ந. ரஞ்சித் குமார்
புனைவின் நுழைவாயில் உண்மையில் கதையின் முதல் வரி தானா என்றால் சில படைப்புகளில் வாசிப்பு நிறைவுற்ற பிறகு தோன்றுவது வேறாகவே இருக்கும். கதையின் இறுதிப்புள்ளி வரை அது தன்னுடைய ஆரம்பத்தையும் முடிவையும் அறுதியிட்டு வரிசைப்படுத்திட முடியாதபடி வாசகனை நிறுத்தி வைத்திருக்கும். இது முழுக்க முழுக்க படைப்பாளியின் கட்டுப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டு நிகழ்ந்த கண்கட்டுவித்தை என்றும் சொல்லிவிட முடியாது. அதேபோல் படைப்பாளியின் கரங்களை மீறி புனைவு தானாக நிகழ்த்திக்கொண்ட அரூபமான, பரிணாம நகர்வாக இருக்கும் என்றும் அடையாளப்படுத்த முடியாது.
நிகழ்வுகளின் தொடர்ச்சி அதன் காரணிகள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுமேயானால் புனைவு விஸ்தரிக்கும் கண்ணோட்டங்கள் முடிவிலியாகச் சுழன்று எண்ணற்ற சாத்தியங்களை நெய்து கொண்டிருப்பது புலப்படும். இந்தக் காரணிகள் மற்றும் விளைவுகள் புனைவில் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டவையாகவே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. புனைவு நிகழும் களம், காலம், சமுதாயப் பின்னணி, கதாபாத்திர வார்ப்பு போன்ற அத்தியாவசியக் கூறுகள் சரியாகப் பின்னப்படும் போது சூழல் கதைப்பரிமாற்றத்திற்கான முதன்மை ஊடகமாக ஆகிறது. சூழல் பூடகத்தன்மை வாய்ந்தது. வார்தைகளுக்கு இடைப்பட்ட வெளியில் இருந்து துலங்கி வருவது. மறுவாசிப்புகளில் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளிப்பது. கண்ணோட்டங்கள் விரிய விரிய கதையின் துவக்க காலமும் நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்புகளும் மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிக்கின்றன. காலம் கடந்து ஒரு படைப்பு உயிர்ப்புடன் நீடித்திருக்க பலவிதமான மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிக்கும் அம்சங்களைக் கொண்டிருத்தலும் அவசியமாகிறது. புனைவு நிகழ்த்தும் மாயச் சுழற்சி, மாற்றுப் பார்வைகளின் விசையுடன், ஒற்றைச் சாத்தியப்பாட்டை மீறித் தன்னை விஸ்தரித்துக்கொள்கிறது.
புனைவின் மொழியும் தொனியும் ஒட்டுமொத்த படைப்பிலும் சீரான ஒத்திசைவைக் கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. படைப்பூக்கமும் படைப்புச் செயல்பாடும் ஒன்றோடொன்று பிணைந்த அலைவரிசையைப் பேணுதலில் மட்டுமே படைப்பு எய்தக்கூடிய உன்னத நிலை அது. அப்படியான நிலையில் எய்திய உயிரோட்டத்தைப் படைப்பு முழுமைக்கும் சிதையாமல் காத்தல் என்பது படைப்பாளியின் முழுமையான அர்ப்பணிப்பைக் கோரி நிற்கும் பொறுப்புணர்ச்சியாக விளங்குகிறது.
வாசகனாக நாவல் படைப்பாக்க மனநிலையை உணரும் தருணத்தையும் படைப்பு வாசகனுக்கு உணர்த்த தயாராகவே இருக்கிறது. வாசிப்பின் ஒரு கட்டத்தில் கதையில் துலங்கும் சூழலின் வழியாக நேரடிச் சித்தரிப்பில் வார்த்தைகளாகச் சொல்லப்படாத புல் நுனிகளையும் விவரிக்கப்படாத கதாபாத்திரங்களின் நுட்பமான மனவோட்டங்களையும் நம்மால் நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. புனைவுடன் வாசக மனம் ஈருடல் ஓருயிராக ஒன்றிவிட்ட இந்த விந்தை, ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு, அது மன உணர்வாக இருக்கலாம் உடல் வலியாக இருக்கலாம் தரையின் ஈரப்பதமாகவோ நிலவின் ஒளியில் தகதகக்கும் நதயின் நீர்ப்பரப்பாகவோ எதுவாகினும், கண்முன்னால் வார்த்தைகளாக வந்து விழுவதற்கு இரண்டு வரிகளுக்கு முன்னால் அவ்வார்த்தைகளின் உணர்வுச் சமிக்ஞை கடத்தப்பட்டிருப்பதை அறிய நேரும் தருணத்தில் தான் சிலிர்ப்புடன் புலன்களில் உணரப்படுகிறது!
