ஆதவன் சரவணபவன்
நூலாசிரியர் ரமேஷ் பிரேதன் எழுதிய எட்டாவது நாவல் “அவன் பெயர் சொல்”. இது 2014 இல் யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
நாவல் கட்டுமானத்தில் இன்னொரு பரிணாமமான பின் நவீனத்துவ பாணியில் வந்திருக்கும் படைப்பு. செழுமையான மொழிநடையில் வாசகனை உள்வாங்கும் படைப்பாக தெரிந்தாலும் புரிதலில் கூடுதல் கவனத்தை கோரும். அதீதமான பாலியல் குறிப்பிடல்கள், வன்முறைகள் வாசகனின் சமநிலையை குழப்பவல்லன.
“மெய்யுள்” என்ற கருதுகோளை முன்வைத்த மூத்த எழுத்தாளர் மு. தளையசிங்கம், “கற்பனைக் கோலங்கள் சகலதையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய உருவமாகும். அது தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக, மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்” என்கிறார்.
அதாவது ஏற்கனவே இருக்கும் இலக்கிய கட்டமைப்புகளான கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற வரையறைகள் தகர்ந்து இவை அனைத்தையும் உள்வாங்கிய பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பிரதியாக இந்த நாவலைப் பார்க்கலாம்.
எனது புரிதலில் இந்த நாவலில் பயணிக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் பல்வேறு சாத்தியக்கூறுகளை சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான்.
கடந்த காலத்தின் நினைவிலியா?
பிறழ்வு மனத்தின் அதீத கற்பனைகளா?
ஆழ்மனத்தில் தேங்கியுருக்கும் வலிகளின், எதிர்பார்ப்புகளின் பிதற்றல்களா?
அல்லது இவற்றின் கூட்டுக் கலவையா?
என்று பல்வேறு கோணங்களில் கேள்விகள் மற்றும் சாத்தியங்களை ஒருங்கே எழுப்பும்.
இந்த நாவலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் விக்கியில் “பின்நவீனத்துவ நாவல்கள் உருவாக்கும் அனைத்து அடிப்படைக்கூறுகளாலும் அமைந்த படைப்பு ’அவன் பெயர் சொல்’ என்றும் இந்நாவலை ஜே.ஜே.சில குறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என வகைப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜே ஜே சில குறிப்புகள் ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கத் தவறிய அங்கீகாரத்தின் அபத்த நாடகத்தை தோலுரித்து வெளிப்படுத்தும் கரு.
இங்கே உலகத்தில் என்று பொதுமைப்படுத்தாமல் புதுச்சேரியில் வாழும் ஒரு பாய் வியாபாரி தன்னிலையில் கடந்த காலத்தை மீட்கிறான். ஆவணப்படம் எடுக்கும் கலைஞனாகவும் கவிஞனாகவும் திகழ்கிறான். அவனின் அக விசாரம் வாழ்க்கையின் குறித்த நிகழ்வுகளை தனது மகளுக்கு எழுதும் கடிதங்களின் தொகுப்பு போல சம்பவங்கள் புனையப்பட்டிருந்தாலும் ஒருவகையில் நேர்கோட்டுத் தன்மை இந்த நாவலில் இருக்கிறது.
குறியீடுகளாக பல கூர்மையான சித்திரங்களை கொடுத்தாலும் அபத்தமான பொது மனத்துக்கு தொந்தரவு கொடுக்கும் காட்சிகளையும் உள்வாங்கியிருக்கிறது.
மனைவி அவனது பெண் குழந்தையுடன் பிரிந்து போவதும் குழந்தை வளர்ந்து பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் கல்வி கற்பதும் அவனின் வெறுமைக்கும் தனிமைக்கும் காரணமாக இருக்கிறது. அசாதாரணமான எண்ணங்களை நாவலின் பல பாகங்கள் உள்வாங்கி இருக்கின்றன.
சமூக அவலமாக சாராயக்கடையின் அருவருப்பான சித்திரம், சாதியம் சார்ந்த ஏற்றத்தாழ்வு, பெண்ணின் மேல் ஏற்படும் ஈர்ப்பும் விலக்கமும் சார்ந்த பித்துநிலை, காதல்-காமம் ஒப்பீடு, திருநங்கைகள் வாழ்க்கை என்று பல தளங்களில் விரிந்து செல்கிறது.
இலகுவில் மூளைச்சலவைக்கு ஆளாகும் ஒருவனாக மட்டுமில்லாமல் தான் மனநலம் சிதைந்தவன் என்பதை சமூகத்துடன் பொருத்தி நியாயப்படுத்த முயல்கிறான். மனிதர்கள் யாவரும் ஒருவகையில் மனப் பிறழ்வு உள்ளவர்கள் என்று பொதுமைப்படுத்துகிறான். சிக்மான் பிராய்ட் சொல்வது போல மனிதர்கள் அனைவரும் நோயாளிகளே. அது ஆழ்மன இயல்புகளால் வெளிப்படும் நோயையே அவர் கண்டடைந்தார். வர்க்க வேறுபாடுகளால் உழலும் மனிதரை மார்க்ஸ் நோயாளியாக வகைப்படுத்தினார். ஆகவே நோயைக் கண்டடையும் கருவியாக இலக்கியம் உருவாகும் போது அது தன்னளவில் கலையாக மட்டும் இருக்காது. பல்வேறு தளங்களையும் துறைசார் உள்ளீடுகளையும் இலக்கியம் தாங்கிவரும்.
