குணா கந்தசாமி
(வி. அமலன் ஸ்டேன்லியின் வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் நாவல் குறித்த மதிப்புரை)
நம்முடைய அன்றாட வாழ்க்கை தட்டையானது. திரும்பத்திரும்ப நிகழும் சாதாரணமான சம்பவங்களால் ஆனது. அதேநேரத்தில் கற்பனைக்கு நிகரான நாடகீய உச்சங்களை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்வதின் சாத்தியத்தையும் முழுக்க மறுப்பதற்கில்லை. ஆனால் நம்முடைய நிகழ் வாழ்க்கையில் இந்த நாடகீய உச்சங்கள் குறைவாகவும் அரிதாகவும் நிகழ்கின்றன. புனைவோ எப்போதும் கூடுதலான நாடகீய உச்சங்களைக் கோருவதாக இருக்கிறது. பெருவிய நாவலாசிரியரான சாண்டியாகோ ரான்காக்லியோலோ தன்னுடைய ரெட் ஏப்ரல் என்னும் அரசியல் நாவலின் பின்னுரையில் “எல்லா நாவல்களையும் போலவே இந்தப் புத்தகமும் நடந்திருக்கக்கூடிய கதையை விவரிக்கிறது, ஆனால் இப்படித்தான் நடந்தது என்பதை இந்த ஆசிரியர் உறுதிப்படுத்தவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு இலக்கியப் பிரதியின் வடிவங்களும் வாசிப்பு முறைகளும் பன்மைத்துவம் அடைந்திருக்கின்றன. மாறுபடும் வாழ்க்கைப் போக்கை விவாதிக்க ஏற்கெனவே இருக்கின்ற வடிவம் போதாதபோது புதிய வடிவங்களையும் கூறுமுறையையும் நாடுவது இயல்பானதே. ஆனால் வெறுமனே வடிவ மோஸ்தரை மட்டும் நம்பி எழுதப்படும் படைப்புகள் வாழ்க்கையின் உயிர்ச் சாரமற்று வறட்சியான வாசிப்பனுபவத்தையே அளிக்கின்றன. வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் விஷயங்களை வாசகரின் மனதை நோக்கிப் பேசுவது இலக்கியத்தின் நோக்கங்களில் பிரதானமானது.
இந்தப் பின்புலத்தில் ஒரு தன்வரலாற்று நாவலை நாம் எப்படி அணுகுவது? தமிழிலும் பிறமொழியிலும் குறிப்பிடுமளவுக்கு ஏனைய சமூகத்தாரைவிட தலித் தன்வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பொறுத்தவரை வலியும் ஒடுக்குமுறையும் நிறைந்த வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கருவியாக இலக்கியம் இருக்கிறது. பொதுவான நோக்கில், புனைவிலிருந்து தன்வரலாற்று நாவல்களை வேறுபடுத்தும் புள்ளியாக ஆவணத் தன்மை இருக்கிறது. தன் வரலாற்று நாவலாக இருந்தாலும் இந்த ஆவணத் தன்மையைக் கடந்து புனைவின் அழகும் மர்மமும் கூடிய விரிந்த அனுபவத்தை தன் ஒட்டுமொத்தத்தில் அந்த நாவல் வழங்காவிட்டால் அது வெறும் தன்னனுபவ நாட்குறிப்பாகச் சுருங்கிவிடும் விபத்து ஆகிவிடும்.
வி.அமலன் ஸ்டான்லி எழுதி தமிழினி பதிப்பகத்தால் விரிவாக்கிய இரண்டாம் பதிப்பாக இரண்டாயிரத்து இருபத்தி இரண்டாம் ஆண்டு வெளியான “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்” நாவல் தன்வரலாற்று மெய்யியல் நாவலாகச் சுட்டப்படுகிறது. ஐநூறு சொச்சம் பக்கங்களில் சலனங்களற்ற நிதானமான கூறுமுறையில் ஆங்காங்கே தன்னுணர்வு தோய்ந்த கவித்துவத்தோடு அசைவற்றுத் தெரியும் தூரத்து ஆறு போல ஒரு வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாவலின் கூறுமுறையைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு பின்புலத்தில் துலங்கும் வாழ்க்கைச் சம்பவங்களை மட்டும் பார்க்கையில் அவை நிச்சயம் நாடகீய உச்சங்களாகவோ அல்லது அவ்வாறு விரிவாக்கும் சாத்தியத்தைக் கொண்டவையாகவே இருந்தாலும் நாடகீயம் தவிர்க்கப்பட்டு உரையாடல்களே இல்லாத ஒற்றைக்குரலில் மட்டும் நாவல் விவரிக்கப்பட்டிருப்பது ஆசிரியரின் பிரக்ஞைப்பூர்வமான தெரிவுபோலத் தெரிகிறது.
நாவலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அன்றாட வாழ்க்கையின் சாதாரண அனுபவங்களாலும் இளம்பருவத்துக் குடும்பம், நண்பர்கள், வாழ்விடம், பயணங்கள், கல்லூரி, பணியிடம் போன்ற சூழல்களில் கதைநாயகனான ஜெரிக்கு ஏற்படும் அனுபவங்களின் விவரணைகளால் நிறைந்திருக்கும் முற்பகுதி, மற்ற வாழ்க்கைகளிலிருந்து எந்தவிதத்தில் இந்தக் கதை வேறுபட்டிருக்கிறது, இதை ஏன் ஒரு வாசகர் வாசிக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. நாவலின் கூறுமுறை கேள்வியை இன்னும் உரத்துக் கேட்கச்சொல்லித் தூண்டுகிறது. மாறாக மெய்யியல் தேடலோடு கவித்துவமான உள்முகப் பயணமாக விரியும் பிற்பகுதி வாசகருக்கு மன வெளிச்சத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஜெரி தன்னளவில் ஒழுக்கவாதியாகவும் (puritan) இளம்பருவத்தில் பாவக்கோட்பாட்டில் நம்பிக்கையுடையவனாகவும் இருந்தாலும் எதற்கும் அச்சப்படாத முரட்டுத்தனம் கலந்த அறிவாளியாகவும் இருக்கிறான். திராவிட நாத்திகரான ஆளுமைமிக்க தந்தை, காதலித்துக் கலப்புத் திருமணம் புரிந்து கணவரின் கொள்கைகளை ஏற்று பிறகு சூழலின் காரணமாக கிறித்துவத்துக்குத் திரும்பும் ஜெரியின் தாய் ஆசிரியை மேரி, ஜெரிக்கு இன்னொரு தாயாக இருந்த மூத்த சகோதரி சாந்தா, இளம் வயதிலேயே தந்தையோடு முரண்பட்டு சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகரும் மூத்த சகோதரர்கள், நிறைய நண்பர்கள் என்று சற்று இறுக்கம் குறைவான அமைப்பாகவே ஜெரியின் குடும்பம் இருக்கிறது. புற்றுநோயின் காரணமாக மறையும் மூத்த சகோதரி சாந்தாவின் மரணம் ஜெரியின் மெய்யியல் தேடலுக்கான முக்கியமான காரணமாக மாறுகிறது.
ஜெரியின் தேடல் உள்முகமானது மட்டுமல்ல, தேவையுள்ளோருக்கு சேவைபுரியும் சமூக மனப்பாங்கும் ஆறுதலைத் தேடும் மனங்களுக்கு ஆதுரமாகத் தன்னை அளிப்பதும் அவனுடைய இயல்பான குணவார்ப்புகளாக இருக்கின்றன. ஜெரியின் கனிவு மனிதர்களிடம் மட்டுமில்லாமல் பறவைகள், விலங்குகள் என்று பிற உயிர்களிடத்தும் சூழியல் சார்ந்த அக்கறையாகவும் விரிகிறது. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்தாலும் தன்னுள் இருக்கும் தேடலையும் கனிவையும் கைவிடாததாக இருக்கிறது ஜெரியின் வாழ்க்கைப் பயணம்.
மூத்த சகோதரியின் மரணம், காதல் தோல்வி, தாயின் நோய்மை, தந்தையின் துர்மரணம், தோல்வியடைந்த முதல் திருமணம் என்று ஜெரியின் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நிறைய இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் ஜெரி அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதில்லை. பிரச்சனைகளிலிருந்து தப்பி ஓடுவதில்லை மெய்யியல் தேடலில் ஜெரியின் அனுபவங்கள் விரிந்து முதிர்ச்சியடைகிற தருணத்தில் மனிதர்களைவிட காகங்கள், மீன்கள் போன்ற ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையான உயிர்களுடன் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் நற்பேறு ஜெரிக்கு வாய்க்கிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நட்பில் இதமானவனாக இருக்கும் ஜெரி நண்பர்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவனாக இருக்கிறான். நண்பர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று துயரங்களாலும் சிக்கல்களாலும் அவர்கள் சிதைவடையும்போது மீட்டெடுக்கும் முயற்சிகளைச் செய்கிறவனாகவும் இருக்கிறான். அதே வேளையில் ஜெரியின் இரட்டைபோல சித்தரிக்கப்படும் நண்பனான சேவியர் கதாப்பாத்திரம் தனித்த குணவார்ப்பு இல்லாமல் ஜெரியின் நீட்சியாகவே இருக்கிறது. இன்னொரு கண்களின் வழியே ஜெரியின் வாழ்க்கையைச் சொல்வதற்கு மட்டுமே இந்தப் பாத்திரம் பயன்பட்டிருக்கிறது.
