Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கவிஞரும் ராட்டையும்

கவிஞரும் ராட்டையும்

மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி

தமிழில்: சுபஶ்ரீ முரளீதரன்

சில நாட்களுக்குமுன் சர் ரவீந்த்ரநாத் தாகூரின் ராட்டைப் பற்றிய விமர்சனம் வெளியான பொழுதே அதற்கு என்னை பதிலளித்துவிடும்படி பல நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்பொழுது வேலை நிமித்தமாக மிகவும் பரபரப்புடன் இருந்ததால் என்னால் அதை முழுமையாக படிக்க முடியவில்லை. ஆனால், அதன் போக்கு எத்தகையது என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு படித்திருந்தேன். அதற்கு உடனடியாக பதிலளிக்கும் அவசரம் எனக்கிருக்கவில்லை. ஒருவேளை எனக்கு நேரமிருந்து, அதற்கு நான் பதிலளித்திருந்தாலும் அதை கவனத்தில் கொள்ளுமளவுக்கோ, பொருட்படுத்தவோ முடியாத நிலையில் அதை படித்திருந்தவர்கள் கிளர்ச்சியுடன் இருந்தனர். ஆகவே கவிஞரின் ராட்டை பற்றிய விமர்சனத்திற்கு உணர்ச்சிபூர்வமானதாக அல்லாமல் நிதானத்துடன் அணுகி பதிலளிக்க வேண்டிய நேரமாக இதைத்தான் நினைக்கிறேன்.

ஆச்சார்யா ரே அவர்கள், கவிஞர் மற்றும் ஆச்சார்யா சீலே அவர்களின் ராட்டைப் பற்றிய நிலைப்பாட்டிற்கான விஷயத்தில் கடைபிடித்த பொறுமையின்மைக்கும், எனது அதீதமான மற்றும் தனித்துவமான ராட்டை மீதான அன்பிற்கும் விடுத்த மென்மையான கண்டனமாகவே கவிஞரின் விமர்சனத்தைக் கொள்ளவேண்டும். கவிஞர் அவர்கள் ராட்டை மீதான பொருளாதார மதிப்பை மறுக்கவில்லை என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதோடு அவர் இந்த விமர்சனத்தை எழுதிய பிறகுதான், அகில இந்திய தேசபந்து நினைவுச் சின்னம் எழுப்புவதற்கான வேண்டுகோள் குறித்தான முழுமையான விவரங்களைப் படித்துப்பார்த்த பின்னர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார். அதே வேளையில் எனக்கு உவப்பை ஏற்படுத்தாது என்ற வகையில் அவர் ராட்டைப் பற்றிய தன் கருத்தை வெளியிட்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். அதனால் என்ன வெளிவரவிருக்கிறது என்பது எனக்கு முன்பே தெரியும். அதற்காக நான் வருந்தவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பதாலேயே ஏன் வருத்தப்படவேண்டும்? ஒவ்வொரு கருத்துவேறுபாடும் வருத்தத்தையே அளிக்குமென்றால், எந்த ஒருவரும் மற்றவருடன் எல்லாக் கருத்துக்களிலும் ஒத்துப்போவதென்பது இயலாதபோது வாழ்க்கையே வெறுப்பு நிறைந்ததொரு பொதியாகி, தொல்லைமிக்கதாக ஆகிவிடும். மாறாக நேர்மையான விமர்சனங்கள் எனக்கு உவப்பையே தரும். நண்பர்களுக்குள் கருத்துவேற்றுமைகள் கடந்தும் செழுமையான நட்பு அமைய முடியும். நண்பர்களுக்குள் ஏற்படும் கருத்துவேற்றுமைகளுக்காக தண்டனைகள் எதுவும் தேவையில்லை. மாறாக அத்தகைய கருத்துவேற்றுமைகள் காயப்படுத்துவதாகவோ கசப்புணர்வை ஏற்படுத்துவதாகவோ இருந்துவிடக்கூடாது. கவிஞரது விமர்சனங்களின்மீது எனக்கு அப்படியான எந்தவித கசப்புணர்வும் இல்லை என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 நான் இந்த குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தவேண்டிய கட்டாயாத்தில் இருக்கிறேன். ஏனெனில் இத்தகைய விமர்சனத்திற்கு காரணம் பொறாமைதான் என்ற வகையான வெற்று வதந்திகள் பரவியதனாலேயே. ஆதாரமற்ற இந்தவகையான சந்தேகங்கள் பலவீனத்தையும் சகிப்புத்தன்மை இல்லாமையையுமே வெளிக்காட்டுகின்றன. இத்தகைய ஒரு கொடிய குற்றச்சாட்டின்மீது சற்று கூர்ந்து கவனித்தால் அதன் அடிப்படையையே இல்லாமல் செய்துவிட முடியும். 

