குர்ரத்துலைன் ஹைதர்
தமிழில் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி
குளியலறை அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருகிற குகையைப் போல இருந்தது. இருட்டாக, ஈரமாக, குளிர்ச்சியாக பளபளக்கும் பெரிய பெரிய பொருட்கள் நிறைந்ததாக இருந்தது. சுடுநீர் நிறைக்கப்பட்ட தொட்டி, வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கை கழுவ உபயோகிக்கப்படும் தொட்டிகள், நீண்ட மூக்கு கொண்ட உயரமான பித்தளை கூஜாக்கள், ஆஜானுபாகுவான, மர்மமயமான திருடர்களைப் போலக் காட்சியளிக்கும் துணிகளை உலர்த்துவதற்கான சட்டங்கள், ஜன்னலை நெருங்கும் முன், பேகம் இவை அனைத்தையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. காதல் மன்னனான தன் வருங்கால கணவன் உள்ளிருந்து வெளியே வரும்போதெல்லாம் அவனை ரகசியமாகப் பார்த்து ரசிப்பதற்காக, ஜன்னற்கதவின் ஒரு பகுதியின் வண்ணத்தை பேகம் சுரண்டி வைத்திருந்தாள்.
ஜன்னல், பக்கத்து வீட்டைப் பார்த்தபடி அமைந்திருந்தது. உயரமான மதில் சுவர் எழுப்பப்பட்ட அந்த வீட்டின் முன்பக்கத் தோட்டத்தில் மல்லிக் கொடிகளும் மாதுளை மரங்களும் இருந்தன. நடுவில் ஒரு நீரூற்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் ஷம்ஷாத் பேகத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட அஜீஸ் கான் பெரும்பாலும் புழங்கும் இடம். இடையே, எப்போதாவது, பெண்கள் புழங்குகிற அறையின் வாசலுக்கு நிதானமாக நடந்து வந்து, அவளுக்கு மட்டுமே புரிகிற மாதிரி, “யாரேனும் சூடான தேநீரும் பக்கோடாக்களையும் அனுப்புகிறீர்களா” என்று உரக்கக் கேட்பான். அது போதும். ஷம்ஷாத் பெண்களுக்கான விஸ்தாரமான முற்றத்தைத் தாண்டி வெறுங்காலுடன் ஓடுவாள். அஜீஸ் கான் தனது புறாக்களையும் காகிதப் பட்டங்களையும் நண்பர்களையும் தேடி திரும்பி வருவான். பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன். ஷம்ஷாத் கண்மண் தெரியாமல் அவனை நேசித்தாள்.
அவர்கள் ஷாஜகான் பூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய முன்னோர்கள், மற்ற ரோஹில்லா பட்டான்களைப் போல, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள். அவர்களுடைய பெயரால் அப்பகுதி முழுவதுமே ரோஹில் கண்ட் என்று அழைக்கப்பட்டது.
ஷம்ஷாத் பேகம், பழமை வாய்ந்த கூட்டு குடும்பம் ஒன்றில் வசித்து வந்தாள். அவளுடைய தகப்பனாரும் குடும்பத்தினரும் நிலச்சுவான்தார்கள். ரோஹில் கண்ட்டை சேர்ந்த பட்டான்கள் தங்களது ஆப்கானிஸ்தான பாரம்பரியத்தைக் குறித்து பெருமை கொண்டிருந்தார்கள். நல்ல ரோஜாப் பூ நிறமும், உடல் வலிமையும், அழகும் படைத்தவர்களாக விளங்கினார்கள். ஷம்ஷாத் பேகமும் நல்ல உயரமும் அழகும் வாய்க்கப் பெற்றவள். எந்நேரமும் பர்தாவிற்குள்ளேயே இருந்தவள். பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனாலும் அவளுக்கு வீட்டிலேயே உருது, அரபிக் மற்றும் பாரசி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவளும் பெற்றோருக்கு ஒரே குழந்தை.
திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பிறகு பேரிடர் நிகழ்ந்தது. ஷாஜஹான்பூர் முழுவதும் காலரா பரவியது. சில நாட்களுக்குள்ளேயே அடுத்தடுத்து அவளுடைய பெற்றோர் இறந்தனர். ஷம்ஷாத் பேரதிர்ச்சி அடைந்தாள். அவளுடைய வருங்கால மாமனார் மாமியார் அவளுக்கு ஆதரவளித்து தேற்றினார்கள். திருமணம் தள்ளிப் போடப்பட்டது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவள் மறுபடியும் பச்சை நிற ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.
ஒரு நாள் இரவு அஜீஸ் கானின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குள்ளேயே அவர் காலமானார். ஷம்ஷாத் தன்னை ‘துரதிஷ்டக் கட்டை’ என்று நினைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். சில நாட்கள் கழித்து அஜீஸ் அலகாபாதில் கோர்ட் கேஸ் இருப்பதாகவும், அதற்காக தான் போக வேண்டி இருப்பதாகவும் தன் தயாரிடம் சொன்னான். அவர்கள் வசதி படைத்த நிலைச்சுவான்தார்கள். ஷம்ஷாதுடைய அப்பாவும் சரி, மாமனாரும் சரி, ஏதாவது ஒரு வழக்கு வியாஜ்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அஜீஸ் அலகாபாதுக்கு சென்றான். இலையுதிர்கால மதியத்தில், ஆளரவற்ற பக்கத்து வீட்டு தோட்டத்தில் காற்று வீசிக் கொண்டிருந்தது. திடீரென எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். அப்பா… மாமனார்… அஜீஸ்… ஒரு வருடம் கடந்தது. அஜீஸ் திரும்பி வரவில்லை. ஷம்ஷாத் இருட்டு குளியலறைக்குள் ஒளிந்து கொண்டு அழுதாள். துணி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மிருதுவான மஸ்லின் துப்பட்டாவால் முகத்தை போர்த்திக்கொண்டு தன்னை அழுகையில் கரைத்துக் கொண்டாள்.
