆனால், அவர்களுக்கிடையேயான உரையாடல், அன்பு இவையாவும் மெல்ல மெல்ல மறைந்து காணாமல் ஆகிறது.
சுயநலமே உருவான அடுத்த தலைமுறை அவருக்கு மேலும் துன்பங்களை அளிக்கிறது. தன்னுடைய நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் அவரது பிள்ளைகள், அதற்காக ஒரு கட்டத்தில் அவரை சுரண்டி எடுக்கிறார்கள். அவர்களை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியாத சூழலில், சுகவனம் தன் இறந்து போன மனைவியையும் அவளுடனான தனது வாழ்வையும், நினைவில் மீட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். சிறுமையால் நிறைந்த தனது பிள்ளைகளை மீறி அவரால் அவரது ராமேஸ்வரம் கனவை நிறைவேற்ற முடிந்ததா என்பதையே நாவல் பிரதானமான பேசுபொருளாகக் கொள்கிறது.
சுகவனம் வாழ்வு முழுக்க ஒரு இறுக்கமான ஆளுமையாகவே இருந்து விட்டார். அவரது தலைமை ஆசிரியர் பணி அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே அவரது சுபாவமாகவும் மாறிவிட்டது. அதனோடு சேர்ந்து ஆண்மகன் என்ற ஈகோவும் சேர்ந்து, அவரை, மனைவி ஜெயக்கொடியை மதிக்கவே முடியாதவராக மாற்றி விடுகிறது. அவளது இறுதி ஆசையைக் கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு அலைய முடியாத முதுமையின் சங்கடத்தில் அவளது சிகிச்சையை நிறுத்திவிடக் கோரும் மருத்துவர்களிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்து விடுகிறார். ஆனால், இரு முனையும் கூர் கொண்ட கத்தி போல, அதே இறுக்கமும் அன்பின்மையும்தான் அவருக்கு அவரது பிள்ளைகளிடமிருந்து கிடைக்கிறது. ஒருவேளை சற்று நெகிழ்வானவராக அவர் இருந்திருந்தால் அவரது வாழ்வு மேலும் மலர்ச்சியாக இருந்திருக்கக்கூடும். அவரது இக்குணத்துக்கு காலமே அவரைத் தண்டிப்பதைப் போல ரவுடி இளைஞர்களால் அடிபடுகிறார்.
உச்சகட்டமாக, ஒரு பூனையை வளர்க்க முடிவெடுக்கும்போது சுகவனம் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி நெகிழ்வானவராக மாறுகிறார். அவருக்குள் இருக்கும் ஈரம் அன்பின் சுனையாக உருமாறி பூனையிடம் செல்வதை உணர முடிகிறது. சுகவனத்தின் ஆளுமை உடையும் இந்த இடத்தை ஆசிரியர் நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.
*
சுகவனத்தின் கதைக்கு இணையாக, சிங்கப்பூரின் புக்கிட் பங்சாங் வட்டாரத்தின் கதையும் சொல்லப்படுகிறது. புக்கிட் பஞ்சாங்கின் படிப்படியான வளர்ச்சி , அதன் ஆதி தொன்மம், சமகால யதார்த்தம், அதன் மாந்தர்கள், கடைகள், கோயில், சாலை என புக்கிட் பஞ்சாங் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இந்த நாவலில் நிறைந்திருக்கின்றன. அது மட்டுமன்றி, கம்பங்களில் இருந்து அடுக்கு மாடி வீடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது, அதனைத் தொடர்ந்து விளையும் ஆரம்பச் சங்கடங்கள் யாவும் நாவலில் பதிவாகியுள்ளன.
