Monday, February 16, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்கடத்தப்பட்ட அநீதி

கடத்தப்பட்ட அநீதி

ரெ விஜயலெட்சுமி

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் சமாதானம் கொள்வது
அடுத்த தலைமுறைக்கு அநீதியை கடத்துவது.”

  • நாவலிலிருந்து

ட்டியல் இனம் (Scheduled Caste) என்பது இந்தியாவில் வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக குறிப்பாக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் அதிகாரப்பூர்வமான பெயர். அதைச் சுருக்கி எஸ்சி என்ற வார்த்தையை உருவாக்கி அதை இழிவு சொல்லாக மாற்றி வைத்திருக்கிறது சமூகம். இந்த இழிசொல் பலரை தண்டித்துக் கொண்டிருக்கிறது. விலங்குகளை விட தம்மைப் பல படிகள் மேலானதாகக் கருதி அறிவும் தெளிவும் உள்ளதாக்க காட்டிக் கொள்ளும் மனித இனம், தங்களில் சிலரைப் பிரித்து இப்பெயரிட்டு மார்தட்டிக் கொள்வது என்பது சுத்த அபத்தம். அந்தப் பிரிவிற்குள் மனிதர்கள் தள்ளப்பட்டதன் வரலாற்று பக்கங்கள் இரத்தக்கரை படிந்ததோடு மட்டுமல்லாமல், கரையான்களால் செல்லரிக்கப்பட்டுப் பல பக்கங்கள் காணாமலும் போனது. கவனமாக மிச்சம் விடப்பட்டப் பக்கங்கள், தனக்குப் பிடித்தவற்றை எழுதி அதில் வரலாறு என்று பெயரிட்டு வைத்திருக்கிறது. 

அவ்வாறாகப் பெயரிடப்பட்ட மக்களின் நிஜம் சில சமயங்களில் குறிஞ்சி பூத்தாற் போல் இலக்கியத்திலும் கதைகள் ஆவதுண்டு. எழுதத் தொடங்கிய போது இழிச்சொல் மறைந்து தலித்தியம் என்ற வார்த்தையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 1970களில் மராத்தியர்களும் இந்திய வரலாற்றில் சாதிமுறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும் தங்களை தலித் என்று அழைத்து அவ்வார்த்தையைப் பிரபலப்படுத்தினர். தலித் என்ற சொல்லுக்கு உடைந்து போனது அல்லது நசுக்கப்பட்டது என்று பொருள். 

ஆரம்பக்கட்டங்களில் அதாவது நவீன இலக்கியம் என்கிற ஒன்று ஆரம்பித்தபோது தலித்திய நாவல்கள் வெளி வந்தாலும் அவை பார்த்தெழுதியக் கதைகளே. வாழ்ந்தெழுதியக் கதைகள் மிக அரிது. அப்படி வாழ்ந்தெழுதியக் கதைகள் செவ்வியல் புதினங்கள் அதாவது கிளாசிக் நாவல்கள் வரிசையில் இடம் பெற்றதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியம். 

சமீப காலங்களில் எண்ணிக்கை அளவில் உயர்ந்திருந்தாலும் பட்டியலின வாழ்க்கை கிளாசிக் நாவல்கள் வரிசையில் வருமா என்பதை காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். 

இவை நான் வாசித்த சமீபத்திய சில தலித்திய (என்னளவில் செவ்வியல் புதினங்கள்) நாவல்கள். 

யாம் சில அரிசி வேண்டினோம் – அழகிய பெரியவன் 
பேட்டை – தமிழ் பிரபா 
கருக்கு – பாமா 
பிச்சிப்பூ – பொன்னீலன் 
வெக்கை – பூமணி 
கோரை – கண்மணி குணசேகரன் 
கூகை – சோ. தர்மன்
செடல் – இமையம் 

செடல் தவிர்த்து மற்ற நாவல்களின் மதிப்புரைகளை எனது முதல் நூலான வாசிப்பின் வாசலில் எழுதி இருக்கிறேன்.

அந்த வரிசையில் அண்டனூர் சுரா எழுதிய வேங்குடி வயல் நாவலும் ஒரு மிக முக்கியமான நாவல் என்றே கருதுகிறேன்.