தன்னளவில் புனிதவாதியாக இருந்தாலும் சுற்றியுள்ள மனிதர்களிடம் சரி தவறு என்பதைத் தாண்டி இயல்பான கரிசனை கொண்டவனாகவே ஜெரி இருக்கிறான். நாவலில் துணைக்கதைகளாக அமைந்துள்ளவற்றில் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பிரதானமாக இருக்கின்றன. இந்த உறவுகளில் சில சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை, சில ஒழுக்கக் குறைவானது என்று நிர்ணயிக்கப்பட்டவை. சிக்கலுக்குள் அகப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிறவனாகவும் மனப்பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பின் மீது அக்கறையுடையவனாக இருக்கிறான். தன் பெற்றோர்களுக்கு இடையில் நிலவும் நீக்குப் போக்கான உறவைப் புரிந்தவனாக இருக்கிற ஜெரிக்கு அதே உறவுச்சிக்கல் தன் முதல் திருமண வாழ்க்கையில் நேரிடும்போது பக்குவத்தைக் கைவிடாதவனாகவும் இருக்கிறான். தான் வேறுபடுகிற இடங்களில் விலகிவிடுகிறவனாக ஜெரி இருந்தாலும் அந்த வேறுபாட்டின் பொருட்டு எவரையும் வெறுப்பவனாக இருப்பதில்லை.
நகர நிலவெளியின் பின்புலத்தில் தமிழ் நாவல்கள் எழுதப்படுவது குறைவு. அவற்றிலும் நிலவெளியில் தோய்தல் என்ற பண்பு மிகக்குறைவு. இதற்கு மாறாக ஜெரியின் இளம்பருவத்து வாழ்க்கை கழியும் பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் சுற்றம், மேட்டுத்தெரு, அயனாவரம் போன்ற பிரதேசங்களும், மத நல்லிணக்கம் நிரம்பிய பண்டிகைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள், ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கைமுறைகள் என்று சென்னையின் ஒருபகுதிச் சித்திரம் உயிரோட்டத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஜெரியின் வாழ்க்கையினூடே உலகமயமாக்கலினால் சென்னை அடையும் உருமாற்றமும் சொல்லப்படுகிறது. சூழியல் குறித்தும் இந்திய மற்றும் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட சூழியல் விழிப்புணர்வு சார்ந்த முயற்சிகளையும் நச்சுயியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கும் விதங்களையும் அறிகிறோம்.
இந்த நாவலிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் இன்னொரு முக்கியமான கருதுகோள் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய அல்லது மதம் கடந்த மெய்யியல் தேடல். தன்னையறியும் இத்தேடலில் ஜெரிக்கு பெளத்தமும் விபாஸனா தியானமும் இணக்கமான மார்க்கமாகவும் வழிமுறையாகவும் அமைகின்றன. மெய்யியல் தேடலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்று பகுத்தறிவு சார்ந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறையை கொண்டிருந்ததின் நீட்சியாகவே ஜெரியின் மெய்யியல் பயணமும் அமைகிறது. தியானத்தை பூடகப்படுத்தாமல் அந்த அனுபவத்தின்போது உடலில் நிகழும் மாற்றத்தை அறிவியல்பூர்வமாக விவரிப்பது ஜெரியின் அணுகுமுறைக்கு முக்கியமான சாட்சி.
நாவலுக்குள் ஆங்காங்கே வருகின்ற ஜெரியின் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. கவிதையில் மெளனவாசிப்பு என்ற ஒன்று இருப்பதைப்போல கவனமான வாசிப்பையும் பொறுமையான அசைவாங்குதலையும் இந்த நாவல் கோருகிறது. வாழ்க்கை அனுபவங்கள் விவரணைகளாகவும் தன்னுணர்வு மிக்க மெய்யியல் அனுபவங்கள் தரிசனங்களாகவும் நாவலில் வெளிப்பட்டிருக்கின்றன. சிரத்தையான நெடிய விவரணைகளினால் யாவும் விரித்துச் சொல்லப்படுவதால் வாசகப் பங்கேற்புக்கான இடைவெளிகளும் குறைவாகவே இருக்கின்றன. ஒரு இலக்கிய அனுபவம் என்பதைவிட “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்” நாவலை தன்னையறிதலை நோக்கிய உள்முகப் பயணத்தின் கதையாகக் கொள்ளலாம்.
***
குணா கந்தசாமி – எழுத்தாளர் மற்றும் கவிஞர். சென்னையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணுபுரிகிறார். சமகாலத்தில் பல்வேறு மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை (சிறுகதை), புலியின் கோடுகள் (கட்டுரை), உலகில் ஒருவன் (நாவல்), டாங்கோ (நாவல்), மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் (கவிதை) ஆகிய நூல்களின் ஆசிரியர். மின்னஞ்சல் : gunakandasamy79@gmail.com



நாவலை உள்வாங்கி மிகவும் பொறுமையுடன் நிதானமாக அதன் வடிவமைப்பு முதல் உட்கூறு வரை தெளிவாக எழுதப்பட்ட விமர்சனம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. நாவல் ஆசிரியருக்கும் விமர்சனம் செய்த உங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.