மிகவும் விசித்திரமான முறையில், மாமியார் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். நிமோனியா பாதிப்பு மட்டுமே காரணம் இல்லை, மனமும் உடைந்து போனதுதான் காரணம் என்று ஷம்ஷாதுக்கு தெரிந்திருந்தது.
அப்பாவின் மரணத்திற்கு பிறகு ஷம்ஷாத் பேகம் பெருஞ்சொத்திற்கு வாரிசுதாரர் ஆனாள். அஜீஸ் அவளுடைய சட்ட ரீதியான பாதுகாவலன் ஆனான். ஆனால், அவன் எங்கே? லக்னோ… கல்கத்தா… மசூரி… நைனித்தால்? அப்பா இறந்த பிறகு அவனுக்கு கிடைத்த சொத்தை அவன் வாரி இறைத்து வீணாக செலவழிப்பதாக வதந்திகள் வரத் தொடங்கின.
ஷம்ஷாத் பேகமோ ஒரு சிறுமி. அஜீஸும் அருகே இல்லாத நிலையில், அவளுடைய உறவினர்கள் அவளை ஏமாற்றினர். காலம் எதற்கும் நிற்காமல் பறந்தது. அவளுக்கு முப்பது வயதாகி விட்டிருந்தது. அவள் இன்னமும் அஜீஸ் கானுக்காக காத்திருந்தாள். இளம் வயதில் திமிர் பிடித்தவளாக இருந்த போதிலும், வயதும் அவள் சந்தித்த துயரங்களும் அவளை இளக்கி இருந்தன. ஆனால் அவள் குடும்ப கௌரவம் மிகவும் உள்ளவளாக விளங்கினாள். ரோஹில் கண்டின் பிரபு குடும்பத்து பெண்களைப் போல, தனது தந்தை விட்டு சென்றிருந்த வாழ்க்கையை காப்பாற்ற அவள் பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தாள். குடும்ப கௌரவத்தை காப்பாற்ற எஞ்சி இருந்த ஒரே நபர் அவள் தான்.
ஷம்ஷாதின் முடி நரைக்க ஆரம்பித்தது. வெளிமனிதர்களை சந்திப்பதை தவிர்த்து அவள் பங்களாவிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவள் ஆண்கள் புழங்கும் பகுதிக்குச் சென்று, அந்த இடத்தை சுத்தம் செய்து, ஜன்னல்களைத் திறந்து வைத்து அறைக்குள் காற்று வர செய்தாள். விக்டோரியா காலத்து மரச்சாமான்களை நகர்த்தி துடைத்து சுத்தம் செய்தாள். மரங்களுக்கும் பூச்செடிகளுக்கும் நீர் வார்த்து, பழுத்த இலைகள் அடைத்துக் கொண்டிருந்த நீரூற்றை சுத்தம் செய்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் – யாருக்குத் தெரியும்?
கோடைக்காலத்தில் நீண்ட மதியப் பொழுதுகளில், அவள் மரக்கட்டிலிலோ அல்லது பெண்கள் புழங்கும் முற்றத்தின் மீது கவிழ்ந்திருக்கும் புளிய மரத்தை வெறித்துக்கொண்டோ படுத்துக் கிடப்பாள். வயதான சமையல்காரம்மா சலாமத், புளிய மரத்தின் அடியில் கட்டிலில் அமர்ந்து கொண்டு வெற்றிலைப் பாக்கை அரைத்தபடி அடிக்கடி தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். “கடவுள் இரு முறை மட்டுமே சிரிப்பார் – ஒருவருக்கு அவர் அளித்த கௌரவத்தை அடுத்தவன் கெடுக்க நினைக்கும் போது, அடுத்தது அவர் உருவாக்கியதை மற்றவர் அழிக்க நினைக்கும் போது”.
“போதும் நிறுத்துங்கள் சலாமத் அத்தை ” என்பாள் ஷம்ஷாத் எரிச்சலுடன். ஆனால் கிழவிக்கோ காது கேட்காது. அவள் அபசகுனம் நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து முணுமுணுத்து அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள்.
அது ஒரு பனிப்படர்ந்த குளிர்கால காலை. ஷம்ஷாத் அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள். சலாமத்தின் பெண் அவசர அவசரமாக கதவைத் தட்டினாள்.
“அக்கா, சீக்கிரம் வெளியே வாங்க” என்று அவள் மேலும் கீழும் குதித்துக் கொண்டே கத்தினாள்.
ஈரத்தலையை துவாலையால் சுற்றிக்கொண்டு, “என்ன ஆச்சு பைத்தியமே?” என்று கேட்டபடியே ஷம்ஷாத் வெளியே வந்தாள்.
“அக்கா நான் சொல்வதை நம்புங்கள். முதலாளி வந்துவிட்டார். அவருக்கு சூடாகத் தேநீரும் பக்கோடாவும் வேண்டுமாம்.”
ஷம்ஷாத் பேகத்தால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. குளியலறையின் அரை இருட்டில் அவள் தட்டுத் தடுமாறி ஜன்னலை நெருங்கி, வெளியே எட்டிப் பார்த்தாள். முற்றங்கள் உயிர்த்தெழுந்திருந்தன. வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சூட்கேஸ்களும் ஹோல்டால்களும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. வாயிலில் யாரோ குதிரை வண்டிக்காரனோடு உரத்த குரலில் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கண்கள் ஒரு பெண்ணின் மீது பதிந்தன. கருத்த நிறமும் பருத்த முகமும் சிவப்பு நிற ஜார்ஜெட் புடவையும் அணிந்திருந்தாள் அந்தப் பெண். அடுத்த நொடியே அவன் வந்தான். வழக்கம் போலவே மிகவும் மிடுக்காக. அவன் அந்தப் பெண்ணுக்கருகே சென்று எதையோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள்.
அலிபாபாவின் குகை ஆழமான கிணறாக மாறி ஷம்ஷாத் அதில் தலை சுற்றி மூச்சுத் திணறி விழுந்தாள். கெட்ட கனவு ஒன்று கண்டவள் போல, அவள் தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள்.