கவிஞர் என்மீது எதன் பொருட்டு பொறாமை கொள்ள வேண்டும்? பொறாமை என்பது பகைமை உருவாவதற்கான வழியை வகுத்துவிடுகிறது. நான் என் வாழ்வில் இதுவரை ஒரு கவிதையையும் எழுத முயற்சித்து அதில் வெற்றி பெற்றதில்லை. கவிஞனுக்கான எந்த தகுதியும் என்னிடம் இல்லை. என்னால் அவரது உயரத்தை அடையமுடியாது. அவர் மறுக்கமுடியாத ஒரு அறிஞராக விளங்குகிறார். இன்றைய காலகட்டத்தில் அவருக்கு இணையான ஒரு கவிஞன் இந்த உலகத்தில் இல்லை. என்னுடைய ”மகாத்மா” பட்டத்திற்கும் கவிஞரின் அசைக்கமுடியாத இடத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்களது களங்கள் வெவ்வேறானவை, அவை ஒருபோதும் ஒன்றிணையும் வாய்ப்புகளற்றவை என்பதனையும் சொல்லியாக வேண்டிய தருணமிது. கவிஞர் தான் உருவாக்கிய பிரம்மாண்டமான உலகத்தில் அவரது எண்ணங்களோடு வாழ்பவர். நானோ வேறெவரோ உருவாக்கிய ராட்டையின் அடிமையாக இருக்கிறேன். கவிஞர் தன்னுடைய புல்லாங்குழலிசைக்கு கோபியரை ஆடவைக்கிறார். நானோ என்னுடைய சீதாவை, ராட்டையை,தேடியபடி அவளை பத்துத்தலை கொண்ட அரக்கனாம் ஜப்பான், மான்செஸ்டர், பாரிஸ் இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கவேண்டி அலைந்து கொண்டிருக்கிறேன். கவிஞர் ஒரு படைப்பாளர், ஒன்றை உருவாக்கி, அழித்து, மீண்டும் உருவாக்கக்கூடியவர். நானோ உலாவுபவன், ஒன்றை கண்டுபிடித்து அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே பயணிக்க வேண்டியவன். கவிஞர் உலகிற்கு தினம்தினம் புதியவைகள் மற்றும் கவர்ச்சியானவைகளை வழங்கிக்கொண்டிருப்பவர். என்னால் வெறும் பழைய மற்றும் இற்றுப்போனவைகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே காட்ட முடியும். புதியதாயும் ஜொலிக்கக்கூடியதானவைகளையும் உருவாக்கும் ஒரு மந்திரவாதிக்கு உலகம் ஒரு அற்புதமான மரியாதைக்குரிய இடத்தை கொடுக்கிறது. நான் எனது இற்றுப்போன பொருட்களை வைப்பதற்கானதொரு மூலையை கடினமான உழைப்பின் மூலமாக தேடவேண்டியிருக்கிறது. அதனாலேயே எங்களுக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை. ஆனால், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம் என்பதனை இந்த இடத்தில் பணிவாகவே கூறிக்கொள்கிறேன். 