சிங்கப்பூர் ஐந்து விதமான கடல் நாகங்களால் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற சுவாரஸ்யமான தொன்மம் நாவலில் இடம்பெறுகிறது. தீவின் மேற்குப் பகுதியை இரும்பு நாகமும், புக்கிட் பஞ்சாங் பகுதியை பூமி நாகமும், தெற்குப் பகுதியை தீ நிற நாகமும், கிழக்குப் பகுதியை விறகு நாகமும், வடக்குப் பகுதியை நீர் நாகமும் சுமக்கின்றன. இந்தக் கடல் நாகங்கள் அனைத்தும் அமைதியானவை. வரப்பிரசாதிகள். இவை இடம்பெயராமல் இருப்பதால்தான் பூகோள ரீதியான இயற்கைச் சீற்றங்கள் சிங்கப்பூரில் இல்லை என்ற நம்பிக்கையை நாவலில் முன்வைக்கிறார் ஆசிரியர்.
கூடவே பலவிதமான பண்பாட்டுச் செய்திகளும், அரசியல் செய்திகளும் நாவலில் வாசிக்கக் கிடைக்கிறது. சிங்கப்பூர் சாலைகளில் ஒருகாலத்தில் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இணையாக தீபாவளித் தாத்தா என்றொருவர் சில காலம் இருந்திருக்கிறார். Krishna our guide என்றொரு இயக்கம் சார்பாக இதனைச் செய்திருக்கிறார்கள். கூடவே, ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளைகளுக்கு பகவத் கீதை வகுப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.
மலைப்பாம்புகள் மீது சீனர்களுக்கு இருக்கும் பிரியம் வியப்பூட்டுவது. நாலு நம்பர் சீட்டுகளை மலைப்பாம்புகளின் முன்வைத்து தேர்ந்து எடுத்திருக்கின்றனர். பரிசுப் பணம் விழுந்தால், அவற்றுக்கு எலிகளைப் படைத்திருக்கிறார்கள். மேலும் சிலர் மலைப்பாம்புக்குத் தங்கக் கீரீடம் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற தமிழரல்லாத பிற இனத்தினரின் பண்பாட்டுச் செய்திகள் நாவலில் பல இடங்களில் இடம்பெறுகின்றன.
“வெறுமை என்பது பொருட்கள் இல்லாதது அல்ல, நிகழ்ச்சிகள் இல்லாமல் இருப்பதே உண்மையில் வெறுமையானது”, “பரிச்சயமே இல்லாதவையாக இருந்தாலும் கூட நன்கு பரிச்சயமானவைகளைப் போல் தோன்றும் விஷயங்கள் மற்றும் என்றும் அறிந்து கொள்ள முடியாத அன்றாட பரிச்சயங்கள் என்ற இந்த இருவேறு உந்து சக்திகளின் நடுவில் தோன்றும் வெறுமையில்தான் மனித வாழ்க்கை முழுவதும் நகர்ந்து செல்கிறது” போன்ற வரிகளில் இருந்து நாவலை நுட்பமாகப் புரிந்து கொள்ள இயலும்.
சுகவனத்தின் நிகழ்கால வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ஒரு தளத்திலும், பின்னோக்கு உத்தியின் மூலம் அவர் தன் நினைவுகளினூடாக கடந்த காலத்து நிகழ்ச்சிகளை மீட்டிப் பார்ப்பது ஒரு தளத்திலும், புக்கிட் பாஞ்சாங்-இன் நில வரலாறு, தொன்மம், மாறிக்கொண்டேயிருக்கும் அதன் நிலக்காட்சிகள் போன்றவற்றைப் பதிவு செய்வது வேறொரு தளத்திலுமாக, பல்வேறு தளங்களில் கதை வளர்ந்து செல்கிறது.
துவங்கிய இடத்திலேயே நாவலை முடிப்பது, சுவாரஸ்யமான வரலாற்றுப் பண்பாட்டு செய்திகள், இவற்றோடு மனிதர்களின் பல்வேறு உணர்வுக் குவியலையும், சம்பவங்களையும் தனக்கேயுரிய மொழியில் சொல்லிச் செல்கிறார் சித்துராஜ். இது போன்ற நாவல்கள் வெளிவர வேண்டியது சிங்கப்பூர் இலக்கியத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கும்.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com