கதைசொல்லி தனக்கு அணுக்கமானவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என்று பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி மகளுக்கு விளங்க வைப்பது அவனின் மனோநிலையைக் காட்டும் உத்தியாகவும் கொள்ளலாம்.
“மழை” ஒரு பெண்ணா குறியீடா என்று தடுமாற வைக்கும் ஆசிரியர் அவனது அகத்தின் மூர்க்கமான ஆசையைத் தீர்க்கும் வகையில் முடிக்கிறார். இறுதியில் இலங்கையில் இராணுவம் இறந்த பெண்களை புணர்ந்ததாக அறிந்ததை அடிமனதில் தேக்கிவைத்து அதுவாகவே மாறும் மனநோயாளியென்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் மகள்.
படைப்பு என்பது செயற்கையானது. அதை உருவாக்கும் மன அமைப்பும் உருவாக்கப்படுவதாக தன்னிலை விளக்கமளிக்கும் கதைசொல்லி யுத்தம் சார்ந்த கருதுகோள்களைக் கற்பனைக் கூறாக முன்வைக்காமல் பிரச்சாரம் செய்யும் பாணியில் முன்னகர்த்துகிறார்.
சார்புநிலையும் ஒற்றைத்தன்மையும்
பொதுமனம் என்ற கருதுகோள் அரசியல் சமூக சமய கட்டமைப்புகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியப் பொதுமனம், தமிழ்ப் பொதுமனம் என்று மனிதர்களின் பண்பை பொதுமைப்படுத்திப் பார்ப்பதும் பேசுவதும் இயல்பு. சில விதிவிலக்குகள் இருந்தாலும் பரந்துபட்ட பார்வையாக இதைத் தவிர்க்க முடியாது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் “ஓம் சாந்தி” என்று பேச்சை முடிக்கும்போதும், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாகிய போதும், சுந்தர் பிச்சை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டபோதும் காசாவில் முஸ்லீம்கள் பாதிக்கப்படும் போதும் பொதுமனம் இந்தியராக தமிழராக முஸ்லீமாக வினையாற்ற முற்படுவதை அவதானிக்கலாம். தன் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எழும் அறச் சீற்றம். தனது இன மத அடையாளத்துடன் ஒருவர் பெற்ற வெற்றியை தன்னுடையதாக சுவீகரிக்கும் மனநிலை. இதனை குழுவாதம் என்றும் சொல்லலாம்.
இது “பக்குவப்படாத மனநிலை” (emotionally immature) என்றுதான் கருதவேண்டும்.
ராம் என்ற ராமசாமி பத்துவயது சிறுவனாக இருக்கும் போது முஸ்லீமாக மதம் மாறுகிறான். அயல் நாடான இலங்கையில் யுத்தம் ஓய்ந்தது. விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் அவனின் ஆழ்மனதில் பெரும் ரணமாக பதிந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுகள் பெரும்பாலான அத்தியாயங்களில் வெளிப்படுத்துகிறான். அந்தப் பாத்திரம் தன்னை ஈழப் போராட்டத்தில் ஈடுபாடுள்ள ஒருவனாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான மனநிலையை இளமைக் காலத்தில் இருந்து வளர்ந்திருக்க வேண்டும் என்ற புரிதல் வருகிறது. அவனின் மனதில் அந்தப் போராட்டத்தை புரட்சியாகவும் பிரபாகரன் மீது மரியாதையும் அவரை மனதில் நாயக பிம்பமாகவும் உருவகித்து இருந்திருப்பதை காட்டுகிறது.
ஒருபக்கச் சார்பான வெளிப்படுத்தல்களும் மனவோட்டங்களும் பக்குவப்படாத மனநிலையுள்ள மனிதனாக அவனைக் கருத வேண்டியிருக்கிறது.
அறச்சீற்றம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின்பால் நியாயமாக வரவேண்டும். அரசியல் கட்சிகள் சார்ந்து செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கமைக்ககும் ஊடகங்கள் போல தனிமனிதர்கள் போல அவனும் இருக்கிறான். நாவலாசிரியரின் அரசியல் கருத்தாகக் கூட வெளிப்பட்டிருக்கலாம். இயக்க ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி எழுதும் சில ஈழ எழுத்தாளர்கள் போல இந்தப் பிரதி ஒற்றைப்படைத் தன்மையாக தனது கருத்துக்களை முன்வைக்கிறது. இலங்கையில் மட்டக்களப்பில் இருந்து வந்து இந்தியாவில் வாழும் ஜலீல் பாய் என்ற முஸ்லீம் நபரின் தற்கொலை போரில் இயக்கத்தின் தோல்வியை சகிக்கமுடியாமல் நிகழ்வதாக ஒரு அத்தியாயம் இருக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானதும் ஒற்றைப்படைத்தன்மைக்கும் உதாரணம். புனைவு என்ற சுதந்திரம் இருப்பதற்காக பொய்கள் கட்டமைக்கும் போது அந்தப் போர்ச் சூழலில் வாழ்ந்து வலிகளில் உழன்றவர்களுக்கு சினம் உண்டாவது தவிர்க்கமுடியாதது. இப்படியான பிரதிகள் வாசிக்கும் போது போலியான பிம்பத்தை எழுத்தாளன் மேல் ஏற்படுத்துவது மட்டுமல்ல பரிதாபப்படவும் தோன்றுகிறது.
***
ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com


