Saturday, September 13, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்அரேபிய ‘ஜின்’ சொல்லும் தென்னிந்தியக் கதைகள் - கனகராஜ் பாலசுப்ரமணியம்

அரேபிய ‘ஜின்’ சொல்லும் தென்னிந்தியக் கதைகள் – கனகராஜ் பாலசுப்ரமணியம்

உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி

  • கன்னடம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துப் பயணம் எங்கு தொடங்கியது?

என் தாய்மொழி தமிழாக இருந்தாலும் கன்னடத்தில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். எங்கள் குடும்பம் நூறு வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கு புலம்பெயர்ந்ததால் என் பள்ளிப் படிப்பு கன்னட மொழியில் தொடங்கியது. ஆயினும், ஏழாம் வகுப்பு வரை வீட்டிலியே தமிழ் கற்று எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை முதல் மொழியாய் தமிழ் பயின்றேன். ஆனால் இலக்கிய வாசிப்பை ஆரம்பித்தது கன்னட இலக்கியத்தில்.

கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை பயிலும் நாட்களில் கன்னட எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக பா.லங்கேஷ், யூ.ஆர்.அனந்தமூர்த்தி, மற்றும் கிரீஷ் கார்னாட் என்னை மிகவும் ஈர்த்த எழுத்தாளர்கள். இவர்கள் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த நாட்கள் அவை. என் முதல் கதை கன்னடத்தின் முன்னணி நாளிதழில் வர இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம்.

இதோடு, எங்கள் வீட்டில் என் தாத்தா, மற்றும் அவருடைய தந்தை இருவரும் தமிழ் எழுத்தாளராக இருந்த காரணத்தினால் வீட்டில் இலக்கிய சூழல் இருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

  • உங்கள் தாத்தா மற்றும் அவருடைய தந்தை எழுத்தாளர் என்று குறிப்பிடுகிறீர்கள். அவர்களின் எழுத்து குறித்தும், அவை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எழுத்து வாழ்க்கை மீது செலுத்திய தாக்கத்தைப் பகிர முடியுமா?

என் அம்மா வழி தாத்தா மற்றும் அவர் தந்தை இருவரும் கர்நாடகத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் மதுரை சென்று அங்கேயே தங்கி தமிழ் பயின்றவர்கள். கர்நாடகம் திரும்பி வந்த பிறகு தமிழில் ஆய்வுக் கட்டுரை, கவிதை எழுதி வந்தனர். என் தாத்தாவின் தந்தை திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கர்நாடகத்தின் ஆரனகட்டை எனும் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியொன்றைத் தொடங்கி அரசின் அனுமதி பெற்று அங்கு தமிழ் மொழியைப் பாடமொழியாக சேர்க்கப் பாடுபட்டார். அவரே பல வருடம் தம் சொந்தக் காசில் ஆசிரியர்களுக்கு ஊதியம் தந்துகொண்டிருந்தார். அது மட்டுமல்லாது சிறுவர்களுக்கு தினந்தோறும் தமிழ் எழுத்துகளையும்,  இளைஞர்களுக்கு தமிழ் இலக்கணத்தையும்,  செவ்விலிக்கியங்களையும் கற்றுகொடுத்தார்.  அவர் வழியாகத் தான் நான் தமிழ் கற்றேன். என் தாயின் தந்தை திரு சுப்பிரமணியம் என் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர். கவிஞராக இருந்த அவர் முழுநேர சமூகநலப் போராளியாகவும் அரசியல்வாதியாகவும் இருந்தவர். கர்நாடகத்தின் எங்கள் தாலுக்காவில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர்; கர்நாடக உழவர் சங்கத்தின் தாலுக்கா கிளையின் தலைவராகப் பல போராட்டங்களை முன்னெடுத்து எங்கள் பாகத்திற்கு “அப்பர் பத்ரா” எனும் பாசனத் திட்டத்தை அரசு அறிவிக்கும் வரை உண்ணாவிரதம் செய்தவர்.  இவருடைய சமூகப் பொறுப்புணர்ச்சி என் உலகப்பார்வையைத் தீட்டியுள்ளன.  

