யாவரும்.காம்
இணையம் எழுத்தை வெளிக்கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. சமூக வலைதளம், தனியே இணையதளம் என்று நமக்கான, நமது எழுத்திற்கான தனி அடையாளத்தை, அரங்கை எளிமையாக ஏற்படுத்திக்கொள்ளமுடியும். இதனிடையே மின்னிதழ்களின் தேவையை அவதானிக்க முயற்சிக்கிறேன். இலக்கியத்தின் எந்த வடிவமெனினும் கூட்டுச் செயல்பாடாக மாறும் களமாக பத்திரிக்கைகளே அமைகின்றன. ஒரே தடத்தில் வெளியாகும் பலதரப்பட்ட படைப்புகள் சமகாலத்தின் முகமாக பரிணமிக்கின்றன. தனித்த அதிகாரத்திலிருந்து களைந்து கூட்டு இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பைப் பத்திரிக்கைகள் அளிக்கின்றன. மின்னிதழ்கள் அச்சுப் பத்திரிக்கைகளுடைய பக்க அளவின் கட்டுபாடுகளுக்கு மருந்தாக அமைகின்றன. முரண்களும் விமர்சனங்களும் இருப்பினும் அவை சமகாலத்தில் ஒரு களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
யாவரும் இணைய இதழின் மீள்வருகை முன்கூறியவற்றின் மற்றொரு மாதிரி. சமகாலத்தில் வெளியாகும் நேரடிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்புரைகளும், ஈராயிரத்திற்கு பின்னான காலத்தில் எழுத வந்த எழுத்தாளர்களின் எழுத்துப்புலத்தை அறியும் விதத்தில் மேற்கொள்ளப்படும் நேர்காணலுமே முதன்மை நோக்கம். படைப்புகளின் எண்ணிக்கையை கட்டுக்கோப்பாக வைக்கவில்லை. இயன்றவரை அனைவரையும் ஒன்றிணைக்கும் களமாக யாவரும் மின்னிதழ் அமைய வேண்டும் என்பதே நீண்ட கால இலக்கு.
*
சிறப்பு பகுதிக்காக காந்தியை முடிவு செய்து யாரிடமெல்லாம் எந்தெந்த வகைமையில் படைப்புகளைக் கேட்கலாம் என்று ஆலோசனைகளைக் மேற்கொண்டோம். சித்ரா பாலசுப்ரமணியன், காலச்சுவடு அரவிந்தன் ஆகியோர் சிலரைப் பரிந்துரைத்தனர். மறுப்பின்றி காந்தி குறித்து எழுத ஒப்புக்கொண்டு சிறப்பாக கட்டுரைகளை நல்கிய அனைத்து படைப்பாளர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். அரவிந்த் வடசேரி மலையாளத்திலிருந்து கவிதையொன்றையும், ஶ்ரீநிவாஸ் தெப்பல தெலுங்கிலிருந்து சிறுகதை ஒன்றையும் காந்தி மையப்படுத்தியதாக தேர்வு செய்து மொழிபெயர்த்து சிறப்பிதழுக்காக அளித்திருப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. அவர்களுக்கும் எங்களின் அன்பும் நன்றியும். தமிழ் இலக்கியத்தில் காந்தியின் பங்கு குறித்து சிந்தித்தபோது ஶ்ரீனிவாச கோபாலன் க.நா.சுவின் இரண்டு கட்டுரைகளை அடையாளம் காட்டினார். எழுதித் தீராத மையப்பொருள் காந்தி எனில் அவற்றை இயன்றவரை மின்னிதழின் சிறப்பு பகுதியில் உள்ளடக்க வேண்டும் என்று ஆசை பெருகியது. கடைசி தருணத்தில் கால நெருக்கடியை மனதில் கொள்ளாமல் க.நா.சு ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து கொடுத்த பாலா இளம்பிறை மற்றும் அருந்தமிழ் யாழினி ஆகியோருக்கும் ஶ்ரீனிவாச கோபாலனுக்கு யாவரும் மின்னிதழ் அன்பால் கடன்பட்டிருக்கிறது.
இலக்கியப்பகுதியில் பரிசோதனை முயற்சிகளும், இயல்பான படைப்புகளும் ஒருங்கே அமைந்திருப்பது கூட்டுச் செயல்பாட்டின் முகமாக அமைந்திருக்கிறது. ஆரோக்கியமான இலக்கியச் சூழலின் எடுத்துக்காட்டாக மதிப்புரைகளும் புனைவுகளும் அமைந்திருக்கின்றன. முதல் இதழுக்கான திட்டமிடலின் போது லட்சுமிஹர்-க்கான யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இதழில் அவருடைய நேர்காணலை முடிவு செய்தோம். படைப்புகளை மையபடுத்தி தொடங்கிய உரையாடல் பல திறப்புகளையும், தர்க்கங்களையும் எழுப்ப வல்லதாய் அமைந்திருப்பது நல்லூழ். பல திருத்தங்களுக்கு பொறுமையாய் நேரம் கொடுத்த லட்சுமிஹர்-க்கு தனிப்பட்ட நன்றியை பகிர்ந்துகொள்கிறேன். இறுதி நொடி வரை திட்டமிடல்களும் பேராசைகளும் நிரம்பி, இயன்றவரை இதழாக முடிவுசெய்திருக்கிறோம். ஒவ்வொரு படைப்பாளிக்கும் யாவரும் மின்னிதழ் சார்பாக அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
*
ஆகஸ்டு-செப்டம்பர் மின்னிதழை மையப்படுத்தி எளிய போட்டி ஒன்றை சமூக வலைதளத்தில் மேற்கொண்டோம். வாசிப்பை பரந்துபட்டதாக்கவும், குறிப்பிட்ட வகைமைக்குள் சிக்காமல் வாசிக்கும் வகையில் விதிமுறைகளை வைத்தோம். அதைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செய்து படைப்புகளைப் பலருக்கும் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்ற ஹரிகிருஷ்ணன், இப்ராஹிம், அப்பு சிவா, ஆர்த்தி, கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்தையும் நன்றியையும் பகிர்கிறோம்.
*
பின் நவீனத்துவ எழுத்தின் தன்னிகரற்ற அடையாளமான ரமேஷ் பிரேதனின் மறைவு இலக்கியத்திற்கான இழப்பாகிறது. அவரை இழந்து வாடும் நலம் விரும்பிகளுக்கும், வாசகர்களுக்கும் யாவரும் மின்னிதழ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.
*
இலக்கியமும் காந்தியும் ஒன்றை மேவி ஒன்று வளரும் தன்மைகொண்டது. இந்த இதழ் அதற்கு சான்றாக அமையும் என்று நம்புகிறோம்.
***

