ஶ்ரீநிவாச கோபாலன்
‘மணிக்கொடி’ என்ற ‘அல்பாயுசுப் பத்திரிகை’யில் அமர இலக்கியம் படைத்த தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் பலருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பெரிய அளவுக்கு ஈடுபாடு இல்லை, அவர்களது எழுத்திலும் அந்தக் காலத்துப் போராட்டங்களின் சுவடுகள் தென்படுவதில்லை என்று சொல்வதுண்டு. இதுபற்றி க.நா.சு.விடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
‘மணிக்கொடி’ சுதந்திரப் போராட்டம் உக்கிரமான நிலையிலிருந்தபோது வெளிவந்திருக்கிறது. ஆனால் அரசியல் கலக்காத, சுதந்திரப் போராட்டம் பற்றிய பிரக்ஞை இல்லாத கதைகள் நிறைய வந்ததற்குக் காரணம்…’
இக்கேள்விக்குக் க.நா.சு. அளித்த பதில்:
‘மணிக்கொடி’யில் எழுதியவர்களிடம் ஒரு மனப்பான்மை இருந்தது. அதாவது மாறக்கூடிய சங்கதிகளை எழுதாமல், மாறாத அம்சங்களைக் கதைப் பொருளாக்குவது என்பது அது. இந்த அடிப்படையில்தான் சுதந்திரப் போராட்டம்கூட கருப்பொருளாகாமல் போய்விட்டது.’
எழுத்தில் சுதந்திரப் போராட்டத்தின் சுவடுகள் தென்படவில்லை என்றாலும், ‘மணிக்கொடி’யைத் தோற்றுவித்த மூம்மூர்த்திகள் டி. எஸ். சொக்கலிங்கம், வ. ராமசாமி, கு. சீனிவாசன் ஒவ்வொருவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றினர்; சிறைக்கும் சென்றனர். டி. எஸ். சொக்கலிங்கம் சட்டமறுப்பு இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம் முதலிய போராட்டங்களில் இணைந்ததன் மூலமும் ‘காந்தி’ பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளுக்காகவும் சிறை சென்றிருக்கிறார். வ.ரா.வும் வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உவக்காத காங்கிரஸ் இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் கட்டுரைகளை எழுதியதற்காக கு. சீனிவாசனும் சிறைவாசம் அனுபவித்தார்.
சிறுகதை ‘மணிக்கொடி’யை நடத்திய பி. எஸ். ராமையாவும் அவரது ஆராதகரான சி. சு. செல்லப்பாவும் சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டவர்கள். ராமையா வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் படையில் இணைந்து சிறைவாசியானார். சிறைநீங்கிய பிறகும் சுதேசி இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். சி. சு. செல்லப்பா கல்லூரி மாணவராக இருந்தபோது உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்து சிறை சென்றதால், படிப்பைத் தொடரமுடியாமல் போனது. ந. சிதம்பரசுப்பிரமணியன் தாய் சொல்லைத் தட்டாமல் இருப்பதற்காக, சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ளும் ஆசையைத் தொலைத்தார். ஆனால், ‘மண்ணில் தெரியுது வானம்’ நாவலில் காந்திய யுகத்தில் தான் அனுபவித்ததையும் கண்டதையும் காட்ட முயன்றிருக்கிறார்.
‘மணிக்கொடி’ கோஷ்டியின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டைப் பற்றி விளக்கம் சொன்ன க.நா.சு., தானும் சுதந்திரப் ‘போராட்டத்தில் ஈடுபடாமல்’ சிறை சென்ற சங்கதியைச் சொல்கிறார்.
‘எங்களில் யாருக்கும் தீவிர அரசியல் ஈடுபாடு கிடையாது. பி. எஸ். ராமையா ஒருத்தர்தான் காங்கிரஸ் கட்சியில் மெம்பர். ஆனால் எல்லோரும் காந்தி கட்சிதான்.
பி. எஸ். ராமையா சிறைக்குப் போனவர். சி. சு. செல்லப்பாவும் இரண்டு தடவை சிறை சென்றவர்தான். நான்கூட சிறைக்குப் போனவன்தான். ஆனால் போராட்டத்தில் ஈடுபடாமல் போனேன்.’
போராட்டத்தில் ஈடுபடாமல் சிறை சென்றது எப்படி? 1942ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லும் போராட்டம் தலையெடுத்தபோது, அதனுடன் ஏற்பட்ட தொடர்புதான் க.நா.சு. சிறை செல்லக் காரணம்.