  • நீங்கள் எழுதிய முதல் படைப்பு குறித்து…

என் முதல் படைப்பு ஒரு சிறுகதை, கன்னட நாளிதழ் “பிராஜவாணி”யில் பிரசுரமானது. இந்நாளிதழில் கதை அல்லது கட்டுரை பிரசுரமாவது கன்னட இலக்கியச் சூழலில் அன்று ஒரு முக்கியமான மற்றும் பெருமைக்குரிய நிகழ்வு. என் முதல் கதை 2003 ல் அங்கு வெளியான போது நான் கட்டற்ற மகிழ்ச்சியில் மிதந்திருந்தேன். அதொரு மாய யதார்த்தவாதக்கதை; கேப்ரியல் கார்சியா மார்கேஸ் பாதிப்பில் எழுதியக் கதை. மார்கேஸ் இலக்கியத்தைக் குறித்து நான் ஆய்வு செய்துகொண்டிருந்த நாட்கள். சிறுவயதில் நான் கண்ட நிகழ்வொன்றை புனைவாக்கியிருந்தேன்; அக்கதை கன்னட இலக்கியச் சூழலில் வெகுவாகப் பேசப்பட்டது. அதன் தலைப்பைத் தமிழில் இவ்வாறு கூறலாம்:  “பாயும் நிலவொளியை நோக்கும் இரண்டு முதியவர்களின் மனவொலி”

  • புனைவின் மீதான உங்கள் வசீகரம் எப்படி ஆரம்பமானது?

என் பால்ய காலம் முழுவதும் புனைவால் பின்னப்பட்டது. தூங்கும் நேரத்தில் மட்டுமல்லாது காலை, மதியம், இரவு வேளைகளில் உணவு அருந்தும் நேரத்திலும் நான் கதைகள் கேட்டு வளர்ந்தவன். என் பாட்டன், தாத்தா, மாமாக்கள் என்று நாள் முழுவதும் நான் அவர்களைக் கதை சொல்ல வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அவர்களும் சலிக்காமல் கதைகளை வர்ணித்துக்கொண்டே வந்தார்கள். நாளிதழ்கள் மற்றும் சிறுவர் பத்திரிக்கைகளும் எனக்கு மாயாது கதைச்சொல்லிக்கொண்டே இருந்தன. இங்கிருந்து தொடங்கிய புனைவின் மீதான வசீகரம் இன்று வரை என்னைக் குலுக்கிக்கொண்டே இருக்கின்றன.    

  • சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய மூன்று வடிவங்களில் புனைவைக் கையாண்டிருக்கிறீர்கள். இவற்றில் எந்த வடிவத்தை சவாலானதாக உணர்கிறீர்கள்?

மூன்றுமே சவாலான வகைமைகள் என்றாலும் இவற்றில், என்னைப் பொருத்த வரையில், நாவல் கூடுதல் கவனத்தை வேண்டும் வகைமை. இவை மற்றுமல்லாது நாடகமும் எழுதியுள்ள எனக்கு நாவல் எழுதுவது கொஞ்சம் கடினமான செயல். பக்கங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக நாவலில் எதை எதையோ எழுதினால் அது நாவலாகாது. அதற்கே உகந்த சூட்சமங்கள் உள்ளன. அவற்றை தொடக்கம் முதல் இறுதி வரையில் பின்பற்றுவது கொஞ்சம் சவாலானது தான். நாவல் வகைமையின் “கேன்வாஸ்” பரந்த வாழ்வியல் என்பதால் காலம், இடம், உயிரினங்கள் மாறிக்கொண்டும், ஆற்றைப் போல் ஓடிக்கொண்டே இருக்கும். இவற்றைப் புனைவு இலக்கியத்தின் நுட்பங்களோடு சேர்த்து எழுதுவது ஒரு நாவலாசிரியருக்கு சவாலான பணி என்பது என் கருத்து.   