இரவாடிய திருமேனி நாவலின் மிக முக்கியமான பலம் இதன் மொழி என்றால் மிகையாகாது. காடுகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட சில முக்கியமான புனைவுகளை வாசித்திருந்தாலும் இந்நாவல் அழைத்துச் செல்லும் காடு மட்டுமல்ல, காட்சிப்படுத்தும் ஒரு புல் கூட இந்நாவலுக்குள்ளேயே வேர்விட்டு வளர்ந்திருப்பதாகவேப் படுகிறது. சித்தரிப்பின் வழியாக அழகியலைக் கடந்த சூழலின் தனிச்சிறப்பான குணாம்சங்களைக் கடத்துவதிலும் உரைநடையைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ.
நாவல் முழுவதும் கையாளப்பட்டிருக்கும் மொழியின் சிறப்பம்சம் குறித்து மட்டுமே பக்கம் பக்கமாகப்பேச முடியும். அதைத் தனி ஒரு கட்டுரையாக எழுதினால் மட்டுமே அது சாத்தியம். இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். வனப்பெண்ணாக வரும் ஒரு கதாபாத்திரம் மலைக்குன்றின் உச்சியில் ஏறி நிற்கும் காட்சியை கதையின் மையக்கதாபாத்திரமான சாம்பன் ஏறிட்டு பார்த்தவாறு லயித்திருக்கும் சித்தரிப்பு இப்படி வருகிறது “குன்றின் உச்சியில் தனது வடிவுடைய முதுகினைக் காட்டி, இடையில் இரு கரங்களையும் பொருத்தி, பள்ளத்தில் குவிந்திருந்த வனச்செறிவைப் பார்த்தபடி அவள் நின்றிருந்தாள். காடும், மலையும் அவள் பாதங்களின் கீழ் கிடந்தன.” (பக்கம் -223) காடும், மலையும் அவள் பாதங்களின் கீழ் கிடந்தன என்பது இங்கு படைப்பாளியின் அவதானிப்பு அல்ல அது முழுக்க முழுக்க சாம்பனின் அவதானிப்பு. அவனது பார்வையில் அந்தக் கணத்தில் பேரண்டம் போல விரிந்து படர்ந்திருக்கும் இந்தக் காட்டை விட ஒய்யாரமான கம்பீரம் அவளுடையதாகப் படுகிறது. சாம்பனின் பார்வையில் காடே தன்னைத் தாழ்த்தி அவள் பாதத்தில் பணிந்து கிடக்கிறது என்ற அர்த்தம் தொனிக்கிறது.
இதேபோல் காட்டை விட்டு அகல யத்தனிக்கும் இரவொன்றில் கரிய மேனியுடையவளான அதே வனப்பெண்ணின் இருப்பை உணரும் சாம்பனுக்கு அவள் இவ்வாறான உருவகமாகப் புலப்படுகிறாள் “யானைகளின் மதன நீரில் ஊறி, மகரந்தப் பரவலுக்கிணையாய்ப் புலிகளின் ரோமங்கள் உதிர்ந்துகிடக்கும் அக்கானகத்திற்குச் சூடப்பட்ட மைப்பொட்டு போல் அவள் அங்கு நிற்கக் கண்டான்” (பக்கம் – 235). முக்கியமாக இங்கு சுட்டிக்காட்ட முனைவது ஒரு அழகியல் சித்தரிப்பு என்று வருகையில் அங்கு உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் கலப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். காட்சிரூபமாக ஒரு சித்தரிப்பை உரைநடையில் கடத்த இந்த அம்சங்கள் அவசியமானதும்கூட. ஆனால் அப்படியான உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் புனைவுக் களத்தின் குணாம்சக் கூறுகளைக் கொண்டே சொல்லப்படுவதில் தான் இந்நாவல் கையாளும் மொழியின் தனித்துவம் வெளிப்படுகிறது. காட்டின் நினைவுகளோடு தொடர்புடைய யானை, புலி, மகரந்தம் ஆகியன அந்தக் குறுகிய கணம் வெளிப்பட்டு சூழல் அவதானிப்பைச் செறிவூட்டுகின்றன. சித்தரிப்பில் சிறிதும் கூட வாசிப்புக்கவனம் களத்தின் சூழலிருந்து விலகாது கட்டுண்டிருக்க இது ஒரு குறிப்பிடத்தக்கக் காரணம்.