இரவு அஜீஸ் தன் மனைவியை வீட்டிற்குள் அழைத்து வந்தான். சற்றே தயக்கத்துடன், முக்கிய வாயிலுக்கு அருகே வந்து தொண்டையை செருமிக் கொண்டு, ” ஷம்மி, உன் புது உறவினரை வந்து பார்” என்றான்.
வராண்டாவின் உட்புறம் நின்று கொண்டிருந்த ஷம்ஷாத் நடுங்கியபடியே குளியலறை நோக்கி மறுபடியும் ஓடினாள். தலை சுற்றியது. குளியலறையின் கதவை தாழிட்டுக் கொண்டாள். வராண்டாவில் தம்பதியர் சற்று நேரம் அசௌகரியமாக உணர்ந்தபடியே நின்று கொண்டிருந்துவிட்டு தங்கள் வீட்டிற்குத் திரும்பினர்.
ஷம்ஷாத் பேகம் அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொண்டதும் அதிர்ச்சி அடைந்தாள் – தன்னைக் கைவிட்டுவிட்டு அந்தப் பெண்ணை மணந்து கொண்டதற்காக அல்ல, மாறாக குடும்ப கௌரவத்தை சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு வேசியை மணந்து கொண்டதற்காக.
அஜீஸின் மனைவி அவளை மறுபடியும் சந்திக்க முயற்சி செய்தாள். “லக்னோவை சேர்ந்த கல்லோ பாய் – கிராமஃபோன் மற்றும் ரேடியோ பாடகி” என்றும் அவள் அறியப்பட்டாள். அந்த குடும்பத்தின் மருமகளாக தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அவள் பெரிதும் பாடுபட்டாள். ஆனால் ஷம்ஷாதோ, வாயிற்காப்போன் தம்மு கானிடம், “நீ உண்மையிலேயே ஒரு பட்டானாக இருந்தால் – ஆணோ பெண்ணோ – அது யாராக இருந்தாலும் சரி, என் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் காலை உடைத்து விடு” என்று கட்டளையிட்டிருந்தாள்.
அவள் ஒரு விதவையைப் போல வெள்ளை உடை அணிய ஆரம்பித்தாள். கொஞ்சநஞ்சம் மீதமிருந்த சொத்துக்களை உறவினர்கள் களவாட அனுமதித்தாள். அஜீஸ் சூழ்நிலையை ஓரளவு புரிந்துகொண்டான். குற்ற உணர்ச்சியால் தவித்தான். அவள் சார்பாக உறவினர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்தான். உறவு பெண்மணி ஒருவரின் மூலம் அவளுக்கு பெருந்தொகையையும் அனுப்பி வைத்தான். ஷம்ஷாத் பேகம் கோபத்தில் கொந்தளித்தாள். வேகவேகமாக வீட்டு வாசல் வரை நடந்தாள். அங்கிருந்து அவள் பேசுவது ஆண்கள் புழங்கும் முற்றத்தில் எளிதாகக் கேட்கும். “தம்மு கான், ஜும்மன் கானின் மகளும் ஷப்பு கானின் மருமகளும் ஆன நான், விபச்சார விடுதியில் தங்கியிருந்தவர்களின் கைப்பட்ட பணத்தை பெற்று செலவழிப்பதை விட பட்டினி கிடந்து சாவேன்” என்று உரக்கக் கூறினாள். அந்தப் பெரிய வீட்டை கட்டித் தீனி போடவும் ஒன்றுக்கும் உதவாத உறவினர்களையும் வேலைக்காரர்களையும் வைத்து காப்பாற்றவும் அவளுக்கு தன் நகைகளை விற்க வேண்டி வந்தது. நகைகள் அனைத்தும் தீர்ந்தவுடன், அக்கம் பக்கத்து பெண் குழந்தைகளுக்காக அவள் ஒரு பள்ளியைத் தொடங்கினாள். தையல் வேலை செய்ய ஆரம்பித்தாள். அதுவரை தொத்திக் கொண்டிருந்தவர்கள் அவளை விட்டு விலகிப் போனார்கள். அவளுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான தம்மு காணும் சலாமத் அத்தை மட்டுமே அவளுடன் இருந்தார்கள்.
ஷம்ஷாத் பேகத்தின் உடல்நலம் குன்றியது. ஜுரம் தலைக்கேறி அவள் தன் நினைவின்றி புலம்ப ஆரம்பித்தாள். சலாமத் பயந்து போய், அஜீஸுக்கு சொல்லி அனுப்பி குடும்ப வைத்தியரை வரவழைத்தாள். கணவனும் மனைவியும் அவளுடைய கட்டிலுக்கு அருகே அமர்ந்து அவளை பராமரித்தனர். அவள் கண் திறந்தவுடன் தலை மாட்டருகே அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவள் கல்லோ பாயை வெறுப்புடன் பார்த்து கண்களை மூடிக்கொண்டாள். கல்லோ, தன் கணவரின் உறவினரான ஷம்ஷாதைப் பார்த்து பயந்தாள். சத்தம் இன்றி அவள் தன் வீட்டுக்கு திரும்பினாள்.
ஷம்ஷாத் பேகம் விரைவில் குணமடைந்தாள்.
1947 ஆம் ஆண்டின் கோடை காலம் அது. ஹிந்து முஸ்லிம் இனக் கலவரங்கள் மூண்டு கொண்டிருந்தன. ஜமீன்தாரி முறையை ஒழிக்கப்போகிறார்கள் என்ற பேச்சும் பரவலாக இருந்தது. கிடைத்த சொத்தில் ஏற்கெனவே பெருமளவை இழந்திருந்த அஜீஸ் வக்கீலை சந்திக்க தில்லிக்குச் சென்றான். அங்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அவன் கலவரத்தில் கொல்லப்பட்டான்.