வேங்குடி வயல் என்னும் கிராமத்தில், நத்தம் பகுதியில் அணிலி என்றொருத்தி வசித்து வருகிறாள். அவள் தன் அணில் பிள்ளையான்களோடு பிள்ளைக்கிணற்றில் நீர் குடிக்க இறங்குகிறாள். சாரையான்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அணிலி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்றும், அவள் இறங்கியதால் நீர் தீட்டாகிவிட்டது என்றும் சொல்கின்றனர். அணிலி அதை ஏற்க மறுக்கவே, சாரையான்கள் மூர்க்கமடைந்து, மின்னல் பிடித்து நீரில் நெருப்பை உண்டாக்கி அதை கொண்டு அணிலியையும் பிள்ளையான்களையும் பொசுக்குகின்றனர். அதனால் அவர்களின் முதுகுகளில் மூன்று கோட்டு புண்கள் உருவாகின்றன. அவை யாரோ ஆசையாக தடவி கொடுத்த கோடுகள் அல்ல, வன்மக் கோடுகள் என்ற கதையோடு ஆரம்பிக்கிறது புதினம்.

அணிலி வசிக்கும் நத்தப்பகுதியில் ஓர் தென்னை மரம் இருக்கிறது. அதிலிருக்கும் நீரை மரத்திலிருந்து எல்லோருக்கும் அணிலிதான் பங்கு போட்டு நன்னீர் கொடுப்பாள். அவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு கொண்டாட்டமாக வாழ்பவர்கள். அவர்கள் மகிழ்ந்திருப்பதை கண்டு சகிக்க முடியாத கட்டு விரியன் ஒருவன் எதிரே வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கடுமையான வக்கிரத்தில் அந்த மரத்தில் ஏறி தன் நஞ்சை கக்கி முக்கி தன் உடலில் இருந்து மொத்த பலத்தையும் மலப்புழுக்களையும் எல்லா இளநீரிலும் கலந்து விடுகிறான். 

விஷயம் தெரியாமல் அணிலி வழக்கம்போல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறாள். அதைக் குடித்த அணிற்பிள்ளைகள் எல்லோருக்கும் பல வியாதிகள் வர ஆரம்பிக்க, மருத்துவர்கள் இரவும் பகலுமாக அவர்களைக் காப்பாற்றப் போராடுகின்றனர். பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு நன்னீரில் நீந்திய மலப்புழுக்கள்தான் அணிற்பிள்ளைகள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. 

இந்த மாபெரும் அநீதியை இழைத்தவர்கள் யார் எனக் கண்டறிய பூனையார் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது. அந்த கமிஷன் மிக நிதானமாக பல வருடங்கள் கழித்து அணிலி மீதே அப்பழியைச் சுமத்தி வழக்கை முடித்து வைக்கிறது. 

அதன் பிறகு உண்மை கண்டறியப்பட்டதா, அறியப்பட்டாலும் தெரியப்படுத்தப்பட்டதா என்பதை எல்லாம் விலங்குகள் மேடையில் நடத்தும் நாடக வடிவில் நாவலில் சிறப்பாக உள்ளங்கை நெல்லி போல தெள்ளென விளக்குகிறார் அண்டனூர் சுரா.

மொத்தக் கதையும் மனித உயிரைத் தவிர்த்து விலங்குகளை வைத்தே சொல்லப்படும் எழுத்துக்களை ஆர்வேலியன் (Orwellian) எழுத்து என்று வகைப்படுத்துகின்றனர், அதற்கான ஆறு விதிமுறைகளோடு ஒத்து போகும் காரணத்தினால். ஆனால் என்னைப் பொருத்தமட்டிலும் நம் பாட்டி வடை சுட்ட கதையிலேயே நரியை பேச வைத்து விட்டோம் என்பதால், நம் இந்தியாவில் ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு (விலங்கு பண்ணை நூலை எழுதியவர்) முன்பே இவ்வகை எழுத்து இருந்து வந்திருக்கிறது. இதற்கு பெயர் அந்த்ரோபோமார்பிசம் (Anthropomorphism). அதாவது மனிதர் அல்லாத பொருள்கள், விலங்குகள், தெய்வங்கள், இயற்கை நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மனிதனின் பண்புகள், உணர்வுகள், சிந்தனைகள், பேச்சு போன்றவற்றை வழங்கி வர்ணிப்பது. சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பண்பை மற்றவற்றின் மீது ஏற்றல். ஆனாலும் ஆர்வேலியன் தன்மையோடு ஒத்துப்போகும் மிக முக்கிய இடம் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்குமிடம்தான். அதை வேங்குடி வயலில் சரியாக செய்திருக்கிறார் அண்டனூர் சுரா.