சொல்லப்போனால் கவிஞரின் விமர்சனம் என்பது அவருக்கு இருக்கும் கவிதை சுதந்திரத்தை குறிக்கிறது. அதை எவரேனும் நேரடியாக அர்த்தப்படுத்திக்கொள்வதாக இருந்தால் அது அவரை ஓரந்தள்ளிவிடக்கூடிய அபாயம் கொண்டது. கவிஞர் பாஸ் தன்னுடைய ஒரு படைப்பில் , சாலமன் தனது முழுமையான மகத்துவங்களிலும் முன்னிலைபடுத்தியவைகள் எதுவுமே தோட்டத்தில் பூத்திருக்கும் ஒரு அல்லிப்பூவின் அழகிற்கு ஒப்பானதல்ல என்று குறிப்பிட்டிருப்பார். அதில் அவர் தெளிவாக குறிப்பிடுவது தோட்டத்து அல்லியின் இயல்பான அழகையும் அதன் கபடமற்ற தன்மையையும். சாலமனுடைய செயற்கையான அணிவகுப்பு என்பது அவனது பாவங்கள் அவனது பல்வேறு நற்செயல்களையும் கடந்து எப்படி விளங்கியது என்பதை ஒப்புமைப்படுத்தி காட்டுவதேயாகும். 

ஒரு பணக்காரன் சொர்க்கபுரிக்குள் நுழைவது என்பது ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது போல சுலபமானதல்ல. இந்த கவிதையில் இருக்கும் கவிதை சுதந்திரத்தை கவனியுங்கள். நமக்கு நன்றாகவே தெரியும் எந்த ஒட்டகமும் ஊசியின் காதுக்குள் நுழைந்ததில்லை என்பதும், பெரும் செல்வந்தனான ஜனகன் சொர்க்கம் சென்றான் என்பதையும். அதேபோல பற்களுக்கு ஒப்பாக மாதுளை முத்துக்கள் சொல்லப்பட்டதையும் நினைத்துப்பாருங்கள். இந்த கவிதை வரிகளை உண்மையென்றெண்ணிவிடும் முட்டாள் பெண்கள் தங்கள் பற்களை கெடுத்துக்கொள்வதோடு முகத்தையும் சிதைத்துக்கொள்வார்கள். ஓவியரும் கவிஞர்களும் தங்கள் படைப்புகளை சற்று மிகைப்படுத்துவது என்பது அவர்களின் படைப்பை முதன்மைபடுத்துவதற்காக மட்டுமே. அந்த வகையில் கவிஞரின் ராட்டைப் பற்றிய கண்டனத்தை அப்படியே புரிந்து கொள்பவர்கள் கவிஞருக்கு அநீதி இழைப்பவர்களாகவும் தங்களுக்கு தாங்களே தீங்கு ஏற்படுத்திக் கொள்பவராகவும் ஆவார்கள்.

கவிஞருக்கு யங் இந்தியாவை படிக்க வேண்டிய தேவையோ அவசியமோ நிர்பந்தமோ கிடையாது. அவருடைய ராட்டையைப் பற்றிய தகவல் என்பது அவருக்கு தேநீர் மேசையிலிருந்து கிடைத்தவைகளேயாகும். அதைக் கொண்டு ராட்டை குறித்தும் அதன் தீவிரத்தன்மையையும் தன் கற்பனையின் அடிப்படையில் அதீதமானது என்றெண்ணியதையும் கண்டனம் செய்திருக்கிறார். 

உதாரணத்திற்கு நான் எல்லாரையும், அதாவது ஆண் பெண் என இருபாலரையும் மற்ற எல்லா வேலைகளையும் தவிர்த்து எல்லா நேரமும் ராட்டையை சுற்ற சொல்வதாக எண்ணியிருந்தால் கவிஞர் தன் கவிதைக்கலையை, விவசாயி தனது கலப்பையை, வக்கீல் தனது அங்கியையும் மருத்துவர் தனது ஆயுதத்தையும் கைவிடச் சொல்வதாக எண்ணியிருந்தால் அது உண்மைக்கு புறம்பானது. நான் யாரையும் எதையும் கைவிடச் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் நாட்டிற்கு செய்யும் தியாகமாக தங்களது நேரத்தில் ஒரு முப்பது நிமிடத்தை ராட்டையைச் சுற்ற பயன்படுத்துமாறு மட்டுமே கேட்டுக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், பட்டினியால் வாடிக்கொண்டு இருக்கும் ஆணையும் பெண்ணையும் எந்த வேலையும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், ஏதாவது வேலை தேவைப்பட்டால், அரை பட்டினியில் வாடும் விவசாயியின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்களது ஓய்வு நேரத்தில் நூற்கச் சொன்னேன். கவிஞரும் ஒரு அரைமணி நேரம் நூற்றாரென்றால் அவரது கவிதைகளும் செழுமையடையும். அது ஏழைகளின் கவலைகளையும் வலிகளையும் இன்னும் வீரியமான வகையில் பிரதிபலிப்பதாக அமைந்துவிடும். 