அந்த செய்தி வந்த அன்று ஷம்ஷாத் பேகம் வராண்டாவில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். கல்லோ வேகமாக ஓடி வந்து மூடி இருந்த கதவை படபடவென தட்டினாள். “நடக்கக்கூடாதது நடந்து விட்டது நாம் அழிந்து விட்டோம்” என்று கதறினாள்.
ஷம்ஷாத் பேகம் அதிர்ந்து எழுந்தாள். முற்றம் வழக்கம் போல வெறிச்சோடிக் கிடந்தது. காற்றில் புளிய மரத்தின் கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. கல்லோவின் கூக்குரல் அவளைத் துளைத்து எழுப்பியது. ஷம்ஷாத் பேகம் எழுந்து பார்த்தாள். கல்லோ வாயிற் கதவை உலுக்கிக் கொண்டிருந்தாள். ஷம்ஷாத் பேகம் சுவற்றில் மாட்டி இருந்த சாவியை எடுத்துக் கொண்டு வாயிற்கதவை நோக்கி நடந்தாள். தனக்குத்தானே புலம்பிக்கொண்டு கதவை திறந்தாள்.
கல்லோ தலைவிரி கோலமாய் நின்று கொண்டிருந்தாள். கருப்பு பிசாசைப் போல நின்று கொண்டிருந்த அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவளுடைய முகம் சிதிலமடைந்து பார்க்க கோரமாக இருந்தது. கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை வாயிற் கதவின் மீது வேகமாக அடித்து உடைத்துக் கொள்கிற முயற்சியில் அவள் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருந்தது. சில நொடி நேரம் அவள் தன் கணவனின் கோபக்கார உறவுக்காரியை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் சில அடிகள் முன்வைத்து அவளை தழுவிக் கொள்ள முயற்சி செய்தாள். ஷம்ஷாத் பேகம் சடார் என்று பின் வாங்கினாள். கல்லோ பெரிதாக ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள். “அக்கா என் சாம்ராஜ்யம் தொலைந்து போனது. என் மணிமுடி புழுதியில் விழுந்துவிட்டது. நான் விதவையாகிப் போனேன். அவர் இறந்து விட்டார்.”
ஷம்ஷாத் பேகத்தின் கண்களில் இன்னமும் தூக்கம் வழிந்து கொண்டிருந்தது. அவள் கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு எதிரில் நின்று புலம்பும் கல்லோவை பார்த்தாள். மெதுவாக அவள் உண்மையை புரிந்து கொண்டாள். வாயிற் படியிலேயே உட்கார்ந்து கொண்டு மெல்லிய மஸ்லின் துப்பட்டாவால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். அவளுடைய அழுகை கல்லோவின் வெறிபிடித்த புலம்பலோடு கலந்து கொண்டது.
“அக்கா நான் விதவையாகி விட்டேன்” கல்லோ மறுபடியும் கூக்குரலிட்டு அழுதாள்.
ஷம்ஷாத் பேகம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, எப்போதும் போல எழுந்து நிமிர்ந்து நின்றாள். “பாதகத்தி, நீ இன்று விதவையாகி இருக்கிறாய். நான் எப்போதுமே விதவையாகத்தான் இருக்கிறேன். இங்கிருந்து போய் விடு. எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிப் போய்விடு” என்றாள்.
கதவை இழுத்து மூடி உட்பக்கம் தாழிட்டு விட்டு மறுபடியும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
சில நாட்கள் கழித்து அஜீஸின் விலை உயர்ந்த பொருட்களோடு கல்லோ காணாமல் போனாள்.
குளியலறை ஜன்னல் வழியாக கல்லோ விலை உயர்ந்த பொருட்களை வண்டியில் கட்டிக்கொண்டு செல்வதை ஷம்ஷாத் பேகம் பார்த்தாள்: தரை விரிப்புகள், ஓவியங்கள், வெள்ளிப் பொருட்கள். ஷம்ஷாத் பேகம் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் நடப்பதனைத்தையும் ஒரு காட்சியைப் போல வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள்.
அரசாங்கத்தின் சார்பாக அதிகாரிகள் பக்கத்து வீட்டை சீல் வைத்து அடைத்தார்கள். அஜீஸ் கான் இனக் கலவரத்தில் கொலை செய்யப்பட்டான் என்பதையோ, பாகிஸ்தானில் குடியேறவில்லை என்பதையோ ஷம்ஷாத் பேகத்தால் நிரூபிக்க முடியவில்லை. அந்த வீடு ‘நாடு விட்டு வெளியேறியவரின் சொத்தாக’ அறிவிக்கப்பட்டது. ஷம்ஷாத் பேகம் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை.
சில வாரங்களுக்கு பிறகு லண்டனில் இருந்து வெளியேறி அகதியாய் வந்த சீக்கிய மருத்துவர் ஒருவர் அஜீஸ் கானின் வீட்டில் குடியேறினார். அவருடைய மனைவி ஷம்ஷாத் பேகத்துடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தாள். வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தம்மு கான் இறந்து போனான். சலாமத் நடக்க முடியாமல் முடங்கியிருந்தாள். ஷம்ஷாத் பேகத்தின் பெரும்பாலான உறவினர்கள் பாகிஸ்தானுக்கு போய் விட்டிருந்தார்கள்.
அகதியாய் வந்த சீக்கிய மருத்துவரின் மகள் புது தில்லியில் பணி புரியும் கீழ்நிலை அரசு அதிகாரி ஒருவரை மணந்திருந்தாள். அவள் தன் பெற்றோரை சந்திக்க ஷாஜஹான்பூர் வந்த போது ஷம்ஷாத் பேகத்தையும் சந்தித்தாள். அவளுடைய கணவரின் முஸ்லிம் பாஸ் தன் குழந்தைகளுக்கு உருது கற்றுத் தருவதற்காக தகுந்த ஆசிரியர் ஒருவரை தேடிக் கொண்டிருப்பதாக அவள் தன் பெற்றோரிடம் கூறினாள். மருத்துவரின் மனைவி ஷம்ஷாத் பேகத்தை அந்த வேலையை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினாள். “சகோதரி எத்தனை நாட்கள் நீங்கள் இப்படி வருமானம் ஏதுமின்றி தனியாக இருக்க முடியும்? கௌரவம் பார்க்காதீர்கள். இந்த வேலையை ஒப்புக் கொள்ளுங்கள். பாடம் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் இழிவான வேலை இல்லை” என்றாள்.
