கவின் செல்வகுமார்
எழுத்தாளர் என். ஸ்ரீராம் தமிழிலக்கியத்தில் பல வருடங்களாக சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதி வருகிறார். அவரது சிறுகதைகள், கொங்கு மண்ணில் உலாவும், வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மிக நுன்னிப்பாக, வியப்புத்தரும் கதாபாத்திரங்களை புனைவில் வடிவமைத்தவர். வழக்கமான சிறுகதை கோட்பாடுகளான கச்சிதமான நடை, மிகைகொள்ளாத அளவு, கூரிய திருப்பங்கள் என எந்த எல்லைக்குள்ளும் அடங்கிவிடாதது என்.ஸ்ரீராமின் சிறுகதைப் படைப்புகள். அக்கதைகள் வாசகருக்கு அளிக்கும் அனுபவமென்பது, காம்பஸ்ஸின் வாயில் பென்சிலை சொருகி, ஒரு முழுவட்டம் அடித்தபின் வரும் திருப்தியே. அத்திருப்திக்கான காரணம் சிறுகதையின் ஊடே ஒரு முழு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை வாசகருக்கு அளிக்கும் நுட்பமே காரணம் எனப்படுகிறது.
ஒரு சிறுகதை நிகழும் வெளி, ஒரு நாளாகவோ, ஓர் இரவாகவோ, அல்லது கதைமாந்தரின் ஒரு குறிப்பிட்ட வயதை ஒற்றி நிகழும் தருணங்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால், என்.ஸ்ரீராமின் படைப்புகள் கதைமாந்தரின் வாழ்க்கையை அவர்களது மன ஓட்டங்களின் விவரிப்பாக மட்டும் நிறுத்தாமல், அவர்கள் வாழும் நிலத்தின் மீதும் புனைவை செலுத்தி, ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான ஏற்ற இறக்கங்களையும், வாசகருக்கு தங்களது வாழ்வில் கவனிக்க தவறிய தருணங்களையும், மனிதர்களையும் புனைவின் மூலம் மீட்டு எடுக்கும் பாணியே அவருடைய கதைகள்.
இவ்வனுபவமே ‘இரவோடி’ நாவலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ‘இரவோடி’ என்.ஸ்ரீராமின் பெருநாவலுக்கான முதல் முயற்சி, 2024 சென்னை புத்தகக் கண்காட்சியில் பரிசல் பதிப்பகம் வெளியிட்டது.
இரவோடி (இரவில் போகிறவர்கள்). இரவையே வாழ்வாக மாற்றிக்கொண்டவர்கள் யார்? இரவை அவர்கள் விருப்பமானதாக தேர்ந்தெடுத்தனரா, அல்லது இரவு அம்மனிதர்களைப் பற்றிக்கொண்டதா? ஊரில் உள்ள மனிதர்கள் தங்கள் பாரங்களையும், கசப்புகளையும் இறக்கிவைத்து உறங்கும்போது, அவர்களின் எதிர்காலத்தை வாக்காகக் கூற, இரவில் தங்களது தெய்வமான ஜக்கம்மாவின் துணையோடு உலாவும் சாமக் கோடாங்கி (களின்) கதையே இரவோடி நாவல் (சாமக் கோடாங்கி – குடுகுடுப்புக்காரன்).
என்றோ மாயமான ‘வீரான்’ என்னும் சாமக் கோடாங்கியை அகில் என்னும் நவீனகாலத்து இளைஞன், மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாத்தாவிற்காக தேடி அலைகிறான். இந்த தேடலில் அகில் பல மனிதர்களை சந்திக்க நேரிடுகின்றது, அவர்களும் சாமக் கோடாங்கியைத் தேடிக் கொண்டிருப்பதை அறிகிறான். பின் பல முடிச்சுகளையும் அவிழ்த்து, வீரானை தேடிக்கொண்டே சுவாரசியமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கிறது நாவல். ஒரு இலக்கியப் படைப்பு, கதையைக் கடந்து, வாசகருக்கு அளிக்கும் புது அனுபவம் தரக்கூடிய பல கூறுகள் அடங்கியது ‘இரவோடி’ நாவல்.
