Tuesday, January 27, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்இது போன்ற விஷயங்கள் உன் போன்றவர்களுக்குப் பொதுவாக நடப்பதில்லை

இது போன்ற விஷயங்கள் உன் போன்றவர்களுக்குப் பொதுவாக நடப்பதில்லை

ஜான் மெக்க்ரிகர்

தமிழில் : ராம்

(ஜான் மெக்க்ரிகர் (Jon McGregor) எழுதிய “We wave and call” என்ற ஆங்கிலச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு.)

சில சமயங்களில் இப்படி நடப்பதுண்டு: கடல் நடுவே ஒரு இளைஞன் கை கால்கள் தொங்கிய நிலையில் குப்புறப் படுத்திருக்கிறான்; தொலைவில் ஒரு விசைப்படகு சிறு முனகலுடன் ஊர்ந்து கொண்டிருக்கிறது; நடுக்கடலின் நீண்ட மெல்லலைகள் மிருதுவாகத் தீண்டுவதில் அவன் உடல் அசைந்துகொண்டிருக்கிறது; கரையிலிருந்து எழும் குரல்கள் தெளிவாகக் கேட்காத தொலைவில், அலைகள் பாறைகளின் மீது மோதும் சத்தத்திற்கும் கடல்பறவைகளின் குரல்களுக்கும் இடையே, கடலில் குப்புறக் கிடக்கும் அந்த இளைஞனின் உடல்‌, மூச்சற்று, அசைவற்று…

*

தண்ணீரின் வழியே ஊடுருவும் வெளிச்சத்திற்கு இமைகளைச் சிமிட்டியபடி நீ கண்களைத் திறக்கிறாய். தண்ணீரில் சுவாசிப்பதற்கு வாயில் பொருத்தியுள்ள குழாய் வழியே உன் மூச்சு உள்ளிழுத்து வெளியேறும் ஒலியைக் கேட்டவாறு கடல் தரையைப் பார்க்கிறாய். உடைந்த சிப்பிகளும், துருப்பிடித்த பீர் கேன்களும், பளபளக்கும் கண்ணாடிச் சில்லுகளும்… கருப்பு முட்களுடைய மூரைகள் பாறைகளின் மீது ஒட்டிக்கொண்டிருக்கின்றன. கடல் பாசிக்கு இடையே நீந்தும் சிறிய கருப்பு மீன்கள். ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் சுழலில் சிக்கி மிதந்து கொண்டிருக்கின்றன. உன் கைகளை முகத்திற்கு முன் கொண்டு வந்து பார்க்கிறாய். வெளுத்துப் போய் சற்றே சுருக்கங்கள் விழத் தொடங்கியுள்ளன. வீட்டில் குளியலுக்குப் பயன்படுத்தும் இளஞ்சூட்டில் இருக்கிறது கடல்நீர். அப்படியே தூக்கம் சொக்கும் நிலையில் இருக்கும்போது உன்னருகில் தண்ணீரில் தொப்பென்று ஏதோ ஒன்று விழுகின்ற சத்தம் கேட்கிறது.

நீ திரும்பிப் பார்க்கும்போது ஒரு சிறுவன் தன் முழங்கால்களை நெஞ்சோடு அணைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டு நீருக்குள் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கிறான். நீருக்கு மேலே, அந்தரத்தில், இன்னும் மூன்று சிறுவர்கள் ஒரு பாறை விளிம்பிலிருந்து கால்சராய்கள் இடுப்பைச் சுற்றி காற்றில் உப்பிய நிலையில், கேசம் பறக்க, திகில் கூச்சலில் பிளந்த வாய்களுடன் குதித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் விழும் வேகத்தைக் குறைப்பதற்காகத் தன் கைகளை ஆட்டிக்கொண்டே விழுகிறான். மற்ற இருவரும் காற்றிலேயே கைகளை நீட்டி ஒருவர் விரலை இன்னொருவர் தொட்டுக் கொள்கின்றனர். மூவருமே திகிலும் குதூகலமும் கலந்த முகங்களுடன் தங்களை நோக்கி விரையும் தண்ணீரைப் பார்க்கின்றனர்.

கரையிலிருந்து கடலைத் தொட்டவாறு போடப்பட்டிருக்கும் கான்கிரீட் தளத்தில் இளைப்பாறியபடி உன் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தன் ஈரக் கூந்தலைக் கோதிக்கொண்டே க்ளேர் திரும்பி உன்னைத் தேடிக் கையசைக்கிறாள். சன்ஸ்க்ரீனும் கடல் நீரும் சேர்ந்து அவள் நிறத்தை இன்னும் வெளுப்பாகக் காட்டுகின்றன.

“நாங்க கெளம்பப் போறோம்… நீ வர்றியா?”, அவள் குரல் கொடுக்கிறாள்.

மற்றவர்கள் ஏற்கனவே எழுந்து அவர்கள் மீது ஒட்டியிருக்கும் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டும் துண்டுகளை உதறிக்கொண்டும் நிற்கின்றனர். மூக்கின் மீது அணிந்திருக்கும் நீச்சல் முகமூடியையும் வாயில் அடக்கியிருக்கும் மூச்சுக் குழாயையும் கழற்றிவிட்டு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கப்போவதாகச் சொல்கிறாய். அவர்களுடன் சிறிது நேரத்தில் வந்து இணைவதாகச் சொல்கிறாய்.