கட்டமைப்பிலும் கதைக்களம் பல வடிவங்களையும் கோணங்களையும் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னல்கள் ஒன்றோடொன்று திருகிக்கொள்ளாமல் அதற்கே உரித்தான தனித்துவத்தோடு பிணைந்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு. கதையில் வரும் பெயர் குறிப்பிடப்படாத வனப்பெண்ணின் பார்வையில் நாவலைப் புரிந்து கொண்டால் நாவலின் தன்மை மாய யதார்த்த வடிவத்தை அடைகிறது. மையக்கதாபாத்திரமாகக் கருதத்தக்க சாம்பனின் பார்வையில் பார்க்கையில் நாவல் இருத்தலியலைப் பேசும் குணமுடையதாக வேறொரு பரிமாணத்தை அடைகிறது. அரசரின் மெய்க்காவல் படைத்தலைவன் மாறவர்மனின் பார்வையில் மட்டுமே நாவலை இரண்டாகப் பகுக்க முடியும். வெளிப்புறமாக ராஜ விசுவாசமுடைய காவலனின் யதார்த்த வாழ்க்கை, அதற்கு நேரெதிராக அகவயமாக மகளின் மரணத்திற்குப் பிறகு பலவீனப்பட்டு நொடித்துப் போயிருக்கும் ஒரு சாமானியனின் அலைக்கழிப்புகள் என மனத்தின் இரட்டைக்குணத்தைப் பேசும் படைப்பு. ஞானகுரு ஸ்ரீவத்சரின் பார்வையில் ஒரு மாநகரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சரித்திரத்தின் அவலப்பார்வையிலிருந்து முன்வைக்கும் படைப்பு என்று பொருள் கொள்ள முடியும்.
நாவலின் கட்டுமானம் அரசவையில் தன் காவியத்தை அரங்கேற்றச் செல்லும் காந்தர்வன் எனும் கூத்தனால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கிறது. கள்ளர் மரபிலிருந்து வந்திருக்கும் நீசனொருவனால் அரங்கேற்றப்படும் காவியம் சரித்திர அங்கீகாரத்தை அரசவையில் பெறுமேயானால் அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பு என்று அவையில் கூச்சல் எழவே முதல் சருக்கத்தின் முடிவில் அவமானத்துடன் வெளியேற்றப்படுகிறான் காந்தர்வன். புறக்கணிப்பும் அவமானமும் தூண்டி விடும் கசப்பைத் தணிக்க வானதி என்ற வேசையை நாடிச் செல்கிறான் காந்தர்வன். அவளது அரவணைப்பில் அரங்கேறுகிறது இரவாடிய திருமேனியின் இரண்டாம் சருக்கம். தான் உருவாக்கிய காவியத்துக்குள் தானே ஒரு கதாபாத்திரமாக வலம் வருகிறான் காந்தர்வன்.
அரசருடைய உத்தரவின் பேரில் பல தலைமுறைகளுக்கு முன்பு ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீக்கடம்பை மலரைத் தேடி வனத்திற்குள் நுழைகின்றனர், சாம்பன், பரிதி, பெரியசாமி உடன் இரண்டு காவலர்கள். குறித்த கெடுவுக்குள் மலர் கொண்டுவரப்படாவிட்டால் பரிதியின் மனைவி கோதையின் தந்தை உத்திராபதி பண்டிதரின் தலை போய்விடும்.