பின் நவீனத்துவ நாவல்களில் கச்சிதமான மொழிநடை, தேவையானதை மட்டும் சொல்லும் பண்பு, எடிட்டிங்கில் கவனம், அவசரமாக கதை சொல்லி நகரும் பாணி என நாவலுக்கான கூறுகளுக்கு வித்திட்டது, க.நா.சு. மொழிபெயர்த்த ‘அன்பின் வழி (எ) பராபாஸ்’ நாவல் என எழுத்தாளரும் விமர்சகரும் ஆன ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு நவீன வாசகன், தான் படித்த பெரும்பாலான கிளாசிக் நாவல்கள் மேற்கூறிய கூறுகள் கொண்டவையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். உடனே நினைவில் வருவது – அம்மா வந்தாள், ஒரு புளியமரத்தின் கதை, தோட்டியின் மகன் என பல… இப்படி அகத்தில் விளையும் எண்ணவோட்டங்களையும், சிக்கல்களையும் கதைமாந்தரின் மனதின் ஊடாக விரித்து எடுப்பது மட்டுமே நாவலின் களமாக இருக்கவேண்டுமா என்னும் எண்ணம் தலைதூக்குகிறது.
குழந்தை தனது டிராயிங் புத்தகத்தில் பென்சிலைக் கொண்டு கோட்டின் மேல் படம் வரைந்து ஒரு ஓவியத்தை முடிப்பது போல், வாசகன் அக்கதாபாத்திரத்தின் அகத்தினைத் தொடர்ந்து சென்று, கதையை முடிக்கும் போது தனித்து விடுபடுகிறான். ஒரு வாசகன், நாவலின் வாசிப்பில் திளைக்க, மன ஓட்டங்களைக் கடந்து, அவன் இதுவரை அனுபவித்திராத கதைக்களமும், புதிய நிலமும் தேவைப்படுகிறது.
இந்த நிலையில்தான் என்.ஸ்ரீராமின் “இரவோடி” நாவல் முற்றிலும் வேறாக, தீவிர புற சித்தரிப்புகளுடன், நிதானமான கதைசொல்லலுடன், தடையற்ற நீரூற்றினைப் போன்ற மொழிநடையுடன் உருவாகி வந்துள்ளது. இதுவரை எழுதப்பட்ட நவீன நாவல்களில், ஒரு சாமக் கோடாங்கியை மையக் கதாபாத்திரமாக வைத்து, ஒரு பெரும் புனைவு வந்தது இல்லை என்பதே இரவோடி நாவலின் இன்னொரு தனிச்சிறப்பு.
இரவோடியின் மூலமாக அமராவதி ஆற்றினை மையமாகக் கொண்ட நிலத்தினை புனைவின் களமாகப் பிண்ணி, நாவல் முழுக்க தொய்வில்லாமல் அதைப் பயணம் செய்யவிடுவது, ஒரு அபாரமான முயற்சி. நிலம் என்பது சமூகக் கட்டமைப்புகளை நிர்ணயித்தாலும், இடப்பெயர்வுகள் கொண்டதாக இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அந்த நிலத்தின் மேலேயே நிகழ்கிறது. அந்த நிலமே அவனது அன்றாட வாழ்வு. அதில் நிகழும் கூட்டு சம்பவங்களே தனிமனிதனின் வாழ்வினையும் தீர்மானிக்கின்றன.
ஒரு சாமக்கோடாங்கி நிலமற்றவனாக, அதிகாரமற்றவனாக இருந்தாலும், அவனது வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள் அந்நிலத்தின் வாயிலாகவே தீர்மானிக்கப்படுகின்றன. இரவோடி நாவல் முழுக்க நிலத்தின் சித்தரிப்புகள் புனைவின் சீத்தோஷணத்தை தீர்மானிக்கும் அளவிற்கு கவனம் செலுத்தியுள்ளார் என்.ஸ்ரீராம்.
