Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்அகிம்சையின் எல்லைகள் : காசா எழுப்பும் வினாக்கள்

அகிம்சையின் எல்லைகள் : காசா எழுப்பும் வினாக்கள்

த. கண்ணன்

(1)

ராண்டுகளாக காசாவில் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றுவருகிறது. இது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இசுரேல் மீது ஹமாசு அமைப்பினர் தொடுத்த தாக்குதலுக்கு எதிர்வினை என்பது ஒரு குறைபட்ட புரிதல். அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படுகொலையை நோக்கிப் பாலசுத்தீனம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தியப் பிரிவினையின்போதான மதக்கலவரங்களுக்கும் படுகொலைகளுக்கும் எப்படி அதற்கு முன்பு பிரித்தானியக் காலனியாதிக்கம் நூறாண்டு காலமாக வித்திட்டதோ, அதுபோலவே பிரித்தானியர்களாலும் பிற ஐரோப்பியர்களாலும் இடப்பட்ட வித்துதான் இன்று நச்சு மரமாகப் பழுத்து நின்று பல்லாயிரம் குழந்கதைகளின் அழிவுக்குக் காரணமாக இருந்துள்ளது. 

வன்முறை என்பது ஒரு சுழல். ஒரு வன்முறைச் செயல் இன்னொன்றுக்கு இட்டுச் செல்கிறது. ஐரோப்பாவில் யூதர்கள் மீது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாடுகளும் செலுத்தப்பட்ட அடக்குமுறையும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சசயனியக் கருத்தாக்கத்தின் தோற்றம், சயனிய ஆதரவு பால்ஃபோர் அறிவிப்பு, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் பாலசுத்தீனம் வந்தது, இசுரேல் என்ற நாட்டை அமைப்பதற்காக பாலசுத்தீனர்கள் மீது சயனிய யூதர்கள் தொடுத்த தாக்குதல்கள், ஐ.நா.அவையில் பாலசுத்தீனத்தைப் பிரிப்பதற்கான திட்டம் நிறைவேறியது, நக்பா என்ற மானுடப் பேரழிவின்போது 7.5 லட்சம் பாலசுத்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டும் ஊர்களைவிட்டும் விரட்டப்பட்டது, இசுரேல் மீது அரபு நாடுகளின் தாக்குதல், இசுரேல் பெற்ற போர் வெற்றிகள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களின் உதவியுடன் அதன் படைபலம் பன்மடங்கு பெருக்கப்பட்டது, பாலசுத்தீனர்களின் விடுதலைப் போர், மேலும் பல பாலசுத்தீனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டது, மொசாத் உளவு நிறுவனம் தீவிரவாத அமைப்பாகச் செயல்படுவது, காசாவின் மீது இடப்பட்ட பதினைந்து ஆண்டுகால முற்றுகை, ஹமாசு இசுரேல் மீது நடத்திய எதிர்த்தாக்குதல், இசுரேல் காசாவில் கட்டவிழ்த்துள்ள இனப்படுகொலையும் காசாவின் அழிப்பும் என்ற தீராப் பெருஞ்சுழற்சியை வன்முறை விளைவித்துள்ளது. 

இத்தகையதொரு சூழலில் அகிம்சையின் இடம் என்ன என்ற வினா எழுகிறது. குழந்தைகளின் சிதறிய உடல்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கே மானுடத்தின் மீது கடுமையான நம்பிக்கையிழப்பு ஏற்படும்போது அதை நேரடியாக அன்றாடம் அனுபவித்து வருவோர்க்கு அகிம்சை வழியை அறிவுறுத்த இயலுமா என்ற ஐயம் தொடர்ந்து எழத்தான் செய்கிறது. அகிம்சையின் எல்லைகள் என்ன? நாஃசி செருமணி, இன்றைய இசுரேல் போன்ற கொடூரமான ஆட்சியமைப்புகளின் கீழ் அகிம்சை வழி எடுபடுமா முதலான கேள்விகள் தொடர்ந்து எழுப்ப‍ப்படுகின்றன. 

குறிப்பாக, பாலசுத்தீன விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக நடந்த அமைதிவழி எதிர்ப்புகள் மிக‍க் கடுமையாக நசுக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சான்றாக, காசாவில் 2018-19ஆம் ஆண்டுகளில் வெள்ளிதோறும் நடந்த இல்லந்திரும்பும் பெருநடைப் போராட்டத்தின் போது 223 பாலசுத்தீனர்களை இசுரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். படகுகளில் காசா மக்களுக்கு உணவளிக்க உலகெங்கிலும் இருந்து செயல்பாட்டாளர்கள் வரும்போது, அப்படகுகள் மீது இசுரேல் குண்டுகள் வீசித் தாக்கியுள்ளது. கிரேட்டா துன்பர்க், தியாகோ அவிலா போன்ற அமைதிவழிப் போராளிகளைச் சிறைப்படுத்திக் கொடுமைகள் பல இழைத்து வெளியேற்றினர். போர்ப்பகுதியில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊடகர்களும் மருத்துவர்களும் செவிலியரும் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். பாலசுத்தீனத்தில் மிகுதியான மக்களாதரவு பெற்ற மிதவாத‍த் தலைவரான மர்வான் பர்கௌட்டி 23 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுள்ளார். இசுரேலுடைய நோக்கம் பாலசுத்தீனர்களை முழுமையாக அழித்தும் வெளியேற்றியும் காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பாலசுதீனப் பகுதிகளில் யூதர்களைக் குடியேற்றுவது என்பதைப் பல இசுரேலிய அமைச்சர்களே வெளிப்படையாகப் பேசிவருகின்றனர்.