சன்ஸ்க்ரீனையும், தண்ணீர் பாட்டில்களையும், கொண்டு வந்திருந்த கதைப் புத்தகங்களையும், சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் கூந்தலை அள்ளியெடுத்துப் பிழிந்து தங்கள் முதுகில் வழியவிடுகின்றனர். ஆன்டி தன் சட்டைப் பொத்தான்களை மாட்டிக்கொண்டே காலணிகளுக்குள் பாதங்களை நுழைக்கிறான்.

“நாங்க ஒனக்காகக் காத்திருக்கப் போறதில்ல”, க்ளேர் கூவுகிறாள். பரவாயில்லை என்பது போல் அவளுக்குக் கையசைக்கிறாய். எப்படியும் ஓரிரு நிமிடத்தில் வெளியேறி விடுவாய்.

நேற்றைக்கு முந்தைய நாள் இரவு, பழைய நகரத்தின் கஃபே ஒன்றின் வெளியே இடப்பட்டிருந்த மேசையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது உன் குழுவிலுள்ள பெண்கள் கழிவறைக்குச் செல்வதற்காகத் தங்கள் பீர் கிளாஸ்களை மேசையிலேயே விட்டுவிட்டு எழுந்து தங்கள் ஸ்கர்ட்களைச் சரிசெய்து கொண்டனர். ஆன்டி உன் கண்களைச் சந்தித்து தன் கிளாசை உயர்த்திக் காட்ட, நீங்கள் இருவரும் உங்கள் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டீர்கள். எதுவும் சொல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. மாதக்கணக்கில் நீளும் தேர்வுகளையும் பதற்றங்களையும் மேகமூட்டமான இங்கிலாந்திலேயே விட்டுவிட்டு சூரிய வெளிச்சமும், மலிவான பீரும், நீல வானமும், பிகினி-குட்டைப்பாவாடை அணியும் பெண்களும் உள்ள இந்த இடத்திற்குச் சட்டென்று வந்து இறங்கியிருந்தீர்கள். பல ஆண்டுகளாக அடையக் காத்துக்கொண்டிருந்த, பல காலமாக உங்களுடையது என்று உறுதியளிக்கப்பட்ட ஒன்று கிட்டியது போல இருந்தது… சிறுவர்களுக்கு வாலிபம் போல. இந்தப் பெண்கள் உணவகப் பணியாட்களையும் ஸ்கூட்டரில் விரையும் ஆண்களையும் கவனிப்பதன் வழியாக அவர்கள் உங்களை விட உள்ளூர்க்காரர்களையே விரும்புவதாக உங்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இருந்தாலும் உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வு. அதைப் பற்றி நினைப்பதில் ஒரு திருப்தி.

நீச்சல் முகமூடியைக் கண்களின் மீது கிடத்திவிட்டு சிறிது நேரம் மல்லாந்து படுத்து கடலை ஒட்டி நிற்கும் செங்குத்துப் பாறைகளைப் பார்த்தவாறே கால்களை அளைந்து கரைக்கு எதிர்திசையில் மெல்ல நீந்துகிறாய். கடலை விட்டு வெளியே போகவேண்டுமா என்று தோன்றுகிறது. உன் ஊரில் உன் வீட்டுக்கு மிக அருகிலேயே கடற்கரை இருக்கிறது; நீ அந்தக் கடற்கரையில் கால் நனைத்துதான் வளர்ந்தாய். ஆனால் அங்கே நீச்சலடிக்க முடிந்ததில்லை. அந்தக் குளிர்ந்த நீருக்குள் ஓடிவிட்டு குளிரின் தாக்கத்தில் கத்தியபடி போன வேகத்தில் திரும்ப ஓடி வருவாய். இங்கேயோ இந்தத் தெளிவான வெதுவெதுப்பான நீரின் மீது தூங்கலாம் போல இருக்கிறது. உன் சகாக்கள் தேவதாரு மரங்களுக்கும் அரளிப் புதர்களுக்கும் இடையே செல்லும் பாதையில் ஏறிப் போவதைப் பார்க்கிறாய். மலையின் உச்சியிலுள்ள சாலையில் ஒரு பேருந்து வந்து நின்று செல்வது அங்குள்ள இரும்புத் தடுப்புகளின் வழியே தெரிகிறது. ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இளம் தம்பதி அந்தப் பேருந்தை முந்திச் செல்கின்றனர். அந்த ஆண் சட்டையோ தலைக்கவசமோ அணிந்திருக்கவில்லை; அந்தப் பெண் முழங்கால் நீளக் குட்டைப்பாவாடையும் பிகினி மேலாடையும் அணிந்துகொண்டு விரித்துவிட்ட தலைமுடி காற்றில் பறக்கச் செல்கிறாள்.

மலைச்சரிவை வருடிச் செல்லும் இதமான வெப்பக் காற்றில் பறவைகள் மிதந்துகொண்டிருக்கின்றன. வெட்டுக்கிளிகளின் இடைவிடாத ரீங்காரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நொறுங்கிய தேவதாரு முட்களின் வாசமும் வெயிலில் வதங்கிய ரோஸ்மேரி பூக்களின் மணமும் காற்றில் நிறைந்துள்ளன. 

கரையின் இன்னொரு பகுதியில், பாறையிலேயே செதுக்கப்பட்ட செங்குத்துப் படிகள் முடியும் இடத்தில் இன்னொரு கான்கிரீட் அணைக்கரை உள்ளது. அதன் விளிம்பில், கருப்பு நீச்சலுடை அணிந்த பெண் ஒருத்தி தண்ணீரில் கால்களைத் தொங்கவிட்டபடி ஒரு வெள்ளைத் துண்டைத் தலையைச் சுற்றி அணிந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.