முதல் அத்தியாயத்தில், வீரான் (சாமக் கோடாங்கி) இரவு ஊரில் குறி சொல்லி உலாவுவதற்கு ஜக்கம்மா வாக்கு கொடுக்க மறுக்கிறாள். பின் அனல் வளையங்கள் விட்டு, அவனைத் தொறத்தியடிக்கிறாள். “நாம் ஏன் சாமக்கோடங்கியாக வாழ்கிறோம்?” என்னும் குலக்கதையை தன் தந்தையிடம் கேட்கிறான். பின், தான் பள்ளிக்கூடம்தான் செல்ல வேண்டும் என அவன் முடிவு எடுப்பதில் இருந்து நாவல் விரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் தீவிர சித்தரிப்பும், கதையின் மையப்பொருளும், இந்நாவலுக்கான பெரும் களத்தை தொடங்கி வைக்கவே, வாசகராக மனம் நாவலில் வரப்போகும் பெரும்பயணத்திற்கு ஆர்வத்துடன் தொற்றிக்கொள்கிறது.
இந்நாவலில் கதை சொல்லும் பாணி, முதல் சில அத்தியாயங்களுக்கு வாசகருக்கு சவாலாக இருக்கலாம். ஆனால் கதையின் ஓட்டத்தில், அந்த சவாலே நாவலை நகர்த்துவதற்கான சுவாரசியக் காரணியாக மாறிவிடுகிறது. வாசகர் தனது வாசிப்பனுபவத்தை ஒரு கோட்பாட்டினுள் அடைக்க, ‘non-linear’ பாணி என வகுத்துவிட்டு நகர வாய்ப்பிருக்கிறது. இதைத் தாண்டி, இதில் உற்றுநோக்க வேறு கூறுகள் உள்ளது எனப்படுகிறது.
நாவலின் கதைக்களம் இரண்டாக விரிவடைகிறது: ஒன்று தொலைந்து போன வீரானின் பால்யம், மற்றொன்று நிகழ்காலத்தில் இளைஞன் ‘அகில்’ தொலைந்த வீரானை தேடும் அலைக்கழிப்பு. நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இருக்கும் வேறுபாடாக ‘வீரான்’ மட்டுமே இருக்கிறான்.
தொலைந்த வீரான் தன் பால்யத்தில் சுற்றி திரிந்த நிலமும், நிகழ்காலத்தில் இளைஞன் அகில் அலைக்கழிப்புடன் தேடலில் ஈடுபட்டிருக்கும் நிலமும் ஒன்றே. அந்நிலத்தில், அவரவர் வாழ்க்கையை அங்கேயே கொண்டிருக்கும் கதைமாந்தர்கள் கடந்தகாலத்தில் வீரானை சந்தித்து பழக நேரிடுகிறது. நிகழ்காலத்தில், அகில் வீரானை தேடும்போது, வீரானைப் பற்றிய நினைவுகளை நிலத்தின் மாந்தர்கள் அகிலுக்கு விவரிக்கின்றனர்.
இரு காலங்களையும் பிண்ணி, வீரானின் வாழ்க்கையை ஒரு நினைவோட்டமாக, சுழலினுள் சுழலும் சூழல் போல, ஒரு அத்தியாயத்தினுள் பல நினைவோடைகள் நிகழ்ந்து நிகழ்ந்து நாவல் விரிகிறது. வாசகரின் கவனத்தையும் விழிப்பையும் முழுதாக கோரும் நாவல். பல கதைமாந்தர்களின் நினைவின் வழியே பயணிப்பது, ஆனால் சென்று அடையும் இடமென்பது வீரான் என்னும் சாமக்கோடாங்கியின் துயரும் கணமும் அடங்கிய வாழ்வே.
வாழ்வினில் தோற்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஒருவனுக்கு ஒன்றுசேரும்போது, ஒரு தருணம் அதிலிருந்து மீள விதி வழிவகுக்கும். அதைப் பற்றிக்கொள்கையில் தடைகள் விலகி, தனது வம்ச சாபங்களையும் கடந்து, புது பாதை உருவாகிறது. அப்படியொரு நல்வாய்ப்பினை சாமக்கோடங்கியான வீரான் தன் பால்யத்தில் தவறவிடுகிறான். பின் அங்கிருந்து அவன் அலைக்கழிப்பில் வயதைக் கடந்த சிக்கல்களை சந்திக்கிறான். இந்த அலைக்கழிப்பு மிக உயிரோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது.
