ஜெயன் கோபாலகிருஷ்ணன்
கடைசியாக அந்த நாள் வந்தேவிட்டது. ஜனவரி மாதம் கடைசியில் தனது வேலை விலகல் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அந்த நிறுவனத்தில் அவன் பார்க்கப்போகும் கடைசி வேலைநாளாக அவர்கள் மார்ச் கடைசியில் ஒரு நாளைச் சொன்னார்கள். அவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. கடைசி வேலைநாள் வரை இரண்டு மாதம் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்துகொள்ளலாம். மேலும் அவன் புதிதாக மென்பொருள் நிறுவனத்தில் சேராமல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்துள்ளதால் கல்லூரி திறக்கும் வரை மேலும் இரண்டு மாதம் ஓய்வு கிடைக்கும். விலகல் மடல் அனுப்பிய நாள் முதல் இன்று வரை இந்த இரண்டு மாதமும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தான். காலையில் மிகத் தாமதமாக வேலைக்கு வருவது மிக விரைவாகவே அறைக்கு சென்றுவிடுவது என்று இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மிக நிம்மதியான இரண்டு மாதங்கள். ஒருவேளை தான் வேலைக்குச் சேர்ந்ததின் உண்மையான பயன் என்பதை இந்த இரண்டு மாதங்களில் தான் மெய்யாக அனுபவிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான்.
இன்று கடைசிநாள் பணிமுடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபொழுது மனம் மிக மிக இலகுவாக உணர்ந்தது. சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்து செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். நெரிசலில் ஏறியபொழுது பொதுவாக கூட்டத்தைக் கண்டவுடன் இருக்கும் ஒருவித எரிச்சல் மனநிலை இன்று அவனிடம் இல்லை. வழக்கமாக அவன் இடம் பிடிக்கும் கணக்குகளுடன் தேர்ந்தெடுக்கும் இருக்கைகளுடன் ஒட்டியபடி வேறு எவரும் நுழைந்துவிடாதபடி கைகளை இருபுறமும் பிடித்து இருக்கையை மறைத்தவாறு நின்று கொள்வான். இன்று அந்த எண்ணம் எதுவுமின்றி கூட்டத்தின் நடுவில் நின்றுகொண்டான். பேருந்து நெரிசலில் நின்றவாறு தான் வேலையை விட்டு நின்றுவிடும் முடிவை எடுத்த அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை ஓட்டிப்பார்த்துக்கொண்டான்.
வேலையை விடவேண்டும் என்ற எண்ணம் பெரும் கண் உறுத்தல் நோய்க்கு முன் ஒரு நொடி கண்ணில் ஏற்பட்டு மறையும் சிறு உறுத்தல் போல மனதில் தோன்றிய நாள் அவனுக்குத் துல்லியமாக நினைவில் நின்றது. அன்று அவன் அணியைச் சார்ந்த அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட கணிணி நிரலில் வந்த சிக்கல் ஒன்றிற்கு தான் மட்டுமே தீர்வு காணவேண்டும் என்ற நிலையில் தனிமையில் விடப்பட்டான். சரியாக அவன் வீட்டிற்கு புறப்படுமுன் அவனது திரையில் ஸ்கைப் மின்னியது. அவனின் அமெரிக்க மேலாளர் தான் கூப்பிட்டார். அவனிடம் ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டு முடிந்தால் இன்றே முடித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். சரியென்று சொன்னவன் அந்தச் சிக்கலை விரித்து எழுதி அவர் அனுப்பிய மின்னஞ்சலைத் திறந்து வாசித்து சிக்கலை புரிந்துகொள்ள முயன்றான். வெகுநேரம் அந்த சிக்கலின் தீர்வைப்பற்றி யோசிக்காமல் மீண்டும் மீண்டும் அந்த சிக்கலைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். இரவு பத்துமணிக்கு எழுந்து சென்று ஒரு டீ குடித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். சில நேரங்களில் இந்தக் கணிணி நிரல் எழுதும் பொழுது வரும் சிக்கல்களுக்கு தேநீர்கடையில் தான் தீர்வு கிடைத்திருக்கிறதென்று ராஜேஷ் அடிக்கடி சொல்வான். அவனால் எப்படி அவ்வளவு எளிதாகவும் வேகமாகவும் நிரல்களை எழுத முடிகிறதென்பது எப்பொழுதும் இவனுக்கு புதிரானது. அவனிடம் அதைக் குறித்து கேட்கலாம் என்று சில தடவைகள் நினைத்திருக்கிறான், ஆனால் அது தன்னைப் பற்றி அவன் குறைத்து மதிப்பிடவைக்கும் என்பதனால் தவிர்த்துவிடுவான். நாளை காலையில் சீக்கிரமாக வந்தால் இந்த வேலையை முடித்துவிடமுடியுமா என்று கொஞ்ச நேரம் கணக்கு போட்டான். ஆனால் இந்த நிரலின் சிக்கல் எதனால் வருகிறதென்று புரியாமல் அப்படி காலையில் வந்து முடித்துவிடமுடியும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது என்பதால் இன்றிரவு அமர்ந்து வேலையை முடிக்கலாம் என்று நினைத்தான். கணிணித் திரையின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த தன் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவன் இருந்த தளத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகிவிட்டன. தொலைவில் ஒரே ஒருவன் தன் இருக்கையை பின்னால் சாய்த்தவாறு தன் கால்களை மற்றொரு இருக்கையில் வைத்துக்கொண்டு கைப்பேசியில் சத்தமாகச் சிரித்தப்படியே பேசிக்கொண்டிருந்தான். அவன் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் நிரலில் பிரச்சனை எதுவும் இல்லையாக இருக்கலாம், அதனால் தான் இவ்வாறு மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறான். இல்லை அந்த நிரலின் சிக்கல்களுக்கு அவனுக்கு தீர்வு தெரியுமாக இருக்கலாம். அல்லது இவை போன்ற பலநூறு சிக்கல்களை அடுத்தவர் துணையின்றி தீர்த்த தன்நம்பிக்கையின் விளைவாக இருக்கலாம். யோசித்தப்படியே படியில் இறங்கி கீழே வந்தபொழுது அடுத்த தளத்தின் ஓரத்தில் ஒரு பெண் நின்றபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். மேல் தளத்தில் இருந்தவனிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறாளோ. இருக்காது, நேராகவே சென்று பேசிக்கொள்ளலாமே, இவள் வேறு யாரோடோ பேசிக்கொண்டிருக்கிறாள். மேலே இருப்பவன் இவள் காதலனாக இருப்பானா. தரைத் தளத்தை வந்தடைந்துவிட்டான். ராஜேஷ் ஒரு நாள் சொன்னது நினைவிற்கு வந்தது. ஒரு நிரலை முடிப்பதில் சிக்கல் வந்தால் நாம் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று அதற்கான தீர்வை தேநீர் கடையில் தேடும் பொழுது மிக மிக முக்கியமானது நாம் தேநீர் கடையை நோக்கி நடக்கும் அந்த சில நிமிடங்கள். அப்பொழுது தான் நாம் அந்தச் சிக்கலை அசை போடவேண்டும். தேநீர் கடையை சென்றடைந்தவுடன் நாம் இயல்பாக இருக்கவேண்டும்.
அதைப்பற்றி சிந்திக்ககூடாது. ஆனால் தீர்வு சட்டென்று மேலெழுந்துவரும். ஆகவே தேநீர்க் கடையை நோக்கிய நடை மிக மிக முக்கியமானது. அவன் மனதை ஒரு நிலைப்படுத்தி நிரலின் சிக்கல் குறித்து சிந்திக்கத்தொடங்கினான். ஆனால் ஏற்கனவே அவன் முயன்று பார்த்துத் தோற்றுவிட்ட வழிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது. புதியதாக எதுவும் தோன்றவில்லை. சற்றே கூர்மையாக நோக்கினால் இந்த நிரலின் சிக்கல்களுக்கு அவனுக்கு தோன்றும் தீர்வுகள் அனைத்தும் எவ்வகையிலும் ஒரு புத்தாக்கம் கொண்டது அல்ல என்று கவனித்தான். அவற்றை எந்த ஒரு சாதாரண மனிதனும் சிந்திக்கமுடியும். ஆனால் இந்த நிரலின் சிக்கல் அவ்வாறு நேரடியானத் தீர்வுகள் கொண்டதல்ல என்று அவன் முன்பே அறிந்துவிட்டான். பழக்கத்தினால் அவன் இந்த வேலை சார்ந்த பலவற்றையும் படித்துவிட்டாலும் சட்டென்று எழுந்துவந்துவிடும் இதுபோன்ற சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது இன்று வரை அவனுக்கு கைக்கொள்ளவில்லை. போன முறை இத்தகைய ஒரு சிக்கல் வந்து அவன் அதைத் தீர்க்க முடியாமல் திணறியபொழுது அவன் அணித்தலைவரும், அணி மேலாளரும் இவனிடம் வேலை முடிந்துவிட்டதா எனக் கேட்டுவிட்டு பக்கத்து அறைக்குள் சென்று தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். தனது ஓரக்கண்ணால் அதை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. ராஜேஷ் வேலையென்று சொன்னபிறகும் அவனிடம் கெஞ்சி அழைத்து அந்த நிரலின் சிக்கலைத்தீர்த்தான். எப்படியோ சமாளித்துவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக தான் இத்தகைய சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறுவதை அணியில் உள்ள எல்லாரும் உணர்ந்துவிட்டதை அறிந்து மனம் வேதனைகொள்ளும். அவ்வாறு அவன் சிறிய அவமதிப்பை உணரும் பொழுதெல்லாம் வீட்டிற்கு சென்று அன்று இரவு முழுவதும் படித்து அவர்களை விட எல்லாம் மிகத்திறமையானவனாக மாறிவிடுவதைப் போன்று உறுதியெடுத்துக்கொள்வான். ஆனால் வீட்டிற்கு சென்று பார்த்தால் அந்த தொழில்நுட்பத்தை எத்தனைப் படித்தாலும் அதன் அடிப்படையைச் சரியாக புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதை உணர்ந்து அச்சம் கொள்வான்.