ஷம்ஷாத் பேகம் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டாள். வயதாகி தான் இறக்க நேரிடும் போது தன் தலை அருகே நின்று குர்ஆன் படிக்கவும் இறுதிச் சடங்குகளை செய்யவும் எவரேனும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏனோ அவளுக்கு திடீரெனத் தோன்றியது.
கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு புர்கா அணிந்து கொண்டு ஷம்ஷாத் பேகம் தன் வீட்டின் வாயிற்படியைக் கடந்தாள். அதை வீடு என்று சொல்வதை விட புராதனமான பழம்பெருமை வாய்ந்த இறந்த காலத்தின் எச்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஜமீன்தார் ஜும்மா கானின் மகள் வறுமையில் வாடும் ஒரு ஆசிரியையாக, முன்பின் தெரியாத வினோதமான உலகிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.
ஷம்ஷாத் பேகம் புது தில்லியில் பன்னிரண்டு வருடங்கள் ஷஹாபுதீன் குடும்பத்தினருடன் செலவழித்தாள். அவர்கள் அவளுடன் மிகவும் அன்பாக குடும்பத்தில் ஒருத்தியைப் போல நடத்தினார்கள். அவர்களுடைய குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஷஹாதீன் பதவி ஓய்வு பெற்று தன் சொந்த கிராமத்திற்கு திரும்ப முடிவு செய்தார். அவர்கள் ஷம்ஷாத் பேகத்தை அவர்களுடைய நண்பரான ரஷீதத் அலி குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்கள். அவர்களுடனும் ஷம்ஷாத் பேகம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருந்தாள். ரஷீத் அலி குடும்பத்தினரும் ஷம்சாத் பேகத்தை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அவளை ஷம்ஷாத் அத்தை என்றே அழைத்தார்கள்.
சிறிது காலம் கழித்து ரஷீது அலிக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வேலை மாற்றம் ஆனது. அவருக்கு ஷம்ஷாத் அத்தையை என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுபடியும் ஒருமுறை அவரைத் தனியாக விடுவதா?
ஒரு நாள் திருமதி ரஷீத் ரோஷனரா கிளப்பில் நண்பர்கள் அளித்த பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே பழைய தில்லியில் இருந்த உறவினர்களை சந்திக்க சென்றாள்.
ஷம்ஷாத் பேகம் கிளப்பிற்கு வந்து புல்வெளியில் அவளுக்காக காத்திருந்தாள். எப்போதும் வெள்ளை நிற உடை அணியும் ஷம்ஷாத் பேகம் கண்ணியமான பெரிய வீட்டு பெண்மணியைப் போலத் தோற்றமளித்தாள். தன் எஜமானிககாக காத்திருந்து, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கையில், தோட்டத்து குடைக்கு கீழே இருந்து மிகவும் நாகரீகமான ஒரு பெண்மணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். அவளைப் போலவே நாகரீகமான ஆடை அணிந்த சில ஆண்களுடன் அவள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ஃபேஷன் பத்திரிகைகளில் வரும் பெண்களைப் போல அவள் மிகவும் அழகாகவும் நாகரீகமானவளாகவும் இருந்தாள். 17 வருடங்கள் தில்லியில் வசித்த பழக்கம் இருந்ததால் நவீன, வசதியான பெண்களை ஷம்ஷாத் பார்த்திருந்தாள். அந்தப் பெண்மணி அவளையே மறுபடியும் பார்ப்பதை ஷம்ஷாத் கவனித்தாள். சற்று நேரத்திலேயே, மேம் சாஹப் அவளுடன் பேச விரும்புவதாக கிளப்பில் பணி புரியும் சிப்பந்தி ஒருவன் அவளிடம் வந்து கூறினான்.
ஷம்ஷாத் பேகம் அவர்கள் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்த மேஜையை நெருங்கினாள். அவளிடம் பேச விருப்பம் தெரிவித்த பெண்மணி சிரித்துவிட்டு அவளுடன் பம்பாயில் கூடவே தங்கி வீட்டில் கவனித்துக் கொள்வதற்கு ஒரு கௌரவமான நபரைத் தேடிக் கொண்டிருப்பதாக கூறினாள். வீட்டில் வேலைக்காரர்கள் பல பேர் இருப்பதாகவும் உண்மையில் செய்வதற்கு வேலை என்று எதுவும் இல்லை என்றும் கூறினாள். வயதான தாய் போன்று பாதுகாப்பு தரக்கூடிய ஒரு நபரை தேடிக் கொண்டிருப்பதாகவும் ஷம்ஷாதுக்கு எவரையேனும் தெரியுமா என்றும் கேட்டாள்.
ஒரு கதவை மூடினால் மறு கதவைத் திறக்கிற கடவுளுக்கு ஷம்ஷாத் பேகம் மனதுக்குள் நன்றி கூறினாள். தற்போது ஷம்ஷாத் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கூடிய விரைவிலேயே முடிந்துவிடும் என்றும் அவளுடைய எஜமானியிடம் அந்த பெண்மணி பேச முடியுமா என்றும் பணிவோடு கேட்டாள்.
திருமதி ரஷீத் அலி திரும்பி வந்தார். அந்தப் பெண்மணி தன்னை மும்பையில் இருந்து ரஸியா பானு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஷம்ஷாத் பேகத்தை பற்றி விசாரித்தாள். தான் அடுத்த நாள் காலை மும்பைக்கு விமானத்தில் செல்ல இருப்பதாகவும் ஷம்ஷாத் பேகத்துக்கு விருப்பமிருந்தால், தனக்கு வசதியான நாளில் ரயிலில் மும்பைக்கு வந்து சேரலாம் என்றும் கூறினாள்.