மலரைத் தேடி ஐவரும் வனத்திற்குள் நுழையும் முன்பு உத்திராபதி பண்டிதர் முன்பு வெளியே காட்டிக்கொள்ளமுடியாத இரண்டு சந்தேகங்கள் இருக்கின்றன. தலை போனாலும் பரவாயில்லை என்று மலரைத் தேடி வனத்துக்கு போவது. ஆனால் தலைமுறை தலைமுறையாகத் தேடப்பட்டுவரும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீக்கடம்பை மலரை இதுவரை யாரும் கண்ணால் கண்டதும் கிடையாது. உண்மையில் அப்படி ஒரு மலர் இல்லை என்று அரசரிடம் ஒப்புக்கொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள நினைத்தால் தமது முன்னோர்கள் அனைவரையும் தனது குல வரலாற்றையும் தாமே அவமானத்திற்கு உட்படுத்தியதற்கு ஈடாகும். அந்த அவமானம் உண்டாக்கும் துடைத்தழிக்கமுடியாத கறை தன் ஒருவனுடைய மரணத்தை விடவும் கொடுமையானது. இதற்கிடையே தீக்கடம்பை நிஜத்தில் ஒரு மலரே அல்ல அது ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்ணனை என்ற திடுக்கிடச் செய்யும் ஊகமும் பாணன் ஒருவனால் உத்திராபதி பண்டிதரின் செவிகளுக்கு வந்தடைகிறது.
கள்ளர் குலத்தைச் சேர்ந்த சாம்பன் இந்தக் கதையில் மையக்கதாபாத்திரம் என்று சொல்ல இயலும் என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இங்கு புனைவின் மையம் ஒரு தனித்த மனித ஆளுமையை பிரதானப்படுத்துவதில்லை. விரிவான புனைவுக்களத்தை எடுத்துக்கொண்ட பெரும்படைப்புகள் அனைத்துக்கும் இது பொருந்தக்கூடிய கூற்று தான். ஆரம்பத்தில் புனைவின் நோக்கம் தீக்கடம்பை மலரைத் தேடும் பயணமாக இருப்பதாகத் தோன்றினாலும் கதாபாத்திரங்கள் நமக்கு பரிச்சயமாகத் துவங்கியதுமே இதைக் கடந்து பலவற்றை நாவல் பேச இருக்கிறது என்ற ஊகத்திற்கு நாம் வந்துவிடுகிறோம். அப்படியான அடுத்தகட்ட நகர்வில் ஞானசபையில் விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய கலையின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்கள் இருக்கின்றன.
கதையின் மைய இழையில் விதிவசமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் உள்நோக்கங்களும் வெவ்வேறானவை. பெரும்பாலான கதாபாத்திரங்களை கதையோட்டத்தில் இணைக்கும் மையச்சரடு மரணத்தின் அலைக்கழிப்பு. களவில் பிடிபட்டு கண்முன்னாலேயே துடிதுடித்து மரணிக்கிறார் சாம்பனின் தந்தை. மகளின் மரணத்தில் முழு உலகமே இருள் சூழ்ந்தது போல் நடைபிணமாகத் துவண்டு நிற்கிறான் அரசரின் மெய்க்காவல் படைத்தலைவன் மாறவர்மன். காட்டில் தனது ஒரே துணையாக இருந்த அன்னையின் சடலத்தைப் புதைத்து விட்டு வரும் குறத்தியின் உக்கிரம் ராஜவம்சத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி எடுக்கிறது. கூடலின் நரம்புத் துடிப்புகூட அடங்கியிராத சடுதியில் செண்பகரதியின் மரணம் சாம்பனால் நிகழ்ந்து முடிகிறது. வயோதிகத் தனிமையும், கையறுநிலையும், பசியும் ஒன்றாகச் சேர்ந்து சாம்பனுக்கு தந்தை போல் இருந்த சுருளிக்கு மீட்சியளிக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக மரணம் அமைகிறது. வனத்தில் மரணத்தின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்த சாம்பனின் உயிரைக் காத்து அவனது மனக்குழப்பங்களையும் உடல் நோவுகளையும் சரிசெய்த, வாழ்க்கை மீதிருந்த நெடுநாள் கசப்புக்குப் பிறகு அவனக்கு ஒரே இணக்கமான மனிதராகத் தென்பட்ட, பெரியசாமி அவன் கண்முன்னே குரூரமாக கொல்லப்படுகிறார். சாம்பனின் நண்பனாக இருந்த சங்கனின் நரக வாழ்க்கைக்கு அவனே முற்றுப்புள்ளி வைக்கிறான்.