இன்னும் சற்று தூரம் தள்ளி கரை வளைந்து கடலுக்குள் துருத்திக்கொண்டிருக்கிறது. அங்கே அசிங்கமான கான்கிரீட் ஓட்டல் ஒன்று வெள்ளை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பெயருடன் நிற்கிறது. அதில் பாதி எழுத்துகள் இல்லை. நீ திரும்பிப் பார்க்கையில் அந்த ஓட்டல் கட்டிடமே பாழடைந்திருப்பதை உணர்கிறாய்… அதன் சன்னல்கள் துப்பாக்கிச் சூட்டில் சரிக்கப்பட்டு, சுவர்களில் பெரிய ஓட்டைகளுடன், தங்கநிற மணலில் சுருண்டு கிடக்கும் வேலிக்கம்பிகளுடன்… சன்னல்களிலும் பின்வாசல் கதவிலும் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் திரைச்சீலைகள் அவ்வப்போது வீசும் காற்றில் அசைகின்றன.

சில பெண்கள் கத்தும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்க்கிறாய்: அங்கே சில இளைஞர்கள் அந்தப் பெண்கள் மீது தண்ணீர் பாட்டில்களிலுள்ள தண்ணீரை வீசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க, அந்தப் பெண்கள் அவசர அவசரமாக எழுந்து அந்த இளைஞர்களை விளையாட்டாக அடிக்கின்றனர். அவர்களது சத்தங்கள் கடல்நீரின் மீது மெலிதாகத் தவழ்ந்துவந்து உன்னை அடைகிறது.

இன்று காலை நகரத்தின் எல்லைச்சுவர்களைத் தாண்டி உள்நுழைகையில் அங்கு குவியலான சிவப்புப் புள்ளிகளுடன் இருந்த நகரத்தின் வரைபடத்தைப் பார்த்திருந்தாய். அந்தச் சிவப்புப் புள்ளிகள் காட்டிய பகுதிகளில்தான் போரின்போது பீரங்கிக் குண்டுகள் விழுந்து, தீவிபத்துகள் நடந்து கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தனவாம். இந்நகரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கான ஒரே சாட்சியாக நீ கண்டது அது மட்டுமே. இந்த நகரத்தில் எல்லாமே சுத்தமாகவும் சாலைகள் பளபளப்பாகவும் பழைய கல்வேலைப்பாடுகள் கூட இந்த ஊர் சமீபத்தில் கண்ட சேதங்களிலிருந்து தப்பியவையாகவும் இருந்தன. ஆனால் கூர்ந்து பார்த்தபோது இந்நகரத்தின் புகழ்பெற்ற கைவினை ஓடுகளைக் காட்டிலும் அதிகமாக ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்திலான சீரான ஓடுகள் வேயப்பட்டிருப்பது தெரிந்தது. அதேபோல புராதன கல்வேலைப்பாடுகளின் சாம்பல் நிறத்துக்கு இடையே பல இடங்களில் ஏதோ புதிய கல்வேலையின் பளிச்சிடும் வெள்ளை தென்பட்டது. சில தெருக்கள் முழுவதும் இடிபாடுகள் குவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்திற்கு மூடி வைக்கப்பட்டிருந்தன. சில கட்டிடங்களின் முகப்புகள் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் அவை ஷட்டர்களுக்குப் பின்னால் சேதங்களைத் தாங்கியே நின்றிருந்தன. ஒரு சிறிய முற்றத்துப் பட்டறையில், ஒரு உயரமான எலுமிச்சை மரத்தின் நிழலில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த பருத்த தோள்கள் கொண்ட சிற்பி ஒருவனைக் கண்டாய். சிதைந்த புராதன கல்வேலைப்பாடுகள் அவன் முன் குவியலாக இருக்க, அதே போன்ற போலிகளை உருவாக்கிக்கொண்டிருந்த அவன், தான் செய்வதை யாரும் பார்த்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது போல அடிக்கடி தன் தோளுக்குப் பின் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வளவு மறுசீரமைப்பும் முடிய எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்று நீ சிந்தித்தாய். இன்னும் எவ்வளவு காலம் ஆகும் இந்தப் புதிய கற்கள் அந்தப் புராதன கற்களின் நிறத்தை அடைய!

உன் சகாக்கள் இப்போது தேவதாரு முட்கள் நிறைந்த பாதையில் நறுமணம் வீசும் புதர்களில் கைகள் உரச பாதி மலையை ஏறியிருக்கிறார்கள். அவ்வப்போது தண்ணீர் அருந்த நிற்கும்போது திரும்பி சலனமற்றிருக்கும் கடலைப் பார்க்கிறார்கள். நீ ஒரு நொடி அவர்களைப் பார்க்கிறாய்; கையசைக்கிறாய், ஆனால் ஒருவரும் அதைக் கவனிப்பதில்லை; கூப்பிட்டுப் பார்க்கிறாய். இப்போது கடலிலிருந்து வெளிவந்தால் அவர்கள் பேருந்து ஒன்றைப் பிடிக்கும் முன் அவர்களைப் பிடித்துவிடலாம். ஆனால் நீ அடுத்த பேருந்தைப் பிடித்தால் நீ போய்ச் சேரும்போது அவர்கள் உணவு ஏதாவது தயார் செய்துவிட்டு உனக்காகக் காத்திருப்பார்கள். மதிய உணவுக்கு முன்புதான் ஜோ சந்தைக்குச் சென்று உங்கள் அறையின் சிறிய சமயலறைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்தாள். நீ போகும்போது அனைவரும் மேசையில் உணவைத் தயாராக வைத்திருக்கும் காட்சி உன் கண் முன்னே விரிகிறது: ரொட்டி, பாலாடைக்கட்டிகள், ஆரஞ்சுகள், ஆலிவ்கள், ஊறுகாய், ஜாம் மற்றும் பேப்ரிக்கா தடவிய வறுவல்கள். ஒரு கேன் பீரைத் திறந்து அவர்களுடன் இணைந்து இரவு என்ன செய்யலாம் என்று திட்டமிடும் காட்சி உன் மனக்கண்ணில் தெரிகிறது.