இக்கொடுஞச்செயல்களுக்கு இசுரேலிய மக்களில் பெரும்பாலானோர் ஆதரவு நல்கத்தான் செய்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இசுரேலுக்குப் பக்கபலமாக இருந்து பணமும் ஆயுதங்களும் வாரிவழங்கும் அமெரிக்காவிலும் வலுவான ஆதரவு உளநிலையே நீடிக்கிறது. இந்நிலையில் அகிம்சைப் போராட்டம் எப்படிச் சாத்தியம் என்ற வினா வலுவாகவே எழுகிறது. 

 அகிம்சையின் எல்லைகள் குறித்த ஐயங்களை அணுக காந்தியிடமே விடைதேடலாம். இசுரேல்-பாலசுத்தீனப் பிரச்சனை குறித்தும், நாஃசிக்களின் கீழ் யூதர்களின் நிலை குறித்தும் காந்தி கொண்டிருந்த கருத்துகளின் வாயிலாக அணுகலாம். 

(2)

1921ஆம் ஆண்டு சேவார்(ஸ்) ஒப்பந்த‍த்தின்படி பாலசுத்தீனம் துருக்கியர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்தானியர்கள் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட போதே காந்தி அதை வன்மையாக‍க் கண்டித்தார். துருக்கியர்களே ஏற்றுக்கொண்டாலும், பாலசுத்தீனம் உள்ளிட்ட பகுதிகளின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பை இந்திய இசுலாமியர்கள் ஏற்றக்கொள்ள இயலாது என்றார். ‘இசுலாத்தின் புனித‍த் தலங்களின் மீது (பிரிட்டன்-பிரான்சு) நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்துவதை இந்திய இசுலாமியர்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது. எனவே, பாலசுத்தீனமும் இசுலாமியர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தாகவேண்டும். நான‍றிந்தவரை, யூதர்களும் கிறித்தவர்களும் பாலசுத்தீனம் சென்று தங்கள் சமயச் சடங்குகளைப் புரிவதற்கு எந்த‍த் தடையும் இருந்ததில்லை. எந்த மறைநூலும் அறநெறியும் போர்நெறியும் நேசநாடுகள் பாலசுத்தீனத்தை யூதர்களுக்குக் கொடையாக வழங்குவதை நியாயப்படுத்த இயலாது. இது குறிப்பாக இந்திய இசுலாமியர்களும் பொதுவாக இந்தியர்கள் அனைவரும் கொண்டிருந்த நம்பிக்கையை மீறுவதாகும். இத்தகைய நிலப்பறிப்பைப் பற்றிய சாத்தியத்தை பிரிட்டன் போருக்கு முன்பே அறிவித்திருந்தால், ஒரு இந்தியப் படைவீரன்கூட போருக்குச் சென்றிருக்க மாட்டான். எதிர்காலத்தில், பிரித்தானியப் பேர‍ரசிலன்றி, பிரித்தானியப் பொதுநலவாரியத்தில் சுதந்திரக் கூட்டாளியாக இந்தியா நீடிக்கவேண்டுமானால், துருக்கியின் அரசியல் தலைவர்களிடம் கிலாபத் குறித்த உடன்படிக்கையை எட்டாமல், இசுலாமிய சமயத் தலைவர்களிடம் உடன்பாடு காணவேண்டும்.’ (The Bombay Chronicle, 17-3-1921)    

மாற்றுதேசத்து ஆதிக்கத்கில் இருந்த நாட்டின் தலைவரொருவர் பாலத்தீனப் பிரச்சனை முளைவிடும்போதே அதற்கெதிராகக் குரலுயர்த்தியிருக்கிறார். இக்காலக்கட்டத்தில் எல்லையற்ற படைப்பூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் செயல்பட்டிருக்கிறார். 