அன்று தேநீர்கடையில் அவனுக்கு அந்த நிரலின் சிக்கலுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ராஜேஷிடம் தான் இம்முறையும் போகவேண்டியதாயிற்று. அடுத்தநாள் காலையில் சற்று முன்னதாகவே வந்து அவன்தான் அந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொடுத்தான். அந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டு ராஜேஷ் சொன்னான். “நீ லாஜிக் யோசிக்கும் போது அது சாதாரண வாழ்க்கையில நடப்பதைப்போல கற்பனை பண்ணிக்க அப்பதான் ஈஸியா அது நமக்குப் புரியும்” என்றான். அவன் அதை நன்றாக மனதிற்குள் பதியவைத்துக்கொண்டான். ராஜேஷ் அப்படித்தான் கற்பனை செய்கிறானா என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை ஆனால் அவன் இந்தச் சிக்கல்களை ஒருவித வழிபாட்டு மனநிலையுடன் நோக்குவதாக இவனுக்குத் தோணுவதுண்டு. அவர்கள் அணியில் எல்லோரும் இயற்கை காட்சிப் படங்களைக் கணிணியின் திரையில் வைத்திருப்பார்கள். அவன் மட்டும் ஏதேதோ மனிதர்களின் படங்களை வைத்திருப்பான். அந்த மனிதர்கள் அடிக்கடி மாறிக்கொண்டிருப்பார்கள். அவன் சில நேரங்களில் அந்த மனிதர்களை யாரென்று ராஜேஷிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுண்டு. ஒரு முறை கண்களில் கருவிழிகள் எதுவுமற்ற நீர் பாய்ந்த மண்ணிண் தடம்போல நெற்றியில் முடி கிடக்கும் ஆணின் பளிங்குச் சிலையொன்றின் படத்தைத் திரையில் வைத்திருந்தான். “யாரது” என்று கேட்டதற்கு, “இவரைத் தெரியாதா இவர் தான் அரிஸ்டாட்டில்” என்றான் ராஜேஷ். இன்னொரு நாள் வழித்துவாரப்பட்ட தலையும் அடர்த்தியாக முறுக்கப்பட்ட மீசையும் முகத்தை மறைத்த தாடியும் கொண்ட ஒருவரின் புகைப்படத்தை திரையில் வைத்திருந்தான். அவர் யாரென்று இவன் கேட்டதற்கு “இவரைத்தெரியாதா இவர்தான் ஃபரெகே” என்றான் ராஜேஷ். “என்னஜி இவரத்தெரியாதாணு கேக்குறீங்க, என்னம்மோ இவருதான் உசிலம்பட்டில இருக்குற அப்பத்தா புருஷன்ங்குற மாதிரி” என்று சிரித்தபடியே விலகிவிட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வேலை செய்த மென்பொருளில் புதிதாக ஒரு மாற்றம் கேட்டிருந்தார்கள். அதுவரை அந்த மென்பொருளின் பயனாளர்கள் எவருக்கும் மென்பொருளுக்குள் தனியுரிமை சார்ந்த வேறுபாடுகள் எதுவுமில்லை. ஆனால் இப்பொழுது அதைக்கொண்டு வந்து சிலருக்கு மட்டும் மென்பொருளில் சில பக்கங்கள் தெரியுமாறு மாற்றவேண்டும் என்றார்கள். ராஜேஷ் நீண்ட விடுமுறையில் சென்றதனால் அவன் மேலாளரும் அணித்தலைவரும் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு இவனிடம் அந்த மாற்றத்தை அமலாக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவன் மிகுந்த உற்சாகமாக உணர்ந்தான். தன் திறமையைக் காட்டத் தனக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பாக அதைக் கருதிக்கொண்டான். அன்றிரவு வீட்டிற்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அந்த மாற்ற வேண்டுகைக் கோப்பை படித்தான். அம்மாற்றம் எளிதாக இருந்தது போலத்தான் இருந்தது. அதை ஏற்கனவே இருக்கும் நிரலில் எங்கே பொருத்துவது என்று நான்கைந்து முறை பார்த்துக்கொண்டான். பின்பு அந்நிரலில் அம்மாற்றத்தை நிகழ்த்த தேவையான ஏரணத்தைப் பற்றி சிந்திக்கத்தொடங்கினான். மாற்ற வேண்டுகை கோப்பு இவ்வாறு இருந்தது.
1. “பயனராகிய நான் அமெரிக்கர் என்றால்”
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது
என்னால் மென்பொருளின் எல்லாப்பக்கங்களையும் பார்க்கமுடியவேண்டும்”
2. “பயனராகிய நான் அமெரிக்கர், ஆனால் நான் தற்பொழுது வேறு நாட்டில் வசிக்கிறேனென்றால் “
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது
என்னால் மென்பொருளின் அமெரிக்கத் தொடர்பான பக்கங்களைப் பார்க்க இயலாது”
3. “பயனராகிய நான் அமெரிக்கர் ஆனால் நான் தற்பொழுது வேறு நாட்டில் வசிக்கிறேனென்றால் , அந்த நாடு இங்கிலாந்து என்றால் “
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது என்னால் மென்பொருளின் எல்லாப்பக்கங்களையும் பார்க்கமுடியவேண்டும்”
4. “பயனராகிய நான் அமெரிக்கர் அல்ல என்றால்”
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது
அமெரிக்கத் தொடர்பான பக்கங்களைப் பார்க்க இயலாது”
5. “பயனராகிய நான் அமெரிக்கர் அல்ல ஆனால் நான் ஒரு இங்கிலாந்து நாட்டவரென்றால்”
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது அமெரிக்கப் பக்கங்களைப் பார்க்க இயலாது, ஆனால் இங்கிலாந்து பக்கங்களைப் பார்க்கலாம்”.