கிளம்பும் முன் கடைசியாக ஒரு முறை கடல்நீருக்குள் மீண்டும் முகத்தைத் திருப்பி, வாயில் மூச்சுக்குழாயை வைத்துக்கொண்டு வெதுவெதுப்பான காற்றை உள்ளிழுக்கிறாய். இதுவரை நீ பார்த்ததை விட பெரிய மீன் ஒன்று திடீரென்று உன் கண்ணில் படுகிறது: பாறைகளுக்கு இடையே வெள்ளியும் நீலமும் கலந்த நிறத்தில், உன் கையைவிட இரண்டு மடங்கு நீளத்தில். வாலின் ஒரு சொடுக்கில் அது நீந்திப்போக, நீ தண்ணீர் தெறிக்காதவாறு கால்களை உந்தி அதைப் பின்தொடர்கிறாய். அந்த மீன் அதன் வேகத்தைச் சற்று குறைத்து கடல்பாசியின் நுனிகளில் எதையோ தின்றுவிட்டு மீண்டும் வால்சொடுக்குடன் நகர, நீ மேலிருந்து அதைப் பார்த்துக்கொண்டே வேகமாகக் கால்களை உந்தித் தொடர்கிறாய்.

நேற்று இரவின் நினைவு திடீரென்று வருகிறது. ஜோவுடன் நிகழ்ந்திருக்கக் கூடியவை பற்றிய எண்ணம் வருகிறது. கஃபேயிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் கூட்டமான சாலையில், பகலில் உள்வாங்கிய வெப்பத்தைக் கட்டிடங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்க, தலைக்கு மேலே சன்னல்களுக்கும் துணிக்கம்பிகளுக்கும் சாலையை வேடிக்கை பார்த்தபடி புகைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் மத்தியில் இருண்ட வானம் தென்பட, நீயும் ஜோவும் நடந்துகொண்டிருந்தீர்கள். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உன் பார்வையிலிருந்து மறைந்துவிட நீயும் ஜோவும் மட்டும் ஒரு நொடி அங்கு இருந்தீர்கள்; இரண்டு விரல்களை உன் மார்பின் மீது பதித்து, ஒரு விரல் உன் திறந்த சட்டைப் பொத்தானுக்கு மேல் தொட்டுக்கொண்டிருக்க ஜோ உன்னுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் என்ன சொன்னாள்? அதில் பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் மொத்த உரையாடலிலும் ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளது விரல்கள் உன் மார்பில்… புன்னகைத்துக்கொண்டே அவள் திரும்பினாள். நீங்கள் இருவரும் ஒதுங்கியிருக்கக் கூடிய சந்துகளையும் முற்றங்களையும் தாண்டி அவள் பின்னாலேயே சென்றாய். பேருந்து நிறுத்தத்தில் உங்கள் சகாக்களுடன் நீங்கள் போய் இணைந்தபின் அந்தத் தருணத்தைப் பற்றி எந்தப் பேச்சும் எழவில்லை.

அந்த மீன் உனக்கு அடியில் மீண்டும் தன் வாலைச் சொடுக்கிவிட்டு அவ்வப்போது கடல்பாசிக்கு நடுவே நின்றுவிட்டுச் செல்வதைப் பார்க்கிறாய். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க உடலைச் சுருக்கி நீந்துகிறாய். உன் முதுகு சூரியனின் வெப்பத்தை உணர்கிறது. சென்ற வருடம் தேர்வுகள் முடிந்த பின்னர் நடந்த பார்ட்டியில் அவளுடன் உனக்கு ஒரு தருணம் இருந்திருக்கிறது. வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் வீட்டுச் சுவரில் அவளைச் சாய்த்து ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த முத்தத்தில் அவளது உதடுகளின் சுவையையும் அவளது கைகள் தீண்டும் இடங்களையும் உன் உடல் அவள் மீது பதிந்த இடங்களையும் தவிர வேறு எதுவும் உன் மனதில் பதியவில்லை. பின்பு அவள் திடீரென்று பின்வாங்கி, உன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் சென்றபின் அந்த நிகழ்வைப் பற்றிய பேச்சே இதுவரை எழுந்ததில்லை. அது ஒன்றுமில்லாத நிகழ்வாகக் கூட இருந்திருக்கலாம்.

அந்த மென்மையான ஈரமான உதடுகள், அவளது விரல்கள் வரைந்த கோலங்கள், உன் விரல்களில் பட்ட அவளது மெல்லிய ஸ்கர்ட் துணியின் உணர்வு, அவளது வெப்பத்தின் முழு எடையும் உன் மேல்… அவை அனைத்துமே ஒன்றுமில்லாதவையாக இருந்திருக்கலாம்.