கிலாபத் இயக்கத்தின் விளைவாக பாலசுத்தீனத்தையும் வென்றெடுக்க முடியும் என்று கூறினார். ‘துறவிகளாக உங்களை மாற்றிக்கொண்டு அமைதிவழியில் நிலைத்திருந்தால், உறுதியாக பாலசுத்தீனத்தைக்கூட வெல்வோம். மற்றவர்களைத் துறவுபூணச் சொல்லி வற்புறுத்துவதன் மூலம் வெல்லமுடியாது. யார் சிறைக்குச் சென்றுவிட்டாலும், நாம் அமைதிவழியில் இருக்கவேண்டும். அவர்கள் சிறை செல்லட்டும். நீங்களும் சிறைசெல்ல அணியமாகுங்கள். ஆனால் வன்முறைச் செயல்களுக்காக நீங்கள் சிறைப்படக்கூடாது. உண்மையான பணிக்காகச் சிறைப்படுங்கள். அத்தகைய பணிக்காக அரசாங்கம் உங்களைச் சிறையில் தள்ளுமேல், அன்றைய நாளே நமக்கு வெற்றித்திருநாள். இவ்வகையில் ஆட்சிசெய்ய முயன்றால், அரசு உலர்ந்த இலை போல வீழும். எவரேனும் சிறைப்படும்போது கலவரம் விளைவித்தல் பலவீனத்தின் வெளிப்பாடு. அச்சத்தின் வெளிப்பாடு.’ (Navajivan,3-4-1921)

யூதர்கள் மீது கிறித்தவத்தின் பெயரால் செலுத்தப்படும் ஒடுக்குமுறையைச் சுட்டிக்காட்டி, கிறித்தவர்கள், யூதர்கள் இருதரப்பினரும் தம்மிடமுள்ள குறைகளைக் களைய வேண்டும் என்றார். யூதவெறுப்பு காட்டுமிராண்டித்தனத்தின் எச்சம் என்றும் இந்த யூதவெறுப்பைத் தன்னால் புரிந்துகொள்ளவே இயலவில்லை என்றும் கூறினார். எனினும் சயனியத்தை மறுத்துப் புதிய பொருளும் புகட்டினார். 

‘யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களா என்ற கேள்விக்கு, ஒருவகையில், ஆம், என்பேன். ஆனால் எல்லாச் சமய மக்களுமே தங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றே கருதுகின்றனர். சயனியம் ஆன்மீக நோக்கில் ஓர் உயர்ந்த விழைவுதான். ஆன்மீக நோக்கு என்பதை அவர்கள் அகத்திலுள்ள செருசேலத்தை உணர்வதையே விழைய வேண்டும் என்ற பொருள்படச் சொல்கிறேன். பாலசுத்தீனத்னை மீண்டும் ஆக்கிரமிப்பது என்ற பொருள்படும் சயனியம் என்னை எவ்வகையிலும் ஈர்க்கவில்லை. பாலசுத்தீனத்துக்கு ஒரு யூதன் திரும்ப வேண்டும் என்று எண்ணுவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்; தனதோ பிரித்தானியர்களுடையதோ, துப்பாக்கியின் துணையின்றிப் போகலாம், அராபியர்களுடன் தூய நட்போடு போகலாம். நான் பொருள‍ளித்துள்ள உண்மையான சயனியம் அடைய முயல்வதற்கும், விழைவதற்கும், அதன்பொருட்டு இறப்பதற்கும் ஏற்ற ஒன்று. சயனியம் நெஞ்சகத்தில் உள்ளது. அதுவே இறைவனின் கோயில். ஆன்மீக செருசேலமே உண்மையான செருசேலம். யூதன் உலகின் எந்த மூலையிலிருந்தும் சயனியத்தை அடையலாம்.’ (The Jewish Chronicle, 2-10-1931) /   

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் மிக நெருங்கிய நண்பர்களில் பல யூதர்கள் இருந்தனர். காலன்பாக், போலக், சோஞ்சா கிளெசின் போன்றவர்கள் காந்தியின் குடும்பத்தினராகவே இருந்தனர். எனினும் அவர்களுடனான நட்பு யூதர்கள் குறித்த கருத்துத்தெளிவை எட்டுவதற்கத் தடையாக இருக்கவில்லை. யூதர்களின் நிலையை இந்தியாவில் தீண்டப்படாதாரின் நிலைக்கு இணைவைத்தும் பார்த்தார். இதுவும் அறம் சார்ந்த அவரது நிலைப்பாட்டைக் குலைக்கவில்லை. 

/‘யூதர்கள் மீதான என் இரக்கம், அறத்தின் தேவைகளுக்கு என்னைக் குருடாக்கவில்லை. யூதர்களுக்கு தேசம் வேண்டும் என்ற கோரிக்கை என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதற்கான நியாயம் விவிலயத்திலும் பாலசுத்தீனம் திரும்புவதில் அவர்கள் காட்டும் உறுதியிலும் இருப்பதாக‍க் காட்டி ஏற்பைக் கோருகின்றனர். ஏன் அவர்களும் பிற நாட்டு மக்களைப் போலவே, தாங்கள் பிறந்து பொருள் ஈட்டி வாழும் நாட்டினைத் தங்கள் நாடாகக் கொள்ளக்கூடாது.

இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு எப்படிச் சொந்தமோ, பிரான்சு எப்படி பிரெஞ்சு மக்களுக்குச் சொந்தமோ அதுபோலவே பாலசுத்தீனம் அராபியர்களுக்குச் சொந்தம். பாலசுத்தீனத்தில் இன்று நடைபெறுவதை எந்த அறநெறியின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஆணைகளுக்கு உலகப் போர் அளித்த உரிமமன்றி வேறில்லை. பாலசுத்தீனத்தைப் பகுதியாகவோ முழுமையாக யூதர்களின் தாய்நாடாக மீளவும் அளித்துப் பெருமைமிக்க அராபியர்களைக் குறைப்பதென்பது உறுதியாக மானுடத்துக்கு எதிரான குற்றம். யூதர்கள் எங்கு பிறந்து வளர்ந்தார்களோ அங்கேயே அவர்களை நியாயமாக நடத்துவதற்கான அழுத்தம் தருவதே மேன்மையான வழி. பிரான்சில் பிறந்த கிறித்தவர்கள் எவ்வாறு பிரெஞ்சுக்கார‍ர்களோ, அவ்வாறே பிரான்சில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சு மக்களே. பாலசுத்தீனம் தவிர வேறு நாடு வேண்டாமெனில், யூதர்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதை விரும்புவார்களா? அல்லது, அவர்களுக்கு விருப்பம்போலத் தங்க இரண்டு நாடுகள் வேண்டுமென்கிறார்களா? யூதர்களின் நாடு என்ற கோரிக்கை செருமாணியர்கள் யூதர்களை வெளியேற்றுவதற்கு வண்ணமயமான ஒரு நியாயத்தை வழங்குகிறது. 

ஆனால் யூதர்கள் மீதான செருமாணிய ஒடுக்குமுறைக்கு இணையான செயல் வரலாற்றில் வேறில்லை. பழங்கால‍க் கொடுங்கோலர்கள் எவரும் இட்லர் அளவுக்கு வெறிபிடித்துப் போனதில்லை. இதை அவர் ஒரு மதவெறியுடன் செய்கிறார். பிறரை விலக்கும் தீவிர தேசியவாதம் என்ற ஒரு புதிய மத‍த்தையே உருவாக்குகிறார். அதன் பெயரால் மனிதத்தன்மையற்ற எச்செயலும் இம்மையிலும் இனிமேலும் பலன்தர‍க்கூடிய மானுடச் செயலாகிறது. அச்சமற்ற வெறிபிடித்த ஓர் இளைஞனின் குற்றச்செயல் மொத்த இனத்தின் மீது நம்பவியலாத கொடூரத்துடன் பாய்கிறது. மானுடத்தின் பெயரால், மானுடத்திற்காக ஒரு நியாயமான போர் இருக்கமுடியுமானால் ஒரு மொத்த இனத்தின் அழிவைத் தடுப்பதற்காக செருமணிக்கு எதிரான போராகவே அது இருக்கும். ஆனால் எந்தப் போரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய நோக்குக்கும் எனது இயங்குதளத்துக்கும் வெளியேதான் அத்தகைய போரின் நன்மை தீமைகள் குறித்த உரையாடல் உள்ளது. /

மேலும் கடவுள் நம்பிக்கையுள்ள எவரும் உதவியற்றவர்களாகவும் கைவிடப்ட்டவர்களாகவும் உணரக்கூடாது என்றும், யூதர்களின் யெகோவா பிற மதக்கடவுள்களைவிடவும் அந்தரங்கமான கடவுள் என்றும் சொல்கிறார். ‘நான் யூதனாக இருந்திருந்து செருமணியில் பிறந்து பொருளீட்டி வாழ்ந்திருந்தால், எந்த உயர்ந்த செருமாணியனையும் போலவே நானும் அதை என்னுடைய நாடு என்று உரிமைகோரி, என்னைச் சிறையில் அடைக்கும்படியோ சுட்டுத்தள்ளும்படியோ சவால் விட்டிருப்பேன். வெளியேற்றப்படவும் எந்தப் பாகுபாட்டுக்கு உடன்படவும் மறுத்துவிடுவேன். இந்தச் சட்டமறுப்பு எதிர்ப்பைக் காட்டுவதில் பிற யூதர்கள் என்னோடு இணைய வேண்டும் என்று காத்திருக்க மாட்டேன். இறுதியில் எனது உதாரணத்தை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவேன். ஒரு யூதரோ எல்லாருமோ நான் அளிக்கும் தீர்வை ஏற்றுக்கொள்வார்களேயெனில், அவர்கள் இப்போதுள்ளதைவிடத் தாழ்ந்துவிடமாட்டார்கள். தாமாக முன்வந்து ஏற்ற மெய்வருத்தம் அகவலிமையையும் உவகையையும் கொணரும். எத்தனை தீர்மானங்கள் செருமணிக்கு வெளியே நிறைவேற்றப்பட்டாலும் அவற்றுக்கு ஈடாகா. இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் செருமணிக்கு எதிராகப் போர்தொடுத்தால்கூட இத்தகைய அகமகிழ்வையும் அகவுறுதியையும் கொண்டுவர முடியாது. இத்தகைய போர்களுக்கு எதிர்வினையாக இட்லர் யூதர்களைப் படுகொலை செய்வதையே முதல் பதிலாகத் தரவும்கூடும்.’ 