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய இலக்கியத்தில் வளர்ந்த நாவல் வகைமை தொடக்கத்தில் “வள வள கொள கொள” என்று தான் எழுதப்பட்டது. நாவலை வெகுஜன இலக்கியம் என்று கருதப்பட்டு பத்தொன்பதாவது நூற்றாண்டு இறுதி வரையில் தீவிர இலக்கியத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை என்பது நமக்கு தெரியும். இருபதாம் நூற்றாண்டில் அதன் வடிவம் முற்றிலுமாக மாறி அதன் போக்கே மாறியது. தற்கால இலக்கியத்தில் அது பல வகையில் கையாளப்படுகின்றன. அந்த பலவகைகளில் எனக்கு பிடித்த பாதையில் செல்ல என் உள்ளம் விரும்புகிறது. உள்ளுக்குள் சீறிப் பாயும் விதையை நீரூற்றி “திசை தீட்டி” நாவல் வடிவத்திற்குள் கொண்டு வருவது என் மட்டில் ஒரு பெரும் நகரத்தைக் கட்டமைப்பது போன்றது, அல்லது பெரும் வனத்தில் நடப்பது போன்றது. இந்தப் பாதையில் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கிறது, ஆனால் பணிச்சுமைகளால் தொடர்ந்து நகரத்தை உருவாக்கவோ காட்டுப் பாதையில் புகுந்து அலையவோ முடிவதில்லை. 

  • கதைக்கான கருவை எங்கிருந்து தேர்வு செய்கிறீர்கள்?

கதைக் கருவை நான் தேர்வு செய்வதில்லை. மாறாக காலமும் மனவோட்டமும் தான் கருவைத் தீர்மானிக்கிறது.

யதேச்சையாக பார்க்கும், அல்லது கேட்கும் நிகழ்வுகள் பழைய நினைவொன்றையோ அல்லது புதிய கருத்தொன்றையோ தூண்டும், அதைப் பிடித்து சில நாட்கள் பயணம் செய்வேன். அப்பயணம் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் எழுதத் தொடங்குவேன். கதைக் கரு யதேச்சையாக தோன்றுவதால் நான் அவற்றைத் தேர்வு செய்வதில்லை.

அக்கரு வளர்ந்து ஓடையாக ஓட ஆரம்பித்த போது அதை நேர்த்தியாக்கி அதற்கு நுட்பங்களை சேர்ப்பேன். கதை போகும் பாதையில் விட்டு அதை புனைவாக்க மனதிற்குள் “எடிட்” செய்வதும், நுட்பங்களை ஜோடிப்பதும் தான் நான் மனபூர்வமாகச் செய்யும் செயல்.

  • எழுதுவதற்கு ஏதேனும் முறைமை பின்பற்றுகிறீர்களா?

எழுத குறிப்பிட்ட நேரம் என்கிறதொன்றும் இல்லை. எழுத வேண்டும் என்கிற உறுத்தல் உள்ளுக்குள் பாய்ந்தால் உடனே எழுத ஆரம்பித்துவிடுவேன். முதலில் மனதிற்குள் எழுதிக்கொள்வேன். நாள் கணக்கில் அது உள்ளே வளர்ந்துகொண்டே போகும். ஒரு நாள் அது என்னை எழுத வைத்துவிடும். இப்படி கூறுவது உங்களுக்கு வேடிக்கையாக தெரியலாம், ஆனால் அது தான் உண்மை. உள்ளுக்குள்ளிருந்து உறுத்தல் வரும் வரை நான் எழுத அமர்வதில்லை, அது எவ்வளவு நாட்களாயினும் சரியே….

  • உங்கள் கதைகள் தென்னிந்திய கிராமங்கள், நகரங்களின் உழைக்கும் வர்க்கம் மற்றும் சவுதி அரேபியாவின் புலம் பெயர் மக்களை பிரதினிதித்துவப் படுத்துகிறது. ஆனால் கதைகளில் அவர்களின் ஆதாரச் சிக்கல் அடையாளம் சார்ந்ததாய் அமைவது தற்செயலானதா?