கவிஞர் ராட்டை நூற்கும் விஷயத்தை தேசம் முழுவதிலும் மரணத்துக்கு இணையானதொரு சம நிலையை உருவாக்கும் பொருட்டு கணக்கிடப்படுவதாகவே எண்ணிக்கொண்டு, அதனாலேயே இந்தியாவிலுள்ள எண்ணற்ற மக்கள், தங்களின் தனித்தன்மையுடன் வாழவேண்டியதின் அவசியத்தை உணரவைக்க  முற்படுகிறார். பிரம்மாண்டமானதும் கழுகுப்பார்வையுடன் கூடியதுமான ஒன்றிற்குப் பின்னால், இயற்கையில் ஒற்றுமையின் அவசியத்தையும், அதன் வடிவமைப்பு மற்றும் தன்மை ஆகியவற்றை தவறாக எண்ணமுடியாதவகையில் ஒருவர் புரிந்துகொள்கிறார். இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. ஏன் இரட்டையர்களாகவே இருந்தாலும் கூட, தவிர்க்கமுடியாத வகையில் மனித இனத்தில் பொதுவானவைகளாக பல விஷயங்கள் இருக்கின்றன. இத்தகைய பொதுத்தன்மைக்குப் பின்னால் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையே எங்கும் வியாபித்திருக்கிறது.

மாற்றமில்லாத தன்மை அல்லது தனித்தன்மை என்ற யோசனையை, சங்கரர் அதன் உச்சபட்சமாக தர்க்கரீதியாகவும் இயற்கை வரம்பிலுமாக ஒரேயொரு உண்மை மட்டுமே இருப்பதாக அறுதியிட்டு கூறினார். இதில் பெயர் தோற்றம் என்பதெல்லாம் மாயை அல்லது மருட்சி என்றதோடு அது நிலையற்றது என்றார். நாம் காணக்கூடியவைகள் போலியானதா என்பது குறித்து வாதிடவேண்டாம். அந்த போலிக்கு பின்னால் இருக்கும் உண்மையை நாம் பார்ப்பதில்லை. நீங்கள் விரும்பும் பட்சத்தில் அவை இரண்டுமே உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். நான் சொல்வதெல்லாம், பல்வகை மற்றும் பல்வேறு என்பதற்குப் பின்னால் மாற்றமில்லாமை அடையாளம் மற்றும் தனித்தன்மை என்றவைகள் இருக்கின்றன என்பதே. பல்வேறு தொழில்களுக்குப் பின்னால் தொழிலின் தவிர்க்க முடியாத ஒற்றுமையும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். விவசாயம் பெரும்பான்மையான மனிதகுலத்திற்கு பொதுவானதல்லவா? அப்படியாகவே நூற்பது என்பதும்கூட மனிதகுலத்தின் பொதுவான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இளவரசன், விவசாயி என்ற இருவருமே உண்பதையும் உடை உடுத்துவது என்ற செயலையும் செய்தாக வேண்டும். இந்த முதன்மையான தேவைக்காக இந்த இரண்டு வேலைகளையும் செய்தாக வேண்டும். இளவரசன், தனக்கும் தனது மக்களுக்கும் உண்மையானவனாக இருந்திடும் பட்சத்தில் தவிர்க்கமுடியாதவகையில் இதனைத் தியாகம் மற்றும் அன்பு என்பதன் மூலமாக செய்துவிடமுடியும். 