நீ நீருக்கு மேல் வந்து அவள் மலையின் உச்சியை அடைந்துவிட்டாளா என்று பார்ப்பதற்காகத் திரும்புகிறாய். அவள் மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு உனக்காகக் காத்திருக்கக் கூடும். நீ நினைத்ததை விட கடலுக்குள் தூரமாகச் சென்றிருக்கிறாய். இப்போது திரும்பி நீந்திச் சென்று அந்த கான்கிரீட் அணைக்கரையில் ஏறி வெயிலில் உடலை உலர்த்தியபடி உன் உடைமைகளை எடுத்துக்கொண்டு பாதையைப் பிடித்து விரைந்தால்தான் அவர்களைப் பிடிக்க முடியும். உன் கைகளை நீருக்குள் அழுத்தி உன் தோள்பட்டையிலும் முதுகிலும் சதைகள் விரிவதை உணர்ந்தவாறே நீந்துகிறாய். பாதங்களும் கெண்டைக்காலும் தண்ணீரில் அறையும் வகையில் கால்களை உதைத்து உந்துகிறாய். இப்படி உருப்படியாக நல்ல தூரத்தைக் கடந்து எப்போது கடைசியாக நீந்தினாய் என்று சிந்தித்துக்கொண்டே உந்துகிறாய். இனிமேல் அடிக்கடி இதுபோல நீந்த வேண்டும் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய். வாயில் பொருத்தியுள்ள மூச்சுக்குழாயை எடுத்து நீச்சல் முகமூடியை நிலையாகப் பிடித்திருக்கும் ரப்பர் நாடாவில் சொருகும்பொழுது வாய்க்குள் கடல்நீர் புகுந்துவிட அதை அவசரமாகத் துப்புகிறாய். உன் உடல் தண்ணீரின் வழியே ஊடுருவிச் செல்லும் உணர்வையும், காற்றும் கடல்நீரும் உன் முதுகை உரசிச் செல்லும் விதத்தையும் ரசித்தவாறே மீண்டும் நீந்தத் துவங்குகிறாய். அந்தக் குழாய் நீ சொருகிய இடத்தில் இருந்து நழுவி உன் வாய்க்குள் கொஞ்சம் தண்ணீரை நிரப்புகிறது. இருமியவாறே தொண்டைக்குள் புகுந்துவிட்ட தண்ணீரைத் துப்புவதற்காக மீண்டும் நீந்துவதை நிறுத்துகிறாய்.

மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருப்பவர்களையும், சாலையில் கடந்து செல்லும் பேருந்து ஒன்றையும், மலைச்சரிவை வருடிச் செல்லும் இதமான வெப்பக் காற்றில் மிதந்துகொண்டிருப்பது போல பறந்துகொண்டிருக்கும் பறவைகளையும் பார்க்கிறாய்.

உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கழற்றுகிறாய். அவற்றை முகத்தில் பொருத்திக்கொள்ளாமல் இருந்தால் இன்னும் வேகமாகக் கரையை அடைய முடியும் என்று தோன்றுகிறது. ஒரு கையில் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீந்த முயல்கிறாய். ஆனால் அவை தண்ணீரில் சொத் சொத்தென்று அறைந்து உன்னைப் பின்னிழுக்கின்றன. இப்படியே போனால் எங்கும் போய்ச் சேர முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் நிறுத்திவிட்டு கால்களை மெதுவாக உந்தியவாறு மிதக்கிறாய். நீ நினைத்ததை விடவும் கடலுக்குள் தூரமாக இருக்கிறாய்.

மதிய வேளை மிகவும் அமைதியாக உள்ளது. அந்தப் பாறையின் மேலிருந்து கடந்த பல நிமிடங்களில் யாரும் குதித்ததாகத் தெரியவில்லை. தண்ணீர் பாட்டில்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு நீண்டு வளைந்து ஏறும் மலைப்பாதையை அடைந்திருக்கின்றனர். அந்த மற்றொரு கான்கிரீட் தளத்தில் அமர்ந்து தண்ணீரில் காலை விட்டுக்கொண்டு கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்த பெண்ணும் சென்றுவிட்டிருக்கிறாள். உன் பின்கழுத்து வெயிலில் எரியத் தொடங்குகிறது. உன் நண்பர்களுடன் சீக்கிரம் இணைந்து அவர்கள் ஏறும் பேருந்தையே பிடித்துவிடுவது நல்லது என்று படுகிறது இப்போது. உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் அப்படியே கடலில் போட்டுவிட்டு நீந்தலாமா என்று சிந்தித்துவிட்டு அது தேவையில்லாத, மேலதிகமான திட்டம் என்று எண்ணிக்கொள்கிறாய். அதுபோல் ஒன்றும் இங்கு நடக்கப்போவதில்லை. ஒரு பிரச்சனையும் இல்லை. கரையிலிருந்து 100 அல்லது 150 காதங்களுக்கு மேல் இருக்காது. இப்போது உன் கால்சராயின் நாடாவில் அவற்றைச் சொருகிக்கொண்டு நீந்தத் தொடங்குகிறாய்.