6. “பயனராகிய நான் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவனென்றால்”
“மென்பொருளில் நான் நுழையும் பொழுது
அமெரிக்கத் தொடர்பான பக்கங்களையும் , ஐரோப்பா தொடர்பான இரண்டு பக்கங்களையும் பார்க்க இயலாது”.
என்று சென்றுகொண்டிருந்தது அந்த வேண்டுகைக் கோப்பு.
பலமுறை அதைப் படித்தப்பிறகு அவன் கணிணி அருகே ஒரு மின்விசிறியைக்கொண்டு வந்து வைத்துவிட்டு, மேசை இழுவையைத்திறந்து அங்கிருந்த பாயையும் தலையணையையும் எடுத்துப் தரையில் போட்டுப் படுத்துக்கொண்டான். அந்த மாற்ற வேண்டுகைக் கோப்பின் கேட்புகளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக்கொண்டான். மூளைச் சோர்வடைந்து எப்பொழுதோ உறங்கிப்போனான். காலை ஆறு மணிக்கு விழித்த பொழுது கண்கள் கரித்தன. எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். மனம் மீண்டும் அந்த கோப்பின் சொற்களைச் சுற்றி சுற்றி வந்தது. அவன் அதை நிரலாக்குவதைப் பற்றி மீண்டும் சிந்திக்கத்தொடங்கினான். பேருந்தில் ஏறி உட்கார்ந்தவன் கிண்டிக்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு நடுப்பேருந்தில் ஓர் இருக்கையைப் பார்த்து அமர்ந்து கொண்டான். கையிலிருந்த ஓர் தாளை எடுத்து தொடையில் வைத்துக்கொண்டு ஒரு பேனாவை எடுத்து அதில் கோப்பிலிருந்தவைகளைக் கிறுக்கத்தொடங்கினான். பகுதி நிரலாகவும் பகுதி பொது மொழியிலுமாக இருந்தது அந்த கிறுக்கல். ஒவ்வொன்றாக எழுதி வரும்பொழுது ஏதோவொன்று விடுபட்டிருந்தது. மொத்தமாக சென்று அனைத்தையும் வெட்டினான். மீண்டும் முதலிலிருந்தே எழுதினான். மீண்டும் வெட்டினான். மீண்டும் எழுதினான். கிண்டி வருவதற்குள் தாள் நிரம்பியிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அறையை நோக்கி நடந்தான். மீண்டும் ஏதோ மூளையில் தட்ட கைகளில் மடித்திருந்த தாளை எடுத்துப்பார்த்தான். அந்தத் தாளைப் பார்த்தவுடன் மூளை மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்து சோர்ந்துவிட்டது. அறையை அடைந்தபொழுது கார்த்திக் மட்டும் முழித்திருக்க மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். கார்த்திக் “ஏண்டா ராத்திரி வரல” என்று கேட்டான். “வேலைடா, அதான் ஆபிஸ்லேயே படுத்திட்டேன்” என்று சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்றான்.
காலை ஒன்பது மணிக்கு கிண்டி பேருந்து நிலையம் வந்து செம்மஞ்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். இரவு சரியாக உறங்காததன் கிறக்கம் கண்களை சோர்வடையச் செய்திருந்தது. பேருந்து கிண்டி மேம்பாலம் ஏறும்முன் உறங்கிவிட்டான். பேருந்தின் குலுக்கத்தில் சட்டென விழித்துக்கொண்டவன் அவன் இருக்கைக் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் நிற்பதைப்பார்த்து சற்று கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்தவாறு வாயில் வழிந்த கோழாயைத் துடைத்துக்கொண்டான். அவள் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள் என்கிற நினைப்பே உறக்கத்தைக் கலைத்திருந்தது. வேண்டுமென்றே உறங்குவதைப்போல் நடித்துக்கொண்டு அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் அவ்வப்பொழுது அவனைப் பார்ப்பது போலத்தான் தெரிந்தது. அவள் சோழிங்கநல்லூருக்கு முன்பே ஒக்கியம்பேட்டையில் இறங்கிக்கொண்டாள். இவனும் காரணமின்றி ஒக்கியம்பேட்டையில் இறங்கி அவள் சாலையைக் கடந்து செல்வதைப் பார்த்துவிட்டு அலுவலகம் இருக்கும் சோழிங்கநல்லூர் நோக்கி நடக்கத்தொடங்கினான். அவன் கணிணியின் முன் அமர்ந்தபொழுது அருகே இருந்தவன் “யோ என்னயா சம்பந்தமில்லாம ஒக்கியம்பேட்டையில இறங்கின” என்று கேட்டான். கூச்சத்தோடு ஒரு சிரிப்பை அவனுக்கு அளித்துவிட்டு கணிணியைத்திறந்து அங்கே ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டிருந்த கோப்பை மீண்டும் பார்த்தான். அந்த வரிகளை மனதில் ஓட்டிக்கொண்டான். ஒவ்வொன்றாக மனதில் அவ்வரிகளை அடுக்கிக்கொண்டு வரும்பொழுது ஏதோ ஓரிடத்தில் தடுமாறியது. அருகிலிருந்த ஒரு தாளில் ஆங்கிலமும் தமிழும் குறியீடுகளும் கலந்த ஒரு மொழியில் அதை எழுத முயற்சித்தான். எல்லாம் சரியாக வருவது போல தோன்றியது. கணிணிக்குத் தன் பார்வையைத் திருப்பி கணிணி மொழியில் இவன் தாளில் எழுதியவற்றை மாற்ற முயற்சித்தான். ஏதோ ஓரிடத்தில் அது வந்து தடைபட்டு நின்றுகொண்டது. தலைமுடிக்குள் கைகளைவிட்டு முடியை கொத்தாகப்பிடித்தபடி கை மூட்டை ஊன்றி கண்களை மூடியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தான்.