‘1942ல் Quit India movement பிரசுரம் டைப் செய்து தரும்படி எனக்கு ஒரு கடிதம் ‘தினமணி’யிலிருந்து வந்தது. அப்பொழுது ‘தினமணி’யில் எழுதிக்கொண்டிருந்தேன். நண்பரின் வேண்டுகோளுக்காக டைப் செய்து கொடுத்தேன். பிரசுரம் கைப்பற்றப்பட்டபோது என்னுடைய விலாசமும் அகப்படவே என்னையும் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’
டி. எஸ். சொக்கலிங்கம் ‘தினசரி’ ஆசிரியராக இருந்தபோது 1932-ல் சட்டமறுப்பு இயக்க அறிக்கையை வெளியிட்டு, அதற்காக சிறை சென்றவர். 1942-ல் ‘தினமணி’ ஆசிரியராக இருந்தவரும் டி. எஸ். சொக்கலிங்கம்தான். க.நா.சு.விடம் துண்டுபிரசுரம் தயாரித்துத் தரும்படி கேட்டு கடிதம் எழுதியது அவராக இருக்கலாம்.
க.நா.சு.வின் இந்தச் சிறைவாசத்தைப் பற்றி க.நா.சு.வின் துணைவியார் ராஜி சுப்ரமணியமும் குறிப்பிட்டிருக்கிறார்.
…காங்கிரஸ் கட்சியில் இவர் சார்பாளர் என்று 1943-களின் கடைசியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ரகசியப் போலீஸ் வந்து வீட்டில் புத்தகங்களைக் குடைந்து இவரை அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்தபோது, “தியாகி அல்ல நான்” என்று மறுத்து ஒதுங்கி, ஜாமீன் கொடுத்து வெளியே வந்து விலகியது,…
தஞ்சை ப்ரகாஷுக்கு அளித்த நேர்காணலில் ராஜி சுப்ரமணியம் இவ்வாறு கூறுகிறார். இதில், ‘1943-களின் கடைசியில்’ என்பது ‘1942-ன் கடைசியில்’ என்று இருந்திருக்க வேண்டும். 1942ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி க.நா.சு. கைதுசெய்யப்பட்டார். இதனை அறிவிக்கும் செய்தித் துணுக்கு ஒன்று அன்றைய நாளேட்டில் வெளியாகியுள்ளது.
CHIDAMRABAM, Jan. 4.
The local Sub-Divisional Magistrate framed charges today under Sections 39 (1) B read with 39 (b) of the Defence Rules against Mr. K. N. Subramaniam, journalist, who was arrested on December 13 for alleged possession of objectionable literature. The accused pleaded not guilty. The case is posted to January 11 for further hearing.
– The Indian Express, 5 Jan 1943, pp. 2
க.நா.சு.வின் சிறைவாசம் எத்தனை காலம் நீடித்தது என்று தெரியவில்லை. க.நா.சு. அதைக் குறிப்பிடவில்லை. பிணையில் வெளிவந்துவிட்டதாக ராஜி சுப்ரமணியத்தின் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. துண்டுபிரசுரத்துக்காகக் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, வேறு காரணங்களுக்காக காவல்துறை க.நா.சு.வின் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறது.
1942-இல் ‘கல்கி’ பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு க.நா.சு. நடுவராக இருந்தார். இந்தப் போட்டிக்கு ஏராளமான கதைகள் வந்து ‘கல்கி’ காரியாலயத்தில் குவிந்தன. அவை பெரிய மூட்டையாக க.நா.சு.வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மூட்டையைச் சுமந்துகொண்டு, மெட்ராசிலிருந்து ரயிலில் புறப்பட்டார் கல்கியின் தூதர் பகீரதன். நடுநிசியில் சிதம்பரத்துக்கு வந்தவர் க.நா.சு. வீட்டுக் கதவைத் தட்டி, கொண்டுவந்த கதை மூட்டையைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த காகித மூட்டையின் போக்குவரத்தை சிதம்பரத்துக் காவலர்கள் வேவுபார்த்து வந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏதோ சதித்திட்டம் தீட்டப்படுகிறது எனச் சந்தேகித்து, க.நா.சு.வின் வீட்டை மீண்டும் சோதனையிட வந்துதார்கள். க.நா.சு. அவர்களிடம் மூட்டையைப் பிரித்துக் காட்ட, வந்தவர்கள் ஏமாந்து திரும்பினார்கள்.