குழந்தைகளின் வறிய நிலை, மரணம் ஆகியவற்றை தஸ்தயேவ்ஸ்கி தனது புனைவுகளில் அணுகும் விதம் இந்த உலகில் மனித உயிர்கள் படும் வேறெல்லாத் துயர்களைவிடவும் அவையே கொடுமையானது என்பதாகவே இருக்கும். எல்லாத் தருணங்களிலும் கடவுளின் பக்கம் நிற்கும் தஸ்தயேவ்ஸ்கி குழந்தைகள் அனுபவிக்க நேரும் துன்பங்களில் மட்டும் கடவுளுக்கு எதிராக நிற்பார். இந்நாவலிலும் ஓரிடத்தில் அப்படி ஒரு பகுதி வருகிறது. அரண்மனையிலிருந்து வீடு திரும்பும் வழியில் மாறவர்மன் ஒரு பச்சிளம் குழந்தையின் மரண நிகழ்வை எதிர்கொள்கிறான். பின்புலம் தெரியாத அந்தக் குழந்தையின் மரணம் அவனது சொந்த மகளான கண்ணம்மாவின் மரணத்தை அவனுக்கு நினைவூட்டுகிறது. ஒரு வகையில் மனித மனத்தின் ஆற்றுப்படுத்தவே முடியாத ஆழமான வலி நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்ட நினைவை வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டு துவழ்வதாகவே இருக்கிறது. ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுடைய மரணத்தின் முன்பு இந்த உலகமே பாவ மன்னிப்பு கோரி நிற்க வேண்டும் என்று அவனது ஆற்றாமை வெளிப்படுகிறது.
“இறக்கின்ற பிள்ளைகள் அனைத்திற்கும் ஒரே சாயல். இந்த இறக்கமற்ற உலகை மன்னித்து, கனிவுடன் விடைபெறுகிறார்கள்.”
“இந்த மௌனத்தின் முன் மொத்த உலகும் மண்டியிட்டுப் பாவ நிவர்த்தி கோர வேண்டும்” (பக்கம் 332)
ஒரே கரங்களில் குலுக்கப்பட்டு உருட்டப்பட்ட சோழிகள் போல் கதாபாத்திரங்களின் விதிகள் புனைவுக்குள் அடைபட்டு உருள்கின்றன. தத்தம் போக்குகளை தீர்மானிப்பதில் ஒவ்வொருவருக்கும் இடையே பேணப்படும் முழு வெளிப்படைத்தன்மையற்ற சூட்சும இடைவெளி வாசிப்பனுபவத்தில் சுவாரஸ்யம் கூட்டுகிறது. நாவலில் வரும் எந்தவொரு கதாபாத்திரத்தின் குணத்தையும் அவர்களின் நடவடிக்கைகளை வைத்து தீர்மானிக்க முடியாது. காமம், காதல், பிரிவேக்கம், மரணத்துயர், குற்றவுணர்ச்சி, பழிவாங்கல், என்று கதாபாத்திரங்களை ஏதேனும் உள்ளார்ந்த உணர்ச்சி அவர்களை இயக்கும் விசையாகச் செயல்படுகிறது. இதற்கு இவர்களை விதிவசத்தில் சங்கமிக்க வைத்திருக்கும் காடும், காட்டுக்கு வெளியே அவர்களின் வரவை எதிர்நோக்கியிருக்கும் உறவுகளின் காத்திருப்பும் பாலமாக இருக்கிறது.