நான் பார்க்கும் உலகத்தை எழுதும் போது என்னையும் சேர்த்து புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் அகச் சிக்கல், புறச் சிக்கல் அனைத்தும் கதையோட்டத்தில் வருகின்றன. நான் பார்த்த, கேள்விப்பட்ட, அனுபவித்த விடயங்களை மட்டுமே நான் எழுத விரும்புகிறவன். கடந்த இருபத்தைந்து வருடங்களாக அயல் நாடுகளில் வாழும் காரணத்தால் என் எழுத்துக்கள் அயல்டநாட்டு வாசிகளைக் குறித்தே இருக்கின்றன. அது மட்டுமல்லாது, அந்தந்த நாட்டு மூலக்குடிகளின் வாழ்வும் என்னை ஈர்க்கின்றன. என் “அல் கொஸாமா” நாவல் அது போன்றது. அரேபியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வோடு சேர்த்து அரேபியாவின் மூலக்குடிகளான ‘பதூவன்’ களைக் குறித்தும் எழுதியுள்ளேன். இவ்வாறு எழுதும் போது சில நேரங்களில் மட்டும் நானே விரும்பி நான் பார்த்த புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்னெடுப்பேன். ஆனால் அவற்றின் நோக்கம் ஒட்டு மொத்த மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் மகிழ்ச்சிகளும் தான்.

அது கர்நாடகாவில் வாழும் எம் தமிழினம், அல்லது அரேபியாவில் வாழும் அனைத்து நாடுகளின் புலம் பெயர்ந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சா வழியினர் என்று யாராக இருந்தாலும் அவை அடிப்படையில் விவாதிப்பது மனித வாழ்வின் அக-புறச் சிக்கல்களைத் தான். வெறுமனே, புலம் பெயர்ந்தவர்களின் சிக்கல்களை மட்டும் என் படைப்புகள் சொல்லக்கூடாது, மாறாக மனித இனத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருப்பேன். புலம் பெயர்ந்தவர்களின் உலகம் ஒரு கருவி அவ்வளவு தான். அதனூடே மனித குலத்தின் விருப்பம், கனவு, ஒவ்வாமை, யதார்த்தம் என்று கூறப்படும் உணர்தல்கள், சிக்கல்கள், வெற்றிகள் அல்லது தோல்விகள், இவற்றை தீர்மானிக்கும் “நிறுவனங்கள்” என்று அனைத்தையும் சித்திரிக்க வேண்டுமென்பது தான் என் நோக்கமாக இருக்கும். ஆனால் அதை வேண்டுமென்றே கதைக்குள் புகுத்தமாட்டேன். கதைகளில் அவை இயல்பாக வெளிப்படும், வெளிப்படாவிட்டால் அக்கதையைத் திருத்தி எழுத முயற்சிப்பேன், அல்லது அதை நிறுத்திவிடுவேன்.

நான் வாழும், தினந்தோறும் பார்க்கும் வாழ்க்கையைத் தானே எழுத முடியும். ஆனால், அவ்வாழ்க்கையின் குறிப்பிட்ட பிரச்சனை/சிக்கல் ஒன்றை எழுத வேண்டும் என்று ஒரு போதும் நான் தீர்மானிப்பதில்லை; அவை கதையோட்டதில் நிகழ்கின்றன.  

  • இந்தியக் கதைகளில் சாதியும், அரேபியாவை மையப்படுத்தும் சிறுகதைகளில் மதவாதமும் பேசுபொருளாகிறது. சில கதைகளில் அவற்றை ஒன்றிணைக்கவும் செய்கிறீர்கள். இரண்டையும் ஒரே சிக்கலின் இருமுகமாக கருதுகிறீர்களா?

அப்படியும் கூறலாம்… ஆனால் அவற்றை நான் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கவில்லை, இந்த உலகில் மதம் என்றொரு அமைப்பு ஏற்ப்படுத்தியிருக்கின்ற அவலங்களை விவாதிக்க விரும்புகிறேன்.

மதவாதமும், ஜாதி அடக்குமுறையும் சமகால உலகின் பெரும் பிரச்சனைகளில் முக்கியமானவை. சாதிய/வர்க்கக் கொடூரமும், மதவாத பயங்கரமும் பல நூற்றாண்டுகளாக மனித குலத்தை வஞ்சித்துக்கொண்டும், உலகத்தின் மீது வன்முறை செலுத்திக்கொண்டும் இருக்கின்றன.

இவ்வுலகில் மதம் பிறந்த பிறகு மனிதம் காணாமல் போயிற்று. கடவுள் என்கிற ஒரு “அமைப்பை” கட்டமைத்து மக்களை தம் கட்டுப்பாட்டுகளுக்குள் கொண்டுவந்துள்ள மதங்கள் பன்முகங்கொண்ட இவ்வுலகை ஒற்றை அடையாளங்களாக மாற்றியுள்ளன. உலக மனிதராக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தம் அடையாளங்களாக மாற்றி “உண்மை” மனிதர்களை மதங்கள் கொன்று குவித்துக்கொண்டே இருக்கின்றன.

