ஆனை வாசல்

எப்போதும் கனவில்
என்னைத் துரத்தும்
ஒரு யானை
மரத்தின் மீதோ
மொட்டை மாடியிலோ ஏறி
நான் தப்பிப்பேன்
பலசமயம் ஏதோவொரு
வீட்டிற்குள் ஓடிப்
புகுந்து கொள்வேன்
சிறிய வாசலினுள் நுழைய முடியாமல்
ஒற்றைக்கண் காட்டி
அங்கேயே
அசைந்தபடி காத்திருக்கும்
யானை
நான் விழித்து தப்பி
வெளியே வந்துவிட்டாலும்
பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
எப்போதும் எனக்குள்ளென இருக்கும்
அந்த யானை
கனவில் மட்டும்தான்
வந்து போகிறதெனில்
ஒரு யானை
வந்துபோகிற அளவு வாசல்
எனக்குள் இருக்கிறது தானே
*
உடலின் கடல்
ஒரு துளி நீந்திக்கடந்திடாத
உடலின் கடல்
மீண்டும் மீண்டும் உருதிரளாத
மொழியின் அலை
விழியொளி மயங்கச்
சரியும் அந்தி
விரல்களின் மென்காற்றில்
கவிழும் பகல்
இரவின் மயிற்கூட்டம்
சுழற்றிக் கலைக்கும்
அழிவின் தவம்
கூடல் தழல்
வியர்வை மழை
ஆழிச்சுழி
அர்த்தப்பிழை
ஆழக்கருவழியில்
திறக்க மறந்த
துளியின் சிப்பி
வெடித்துச் சிதறும்
உவர்ப்பின் தசை
விண்ணேறும் ஆயிரம்
சூரியத் தரளம்
கோடி விடியல்
குருதிக்கடல்
சப்தம்
மௌனம்
சாக்கடை
தீ
வண்ணம்
தாளம்
பசி
பாதாளம்
உயிர்
காலம்
நிணம்
மணல்
வேர்
வழி
பாறை
குயில்
கதிர்
முகில்
எடை
முலை
சுனை
இமை
மலர்
சதை
மயிர்
வலி
மலம்
கனி
மரம்
நதி
வெயில்
குளிர் நிழல்
கொடுந்தழல்
நிகர்த்த ஓர்
இருள் இருள் இருள்
மீண்டும்
பகல் பகல் பகல்
அலை அலை அலை
மீண்டும்
உடல் உடல் உடல்
உடலின்
கடல் கடல் கடல்
ஒரு துளி நான்
கரை சேர விரும்பா
கடல் கடல் கடல்
உடலின்
கடல் கடல் கடல்
*
நதியின் மத்தியில்
ஒரு மணற்குன்று
சிறிய காடு
இல்லாத இரு பறவைகளின்
ஓசை கேட்கிறது
பாடலின் வசந்தம்
வாசத்தை திரிக்கிறது
வாசம் ஒரு மலரை
கண்டடைகிறது
மலர் ஒளியைத் திறக்க
ஒளி இருளை அழைக்க
இருள் மழையை
நிகழ்த்துகிறது
இல்லாத இடத்தில்
இறுவேறு உடல்கள்
எப்படித் திளைக்கும்?
ஒன்றென
நதியின் மத்தியில்
மணற்குன்றில்
இல்லாத பறவைகளின் சிரிப்பொலியில்
மலர் மாற்றுகிறது மழையை
மீண்டும் ஒரு சிறு
நதியென
***
ஆனந்த் குமார் – நவீன கவிஞர்களில் ஒருவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார் இவரது இரண்டாவது தொகுப்பான ‘ப்ளம் கேக்’ சமீபத்தில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: ananskumar@gmail.com