திருமதி ரஷீத் அலி பெரும் கவலை தீர்ந்தது போல உணர்ந்தாலும், அக்கறையுடன் ஷம்ஷாதிடம், “அத்தை உங்களால் தனியாக மும்பைக்கு பயணம் செய்ய முடியுமா?” என்று கேட்டாள்.
ஷம்ஷாத் பேகம் தலையசைத்தாள். எவருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை என்று நினைத்தாள். தன்னுடைய சம்பளம் என்னவென்று கூட அவள் பேசி முடிவெடுக்கவில்லை. தனக்கு 40 ரூபாய் சம்பளம் போதும் என்று முடிவு செய்தாள். பணம், உறவுகள், அன்பு, பாசம் எல்லாம் பொருள் அற்றவை என்றும் கையில் பிடிபடாத நிழல் போல ஓடிக்கொண்டே இருப்பவை என்றும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். அல்லாஹ்வின் பெயர் மட்டுமே எப்போதும் நிலைத்திருப்பது என்று நம்பினாள்.
தன் பெரிய பையில் இருந்து ரஸியா பானு, 150 ரூபாய் பணமும் தன் முகவரி எழுதிய அட்டையையும் கொடுத்தாள். பம்பாய் வருவதற்கு ஆனா ரயில் சத்தத்துக்கும் மற்ற செலவுகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவள் சாதாரணமாக் கூறினாள். திருமதி ரஷீத் அலிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஷம்ஷாத் பேகம் எந்த பாதிப்பும் இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். மும்பை பெரிய பெரிய பணக்காரர்களின் நகரம் என்று அவளுக்கு தெரிந்திருந்தது. வாழ்க்கை எந்த விதத்திலும் அவளை ஆச்சரியப்படுத்தவில்லை.
ஆனால் மும்பையை அடைந்ததும் மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ஷம்ஷாத் பேகம் சற்றே குழப்பம் அடைந்தாள். ஜனத்திரளை பார்த்து அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. வெற்றிலை பாக்குப் பையன் இறுக்க பிடித்தபடி ஒரு டாக்ஸியில் ஏறினாள்.
வார்டன் ரோட்டில் புத்தம் புதிதாக பளபளத்துக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு வண்டி நின்றது. ஷம்ஷாத் பேகம் வண்டியிலிருந்து இறங்கினாள். பருமனான குர்கா காவல்காரன் முக்காலியின் மீது அமர்ந்து கொண்டிருந்தான். அவள் வராண்டாவில் நடந்து செல்கையில் தானியங்கியை பார்த்து பதட்டம் அடைந்தாள். அவள் காவல்காரனை தயக்கத்துடன்,” மகனே, இது எப்படி இயங்குகிறது?” என்று கேட்டாள். தானியங்கியை இயக்குகிற இளைஞன் அவளை பதினோராம் மாடிக்குக் கொண்டு சேர்த்தான். அவளுடைய சாமானை வீட்டு வாயில் வரை கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான். அவள் அழைப்பு மணியை அழுத்தினாள். ஒரு கண் உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. கதவு திறந்தது. இன்னொரு கூர்கா வெளியே வந்து அவளை சந்தேகத்துடன் பார்த்தான். ஷம்ஷாதுக்கு மறுபடியும் பதட்டமாக இருந்தது. தான் ஒரு தைரியமான பட்டான் குலத்தில் பிறந்தவள் என்று தனக்குத்தானே ஞாபகப்படுத்திக் கொண்டாள். மிகுந்த பெருமிதத்துடன், “தில்லியில் இருந்து ஷம்ஷாத் பேகம் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றாள்.
” தெரியும். உள்ளே வாருங்கள்” என்று அவன்சிடுசிடுத்தபடி பதில் அளித்தான். அவளுடைய சிறிய பெட்டியையும் படுக்கையையும் அவன் தூக்கி கொண்டான். அவள் தன்னுடைய வெற்றிலை பெட்டியையும் விசிறியையும் இறுகப் பிடித்தபடியே அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவர்கள் ஒரு பெரிய ஹாலைக் கடந்து சென்றார்கள். அதன் ஒரு மூலையில் மதுபானங்கள் நிறைந்த மர அலமாரி வைக்கப்பட்டிருந்தது. சுவர் மீது சிறிய சினிமாத் திரையும் இருந்தது. பிறகு அவர்கள் ஒரு வராந்தாவைத் தாண்டி நடந்தார்கள். அதன் இரு புறமும் மூடிய கதவுகள் இருந்தன. கூர்கா சாமான்கள் ஏதுமற்று காலியாக இருந்த வேலைக்காரர்களுக்கான அறையை அடைந்து அவளுடைய பெட்டியையும் படுக்கையையும் கீழே வைத்தான்.
பேகம் சாஹிபா வீட்டில் இருக்கிறார்களா என்று ஷம்ஷாத் பணிவுடன் கேட்டாள்.
“ஆமாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
“சாஹேப்?”
கூர்க்கா பதில் ஏதும் கூறாமல் திரும்பி நடந்தான்.
அறை காலியாகவும் புழுக்கமாகவும் இருந்தது. மெத்தை எதுவும் இல்லாத வெறும் மரக்கட்டில் ஒன்று இருந்தது. இதில் படுத்தால் கண்டிப்பாக முதுகு வலி தான் வரும் என்று நினைத்துக் கொண்டே அவள் ஒரு ஜன்னலைத் திறந்தாள். பச்சசையும் நீலமும் கலந்த நிறத்தில் விரிந்து கிடந்த கடல் அவளை வரவேற்றது. இதற்கு முன் அவள் கடலைப் பார்த்ததில்லை. கடல் அவளை பரவசத்தில் ஆழ்த்தியது. திடீரென மெக்காவும் மதீனாவும் பளபளக்கும் நீருக்கப்பால் எங்கோ இருக்கின்றன என்கிற எண்ணம் அவளுக்கு தோன்றியது. கடவுள் தன் அபார கருணையாலும் கிருபையாலும் அவளை அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு பம்பாய்க்கு அழைத்து வந்திருப்பதாக அவளுக்கு தோன்றியது. விரைவிலேயே ஹஜ் புனித யாத்திரையிலும் கடவுள் தன்னை அழைத்துச் செல்வான் என்றும் அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் அவள் கண்களைக் கண்ணீரால் நிரப்பியது. அவள் ஜன்னலிலிருந்து நகர்ந்தாள்.