வேங்குடி வயல் நாவல் முழுவதையும் நாவலாசிரியர் இவ்வாறாக எழுதி இருப்பதால் அதிகாரத்தையும் ஆணவத்தையும் எதிர்த்து கேள்வி கேட்பது மட்டுமல்லாமல், அதைப் பகடியும் செய்து இருக்கிறார். கேள்வி கேட்பவர்களாக வேஷம் போடுபவர்களையும் கோர்த்து விட்டிருக்கிறார். அரசியலைப் பகடி செய்து அதிகாரத்தை நேரடியாக கூண்டில் ஏற்றுகிறார். 

கதாபாத்திரங்களாக அணிலியும் விரியனும் பூனையாரும் கொக்காரும் ஆமையாரும் மீன் குஞ்சுகளும் யானையாரும் முயலாரும் என வரும்போது எவ்வித முன் விளக்கமும் தேவையில்லாமல் நாம் ஏற்கனவே அவ்விலங்குகளின் பால் ஏற்றி வைத்திருக்கும் பண்புகளை மனிதப் பண்புகளாக கற்பனையில் சட்டென உருமாற்றிக் கொள்ள வைத்திருக்கும் மாயாஜாலம் நிகழ்ந்திருக்கின்றது.

மேலும் ஏகப்பட்ட சிறு விலங்குகள், பெருவிலங்குகள், ஊர்வன, பறப்பன, நடப்பன, ஓடுவன, நீந்துவன, ஊர் பெயர்கள், நீர்நிலைகள், பூக்கள், செடிகள், கொடிகள், மரங்கள், வேர்கள் என்று வளர்வது சுவாரசியத்தை அள்ளித் தெளிக்கிறது. 

சங்க இலக்கிய நூல்கள் பலவற்றில் இருந்து மேற்கோள்களும், பாடல்களும் அதன் விளக்கங்களுமாக நாவல் படர்கின்றது. 

நிலவியல் புரிதலுக்காக மன்னர்களின் பெயர்களும் இடம்பெறுகின்றன. மொழி வளம் கொழிக்கிறது.

இரண்டு உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

தமிழி என்பது ஆணா பெண்ணா? (ஆதியில் தமிழ் – தமிழி எனப்பட்டது)

இரண்டும் இல்லை.

தமிழி என்பது விலங்கு.

எப்படி?

‘ம’ மற்றும் ‘ழ’ இரண்டிலும் விலங்கு இருக்கிறது. அதனால் தமிழி ஒரு விலங்கு. (சுழிக்கு மற்றொரு பெயர் விலங்கு).

கபிலர் 99 பூக்களை எழுதியபோதும் தன்னை மட்டும் விட்டுவிட்டதாக சிணுங்கி அதாவது தொட்டாற்சிணுங்கி ஒரு கடிதம் எழுத, அதற்கு கபிலரும் பதில் உரை எழுதுகிறார். (சிணுங்கியிலும் பூப்பூக்கும்). 

மிக முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்தாலும் நகைச்சுவைக்கோ காதலுக்கோ சுவாரசியத்திற்கோ வேதனைக்கோ வலிக்கோ துன்பத்திற்கோ பஞ்சமில்லாத நாவல். 

மருத்துவம், அறிவியல், அரசியல், மதம், மொழி, இனம், தீண்டாமை, சாதியம், கல்வி மற்றும் சுயசார்பு என்ற பல விடயங்களைத் தீண்டி கேள்வி கேட்கும் நாவல் வேங்குடி வயல்.

இறுதியில், நன்னீரில் மலப்புழுக்களைக் கலந்து மாபெரும் அநீதியை இழைத்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் வருகிறது. அத்தகவல் மேகத்திற்கு போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதன் பிறகு மேகம் நீர்க்குமிழிகளாக அதைக் கீழே அனுப்புகிறது. ஒவ்வொரு துளியிலும் குற்றவாளியின் முகம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. எல்லோரும் ஆவலோடு குற்றவாளிகளின் உருவங்களைத் தேட, அங்கிருக்கும் அனைத்து விலங்குகளின் உருவங்களும் ஒன்று விடாமல் நீர்க்குமிழிகளில் தெரிகின்றன. 