காடுகளில் தழைத்து வளர்ந்த நாகரீகமேயானாலும் நகருக்குள் சென்று வாழப்பழகிய நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் காடுகளின் நினைவும் மானுடர் மரபணு நினைவுகளில் இருந்து தடயமின்றி துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிஜம். கதாபாத்திர மன இயல்புகளை கணத்துக்கு கணம் குலைத்துப் போடுகிறது காட்டின் மர்மம் பொதிந்த பேரழகு. காட்டின் மௌனம் காலத்தின் நகர்வை மறக்கடிக்கிறது. காட்டின் பிரம்மாண்டம் தனிமையுணர்வையும் மரண பயத்தையும் அதிகரிக்கிறது. காட்டின் திசையற்ற அடர்த்தி நினைவுகளைக் குழப்பியடிக்கிறது. காடு உறைய வைக்கும் காலம் வாழ்வையும் மரணத்தையும் பிரிக்கும் எல்லைக்கோட்டை இல்லாமலாக்குகிறது. காட்டின் இதம் தாபத்தை அதிகரிக்கிறது. காடு அகங்காரத்தை தவிடுபொடியாக்குகிறது. காடு மனக்கசடுகளின் ஊற்றுக்கண்ணைத் தூர்வாறுகிறது. காடு வாழ்வு மீதான பற்றைப் புதுப்பிக்கிறது. காடு அனைத்தையும் துறந்தவனுக்கு கடைசிப் புகலிடமாகிறது. காடு நூற்றாண்டுகளின் வஞ்சத்தைத் தன் கருப்பையில் சுமந்து மானுடக் கனவுகளில் புகட்டுகிறது. காடு இருள் மட்டுமே சூழ்ந்த நான்கு சுவர்களுக்குள் மிச்ச வாழ்வை பேரானந்தத்துடன் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.
பகல் பொழுதில் அசந்து தூங்கியதில் தூக்கத்தில் இருந்து விழித்ததும் காலையா மாலையா என்று பொதுவாக வரும் குழப்பத்துடனேயே நாவலில் சாம்பனின் அறிமுகத்தை நாம் எதிர்கொள்கிறோம். காட்டுப்பயணத்தில் அவனது பிரக்ஞை அவ்வப்போது நனவிலியில் சிக்கித் துவழ்கிறது. அப்போது அவனுக்குள் சிதறல் துணுக்குகளாகத் தோன்றி மறையும் கோர்வையற்ற கொடும் நினைவுகள் வழியாகவே அவனது கடந்த காலத்தை அறிகிறோம். ஆனால் விழிப்புநிலையில் சாம்பனின் மன உணர்வுகளும் செயல்பாடுகளும் புதிர்களாகவே இருக்கின்றன.
சாம்பனுக்கு நண்பனைப் போல் இருந்த சங்கனின் உடல் முடக்கத்திற்கு சுருளி போதித்த களவொழுக்கத்தை ஆர்வக்கோளாறில் அவர்கள் இருவரும் மீறியது காரணமாகிறது. சாம்பன் நினைத்திருந்தால் சங்கனின் மீதமுள்ள வாழ்க்கை முழுவதையும் அழுகிய உடலுடன் படுக்கையில் கழிக்க நேரும் நரக வேதனைக்குள் சிக்காமல் தடுத்திருக்கலாம். சாம்பனின் வெளியேற்றம் சங்கனின் மலட்டு உயிர் இவை இரண்டோடு தன்னுடைய வயோதிகத் தனிமையும் சேர்ந்து சுருளியை களவொழுக்கத்தை மீற வைக்கிறது. பாணர்களிடமும் கூத்தாடிகளிடமும் களவு எடுக்கக்கூடாது என்ற விதியை மீறுகிறார். பசி தமது குலத்தையே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு அவரைத் தள்ளுகிறது. அனைத்துக்கும் ஒரே மீட்பாக பித்தேறிய மகிழ்ச்சியுடன் மரணத்தை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார் சுருளி. சாம்பனின் வனவாசத்தில் அவனைப் பெரிதும் அலைக்கழிக்கும் குற்றவுணர்ச்சி, சங்கனின் வாதைகளுக்கும், தந்தைக்குப் பிறகு தனக்கு அடைக்கலம் தந்து வளர்த்த, களவின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்த சுருளியின் கையறுநிலைக்கும் தாம்தான் காரணம் என்ற நிதர்சனங்களாக இருக்கின்றன..
சாம்பனின் மூர்க்க குணத்தையும் புதிரான ஆளுமையையும் அசைத்துப் பார்க்கும் வனப்பெண்ணான குறத்தி ஒருத்தி வருகிறாள். சாம்பனை மரணத்தறுவாய் சூழும் தருணத்தில் அவனைக் காத்து, உடனிருந்து, ஒரு வடுவைப் போல அவனை வீட்டு நீங்காமல் வதைத்துக்கொண்டிருக்கும் துன்பக் கறையை சுவடின்றி அகற்றுகிறாள்.