இன்று காலை, பழைய நகரத்தில், வெயிலுக்காக ஒரு கலைக்கூடத்திற்குள் நீ ஒதுங்கியபோது அங்கே இந்த நகரத்தின் வரைபடங்களில் இடம்பெறாத ஒரு போர் நினைவகத்தைக் கண்டாய். முதலில் அந்த கலைக்கூடத்தின் இன்னொரு அறை போலத் தோன்றியதால் அந்த வட்ட அறைக்குள் கோதுமை வயல்கள், காடுகள் மற்றும் ஏர் பிடித்து உழும் சாமானியர்கள் நிறைந்த வண்ணப் படங்களை எதிர்பார்த்து நீ நுழைந்தாய். ஆனால் அங்கு வண்ணப்படங்கள் ஏதும் இருக்கவில்லை. சுவர்களில் விட்டத்திலிருந்து தரை வரை கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் நிறைந்திருந்தன. வரிசை வரிசையாக இளம் முகங்கள்: அந்த காலத்து முடிவெட்டுகளும், மெலிதான மீசைகளும், தோல் ஜாக்கெட்டுகளும், கோடு போட்ட சட்டைகளும் தரித்தவர்கள். நிஜ அளவை விடப் பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படங்கள். சிலவற்றில் பாஸ்போர்ட்டில் இடப்பட்டிருக்கும் முத்திரையின் மை கூட தெரிந்தது. அவற்றில் பெயர்களும் தேதிகளும் வயதுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன: 22, 57, 15, 19, 31. அறையின் நடுவே இருந்த மேசையில் சில பொருத்தப்பட்ட மெழுகுவர்த்திகளும், ஒரு மலர்க்கொத்தும், ஒரு நைந்த கொடியும் இருந்தன. அந்தப் புகைப்படங்களில் இருந்த சில முகங்கள் சற்று நேரம் முன்பு இங்கு பாறையிலிருந்து குதித்த சிறுவர்களின் வயதில் இருந்தன. இப்போது அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் போரின்போது இருந்ததை விட இரு மடங்கு வயதாகியிருக்கும் அவர்களுக்கு. இங்கு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் எத்தனை பேர் தந்தைகளையோ மாமாக்களையோ அண்ணன்களையோ போரில் இழந்திருப்பார்கள் என்று சிந்திக்கிறாய். அதைப் பற்றி அவர்களுக்கு ஏதேனும் நினைவிருக்குமா என்று யோசிக்கிறாய். அவர்கள் அந்தப் போர் நினைவகத்திற்குள் அவ்வப்போது செல்வார்களோ என்ற கேள்வி உனக்குள் எழுகிறது. அல்லது இந்த வெதுவெதுப்பான கடல்நீருக்குள் பாறைகளிலிருந்து குதிப்பதையும், வெற்றுடம்போடு மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுவதையும், நறுமணம் தரும் வயதான மரங்களின் நிழல்களில் பெண்களுடன் இளைப்பாறுவதையும்தான் விரும்புவார்களோ?

நீ போகும்போது உன் சகாக்கள் எதற்காக உணவைத் தயாரித்து மேசையில் கிடத்தி உண்டுவிட்டு மீண்டும் மேசையைக் காலி செய்யவேண்டும் என்ற சலிப்பில் இருக்கலாம். நீங்கள் அனைவரும் மீண்டும் துறைமுகத்திற்கு அருகே உள்ள அந்த பிட்சா உணவகத்திற்குச் சென்று சாலையில் போடப்பட்டிருக்கும் மேசையில் அமர்ந்து பீர் பாட்டில்களின் மேல் ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை உரித்தவாறே படகுகளிலிருந்து புதிதாக வந்திறங்கும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிடங்களுக்கு வழி சொல்லும் கிழவிகளைப் பார்த்துக்கொண்டு உணவருந்த முடிவெடுக்கலாம். ஏன், ஜோ உன் கண்களைச் சந்தித்து, ஒரு உரையாடலில் இறங்கி, எல்லோரும் சென்றபின்னும் உன்னைப் பார்த்தவாறு அவளது நாற்காலியைத் திருப்பி அவளது கால் உன் காலை உரசுமாறு அமரலாம்.

நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கால்சராய்ப் பட்டியில் சொருகிக்கொண்டு நீந்துவது அவற்றைக் கையில் பிடித்துக்கொண்டு நீந்துவதை விட மோசமாக உள்ளது. உன் கால்களுக்கு நடுவே நங்கூரம் போல இழுத்துக்கொண்டு உன்னை முன்னேற விடாமல் தடுக்கின்றன. நீந்துவதை நிறுத்தி மூச்சிறைத்தபடி மீண்டும் கால்களை மெதுவாக உந்தி மிதக்கிறாய். அவற்றை மலிவான விலைக்கே வாங்கியிருந்தாய். இப்படியே கடலோடு விட்டுவிடலாம். உன் நண்பர்களிடம் அவற்றை மறந்துபோய் கரையில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளலாம். அந்த முடிச்சை அவிழ்த்து அவற்றைக் கடலில் விடுகிறாய். சில நொடிகள் விட்ட இடத்திலேயே மெல்லலையில் மிதக்கின்றன. பின்னர் அவை மூழ்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கடல் தரையே உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பது உறைக்கிறது.

அவர்கள் மலைப்பாதையின் உச்சியில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கான்கிரீட் தளத்தில் உன் உடைமைகள் குவியலாய் இருக்கும் இடத்தை எட்டிப் பார்க்கிறார்கள். நீ கையசைக்கிறாய். ஆனால் அவர்கள் அதற்குள் திரும்பி அங்கே இரும்புத் தடுப்புகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில் புகுந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மற்றவர்களுடன் இணையச் சென்றுவிடுகிறார்கள்.