எம்.வி.வி தனது ‘காதுகள்’ நாவலில், கதைநாயகன் ‘மகாலிங்கம்’ தொழில் வீழ்ச்சி, வறுமை முதலியவற்றில் இருந்து மீள, சொந்தக்காரர் ஒருவர் புது தொழில் தொடங்கும் எண்ணத்துடன் மகாலிங்கத்தை அணுகுவார். வாழ்வை மீட்கும் வாய்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்வதை விடுத்து, வாய்ப்பை நிராகரித்து தவறைப் புரிவான். அதன்பின் துயரும் மீண்டும் துரத்தியடிக்கும். அதுபோல், வீரான் செய்யும் தவறு அவனை வாட்டுகிறது.
வீரான் வாழ்வு முழுக்க அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, கல்வியின் முக்கியத்துவமும், அதை முன்னெடுக்கும் ஆசிரியர்களுடைய பணியின் முக்கியத்துவத்தையும், எழுத்தின் ஊடாக என்.ஸ்ரீராம் முக்கியமான சமூகச் சிக்கலை நாவலின் பின்னூட்டமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். வீரானால் அவனது வாழ்வின் நிகழும் சம்பவங்களுக்கு அசை கொடுக்கும் துடுப்பாக மட்டுமே இருக்க முடிகிறது. அவன் வாழ்வின்மீது என்றுமே அவனுக்கு கட்டுப்பாடு இல்லை.
இந்நாவலில் அவனைச் சுற்றி அத்துனை மேன்மை பொருந்திய மனிதர்கள் இருந்தாலும், வீரான் என்னவாகிறான் என்பது ஆச்சரியமளிக்கிறது. அதுவே வாழ்வின் யதார்த்தமும் புதிரும். எதுவாயினும், மனிதகுலம் மேன்மையுள்ள மக்களால் என்றும் ஓங்கி நிற்கும், இருட்டுகளை விலக்கி வழி வகுக்கும் என்பதில் இந்நாவல் உறுதிகொண்டு, வீரானை அவனது அனைத்து வீழ்ச்சிகளிலும் மீட்டுகொண்டே இருக்கிறது.
இருண்மை எண்ணம் சூழும் இக்காலகட்டத்தில், வாழ்விற்கு ஒளி உள்ளதென நம்பி தனது புனைவை படைத்திருக்கும் என்.ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இதுவரை, நிலத்தை குறிப்பிட்டது நிலத்தின் தனித்தன்மை மட்டுமே அல்ல, அதில் வாழும் மனிதர்கள்தான் அதை வேறுபடுத்துகின்றனர் என்று கூறுவதே சரியாக இருக்கும். இரவோடியில் வரும் கொங்கு நிலத்தில் வாழும் மக்கள், ஏன் அவ்வாறு சிந்திக்கிறார்கள், ஏன் ஒரு முடிவை எடுக்கிறார்கள், அவர்களின் அன்றாடம் தாண்டிய நம்பிக்கை என்ன, தனிமனிதனைத் தாண்டிய சமூக விழிப்புணர்வு என்ன, ஒன்றுசேர்க்கும் அறம் என்ன – இதை ஒரு புனைவில் கொண்டுவர, பண்பாட்டின் மீதும் அதன் பின்புலத்தின் மீதும் அக்கறையும் ஆர்வமும் இருந்தாலொழிய, இரவோடி போன்ற தீவிர பண்பாட்டு தளத்தை வைத்து ஒரு படைப்பு நிகழ முடியாது.
உதாரணமாக, வீரான் தன் பால்யத்தில் எடுத்த ஒரு தவறான முடிவினால், ஒரு வயதான குடும்பத்தலைவி தோட்டத்தில் ஆள்க்காரனாக – எருமை மேய்க்கும் பையனாக அடைக்கலம் புகுகிறான். அங்கு அவன் படும் சிரமத்தை மட்டும் விவரித்து கதையின் அடுத்த களத்திற்கு செல்லாமல், கோவிலுக்காக பண்படுத்தி வளர்த்துவரும் எருது மாட்டினோடு வீரான் பல அத்தியாயங்கள் ஊர் விட்டு ஊர் பயணிக்கிறான். அதை ஒட்டியே பல சுவாரசிய நிகழ்வுகள் நடக்கின்றன.
அடுத்து, அமராவதியின் ஆற்றின் போக்கு அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே தீர்மானிக்கிறது. அவ்வாற்றில் ‘யானை மடுவு’ என்னும் பகுதி உள்ளது. வெள்ள சமயங்களில் அம்மடுவில் யானையே விழுந்தாலும் பிழைக்க வாய்ப்பில்லை. இம்மாதிரியான பிரத்தியேகமான காட்சிகள் நாவல் முழுக்க வருகின்றன.