தலையைக் குலுக்கிவிட்டு அந்த கோப்பையும் அவன் எழுதிய தாளையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டுக்கொண்டான். அவற்றை அவன் சரியாகவே செய்திருந்ததாகப்பட்டது. ஆனால் அது நிரலில் எங்கோ விடுபட்டுக்கொண்டிருந்தது. அவனுக்கு ராஜேஷ் கூறியது நினைவிற்கு வர அந்த கோப்பிலிருக்கும் சொற்றொடர்களை தன் மனதில் கற்பனையில் நிகழ்த்திப்பார்க்க முயன்றான். ஒரு அமெரிக்கனைக் கற்பனை செய்துகொண்டான். இயல்பாக அது அவன் அணியின் அமெரிக்கத் தலைவரின் ஸ்கைப் புகைப்படத்திலிருக்கும் முகத்துடன் இணைந்துகொண்டது. அந்த முகம் மென்பொருளில் நுழைவதையும் அந்த முகத்திற்கான கை ஒன்று கணிணி மௌஸை சுடுக்குவதையும் மென்பொருளில் மேய்வதையும் கற்பனை செய்து, அதற்கு இருக்கும் தனியுரிமைகளைக் கற்பனை செய்தான். அவற்றை மூளையின் அவனறியா ஏதோ ஒரு பகுதியில் தேக்கிக்கொண்டான். கோப்பிலிருந்த அடுத்த வரியைப் படித்தான். அந்த முகம் இப்பொழுது வேறு நாட்டிற்கு பயணம் செய்வதாகவும் அது சென்று இறங்கிவிட்டதாகவும் அந்த நாடு ஜெர்மனியென்றும் கற்பனை செய்தான். இப்பொழுது அந்த முகம் மென்பொருளில் மேய்வதையும் அதற்கான தனியுரிமைகளையும் மீண்டும் தேக்கிகொண்டு கோப்பின் அடுத்தப்பகுதிக்கு சென்றான். இப்பொழுது அந்த முகம் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றது, அதன் தனியுரிமைகள் மனதிற்குள் பட்டியலிடப்பட்டு தேக்கப்பட்டது. அவன் கோப்பைப் படித்தவாறு அந்த முகத்தை அங்கும் இங்குமாக அலைத்துக்கொண்டிருந்தான். எங்கோ ஒரு நொடியில் மூளையின் ஒரு பகுதியில் அவன் அறியாமல் ஒரு சிறு சலிப்பு மேலிட அந்த முகம் இப்பொழுது எங்கிருக்கிறதென்பது குழம்பிவிட்டது. மீண்டும் அமெரிக்காவிலிருந்து அந்த முகம் தொடங்கியது. அவன் மூளை சலிப்புற்று வேறு வழிகளைத் தேடியது. அவன் இப்பொழுது தன் நண்பனொருவனை அமெரிக்கனாகவும் சென்னையை அமெரிக்காவாகவும் மதுரையை ஜெர்மனியாவும் திருநெல்வேலியை இங்கிலாந்தாகவும் கற்பனை செய்துகொள்ள அந்த நண்பன் கோப்பிலிருந்த சொற்றொடர்களின்படி பயணித்தான். பயணம் நீண்டுகொண்டே போக எங்கோ ஒரு சலிப்பு தட்ட நண்பன் இப்பொழுது திசை தெரியாத ஊரில் சென்று நின்றான். அவன் முற்றிலும் சோர்ந்துவிட்டான்.