அந்த வீடு அமானுஷ்யமான முறையில் அமைதியாக இருந்தது. ஒருவேளை சாஹிப் அலுவலகத்திற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றிருக்கலாம் என அவள் நினைத்தாள். மதிய உறக்கத்திற்கு பின் பேகம் எழுந்து விட்டார்களா என்று பார்க்கலாமென அவள் எழுந்தாள். வராண்டாவில் நடந்து பாதி திறந்திருந்த ஒரு அறையை நோக்கிச் சென்று கதவைத் தட்டினாள்.
“உள்ளே வரலாம்”
அவள் மிகவும் வசதியான குளிரூட்டப்பட்ட படுக்கை அறைக்குள் நுழைந்தாள். ரஸியா பானு மிகப்பெரிய கட்டிலில் படுத்து கொண்டிருந்தாள். அவள் மெல்லிய இரவு உடை அணிந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற தொலைபேசியும் தங்க நிற டைரியும் போர்வையின் மீது கிடந்தன.
“வந்து விட்டீர்களா அத்தை? உட்காருங்கள்” என்று தரையை நோக்கி ஜாடை காட்டினாள்.
ஷம்ஷாத் பேகம் அதிர்ச்சி அடைந்தாள். அவளை இதுவரை யாரும் அவளை “அத்தை” என்று அழைத்ததில்லை. அவளைத் தரையில் உட்காரச் சொன்னதும் இல்லை. அவள் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு சோபா முனையில் உட்கார்ந்தாள். அவளுக்குத் தேநீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. தன்னுடைய புதிய எஜமானியின் உடலைக் காட்டும் ஆடையும், அவள் சிகரெட் பிடிப்பதும் ஷம்ஷாத் பேகத்திற்குப் பிடிக்கவில்லை. “ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருக்கும். பம்பாயில் இதுதான் பழக்கம் போலிருக்கிறது” என்று அவள் தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.
ரஸியா பானு அவளை ஆச்சரியத்துடன் பார்த்து, “நீங்கள் இங்கு வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அத்தை. உங்களைப் போன்ற வெள்ளந்தியான, கண்ணியமான, கடவுள் பக்தி நிறைந்த ஒருவரைத் தான் நான் பல நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு தெரியுமா – என்னால் மனிதர்களை மிகச் சரியாக எடை போட முடியும். நீங்கள் மிகவும் மரியாதைக்குரிய பெண்மணி என்று நான் உங்களைப் பார்த்த உடனேயே கணித்து விட்டேன். நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். நீங்கள் இங்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் அறையில் இருந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் போதும். என்னுடன் எப்போதும் ஒரு வயதான பெண்மணி இருந்து காலையில் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். ஹைதராபாத்தைச் சேர்ந்த கடவுள் பக்தி நிறைந்த வயதான பெண்மணி ஒருவர் என்னோடு இங்கு இருந்து வந்தார். ஆனால் பாவம் அவர் போன வருடம் இறந்து விட்டார். எங்கள் துணிமணிகளை பராமரிக்க கோவாவை சேர்ந்த இரண்டு ஆயாக்கள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் எப்போதாவது முகலாய உணவு வகைகளை சமைத்துக் கொள்ளலாம். நேர்த்தியாக உடை அணிந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி அறைக்குள் நுழைந்தாள். ரஸியா பானு அவளிடம் ஆங்கிலத்தில் எதையோ சொன்னாள். அவள் உரக்க சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
“உங்கள் மகளா? மிகவும் அழகாக இருக்கிறாள். உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று ஷம்ஷாத் பேகம் ஆர்வத்துடன் கேட்டாள்.
“இவள் என் அண்ணன் மகள், எனக்கு குழந்தைகள் இல்லை” என்று பதில் வந்தது.
“உங்கள் கணவர்? அவர் வியாபாரம் செய்கிறாரா?” பம்பாயில் வசிப்பவர்கள் எல்லோரும் வியாபாரம் செய்பவர்கள் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள்.
என் கணவர் இறந்து விட்டார் என்று ரஸியா பானு சுருக்கமாக பதில் அளித்தாள். ” நான் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா… யாருடைய வீண் பேச்சையும் கேட்காதீர்கள். வேலைக்காரர்களோடு அதிகம் பழக வேண்டாம். பம்பாய் மிகவும் மோசமான ஊர். இவர்கள் எல்லோருமே பொல்லாதவர்கள். இங்கு எல்லா விதமான நிகழ்வுகளும் நடைபெறும். எதைக் குறித்தும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. என் அண்ணன் மகள்கள் எல்லோருமே இக்காலத்து நவீன யுவதிகள். அவர்களுடைய நண்பர்கள் பலர் அவர்களை பார்க்க வருவார்கள். புரிகிறதா?”
ஷம்ஷாதுக்கு ஒன்றும் புரியவில்லை. திருமதி ஷஹாபுதீனின் குழந்தைகளுக்கும் பள்ளியில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஷம்ஷாதுக்கு உடனடியாக ஒரு கோப்பை தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது.
“நான் பெரிய வியாபாரம் செய்கிறேன், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம்” ரஸியா பானு தொடர்ந்தாள். “பலவிதமான நபர்கள் வியாபாரம் தொடர்பாக என்னை சந்திக்க வருவார்கள். வெற்றிகரமாக வியாபாரம் செய்வதால் எனக்கு பல விரோதிகளும் இருக்கிறார்கள். அதனால்தான் நான் வெளியே ஒரு இரும்பு கதவை பொருத்தி இருக்கிறேன். போலீஸ்காரர்கள் இரண்டு முறை எங்களை திடீர் சோதனை செய்ய வந்தார்கள்.”