நன்றாக மூச்சை இழுத்துக்கொண்டு தண்ணீரை மூர்க்கமாகத் தள்ளிக்கொண்டு கடல்நீரின் உப்பு கண்ணை உறுத்துவதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நீந்தத் தொடங்குகிறாய். கால் தசைகள் முழுவதுமாக இழுக்கப்படுவது போல வலித்தாலும் நீ நீந்திக்கொண்டே இருக்கிறாய்—இன்னும் சற்று நேரத்தில் அந்தத் தளத்தை அடைந்து, ஏறி, திடமான தரையில் கால் பதித்துவிடலாம் என்ற உறுதியில்; கடலலைகள் இவ்வளவு நேரமும் உன்னைக் கரையிலிருந்து எதிர்திசையில் தள்ளிக்கொண்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்; இது போன்ற விஷயங்கள் உன் போன்ற இளமையான, ஆரோக்கியமான, நன்கு நீச்சல் தெரிந்த ஆட்களுக்குப் பொதுவாக நடப்பதில்லை என்ற நம்பிக்கையில். பாறைகள் வெகு தொலைவில் இல்லை. அவற்றை அடைய வெகு நேரம் பிடிக்காது. மேலும் இப்போது நீந்துவதைத் தவிர உனக்குச் செய்வதற்கு வேறெதுவும் இல்லை. தலையில் சுத்தியலால் தட்டுவது போன்ற ஒரு உணர்வு எழுகிறது. கண்களுக்குள் ஒரு செந்நிறம் படர்கிறது. நுரையீரல்களின் மீது கடலின் மொத்த பளுவும் அழுத்துவது போன்ற ஒரு வலி மார்பில் தோன்றுகிறது. தேவையான அளவு மூச்சை இழுக்க இயலாமல் சற்றே மூச்சு வாங்கிக்கொள்வதற்காக மீண்டும் நீந்துவதை நிறுத்துகிறாய்.

போர் நினைவகப் புகைப்படம் ஒன்றில் இருந்த சிறுவனின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. கேமராவிலிருந்து வரும் மின்னொளி அவனைத் திடுக்கிடச் செய்தது போல. அவனை நோக்கி வரும் விதியை அவன் அறிந்திருந்தது போல. புகைப்படத்திற்குக் கீழே அவன் வயது 17 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று நீ யோசித்தாய். ஒருவேளை அவனை நோக்கி வரும் விதியை அவன் உண்மையிலேயே கண்டிருந்தானோ? இங்கே அருகிலிருக்கும் தீவில் உள்ள ஒரு பழைய கோட்டையின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாய். சுவர்களில் துப்பாக்கி குண்டுத் துளைகளுடன், வாயிலில் குண்டுகள் விழுந்து ஏற்படுத்திய குழிகளுடன்… அந்தச் சிறுவன் அந்தக் கோட்டையின் கூரையின் மீதோ அல்லது உள்ளே ஒரு அறைக்குள்ளோ நடுங்கும் கைகளில் ஒரு பழைய குழல்துப்பாக்கியைப் பற்றியபடி சுற்றியுள்ள மரங்கள் வழியாக வரும் எதிரிகள் மற்றும் அவர்களது வாகனங்களின் ஒலிகளைக் கேட்டுக்கொண்டே பதுங்கியிருப்பது போன்ற ஒரு காட்சியை நினைத்துப் பார்த்தாய். எதிரிகளின் கேலிப் பேச்சை அவன் கேட்டிருப்பான் என்று எண்ணினாய். கண்களில் வழியும் வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டு, தன்னோடு எஞ்சியிருக்கும் எவரின் கண்களையும் சந்திக்காமல், எப்படி இங்கு வந்து இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டோம் என்று வியந்தபடி, இனி என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல், எதுவும் செய்வதற்கில்லை என்று நன்கு அறிந்து…

மலை உச்சியிலுள்ள சாலையில் ஒரு பேருந்து வந்து நிற்கிறது. உன் சகாக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் சில்லறைகளைத் துழாவியபடி நீ இன்னும் எவ்வளவு நேரம் கழித்து வருவாய் என்று எண்ணிக்கொண்டே அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டிருப்பார்கள். நீ போகும்போது நீங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் மொட்டை மாடியில் மாலைப் பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் படகுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும் சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் சத்தங்களைக் கேட்டுக்கொண்டும் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். நீ குளிர்பதனப்பெட்டியிலிருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதை வெயிலில் சிவந்திருக்கும் உன் பின் கழுத்தில் அழுத்தியபடி அந்த பாட்டிலைத் திறக்கும் கருவி எங்கே என்று கேட்பாய். முதலில் எல்லோரும் தேடியும் அகப்படாது. பின்பு ஏதோ புத்தகத்திற்கு அடியிலோ சமையலறைத் தொட்டியில் கழுவப்படாத தட்டுகளுக்கு அடியிலோ அது கிடைக்கும். பீர் பாட்டிலைத் திறந்துகொண்டு அவர்கள் அருகில் சென்று அமர்வாய்.

இன்னும் கொஞ்சம் நீந்துகிறாய். கைகளிலும் கால்களிலும் உள்ள தசைகளை உரித்தெடுத்தது போல வலி பரவுகிறது. எலும்புகள் தண்ணீரில் வெகு நேரம் இருந்ததால் இளகிவிட்டது போலத் தோன்றுகிறது. முன்னோக்கி நீந்த வலு இல்லாததை உணர்கிறாய்.