ஒரு வாரம் நீடித்த இந்தப் பணியில் கடைசிவரை அந்த அமெரிக்கனோ அல்லது அந்த நண்பனோ அந்தக் கோப்பிலிருந்த கேட்புகளை முழுவதுமாக கேட்டுக்கொண்டு அந்த வழியில் சரியாகப் பயணிக்கவில்லை. அவன் அணித்தலைவர் ஏன் பிந்துகிறதென்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தார். இவன் மாற்றங்களைச் செய்து கொடுக்க கொடுக்க ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து அது அணித்தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வாரத்தின் இறுதிநாளில் வீட்டிற்கு செல்லும் முன் அணித்தலைவர் வந்து நீங்கள் இந்த வேலையைச் செய்யவேண்டாம் திங்கட்கிழமை காலை ராஜேஷ் வந்து பார்த்துக்கொள்வார் என்று சொன்னார். அவன் கெஞ்சும் குரலில் சனி ஞாயிறு முயற்சி செய்கிறேனென்றும் அப்படி முடியவில்லையென்றால் ராஜேஷ் செய்யட்டும் என்றான். சரி உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அவன் அந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களும் அந்த தாளுடனும் அந்த முகங்களுடனும் போராடிக்கொண்டிருந்தான்.
திங்கட்கிழமை ராஜேஷ் வந்தவுடன் அந்த வேலை ராஜேஷுக்கு கொடுக்கப்பட்டது. அவன் இரண்டு நாட்களில் அதை முடித்து அனுப்பிவிட்டான். இவன் சென்று ராஜேஷிடம் “நீ ரொம்ப பிரில்லியண்டுடா” என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டு வந்தான். இது நடந்து சில நாட்களில் அவர்களின் நிறுவனம் வேறு ஒரு புதிய கட்டடத்திற்கு மாறியது. புதிய கட்டிடத்தில் ஒவ்வொருவருக்குமான இடம் அதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு அணியினரால் முடிவு செய்யப்பட்டது. அவன் சென்று அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்த்தபொழுது மகிழ்ச்சியாக உணர்ந்தான். ஓ. எம். ஆர் சாலை தெரியும் விதமாக கண்ணாடி சுவற்றின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது அவனது இடம். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. ராஜேஷ் அன்று வந்தவுடன் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் பிடிக்கவில்லை என்று அணி மேலாளரிடம் சொன்னான். அவர் உடனே அவனிடம் வந்து பல் இளித்துவிட்டு வேறு இடம் தருவதாகச் சொன்னார். அவன் மறுப்பெதுவும் சொல்லவில்லை. உடனே மாறிக்கொண்டான். ஏனோ ராஜேஷ் அன்று மாலை அவனிடம் வந்து அந்த கண்ணாடி அருகில் சாலையைப் பார்த்தவாறு தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் எத்தனை மோசமானதென்றும் இவனுக்கு அந்தத் தளத்தின் நடுவில் ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் எத்தனை வசதியானதென்றும், மேலும் இவனின் இடத்திற்குப் பக்கத்தில் அழகானப் பெண்கள் உள்ளனரென்றும் சொன்னபொழுது எரிச்சல் வந்தது. ஆனால் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டான்.
அதற்கு அடுத்தநாளில் எல்லாரும் சேர்ந்து சினிமாவிற்கு போகலாமென்று விவேக் சொன்னான். மாலை ஐந்து மணிக்கு அவரவர் வேலையை முடித்தவிட்டு தரைத் தளத்திற்கு வந்து கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். விவேக் தனது காரைக் கொண்டு வந்து முன்னால் நிறுத்த மானஸின் கார் இரண்டாவதாக வந்து நின்றது. எல்லோரும் ஏறிக்கொள்ள இவனுக்கு மட்டும் இடமில்லை. விவேக் இவனைப் பார்த்து “உங்கக்கிட்ட டூவீலர் இல்லியா” என்று கேட்டான். “நான் கொஞ்சம் இதுலயே நெருங்கி ஏறிக்கிறேன் , சமாளிச்சக்கலாம்டா” என்றான் இவன். “இல்லை எல்லாரும் ஏன் கஷ்டப்படவேண்டும்” என்று கேட்டான் விவேக். அவன் சரியென்று விலகிவிட்டு தனியாக ஒரு ஆட்டோ பிடித்து திரையரங்கிற்கு சென்றான். திரையரங்கில் நின்ற விவேக் தாங்கள் எப்படி காரில் நெருக்கிக்கொண்டு வந்தோமென்றும் அவன் எப்படி ஆட்டோவில் தனியாக ராஜா போன்று அமர்ந்து வந்தானென்றும் பேசிக்கொண்டிருந்தான். இந்நிகழ்வு நடந்த அடுத்தநாள் தான் வேலையை விட்டு விடுவதாக அணித்தலைவரிடம் தெரிவித்தான் அவன். அதற்கான மனநிலை எப்பொழுதோ அவனிடம் உருவாகிவிட்டது. எனவேதான் அவன் வேலையை விடும் நாளிற்கு முந்தைய நாள் எவ்வித தத்தளிப்பிற்கும் ஆளாகாமல் வழக்கமாகச் செய்யும் செயல்களைச் செய்தான்.