பாலசுத்தீனத்திலுள்ள யூதர்களுக்கும் அகிம்சையையே பரிந்துரைக்கிறார். பாலசுத்தீனத்தில் இடம் வேண்டுமெனில் அராபியர்களின் மனங்களை வெல்லவேண்டும். பிரித்தானியர்களின் துப்பாக்கிகளின் துணையோடு பறிக்கக்கூடாது என்கிறார். அவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அராபியர்களும் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்திருந்தால் நல்லதுதான். எனினும் உலக வழக்கின்படி, வெல்லும் வாய்ப்புகளற்ற சூழலில் அராபியர்கள் வன்முறையைப் பின்பற்றுவதைக் குறைகூற முடியாது என்றும் சொல்கிறார். (Harijan, 26-11-1938)

காந்தியின் இக்கருத்துகளுக்குப் பல தரப்புகளிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. காந்தியைச் சயனிசத்திற்கு ஆதரவானவராக மாற்ற இந்தியா வந்த காலன்பாக் முயன்றார். முடியவில்லை. 

Jewish Frontier என்ற இதழில் வந்த எதிர்வினைக்கு காந்தி ஒரு நீண்ட கட்டுரையை மறுமொழியாக எழுதினார். 

/இந்தக் கட்டுரையை நான் ஒரு விமர்சகனாக எழுதவில்லை. யூத நண்பர்களின் வலியுறுத்தலின் பொருட்டு எழுதினேன். நான் எழுத முடிவுசெய்த‍தும் வேறெப்படியும் எழுதமுடியவில்லை. நான் அதை எழுதியதுமே யூதர்கள் எனது கருத்தை ஏற்று மாறிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒற்றை யூதர் இதையேற்று மாறியிருந்தால்கூட நிறைவடைந்திருப்பேன். இக்கட்டுரையை நிகழ்காலத்துக்காக மட்டுமே எழுதவுமில்லை. எனது எழுத்துகள் என் காலத்தைத் தாண்டி நிற்கும் என்றும், எதற்காக எழுதப்பட்டனவோ அந்த நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக அமையும் என்றும் நம்புகிறேன். எனக்குத் தெரிந்து, நான் எழுதியது ஒரு யூதரைக்கூட மாற்றவில்லை என்பது ஏமாற்றமளிக்கவில்லை. 

இந்த எதிர்வினையைப் பலமுறை படித்தபின்பும், எனது கருத்தை மாற்ற வேண்டியதற்கான காரணம் எதுவும் தட்டுப்படவில்லை. இக்கட்டுரையாளர் சொல்வது போல, “செருமணியில் ஒரு யூத காந்தி தோன்றினால், ஐந்து நிமிடங்களே செயல்பட முடியலாம். உடனே அவர் கில்லட்டினுக்கு இழுத்துச் செல்லப்படுவார்,” என்பது நடக்கவே சாத்தியம் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அது எனது வாத‍த்தைப் பொய்யாக்கவும் செய்யாது அகிம்சையின் திறன்மீது எனக்குள்ள நம்பிக்கையை அசைக்கவும் செய்யாது. ஆயிரங்களில் இல்லாவிடினும் நூற்றுக்கணக்கோர் எரியூட்டப்பட்டுத்தான் அகிம்சையில் நம்பிக்கையற்ற கொடுங்கோலர்களின் பசி அடங்கக்கூடும். உண்மையில், மாபெரும் இம்சையின் முன்னர்தான் அகிம்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் பொதுவான விதி. அதன் தரம் அத்தகைய நேரங்களில்தான் சோதிக்கப்படுகிறது. துன்பத்தை ஏற்பவர்கள் தங்களது வாழ்நாளில் அதன் பலன்களை அனுபவிக்க வேண்டியதில்லை. தங்களது கொள்கையினர் பிழைத்தால், நல்விளைவு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை வேண்டும். வன்முறை வழிகள் அகிம்சையைவிடக் கூடுதல் பயனளிக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூறமுடியாது. பன்மடங்கு குறைந்த பயனையே அளிக்கும். அகிம்சையாளருக்கு உள்ள நம்பிக்கை அவர்களிடம் இராது.  (….)

இது இவ்விதழின் ஆசிரியருக்கோ, என் யூத நண்பர்களுக்கோ நிறைவளிக்காது என்பதை வருத்த‍த்துடன் அறிவேன். செருமணியில் யூதர்கள் மீதான அடக்குமுறை முடிவுக்கு வரும் என்றும், பாலசுத்தீனப் பிரச்சனை தொடர்புடைய அனைவருக்கும் நிறைவுதரும் வகையில் தீர்க்கப்படும் என்றும் உளப்பூர்வமாக விரும்புகிறேன். ‘ / (Harijan, 27-5-1939)

காந்திக்கு அகிம்சையின் மீதிருந்த முழுமையான நம்பிக்கைக்குச் சான்றாக அமைந்து இட்லருக்கு அவர் எழுதிய கடிதம். 