நாவலில் இவளது நிஜப்பெயர் என்னவென்று தீர்க்கமாக மறைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளலாம். நாவலில் கதைசொல்லியான காந்தர்வனுக்கு அடுத்து பூடகமான அடையாளத்துடனேயே வலம் வருகிறாள் இந்த வனப்பெண். கதைசொல்லியான காந்தர்வனுக்கும் வேசை வானதி உடனான பிணைப்பும், சாம்பனுக்கும் பெயர் சொல்லப்படாத வனப்பெண்ணுடனான உறவும் ஒன்றொன்றின் பிரதிபலிப்புகள் தானா என்ற வியப்பு தோன்றும் இடங்களும் நாவலில் இருக்கின்றன.
சேரர்களும் பாண்டியர்களும் படையெடுத்து, வனமே ஒரே புகலிடமாய் வசித்து வந்த கடம்பர்களின் குலம் அழித்த கதையை காவிய நடையில் சித்தரிக்கும் மூன்று படலங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. இறந்த ஆன்மாக்களின் ஓலங்கள் திரண்டு நிற்கும் கல்மரம் ஒன்றின் தொடுகை அக்கதைகளுக்கான நுழைவு வாயில். அதன் பின்னணி தெரியாத பரிதி முதலில் அந்தக் கல்மரத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு புத்தி உறைந்து போகிறான். வனப்பெண்ணின் வழிகாட்டுதலோடு சாம்பன் தக்க தருணத்தில் அந்தப் படலங்களுக்குள் நுழைகிறான். ஒரு பக்கம் பரிதியின் அகம் உறைந்த நிலை. அவனுக்கு வெளியே அவனது பிரக்ஞையை ஊடுருவிக் காரணத்தை அறிய உத்திராபதி பண்டிதர் எடுக்கும் முயற்சியில் அவர் கண்ணுறும் காட்சிகள். இன்னொரு பக்கம் இவர்கள் இருவரையும் தன்னுடைய பிரவேசத்தில் காணும் சாம்பன். மூவரின் காலமும் இடமும் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து ஒற்றை மையத்தில் சங்கமித்து மீள்கின்றன. நாவலில் கற்பனையின் வீச்சு உச்சம் தொடும் பகுதிகளில் இதுவும் ஒன்று. ஒருவகையில் பார்த்தால் நாவலில் துவக்கமே இந்தப் படலங்களிலிருந்தே துவங்குகிறது என்ற பார்வையிலும் புரிந்துகொள்ளலாம்.
அரசவையில் காந்தர்வனின் இரவாடிய திருமேனி காவியம் எதிர்கொள்ளும் அவமானங்களின் எதிரொலியாக காவியத்துக்குள் நிகழும் ஞானசபை விவாதங்கள் இருக்கின்றன. கலையின் மேன்மைகள் சரித்திரத்தில் அமரத்துவம் பெறுவதில் அவற்றைப் படைத்தவரின் பின்னணி முக்கியமானதாகப் பார்க்கப்பட வேண்டும் என்று தன் சீடர்கள் சூழ உரை நிகழ்த்துகிறார் ஞானகுரு ஸ்ரீவத்சர். கலையின் ஆதார ஊற்று ஞானம் பயிலும் அருகதையற்றவரிடமிருந்து பிறந்ததெனில் அது அரங்கேறுவதற்கும் தகுதியற்றது என்று போதிக்கிறார். “என் தடுமாற்றம் எப்படி ஒரு சிந்தனை அதற்குரிய மரபிலிருந்து ஒதுங்கி வெளியில் தோன்றுகிறது என்பதில் தான். அது என்னை அச்சுறுத்துகிறது. எந்தக் கலையும் அதற்குரிய மரபிலிருந்துதான் பிறக்க முடியும்” (பக் 302). அதேசமயம், மரணத்தின் இறுதிப்புள்ளியில் ஞானகுரு அடையும் சிறுதுளி தரிசனம், அதுவரையிலான ஞான சபை விவாதங்கள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும் முக்கியமான திருப்பு முனை!.