சொர்க்கம்/நரகம், நாகரீகம்/அநாகரீகம், நீதி/அநீதி என்கிற செயற்கையான நெறிகளை உண்டாக்கி மனித உரிமைகளை சூறையாடும் அவை மனித இனத்தின் கேடுகளில் முதன்மையானவை.

ஆகையால், மதங்கள் இல்லாத உலகம் உருவாக வேண்டுமென்பது என் விருப்பம். இவ்விருப்பம் என் ஆழ்மனதில் பதிந்துள்ளது என்றே நம்புகிறேன். இதோடு என் சிறு வயதில் நான் பார்த்த/செய்த ஜாதிய கொடுமைகளும் என் படைப்புகளில் தொடர்ந்து வருகின்றன. அறியாமையில் நான் செய்த ஜாதி பாகுபாடுகள் என்னை வாட்டியெடுக்கும்.

பிறந்து வளர்ந்த சமூகத்தின் “இன்சைட் க்ரிடிக்” ஆக என் படைப்புகள் இருக்க வேண்டுமென்பது என் “பொலிடிகல் கரெக்ட்னெஸ்” (பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்னும் சொல்லாடலை தவறாக புரிந்துகொள்ளும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதன் உண்மையான பொருளில் என் கருத்தை புரிந்துகொள்ள வேண்டும்). இவை என் ஆழ்மனதிலேயே இருப்பதால் என் கதையோட்டத்தில் அவை இயல்பாக வருகின்றன என்றே நம்புகிறேன். வேண்டுமென்றே அவற்றைக் கதைகளுக்குள் புகுத்த நான் எப்போதும் முயற்சி செய்ததில்லை, செய்வதும் இல்லை.   

உங்கள் கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு வருகிறேன். மதவாதமும் ஜாதிக் கொடுமையும் அடிப்படையில் ஒன்று தான். இரண்டுமே செயற்கையானவை மற்றுமல்லாது மனிதர்கள் மீது அடையாள அரசியலைத் திணிப்பவை, தனி மனித உரிமைகளை நிராகரிப்பவை. அவற்றின் அடிநாதமே வெறுப்பும் வண்முறையும் தான்.

உலகெங்கும் அடையாள அரசியல் ஓங்கி நிற்கும் இவ்வேளையில் மதம், ஜாதிகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதத்தை போற்றுவது இலக்கியத்தின் கடமை என்றே நான் நம்புகிறேன்.

  • யதார்த்தவாத சிறுகதைகளின் இறுதியில் மாயத்தன்மைகள் சேர்ந்து முடிவடைவதை தொடர்ச்சியாக உங்கள் கதைகளில் காணமுடிகிறது. சில தருணங்களில் அவை காஃப்காவை நினைவூட்டுகின்றன. அப்படி அமைவதற்கு ஏதேனும் பிண்ணனி உண்டா?

பின்னணி ஒன்றுமில்லை, எனக்கு அது இயல்பாக வருகிறது என்றே நினைக்கிறேன். நான் யோசிப்பதே “சர்ரியல்” ஆகத் தான் இருக்கும். இரவுகளில் என் கண்களுக்கு யார் யாரோ தெரிவார்கள், செவிகளில் யார் யாரோ பேசுவார்கள்… தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத தருணத்தில் கதையின் தொடக்கப் புள்ளி திடீரென்று என்க்குள் பாயும். சில நேரங்களில் மின்சாரம் பாய்ந்தது போல் எழுந்து அமர்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். அந்நேரங்களில் நான் “வேறொருவனாக” இருப்பதைப் பிறகு அறிந்துள்ளேன். “ட்ரான்ஸ்” நிலையில் சில கதைகளை எழுதியுள்ளேன். அப்படி எழுதுவது எனக்கு மன நிம்மதியை தருகிறது, உற்சாகத்தை அளிக்கிறது! கதையைத் திருத்தி எழுதும் போது கதை எழுத ஆரம்பித்த தருணத்தின் மனநிலைக்கு உண்மையாக இருக்கவே விரும்புவேன்; அதைப் பெரிதாக மாற்றமாட்டேன். பித்து நிலையில் எழுதுவது என் மனதிற்கு மிகவும் பிடிக்கிறது.  