இன்று அவனுக்கு நிகழ்ந்த வழியனுப்பு விழாவில் ராஜேஷ் பங்கேற்காமல் நண்பகலிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டான். அவனின் மற்ற அணி உறுப்பினர்களும் வேறு அணித்தோளர்களும் சேர்ந்து பரிசாக ஒரு ரூபிக் கியூப் கொடுத்து வழியனுப்பினார்கள். அவன் பேருந்தில் ஏறும் முன்பே பேருந்து நிறுத்தத்தின் பின்புறமுள்ள கடக்காலில் ஓடிய கறுத்த சாக்கடை நீரினுள் அதை வீசிவிட்டான். பேருந்து கந்தன்சாவடி நிறுத்தத்தில் நின்றபொழுது ராஜேஷ் பேருந்திற்குள் ஏறுவதைப் பார்த்தான். பேருந்து அங்கிருந்து புறப்பட ராஜேஷ் நடத்துனரிடம் கிண்டிக்கு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே நகர்ந்து வந்தான். அவனைப் பார்த்தவுடன் “ஜீ, நீங்க எங்க இங்க, ஸாரி ஜீ, நான் ஒரு வேலயா இங்க வரவேண்டியது இருந்திச்சு, அதான் பேர்வெல்லுக்கு வரமுடியல” என்றான். “பரவாயில்லை” என்று சொல்லிக்கொண்டவன், ராஜேஷ் நடுப்பேருந்திலிருந்து நகர்ந்து ஒரு இருக்கையின் கைப்பிடியைப் பிடிக்க முயல்வதைப் பார்த்தான். அவன் தன்னை கவனிப்பதைப் பார்த்த ராஜேஷ் கந்தன்சாவடியில் சாலை வேலைக்காக தோண்டிய குழியில் விழுந்து தனக்கு முட்டியில் அடிபட்டுவிட்டதென்றும் கிண்டியில் இறங்கி மருத்துவமனை செல்லவேண்டுமென்றும் கூறினான். ராஜேஷ் அருகில் சென்றவன் இன்னொருபக்கம் அந்த இருக்கையை அணைத்தபடி நின்றுகொண்டான். பேருந்து தரமணி செல்லும் திருப்பத்தை அடைந்தவுடன் அந்த இருக்கையில் இருந்த ஒருவர் இறங்குவதற்காக எழும்பினார். ராஜேஷ் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக தனது கால்களை இருக்கையினுள் விட்டான். அங்கே அமைதியாக இது வரையிலும் நின்று கொண்டிருந்த வயதானக் கிழவர் ஒருவர் உள்ளே புகுந்து அவன் இடத்தைப்பிடித்துக்கொண்டார். ராஜேஷ் திகைப்போடு அந்தக் கிழவரைப் பார்த்துவிட்டு அவனைப்பார்த்தான். எதோவொன்று மூளை நரம்புகளில் திரவம் ஒன்றைப் பாய்ச்ச அந்தக் கிழவரைப் பார்த்து “எங்களைப் பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா” என்றான் அவன். “நான் அப்படி சொல்லலியே” என்றார் கிழவர். “நாங்கள் எங்கிருந்து நிற்கிறோம் நீ கந்தன்சாவடியில் ஏறி இந்த இடத்தைப் பிடிச்சு உட்கார்ந்து வரப்பாக்குற” என்றான் கிழவரிடம். “சண்டையை வளர்க்கவேண்டாம்” என்று ராஜேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிழவரின் மண்டையில் தட்டினான் அவன். ராஜேஷ் பயந்து வேண்டாம் என்று மீண்டும் கெஞ்சினான். “என் மேலேயே கை வைக்கிறியா” என்றவாறு எழுந்த அவனிடம் பேசவந்தக் கிழவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான். கிழவர் தடுமாறி பேருந்தின் நடுவில் நின்ற ஒருவன் மீது சாய்ந்தார். ராஜேஷ் இருக்கையில் அமராமல் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்து “நீ உட்காரு எவன் கேக்குறானு பாப்போம்” என்றான். கிழவர் சென்று விழுந்த ஆள் அவனைப்பார்த்து “யாண்டா வயசானவர அடிச்ச” என்றவாறு அவனை நெருங்க “அப்படீண்ணா சின்ன வயசுக்காரன் ஒன்ன அடிக்குறேன் என்று” அவன் மூஞ்சில் குத்தினான்.
ராஜேஷ் பதறியபடி இருக்கையிலிருந்து எழுந்து “ஜீ, வேணாம் ஜீ , நம்ம இறங்கிரலாம் ஜீ” என்றவாறு எழுந்தான். அவன் தோளைப்பற்றி இருக்கையில் அமர்த்தியவனின் முதுகில் ஒருவன் குத்தினான். அந்த ஆளுக்கும் கிழவருக்கும் அவன் ஆளுக்கொரு அடிக் கொடுத்தான். கூச்சல் கேட்டு பேருந்தை தரமணி பறக்கும் ரயில் பாலத்தினடியில் ஓரமாக ஒதுக்கினார் ஓட்டுநர். “எப்பா டிரைவர் வண்டிய போலிஸ் ஸ்டேஷனுக்கு வுடுப்பா” என்று கத்திய ஒருவனைப் பார்த்து “ஒம்மாள நீயும் போலிஸ் ஸ்டேஷன்லதான் ராத்திரி கெடக்கணும் முடிஞ்சா அனுப்புடா” என்றான் அவன். “ஒரு எடத்துக்கு ஏம்பா இப்படி அடிச்சிகிறீங்கோ, வோணாம்ணா வுட்டுடுங்கோ நான் வந்து ஒக்காந்துக்கிறேன்”
என்றவாறு சிரித்தார் அவர். “எப்பா எங்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு சிங்கிள் அடிக்கணும், இந்த ட்ராபிக்கில எட்டு சிங்கிள் முடிக்க நைட் பத்து மணி ஆவுது , இதுல நீங்க வேற ஏம்பா வந்து சண்டை புடிச்சிக்கிணு தாலியறுக்குறீங்க, வேணாம்ணா உடுங்க நான் அங்க உட்காந்து டிக்கெட் கிழிக்கிறேன்” என்றார் நடத்துநர்.