/23 ஜூலை 1939

அன்புள்ள நண்பரே,

மானுடத்தின் பொருட்டு எனது நண்பர்கள் உங்களுக்கு என்னை எழுதச்சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்று எழுதுவது அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றுமோ என்றெண்ணி நான் தயங்கிவந்தேன். ஆனால் தேவையற்ற கணக்குகள் போடாமல், என் கோரிக்கைக்கு என்ன மதிப்பிருந்தாலும் அதை முன்வைக்க வேண்டும் என்று ஏதோ உள்ளுணர்வு சொல்கிறது. 

உலகத்தை நாகரிகமழிந்த நிலைக்குத் தள்ளக்கூடிய போரைத் தடுக்க‍க்கூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கு எவ்வளவு உயர்ந்ததாகத் தெரியினும் அச்செயலுக்கு இவ்வளவு பெரும் விலை தர வேண்டுமா? ஆயுதப்போரினை ஓரளவு வெற்றியுடன், முற்றிலும் ஒதுக்கிவிட்ட ஒருவனின் சொல்லுக்குச் செவிசாய்ப்பீர்களா?

உங்கள் உண்மையான நண்பன்

மோ.க.காந்தி. /

(Harijan, 9 September, 1939)

காந்தியின் கடிதம் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. பிரித்தானிய அரசால் தடுக்கப்பட்டது. அதனால் உடனடி மாற்றம் வந்திருக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆயினும், அகிம்சையின் மீது காந்திக்கிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை இக்கடிதம் வெளிப்படுத்தியது. இறைநம்பிக்கையை ஒத்த இத்தகைய பிடிவாதமான நம்பிக்கை அகிம்சைப் போராளிகளுக்குத் தேவை என்றே காந்தி கருதினார். 

பிறகு இரண்டாம் உலகப்போரின் முடிவிலும் பாலசுத்தீனம் குறித்த தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.  

/’பாலசுத்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

இது கிட்டத்தட்ட தீர்க்கவே இயலாத சிக்கலாகியுள்ளது. நான் யூதனாக இருந்தால், இதையே அவர்களுக்குச் சொல்வேன்: ’தீவிரவாத‍த்தில் ஈடுபடுமளவு முட்டாள்தனமாக இருக்கவேண்டாம். உங்களுடைய நல்லதொரு வழக்கை நீங்களே வலுவிழக்கச் செய்கிறீர்கள்.’ இது வெறும் அரசியல் நாட்டம் எனில், அதில் எந்த மதிப்பையும் நான் காணவில்லை. எதற்காக அவர்கள் பாலசுத்தீனத்தை விழைய வேண்டும்? யூதர்கள் மாபெரும் இனத்தினர். பல அரிய திறன்களைக் கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவி்ல் யூதர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். இது சமய விழைவு எனில் அதில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை. அராபியர்களைச் சந்தித்து நண்பர்களாக்க வேண்டும். பிரித்தானிய உதவியையோ அமேரிக்க உதவியையோ சார்ந்திருக்கலாகாது. யெகோவாவிடமிருந்து கிட்டும் உதவி மட்மே போதுமானது. 

(Harijan, 18-5-1947, and The Hindu, 6-5-1947)/

பாலசுத்தீனச் சிக்கலுக்கு மிகவும் ஏற்புடைய தீர்வு என்று எதை உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யூதர்கள் தீவிரவாத‍த்தையும் பிற எல்லா வகை வன்முறையையும் விடுப்பதே என்று விடையளித்தார். (The Bombay Chronicle, 2-6-1947)/

இசுரேல் குறித்த காந்தியின் அத்தனை கூற்றுகளும் இன்று மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. வன்முறையால் எழுப்பப்பட்ட நாடு வன்முறையால் மட்டுமே நிலைத்திருக்க முடிகிறது. 

“சயனிய நாட்டின் இப்போதைய பதிப்பு கொலை இயந்திரமாகச் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மீண்டும் சொல்கிறேன் – நீடித்திருப்பதற்கு மட்டுமேகூட அது ஒரு கொலை இயந்திரமாக இருந்தாக வேண்டும்,” என்கிறார் நசீம் நிக்கோலசு தாலேப். 

(3)

அகிம்சைப் போராட்டம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒற்றை நிகழ்வுகளைக் கொண்ட ஒன்றன்று. திடீரென்று எழும் பேரெழுச்சியும் அன்று. அது ஒரு தொடர் செயல்பாடு. நாஃசி செருமணி, சயனிய இசுரேல் போன்ற கொடிய ஆதிக்க ஆட்சிகளுக்குக் கீழ் அகிம்சைப் போராட்டங்கள் வெல்லமுடியாது என்பது வலுவான வாதம் போலத் தோன்றினாலும் அதற்கு எதிரான வலுவான வாதங்களையும் வைக்க முடியும். அதையே காந்தி செய்திருக்கிறார். 