சற்று நேரம் மல்லாந்து மிதக்கிறாய். உனக்குத் தேவை சிறிது ஓய்வு. இது போன்ற விசாலமான நீர்ப்பரப்பில் நீ நீந்தி கொஞ்ச காலம் ஆகிவிட்டது, அவ்வளவுதான். சிறிது ஓய்வுக்குப் பின் அந்தப் பாறைகளை நீந்தி அடைந்து, படிகளில் ஏறி வெளியேறிவிடலாம். விண்விண்ணென்று தெறிக்கும் தலைக்கு மேல் ஒரு துண்டைப் போர்த்திவிட்டு நிதானமாக மூச்சு வாங்கிவிட்டு, தண்ணீரும் வியர்வையும் வெயிலில் சுட்டிருக்கும் கான்கிரீட் தளத்தில் சிந்த நிற்கும்போது காலுக்கடியில் திடமான தரை இருப்பதன் சுகத்தை அனுபவிப்பாய். அப்படியே உன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பாதையில் ஏறும்போது சட்டையை உடுத்திக்கொள்ளலாம். நீ அந்த மலைப்பாதையில் ஏறும்பொழுது வெட்டுக்கிளிகள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். ரோஸ்மேரி மற்றும் தேவதாரு மரங்களின் நறுமணம் காற்றில் இருக்கும். நீ நடக்கையில் அந்தப் பாதையின் மணல்துகள்கள் உன் கணுக்கால் வரை ஒரு சிறு மேகமாக எழுந்து எழுந்து மடியும். நீ மலையுச்சியை அடையும்பொழுது உன் நீச்சல் உடைகள் காய்ந்திருக்கும். பேருந்துக்காக நீ வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்காது. அங்கிருந்து கீழே பார்த்தால் எப்போதும் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு, இன்னும் பல நிலங்களைத் தொட்டு, இன்னும் சில கடற்கரைகளைச் சந்தித்து, இன்னும் சில நீச்சல்காரர்கள் அதன் வெதுவெதுப்பான நீருக்குள் நுழைய, நீலமாக, அமைதியாக இருக்கும் இந்தக் கடல். 

நீ ஊருக்குச் சென்று சேர்ந்தபின் இது பகிர்ந்துகொள்ள சுவாரசியமான ஒரு கதையாக இருக்கும். கோல்ஃப் கிளப் மதுவிடுதியின் இதமான வெப்பத்தில், உள் முற்றத்தில் உன் நண்பர்களுடன் அமர்ந்துகொண்டு கடலை வேடிக்கை பார்த்தபடி ‘அது ஒரு நல்ல விடுமுறைதான், ஆனா நான் கிட்டத்தட்ட திரும்பி வராம போயிருப்பேன்’ என்று சொல்வாய். அல்லது, இன்று மாலையே கூட, நகரத்தின் சலசலப்பு மிகுந்த சதுக்கத்தின் சாலையோர கஃபே ஒன்றில் உயரமான கிளாஸ்களில் பீர் அருந்திக்கொண்டு நீ கடலுக்குள் வெகுதூரம் சென்றுவிட்ட கதையைச் சொல்வாய். உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கடலுக்குள் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் பற்றிக் கூறுவாய். ‘உயிர் போய் உயிர் வந்துச்சு’ என்று சொல்வாய். ‘நான் கூப்பிட்டுப் பார்த்தேன், ஆனா உங்களுக்குக் கேக்கல. யாருக்கும் கேக்கல’ என்பாய். ‘அடுத்த தடவ கவனமா இரு’ என்று யாராவது சொல்வார்கள். ‘தண்ணி வெதுவெதுப்பா அமைதியா இருந்தாலும் லேசான அலுங்கல் இருந்துட்டே இருக்கும். உங்க ஊர்ல இருக்கற மாதிரி ஜில்லுனு இல்லேங்கறதுக்காக அத நீச்சல்குளம்னு நெனச்சுக்கக் கூடாது’ என்பார்கள். நீ சிரித்துக்கொண்டே, ‘இப்போ தெரிஞ்சுருச்சு’ என்பாய். கஃபேயின் பணியாளிடம் நீங்கள் அடுத்த சுற்று மதுவிற்கு ஆர்டர் கொடுக்கும் வரை அனைவரும் சில நொடிகள் அமைதியாக அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்கள். மது வந்தவுடன் உங்கள் கிளாஸ்களை உயர்த்தி ‘அனைத்து நல்ல விஷயங்களும் நீடிக்க’ என்று கூறிவிட்டுக் குடிப்பீர்கள். வெயிலில் சிவந்திருக்கும் உன் பின்கழுத்தில் அந்த பீர் கிளாஸின் குளுமை; அவளது விரல்களின் மென்தொடுதல்; அவளது மென்மையான ஈரமான பற்கள் பதியும் உணர்வு; ஆரஞ்சு பழச்சாறு உன் உதட்டைத் தாண்டி தாடையில் வழியும் உணர்வு. இசை, நடனம், வெதுவெதுப்பான காற்றில் கலந்து வரும் கேளிக்கைக் குரல்கள்…

சிறிது நேரம் நீந்துகிறாய், சிறிது நேரம் ஓய்வெடுக்கிறாய். இன்னும் ரொம்ப தூரம் இல்லை. நிமிர்ந்து கரையையும் அது எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பதையும் பார்க்கிறாய். இன்னும் கொஞ்சம் நீந்திவிட்டு மீண்டும் ஓய்வெடுக்கிறாய். சில சமயங்களில் இப்படியும் நடப்பதுண்டு…

ஜான் மெக்க்ரிகர் : ஆங்கிலேய எழுத்தாளர். ஐந்து புதினங்களையும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலப் புனைவெழுத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டவர். சமகால பிரிட்டனின் வாழ்வியலையும் உளச்சிக்கல்களையும் உற்றுநோக்கும் இவரது எழுத்தில் யதார்த்தவாதமும் மாயாவாதமும் ஒருங்கே நிற்பதை உணரலாம். “This Isn’t the Sort of Thing That Happens to Someone Like You” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கதையின் தலைப்பு “We wave and call.” ஆனால் இக்கதையில் இடம்பெற்றுள்ள ஒரு வாக்கியமே இத்தொகுப்பின் தலைப்பாகியுள்ளது. இதனாலேயே இக்கதையின் மொழிபெயர்ப்பிற்கும் இத்தலைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

***

ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here