Tuesday, January 27, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்ஐந்து குறுங்கதைகள்

ஐந்து குறுங்கதைகள்

லிடியா டேவிஸ்

தமிழில் : ராம்

அந்த மீன்

ன்றைய தினம் தான் செய்த சரிசெய்ய முடியாத தவறுகளைப் பற்றி எண்ணியவாறே அந்த மீனை வைத்துக்கொண்டு நின்றிருக்கிறாள் அவள். அதைச் சமைத்து முடிக்கும்போது அவள் அந்த மீனோடு தனித்திருக்கிறாள். வீட்டில் வேறு யாரும் இல்லை—மீன் அவளுக்குத்தான். அன்று அவளுக்குச் சற்று பிரச்சனை மிகுந்த நாளாகத்தான் இருந்தது. இதற்கிடையே மார்பிள் மேடை மீது மெதுவாக ஆறிக்கொண்டிருந்த அந்த மீனை அவள் எப்படி சாப்பிட முடியும்? அதே சமயம், அந்த மீனோ, அசைவின்றி, தனது எலும்புகளிலிருந்து உரித்தெடுக்கப்பட்டு, தனது வெள்ளிச் செதில்கள் களையப்பட்டு, இன்று இருப்பதுபோல் என்றுமே  தனித்திருந்ததில்லை… ஒரு அறுதியான அத்துமீறல் தன்மீது நிகழ்த்தப்பட்டபின், சரிசெய்ய முடியாத புதிய தவறுகளை அன்று இழைத்துவிட்டு அதற்கு மேல் இதையும் செய்துவிட்ட அந்தப் பெண்ணின் சோர்வான பார்வையை ஏந்திக்கொண்டு, இதுபோல என்றுமே தனித்திருந்ததில்லை.

(லிடியா டேவிஸ் எழுதிய “The Fish” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

*

எலிகள்

எங்கள் வீட்டுச் சுவர்களில் எலிகள் வசிக்கின்றன. ஆனால் அவை எப்போதுமே எங்கள் சமையலறையைச் சீண்டுவதில்லை. எங்களுக்கு அதில் மகிழ்ச்சிதான். ஆனால் பக்கத்து வீடுகளில் வருவதைப் போல் எங்கள் வீட்டுச் சமையலறைக்கு அவை ஏன் வருவதில்லை என்பது புரியவில்லை. மகிழ்ச்சிதான் என்றாலும் எங்கள் சமையலறையில் ஏதோ குறை இருப்பதைப் போல எலிகள் நடந்துகொள்வதில் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தமும் உண்டு. இதில் புதிரான விஷயம் என்னவென்றால் பக்கத்து வீட்டுக்காரர்களின் சமையலறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எங்களுடையதில் கொஞ்சம் சுத்தம் குறைவுதான். நிறைய உணவுப் பொருட்கள் அப்படி அப்படியே கிடக்கும். சமையல் மேடையில் துணுக்குகள் சிதறியிருக்கும். கீழ் அலமாரிகளின் ஓரங்களில் என்றோ வெட்டிய சில வெங்காயத் துண்டுகள் பெருக்கி ஒதுக்கப்பட்டிருக்கும். எலிகளையே அயர்வுறச் செய்யும் அளவிற்கு எங்கள் சமையலறையில் உணவுப்பொருட்கள் சிதறியிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது. ஒரு சுத்தமான சமையலறையில் வசந்த காலம் வரும்வரை ஒவ்வொரு இரவும் உணவைத் தேடுவது அவற்றிற்குச் சவாலாக இருக்கலாம். பொறுமையாகத் தேடி வேட்டையாடி இரவு முழுவதும் கொறித்துக் கழித்து அவை வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். எங்கள் சமையலறையிலோ அவை இதுவரை கண்டிராத அளவிற்கு ஒரு குவியலைக் காண்கின்றன போல. சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவற்றிற்கு எட்டும் காட்சிகளும் மணங்களும் திக்குமுக்காட வைத்து, தேடி வேட்டையாடி உண்ணமுடியாத சங்கடத்தில் அவை மீண்டும் வளைக்குள்ளே ஓடிவிடுகின்றன போல.

(லிடியா டேவிஸ் எழுதிய “The Mice” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