கொடிய ஆட்சிகளுக்கு எதிரான எந்தப் போராட்டமும் கடுமையாக நசுக்கப்படவே செய்யும். இத்தகைய சூழலில் எந்தவொரு போராட்டமும் பேரிழப்புகளைச் சந்தித்தே தீரும். வன்முறைப் போராட்டமாயினும் அகிம்சைப் போராட்டமாயினும் இரத்தமின்றி வெற்றிகள் கிட்டப்போவதில்லை. எவ்வகைப் போராட்டமும் வெற்றி பெறுவது கடினம் என்கிற சூழலில் மக்கள் மந்தமான எதிர்ப்பறு நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆதிக்க ஆட்சியோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதுதான் செருமணியில் நடந்தது. யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு மிக மிக‍ வலுவற்றதாகவே இருந்த‍து. வதை முகாம்களில் அடைபடுவதற்கும் அவற்றை நடத்துவதற்குமேகூட அவர்கள் பெருமளவு ஒத்துழைக்கவே செய்தனர். மிக அரிதாகவே தோன்றிய எதிர்ப்பு கதைக‍ளிலும் திரைப்படங்களிலும் விதந்தோதப்பட்டதால், பெரும் எதிர்ப்பு இருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது என்கிறார் கிழக்கு செருமாணிய யூத எழுத்தாளர் ஜூரெக் பெக்கர். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் இன்றைய பாலசுத்தீனத்தின் மேற்குக்கரையில் நிலவுகிறது. மேற்குக்கரையில் உள்ள பாலசுத்தீன அரசு பெருமளவு இசுரேலோடு ஒத்துழைக்கிறது. தொடரும் ஆக்கிரமிப்பகளைத் தடுக்கும் வலுவும் முனைப்பும் அற்றுள்ளது. 

இந்தச் செயலறு நிலைக்கு மாற்றாகத்தான் காந்தி அகிம்சையை முன்மொழிகிறார். காந்தியின் அகிம்சை வெறும் போராட்ட முறை அன்று. அதுவொரு வாழ்க்கை முறை. அதுவொரு நம்பிக்கை. இறைநம்பிக்கை அளவு வலுவான நம்பிக்கை உண்மையின் மீதும் அகிம்சையின் மீது வைத்திருக்கும்போது போராட்டக் களத்தில் அதுவே பெரும் வலிமையாக உருவெடுக்கிறது. 

அகிம்சைப் போராட்ட முயற்சிகளில் ஒன்றோ சிலவோ தோல்வியுற்றால் உடனே கைவிட வேண்டியதில்லை. அதையே காந்தி கூறுகிறார். தனது வாழ்நாள் தாண்டியும் போராட்டம் நீடிக்கும் என்கிற திடமும் ஒரு அகிம்சைப் போராளிக்கு இன்றியமையாத‍து. 

ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வேலைநிறுத்தம் போன்றவை மட்டுமே ஓர் அகிம்சை வழி இயக்கத்தின் போர்முறைகளல்ல. தொடர்ச்சியான ஆக்கப் (நிர்மாண) பணிகளைச் செய்து வரவேண்டும். ஆக்கப்பணிகள் மூலமாகவே ஓர் அகிம்சைப் படை கட்டியெழுப்பப்படுகிறது. போராட்டங்களுக்குத் தேவையான உள்ள உறுதியும் உடலுறுதியும் அஞ்சாமையும் திட்டமிடலும் அமைதிக் காலங்களில் நடக்கும் ஆக்கப்பணிகளின் மூலமாகவே வளர்க்கப்படுகின்றன. 

தியாகோ அவிலா

இசுரேலிய உணவு முற்றுகையை உடைக்க வந்த மேட்லீன் கப்பலில் இருந்தபோது, பிரேசிலியச் செயல்பாட்பாளர், தியாகோ அவிலா கூறினார், “இந்திய விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்காவில் இனவெறியெதிர்ப்புப் போராட்டம், அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் நடந்த குடிமையுரிமைப் போராட்டம் ஆகியவற்றைப் பார்க்கும்போது வெறுப்பையும் கொடூரத்தையும் அகிம்சை வெல்கிறது என்பதைக் காண்கிறோம். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து முன்செல்கிறோம். காசாவுக்குச் செல்கிறோம். நாங்கள் ஒன்றாக உள்ளோம். இந்த உலகை மாற்றுவோம்” என்றுரைப்பதற்கான தெளிவையும் திட்பத்தையும் அகிம்சை கொடுத்துள்ளது. குண்டுமழையைப் பொருடப்படுத்தாது மீண்டும் மீண்டும் காசா நோக்கிக் கப்பல்களில் சென்ற வண்ணம் உள்ளனர். 