“போலீசா?” ஷம்ஷாத் பேகம் பயத்துடன் கேட்டாள்.
ரஸியா பானு சிரித்தாள். “பயப்பட வேண்டாம். போலீஸ் எங்களைப் போன்ற பெரிய வியாபாரிகளை அடிக்கடி தொந்தரவு செய்வது வழக்கம். அதனால்தான் யாராவது வாயில் மணியை அழுத்தினால், ஜாக்கிரதையாக இருக்கவும்”.
ஷம்ஷாத் பேகத்துக்கு மறுபடியும் கொட்டாவி வந்தது.
“நான் வேலைக்காரனிடம் உங்களுக்கு தேநீர் தயாரித்து தரச் சொல்கிறேன்”
நன்றி கூறிவிட்டு ஷம்ஷாத் பேகம் எழுந்து தன் அறைக்குத் திரும்பினாள்.
அவள் தன் மதிய மற்றும் மாலை பிரார்த்தனைகளை முடித்தாள். மிகவும் களைப்பாக இருந்தது. செய்ய ஒரு வேலையும் இல்லை. வீடு மறுபடியும் அமைதியில் ஆழ்ந்தது. வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு அவள் தன் அறையை விட்டு நகர்ந்தாள். எஜமானி கொடுத்திருந்த அறிவுரைகளை மறந்து வேகமாக வரவேற்பறைக்குச் சென்று விரைவாக கதவை திறந்தாள். இரண்டு ஆண்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் பட்டுக் குர்த்தாவும் வேட்டியும் அணிந்திருந்தார். அவருடைய விரல்களில் வைரங்கள் ஜொலித்தன. அவர் மிகவும் பருமனாக இருந்தார். இன்னொரு நபர் சினிமா நடிகரைப் போல ஆடை அணிந்திருந்தார். அவர் ஒல்லியாக இருந்தார். முகத்தில் எண்ணெய் வழிந்தது. இருவரும் சோபா மீது விழுந்து கால்களை நீட்டி கொண்டார்கள்.
“பாய், மேடம் எங்கே?” வியாபாரி போல தோற்றமளித்தவர் கேட்டார்.
ஷம்ஷாத் பேகம் பயத்தில் நடுங்கினாள். இது என்ன மாதிரியான பாஷை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே,” பேகம் தன்னுடைய அறையில் இருக்கக்கூடும் .நீங்கள் யார் என நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.
“எங்கள் பெயர்கள் இருக்கட்டும். குட்டிகளை கூப்பிடுங்கள்”
“குட்டிகள் எங்கே?” எண்ணை வழியும் முகத்துடன் இருந்தவன் கேட்டான். “எங்களை இந்த நேரத்தில்தான் வரச் சொன்னார்கள்”
பம்பாயில் மிக மோசமாக உருது பேசுவார்கள் என்று ஷம்ஷாத் பேகம் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. வார்த்தைகளை கவனமாகப் பேசுங்கள் என்று ஷம்ஷாத் பேகம் அவர்களை அதட்டுவதற்குள் ரஸியா பானு வேகமாக ஓடி வந்தாள். ஷம்ஷாத் பேகத்தை பார்த்து “அத்தை, தயவு செய்து உங்கள் அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
“சரி நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஷம்ஷாத் பேகம் தன் அறையை நோக்கி திரும்பி நடந்தாள்.
சரியான பைத்தியம் என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டே ரஸியா பானு தன் விருந்தினர்களுடன் பேச ஆரம்பித்தாள்.
தன் அறையில் ஷம்ஷாத் பேகம் பாயை விரித்து மறுபடியும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். இரு முறை மட்டுமே சிரிக்கும் கடவுளுக்கு அவள் நன்றி கூறி, தன்னுடைய எல்லையற்ற கிருபையாலும் கருணையாலும், அவளுக்கு மறுபடியும் ஒரு முறை கௌரவமான வீட்டில் நேர்மையுடன் வாழ வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி செலுத்த ஆரம்பித்தாள்.
குர்ரத்துலைன் ஹைதர் – ஜனவரி 1 927 ல் ஒன்றுபட்ட இந்தியாவின் அலிகரில் (உத்திரப் பிரதேசம்) பிறந்த குர்ரத்துலைன், பிரசித்தி பெற்ற உருது குறுநாவல் மற்றும் சிறுகதை ஆசிரியர் ஆவார். இவர் கல்வித் துறையிலும் பத்திரிக்கைத் துறையிலும் தன் முத்திரையை பதித்தார். தன்னுடைய முதல் கதையை பதினோராவது வயதில் சிறுவர்களுக்கான பத்திரிகையில் எழுதினார். 19வது வயதில் தன்னுடைய முதல் நாவலை எழுதினார். இவர் தில்லியிலும் லக்னோவில் கல்வி பெற்றார். 1967ல் தன்னுடைய உருது சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1989 இல் இவரது படைப்பான ஆக்ரி ஷப் கே ஹம்சஃபர் நாவலுக்காக ஞானபீட விருதும் பெற்றார். உருது இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய தொண்டுகள் இந்திய அரசு, இவருக்கு 1984இல் பத்மஸ்ரீ விருதையும் 2005 ல் பத்மபூஷன் விருதையும் வழங்கி கௌரவித்தது. 2007இல் தில்லியை அடுத்த நொய்டாவில் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த பின் காலமானார்.
***
அனுராதா கிருஷ்ணஸ்வாமி – கோவையைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய மொழிப் புனைவுகளை தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வருகிறார்.ஒரு துளி வெளியில், கடவுளுக்கென ஒரு மூலை ஆகிய இரு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. கீதாஞ்சலிஶ்ரீயின் புகழ்பெற்ற “மணல் சமாதி” எனும் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அதே நாவலுக்காக அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் அளிக்கும் விருதினை வென்றிருக்கிறார்.