இதைப் போன்ற போலீஸ் சோதனை பற்றி தனது ‘சோதனை’ என்ற சிறுகதையில் க.நா.சு. எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இரண்டு நண்பர்கள் தாங்கள் பார்த்த போலீஸ் சோதனைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கதையில் வரும் சம்பவமும் 1942 கடைசியில் ஒரு நள்ளிரவு நேரத்தில் நடக்கிறது. போலீஸ் சோதனையிட்டபோது சில புத்தகங்கள் அகப்படுகின்றன. அவை ‘காதற்கதை – இத்தாலி’, ‘காளி – ஜெர்மனி’ எனக் கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள். ஜெர்மனி, இத்தாலி என்று பெயர் போட்ட புத்தகங்களைப் பார்த்த போலீஸ்காரர்கள், இதில் என்னென்ன இருக்கும் என்று மணிக்கணக்காக விவாதிக்கிறார்கள். ‘மூன்று மணி சுமாருக்கு அந்தப் புஸ்தகங்களில் ரகசிய பாஷை, சங்கேதங்கள், விரோதி தேசங்களுக்குச் சாதகமான தகவல்கள், காங்கிரஸ் அநுதாப இலக்கியம்- எதுவும் இல்லை’ என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.
கதையில் இந்தச் சம்பவத்தை விவரிப்பவர் க.நா.சு.தான். ‘காதற்கதை’, ‘காளி’ இரண்டும் க.நா.சு. மொழிபெயர்த்த நூல்கள். அ. கி. ஜயராமனின் ஜோதி நிலையம் வெளியிட்ட ‘சர்வதேசக் கதை மலர்’ வரிசையில் 1944ஆம் ஆண்டு வெளியானவை.
இந்தப் போலீஸ் சோதனைக் கதை இடம்பெறும் ‘ஆடரங்கு’ (1955) என்ற சிறுகதைத் தொகுப்பை கதைகளில் வருகிற தன் நண்பர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். கதைகளில் வரும் உண்மை மனிதர்களுடன் தானும் கலந்து இந்தக் கதையைக் கூறியிருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாத க.நா.சு., போராட்ட எழுச்சியைப் பரப்புவதற்கு துண்டுப்பிரசுரம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். காலத்தினால் செய்த இவ்வுதவிக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைச் சிறையில் வைத்துள்ளது.
கைதாகி சிறையில் வைக்கப்பட்டபோது, “தியாகி அல்ல நான்” என்று மறுத்துக் கூறினார் என்ற செய்தி முக்கியமானது. சிறிய உதவியைச் செய்து சிறை சென்றது பற்றி க.நா.சு. வருத்தமோ பெருமிதமோ கொள்ளவில்லை. தன்னையும் ‘தியாகி’ என்று சொல்லி ஆதாயம் தேடவும் முயலவில்லை.
போலீஸ் சோதனையும் குறுகியகால சிறைவாசமும் க.நா.சு.வின் வாழ்க்கையில் சுவையான பகுதிகளில் ஒன்றை நமக்குக் காட்டுகின்றன. அவர் எழுதி அச்சேறாத சுயசரிதையில் இதைப்போல இன்னும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கக்கூடும்.
*
பயன்பட்ட நூல்கள் / இதழ்கள்:
The Indian Express, 5 Jan 1943, pp. 2
ஆடரங்கு, க. நா. சுப்ரமண்யம், கலைமகள் காரியாலயம், மே 1955
‘அன்னம் விடு தூது’வில் ‘கிரியேடிவ்’வாக எதுவும் இல்லை’, க.நா.சு நேர்காணல், அன்னம் விடு தூது, மே-ஜூன்-ஜூலை 1985, பக். 18-21
இலக்கியச் சாதனையாளர்கள், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர் 1985
ராஜி சுப்ரமணியம் நேர்காணல், புதிய பார்வை 1995 (?)
***
ஸ்ரீநிவாச கோபாலன்:1994இல் பிறந்தார். திருநெல்வேலியில் வசிக்கிறார். பதிப்பாளர், பத்திரிகையாளர். க.நா.சு.வின் நூல்வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நாரத ராமாயணம்’ (2021), ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ (2022), ‘The Birth of a Poet’ (2024), ‘The Fall’ (2024), ‘சிரமமான காரியம்’ (2024), ‘என்ன ஆனந்தம்’ (2025), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (2025) முதலிய நூல்களின் தொகுப்பாசிரியர் / பதிப்பாசிரியர். ‘புதுதில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987’ (2025) என்ற குறுநூலையும் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : sharetosrini@gmail.com