இட்லரின் மனத்தை மாற்ற இயலாவிட்டாலும் நீடித்த அகிம்சைப் போராட்டத்தால், தியாகத்தால், செருமாணியப் பொது மக்களின் மனங்களை மாற்ற முடியும் என்று காந்தி கருதினார். அத்தகைய மனமாற்றம் நிகழச் சில ஆண்டுகள் ஆகலாம். பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால் அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே அந்த மனமாற்றத்தை ஏற்படுத்திக் காட்ட முடியும். இன்றும் இசுரேலிலும் அமெரிக்காவிலும் இந்த மனமாற்றம் சிறுகச்சிறுக நிகழ்வதைக் காணலாம். பல இசைக் கலைஞர்களும், திரைக் கலைஞர்களும். விளையாட்டு வீர‍ர்களும் தங்களது குரல்களை பாலசுத்தீனர்களுக்காக ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். 

பிறநாட்டு இராணுவத் தலையீட்டின் மூலம் கிடைக்கும் வெற்றிகள் பிறவகையான அழிவுகளை ஏற்படுத்தவே செய்திருக்கின்றன. முதலாம் உலகப் போரில் செருமணி தோற்கடிக்கப்பட்டாலும், அதுவே இட்லர் உருவாவதற்கு வழிவகுத்த‍து என்பதைச் சுட்டுகிறார் காந்தி. இரண்டாம் உலகப் போரிலிருந்து நாஃசிகளின் தோல்வியின் மீது எழும்பி வந்த‍து அவர்களுக்கிணையான சயனிய அமைப்பு. வன்முறைச் சுழல் ஒடுக்கப்பட்டவர்களையே ஒடுக்குபவர்களாக்கியது. எகிப்து, ஈராக், ஆப்கானிசுதான், லிபியா, சிரியா, உக்ரைன் என்று அண்மைக்காலத்திலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. 

அகிம்சையின் எல்லைகள் என்று நாம் அஞ்சுவது போராட்டத்தின் எல்லைகளைத்தான். காந்தியப் போராட்டத்துக்கு எல்லைகள் கிடையாது. வெளிநாட்டுத் தாக்குதலையும் அகிம்சை முறையில் எதிர்க்க முடியும் என்று காட்டியது. மக்கள் கலவரங்களையும் அகிம்சை முறையில் கட்டுப்படுத்த இயலும் என்று காட்டியது. 

“மக்களிடம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் கூறவேண்டும். அவர்களது திறனுக்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். அவர்களது திறன் என்ன என்பதை நாம் கணிக்கத் தொடங்கி, அதையொட்டி வழிகாட்டுதல் வழங்கத்தொடங்கினால், நம் வழிகாட்டல்கள் தயக்கமானவையாகவும் சமரசம் செய்துகொள்பவையாகவும் இருக்கும் – அவ்வாறு ஒருபோதும் நிகழக்கூடாது,” என்று மீராபென்னுக்குக் கடிதம் எழுதினார். அவ்வேளையில் (31-மே-1942) மீராபென் ஒரிசாவில் சப்பானியத் தாக்குதலை அகிம்சை வழியில் எதிர்கொள்ள மக்களை அணிதிரட்டி அணியமாக்கி காந்தி பாபா படையை அமைத்துக் கொண்டிருந்தார். 

அப்போது அது பெரிய அளவில் நிகழவில்லை. பின்னர் காந்தியே காசுமீரத்தின் மீதான அப்ரிதி இனக்குழுத் தாக்குதலின் போது தற்காப்புக்கு இந்தியப் படை அனுப்பப்பட்டபோது அதை மறைமுகமாக ஆதரித்தார். சீனப் படையெடுப்பின் போது நாராயண் தேசாய் போன்றவர்கள் தங்கள் சாந்தி சேனையுடன் சீனர்களைச் சந்திக்க முன்வந்தபோது நேரு அனுமதி மறுத்தார். 

வெளிநாட்டுத் தாக்குதலுக்கு எதிராக அமைதி வழியில் எதிர்ப்பும் ஒருநாள் சாத்தியப்படலாம். அப்போதும் அகிம்சையின் எல்லைகள் மேலும் விரிவடைந்திருக்கும். 

இன்று வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றும் பாலசுத்தீனத்திலிருந்து இனவெறி சயனிய ஆட்சியை அகற்றுவதற்கு நீடித்த, சமரசமற்ற அகிம்சைப் போராட்டம் அளிக்கும் சாத்தியங்களை நான் மேலும் பேசவேண்டியுள்ளது. 

*

உதவிய நூல்கள்:

1. The Collected Works of Mahatma Gandhi

2. Mohandas – Rajmohan Gandhi

3. My Life is My Message – Narayan Desai

***

த. கண்ணன் – பொள்ளாச்சி அருகில் சேர்வைகாரன்பாளையம் கிராமத்தில வேளாண்மை செய்துகொண்டு கிராமக் குழந்தைகளுக்கான பயிலகம் நடத்தி வருகிறார். காந்திய காலத்துக்கொரு பாலம், ஒளிர்மண மலர்கள், போரும் அகிம்சையும் – காஷ்மீர் குறித்து காந்தி,  From Reality to Truth முதலிய நூல்களை எழுதியுள்ளார். Mahatma Gandhi in Tamil Literature தொகுப்பு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல்: tkan75@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here