*

அம்மாக்கள்

எல்லோருக்கும் எங்கேயோ ஒரு அம்மா இருக்கிறார். நம்முடன் உணவருந்திக்கொண்டிருக்கிறார் ஒரு அம்மா. சிறிய உருவம் கொண்ட அவர், முகத்தை வேறுபக்கம் திருப்பும்பொழுது முழுவதும் கருப்பாகத் தெரியுமளவு தடிமனான கண்கண்ணாடி அணிந்திருக்கிறார். நாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே விருந்தளிப்பவரின் அம்மா தொலைபேசியில் அழைக்கிறார். இதனால் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் நம் விருந்தோம்பி உணவு மேசைக்கு வர இயலாமல் போகிறது. அந்த அம்மா நியூ யார்க்கிலிருந்து அழைத்திருக்கலாம். விருந்து உண்டுகொண்டிருப்பவர் ஒருவரின் தாயாரின் பெயரும் அடிபடுகிறது: அந்த அம்மா ஒரிகனில் வசிப்பவர். நம்மில் பலருக்கும் அங்கு வசிக்கும் நமது உறவினர் யாரையேனும் தெரிந்திருந்தாலும் ஒரிகன் மாகாணத்தைப் பற்றி நமக்குப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. விருந்துக்குப் பின் காரில் செல்லும்போது ஒரு நடன இயக்குனரைப் பற்றிய பேச்சு எழுகிறது. வேறு மாகாணத்தில் இருக்கும் தன் அம்மாவைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருப்பதால் அவர் இன்றைய இரவை மட்டும் இந்த நகரத்தில் கழிக்கிறார் என்று தகவல்.

தாயார்கள் விருந்து மேசைகளில் இருக்கையில் சிறுவர்கள் போல நன்றாக உண்பவர்களாக இருந்தாலும், இருப்பதே தெரியாமல் அமைதியாக இருப்பார்கள். பெரும்பாலும் நாம் பேசும் விஷயங்களும் செய்யும் செயல்களும் அவர்களுக்குப் புரிவதில்லை. அதேபோல, பெரும்பாலும், நம் இளவயதைப் பற்றிப் பேசும்போது மட்டுமே அவர்கள் உரையாடலில் கலந்துகொள்கிறார்கள். அல்லது, அனுசரித்துப் போகத் தேவையே இல்லாத இடங்களில் அனுசரித்து, புன்னகைத்து, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் விடுமுறைகளில் மட்டுமாவது தாய்கள் சந்திக்கப்படுகிறார்கள், உரையாடப்படுகிறார்கள். நமக்காக அவர்கள் நிறைய அவதிப்பட்டிருக்கிறார்கள், பெரும்பாலும் நாம் காணாத இடங்களில் இருந்தபடியே.

(லிடியா டேவிஸ் எழுதிய “Mothers” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

*

முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில்

முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர். அவர்கள் சமையலறையில் பதுங்கியிருந்தபோது சிறிய வெடிச்சத்தங்களைக் கேட்டனர்: “காத்து,” என்றாள் அவள். “வேட்டைக்காரங்க,” என்றான் அவன். “மழ,” என்றாள் அவள். “ஆர்மிக்காரங்க,” என்றான் அவன். அவள் வீட்டுக்குப் போக விரும்பினாள். ஆனால் ஏற்கனவே வீட்டில்தான் இருந்தாள்… ஊருக்கு நடுவே, முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில்.

(லிடியா டேவிஸ் எழுதிய “In a House Besieged” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

*

இரண்டு சகோதரிகள்

யாருக்கும் அது நிகழ்வதில் விருப்பமில்லாவிட்டாலும், அது நிகழாமலிருப்பதுதான் நல்லது என்றாலும், சில சமயங்களில் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறக்கத்தான் செய்கிறது—இரண்டு சகோதரிகள் உருவாகத்தான் செய்கிறார்கள்.

எந்த பெண் குழந்தையுமே, அழுதுகொண்டே பிறக்கையில், மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தந்தைக்கு ஒரு ஏமாற்றமான தோல்வியாகவே பிறக்கிறது. அவர் மீண்டும் முயற்சிக்கிறார். மீண்டும் பெண். இரண்டாவதும் பெண்ணாகப் பிறப்பது இன்னும் பெருத்த ஏமாற்றம். அதற்குப் பின் மூன்றாவது, பின்னர் நான்காவது கூட. பெண் குழந்தைகளுக்கு மத்தியில் சோகமே உருவாக, தோல்விகளைக் குவித்த விரக்தியில் அந்தத் தந்தை.

ஒரு மகனும் ஒரு மகளும் உடைய மனிதன் அதிர்ஷ்டசாலி. இருப்பினும் இன்னொரு மகனுக்கு முயற்சிப்பதில் அபாயம் இருக்கிறது. மகன்களை மட்டுமே பெற்றிருப்பவன் இருப்பதிலேயே அதிர்ஷ்டசாலி. அவன் மகள் பிறக்கும்வரை முயன்றுகொண்டே இருக்கலாம். அப்படிப் பிறந்தால் வேண்டிய அளவிற்கு மகன்களும் வீட்டை அலங்கரிக்க ஒரு சிறிய மகளும் அவனுக்கு அமையும். ஒருவேளை அவனுக்குப் பெண் குழந்தையே பிறக்காவிட்டாலும் தன் மனைவியின் வடிவில், தன் மகன்களின் தாயின் வடிவில், அவனுக்கு ஒரு பெண் ஏற்கனவே இருக்கிறாள். அவனுக்கு அவன் ஆண் அல்ல. அவனது மனைவிக்குதான் அவன் ஆண். தன் வாழ்வில் ஒரு பெண் இல்லாமல், ஒரு மகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவளது ஆசைகள் எவருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால், அவளது பெற்றோர் உயிரோடில்லாவிட்டாலும், அவளே ஒரு மகள்தான்.

