ராம்
“வா அஷோக்கு… எப்டி இருக்க?”
“உயிரோட இருக்கேன்”
“உயிரோட… ஏண்டா? அவ்ளோ ப்ரச்சனையா?”
“ப்ரச்சனலாம் ஒண்ணுமில்ல… நாம இருக்கறதுக்கு ரெண்டே ரெண்டு பைனரி ஸ்டேட்ஸ் தான் இருக்கு. மத்ததெல்லாம் நாமளே உருவாக்கிக்கறதுதான, அதான்…”
“ . . . “
*
“ணா… காஃப் ஸிரப் ஒரு பாட்டில்”
“வா தம்பி… ரொம்ப நாளாச்சு பாத்து! எப்போ வந்த ஊருக்கு?”
“போன வாரம்”
“லீவா? அப்பா எப்டி இருக்காரு?”
“அவரு சாவுக்குதான் வந்திருக்கேண்ணா”
“ . . . “
*
“ஏம்ப்பா அசோக்கு… அப்பா போயி ஒரு வருசம் ஆச்சு… அம்மா இங்க தனியா இருக்கு… நீயும் இங்கயே ஒரு வேலயப் பாத்துக்கிட்டு கலியாணம் பண்ணி செட்டில் ஆவலாம்ல?”
“ம்… பண்ணலாம் அத்த…”
“எங்க… இதயேதான் சொல்லிட்டு இருக்க எப்ப கேட்டாலும்”
“பண்ணிறலாம் அத்த”
“அம்மாவ இங்க தனியா வுட்டுட்டு நீ உம்பாட்டுக்கு வெளியூர்ல இருக்கறது அவ்ளோ நல்லால்லப்பா… அவ்ளோதான் சொல்ல முடியும்”
“அம்மாக்கு தனியா இருக்க முடியலன்னா அவங்க எங்கூட வந்து இருக்கறது ஈஸியா? இல்ல, அம்மாக்கு தொணையா நான் இங்க வந்து, புதுசா ஒரு வேல பாத்து, இன்ட்ரஸ்ட்டே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு, எங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ப்ரச்சனன்னு அம்மா நெனச்சுக்கிட்டு அந்தப் பொண்ணுகூட எனக்கு ப்ரைவஸி வேணும்னு அவங்க இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி தனியா இருக்கறது ஈஸியா?”
“ . . . “
*
“ஏண்டா வெண்ண… இருட்டுல ஒக்காந்து வேல பண்ணிட்டு இருக்க! லைட்டு போட்டுக்க வேண்டியதுதான”
“ம்… தோணல”
“ஏன் தோணப் போகுது? இப்டியே வொர்க் பண்ணிட்டு இரு… இன்னும் ரெண்டு வருஷத்துல கண்ணு தெரியாமப் போயிரும்… அப்ப தோணும்”
“ஆவுதான்னு பாப்போம்… இத்தன வருஷமா கண்ணு தெரிஞ்சு கிளிச்சத விட அது கொஞ்சமாவது இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்ல? ஏன், கண்ணு தெரியற தொண்ணூறு பர்செண்ட்ல இருக்கறத விட கண்ணு தெரியாத பத்து பர்செண்ட்ல, அதுலயும் பார்வை இருந்து அப்றம் கண்ணு தெரியாமப் போன இன்னும் கம்மியான பாப்புலேஷன்ல ஒருத்தனா இருந்தா நல்லாதான இருக்கும்?”
“நீ இருட்டுலயே கெடந்து சாவு”
*
“ஹாய் அஷோக்”
“ஹேய் ரம்யா”
“செம பிஸியா வொர்க் பண்ணிட்டு இருக்க போல! ஒரு சின்ன பிரேக் எடுக்கலாம்ல?”
“யா… வில் டூ”
“அப்டி என்ன ஸ்க்ரீன்லேந்து கண்ண எடுக்க முடியாத அளவுக்கு இம்ப்பார்ட்டண்ட் வொர்க்?”
“நெஜமாவே இன்ட்ரஸ்ட்டோட கேக்கறேன்னா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். பட் சம்பந்தமே இல்லாத ப்ராஜெக்ட்ல இருக்கற வொர்க்க எப்டி புரிஞ்சுக்குவேனு எனக்கு தெரியல”
“ஷப்பா! ஒரு காஃபி சாப்பிடலாமானு கேக்கதான் வந்தேம்ப்பா?”