தீக்கடம்பை மலர் கொண்டுவரப்பட்டதிலிருந்தே அடுத்தடுத்து தென்கூடல் நகரை கெடுநிமித்தங்கள் சூழ்கின்றன. ஞான சபையில் யுகங்களாக நின்று எரியும் ஞான விளக்கில் துவங்கி நகரில் நிர்மாணிக்கப்படும் மகா சங்கு, கோவில் கோபுரம், தேர் பவனி, ஆயிரம் கால் மண்டபம், ஞானகுரு ஸ்ரீவத்சரின் மரணம் வரை தொடர்ந்து அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் மகாபிரளயத்தின் முன்னறிவுப்பு போல் நகர மக்களை நிரந்தர அச்சத்தில் பீடிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூல காரணமாக பெயரறியா வனப்பெண்ணின் மூச்சுக்காற்று அசரீரியாக இருக்க அதை ஏற்றுச் செயல்படுத்தும் கைப்பாவையாக சாம்பன் ஆகிறான்.
“எங்கும் வீசும் காற்றே.
நாங்கள் இருளில் இறங்கத் துணியும்வரை
எங்கள் தீபங்களை அணைக்காதிரு.
அவை அணைந்தபின்
ஒளியின் நினைவுகளைச் சுமக்காதிரு.
எங்கும் பரவியுள்ள ஒளியே,
நாங்கள் இருளில் இறங்கத் துணியும்வரை எங்களை நீங்காதிரு.
எங்களை நீங்கியபின்
எங்கள் இல்லாமையைத் துலங்காதிரு.” (பக்கம் 298)
கதைச்சுருக்கம் அதிகமாக சொல்லப்பட்டுவிட்டதோ என்று நினைப்பவர்களுக்காக கடைசியாக ஒரு குறிப்பு. பா.வெங்கடேசனின் முத்தம் என்றொரு சிறுகதை இருக்கிறது. ஒரு கதையில் துவக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவும் ஒற்றைச் சாத்தியத்துடன் தானே இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடிய கதை அது. இரவாடிய திருமேனியில் வரும் தீக்கடம்பை மலரிலும் ஒரு பொடி இருக்கிறது. அதை வாசகர் புரிந்துகொள்ளும் பார்வைக்கேற்ப ஒட்டுமொத்த நாவலும் வேறொரு நாவலாகத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. எனவே நான் படித்த கதையும் நீங்கள் இரவாடிய திருமேனியில் படிக்கப் போகும் கதையும் வேறுவேறாகவும் இருக்கலாம். தீக்கடம்பை மலரல்ல அது ஒரு பெண் என்றால் அவள் தான் பெயர் குறிப்பிடப்படாத வனப்பெண்ணா? களவுக்காக கோயிலுக்குள் நுழையும் சாம்பனை வசியப்படுத்தி தன்னுடைய வஞ்சத்தை நிறைவேற்றத்தக்க ஏவலனாக வனத்துக்கு வரவழைப்பது தான் தீக்கடம்பையின் நோக்கமா?.
“ஆனைக் காதன்.
சிரம் விரித்துச் சர்பமென மிளிரும்.
வனம் கடக்கும் பெருந்தீயின் வேகம்.
தீக்கடம்பையாம் அதன் பெயர்.
பற்றுபவன் நிலைப்பான்.
காலம் உளவரை
தென்கூடற்பதியாய்.”
ஏட்டில் தீக்கடம்பை மலர் பற்றி வரும் பாடல்.
“வலியாய வினைகள் நிகழ்ந்திருக்க.
காண் உறித்த இடமெங்கும் கருப்பை நீர்.
தழைகளுக்குக் கீழ் வேலேந்தி முரண்டோரின் சிரம்.
திண்ணிய ஆடவர் கல் சுமக்க.
மாதக்கரசிகளில் பலர் மன்னவன் சேவைக்கு.
தொடர்வினை கழியலுக்காய்,
நூற்றியெட்டு சூல்பெண்டிர் புனல் நீருக்கு.
ஆயினும் ஒரு தளிர். நிலமோடி மலை ஏறிற்று. தீக்கடம்பையாம் அவள் பெயர்.“
தீக்கடம்பை பற்றிய குறிப்பு இடம்பெற்ற பாணன் பாடிய பாடல்.
***
ந. ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com