அதைப் பார்த்ததும், இந்த மொத்தக் கதையையும் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும் கதை சொல்லியான மாட்டிற்கு ஒரு பெரும் சந்தேகம் வருகிறது. அதை சடாமுடியாரிடம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறது. 

“மரபணுச் சோதனை அறிக்கையில், வேங்குடிவயல் நத்தத்தில் அணிற்பிள்ளை பருகும் இளநீரில் புழுக்களைக் கலந்தவர்களின் முகங்களில் என் மகனின் முகமும் இருக்கிறதே, எப்படி?” என்று கேட்டேன். 

சடாமுடியார் சிரித்தார். 

“பூமியில் யார் என்ன செய்கிறார்களென்று இயற்கைக்குத் தெரியும். அவள் அனுப்பும் நீர் அது. நீரில் புழுக்களைக் கழித்தது விரியனாக இருக்கலாம். விரியன் என்பவன் யாரோ அல்ல; நீங்கள்தான். உங்கள் மனம்தான் விரியன். உங்கள் வன்ம எண்ணம்தான் விரியன். உங்கள் எண்ணத்தின் நச்சுதான் விரியன். உங்கள் ஒவ்வொருவருக்குள் விரியன் இருக்கிறான்.”

“நீர் என்பது தூய்மையின் குறியீடு. நீர் என்பது உலகம். நீர் என்பது இதயம். நீர்தான் மூளை. நீர்தான் இரத்தம். உன்னிடமிருந்து நீரை நீக்கிவிட்டால் நீ எலும்பாகக்கூட மிஞ்சமாட்டாய். அப்படியான நீரைக் களங்கப்படுத்தியதில் உனக்கும் பங்குண்டு. ஆகையால்தான் உன் முகமும் ரேகையும் நீர்ப்பழத்தில் இருந்திருக்கிறது.”

நான் சடாமுடியார் சொல்வதை மறுக்கும் விதமாகச் சொன்னேன். “நான் நீரை ஒரு காலமும் களங்கப்படுத்தியவள் இல்லையே?”

“நீ களங்கப்படுத்தாமல் இருந்திருக்கலாம். களங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தாயா?”

சடைமுடியாரின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக நின்றேன்.

“இல்லைதானே? அப்படியென்றால் உனக்குள்ளும் அப்படியான வன்மம் இருந்திருக்கிறதுதானே?” என் தலை என்னையும் அறியாமல் ஒடிந்தது.

“அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பாத எவரும் அநீதி இழைப்பவர்களே.”

சடாமுடியார் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை. அவரது கருத்தை ஆமோதிப்பதைப்போல அமைதியாக நின்றேன்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் என்னும் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து விசாரணை இரண்டு வருடங்கள் நீடித்ததும் இறுதியில் வெளியில் இருந்து யாரும் கலக்கவில்லை உங்களில் ஒரு சிலரே இதை செய்து உங்களைக் குடிக்க வைத்திருக்கிறார்கள் என்ற அருமையான தீர்ப்பை வழங்கியதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் இருக்கும் அநீதியை நீதிக்கு முன்னால் உடைக்க முயல்கிறது வேங்குடி வயல். 

நடக்கும் அநீதிகளை அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே, மிக எளிதாகவும் வேகமாகவும் ஸ்க்ரோல் செய்து நகரும் நம்மை சாட்டையால் சொடுக்கி,  “இதில் நீ எந்த விலங்கு?” என்று கேள்வி கேட்டு, பதில் தெரியாமல் நாம் நிற்கும்போது “எதுவாக இருந்தாலும் நீயும் நீர்க்குமிழியில் தெரிவாய்” என்று   சொல்லிவிட்டு அண்டனூர் சுரா விடை பெற்றுக்கொள்கிறார்.

***

ரெ.விஜயலெட்சுமி : மதுரையை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறார். ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்வும் திரைத்துறையில் வசனகர்த்தாகாவும் பணிபுரிகிறார். தேன்கூடு எனும் youtube channel மூலம் நூல் அறிமுகங்களையும் கவிதை வாசிப்புகளையும் தொடர்ச்சியாக செய்து வருபவர். மின்னஞ்சல் : tsviji2006@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here