“ஸீ, ஐம் நாட் யுவர் பாஸ்… நீ காஃபி சாப்ட என்கிட்ட ஏன் பர்மிஷன் கேக்கற?”
“ ப்ச், **** ”
*
“இன்னிக்கு க்ளைமேட் நல்லா இருக்குல்ல? மழ வந்தா சூப்பரா இருக்கும்”
“வெதர்”
“என்னது?”
“க்ளைமேட் இல்ல… வெதர்”
“ஏதோ ஒண்ணு”
“இல்ல… க்ளைமேட் ஒரு எடத்துல பல வருஷத்துக்கு இருக்கற பேட்டர்ன் பேஸ் பண்ணிணது… சென்னைல இன்னிக்கு கூலா இருக்கறதனால…”
“அடப் போடா”
*
“ப்பா! ரொம்ப நாளாச்சுடா இப்டி ஒரு படத்தப் பாத்து! செமயா இருந்துச்சுல?”
“ம்…”
“அந்த ஸ்லோ மோஷன் ஃபைட் ஸீன் வெறித்தனம்ல?”
“ம்…”
“நல்லா எஃபர்ட் போட்டிருக்காங்கடா… இவ்ளோ பாத்து பாத்து இப்பலாம் யாரும் படமே எடுக்கறதில்லேல?”
“ஏண்டா, ஊருக்கு வெளில இருக்கற க்ரைம் ஸ்பாட் வரைக்கும் ஜீப்ல வர்ற ஹுரோ அவன் கூடவே வந்த கான்ஸ்டபிள் கிட்ட ஸ்பாட்டுக்கு வந்தப்புறம்தான் கேஸ் டீட்டெய்ல்ஸ் கேப்பானா? நமக்கு படம் க்ரைம் ஸ்பாட்லதான் ஆரம்பிக்குதுன்னா அதுக்காக அவங்க கான்வர்ஸேஷனும் அங்கதான் ஸ்டார்ட் ஆகணுமா? அந்த சீன்லயே எனக்கு படம் ப்ரிட்டென்ஷியசா தோண ஆரம்பிச்சுருச்சு…”
“டேய், யார்றா நீயி… ஒன்னயெல்லாம் எவன்டா படம் பாக்க வரச்சொன்னான்… ச்சை!”
*
“ஹலோ”
“ஹலோ… அசோக்கு… யாருன்னு தெரியுதா?”
“இல்ல… யாரு?”
“கண்டுபுடி பாப்போம்”
“தெரியலெங்க… உங்க நம்பர் நான் ஸேவ் பண்ணல”
“எப்பிடி தெரியும்… அப்பப்ப பாத்து, ஃபோன் பண்ணி பேசினாதான தெரியும்! வெங்குடு மாமா பேசறேண்டா”
“சொல்லுங்க மாமா”
“எப்பிடி இருக்க?”
“உயிரோட இருக்கேன் மாமா”
“ . . . “
“ . . . “
“சென்னையிலதான் இருக்கியா?”
“ஆமா மாமா”
“என் நம்பர் ஸேவ் பண்ணி வெச்சுக்கோப்பா! அடிக்கடி பேசுவோம்”
“எதுக்கு?”
“எதுக்கா? நல்லாக் கேட்ட போ! அம்மாவும் போயாச்சு… இனிமே ஒனக்கு ஆகவேண்டியதெல்லாம் நாங்கதான பாத்துக்கணும்”
“என்ன ஆகணும்?”
“கல்யாணம்?!”
“மாமா, உங்க நம்பர நான் ஸேவ் பண்ணட்டுமா வேணாமா?”
“என்ன?! ஏண்டா அப்பிடி கேக்கற? ஸேவ் பண்ணி வெய்யிடா”
“இல்ல, இந்த மாதிரி பேசத்தான் அடிக்கடி கூப்பிடுவீங்கன்னா உங்க நம்பர ஸேவ் பண்ணி வெச்சு இனிமே கால் பண்ணும்போது எடுக்காம இருப்பேன். இல்லேனா அட்லீஸ்ட் இன்னிக்கு மாதிரி யாருன்னு தெரியாமயாவது எடுத்து பேசுவேன்”
*பீப்*
***
ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com