ஐரோப்பா இதன் அத்தியாவசியத் தேவையை இந்த தருணத்தில் உணர்ந்திடாது. ஏனெனில், அது ஐரோப்பியரல்லாத சமூகத்தை சுரண்டுவதை ஒரு மார்க்கமாகவே கருதுகிறது. அந்த மார்க்கம் தவறானது என்பதாலேயே விரைவில் அழிந்துபோகக்கூடியது. ஐரோப்பியரல்லாத சமூகம் எப்பொழுதுமே தாங்கள் சுரண்டப்படுவதை அனுமதித்துக்கொண்டிருக்காது. நான் ஒரு அமைதியானதும், மனிதத்தன்மையுடன் கூடியதும் அதனாலேயே அது ஒரு உன்னதமானதாக திகழக்கூடிய ஒரு வழியைக் காட்ட பெருமுயற்சியை செய்துவருகிறேன். இது நிராகரிப்பிற்கு உள்ளாகலாம். இதற்கு மாற்று என்பது ஒருவரையொருவர் வீழ்த்திக்கொள்ளும் இழுபறி விளையாட்டு. பிறகு ஐரோப்பியரல்லாதோர் ஐரோப்பியர்களை சுரண்ட முற்படும்போது ராட்டையின் உண்மைத்தன்மை உணரப்படவேண்டும். நாம் உயிர்வாழ எப்படி இங்கிலாந்திலிருந்து காற்றை இறக்குமதி செய்ய மாட்டோமோ, உணவை இறக்குமதி செய்யமாட்டோமோ அவ்வாறாகவே இங்கிலாந்தில் நெய்யப்பட்ட உடைகளையும் இறக்குமதி செய்யக்கூடாது. கோட்பாட்டை அதன் தர்க்கரீதியான எல்லைக்கு கொண்டு செல்ல நான் தயங்கவில்லை, மேலும் வங்காளம் பம்பாயிலிருந்து அல்லது பங்கா லட்சுமியிலிருந்து கூட தனது துணியை இறக்குமதி செய்யத் துணியாது என்று கூறுகிறேன். இந்தியாவின் மற்ற பகுதிகளையோ அல்லது வெளி உலகத்தையோ சுரண்டாமல் வங்காளத்திற்கு இயற்கையான மற்றும் சுதந்திரமான வாழ்க்கை இந்தியாவின் வேறு பகுதிகளையோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியையும் சுரண்டாமல் வாழவழி கிடைக்க வேண்டுமானால், தனக்கான சோளத்தை விளைவித்துக்கொள்வதைப்போலவே துணியையும் தயாரித்துக்கொள்ள வேண்டும். இயந்திரங்களுக்கு இடம் உண்டு. அவை இங்கு நிலைத்திருக்கவே வந்திருக்கின்றன. ஆனால் அவை தேவையான மனித உழைப்பை விலக்கிவிட அனுமதிக்கக்கூடாது. மேம்பட்ட கலப்பை என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு வேளை ஒரு மனிதன் தன்னுடைய இயந்திர கண்டுபிடிப்பின்மூலம் இந்தியாவின் எல்லா நிலத்தையும் உழுது வேளாண்மையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதனால் பல லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமலாகுமானால் அவர்கள் பட்டினி கிடந்து, சோம்பலுடன் இருந்து ஏற்கனவே இருக்கும் மூடர்களோடு மூடராகிவிடுவார்கள்.  சில மணி நேரங்களிலேயே எண்ணற்றவர்கள் அந்த அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். குடிசைத் தொழிலில் உருவாகும் எந்த முன்னேற்றத்தையும் நான் வரவேற்கிற அதே நேரம் லட்சக்கணக்கானவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இயந்திரத்தின் மூலம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது குற்றம் என்பதையும் நான் அறிவேன்.   

ஐரிஷ் மேற்கோள்கள் நம்மை வெகுதூரத்திற்கு இட்டுச்செல்லவில்லை. பொருளாதார ஒத்துழைப்பின் அவசியத்தை நாம் உணரச்செய்யும் அளவிற்கு அது சரியானது. இந்திய சூழ்நிலைகள் வேறுபட்டவைகள் என்பதாலேயே ஒத்துழைப்பை செயல்படுத்துவதிலும் வேறுபட்ட வகையிலேயே செயல்படவேண்டும். வேதனையில் வாடும் 1,900 மைல்கள் நீளமும் 1,500 அகலமும் கொண்ட இந்த பரந்த இந்திய தீபகற்பத்தின் பெரும்பான்மையான மக்களுக்குப் பொருந்தக்கூடிய வகையில் எடுக்கக்கூடிய ஒத்துழைப்பின் மீதான செயல்பாடுகள் ராட்டையை மையமாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.