பின்னொரு சமயத்தில், பஞ்சத்தை போக்க கொடும்பாவியை கிழ பிரமச்சாரி கொள்ளி இடும் சம்பிரதாயம் என மக்களின் நம்பிக்கைகளை சார்ந்து நாவலின் கதைக்களம் நகர்கிறது. நிகழ்காலத்தில், பெரிய ஊர் திருவிழாவில் இளைஞன் அகில் சாமக்கோடங்கி வீரானை தேடி அலைக்கையில், சொப்பன வித்தைகாரர்களின் மாயத்தில் மயங்குவது எல்லாம் வாசகருக்கு மிக புதியது. இப்படியாக, நாவலில் வரும் ஒவ்வொரு இடமாற்றமும் நின்று கவனிக்கத்தக்க புது அனுபவங்களாகின்றன.
இம்மாதிரியான பண்பாட்டு பின்புலம் கொண்ட நாவலில் இயற்கையின் புறவயச் சித்தரிப்புகளே எரிபொருள். அதை நாவலின் மொழிநடையில், வாசகரை உள்ளே இழுக்கவும், கதைக்களத்தின் சுற்றுச்சூழலை தீர்மானிக்கவும் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சித்தரிப்புகள் வாசிக்கும்போது பரவசத்தையும், பெரிய புனைவுலகினுள் பயணிக்கவும் சரியாக பொருந்தி வந்துள்ளது.
ஒரு கதைமாந்தர் எதோ ஒரு துயரத்தில் மனதில் பல எண்ணங்களுடன் சாலையில் நடக்கிறார் எனக் கற்பனை செய்துகொள்வோம். ஒருவேளை, கடும் மழை அப்போது பெய்துகொண்டிருந்தால், துக்கத்தின் இடையிலும் அக்கதைமாந்தர் சிந்திப்பதில் கவனம் செலுத்த முடியாது. வெயிலும் மழையும் அன்றி, நல்ல சீத்தோஷண வானிலை என்றால் துக்கத்தில் ஊறித் திளைக்க பொருத்தமான சூழ்நிலை அல்லவா? அது போல, நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையே அன்றாடத்தை கூட தீர்மானிக்கிறது. நாவலில் கதாபாத்திரங்களைச் சுற்றி விவரிக்கும் இயற்கைச் சித்தரிப்புகள், கதையுடன் பயணிக்க மிக மிக அவசியம் என இரவோடி போன்ற பெருநாவல் உணர்த்துகிறது.
நாவலில் மிகச் சுவாரசியமான பகுதியாக, கதைநாயகன் வீரான் ஊர் ஊராக நாடகம் போடும் சுலோசனாவைச் சந்திப்பது. அவள் நாடகக்குழு இராமாயண நாடகம் அரங்கேற்றுகிறது. அதில் தனது கணவன் இந்திரஜித்தை மீட்க இராமன், லட்சுமணன், அனுமாருடன் போர் புரிய வருகிறாள் – புராதன சுலோசனா. பின், நிகழ்காலத்து சுலோசனா வீரானைத் தேடி அலைகிறாள். பின், நாவல் முழுக்க இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது, அங்கு அங்கு ஒவ்வொரு தருணங்களாக. இப்படி இணையொத்த சம்பவங்கள் கதைசொல்லலில் புது ஆழம் அளிக்கிறது.
என்.ஸ்ரீராம் தனது மண்ணில் புனைவின் வழியாக மீட்டுகொண்டிருக்கும் மக்களும், பண்பாடும் என்றும் தீர்ந்துபோகாதவை. நாவலுக்கான பெரும் சித்தரிப்பையும், களத்தையும் ‘இரவோடி’ மூலம் அடைந்த என்.ஸ்ரீராம் அவர்களின் அடுத்த சிறந்த நாவலிற்கான எதிர்பார்ப்பு கூடுகிறது.
***
கவின் செல்வகுமார் – சொந்த ஊர் சேலம். சென்னையில் தனியார் தொழில்னுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து தன் வாசிப்பனுபவங்களை எழுதி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : kavin.selva@outlook.com