அவன் திரும்பி நடுத்துனரை முறைத்துவிட்டு “நீ கம்முணு போ, உனக்குதான் ஒரு ஸீற்று தந்திருக்குல, அதுல போயி உட்காந்து கிழிசிணு கிட” என்றான். சொல்லிவிட்டு திரும்புவதற்குள் திடீரெனத் துள்ளியெழுந்த ராஜேஷை அவன் இருக்கை நோக்கி தள்ளவும் அவன் “ஜீ, ஓணாண் ஜ” என்று கத்தினான். பேருந்த நின்ற இடத்தின் அருகிலிருந்த மரத்திலிருந்து தாவியிருந்த ஓணானொன்று அந்த இருக்கையில் தன் தலையைத் தூக்கியவாறு அமர்ந்திருந்தது. அனைவரும் இருக்கையை விட்டு விலகி நின்றனர். அது எவ்வித சலனமுமற்று இருக்கையின் மேலேயே அமர்ந்திருந்தது. அந்த இருக்கையின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவன் இங்கு நடப்பவற்றுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது போல இருக்கையின் கம்பின் மீது தலையைச் சாயவிட்டு உறங்கிக்கொண்டிருந்தான். ஓணான் அங்கேயே இருந்தது. லேசாக தலையைத் திருப்பியது. பின் உடலை ஜன்னல் பக்கம் திருப்பியது. அவன் சட்டென்று அதன் வாலைப்பிடித்து தூக்கி வெளியே வீசினான். அவன் வீசிய ஓணாண் நடுசாலையில் சென்று விழுந்து அதன் மீது ஒரு வாகனம் ஏறிவிட முற்றிலும் சிதைந்தது. அவன் மீண்டும் ராஜேஷை அந்த இருக்கையில் பிடித்து அமர்த்தினான். அங்கிருந்த நடுவயது சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி “எப்பா இப்பிடி சண்டைபுடிக்கிறதுக்கு பதிலா அந்த ஸீற்ற லேடீஸுக்கு வுட்டு கொடுக்கலாம்ல” என்றாள். “இவளுக வேற ஆம்பளைங்க எப்பம் அடி வைப்பானுங்க நம்ம மடி வைக்கலாம்ணு பாப்பாளுக” என்றான் அவளைப்பார்த்து. அவள் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே “சண்டைய முடிச்சி வைக்கலாம்ணு பாத்தா இந்த பையன்பாரு எப்பா நம்மளயே திட்டுது” என்றாள். ஓட்டுநர் இப்பொழுது இறங்கி அவர்கள் அருகில் வந்திருந்தார். வந்தவர் அவனைப்பார்த்து “என்னதாம்ப்பா பிராபளம் உங்களுக்கு” என்றார். தன் தரப்பை சொல்ல முயற்சித்த கிழவரை பார்த்து முறைத்துவிட்டு அவன் தரப்பைச் சொன்னான் அவன்.
“நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுப்பா எப்பா, பஸ்ஸுல க்யூ ஸிஸ்டம் கெடயாது, வரவங்க அவங்க தெறமை போல இடம் புடிச்சிக்கணும் , அதுவும் இல்லாது அவரு வேற வயசானவரு , நீங்கதான் மொதல ஸீற்று கம்பிய காரப்பாக்கத்திலேந்து புடிச்சிணு வந்தீங்கணு உங்களுக்குதான் ஸீற்றுணு சொல்றதுல்ல எதுனா லாஜுக் இருக்குதா” என்று நீட்டி மெதுவாகச் சொன்னார் ஓட்டுநர்.
“வந்துட்டாண்டா லாஜிக் மயிர தூக்கிகிணு” என்று ஓட்டுநரின் மூஞ்சில் ஓங்கிக் குத்தினான் அவன்.
“ஒம்மாள, அடிங்கடா அந்த பாட” என்ற குரலொன்று ஒலித்தவாறே அனைத்து பக்கமிருந்தும் அவனுக்கு அடி விழ அவனைச் சுற்றியிருந்த உடல்களுக்கு நடுவில் தெரிந்த ஒரு சிறிய இடைவெளியில் ராஜேஷ் பேருந்துச் சாளரம் வழியாகக் குதித்து ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான் அவன்.
***
ஜெயன் கோபாலகிருஷ்ணன்: குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர் தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார். யாவரும் வெளியீடாக ‘நின்றெரியும் சுடர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com