சர் கங்கா ராம் என்ற ஒருவர் நமக்காக ஒரு மாதிரிப் பண்ணையை வழங்கலாம், ஆனால் அது வெறும் இரண்டு முதல் மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும் ஒரு ஏழை இந்திய விவசாயிக்கு அதுவுமேகூட சுருங்கிகொண்டிருக்கும்போது அவனுக்கு ஏற்றதான ஒரு மாதிரியாக இருக்க முடியாது. 

ராட்டையைச் சுற்றி, அதாவது தங்கள் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு, ஒத்துழைப்பின் மதிப்பைப் புரிந்துகொண்ட மக்களுக்கு மத்தியில், ஒரு தேசிய ஊழியர் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம், மேம்பட்ட சுகாதாரம், கிராம தகராறுகளைத் தீர்ப்பது, கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் போன்றவற்றோடு நூற்றுக்கணக்கான பிற நன்மை பயக்கும் செயல்பாடுகளுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவார்.

எங்கெல்லாம் ராட்டை நூற்றல் வேலைகள் நியாயமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளும் கிராமவாசிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ப நடக்கின்றன.

கவிஞரின் அனைத்து வாதங்களையும் விரிவாக மறுதலிப்பது என் குறிக்கோள் அல்ல. எங்களுக்கிடையிலான வேறுபாடுகள் அடிப்படைகளெதுவும் இல்லாதவை. கவிஞரின் கூற்றை மறுதலிக்கவில்லை என்றாலும் ராட்டைப் பற்றிய எனது நிலைப்பாட்டை என்னால் தக்கவைத்துக்கொள்ள முடியும். அவர் கேலி செய்திருக்கக்கூடிய பல விஷயங்கள் நான் சொல்லாதவைகள்.கவிஞரின் தாக்குதல் எனது ராட்டைப்பற்றிய நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒரு விஷயம் ஒரே ஒரு விஷயம் என்னை காயப்படுத்தியிருக்கிறது. கவிஞர் தான் தனது வட்டத்திலிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் நான் ராம் மோஹன் ராய் அவர்களை ஒரு சாமானியன் என்ற வகையில் பார்ப்பதாக குறிப்பிட்டிருந்ததுதான். நான் எங்கும் ஒருபோதும் அந்த மிகச்சிறந்த சீர்திருத்தவாதியை அப்படி குறிப்பிட்டதில்லை. கவிஞருக்கு அவர் எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவிற்கு எனக்கும்கூட முக்கியமானவர். நான் ராம் மோஹன் ராய் அவர்களின் பெயரை ஒரு முறை அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டாக் மண்ணில் உச்சரித்ததைத் தவிர வேறெப்போதும் பயன்படுத்தியதாக நினைவில் இல்லை. அதுவும்கூட மேற்கத்திய கல்வி இல்லாமலேயேகூட உயர்ந்த கலாச்சாரத்தை அடைய முடியும் என்று நான் கூறியதாக நினைவில் உள்ளது. யாரோ ஒருவர் ராம் மோஹன் ராயின் பெயரை குறிப்பிட்டபோது அறியப்படாத ஆசிரியர்களுள், எடுத்துக்காட்டாக, உபநிடதங்களுடன் ஒப்பிடும்போது அவர் ஒரு சாமானியன் என்று நான் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இது ராம் மோஹன் ராயை சாமானியனாக பார்க்கிறேன் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மில்டன் அல்லது ஷேக்ஸ்பியருக்கு முன்னால் டென்னிசன் ஒரு சாமானியன் என்று நான் சொன்னால், நான் அவரைப் பற்றி மோசமாக நினைக்கிறேன் என்பதாகாது. இருவரின் மகத்துவத்தையும் நான் மேம்படுத்தியே சொல்வதாகத்தான் கொள்ளவேண்டும். எங்கள் இருவருக்குமிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நான் கவிஞரை மதிக்கிறேன் என்பது அவருக்குமே தெரியும். வங்காளத்தின் மாபெரும் சீர்திருத்த இயக்கத்தை சாத்தியமாக்கியதில் முழு  பங்களிப்பும் அவரையே சேரும் என்ற விதத்தில் அந்த மனிதரின் மகத்துவத்தை நான் சிறுமைப்படுத்துவதற்கான வாய்ப்பேயில்லை. 

-யங் இந்தியா (5-11-1925)

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here