கண் யதார்த்தத்தை விட உணர்வு யதார்த்தத்தை வெளிப்படுத்தவே நான் விரும்புகிறேன். அதனால் தான் மாயத்தன்மைகள் என் பெரும்பாலான கதைகளில் காணப்படுகின்றன. அரேபிய நாட்டார் மரபில் ஒரு நம்பிக்கை உள்ளது: கவிதையை மனிதர்கள் எழுதவதில்லை, “ஜின்”கள் மனிதர்களுக்குள் புகுந்து கவிதைகளை எழுதுகின்றன என்று. “அல் கொஸாமா” நாவலில் அதை நான் கையாண்டிருப்பதை நீங்கள் அறிவீர்.

  • அல் கொஸாமா நாவலிலும் சில சிறுகதைகளிலும் தொன்மங்களைக் கையாள்கிறீர்கள். அவை நவீன வாழ்க்கையுடன் இணையும் இடங்களை விரிவாகப் பேசுகிறீர்கள். இது தொன்மத்தின் மீதான ஈர்ப்பினால் அமைவதா அல்லது கருத்தியல் ரீதியாக அணுக முடியுமா?

தொன்மத்தின் மீதான ஈர்ப்பினால்… அதுவும் மதங்கள் இல்லாத, குடும்பம், நாடு முதற்கொண்டு அனைத்து “நிறுவனங்களும்’ உருவாக்கப்படாத காலகட்ட அழகின் மீதான என் ஈர்ப்பின் காரணமாகத் தான் தொன்மத்தை பின் நவீன காலத்தோடு இணைக்கிறேன்.  

  • இருமொழிகளில் எழுதும் நீங்கள் ஆதர்சங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

இருமொழி இலக்கியங்களில் மனிதம் (மதங்கள் கூறும் பொருளில் அல்ல) பேசும் படைப்புகள் என் ஆதர்சம். ஆயிரம் வருடங்களாக இருமொழி இலக்கியங்களிலும் மதங்கள் கூறும் நெறிகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதத்தை கூறிக்கொண்டே வருகின்றன. அவை தான் என் ஆதர்சங்கள்.  

  • சமகால கன்னட இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் உங்கள் அவதானிப்புகள் என்ன?

சமகாலத்தை பொருத்த வரையில் தமிழில் தான் இலக்கியம் வெவ்வேறு கோணங்களில் அணுகப்படுகிறது. பின் நவீன எழுத்துகள், அதன் வாசிப்பும் புரிதலும் தமிழில் அதிகம். நவீன கன்னட இலக்கியத்தில் “நவ்யா”, “பண்டாய” மற்றும் “தலித்” இலக்கிய காலகட்டங்களில் வந்த படைப்புகள் சிறப்பாக உள்ளன.  

  • உங்கள் அடுத்த படைப்புகள் குறித்து சில வார்த்தை...

தமிழில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். கன்னடத்தில் இரண்டு நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன. சினிமாவிலும் ஆர்வமுள்ள காரணத்தால் தொடர்ந்து புனைவு எழுதமுடியவில்லை. வரும் நாட்களில் எனக்குள் “ஜின்” புகுந்து என்னை ஆட்டிப் “படைக்கும்” என்றே எதிர்பார்க்கிறேன்.

*

சக எழுத்தாளருடன் பேசுவது சிறப்பான அனுபவம். இந்த நேர்காணலில் என் எழுத்துலகத்தைப் பற்றி மட்டும் பேசினாலும் இக்கேள்விகளின் பின்னால் இருக்கும் சக எழுத்தாளர்கள் மீதான உங்கள் அன்பு,  சமகால இலக்கியம் குறித்தான உங்களுடைய அவதானிப்பு இருப்பதை அறிவேன். இந்த அழகான நேர்காணலுக்கு நன்றி. இதை பிரசுரிக்கும் “யாவரும்” இணைய இதழுக்கு நன்றி.

– கிருஷ்ணமூர்த்தி

***

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பிறந்தவர். தனியார் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரை என்று தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர். மின்னஞ்சல் முகவரி : krishik10@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here