ஒற்றை மகளாகப் பிறந்தவளோ, பல சகோதரர்களின் ஒரே சகோதரியாய், தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தவரின் குரல்களைக் கேட்டு மகிழ்ந்துகொள்வாள். அவளது சகோதரர்களின் முரட்டுத்தனத்திற்கு மத்தியில் அவளது மென்மையும், அவர்களது அடாவடிக்கு மத்தியில் அவளது அமைதியும் மெச்சப்படும். 

ஆனால் இரண்டு சகோதரிகளாய் இருந்தால், ஒருத்தி மற்றவளைவிட அசிங்கமாகவும், மந்தமாகவும், விட்டேற்றியுமாகவே கருதப்படுவாள். பெரும்பாலும் நடப்பதுபோல அனைத்து நற்குணங்களும் ஒரே சகோதரியில் இருக்கப்பெற்றாலும், மற்றவள் அவளைப் பொறாமை ததும்பும் கண்களோடு நிழலாகத் தொடர்வாள்.

இரண்டு சகோதரிகளும் வெவ்வேறு காலங்களில் வளர்ந்து, தமது சகோதரியை அவள் அவளாக இருப்பதற்காகவே வெறுப்பார்கள். சண்டை போடுவார்கள். ஒரே மகளாக இருந்தால், அவள் ஏஞ்சலாவாகவே, ஒரு தேவதையாகவே, இருக்க முடியும். ஆனால் இரண்டு சகோதரிகளாய் இருந்தால் இருவரும் தங்கள் பெயர்களை இழந்து மேலும் வீம்பாகத் திரிவார்கள்.

இரண்டு சகோதரிகளுக்கும் எப்படியும் திருமணமாகும். ஒருத்தி மற்றவளது கணவனை நாகரிகமற்றவனாகக் கருதுவாள். இன்னொருத்தியோ தன் சகோதரிக்கும் அவளது கணவனுக்கும் (அவன் வெகு சாமர்த்தியக்காரன் என்ற பயம் அவளுக்கு) எதிராக தன் கணவனைக் கவசமாகப் பயன்படுத்துவாள். தங்கள் குழந்தைகளுக்கு உறவுமுறையில் சகோதர சகோதரிகள் இருப்பது நல்லது என்பதற்காக அந்த இரண்டு சகோதரிகளும் அவ்வப்போது நட்பு பாராட்ட முயன்றாலும் ஏனோ பெரும்பாலும் விலகியே இருப்பார்கள்.

இருவரது கணவர்களும் அவர்களுக்கு ஏமாற்றமளிப்பவர்களாகத் தெரிவார்கள். அவர்களது மகன்கள் வாழ்க்கையில் தோற்றவர்களாக, தங்கள் தாயார்களின் அன்பை விலைவாசி குறைவான நகரங்களில் தொலைத்தவர்களாக இருப்பார்கள். இரும்பைப் போல உறுதியாக இன்னும் நிலைத்திருப்பது அந்த சகோதரிகளுக்கு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காழ்ப்பு மட்டுமே. அவர்களது கணவர்கள் உலர்ந்து அழிந்த பின்னரும், அவர்களது மகன்கள் அவர்களை விட்டுப்போன பின்னரும் விடாமல் இருப்பது அது மட்டுமே.

ஒரே கூண்டில் அடைபட்ட இருவரும் தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். இருவரின் அம்சங்களும் ஒரே மாதிரியானவை.

இரண்டு சகோதரிகளும் கணவர்கள் மறைந்தபின், மகன்கள் ஏதோ போரில் இறந்தபின், கருப்பு உடை அணிந்து கடைகளுக்கு ஒன்றாகச் செல்வார்கள். ஒருவர் மீது இன்னொருவருக்கு உள்ள காழ்ப்பு மிகவும் பழகிப்போய் அது இருப்பதையே அவர்கள் உணர்வதில்லை. சில சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் கரிசனமாகக் கூட இருப்பார்கள், மறந்ததனால்.

(லிடியா டேவிஸ் எழுதிய “Two Sisters” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

***

லிடியா டேவிஸ் (1947–) இன்றைய அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்துக்கு பல முக்கியமான புதினங்களை மொழிபெயர்த்தும் உள்ளார். தனது தனித்துவமான கதைசொல்லல் முறையால் கவனம் பெற்ற இவர், “நவீன குறுங்கதைகளின் அரசி” என்று வழங்கப்படுகிறார். ஒரு வாக்கிய நீளத்திலிருந்து இரு பக்க நீளம் வரை விரியும் பல குறுங்கதைகளை எழுதியுள்ள இவர், சில புதினங்களையும் எழுதியுள்ளார்.

ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here